என் மலர்tooltip icon

    பிரேசில்

    • குடிமக்கள் தங்களது பாதுகாப்பிற்காக வீட்டில் துப்பாக்கி வைத்திருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்.
    • புதிய விதிகள் மூலம் துப்பாக்கிகள் மீதான கண்காணிப்பு நடவடிக்கை காவல் துறைக்கு செல்கிறது.

    பிரேசிலியா:

    பிரேசில் நாட்டில் துப்பாக்கி சூடு சம்பவங்களை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அங்கு பொதுமக்கள் தங்களது தனிப்பட்ட பாதுகாப்பிற்காக துப்பாக்கிகளை வைத்து கொள்ள அனுமதி உள்ளது.

    இந்த நிலையில் பிரேசிலில் பொதுமக்கள் துப்பாக்கிகளை பயன்படுத்த கடும் கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது. இதற்கான உத்தரவுகளை அதிபர் லூயிஸ் இனாசியோ லுலாடா சில்வா பிறப்பித்துள்ளார்.

    அதன்படி பொதுமக்கள் தங்கள் தனிப்பட்ட பாதுகாப்பிற்காக வைத்திருக்கக் கூடிய துப்பாக்கிகளின் எண்ணிக்கை நான்கில் இருந்து 2 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

    ஒவ்வொரு துப்பாக்கிக்கும் அனுமதிக்கப்பட்ட வெடி மருந்துகள் 200-ல் இருந்து 50 ஆக குறைகிறது. மேலும் ஆயுதங்களை வைத்திருக்க வேண்டியதன் அவசியத்தை நிரூபிக்கும் ஆவணங்களை வைத்திருக்க வேண்டும்.

    பொதுமக்கள், 9 மி.மீ. பிஸ்டல்களை வைத்திருக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக அதிபர் லுலாடா சில்வா கூறும் போது, குடிமக்கள் தங்களது பாதுகாப்பிற்காக வீட்டில் துப்பாக்கி வைத்திருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். அதை அவர்கள் வைத்திருக்கட்டும். ஆனால் துப்பாக்கிகள் மக்களின் கைகளில் அதிகமாக இருப்பதை நாங்கள் அனுமதிக்க முடியாது.

    ஆயுதமற்ற நாட்டிற்காக தொடர்ந்து போராடுவோம். பிரேசில் காவல் துறை மற்றும் மத்திய ஆயுதப் படைகள்தான் துப்பாக்கிகளை கையாள்வதில் நன்கு பொருந்திருப்பார்கள் என்று தெரிவித்தார்.

    புதிய விதிகள் மூலம் துப்பாக்கிகள் மீதான கண்காணிப்பு நடவடிக்கை காவல் துறைக்கு செல்கிறது. முன்பு இது ராணுவம் வசம் இருந்தது. கடந்த மே மாதம் பொதுமக்கள் தாங்கள் வைத்திருக்கும் துப்பாக்கிகளை காவல் துறையில் சட்டப்பூர்வமாக பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    துப்பாக்கி பயிற்சி மையங்கள் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும் என்றும் பள்ளிகளில் இருந்து குறைந்தது ஒரு கிலோ மீட்டர் தொலைவில் இருக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    • வீடுகளில் தூங்கிக்கொண்டிருந்தவர்கள் கட்டிட இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர்.
    • ரெசிப் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பெய்த கனமழையால் பொதுமக்கள் கடும் பாதிப்படைந்துள்ளனர்.

    பிரேசில் நாட்டின் வடபகுதியில் உள்ள பெர்னாம்புகோ மாநிலத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக கடலோர நகரமான ரெசிப் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பெய்த கனமழையால் பொதுமக்கள் கடும் பாதிப்படைந்துள்ளனர்.

    இந்நிலையில், ரெசிப் அருகே உள்ள ஜங்கா பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பு திடீரென இடிந்து விழுந்தது. இரவு நேரத்தில் மழை பெய்துகொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. வீடுகளில் தூங்கிக்கொண்டிருந்தவர்கள் கட்டிட இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர்.

    மீட்புக்குழுவினர் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்தில் 11 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. 3 பேரை காணவில்லை. அவர்களை மீட்புக்குழுவினர் தேடிவருகின்றனர்.

    இடிந்து விழுந்த அடுக்குமாடி குடியிருப்பு சேதமடைந்து மக்கள் வசிக்க முடியாத நிலை ஏற்பட்டதால், நீதிமன்ற உத்தரவுப்படி 2010ம் ஆண்டு மூடப்பட்டதாகவும், அதன்பின்னர் பல குடும்பங்கள் சட்டவிரோதமாக அங்கு குடியிருந்ததாகவும் கூறப்படுகிறது.

    • சூறாவளிக்கு ஆயிரக்கணக்கான வீடுகள் சேதம் அடைந்தது.
    • பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் முடுக்கி விடப்பட்டு உள்ளது.

    பிரேசிலியா:

    பிரேசில் நாட்டில் ஷியோகிராண்ட டொசூல் மாநிலத்தில் புயல் காரணமாக கடும் சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. இந்த சூறாவளிக்கு ஆயிரக்கணக்கான வீடுகள் சேதம் அடைந்தது. ஏராளமான மரங்கள் வேரோடு சாய்ந்தது.

    இடைவிடாமல் மழை கொட்டி தீர்த்ததால் ரோடுகளில் தண்ணீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடுயது. தாழ்வான பகுதிகளில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் தவித்தனர்.

    அவர்களை மீட்பு குழுவினர் விரைந்து சென்று படகு மூலம் மீட்டனர். வெள்ளத்தில் சிக்கிய 3,713 பேரை அவர்கள் பத்திரமாக மீட்டனர். 20-க்கும் மேற்பட்டவர்களை வெள்ளம் அடித்து சென்றது. அவர்கள் ஹெலிகாப்டர் மூலம் அதிரடியாக மீட்கப்பட்டனர். இந்த சூறாவளி புயலுக்கு 4 மாத குழந்தை உள்பட 13 பேர் பலியாகிவிட்டனர், 20-க்கும் மேற்பட்டவர்கள் மாயமாகி விட்டனர். அவர்கள் கதி என்னவென்று தெரியவில்லை, அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது. ஆயிரக்கணக்கானவர்கள் வீடுகளை இழந்துவிட்டனர்.

    அவர்கள் அங்குள்ள விளையாட்டு மைதானங்களில் தற்காலிமாக தங்க வைக்கப்பட்டு உள்ளனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் முடுக்கி விடப்பட்டு உள்ளது. முன் எச்சரிக்கை நடவடிக்கையாக பலர் வீடுகளை விட்டு அப்புறப்படுத்தப்பட்டு விட்டதால் உயிர்சேதம் பெருமள வில் இல்லாமல் தடுக்கப்பட்டது.

    • 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் காரா நகரம் சூறாவளியால் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்திய நகரங்களில் ஒன்றாகும்.
    • பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் பலர் தங்கள் நகரங்களில் வெளிப்புறத்தில் உள்ள விளையாட்டு கூடங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

    பிரேசிலின் தெற்கு மாநிலமான ரியோ கிராண்டே டோ சுலியில் நேற்று முன்தினம் கடுமையான வெப்பமண்டல சூறாவளி தாக்கியது. இதில், 11 பேர் உயிரிழந்தனர். 25 பேர் மாயமாகி உள்ளனர்.

    புயலை தொடர்ந்து கனமழை பெய்ததால் காணாமல் போன 25 பேரை கண்டுபிடிக்க வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் ஹெலிகாப்டர் மூலம் தேடுதல் பணி நடந்து வருகின்றன.

    இதில் குறிப்பாக, 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் காரா நகரம் சூறாவளியால் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்திய நகரங்களில் ஒன்றாகும்.

    இதுகுறித்து ரியோ கிராண்டே டோ சுலி மாநிலத்தின் ஆளுநர் எட்வார்டோ லைட் கூறுகையில், " காரா நகரின் நிலைமை எங்களை மிகவும் கவலையடையச் செய்கிறது. பாதிக்கப்பட்ட முக்கிய பகுதிகளை விரைவாக வரைபடமாக்கி, ஆதரவு தேவைப்படும் மக்களை அடையாளம் காண வேண்டியது அவசியம்.

    கடந்த இரண்டு நாட்களில் அதிகாரிகள் 2,400 பேரை மீட்டுள்ளனர்.

    இந்த தருணத்தில் முதலில் மனித உயிர்களைப் பாதுகாப்பதுதான் எங்களின் முக்கிய நோக்கமாகும். சிக்கித் தவிக்கும் மக்களை மீட்டு, காணாமல் போனவர்களைக் கண்டுபிடித்து, குடும்பங்களுக்கு அனைத்து ஆதரவையும் அளித்து வருகிறோம்.

    மேலும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் பலர் தங்கள் நகரங்களில் வெளிப்புறத்தில் உள்ள விளையாட்டு கூடங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். பல பகுதிகளில் மண்சரிவு அபாயம் இருப்பதாக அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    • விமான எஞ்சின் தீப்பிடித்த காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
    • முறையான வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்பட்டு அதில் இருந்த பயணிகள் மீட்கப்பட்டனர்.

    பிரேசில் நாட்டை சேர்ந்த லோ-கோஸ்ட் ஏர்லைனின் விமானம் ஒன்று ரியோ டி ஜெனிரோவின் சாண்டோஸ் டுமோண்ட் விமான நிலையத்தில் இருந்து போர்டோ அலெக்ரேவுக்கு புறப்பட்டது. விமானம் ஓடுபாதையில் சென்று கொண்டிருந்த போது அதன் எஞ்சின் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    விமானம் ஓடுபாதையில் செல்வதில் இருந்து அதன் எஞ்சின் திடீரென தீப்பற்றி எரியும் காட்சி அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே விமான எஞ்சின் தீப்பற்றியதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன.

    ஓடுபாதையில் இருந்து விமானம் டேக் ஆஃப் ஆக சில நிமிடங்களே எஞ்சியிருந்த நிலையில், அதன் எஞ்சினில் இருந்து பலத்த சத்தம் கேட்டது. பின் எஞ்சின் தீப்பற்றி எரிந்தது. இதன் காரணமாக விமானம் உடனடியாக நிறுத்தப்பட்டு, பின் முறையான வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்பட்டு அதில் இருந்த பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

    அதிர்ஷ்டவசமாக பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. விமானத்தின் எஞ்சின் வெடித்து விபத்து ஏற்பட்டதால் குறிப்பிட்ட ஓடுபாதை சுமார் ஒரு மணி நேரத்திற்கு மூடப்பட்டது. இதன் காரணமாக சில விமானங்களின் புறப்பாடு நேரம் தாமதமானது. விமானத்தில் கோளாறு ஏற்பட்டதை அடுத்து அதில் இருந்த பயணிகள் அடுத்த விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டனர். 

    • சட்டவிரோதமாக தங்க சுரங்கங்கள் செயல்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • போலீசார் சம்பந்தப்பட்ட பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    தென் அமெரிக்க நாடான பிரேசிலில் ஏராளமான தங்க சுரங்கங்கள் உள்ளன. இதனால், பிரேசில் நாட்டின் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா யானோமாமி பகுதியில் அவசர நிலையை பிறப்பித்தார். அப்போது முதல் அங்கு சட்ட விரோத சுரங்கத்துக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    இந்தநிலையில் பிரேசிலின் ரோரைமா மாகாணத்தில் சட்டவிரோதமாக தங்க சுரங்கங்கள் செயல்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து, போலீசார் சம்பந்தப்பட்ட பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அங்கு சிலர் சுரங்க தொழிலில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது. அப்போது, அவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

    இதில் போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் 4 சுரங்க தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

    • ஹெலிகாப்டர் குடியிருப்பு பகுதியில் உள்ள தெருவில் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.
    • விபத்தில் தெருவில் சென்று கொண்டிருந்த 9 வாகனங்களும் சேதமானது.

    தென் அமெரிக்க நாடான பிரேசிலின் சாவ் பாலோ மாகாணத்தில் உள்ள ஒரு பகுதியில் ஹெலிகாப்டர் ஒன்று பறந்து கொண்டிருந்தது. ஏர் டாக்ஸி நிறுவனத்தை சேர்ந்த அந்த ஹெலிகாப்டர் நடுவானில் பறந்தபோது திடீரென விமானியின் கட்டுப்பாட்டை இழந்தது. உடனே விமானி அதனை தரையிறக்க முற்பட்டார். அதற்குள் அந்த ஹெலிகாப்டர் அங்குள்ள ஒரு குடியிருப்பு பகுதியில் உள்ள தெருவில் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் தெருவில் சென்று கொண்டிருந்த 9 வாகனங்களும் சேதமானது.

    இதுகுறித்து தகவலறிந்த மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். எனினும் இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் இருந்த 4 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் தெருவில் சென்ற வாகனங்களில் இருந்த பலர் காயம் அடைந்தனர். மீட்பு படையினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

    • அகோஸ்டா மெலிந்த உடல் நிலையுடன் கடந்த சனிக்கிழமை மீட்கப்பட்டார்.
    • மழை பெய்யாமல் இருந்திருந்தால் நான் உயிர் பிழைத்திருக்க மாட்டேன் என்றார்.
    பொலிவியன் நாட்டை சேர்ந்த 30 வயதான ஜொனாடன் அகோஸ்டா என்பவர் கடந்த ஜனவரி மாதம் 25ம் தேதி தனது 4 நண்பர்களுடன் உலகின் மிகப்பெரிய வெப்பமண்டல மழைக்காடான அமேசான் காட்டிற்கு வேட்டையாட சென்றுள்ளார்.

    அப்போது, அகோஸ்டா அமேசான் காட்டில் வழி தவறி காணாமல் போயுள்ளார். தனது நண்பர்களுடனான தொடர்பையும் அவர் இழந்தார்.

    இதனால், அகோஸ்டாவிடம் இருந்து எந்த ஒரு தகவலும் இல்லாததை அடுத்து, அவரது குடும்பத்தினர் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து, மீட்பு குழுவினர் அமேசான் காட்டில் முழு வீச்சில் தேடி வந்தனர். இந்நிலையில் அகோஸ்டா மெலிந்த உடல் நிலையுடன் கடந்த சனிக்கிழமை மீட்கப்பட்டார்.

    அமேசான் காட்டில் ஒரு மாதமாக உணவு, தண்ணீர் இல்லாமல் அவதிப்பட்டு வந்த அகோஸ்டா, அங்குள்ள பூச்சி, புழுக்களை திண்று பசியாற்றியுள்ளார். மழை பெய்யும்போது தான் போட்டிருக்கும் பூட்ஸ் ஷூ மூலம் தண்ணீர் பிடித்து குடித்துள்ளார். தண்ணீர் கிடைக்காத சில இடங்களில் தனது சிறுநீரையே குடித்து உயிர் பிழைத்து வந்துள்ளார். காட்டைவிட்டு வெளியேற திசை தெறியாமல் சுமார் 40 கிலோ மீட்டர் அகோஸ்டா நடந்துள்ளார். இதனால் அவர் சுமார் 17 கிலோ உடல் எடை குறைந்து மிகவும் மெலிந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.

    "நான் கடவுளிடம் மழையைக் கேட்டேன், அது பெய்யாமல் இருந்திருந்தால் நான் உயிர் பிழைத்திருக்க மாட்டேன்" என்று அகோஸ்டா குறிப்பிட்டார்.

    இவர் கூறுவது மட்டும் உண்மை எனில், அமேசான் மழைக்காடுகளில் இவ்வளவு காலம் உயிர் பிழைத்த ஒரே நபர் ஜொனாடன் அகோஸ்டா என்ற பெருமையை பெறுவார் என்றும் கூறப்படுகிறது.

    • தங்களைப் பார்த்து ஏளனமாக சிரித்தவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.
    • துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பியோடிய 2 நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    பிரேசிலியா:

    பிரேசில் நாட்டில் உள்ள மடோ கிராஸோ மாநிலம் சினோப் நகரில் பில்லியர்ட்ஸ் விளையாட்டு நடைபெற்றது. அப்போது ஒரு நபர் மற்றொரு நபரிடம் தோல்வியடைந்து, 4000 ரியால் பணத்தை இழந்துள்ளார். வெளியே சென்ற அந்த நபர், மற்றொரு நபரை அழைத்துக்கொண்டு வந்துள்ளார். தன்னை தோற்கடித்த நபரை மீண்டும் விளையாட அழைத்துள்ளார். இந்த முறையும் அந்த நபர்கள் தோல்வி அடைந்தனர்.

    அப்போது போட்டியை காண வந்திருந்த சிலர், தோல்வியடைந்தவர்களை பார்த்து சிரித்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து விளையாட்டில் தோல்வி அடைந்த நபர்கள், தங்களைப் பார்த்து ஏளனமாக சிரித்தவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இந்த சம்பவத்தில் 12 வயது சிறுமி உள்பட 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பியோடிய எட்கர் ரிக்கார்டோ மற்றும் எசேக்கியாஸ் ரிபேரோ ஆகிய 2 நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    • பிரேசிலில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
    • கனமழையால் பல்வேறு பகுதிகளில் சாலை போக்குவரத்து தடைபட்டுள்ளது.

    ரியோ டி ஜெனிரோ:

    பிரேசில் நாட்டில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, அந்நாட்டின் சவொ பாலோ மாகாணத்தில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. கனமழை காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேலும், பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில், பிரேசிலில் பெய்துவரும் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 36 ஆக அதிகரித்துள்ளது. மேலும், பலர் படுகாயமடைந்துள்ளனர். கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் சாலை போக்குவரத்து தடைபட்டுள்ளது.

    இடிந்து கிடக்கும் வீடுகளின் இடிபாடுகளை மீட்கும் பணி நடந்து வருகிறது. வீடுகளை இழந்து தவிக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தொடர் மழையால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

    -------------

    • குடிநீர் மற்றும் போக்குவரத்து நிறுத்தப்பட்டு உள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.
    • தொடர்ந்து இடைவிடாமல் மழை கொட்டி தீர்ப்பதால் மீட்பு பணியில் தாமதம் ஏற்பட்டு உள்ளது.

    சாங்பவுசோ:

    பிரேசில் நாட்டில் தென்கிழக்கு கடற்கரையோர பகுதிகளில் கடந்த சில நாட்களாக கன மழை கொட்டி வருகிறது. இடைவிடாமல் பெய்து வரும் மழையால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.

    சாங்பவுலோ மாகாணத்தில் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் ஏராளமான வீடுகள் இடிந்து விழுந்தது. எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. சாலைகளில் வெள்ளம் ஆறு போல பெருக்கெடுத்து ஓடுகிறது. இகபெல்லா உள்ளிட்ட நகரங்கள் வெள்ளத்தில் மிதக்கிறது. ரோடுகள் பலத்த சேதம் அடைந்தது.

    இதில் கார் உள்ளிட்ட வாகனங்கள் சிக்கி சேதம் அடைந்தது. ரோடுகள் துண்டாகி கிடப்பதால் போக்குவரத்து முற்றிலும் முடங்கி போய் கிடக்கிறது. பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்து விட்டது.

    மழை-வெள்ளத்தில் சிக்கி பெண்கள், குழந்தைகள் உள்பட இதுவரை 24 பேர் பலியாகி விட்டனர். இந்த பேய் மழைக்கு கடற்கரையோர பகுதிகள் கடுமையான சேதத்தை சந்தித்து உள்ளது.

    மீட்பு பணிகள் இங்கு முடுக்கி விடப்பட்டுள்ளது. குடிநீர் மற்றும் போக்குவரத்து நிறுத்தப்பட்டு உள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.

    தொடர்ந்து இடைவிடாமல் மழை கொட்டி தீர்ப்பதால் மீட்பு பணியில் தாமதம் ஏற்பட்டு உள்ளது. இடிந்து கிடக்கும் வீடுகளின் இடிபாடுகளை மீட்கும் பணி நடந்து வருகிறது.

    ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து தவிக்கின்றனர். அவர்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். தொடர் மழையால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

    • இந்த சண்டையால் விமானம் சுமார் 2 மணி நேரம் தாமதமாக புறப்பட்டுள்ளது.
    • சண்டையிட்ட அனைத்து பயணிகளும் விமானத்தில் இருந்து இறக்கி விடப்பட்டனர்.

    பிரேசிலின் சல்வேடார் நகரில் இருந்து சா பவுலோ நகரத்திற்கு கோல் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் பயணிகள் விமானம் புறப்பட இருந்தது. இந்த விமானம் டேக் ஆப் ஆவதற்கு சில நிமிடங்களே இருந்தது. அப்போது விமானத்தில் சில பெண் பயணிகளுக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டது. 15 பெண் பயணிகள் தங்களுக்குள் கடுமையாக மோதிக்கொண்டனர். முடியைப் பிடித்து இழுத்தும், ஆடைகளை பிடித்து இழுத்தும் சண்டையிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை விலக்கி விடுவதற்கு விமான பணிப்பெண்களும் படாத பாடு பட்டனர். இது தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    இந்த சண்டை ஏன் நடந்தது என்பது குறித்து விமான பணிப்பெண் ஒருவர் கூறுகையில்,  "விமானத்தின் ஜன்னல் ஓர இருக்கையில் அமர்ந்து இருந்த ஒரு பெண் பயணியிடம் சக பெண் பயணி ஒருவர் தனது மாற்றுத்திறனாளி மகளுக்காக ஜன்னல் ஓர இருக்கையை விட்டு தருமாறு கேட்டு உள்ளார். ஆனால், ஜன்னல் ஓரத்தில் இருந்த அந்த பெண் பயணி இருக்கையை மாற்றிக் கொடுக்க சம்மதம் தெரிவிக்கவில்லை. இதனால், இருவருக்கும் இடையே முதலில் வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது. இரு பெண்களின் குடும்பத்தை சேர்ந்தவர்களும் சண்டையிட தொடங்கினர். இதனால், நாங்கள் தலையிட வேண்டிய நிலை ஏற்பட்டது" என்றார்.

    விமானத்தில் ஜன்னல் ஓர இருக்காகாக தொடங்கிய இந்த சண்டையால் விமானம் சுமார் 2 மணி நேரம் தாமதமாக புறப்பட்டுள்ளது. இதனால், பிற பயணிகளும் கடும் அவதிக்கு உள்ளாகினர்.

    இந்த சம்பவம் குறித்து விமான நிறுவனம் கூறுகையில், "2-ம் தேதி இந்த மோதல் சம்பவம் நடைபெற்றது. சண்டையிட்ட அனைத்து பயணிகளும் விமானத்தில் இருந்து இறக்கி விடப்பட்டனர். அவர்கள் தொடர்ந்து பயணம் செய்ய அனுமதிக்கப்படவில்லை. விமானத்தில் நடைபெற்ற மோதல் சம்பவத்திற்கு நாங்கள் வருத்தம் தெரிவித்துக்கொள்கிறோம். பயணிகளின் பாதுகாப்பு கருதியே நடவடிக்கை எடுக்கப்பட்டது" என்று தெரிவித்துள்ளது.

    ×