என் மலர்
விளையாட்டு
கிறிஸ்ட்சர்ச்:
நியூசிலாந்து-பாகிஸ்தான் அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச் மைதானத்தில் நேற்று தொடங்கியது.
முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி 297 ரன் குவித்து ஆல் அவுட் ஆனது. அசார் அலி 93 ரன்னும், கேப்டன் ரிஸ்வான் 61 ரன்னும் எடுத்தனர்.
நியூசிலாந்து தரப்பில் ஜேமிசன் 5 விக்கெட்டும், சவுத்தி, போல்ட் தலா 2 விக்கெட்டும், ஹென்றி ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.
இன்றைய 2-வது நாள் ஆட்டத்தில் நியூசிலாந்து முதல் இன்னிங்சை ஆடியது. 71 ரன் எடுப்பதற்குள் 3 விக்கெட்டை இழந்து அந்த அணி திணறியது.
புளுன்டெல் 14 ரன்னில் அஸ்ரப் பந்திலும், டாம் லாதம் 33 ரன்னில் ஷகீன்ஷா பந்திலும், டெய்லர் 12 ரன்னில் அப்பாஸ் பந்திலும் அவுட் ஆனார்கள்.
4-வது விக்கெட்டான கேப்டன் வில்லியம்சன்-நிக்கோலஸ் ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது. இருவரும் சிறப்பாக விளையாடினார்கள். இதனால் அந்த அணியின் ரன் மளமளவென உயர்ந்தது.
வில்லியம்சன் மிகவும் அபாரமாக விளையாடி சதம் அடித்தார். 140 பந்துகளில் 15 பவுண்டரியுடன், அவர் 100 ரன்னை தொட்டார். முதல் டெஸ்டிலும் வில்லியம்சன் சதம் அடித்து இருந்தார். 83-வது டெஸ்டில் விளையாடும் அவருக்கு இது 24-வது சதமாகும்.
இதேபோல மறுமுனையில் இருந்த நிக்கோலஸ் அரை சதத்தைத் தொட்டார்.
இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து அணி 3 விக்கெட்டுகளை இழந்து 286 ரன்கள் எடுத்திருந்தது. பாகிஸ்தான் தரப்பில் அப்ரிடி, அபாஸ், அஸ்ரப் தலா 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
மெல்போர்ன்:
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அடிலெய்டில் பகல்-இரவாக நடந்த முதல் டெஸ்டில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 36 ரன்னில் சுருண்டு படுதோல்வியை தழுவியது.
முதல் டெஸ்ட் போட்டி முடிந்தபிறகு கேப்டன் விராட் கோலி நாடு திரும்பினார். அவரது மனைவி அனுஷ்காவுக்கு குழந்தை பிறக்க இருப்பதால், இந்தியா வந்துவிட்டார். இதனால் ரஹானே கேப்டன் பொறுப்பை ஏற்றார்.
அவரது தலைமையிலான இந்திய அணி மெல்போர்னில் நடந்த 2-வது டெஸ்டில் 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி பதிலடி கொடுத்தது.
இந்த நிலையில் கேப்டன் பதவியில் ரஹானே செயல்படும் விதத்தை ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டனும், டெலிவிஷன் வர்ணனையாளருமான இயன் சேப்பல் பாராட்டி உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
மெல்போர்ன் டெஸ்டில் கேப்டனாக அசத்திய ரஹானே இந்திய அணிக்கு வெற்றி தேடி தந்ததில் ஆச்சரியம் இல்லை. ஏனெனில் அவர் 2017-ல் தர்மசாலாவில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்டில் கேப்டன் பதவியில் சிறப்பாக செயல்பட்டார்.
அவர் இந்திய அணியை வழிநடத்த பிறந்தவர் என்பதை அறிந்து கொண்டேன். அந்த டெஸ்டில் வார்னர், சுமித் ஜோடி சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்தபோது அறிமுக சுழற்பந்து வீரர் குல்தீப் யாதவை பந்துவீச அழைத்தார். இது அவரது துணிச்சலான முடிவு. இதற்கு நல்ல பலன் கிடைத்தது.
இந்த 2 டெஸ்ட்களிலும் ஜடேஜாவின் பங்கு அதிகம் இருப்பதை கவனிக்க வேண்டும். அது ஆட்டத்தின் போக்கையே மாற்றியது. தலைமை பண்புக்கே உரிய குணத்துடன் அணியை வழிநடத்தி செல்லும் துணிச்சல் மிக்கவர் ரஹானே.
நெருக்கடியான நேரத்தில் மிகவும் அமைதியாக இருப்பார். சக வீரர்களிடம் நன்மதிப்பை பெற்றுள்ளார். இவை இரண்டும் அவரிடம் உள்ள சிறந்த தலைமை பண்பாக கருதுகிறேன்.
இவ்வாறு இயன் சேப்பல் கூறியுள்ளார்.
11 அணிகள் இடையிலான 7-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் கோவாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று மாலை நடந்த 45-வது லீக் ஆட்டத்தில் அறிமுக அணியான ஈஸ்ட் பெங்கால் 3-1 என்ற கோல் கணக்கில் ஒடிசாவை தோற்கடித்தது. 8-வது ஆட்டத்தில் ஆடிய ஈஸ்ட் பெங்கால் அணி சுவைத்த முதல் வெற்றி இதுவாகும்.
இன்னும் வெற்றிக் கணக்கை தொடங்காத ஒடிசா அணிக்கு இது 6-வது தோல்வியாகும். இரவில் நடந்த மற்றொரு லீக் ஆட்டத்தில் ஏ.டி.கே.மோகன் பகான் அணி 2-0 என்ற கோல் கணக்கில் நார்த் ஈஸ்ட் யுனைடெட்டை (கவுகாத்தி) வீழ்த்தி 6-வது வெற்றியை பெற்றதுடன், புள்ளி பட்டியலிலும் முதலிடத்துக்கு முன்னேறியது.
இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான சென்னையின் எப்.சி. அணி, ஐதராபாத் எப்.சி.யை சந்திக்கிறது.






