என் மலர்
பிரேசில்
- புறப்பட்ட சிறிது நேரத்தில் அந்த விமானம் விபத்தில் சிக்கியது.
- விபத்துக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை.
ரியோ பிரான்சோ:
பிரேசிலின் அமேசானாஸ் மாநிலத்தில் உள்ள என்விரா என்ற நகரத்துக்கு சிறிய ரக விமானம் புறப்பட்டு சென்றது. இந்த விமானத்தில் ஒரு குழந்தை உள்பட 12 பேர் பயணம் செய்தனர்.
புறப்பட்ட சிறிது நேரத்தில் அந்த விமானம் விபத்தில் சிக்கியது. அங்குள்ள ஏக்கர் மாநிலத்தின் தலைநகரான ரியோபிரான்சிகோ விமான நிலையத்தின் அருகில் அந்த விமானம் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த ஒரு குழந்தை உள்பட 12 பேரும் பலியாகி விட்டனர். விபத்துக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. இது தொடர்பாக விரிவான விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பிரேசிலில் கடந்த 2 மாதங்களில் நடந்த 2- வது விமான விபத்து இது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த மாதம் நடந்த விமான விபத்தில் 12 பயணிகள் மற்றும் 2 விமான ஊழியர்கள் பலியானார்கள்.
- மத்திய பிரசெல்சில் நேற்று மாலை துப்பாக்கிச் சூடு நடைபெற்றது.
- இந்தச் சம்பவத்தில் ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த 2 பேர் கொல்லப்பட்டனர்.
பிரசெல்ஸ்:
ஐரோப்பா நாடான பெல்ஜியம் தலைநகர் பிரசெல்சில் நேற்று இரவு பெல்ஜியம்-சுவீடன் கால்பந்து அணிகள் மோதிய, யூரோ சாம்பியன்ஷிப் தகுதி சுற்று போட்டி நடந்தது.
இப்போட்டி நடந்த மைதானத்தில் இருந்து சிறிது தூரத்தில் சாலையில் நடந்து சென்றவர்கள் மீது மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவர் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார். இதனால் பொதுமக்கள் அலறியடித்து சிதறி ஓடினர். பின்னர் அந்த வாலிபர் தப்பி ஓடி விட்டார்.
இந்த துப்பாக்கிச் சூட்டில் சுவீடனைச் சேர்ந்த 2 கால்பந்து ரசிகர்கள் உயிரிழந்தனர். 3 பேர் காயம் அடைந்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது பயங்கரவாத தாக்குதல் என்பது தெரிய வந்தது. தாக்குதல் நடத்திய நபர், வீடியோ ஒன்றை சமூக வலைதளத்தில் வெளியிட்டார். அதில் அவர் கூறும் போது, "எனது பெயர் அப்தெசலேம் அல் குய்லானி. நான் ஐ.எஸ். அமைப்பை சேர்ந்தவன். நம்மை நேசிப்பவர்களை நாம் விரும்புகிறோம். நம்மை வெறுப்பவர்களை வெறுக்கிறோம். நான் சுவீடன் நாட்டவரை கொன்றுள்ளேன்" என்று கூறினார்.
இதனால் பெல்ஜியத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட் டது. அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
பயங்கரவாத தாக்குதலையடுத்து பெல்ஜியம்-சுவீடன் மோதிய கால்பந்து போட்டி பாதியில் ரத்து செய்யப்பட்டது. அப்போது மைதானத்தில் 35 ஆயிரம் ரசிகர்கள் இருந்தனர். அவர்கள் மைதானத்திலேயே இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டனர்.
சிறிது நேரத்துக்கு பிறகு ரசிகர்கள் பலத்த பாதுகாப்புடன் வெளியேற்றப்பட்டனர். மேலும் சுவீடன் கால்பந்து அணி பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டது.
தாக்குதல் நடத்திய நபர், துனிசியா வம்சாவளியை சேர்ந்தவர் என்பதும், பிரசெல்சில் வசித்து வந்ததும் தெரியவந்தது. தப்பி ஓடிய அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
அவரிடம் ஆயுதம் இருப்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி போலீசார் கேட்டுக் கொண்டனர்.
இதுதொடர்பாக பெல்ஜியம் பிரதமர் அலெக்சாண்டர் டிகுரூ கூறும்போது, "பிரசெல்சில் நடந்த தாக்குதல் பயங்கரவாதத்துடன் தொடர்புடையது. சுவீடன் குடிமக்கள் மீது நடந்த கொடூர தாக்குதலை தொடர்ந்து சுவீடன் பிரதமருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார். மேலும் உயர்மட்ட அமைச்சர்களின் அவசர கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில், பிரசெல்சில் நடந்த துப்பாக்கிச் சூடு தாக்குதலுக்கு ஐரோப்பிய ஒன்றிய தலைவர் உர்சுலா வான் டெர் லெயென் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர், ஸ்வீடன் பிரதமர் கிறிஸ்டர்சனுக்கு அனுப்பியுள்ள இரங்கல் செய்தியில், இந்த தாக்குதலில் ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த 2 பேர் கொல்லப்பட்டதற்கு ஆழ்ந்த இரங்கல். இந்தக் கடினமான நேரத்தில் நாங்கள் உங்களுடன் உள்ளோம் என பதிவிட்டுள்ளார்.
- ஒரு சில இடங்களில் வெப்பம் 102 டிகிரி ஃபேரன்ஹீட் அளவை தொட்டது
- பரப்பளவில் அமேசான் காடு ஆஸ்திரேலியா அளவிற்கு பரந்து விரிந்துள்ளது
பிரேசில் நாட்டின் வடமேற்கில் தொடங்கி கொலம்பியா, பெரு உட்பட பல தென் அமெரிக்க நாடுகள் வரை பரவியுள்ளது அமேசான் மழைக்காடு.
வடக்கு பிரேசிலில் அமேசோனாஸ் (Amazonas) மாநிலத்தின் தலைநகரமான மனோஸ் (Manaus) நகருக்கருகே உள்ளது டெஃப் (Tefe) பிராந்தியம். இப்பகுதியிலும் அமேசான் காடுகள் பரவியுள்ளது. இப்பகுதி முழுவதிலும் சமீப காலமாக பெரும் வறட்சி ஏற்பட்டுள்ளது. நீர் நிலைகளில் வெப்பம் இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. ஒரு சில இடங்களில் வெப்பம் 102 டிகிரி ஃபேரன்ஹீட் அளவை தொட்டு விட்டது.
இதன் காரணமாக இங்குள்ள டெஃப் ஏரியில் நூற்றுக்கணக்கான டால்பின்கள் உயிரிழந்து மிதக்கின்றன.
"இத்தகைய சம்பவம் இதற்கு முன்பு நடைபெறாதது. டால்பின் மீன்கள் இறந்ததற்கும் அதிகளவு வெப்பத்திற்கும் உறுதியான தொடர்புள்ளது. ஆனால், வெப்பநிலை அதிகரிப்பதற்கான காரணத்தை இதுவரை கண்டறிய முடியவில்லை" என பிரேசில் அறிவியல் துறையின் ஆதரவில் இயங்கும் மமிரவா நிறுவனம் (Mamiraua Institute) தெரிவித்துள்ளது.
உயர்ந்து வரும் வெப்ப நிலை காரணமாக அமேசான் காடுகளில் உள்ள நீர்மட்டமும் குறைந்து கொண்டே வருகிறது. பரப்பளவில் கிட்டத்தட்ட ஆஸ்திரேலியாவின் அளவிற்கு பரந்து விரிந்துள்ள இக்காடுகளில் இது போன்ற வானிலை நிகழ்வுகள் நடைபெறுவதால் 1 லட்சம் பேருக்கும் மேற்பட்டோரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
இயற்கைக்கு எதிரான பல நடவடிக்கைகளில் மனிதர்கள் ஈடுபட்டு வருவதால் இது போன்ற விசித்திரமான பருவநிலை மாற்றங்கள் ஏற்படலாம் என சுற்றுச்சூழல் நிபுணர்கள் தொடர்ந்து எச்சரித்து வந்தனர். இந்த நிகழ்வு அதனை உறுதிப்படுத்துவதாக உள்ளதாக சமூக வலைதளங்களில் கருத்து நிலவுகிறது.
- உலக கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டி பிரேசிலில் நடைபெற்றது.
- இதில் இந்திய வீராங்கனை நிஸ்செல் 458 புள்ளிகள் குவித்து வெள்ளி வென்றார்.
பிரசிலியா:
உலக கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டி பிரேசில் நாட்டில் உள்ள ரியோ டிஜெனீரோவில் நடந்தது. இதில் பெண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் (3 நிலை) போட்டியின் இறுதிச்சுற்றில் இந்திய வீராங்கனை நிஸ்செல் 458 புள்ளிகள் குவித்து வெள்ளிப்பதக்கம் வென்றார்.
அவர் தனது முதலாவது உலகக் கோப்பை போட்டியிலேயே பதக்கம் வென்று இருப்பதுடன் தகுதிச்சுற்றில் 592 புள்ளிகள் குவித்ததன் மூலம் சக வீராங்கனை அஞ்சும் மோட்ஜிலின் (591 புள்ளி) தேசிய சாதனையையும் தகர்த்தார்.
நார்வே வீராங்கனை ஜியானெட்டி ஹிக் டஸ்டாட் 461.5 புள்ளிகளுடன் தங்கப்பதக்கம் வென்றார்.
இந்த உலக கோப்பை போட்டியில் பங்கேற்ற 16 பேர் கொண்ட இந்திய அணி ஒரு தங்கம், ஒரு வெள்ளியுடன் பதக்கப்பட்டியலில் 7-வது இடம் பெற்றது.
தமிழகத்தைச் சேர்ந்த இளவேனில் வாலறிவன் 10 மீட்டர் ஏர்ரைபிள் பிரிவில் தங்கப்பதக்கத்தை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
- உலக கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டி பிரேசிலில் நடைபெற்றது.
- இதில் தமிழ்நாட்டு வீராங்கனை இளவேனில் வாலறிவன் தங்கம் வென்றார்.
பிரசிலியா:
உலக கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டிகள் பிரேசிலின் ரியோடி ஜெனிரோவில் நடைபெற்று வருகிறது.
இதில் பெண்கள் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்திய அணி சார்பில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இளவேனில் வாலறிவன் பங்கேற்றார்
நேற்று நடந்த இறுதிப்போட்டியில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இளவேனில் வாலறிவன் தங்கப்பதக்கம் வென்றார். அவர் 252.2 புள்ளிகள் பெற்று தங்கம் வென்றார்.
பிரேசிலில் நடைபெறும் உலக கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்திய அணி பெறும் முதல் பதக்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
- பிரேசில் நாட்டின் வடக்கு அமேசான் மாநிலத்தில் விமானம் விபத்தில் சிக்கியது.
- இதில் 14 பேர் பரிதாபமாக பலியாகினர் என அம்மாநில ஆளுநர் தெரிவித்தார்.
சாவ் பாவ்லோ:
பிரேசில் நாட்டின் வடக்கு அமேசான் மாநிலத்தில் சனிக்கிழமை நடந்த விமான விபத்தில் 14 பேர் பரிதாபமாக பலியாகினர் என அம்மாநில ஆளுநர் தெரிவித்துள்ளார்.
இந்த விபத்து மாநில தலைநகரான மனாஸிலிருந்து 400 கி.மீ. தொலைவில் உள்ள பார்சிலோஸ் மாகாணத்தில் நடந்துள்ளது.
இதுதொடர்பாக, ஆளுநர் வில்சன் லிமா கூறுகையில், பார்சிலோசில் நடந்த விமான விபத்தில் 12 பயணிகள் மற்றும் 2 ஊழியர்கள் பலியானது அறிந்து வருந்துகிறேன். அவர்களின் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள் என தெரிவித்துள்ளார்.
- பிரேசிலில் ஏற்பட்ட புயலில் சிக்கி இதுவரை 37 பேர் பலியாகினர்.
- ஒரே வீட்டில் இருந்து 15 பேர் உடல்கள் கண்டெடுக்கப்பட்டது.
பிரேசிலியா:
தென் அட்லாண்டிக் பெருங்கடலில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றது. இது தென் அமெரிக்க நாடான பிரேசில் நோக்கி மெதுவாக நகர்ந்து சென்றது. இதனால் நாட்டின் தென் மாகாணங்களான ரியோ கிராண்ட்டோ சுல் மற்றும் சான்டா கத்தரினா ஆகியவற்றின் கடற்கரை நகரங்களில் கனமழை பெய்ய ஆரம்பித்தது.
பின்னர் இந்த புயல் தீவிரமாக மாறியது. அதிதீவிரமாக உருவான இது வெப்ப மண்டல புயலாக வானிலை ஆராய்ச்சியாளர்கள் வகைப்படுத்தினர். இதனால் இடைவிடாமல் கனமழை பெய்தது.
தொடர் மழை காரணமாக ஆறுகளில் நீர்மட்டம் அதிகரித்து. இதனால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ளநீர் புகுந்தது. மியூகம், லஜியாடோ மற்றும் ரோகா சேல்ஸ் உள்ளிட்ட தென்மாகாணங்களின் 65-க்கும் மேற்பட்ட நகரங்கள் புயல் பாதிப்புக்குள்ளாகின. புயலில் வீடுகள் பல அடித்துச் செல்லப்பட்டன. இதனால் லட்சக்கணக்கானோர் அடிப்படை தேவைகளின்றி கடும் சிரமத்திற்கு உள்ளனர்.
கடந்த ஒரு வாரமாக பெய்துவரும் பேய்மழை காரணமாக 30 பேர் இறந்தநிலையில், பலி எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. நாட்டின் ராணுவத்துடன் இணைந்து பேரிடர் மீட்புத்துறையினர் மீட்புப்பணிகளில் ஈடுபடுகிறார்கள்.
இந்நிலையில் பேரிடர் மேலாண்மை இலாகா வெளியிட்டுள்ள அறிக்கையின்படி பலி எண்ணிக்கை 37 ஆக அதிகரித்துள்ளது. மியூகம் நகரில் ஒரு வீட்டில் மீட்புப்பணிகளில் ஈடுபட்டபோது குழந்தைகள் உள்பட 15 பேர் உடல்கள் மீட்கப்பட்டது அதிர்ச்சி அளித்துள்ளது.
அதிபரின் உத்தரவின்பேரில் துணை அதிபர் ஜெரால்டோ அல்க்மின் உடன் இரு இலாகா மந்திரிகள் ரியோ கிராண்ட்டோ சுல் விரைந்தனர். புயலால் சேதமான பகுதிகளை நேரில் பார்வையிட்டு வெள்ள நிவாரணப்பணிகள் மேற்கொள்ள உத்தரவிட்டனர்.
- சூறாவளியுடன் கனமழை பெய்ததால் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது
- 60 நகரங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 1650 பேர் வீடுகளை இழந்து தவிப்பு
பிரேசில் நாட்டின் தென்மாநிலம் ரியோ கிராண்ட் டோ சுல்-ஐ பயங்கரமான புயல் தாக்கியதில் 21 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். புயல் காரணமாக இடைவிடாத கனமழை பெய்ததால் 60 நகரங்கள் பாதிக்கப்பட்டன. 1,650 பேர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர்.
ரியோ கிராண்ட் டோ சுல் மாநில கவர்னர் எட்வர்டோ லைட் கூறுகையில் ''பருவநிலை மாற்றம் காரணமாக மாநிலத்தில் உயிர்ப்பலி அதிகரித்து வருகிறது. இந்த புயலால் 60 நகரங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இது வெப்பம் மண்டல சூறாவளியாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
பெண் ஒருவர் மீட்பு பணியின்போது வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டார். கயிறு கட்டி அந்த பெண்ணை மீட்டபோது, கயிறு அறுந்து ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார். அவரை காப்பாற முடியவில்லை'' என்றார்.
ரியா கிராண்ட் டோ சுல் பகுதியில் ஆற்றங்கரையோரம் வசித்து வந்த மக்கள், மொட்டை மாடியில் இருந்து உதவி கேட்பது போன்ற வீடியோ காட்சி நெஞ்சை பதைபதைக்க செய்ததாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கு முன் ஜூன் மாதம் இதுபோன்று பயங்கர சூறாவளி புயல் ஏற்பட்டது. அப்போது 16 பேர் உயிரிழந்தனர். 40 நகரங்கள் பாதிக்கப்பட்டன.
- முதல் மாரடைப்பு ஏற்பட்டு கோமா நிலைக்கு சென்ற நிலையில், மீண்டும் மாரடைப்பு
- முதற்கட்ட விசாரணையில் மது அருந்தியதாக தகவல்
சமூக வலைத்தளங்களில் தங்களது திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக வீடியோக்களை வெளியிடுவோர் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அதில் ஒருசிலரின் வீடியோக்கள் வைரலாகும்போது, அவர்கள் பிரபலம் அடைகிறார்கள். அவர்களை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை ஜெட் வேகத்தில் உயர்ந்து, ஒவ்வொரு போஸ்டையும் பார்த்து தங்களது கருத்துகளை வெளியிடுவார்கள்.
ஆன்மிகம், மருத்துவம், அழகு குறிப்பு, பிட்னஸ் என எல்லா துறைகளிலும் இதுபோன்று வீடியோக்கள் வெளிடுபவர்கள் சமூக வலைத்தளங்களில் ஆதிக்கம் செலுத்துபவர்கள் (Influencer) என அழைக்கப்படுவார்கள்.
அந்த வகையில் பிட்னஸ், பேஷன், டிராவல் குறித்த தகவலை வெளியிட்டு பெண் இன்புளூயன்சராக திகழ்ந்தவர் பிரேசில் நாட்டின் லரிசா போர்கேஸ். இவரை சமூக வலைத்தளத்தில் ஆயிரக்கணக்கானோர் பின்தொடர்ந்து வருகிறார்கள்.
இந்த நிலையில், இரண்டு முறை மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி தனது 33 வயதில் மரணம் அடைந்துள்ளார். இந்த தகவலை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து, அவரது குடும்பம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரது குடும்பத்தினர் பதிவிட்டதில் "33 வயது நிரம்பிய, மிகவும் அன்பான ஒருவரை இழந்த வலி மிகுந்தது. எங்கள் இதயங்கள் உடைந்துவிட்டன. அவர் இல்லாத எங்களின் ஏக்கம் விவரிக்க முடியாதது" எனக் குறிப்பிட்டுள்ளனர்.
கிராமடோ செல்லும்போது மாரடைப்பு ஏற்பட்டு கடந்த 20-ந்தேதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாகவும், அப்போது அவர் கோமா நிலைக்கு சென்றதாகும், 2-வது மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மரணத்திற்கான உண்மையான காரணம் தெளிவாக தெரியவில்லை என்றாலும், முதல் மாரடைப்பு ஏற்பட்டபோது மது அருந்தியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
- மருத்துவ குழுவினர் சிறுமியை பரிசோதித்துவிட்டு அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
- போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிரேசிலியா:
பிரேசிலின் ரியே-டி-ஜெனிரோ அருகில் உள்ள நோவா பிரிபர்கோ பகுதியில் பெர்னாண்டோ பேச்சிகோ பெராஸ் (13) என்ற சிறுமி பள்ளியில் இருந்து நண்பர்களுடன் பஸ்சில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது சிறுமியின் நண்பர்கள் தாங்கள் வசிக்கும் பகுதியில் இறங்கி உள்ளனர். அவர்கள் இறங்கியதும் பஸ் கிளம்பியது. அவர்களுக்கு கைகாட்டுவதற்காக பஸ்சின் ஜன்னல் கம்பி வழியே தலையை வெளியே நீட்டி சிறுமி எட்டி பார்த்துள்ளார்.
அந்த நேரத்தில் துரதிருஷ்டவசமாக பஸ்சின் எதிரே வந்த வாகனம் மீது மோதா மல் இருக்க டிரைவர் பஸ்சை திருப்பினார். அப்போது சிறுமியின் தலை ஒரு கான்கிரீட் மின் கம்பத்தில் மோதியது. இதில் அந்த சிறுமி படுகாயம் அடைந்தார். அதிர்ச்சி அடைந்த பயணிகள் டிரைவரிடம் பஸ்சை நிறுத்துமாறு கூச்சலிட்டனர். டிரைவர் உடனடியாக பஸ்சை நிறுத்தி ஆஸ்பத்திரிக்கும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும், நிறுவனத்தின் நிர்வாக குழுவினருக்கும் தகவல் தெரிவித்தார்.
விரைந்து வந்த மருத்துவ குழுவினர் சிறுமியை பரிசோதித்துவிட்டு அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். சிறுமி இறந்த செய்தி அறிந்து உறவினர்களும், நண்பர்களும் சோகத்தில் மூழ்கினர். எதிர் பாராத இந்த சம்பவத்துக்கு வருத்தம் தெரிவிப்பதாக பஸ் நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைப்பதாகவும் தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உலகப் போர்கள் மற்றும் மூன்று தொற்று நோய்களிலிருந்து தப்பியவர்.
- கோம்ஸுக்கு ஏழு குழந்தைகள், 25 பேரக்குழந்தைகள், 42 கொள்ளுப் பேரக்குழந்தைகள் மற்றும் 11 கொள்ளுப் பேரக்குழந்தைகள் உள்ளனர்.
பிரேசிலைச் சேர்ந்த உலகின் மிக வயதான மனிதர் ஜோஸ் பாலினோ கோம்ஸ் வயது மூப்பு காரணமாக தனது 127வது வயதில் காலமானார்.
அடுத்த வாரம் 128வது வயதில் அடிவைக்க இருந்த நிலையில், கோம்ஸ் உயிரிழந்துள்ளார். கோம்ஸின் உடல் உறுப்புகள் செயலிழந்ததால் இறந்துவிட்டதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
மினாஸ் ஜெரைஸில் அமைந்துள்ள பெட்ரா பொனிடாவில் உள்ள அவரது வீட்டில் கோம்ஸ் இறந்துள்ளார். இதையடுத்து, அவரது உடல் கடந்த சனிக்கிழமை பெட்ரா பொனிடாவில் உள்ள காரிகோ டாஸ் பியால்ஹோஸ் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது.
கோம்ஸின் திருமணச் சான்றிதழின்படி 1917ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 4ம் தேதி பிறந்தார். இவர், உலகப் போர்கள் மற்றும் மூன்று தொற்று நோய்களிலிருந்து தப்பியவர்.
கோம்ஸுக்கு ஏழு குழந்தைகள், 25 பேரக்குழந்தைகள், 42 கொள்ளுப் பேரக்குழந்தைகள் மற்றும் 11 கொள்ளுப் பேரக்குழந்தைகள் உள்ளனர்.
- கண் இமைக்கும் நேரத்திற்குள் திருடன் தப்பி ஓடி தலைமறைவானார்.
- பேட்டி டுவிட்டரில் வைரலாகி 2,200-க்கும் மேற்பட்ட லைக்குகளை குவித்து வருகிறது.
காதலுக்கு கண் இல்லை என்பார்கள். ஆனால் இப்படியும் காதல் மலருமா? என கேட்கும் வகையில் ஒரு சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பிரேசில் நாட்டை சேர்ந்த இமானுவேலா என்ற இளம்பெண் அப்பகுதியில் உள்ள ஒரு தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த ஒரு வாலிபர் இமானுவேலாவிடம் இருந்த செல்போனை பறித்து கொண்டு தப்பி ஓடினார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் திருடன், திருடன் என கத்தினார். ஆனாலும் கண் இமைக்கும் நேரத்திற்குள் திருடன் தப்பி ஓடி தலைமறைவானார்.
இந்நிலையில் செல்போனை பறித்த வாலிபர் அதை எடுத்து பார்த்த போது, அதில் இமானுவேலாவின் புகைப்படத்தை பார்த்தார். இவ்வளவு அழகான பெண்ணிடம் செல்போனை பறித்துவிட்டோமே என வருந்திய அவர், இமானுவேலாவை நேரில் சந்தித்து அவரிடம் போனை திருப்பி கொடுத்தார். இதனால் மகிழ்ச்சி அடைந்த இமானுவேலா, திருடனை மன்னித்ததோடு அவருடன் நட்பாக பழக தொடங்கினார். நாளடைவில் இந்த நட்பு காதலாக மாறி உள்ளது. கடந்த 2 வருடங்களாக இருவரும் காதலித்து வருவதாக கூறுகிறார்கள். இவர்களது பேட்டி டுவிட்டரில் வைரலாகி 2,200-க்கும் மேற்பட்ட லைக்குகளை குவித்து வருகிறது. வீடியோவை பார்த்த பயனர்கள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அதில் ஒருவர், அன்பால் எதையும் சாதிக்க முடியும் எனவும், மற்றொருவர் இது ஒரு நகைச்சுவை போல் தெரிகிறது, ஆனால் உண்மையானது என பதிவிட்டுள்ளார்.






