என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    புதுச்சேரி மாநிலத்தில் அரசின் சுகாதாரத்துறை செயலாளர் தலைமையில் மாநில உறுப்பு மற்றும் திசு மாற்று அமைப்பு ஏற்படுத்த ஒப்புதல் அளித்துள்ளார்.
    புதுச்சேரி:

    புதுச்சேரி கவர்னர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று முதியோர் ஓய்வூதியம் பெறும் பயனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகையை ரூ.500 உயர்த்தும் வகையில் முதியோர் ஓய்வூதிய விதிகளை திருத்துவதற்கான அறிவிப்பாணை வெளியிட பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறையின் முன்வரைவுக்கு ஒப்புதல் அளித்துள்ளார்.

    இதன்மூலம் 55-59 வயதினருக்கு மாதம் ரூ.2 ஆயிரம், 60-79 வயதினருக்கு மாதம் ரூ.2,500, 80 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மாதம் ரூ.3,500 உதவித்தொகையாக கிடைக்கும்.

    புதுச்சேரி மாநிலத்தில் அரசின் சுகாதாரத்துறை செயலாளர் தலைமையில் மாநில உறுப்பு மற்றும் திசு மாற்று அமைப்பு ஏற்படுத்த ஒப்புதல் அளித்துள்ளார். இந்த செயல்பாடுகளில் துறை ரீதியாக உதவ இந்திராகாந்தி அரசு மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் சிறப்பு மருத்துவர்கள் மற்றும் ஜிப்மர் பேராசிரியர்களை கொண்ட மாநில அளவிலான உறுப்பு மாற்று நிபுணர் குழு அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
    புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் இளநிலை மற்றும் முதுநிலை மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
    புதுச்சேரி:

    புதுச்சேரியில் வரும் 26ம் தேதி முதல் நடக்க இருந்த இளநிலை மற்றும் முதுநிலை மாணவர்களுக்கான முதலாமாண்டு முதல் செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக புதுச்சேரி பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

    இன்டர்னல் மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
    ஏம்பலம் அருகே மோட்டார் சைக்கிள் மோதியதில் தச்சு தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுச்சேரி:

    ஏம்பலம் அருகே கரிக்கலாம்பாக்கம் புது நகரை சேர்ந்தவர் கலியபெருமாள் (வயது 60). தச்சு தொழிலாளி.

    இவர் நேற்று மேல்சாத்த மங்கலத்தில் உள்ள தனது நண்பர் வீட்டுக்கு சென்று விட்டு வீட்டுக்கு நடந்து வந்து கொண்டு இருந்தார்.

    ஏம்பலம் மெயின் ரோடு செம்பியம்பாக்கத்தில் உள்ள அரிசி ஆலை அருகே கலியபெருமாள் ரோட்டை கடந்த போது அந்த வழியாக அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதியது.

    இதில், தூக்கி வீசப்பட்ட கலியபெருமாள் தலையில் பலத்த காயம் அடைந்தார். உடனே அங்கிருந்தவர்கள் கலியபெருமாளை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், வழியிலேயே கலியபெருமாள் பரிதாபமாக இறந்து போனார்.

    இதுகுறித்து அவரது மகன் ஏழுமலை கொடுத்த புகாரின் பேரில் வில்லியனூர் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    புதுவை கருவடிகுப்பத்தில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    புதுச்சேரி:

    புதுவை கருவடிகுப்பம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 49). தொழிலாளி. இவருக்கு கல்பனா என்ற மனைவியும், 2 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

    கடந்த 10ஆண்டுகளாக செல்வராஜ் குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி அடிக்கடி மனைவியிடம் தகராறு செய்து வந்தார்.

    இதனால் அவரது மனைவி கல்பனா தனது மகன்கள் மற்றும் மகளுடன் அதே பகுதியில் தனியாக வசித்து வருகிறார். ஆனாலும், கணவருக்கு சாப்பாடு கொடுத்து அனுப்பி வந்தார்.

    இந்த நிலையில் நேற்று கல்பனா கணவர் செல்வராஜுக்கு தனது தங்கை மங்கையர்கரசி மூலம் சாப்பாடு கொடுத்து அனுப்பினார்.

    அப்போது வீட்டில் செல்வராஜ் மின் ஒயரால் தூக்குப்போட்டு தொங்கிக் கொண்டு இருந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த மங்கையர்கரசி உடனடியாக இதுபற்றி தனது சகோதரி கல்பனாவுக்கு தகவல் தெரிவித்தார். அவர் அலறியடித்து கொண்டு வீட்டுக்கு வந்தார். பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கணவரை மீட்டு கதிர்காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே செல்வராஜ் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து கல்பனா கொடுத்த புகாரின் பேரில் லாஸ்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள், வயதானோர், நோய்வாய்பட்டு படுக்கையில் உள்ளவர் களுக்கு சுகாதாரத்துறை ஊழியர்கள் வீடு, வீடாக சென்று தடுப்பூசி செலுத்தி வருகின்றனர்.
    திருபுவனை:

    புதுச்சேரியில் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் வருகிற ஆகஸ்டு 15-ந் தேதிக்குள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் வகையில் தடுப்பூசி திட்டம் தீவிரமாக செயல்படுத்தப்படுகிறது. உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள், வயதானோர், நோய்வாய்பட்டு படுக்கையில் உள்ளவர் களுக்கு சுகாதாரத்துறை ஊழியர்கள் வீடு, வீடாக சென்று தடுப்பூசி செலுத்தி வருகின்றனர்.

    அந்த வகையில் முதலியார்பேட்டை சிவா-விஷ்ணு நகரை சேர்ந்த 101 வயது மூதாட்டி கோவிந்தம்மாளுக்கு முதலியார்பேட்டை ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் சரண்யா தலைமையிலான மருத்துவ குழுவினர் கொரோனா தடுப்பூசி போட்டனர்.

    இது குறித்து மூதாட்டி கோவிந்தம்மாள் கூறுகையில், 50 ஆண்டுகளுக்கு முன்தட்டம்மை தடுப்பூசியை கிராமப்புறங்களில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு வீடுதோறும் சென்று போட்டார்கள். தற்போது வீடுதோறும் கொரோனா தடுப்பூசியை செலுத்தி வருகிறார்கள். என்னைப் போன்று வயதானவர்களுக்கு இது உதவியாக உள்ளது என்றார்.
    அகவிலைப்படி உயர்வு ஜூலை மாதம் 1-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதற்கான உத்தரவினை நிதித்துறை சார்பு செயலாளர் அர்ஜூன் ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ளார்.
    புதுச்சேரி:

    கொரோனா பரவல் காரணமாக, கடந்த ஆண்டு ஜனவரி 1-ந் தேதி, ஜூலை 1-ந் தேதி, இந்த ஆண்டு ஜனவரி 1-ந் தேதி என 3 தடவை வழங்கப்பட வேண்டிய அகவிலைப்படி உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

    அதனால், இந்த ஆண்டு ஜூலை 1-ந் தேதி வழங்க வேண்டிய அகவிலைப்படி உயர்வுடன், மேற்கண்ட 3 தவணைகளையும் சேர்த்து வழங்க வேண்டும் என்று மத்திய அரசு ஊழியர் சங்கங்கள் கோரிக்கை விடுத்து வந்தன.

    இந்தநிலையில் 3 தவணை அகவிலைப்படி உயர்வையும், ஜூலை 1-ந் தேதி வழங்க வேண்டிய அகவிலைப்படி உயர்வுடன் சேர்த்து வழங்க மத்திய அரசு ஒப்புக்கொண்டது. இதன்படி அகவிலைப்படி 17 சதவீதத்தில் இருந்து 28 சதவீதமாக உயர்த்தப்பட்டது.

    இதேபோல் புதுவை அரசு ஊழியர்களுக்கும் அக விலைப்படி உயர்வு வழங்கவேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதைத்தொடர்ந்து புதுவை அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி 28 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

    இந்த அகவிலைப்படி உயர்வு ஜூலை மாதம் 1-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதற்கான உத்தரவினை நிதித்துறை சார்பு செயலாளர் அர்ஜூன் ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ளார்.

    இந்த அகவிலைப்படி உயர்வு மூலம் அரசு ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் சுமார் ரூ.2 ஆயிரத்து 500 முதல் ரூ.20 ஆயிரம் வரை சம்பளம் உயரும்.
    தனியார் அமைப்புகள் உதவிகளோடு ஊட்டச்சத்து பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.
    காரைக்கால்:

    காரைக்கால் மாவட்ட சைல்டு லைன் அமைப்பு சார்பில் கொரோனா தொற்றில் இருந்து மீண்ட வறுமையில் உள்ள 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து வழங்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி தனியார் அமைப்புகள் உதவிகளோடு ஊட்டச்சத்து பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.

    மாவட்ட துணை கலெக்டர்கள் ஆதர்ஷ், பாஸ்கரன், சமூகநலத்துறை உதவி இயக்குனர் சத்யா ஆகியோர் கலந்துகொண்டு 200 குழந்தைகளுக்கு சத்துமாவு, பேரீச்சம் பழம், தேன், கொண்டைக்கடலை, உலர்ந்த திராட்சை உள்ளிட்ட பல்வேறு பொருட்களை வழங்கினார்கள். இந்த நிகழ்ச்சியில் தனியார் நிறுவன நிர்வாகிகள் ஜேசு ரத்தினம், தனலட்சுமி, சைல்டு லைன் அமைப்பு ஒருங்கிணைப்பாளர் விமலா ஆகியோர் கலந்து கொண்டனர்.

    கொரோனா 2-வது அலையின் தாக்கம் குறைந்து வரும் நிலையில் தற்போது குழந்தைகள் பாதிப்பு அதிகரித்து வருகிறது.
    புதுச்சேரி:

    புதுவை கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முழுக்க முழுக்க கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் ஆஸ்பத்திரியாக மாற்றப்பட்டுள்ளது. இங்கு அதிகளவு நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    கொரோனா 2-வது அலையின் தாக்கம் குறைந்து வரும் நிலையில் தற்போது குழந்தைகள் பாதிப்பு அதிகரித்து வருகிறது. அவர்களுக்காக கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தனி வார்டும் தயாராகி உள்ளது.

    அந்த வார்டில் குழந்தைகள் பார்த்து ரசித்து மகிழும் வகையில் கார்ட்டூன் பொம்மைகள், குழந்தைகள் விரும்பும் விலங்குகளை ஓவியமாக வரைந்து உள்ளனர். தனியார் அறக்கட்டளை மற்றும் ஓவியர்கள் அமைப்பு இணைந்து இந்த ஓவியங்களை வரைந்து உள்ளனர்.

    ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் தேவைப்படும் குழந்தை களுக்கு ஆக்சிஜனை எடுத்து செல்லும் குழாய்கள் வெளியே தெரியாத வண்ணம் இந்த ஓவியங்கள் வரையப்பட்டு உள்ளன. 3-வது அலை குழந்தைகளை அதிக அளவில் பாதிக்கும் ஆபத்து உள்ளதாக கூறப்படுவதால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் விதமாக இந்த வார்டு உருவாக்கப்பட்டு உள்ளது.


    புதுச்சேரியில் நகராட்சி ஊழியர் வீட்டில் இருந்து 4 சாமி சிலைகளை தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.
    புதுச்சேரி:

    புதுச்சேரி முத்தியால்பேட்டை வைத்திக்குப்பத்தை சேர்ந்தவர் சுரேஷ். நகராட்சி ஊழியர். இவரது வீட்டில் சாமி சிலைகள் இருப்பதாக தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் ரகசிய கிடைத்தது.

    அதன்பேரில் சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு கதிரவன் தலைமையில் போலீசார் நேற்று புதுச்சேரி வந்தனர். அவர்கள் சுரேஷ் வீட்டில் சிலைகள் உள்ளதா? என்பதை சோதனை செய்ய அனுமதி பெற்று வந்தனர்.

    அதன்படி சுரேஷ் வீட்டில் சிலைகள் உள்ளதா? என சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது ஒரு அறையில் உலோகத்தினால் ஆன சுமார் 3 அடி உயரமுள்ள 2 நடராஜர், 2 அம்மன் சிலைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    அந்த சிலைகளை போலீசார் கைப்பற்றி ஜீப்பில் ஏற்றினர். ஆனால் சுரேஷ் உறவினர்கள் அந்த சிலைகளை எடுத்துச்செல்ல எதிர்ப்பு தெரிவித்து, போலீஸ் வாகனத்தை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    இதுபற்றி தகவல் அறிந்தவுடன் முத்தியால்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்தனர்.

    அதைத்தொடர்ந்து சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் அந்த சிலைகளை பறிமுதல் செய்து, புதுச்சேரி நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். பின்னர் 4 சிலைகளையும் தமிழ்நாட்டுக்கு எடுத்துச் சென்றனர்.

    இதுதொடர்பாக தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு கதிரவன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    புதுச்சேரியில் சாமி சிலைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக எங்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் சுரேஷ் என்பவரது வீட்டில் சோதனை நடத்தினோம். அங்கு 2 நடராஜர், 2 அம்மன் சிலைகள் கிடைத்தது. இந்த சிலைகள் சுமார் தலா 3 அடி உயரமும் தலா 40 கிலோ எடையும் உள்ளது. இந்த சிலைகள் பரிசோதனைக்காக ஆய்வுக்கூடத்திற்கு அனுப்பப்படும். சோதனையின் முடிவில் அந்த சிலைகள் ஐம்பொன்னால் ஆனதா? அல்லது பித்தளையா? என்பது தெரியவரும். அதன்பின் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
    தெலுங்கு பேசும் மக்கள் ஆண்டுதோறும் ஆஷாதம் மாத விழாவை கொண்டாடுகின்றனர். இது பெனாலு என்ற பாரம்பரிய நாட்டுப்புற விழாவாக ஜூன், ஜூலை மாதத்தில் கொண்டாடப்படும்.
    புதுச்சேரி:

    புதுமண தம்பதிகளுக்கு ஆடிமாதம் சீர் கொடுத்து கொண்டாடுவது தமிழர்களின் வழக்கமாகும்

    அதேபோல தெலுங்கு பேசும் மக்கள் ஆண்டுதோறும் ஆஷாதம் மாத விழாவை கொண்டாடுகின்றனர். இது பெனாலு என்ற பாரம்பரிய நாட்டுப்புற விழாவாக ஜூன், ஜூலை மாதத்தில் கொண்டாடப்படும்.

    புதுவை மாநிலத்தின் ஏனாம் பிராந்தியத்தில் ஆஷாதம் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    இவ்விழாவையொட்டி ஏனாமை சேர்ந்த பவன் குமார் என்பவருக்கு, ராஜமுந்திரியை சேர்ந்த அவரது மாமனார் பலராம கிருஷ்ணா வித்தியாசமான சீர் கொடுத்து அசத்தினார்.

    கோப்புப்படம்

    ஆயிரம் கிலோ மீன், 200 கிலோ இறால், 10 ஆடு, 50 கோழி, ஆயிரம் கிலோ காய்கறி, 250 கிலோ மளிகை பொருட்கள், 250 கிலோ ஊறுகாய், 50 வகை இனிப்புகள் என வண்டி, வண்டியாக ஊர்வலமாக சீர் வைத்தார். இதை அப்பகுதி மக்கள் மிகுந்த ஆச்சர்யத்துடன் பார்த்தனர்.

    இதுகுறித்து பலராமகிருஷ்ணா கூறும்போது, தனது மகள் பிரத்யுஷாவுக்கும், பவன்குமாருக்கும் கடந்த மாதம் 21-ந்தேதி திருமணம் நடந்தது. தனது மகளை, மருமகன் நன்றாக கவனித்துக்கொள்வதால் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் இந்த சீர்வரிசையை வழங்கியதாக தெரிவித்தார்.
    குழந்தைகளுக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது.
    புதுச்சேரி:

    புதுச்சேரியில் டெங்கு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. கவர்னர் மாளிகை முன்பு தொடங்கிய இந்த ஊர்வலத்தை, கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தொடங்கி வைத்தார். பின்னர் டெங்கு ஒழிப்பு உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது.

    இதன்பின் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கொரோனா தொற்றை எதிர்த்து போராடும் இந்த நேரத்தில் நாம் டெங்கு, மலேரியா போன்றவற்றையும் மறந்துவிடக்கூடாது. நம்முடைய சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருந்தால் 80 சதவீதம் நோய்களை தடுத்துவிட முடியும்.

    புதுவையில் கொரோனாவின் தாக்கம் குறைந்து வரும் நிலையில் குழந்தைகள் அதிகம் தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பதை போன்ற தோற்றம் ஏற்பட்டுள்ளது. அது உண்மை அல்ல. பொதுவாக மழைக்காலங்களில் நோய்த்தொற்றுகள் அதிகமாக வரும். எனவே இதை 3-வது அலையின் தொடக்கம் என்று கருத முடியாது.

    சுகாதாரத்துறையின் முயற்சி காரணமாக குழந்தைகள் சிகிச்சை முடிந்து நலமுடன் வீடு திரும்புகிறார்கள். குழந்தைகளை பாதுகாப்பதில் நாம் கவனமாக இருக்கவேண்டும்.

    குழந்தைகளை வெளியில் அதிகம் கூட்டிச்செல்வதையும், உறவினர்களை வீட்டிற்கு அழைப்பதையும் தவிர்க்கவேண்டும். பெரியவர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். கொரோனாவால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க தனிப்பிரிவுகள், மருந்துகள், ஆக்சிஜன் படுக்கைகள், வெண்டிலேட்டர்கள் தயார் நிலையில் உள்ளன.

    குழந்தைகளுக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது. மத்திய அரசின் வழிகாட்டுதலின்படியே மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்காக ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு சுற்றுலா தலங்கள் திறக்கப்படுகின்றன.

    பள்ளிக்கூடங்களை திறக்கலாம் என்று தொடக்கத்தில் தீர்மானிக்கப்பட்டது. பெற்றோர் மற்றும் ஆசிரியர்களிடம் இருந்து வந்த கோரிக்கைகளை பரிசீலித்து அவற்றை திறப்பதற்கான தேதியை முதல்-அமைச்சர் மாற்றி அமைத்திருப்பது பாராட்டுக்குரியது.

    புதுவையில் சுமார் 50 சதவீதம் அளவுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. ஆகஸ்டு 15-ந்தேதி தேசியக்கொடி ஏற்றும்போது கொரோனா இறக்கப்பட்டு இருக்கவேண்டும் என்பதே என்னுடைய விருப்பம். அதற்கான அனைத்து முயற்சிகளையும் சுகாதாரத்துறை எடுத்து வருகிறது.

    இவ்வாறு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

    கொரோனா தடுப்பு பணியில் சிறப்பாக பணியாற்றிய துணை மருத்துவக்கல்வி மாணவர்களை பாராட்டி கோரிமேடு அன்னை தெரசா பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்தில் நடந்த நிகழ்ச்சியில் 119 பேருக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் சிறப்பூதியத்தை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் கொரோனா பொறுப்பு அதிகாரி விக்ராந்த் ராஜா, சுகாதாரத்துறை செயலாளர் அருண், அன்னை தெரசா பட்டமேற்படிப்பு மைய புலமுதல்வர் ஜெயந்தி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
    புதுவையில் இதுவரை 1,19,509 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 1,16,486 பேர் குணமடைந்துள்ளனர்.
    புதுச்சேரி:

    புதுவை மாநிலத்தில் நேற்று 6 ஆயிரத்து 119 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

    இதில் 104 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுவையில் 87 பேரும், காரைக்காலில் 7 பேரும், மாகியில் 10 பேரும் அடங்குவர். ஏனாமில் புதிதாக தொற்று பாதித்தவர் யாரும் இல்லை.

    கொரோனா பாதித்தவர்களில் 24 பேர் ஜிப்மர் மருத்துவமனை, 51 பேர் கதிர்காமம் கொரோனா மருத்துவமனை, 50 பேர் கோவிட் கேர் சென்டர்கள் என 198 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 1,055 பேர் வீட்டு தனிமையில் உள்ளனர்.

    ஒட்டு மொத்தமாக தற்போது 1248 பேர் கொரோனா சிகிச்சையில் உள்ளனர். 161 பேர் சிகிச்சை முடிந்து குணமடைந்துள்ளனர்.

    புதுவை கதிர்காமம் கொரோனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த டி.வி. நகரை சேர்ந்த 51 வயது ஆண், மூலக்குளத்தை சேர்ந்த 70 வயது மூதாட்டி ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1775 ஆக உயர்ந்துள்ளது.

    புதுவையில் இதுவரை 1,19,509 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 1,16,486 பேர் குணமடைந்துள்ளனர்.
    ×