search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டம் சவாலானது- ரோகித் சர்மா
    X

    இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டம் சவாலானது- ரோகித் சர்மா

    • இங்கிலாந்து அணி நல்ல கிரிக்கெட் ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள்.
    • நாங்கள் விளையாடும் போட்டிகளில் எல்லாம் மைதானம் நிரம்பி விடுகிறது.

    அடிலெய்டு:

    20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் கடந்த 16-ந்தேதி தொடங்கியது. இதில் 16 நாடுகள் பங்கேற்றன.

    இதில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, முன்னாள் சாம்பியன்கள் இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய 8 நாடுகள் நேரடியாக 2-வது சுற்றான 'சூப்பர் 12' சுற்றில் ஆடின.

    முன்னாள் சாம்பியன்கள் வெஸ்ட் இண்டீஸ், இலங்கை மற்றும் அயர்லாந்து, நெதர்லாந்து, நமீபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஜிம்பாப்வே, ஸ்காட்லாந்து ஆகிய 8 அணிகள் முதல் சுற்றில் விளையாடின.

    கடந்த 2-ந்தேதி முதல் சுற்று ஆட்டங்கள் முடிந்தன. இதில் வெஸ்ட் இண்டீஸ் 'சூப்பர்12' சுற்றுக்கு முன்னேற முடியாமல் முதல் சுற்றிலேயே அதிர்ச்சிகரமாக வெளியேறியது. இலங்கை, நெதர்லாந்து, ஜிம்பாப்வே, அயர்லாந்து ஆகியவை 'சூப்பர்12' சுற்றுக்கு தகுதி பெற்றன.

    'சூப்பர்12' சுற்று ஆட்டங் கள் கடந்த 22-ந்தேதி தொடங்கியது. இதில் விளையாடிய 12 நாடுகளும் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டன. நேற்றுடன் 'சூப்பர்12' சுற்று முடிவடைந்தன.

    இதன் முடிவில் 'குரூப்1' பிரிவில் நியூசிலாந்து, இங்கிலாந்து (தலா 7 புள்ளிகள்), முதல் 2 இடங்களை பிடித்து அரை இறுதிக்கு தகுதி பெற்றன. ஆஸ்திரேலியா, இலங்கை, அயர்லாந்து, ஆப்கானிஸ் தான் ஆகியவை 3 முதல் 6-வது இடங்களை பிடித்து வெளியேறின.

    'குரூப்2' பிரிவில் இந்தியா 4 வெற்றி, 1 தோல்வியுடன 8 புள்ளிகள் பெற்று முதல் இடத்தையும், பாகிஸ்தான் 3 வெற்றி, 2 தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தை பிடித்து அரை இறுதிக்கு முன்னேறின. தென் ஆப்பிரிக்கா, நெதர்லாந்து, வங்காளதேசம், ஜிம்பாப்வே ஆகிய அணிகள் 3 முதல் 6-வது இடங்களை பிடித்து வெளியேறின.

    2 நாட்கள் ஓய்வுக்கு பிறகு அரை இறுதி போட்டி வருகிற 9-ந்தேதி தொடங்குகிறது. அன்று நடைபெறும் முதல் அரை இறுதியில் குரூப்1 பிரிவில் முதல் இடத்தை பிடித்த நியூசிலாந்து-குரூப்2 பிரிவில் 2-வது இடத்தை பிடித்த பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. சிட்னியில் இந்த ஆட்டம் நடக்கிறது.

    அடிலெய்டு மைதானத்தில் வருகிற 10-ந்தேதி நடைபெறும் 2-வது அரை இறுதி ஆட்டத்தில் குரூப்-2 பிரிவில் முதல் இடத்தை பிடித்த இந்தியா-குரூப்1 பிரிவில் 2-வது இடத்தை பிடித்த இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. இறுதி போட்டி 13-ந்தேதி மெல்போர்ன் மைதானத்தில் போட்டி நடக்கிறது.

    அரை இறுதி மற்றும் இறுதி போட்டி இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது. மழையால் பாதிக்கப்பட்டால் ரிசர்வ் தினமான மறுநாளில் போட்டி நடைபெறும்.

    இந்த நிலையில் இங்கிலாந்துடனான அரை இறுதி ஆட்டம் சவாலானது என்று இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்து உள்ளார். ஜிம்பாப்வே அணியுடனான வெற்றிக்கு பிறகு அவர் இது தொடர்பாக கூறியதாவது:-

    இங்கிலாந்துக்கு எதிரான அரை இறுதி போட்டி எங்களுக்கு நல்ல சவாலாக இருக்கும். அவர்கள் நல்ல கிரிக்கெட் ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். இரு அணிகளும் மோதுவது கடும் போட்டியாக இருக்கும்.

    அரை இறுதியில் ஒவ்வொரு வீரரும் என்ன செய்ய வேண்டும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இந்த ஆட்டம் அதிகபட்சமாக நெருக்கடியாக இருக்கும். சிறப்பாக ஆட வேண்டியது அவசியமாகும்.

    சூர்யகுமார் யாதவின் பேட்டிங் வியக்கத்தக்க வகையில் அபாரமாக இருக் கிறது. அவரது அதிரடியான ஆட்டம் எதிர் முனையில் உள்ள பேட்ஸ்மேனுக்கு நெருக்கடியை குறைத்து விடும். அவர் தனது பலத்தில் இருந்து மேலும் பலம் பெற்று வருகிறார்.

    ரசிகர்கள் ஆதரவு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. நாங்கள் விளையாடும் போட்டிகளில் எல்லாம் மைதானம் நிரம்பி விடுகிறது. அவர்களுக்கு எனது நன்றியை தெரிவிக்கிறேன்.

    இவ்வாறு ரோகித் சர்மா கூறியுள்ளார்.

    Next Story
    ×