என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • சூர்யகுமார் யாதவ் ஜிம்பாப்வேவுக்கு எதிராக அரைசதம் விளாசினார்
    • உலகக்கோப்பையில் ஐந்து போட்டிகளில் 3-ல் அரைசதம் கண்டுள்ளார்.

    சூர்யகுமார் யாதவ் வேற்றுகிரகவாசி: பாகிஸ்தான ஜாம்பவான்கள் புகழாரம்ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பையில் இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். நெதர்லாந்து, தென்ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே அணிகளுக்கு எதிராக அரைசதம் விளாசியுள்ளார்.

    எந்தவித அச்சமின்றி பந்துகளை நாலாபுறமும் விளாசுகிறார். இந்த பந்தையெல்லாம் அடிக்க முடியுமா? என்ற கேட்க தோன்றும் பந்துகளையெல்லாம் கீப்பருக்கு பின்னால் சிக்சராக விளாசுகிறார். அவருக்கு எப்படித்தான் வீசுவது என பந்து வீச்சாளர்கள் யோசித்துக் கொண்டிருக்கிறார்கள்.

    நேற்று ஜிம்பாப்வே அணிக்கெதிராக கடைசி பந்தை விக்கெட் கீப்பருக்கு மேலாக அருமையாக சிக்ஸ் அடித்திருப்பார். அவரை புகழாத விமர்சகர்ளே இல்லை.

    ஐந்து பேட்டிகளில் 225 ரன்கள் விளாசியுள்ளார். விராட் கோலி 246 ரன்கள எடுத்து முதல் இடத்தில் உள்ளார்.

    இந்த நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனான வாசிம் அக்ரம், சூர்யகுமார் வேற்று கிரகத்தில் இருநது வந்துள்ளார் என புகழாரம் தெரிவித்துள்ளார்.

    மேலும் ''சூர்யகுமார் யாதவ் வேற்று கிரகத்தில் இருந்து வந்துள்ளதாக நினைக்கிறேன். மற்ற பேட்ஸ்மேன்களிடம் இருந்து முற்றிலும் மாறுபட்ட நபராக இருக்கிறார். அவர் ஜிம்பாப்வே அணிக்கெதிராக மட்டுமல்ல, உலகின் தலைசிறந்த பந்து வீச்சாளர்களுக்கு எதிராகவும் ரன்கள் குவித்துள்ளார்'' என வாசிக் அக்ரம் தெரிவித்துள்ளார்.

    மற்றொரும் பாகிஸ்தான் ஜாம்பவான் வக்கார் யூனிஸ் கூறுகையில் ''டி20-யில் சூர்யகுமாரை ஆட்டமிழக்க செய்ய வழி என்ன?. ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் அவருக்கு நீங்கள் திட்டம் தீட்ட முடியும். ஆனால், டி20-யில் ஏற்கனவே பந்து வீச்சாளர்கள் சிரமப்படும்போது, ஒருவர் இந்த மாதிரியான ஃபார்மில் இருக்கும்போது பந்து வீசுவது கடினம்.

    பாகிஸ்தான் குரூப் ஆட்டத்தில் சூர்யகுமார் யாதவுக்கு எதிராக சிறப்பாக பந்து வீசியதாக நினைக்கிறேன். அவர்கள் ஷார்ட் பிட்ச் பந்துகளால் தாக்கினார்கள். ஒருவேளை சூர்யகுமாரை அவுட்டாக்க இது ஒன்றுதான் வழியாக இருக்கலாம்'' என்றார்.

    • தனது அன்பான கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மாவை அருகே சென்று பார்த்து விட்டதால் அந்த ரசிகர் ஆனந்த கண்ணீர் வடித்தார்.
    • இந்தியா மோதும் ஆட்டங்களில் அரங்கம் நிரம்பி வழிகிறது.

    மெல்போர்ன்:

    20 ஓவர் உலக கோப்பையில் 'சூப்பர்12' சுற்றின் கடைசி ஆட்டத்தில் இந்திய அணி 71 ரன் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேயை தோற்கடித்தது.

    முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 186 ரன் குவித்தது. சூர்யகுமார் யாதவ் 25 பந்தில் 61 ரன்னும் (6 பவுண்டரி, 4 சிக்சர்), லோகேஷ் ராகுல் 35 பந்தில் 51 ரன்னும் (3 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்தனர்.

    பின்னர் ஆடிய ஜிம்பாப்வே அணி 17.2 ஓவரில் 115 ரன்னில் சுருண்டது. அஸ்வின் 3 விக்கெட்டும், முகமது ஷமி, ஹர்திக் பாண்ட்யா தலா 2 விக்கெட்டும், புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப்சிங், அக்‌ஷர் படேல் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    இந்த போட்டியின் போது இளம் ரசிகர் ஒருவர் மைதானத்துக்குள் நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    17-வது ஓவரில் இந்திய வீரர்கள் மைதானத்தில் பீல்டிங்கில் இருந்தனர். அப்போது கருப்பு சட்டை அணிந்த சிறுவன் ஒருவன் தேசிய கொடியுடன் ரோகித் சர்மாவை பார்ப்பதற்காக ஆடுகளத்துக்குள் பாதுகாப்பையும் மீறி நுழைந்தான்.

    போலீசார் அவனை பிடிப்பதற்குள் அவன் பிட்ச் பகுதி அருகே வந்தான். பின்னால் துரத்தி வந்த ஆஸ்திரேலிய போலீசார் அந்த ரசிகரை மடக்கி பிடித்தனர். அப்போது ரோகித் சர்மா அருகே வந்து அந்த ரசிகரிடம் கடுமையாக நடந்து கொள்ள வேண்டாம் என்று போலீசாரிடம் கேட்டுக் கொண்டார். தனது அன்பான கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மாவை அருகே சென்று பார்த்து விட்டதால் அந்த ரசிகர் ஆனந்த கண்ணீர் வடித்தார்.

    பின்னர் அந்த சிறுவனை போலீசார் மைதானத்தில் இருந்து வெளியே அழைத்து சென்றனர்.

    மெல்போர்ன் மைதானத்துக்குள் அத்துமீறி நுழைந்த ரோகித் சர்மா ரசிகருக்கு ரூ.6½ லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

    ஆஸ்திரேலியாவில் விளையாடி வரும் இந்திய அணிக்கு அங்குள்ள இந்திய ரசிகர்கள் பெரும் அளவில் திரண்டு வந்து ஆதரவு அளித்து வருகிறார்கள். இந்தியா மோதும் ஆட்டங்களில் அரங்கம் நிரம்பி வழிகிறது.

    • அரைஇறுதியில் இங்கிலாந்தை அடிலெய்டில் சந்திக்க உள்ளோம்.
    • இந்த மாதிரி அதிரடியாக விளையாடுவதை வெளியில் இருந்து பார்க்கும்போது வீரர்கள் அமர்ந்திருக்கும் பகுதியில் நெருக்கடி தணிந்து விடுகிறது.

    வெற்றிக்கு பிறகு இந்திய கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில் இது ஒரு முழுமையான ஆல்ரவுண்ட் செயல்பாடு. இதைத்தான் நாங்கள் எதிர்பார்த்தோம். ஏற்கனவே அரைஇறுதிக்கு தகுதி பெற்று விட்ட நிலையில், இந்த ஆட்டத்தில் களம் இறங்கி விரும்பிய மாதிரி விளையாட வேண்டும் என்று நினைத்தோம்.

    அதை செய்து இருக்கிறோம். சூர்யகுமார் யாதவின் பேட்டிங் அற்புதம். அவர் இந்த மாதிரி அதிரடியாக விளையாடுவதை வெளியில் இருந்து பார்க்கும்போது வீரர்கள் அமர்ந்திருக்கும் பகுதியில் நெருக்கடி தணிந்து விடுகிறது. அத்துடன் எதிர்முனையில் நிற்கும் பேட்ஸ்மேனின் அழுத்தத்தையும் அவர் குறைந்து விடுகிறார்.

    அரைஇறுதியில் இங்கிலாந்தை அடிலெய்டில் சந்திக்க உள்ளோம். அங்குள்ள சீதோஷ்ண நிலைக்கு ஏற்ப எங்களை சீக்கிரம் மாற்றிக்கொள்வது முக்கியமாகும்.

    ஏற்கனவே அங்கு நாங்கள் விளையாடி இருக்கிறோம். ஆனாலும் அதற்கு ஏற்ப மாற்றிக் கொள்வது அவசியமாகும். இங்கிலாந்து நல்ல அணி. இது சிறந்த போட்டியாக இருக்கும்' என்றார்.

    • ஆஸ்திரேலியாவில் டாஸ் வென்று அணிகளுக்கு ஒன்றிரண்டு போட்டிகளில் சாதகமாக அமைந்திருக்கலாம்.
    • நேற்று நெதர்லாந்து அணிக்கு எதிராக தென்ஆப்பிரிக்கா டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்து தோல்வியை தழுவியது.

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதி கட்டத்தை எட்டிவிட்டது. நேற்றுடன் குரூப் ஆட்டங்கள் முடிந்த நிலையில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன.

    முதல் அரையிறுதியில் நியூசிலாந்து- பாகிஸ்தான் அணிகளும், 2-வது அரையிறுதியில் இந்தியா- இங்கிலாந்து அணிகளும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    டி20 போட்டியை பொறுத்த வரையில், டாஸ் முக்கியத்துவம் பெறும். போட்டி இரவில் நடப்பதால் பனித்துளி ஆதிக்கம் செலுத்தும். இதனால், 2-வது பந்து வீசும் அணிக்கு பாதகமாக இருக்கும். இதனால் டாஸ் வென்றாலே கண்ணை மூடிக்கொண்டு கேப்டன்கள் பந்து வீச்சைதான் தேர்வு செய்வார்கள்.

    இதற்கு உதாரணம் கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த உலகக் கோப்பையை சொல்லலாம். டாஸ் வென்ற அணிகளே பெரும்பாலும் வெற்றி பெற்றன.

    இந்திய அணி பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகளுக்கு எதிராக டாஸ் தோற்றதுடன் போட்டியில் தோல்வியடைந்து தொடக்க சுற்றோடு வெளியேறியது.

    தற்போது நடைபெற்று வரும் ஆஸ்திரேலியாவில் டாஸ் வென்று அணிகளுக்கு ஒன்றிரண்டு போட்டிகளில் சாதகமாக அமைந்திருக்கலாம்.

    இந்தியா- இங்கிலாந்து அணிகள் அரையிறுதியில் மோதும் அடிலெய்டு முற்றிலும் மாறுபட்ட முடிவுகளை கொடுத்துள்ளது. இந்த உலகக் கோப்பையில் ஆறு போட்டிகள் நடைபெற்றுள்ளன. இதற்கு முன் ஐந்து போட்டிகளில் முடிந்துள்ளன. இந்த 11 போட்டிகளிலும் டாஸ் வென்ற அணி தோல்வியை தழுவியுள்ளது.

    நேற்று நெதர்லாந்து அணிக்கு எதிராக தென்ஆப்பிரிக்கா டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்து தோல்வியை தழுவியது. பாகிஸ்தானுக்கு எதிராக வங்காளதேசம் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்து தோல்வியை தழுவியது.

    இதனால் 10-ந்தேதி (வியாழக்கிழமை) மோதும் இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான போட்டியின்போது, அப்போதும் டாஸ் வென்றேயாக வேண்டும் என நினைக்கும் கேப்டன்கள், இந்த போட்டியில் டாஸ் வெல்லக் கூடாது என நினைக்கலாம்.

    என்ன இருந்தாலும், அன்றைய தினம் யாருக்கு சிறந்த நாளாக அமைகிறதோ, அவர்களே வெற்றி வாகை சூடுவார்கள்.

    • இங்கிலாந்து அணி நல்ல கிரிக்கெட் ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள்.
    • நாங்கள் விளையாடும் போட்டிகளில் எல்லாம் மைதானம் நிரம்பி விடுகிறது.

    அடிலெய்டு:

    20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் கடந்த 16-ந்தேதி தொடங்கியது. இதில் 16 நாடுகள் பங்கேற்றன.

    இதில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, முன்னாள் சாம்பியன்கள் இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய 8 நாடுகள் நேரடியாக 2-வது சுற்றான 'சூப்பர் 12' சுற்றில் ஆடின.

    முன்னாள் சாம்பியன்கள் வெஸ்ட் இண்டீஸ், இலங்கை மற்றும் அயர்லாந்து, நெதர்லாந்து, நமீபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஜிம்பாப்வே, ஸ்காட்லாந்து ஆகிய 8 அணிகள் முதல் சுற்றில் விளையாடின.

    கடந்த 2-ந்தேதி முதல் சுற்று ஆட்டங்கள் முடிந்தன. இதில் வெஸ்ட் இண்டீஸ் 'சூப்பர்12' சுற்றுக்கு முன்னேற முடியாமல் முதல் சுற்றிலேயே அதிர்ச்சிகரமாக வெளியேறியது. இலங்கை, நெதர்லாந்து, ஜிம்பாப்வே, அயர்லாந்து ஆகியவை 'சூப்பர்12' சுற்றுக்கு தகுதி பெற்றன.

    'சூப்பர்12' சுற்று ஆட்டங் கள் கடந்த 22-ந்தேதி தொடங்கியது. இதில் விளையாடிய 12 நாடுகளும் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டன. நேற்றுடன் 'சூப்பர்12' சுற்று முடிவடைந்தன.

    இதன் முடிவில் 'குரூப்1' பிரிவில் நியூசிலாந்து, இங்கிலாந்து (தலா 7 புள்ளிகள்), முதல் 2 இடங்களை பிடித்து அரை இறுதிக்கு தகுதி பெற்றன. ஆஸ்திரேலியா, இலங்கை, அயர்லாந்து, ஆப்கானிஸ் தான் ஆகியவை 3 முதல் 6-வது இடங்களை பிடித்து வெளியேறின.

    'குரூப்2' பிரிவில் இந்தியா 4 வெற்றி, 1 தோல்வியுடன 8 புள்ளிகள் பெற்று முதல் இடத்தையும், பாகிஸ்தான் 3 வெற்றி, 2 தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தை பிடித்து அரை இறுதிக்கு முன்னேறின. தென் ஆப்பிரிக்கா, நெதர்லாந்து, வங்காளதேசம், ஜிம்பாப்வே ஆகிய அணிகள் 3 முதல் 6-வது இடங்களை பிடித்து வெளியேறின.

    2 நாட்கள் ஓய்வுக்கு பிறகு அரை இறுதி போட்டி வருகிற 9-ந்தேதி தொடங்குகிறது. அன்று நடைபெறும் முதல் அரை இறுதியில் குரூப்1 பிரிவில் முதல் இடத்தை பிடித்த நியூசிலாந்து-குரூப்2 பிரிவில் 2-வது இடத்தை பிடித்த பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. சிட்னியில் இந்த ஆட்டம் நடக்கிறது.

    அடிலெய்டு மைதானத்தில் வருகிற 10-ந்தேதி நடைபெறும் 2-வது அரை இறுதி ஆட்டத்தில் குரூப்-2 பிரிவில் முதல் இடத்தை பிடித்த இந்தியா-குரூப்1 பிரிவில் 2-வது இடத்தை பிடித்த இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. இறுதி போட்டி 13-ந்தேதி மெல்போர்ன் மைதானத்தில் போட்டி நடக்கிறது.

    அரை இறுதி மற்றும் இறுதி போட்டி இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது. மழையால் பாதிக்கப்பட்டால் ரிசர்வ் தினமான மறுநாளில் போட்டி நடைபெறும்.

    இந்த நிலையில் இங்கிலாந்துடனான அரை இறுதி ஆட்டம் சவாலானது என்று இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்து உள்ளார். ஜிம்பாப்வே அணியுடனான வெற்றிக்கு பிறகு அவர் இது தொடர்பாக கூறியதாவது:-

    இங்கிலாந்துக்கு எதிரான அரை இறுதி போட்டி எங்களுக்கு நல்ல சவாலாக இருக்கும். அவர்கள் நல்ல கிரிக்கெட் ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். இரு அணிகளும் மோதுவது கடும் போட்டியாக இருக்கும்.

    அரை இறுதியில் ஒவ்வொரு வீரரும் என்ன செய்ய வேண்டும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இந்த ஆட்டம் அதிகபட்சமாக நெருக்கடியாக இருக்கும். சிறப்பாக ஆட வேண்டியது அவசியமாகும்.

    சூர்யகுமார் யாதவின் பேட்டிங் வியக்கத்தக்க வகையில் அபாரமாக இருக் கிறது. அவரது அதிரடியான ஆட்டம் எதிர் முனையில் உள்ள பேட்ஸ்மேனுக்கு நெருக்கடியை குறைத்து விடும். அவர் தனது பலத்தில் இருந்து மேலும் பலம் பெற்று வருகிறார்.

    ரசிகர்கள் ஆதரவு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. நாங்கள் விளையாடும் போட்டிகளில் எல்லாம் மைதானம் நிரம்பி விடுகிறது. அவர்களுக்கு எனது நன்றியை தெரிவிக்கிறேன்.

    இவ்வாறு ரோகித் சர்மா கூறியுள்ளார். 

    • மைதானத்தின் வித்தியாசமான சுற்றளவில் எங்களை விட நெதர்லாந்து பீல்டிங்கில் சிறப்பாக செயல்பட்டது
    • கேப்டன் பதவி குறித்து எந்த முடிவும் எடுக்கமாட்டேன்.

    அடிலெய்டு:

    20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் அடிலெய்டில் நேற்று காலை நடந்த ஆட்டத்தில் (குரூப்2) தென்ஆப்பிரிக்கா, குட்டி அணியான நெதர்லாந்தை எதிர்கொண்டது. 'வெற்றி பெற்றால் அரைஇறுதி, தோற்றால் வெளியேற்றம்' என்ற வாழ்வா-சாவா? சூழலில் 'டாஸ்' ஜெயித்த தென்ஆப்பிரிக்க கேப்டன் பவுமா பந்து வீச்சை தேர்வு செய்தார்.

    இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த நெதர்லாந்து அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் ஸ்டீபன் மைபர்க் (37 ரன்), மேக்ஸ் டி டாவ்ட் (29 ரன்) நல்ல தொடக்கம் தந்தனர். அடுத்து வந்த டாம் கூப்பர் (35 ரன்), காலின் அகெர்மான் (41 ரன், 26 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்) ஆகியோரும் கணிசமான பங்களிப்பு அளிக்க, அந்த அணி 150 ரன்களை கடந்து சவாலான நிலையை அடைந்தது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் நெதர்லாந்து 4 விக்கெட்டுக்கு 158 ரன்கள் சேர்த்தது.

    பின்னர் 159 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய தென்ஆப்பிரிக்காவுக்கு திருப்திகரமான தொடக்கம் கிடைக்கவில்லை. துல்லியமாக பந்து வீசி குடைச்சல் கொடுத்த நெதர்லாந்து பவுலர்கள், குயின்டான் டி காக் (13 ரன்). கேப்டன் பவுமா (20 ரன்), ரோசவ் (25 ரன்) ஆகியோரை சீக்கிரம் காலி செய்தனர். இதன் பின்னர் மார்க்ராமும், டேவிட் மில்லரும் கைகோர்த்து அணியை கரைசேர்க்க சிறிது நேரம் போராடினர்.

    இவர்கள் நின்றது வரை தென்ஆப்பிரிக்கா பக்கம் சற்று உற்சாகம் தென்பட்டது. ஆனால் இந்த கூட்டணி உடைந்ததும் ஆட்டத்தின் போக்கு தலைகீழானது. ஸ்கோர் 90-ஐ (12.3 ஓவர்) எட்டிய போது மார்க்ராம் 17 ரன்களில் (13 பந்து, 2 பவுண்டரி) கேட்ச் ஆனார். தொடர்ந்து டேவிட் மில்லரும் (17 ரன்) நடையை கட்ட நெதர்லாந்தின் கை ஓங்கியது. அடுத்து வந்த வீரர்களால் எதிரணியின் பந்து வீச்சை அடித்து நொறுக்க இயலவில்லை.

    கடைசி ஓவரில் வெற்றிக்கு 26 ரன்கள் தேவைப்பட்ட போது தென்ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்களால் அந்த ஓவரில் 12 ரன்களே எடுக்க முடிந்தது. 20 ஓவர் முழுமையாக ஆடிய தென்ஆப்பிரிக்கா 8 விக்கெட்டுக்கு 145 ரன்னில் அடங்கியது. இதன் மூலம் நெதர்லாந்து 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது. சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் நெதர்லாந்து அணி தென்ஆப்பிரிக்காவை வீழ்த்துவது இதுவே முதல் முறையாகும்.

    இதற்கு முன்பு தென்ஆப்பிரிக்காவுடன் மோதிய 4 ஒரு நாள் போட்டிகளிலும், ஒரு 20 ஓவர் போட்டியிலும் தோற்றிருந்தது.இந்த தோல்வியால் 5 புள்ளிகளுடன் பட்டியலில் 3-வது இடத்துக்கு தள்ளப்பட்ட தென்ஆப்பிரிக்கா அரைஇறுதி வாய்ப்பை இழந்து வெளியேறியது.

    தோல்வியால் விரக்தி அடைந்த தென்ஆப்பிரிக்க கேப்டன் பவுமா கூறியதாவது:-

    தோல்வியை ஏற்றுக்கொள்ளவே கடினமாக இருக்கிறது. நிச்சயம் அரைஇறுதிக்கு முன்னேறி விடுவோம் என்று நம்பினோம். துரதிர்ஷ்டவசமாக அது நடக்காமல் போய் விட்டது. முக்கியமான தருணங்களில் விக்கெட்டுகளை இழந்தது பின்னடைவாகிப் போனது.

    மைதானத்தின் வித்தியாசமான சுற்றளவில் எங்களை விட நெதர்லாந்து பீல்டிங்கில் சிறப்பாக செயல்பட்டது' என்றார். உணர்ச்சிபூர்வமான இந்த நிலைமையில் இப்போது கேப்டன் பதவி குறித்து எந்த முடிவும் எடுக்கமாட்டேன், சம்பந்தப்பட்டவர்களிடம் அது குறித்து பேசுவேன் என்றும் பவுமா குறிப்பிட்டார்.

    • குணதிலகாவை கைது விவகாரம் இலங்கை கிரிக்கெட் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    • நீதிமன்ற நடைமுறைகளை உன்னிப்பாகக் கண்காணிப்பதாக இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது

    உலகக் கோப்பை கிரிக்கெட்டில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா சென்றிருந்த இலங்கை அணி வீரர் தனுஷ்கா குணதிலகா பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். பாலியல் வன்கொடுமை செய்ததாக பெண் ஒருவர் அளித்த புகாரின் பேரில் சிட்னி போலீசார், குணதிலகாவை கைது செய்துள்ளனர். இந்த விவகாரம் இலங்கை கிரிக்கெட் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இது தொடர்பாக இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், தனுஷ்கா குணதிலகா மீதான குற்றச்சட்டு நிரூபிக்கப்பட்டால், அவர் மீது கடும் நடவடிககை எடுக்கப்படும் என இலங்கை கிரிக்கெட் வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    'சிட்னியில் பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டின் பேரில் வீரர் தனுஷ்கா குணதிலகா கைது செய்யப்பட்டுள்ளார். குணதிலகா நவம்பர் 7ம் தேதி (இன்று) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக ஐசிசியால் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இலங்கை கிரிக்கெட் வாரியம், நீதிமன்ற நடைமுறைகளை உன்னிப்பாகக் கண்காணிக்கும். மேலும் ஐசிசியுடன் கலந்தாலோசித்து, இந்த விஷயத்தில் ஒரு முழுமையான விசாரணையை விரைவாகத் தொடங்கும். குற்றம் நிரூபிக்கப்பட்டால் வீரர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்' என இலங்கை கிரிக்கெட் வாரிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஆஸ்திரேலியாவில் குணதிலகா கைது செய்யப்பட்டதால் அவர் இல்லாமல இலங்கை அணி நாடு திரும்பியது. 

    • டி20 உலக கோப்பை தொடரை நடத்தும் அணி கோப்பையை வென்றதில்லை என்ற சோகம் தொடர்கிறது.
    • அறிமுகமான 2007-ம் ஆண்டின் முதல் தொடரில் இந்தியா கோப்பை வென்று அசத்தியது.

    சிட்னி:

    கடந்த 2007-ல் அறிமுகப்படுத்தப்பட்ட டி20 உலக கோப்பை தொடர் தென் ஆப்பிரிக்காவில் முதலில் நடைபெற்றது. அதில் தொடரை நடத்தும் தென் ஆப்பிரிக்க அணி குரூப் சுற்றுடன் வெளியேறியது. இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.

    2009-ம் ஆண்டு இங்கிலாந்தில் டி20 உலக கோப்பை தொடர் நடந்தது. அதில் இங்கிலாந்து அணி குரூப் சுற்றுடன் வெளியேறியது. பாகிஸ்தான் அணி சாம்பியன் பட்டம் வென்றது.

    2010-ம் ஆண்டு வெஸ்ட் இண்டீசில் டி20 உலக கோப்பை தொடர் நடைபெற்றது. அதில் தொடரை நடத்தும் வெஸ்ட் இண்டீஸ் அணி குரூப் சுற்றுடன் வெளியேறிய நிலையில், இங்கிலாந்து அணி கோப்பையை வென்றது.

    2012 டி20 உலக கோப்பை தொடர் இலங்கையில் நடைபெற்றது. அதில் இலங்கை இறுதிப்போட்டி வரை முன்னேறி தோல்வியடைந்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது.

    2014ல் டி20 உலக கோப்பை தொடரை நடத்திய வங்காளதேசம் லீக் சுற்றுடன் நடையை கட்ட, அதில் இலங்கை அணி சாம்பியன் ஆனது.

    2016 டி20 உலக கோப்பை இந்தியாவில் நடைபெற்றது. இந்திய அணி அரையிறுதி வரை சென்று வாய்ப்பை தவறவிட்டதால், வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டாவது முறையாக சாம்பியன் ஆனது.

    2021-ம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரகமும், ஓமனும் இணைந்து டி20 உலக கோப்பை தொடரை நடத்தின. ஆனால் ஐக்கிய அரபு அமீரகம் தகுதிச்சுற்றுக்கு கூட தகுதிபெறவில்லை. ஓமனோ தகுதிச்சுற்றை தாண்டவில்லை. அதில் ஆஸ்திரேலியா கோப்பையை வென்றது.

    இதுவரை நடந்த 7 தொடர்களிலும் போட்டியை நடத்திய அணிகள் கோப்பையை வென்றதில்லை.

    இந்நிலையில், 8-வது டி20 உலக கோப்பை தொடரை ஆஸ்திரேலியா நடத்திவரும் நிலையில், அந்த அணி தற்போது குரூப் சுற்றுடன் நடையை கட்டியது. இதையடுத்து, போட்டியை நடத்தும் அணி கோப்பையை வெல்ல முடியாமல் போகும் சோகம் இந்த முறையும் தொடர்கதையாகி உள்ளது.

    • மகளிர் ஒற்றையர் பிரிவில் திருவள்ளூரைச் சேர்ந்த மனீஷா தங்கப் பதக்கம் வென்றார்.
    • கலப்பு இரட்டையர் பிரிவில் ஈரோட்டைச் சேர்ந்த ருத்திக் ரகுபதி வெண்கலம் வென்றார்.

    டோக்கியோ:

    மாற்றுத் திறனாளிகளுக்கான பாரா பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடர் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்றது.

    இதன் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த வீராங்கனை மனீஷா ராமதாஸ் உடன் ஜப்பான் வீராங்கனை மாமிகோ டொயோட்டா மோதினார். இதில் ஜப்பான் வீராங்கனையை 21-15, 21-15 என வீழ்த்தி மனீஷா தங்கப் பதக்கம் வென்று அசத்தினார்.

    இதேபோல், கலப்பு இரட்டையர் மற்றும் இரட்டையர் பிரிவுகளில் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த ருத்திக் ரகுபதி 2 வெண்கல பதக்கங்களை வென்றார்.

    மேலும் ஓசூரைச் சேர்ந்த நித்யஸ்ரீ ஒற்றையர், இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் ஆகிய 3 பிரிவுகளிலும் வெண்கலம் வென்று அசத்தியுள்ளார்.

    • டி20 உலக கோப்பை தொடரின் அரையிறுதிக்கு இந்தியா முன்னேறியது.
    • நடப்பு ஆண்டில் டி20 போட்டிகளில் 1,026 ரன்களை எடுத்துள்ளார் சூர்யகுமார் யாதவ்.

    மெல்போர்ன்:

    ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 12 சுற்று ஆட்டங்கள் நேற்றுடன் நிறைவு பெற்றன. நேற்று நடந்த சூப்பர் லீக் சுற்று கடைசி ஆட்டத்தில் இந்தியா, ஜிம்பாப்வே அணிகள் மோதின.

    டாஸ் வென்று முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் எடுத்தது. கே.எல்.ராகுல் 35 பந்துகளில் 51 ரன் குவித்து பெவிலியன் திரும்பினார். அதிரடியில் மிரட்டிய சூரியகுமார் யாதவ் 25 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்சர்களுடன் 61 ரன்கள் குவித்து களத்தில் இருந்தார்.

    இதையடுத்து 187 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய ஜிம்பாப்வே 115 ரன்னுக்கு ஆட்டமிழந்தது. இதனால் 71 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

    இந்நிலையில், இந்தப் போட்டியில் 61 ரன்கள் குவித்ததன் மூலம் நடப்பு ஆண்டில் நடைபெற்ற டி 20 போட்டிகளில் 1,026 ரன்களை எடுத்துள்ளார் சூர்யகுமார் யாதவ்.

    இதன்மூலம், டி 20 போட்டிகளில் ஒரே வருடத்தில் 1000 ரன்களை கடந்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். நடப்பு ஆண்டில் 28 போட்டிகளில் மொத்தம் 1026 ரன்களை எடுத்துள்ளார்.

    ஒட்டுமொத்தமாக ஒரே ஆண்டில் 1000 ரன்களை கடந்த இரண்டாவது வீரர் என்ற பெருமையையும் சூர்யகுமார் யாதவ் பெற்றுள்ளார்.

    இந்தப் பட்டியலில் பாகிஸ்தான் அணியின் முகமது ரிஸ்வான் முதலிடத்தில் உள்ளார். அவர் கடந்த ஆண்டு 29 போட்டிகளில் 1326 ரன்களை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அவர் தற்போது உலகின் நம்பர் ஒன் டி20 வீரராக இருக்கிறார்.
    • ஒவ்வொரு முறையும், சந்தேகத்திற்கு இடமின்றி அவர் விளையாடுகிறார்.

    மெல்போர்ன்:

    ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற சூப்பர் 12 சுற்று கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியா ஜிம்பாப்வே அணியை 71 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்த போட்டியில் சூரியகுமார் யாதவ் 61 ரன்கள் குவித்து கடைசி வரை களத்தில் இருந்தார்.

    போட்டி நிறைவுக்கு பின்னர் மெல்போர்னில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் இது குறித்து கூறியதாவது:

    அவர் (சூரியகுமார்) முற்றிலும் தனித்துவமானவர் என்றே நான் நினைக்கிறேன். அவர் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கிறார். நல்ல ஃபார்மில் இருக்கும்போது அவர் பேட்டிங் செய்வதைப் பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஒவ்வொரு முறையும், சந்தேகத்திற்கு இடமின்றி அவர் விளையாடுவது, புதிதாக ஒரு நிகழ்ச்சியை பார்ப்பது போலவே இருக்கிறது.

    25 பந்துகளில் 61 ரன்கள் விளாசியது நம்ப முடியாதது. அதனால்தான் அவர் தற்போது உலகின் நம்பர் ஒன் டி20 வீரராக இருக்கிறார். 225 ரன்களுடன், இந்த தொடரில் இந்திய அணியில் அதிக ரன்கள் எடுத்த இரண்டாவது வீராக அவர் திகழ்கிறார். விராட் கோலி (246) மட்டுமே அவரை விட அதிகமாக ஸ்கோர் செய்துள்ளார்.

    தனது உடலை எவ்வாறு கவனித்துக் கொள்கிறார், உடற் பயிற்சிக்காக எவ்வளவு நேரம் செலவிடுகிறார் என்பதைப் பார்க்கும்போது, நிறைய கடின உழைப்புக்கு அவர் வெகுமதியைப் பெறுகிறார் என்றே நான் நினைக்கிறேன். நீண்ட காலம் இது தொடர வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • முதலில் விளையாடிய இந்தியா 186 ரன்கள் குவித்தது.
    • பின்னர் விளையாடிய ஜிம்பாப்வே 115 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

    மெல்போர்ன்:

    ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 12 சுற்று ஆட்டங்கள் இன்றுடன் நிறைவு பெற்றன. இதில் குரூப் 1ல் இருந்து நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளும், குரூப் 2ல் இருந்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளும் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளன.

    இந்நிலையில், மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற்ற சூப்பர் லீக் சுற்று கடைசி ஆட்டத்தில் இந்தியா, ஜிம்பாப்வே அணிகள் விளையாடின. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கிய கேப்டன் ரோகித் சர்மா 15 ரன் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். மற்றொரு வீரர் கே.எல்.ராகுல் 35 பந்துகளில் 51 ரன் குவித்த நிலையில் பெவிலியன் திரும்பினார். கோலி 26 ரன் அடித்தார். 

    வழக்கம் போல் அதிரடி காட்டிய சூரியகுமார் யாதவ் 25 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்சர்களுடன் 61 ரன்கள் குவித்து களத்தில் இருந்தார். தினேஷ் கார்த்திக்கிற்கு பதிலாக களம் இறங்கிய ரிஷப் பண்ட் 3 ரன்னுக்கு விக்கெட்டை பறிகொடுத்தார். ஹர்திக் பாண்ட்யா 18 ரன் அடித்தார். இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் எடுத்தது.

    இதையடுத்து 187 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய ஜிம்பாப்வே 17.2 ஓவர் முடிவில் 115 ரன்னுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக அந்த அணியின் ரியான் பர்ல் 35 ரன்னும், சிக்கந்தர் ராசா 34 ரன்னும் அடித்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னுக்கு ஆட்டமிழந்தனர். 

    இந்தியா தரப்பில் ரவிச்சந்திரன் அஸ்வின் 3 விக்கெட்களும், சமி, ஹர்திக் தலா 2 விக்கெட்களும், புவனேஷ்வர் குமார், அர்ஸ்தீப்சிங், அக்சர் படேல் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். இதையடுத்து 71 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இதையடுத்து அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி இங்கிலாந்தை எதிர்கொள்கிறது.

    ×