என் மலர்
விளையாட்டு

அபுதாபி:
13-வது ஐ.பி.எல். 20 ஓவர் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெற்று வருகிறது.
இந்தப் போட்டியில் இதுவரை 54 ஆட்டங்கள் முடிந்துள்ளன. இன்னும் 2 லீக் போட்டிகளே எஞ்சியுள்ளன. நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி மட்டுமே பிளேஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் அணியாக வாய்ப்பை இழந்தது. நேற்றைய ஆட்டங்களில் தோல்வியைத் தழுவியதன் மூலம் கிங்ஸ் லெவன் பஞ்சாப், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டன.
பிளேஆப் சுற்றின் 3 இடங்களுக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், டெல்லி கேப்பிடல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் ஆகிய 4 அணிகள் போட்டியில் உள்ளன.
பிளேஆப் சுற்றுக்கு 2-வதாக நுழையும் அணி எது என்பது இன்று தெரியும்.
அபுதாபியில் இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் விராட்கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், ஸ்ரேயாஷ் அய்யர் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதுகின்றன.
இதில் வெற்றி பெறும் அணி புள்ளிகள் பட்டியலில் 2-வது இடத்தை பிடித்து, பிளேஆப் சுற்றுக்கு தகுதி பெறும். இரு அணிகளும் 7 வெற்றி, 6 தோல்வியுடன் 14 புள்ளிகள் பெற்றுள்ளன. தோல்வி அடையும் அணி மும்பை-ஐதராபாத் இடையே நாளை நடைபெறும் ஆட்டத்தின் முடிவை பொறுத்து தகுதி பெறும். இரு அணிகளும் கொல்கத்தாவை விட ரன் ரேட்டில் நல்ல நிலையில் இருப்பதால், தோற்றாலும் முன்னேறுவதற்கான நிலையில் உள்ளது.
இந்த போட்டி தொடரின் லீக் ஆட்டம் நாளையுடன் முடிகிறது. நாளை நடைபெறும் கடைசி லீக் ஆட்டத்தில் மும்பை-ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.
இந்த ஆட்டத்தில் ஐதராபாத் தோற்றால் வெளியேறும். கொல்கத்தா, பெங்களூர், டெல்லி அணிகள் தகுதி பெறும். ஐதராபாத் வெற்றி பெற்றால் அந்த அணி, இன்றைய ஆட்டத்தில் தோற்கும் அணி, கொல்கத்தா ஆகியவை 14 புள்ளியுடன் சமநிலையில் இருக்கும்.
நிகர ரன் ரேட் அடிப்படையில் 2 அணிகள் பிளேஆப் சுற்றுக்கு முன்னேறும். பிளேஆப் சுற்று 5-ந் தேதி தொடங்குகிறது.
அபுதாபி:
ஐ.பி.எல். போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடைசி லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்பை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
இதுவரை நடந்த 12 ஐ.பி.எல். போட்டியிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளேஆப் சுற்றுக்கு முன்னேறி இருந்தது. இந்த ஐ.பி.எல். தொடரில் தான் முதல்முறையாக அடுத்த சுற்றுக்கு தகுதி பெறவில்லை.
சென்னை அணி 6 வெற்றி, 8 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்று 7-வது இடத்தை பிடித்தது. சென்னையை போலவே பஞ்சாப்பும், ராஜஸ்தானும் 12 புள்ளிகள் பெற்றன. ரன் ரேட் அடிப்படையில் பஞ்சாப் 6-வது இடத்தையும், ராஜஸ்தான் கடைசி இடத்தையும் பிடித்தன.
பஞ்சாப்புக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் சென்னை அணியின் தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் அரை சதம் அடித்தார். அவர் தொடர்ச்சியாக 3-வது அரை சதத்தை அடித்து முத்திரை பதித்தார்.
இதையொட்டி அவரை கேப்டன் டோனி பாராட்டினார். இது தொடர்பாக டோனி கூறியதாவது:-
ருதுராஜ் கெய்க்வாட் எப்போதுமே நன்றாக ஆடக் கூடியவர். அவரை கொரோனா 20 நாட்கள் முடக்கியது. இதனால் அவரை நாங்கள் கணிக்க நேரம் இல்லாமல் போய் விட்டது.
அதனால்தான் டுபெலிசிஸ்-வாட்சனை தொடக்க வீரர்களாக அனுப்பினோம். அது சரியாக அமையவில்லை. கடைசியில் ருதுராஜ் தொடக்க வரிசையில் அபாரமாக ஆடினார்.
இந்த ஐ.பி.எல். தொடர் மிகவும் கடினமானது. நிறைய தவறுகளை செய்தோம். கடைசி ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்ததில் பெருமை அடைகிறேன்.
அடுத்த தொடருக்கான ஏலத்தை கிரிக்கெட் வாரியம் எப்படி தீர்மானிக்கிறது என்பதை பொறுத்து அடுத்த அணி அமையும். வீரர்களை மாற்றி அடுத்த 10 ஆண்டுகளுக்கான அணியை கட்டமைக்க வேண்டும்.
ஐ.பி.எல். தொடங்கிய போது ஒரு அணியை உருவாக்கினோம். 10 ஆண்டுகள் சிறப்பாக சேவையாற்றினர். இனி அடுத்த தலைமுறையிடம் ஒப்படைக்க வேண்டியது தான்.
அடுத்த தொடரில் மீண்டும் வருவோம். ஜெர்சி கையெழுத்தினால் நான் ஓய்வு பெறுவதாக நினைத்துவிட்டனர்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
துபாய்:
ஐ.பி.எல். போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி கடைசி ஆட்டத்தில் 60 ரன் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்சை வீழ்த்தி வெளியேற்றியது. இந்த வெற்றி மூலம் அந்த அணி பிளேஆப் சுற்று வாய்ப்பில் நீடிக்கிறது. மும்பை-ஐதராபாத் அணிகள் மோதும் ஆட்டத்தின் முடிவை பொறுத்து அந்த அணியின் தலைவிதி இருக்கிறது.
இந்த வெற்றியால் கொல்கத்தா வீரர்களை கேப்டன் மார்கன் பாராட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
191 ரன் என்பது நல்ல ஸ்கோர் ஆகும். பேட்ஸ் மேன்கள், பந்து வீச்சாளர்கள் என அனைவரும் சிறப்பாக செயல்பட்டனர். இந்த ஆட்டத்தில் இதற்கு மேல் சிறப்பாக விளையாடி இருக்க வேண்டும் என்று கருதவில்லை. இனி என்ன நடப்பது என்பது கடவுள் கையில்தான் இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆண்டுக்கான பார்முலா1 கார் பந்தயம் 17 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதன் 13-வது சுற்றான எமிலியா ரோமக்னா கிராண்ட்பிரி பந்தயம் இத்தாலியின் இமோலா நகரில் நேற்று நடந்தது. 309.049 கிலோமீட்டர் பந்தய தூரத்தை நோக்கி வழக்கம் போல் 10 அணிகளைச் சேர்ந்த 20 வீரர்கள் காரில் சீறிப்பாய்ந்தனர். இதில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து வீரர் லீவிஸ் ஹாமில்டன் (மெர்சிடஸ் அணி) 1 மணி 28 நிமிடம் 32.430 வினாடிகளில் இலக்கை கடந்து முதலிடம் பிடித்ததுடன் 26 புள்ளிகளையும் தட்டிச் சென்றார். இந்த சீசனில் அவரது 9-வது வெற்றி இதுவாகும். அவரை விட 5.783 வினாடி பின்தங்கிய பின்லாந்து வீரர் வால்டெரி போட்டாஸ் (மெர்சிடஸ் அணி) 2-வதாக வந்து 18 புள்ளிகளை பெற்றார்.
13 சுற்று முடிவில் ஹாமில்டன் 282 புள்ளிகளுடன் சாம்பியன்ஷிப் பட்டத்தை நெருங்கி விட்டார். போட்டாஸ் 197 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளார். அதே சமயம் அணிகளுக்கான சாம்பியன்ஷிப் பட்டத்தை மெர்சிடஸ் அணி (479 புள்ளி) தொடர்ந்து 7-வது முறையாக உறுதி செய்திருக்கிறது. அடுத்த சுற்று போட்டி வருகிற 15-ந்தேதி துருக்கியில் நடக்கிறது.






