என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    போலீஸ் பணிக்கு 5 மையங்களில் தேர்வு நடக்கிறது.
    புதுச்சேரி:

    புதுவை காவல் துறையில் காலியாக உள்ள கான்ஸ்டபிள் 390, டெக் ஹேண்ட்லர் 29 பணியிடங்கள் நிரப்ப கடந்த ஜனவரி 19-ந் தேதி உடல் தகுதி  தேர்வு தொடங்கி 20 நாட்கள் நடந்தது.

    இதில் ஆண்கள் 2 ஆயிரத்து 207, பெண்கள் 687 பேர் என மொத்தம் 2 ஆயிரத்து 894 பேர் தேர்வாகினர். 

    இவர்களுக்கு எழுத்துத் தேர்வு விவேகானந்தா, சங்கர வித்யாலயா, லாஸ்பேட்டை வள்ளலார் பெண்கள் மேல் நிலைப்பள்ளி, பாத்திமா மேல்நிலைப்பள்ளி, கதிர்காமம் அரசு  பெண்கள் பள்ளி என 5 மையங்களில் நடந்தது. 

    தேர்வுகளை புதுவை அரசின் நிர்வாக சீர்திருத்தத் துறை நடத்தியது. 

    காலை 10 முதல் 12 மணி  வரை முதல் தாள் தேர்வு நடந்தது.  மதியம் 2 முதல் 4 மணி வரை 2-ம் தாள் தேர்வு நடக்கிறது. டெக் ஹேண்ட்லர் பணிக்கு  (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 முதல் 11.30 மணிவரை தேர்வு நடக்கிறது. தேர்வில் பங்கேற்கும் அனைவருக்கும் விடைத்தாள் வழங்கப்படும்.  

    இன்று இரவே தேர்வுக்கான விடைகள் இணையதளத்தில் வெளியிடப்படும். விடைகள் குறித்து ஆட்சேபனை தெரிவிக்க 24 மணி நேரம்  கால அவகாசம் அளிக்கப்படும். 21-ந் தேதி காலை இறுதி விடைத்தாள் வெளியிடப்படும். அன்று இரவு அல்லது மறுநாள் தேர்வு செய்யப்பட்டவர்களின் விபரம் வெளியிடப்படும். 

    போலீஸ் தேர்வில் விளையாட்டு வீரர்கள் பிரிவில் 19 பேர் தேர்வு செய்து அறிவிக்கப்பட்டது.  இவர்களுக்கு எழுத்து தேர்வு கிடையாது.
    கூட்டுறவு கடன் சங்க தேர்தல் ஐ.என்.டி.யூ.சி. வெற்றி பெற்றுள்ளது.
    புதுச்சேரி:

    புதுவை உழவர்கரை நகராட்சியில் பணிபுரியும் ஊழியர்களுக்கு தனியாக கூட்டுறவு கடன் சங்கம் செயல்பட்டு வருகிறது.

    இங்கு நகராட்சியில் பணிபுரியும் 300 பேர் உறுப்பினராக உள்ளனர். 2 ஆண்டுக்கு ஒருமுறை கடன் சங்க இயக்குனர் குழு தேர்தல் நடத்தப்பட்டு 9 பேர் தேர்வு செய்யப்படுவர். புதிய இயக்குனர்களுக்கான தேர்தல் நடந்தது. 

    இதில் ஐ.என்.டி.யூ.சி. தலைவர் பாலாஜி தலைமையில் 9 இயக்குனர்கள் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டனர். 

    இதில் சகாயராஜ், ஆதிமூலம், இளங்கோவன், சீனுவாசன், முனியன், பெருமாள்,  சீனுவாசன் என 7 பேர் வெற்றி பெற்றனர். 

    வெற்றி பெற்றவர்கள் ஐ.என்.டி.யூ.சி. தலைவர் பாலாஜியை சந்தித்து வாழ்த்து பெற்றனர். மாநில நிர்வாகிகள் சொக்கலிங்கம், ஞானசேகரன், தமிழ் செல்வன், முத்துராமன், குமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
    ஊரக வேலை திட்டத்துக்கு கூடுதல் நிதி பெற வேண்டும் என தலித் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
    புதுச்சேரி:

    தலித் இயக்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான மூர்த்தி புதுவை குடிமைப் பொருள் வழங்கல்துறை அமைச்சருக்கு  அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    புதுவை மாநில விவசாய தொழிலாளர்களின் வருமானத்துக்கு கைகொடுக்கும் ஒரே திட்டமாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு  திட்டம் உள்ளது. இதில் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஆண்டுக்கு 100 நாள் குறையாமல் வேலை தர வேண்டும் என்பது சட்டம். 

    ஆனால் புதுவையில்  கடந்த 5 ஆண்டில் ஆண்டுக்கு 10 நாட்கள் கூட வேலை வழங்கவில்லை. தமிழகத்தில் 150 நாட்களுக்கு மேல் வேலை தரப்படுகிறது.  

    புதுவையில் இந்த ஆண்டு ரூ.12 கோடி ஒதுக்கீடு செய்து சராசரியாக 14 நாட்கள் மட்டுமே வேலை அளித்துள்ளதாக அரசு தரப்பில் கூறப்படுகிறது. 

    சில கிராமங்களில் ஒரு நாள் கூட வேலை வழங்க வில்லை.  பதிவு செய்துள்ள 75 ஆயிரத்து 400 குடும்பங்களுக்கு 75 லட்சம் வேலை  நாட்கள் நிர்ணயித்து சுமார் ரூ.200 கோடி நிதி ஒதுக்கினால்தான் 100 நாட்கள் வேலை வழங்க முடியும். 

    நடப்பு ஆண்டில் 8 லட்சம் வேலை நாட்களை முடிவு செய்து ரூ.12 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது சரியானதல்ல. 

    மத்திய அரசு இந்த ஆண்டு ரூ.98 ஆயிரம்  கோடியை ரூ.73 ஆயிரம் கோடியாக நிதி குறைப்பு செய்துள்ளது. புதுவை அரசு மத்திய அரசை அணுகி கூடுதலாக நிதி பெற வேண்டும்.  இல்லாவிட்டால் கடந்த ஆண்டு நிதியான ரூ.12 கோடியை விட குறைவாகவே நிதிஒதுக்கப்படும். 

    எனவே மாநில அரசு மத்திய அரசை  அணுகி இத்திட்டத்துக்கு போதிய நிதி பெற வேண்டும். 

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 
    புதுப்பாளையம் அரசு நடுநிலைப்பள்ளியில் தற்காப்பு கலை பயிற்சி நிறைவு விழா நடைபெற்றது.
    புதுச்சேரி:

    புதுவை குயவர் பாளையத்தில் உள்ள  புதுப்பாளையம் அரசு நடுநிலை   பள்ளியில் மாணவிகளுக்கான தற்காப்பு கலை கராத்தே பயிற்சி வகுப்புகள் நிறைவு விழா நடைபெற்றது.

     விழாவிற்கு புதுவை மாநில கோஜுரியூ  கராத்தே சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் கராத்தே சுந்தர்ராஜன் தலைமை தாங்கினார்.  தலைமை ஆசிரியை (பொறுப்பு)  ஜீவிதா  மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயன்களைப் பற்றி பேசி வாழ்த்துரை வழங்கினார்.

    மூத்த பயிற்சியாளர்  சிவமதி  தற்காப்பு கலை பற்றி  செயல் முறை விளக்கம்  அளித்தார். ஆசிரியர்கள் பல்வின் மேரி, புவனேஸ்வரி, தங்கவேலு, மீனா, தனலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர். 

    தற்காப்பு கலை பயிற்சி பெற்ற அனைத்து மாணவிகளுக்கும் சான்றிதழ் கள் மற்றும் நினைவு பரிசு வழங்கப்பட்டது.  விழா விற்கான  ஏற்பாடுகளைஓவிய ஆசிரியர்  தங்கவேலு செய்திருந்தார்.
    கணித பொறியியல் துறையில் 3-ம் ஆண்டு பயிலும் மாணவி ஜோதிகா சர்.சிவி.ராமனின் உருவப்படத்தை உருவாக்கி சாதனை படைத்தார்.
    புதுச்சேரி:

    புதுவை மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (எம்.ஐ.டி.) கல்லூரியில் விழிகள் கல்வி, பசுமை அறக்கட்டளை சார்பில் தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்பட்டது. 

    இதில் அக்கல்லூரியில் கணித  பொறியியல் துறையில் 3-ம் ஆண்டு பயிலும் மாணவி ஜோதிகா சர்.சிவி.ராமனின் உருவப்படத்தை அறிவியல் சூத்திரங்களை கொண்டு 50--க்கு 80 அடி உயரத்திற்கு உருவாக்கி சாதனை படைத்தார். இதனை அங்கீகரித்த கலாம் உலக சாதனை நிறுவனம் மாணவி ஜோதிகாவுக்கு உலக சாதனை சான்றிதழ் வழங்கி கவுரவித்தது.

    சாதனை படைத்த கல்லூரி மாணவிக்கு பாராட்டு விழா கல்லூரியில் நடந்தது. கல்லூரி தலைவரும், நிர்வாக இயக் குனருமான தனசேகரன், துணை தலைவர் சுகுமாறன், செயலாளர் நாராயணசாமி கேசவன் ஆகியோர் தலைமை தாங்கினர். 

    சிறப்பு விருந்தினர்களாக மூத்த சுற்றுச்சூழல் பொறி யாளர் ரமேஷ், அறக்கட்டளை நிர்வாகி பிரேம்குமார் ஆகியோர் கலந்து கொண்டு மாணவியை பாராட்டினர். 

    கல்லூரி முதல்வர் மலர்கண், துறை தலைவர்கள் ராஜாராம், பாரி செல்வன், வேலை வாய்ப்பு துறை அதிகாரி ஜெயக்குமார், என்.எஸ்.எஸ். ஒருங்கிணைப்பாளர் விஜயபிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
    மணவெளி தொகுதியில் அரசு பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை உடனடியாக செய்து முடிக்க வேண்டும் அதிகாரிகளுக்கு சபாநாயகர் ஏம்பலம் செல்வம் உத்தரவிட்டுள்ளார்.
    புதுச்சேரி:

    மணவெளி  தொகுதியில் உள்ள அனைத்து அரசுப்  பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ள நிலையில் அரசுப் பள்ளிகளின் உள்கட்டமை ப்பு வசதிகளை மேம்படுத்துவது தொடர்பாக கல்வித்துறை அதிகாரிகளுடன் சபா நாயகர் ஏம்பலம் செல்வம்  சட்டசபை கமிட்டி அறையில் ஆலோசனை நடத்தினார். 

    இந்த ஆலோசனை கூட்டத்தில் கல்வித்துறை இயக்குனர் ருத்ரகவுடு, இணை இயக்குனர் சிவகாமி, முதன்மை கல்வி அதிகாரி மீனாட்சிசுந்தரம், பொதுப்பணித்துறை உதவி  பொறியாளர் பன்னீர்,  இளநிலை பொறியாளர்  கோபிநாத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் மணவெளி தொகுதியில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளின் துணை முதல்வர், தலைமை ஆசிரியர்கள், பொறுப்பு ஆசிரியர்கள் கலந்து கொண்டு அவர்களது பள்ளியில் உள்ள உள்கட்டமைப்பு குறித்த குறைகளை தெரிவித்தனர். அவர்கள் தெரிவித்த குறைகளையும், உள்கட்டமைப்பு வசதிகளையும் உடனடியாக செய்து தர அதிகாரிகளுக்கு சபாநாயகர் ஏம்பலம் செல்வம் உத்தரவிட்டார்.
    கொரோனா தொற்று குறைந்ததால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து, புதுச்சேரி களைகட்டி வருகிறது.
    புதுச்சேரி:

    நாடு முழுவதிலும் கொரோனா தொற்று பாதிப்பு வீழ்ச்சி அடைந்துள்ளது. புதுச்சேரியிலும் ஒரு சில நாட்களில் சிலர் மட்டுமே பாதிப்புக்கு உள்ளாகின்றனர். சில நாட்கள் ஒருவர்கூட பாதிக்கப்படுவதில்லை.

    இதனால் கொரோனா பரவல் குறித்த அச்சத்திலிருந்து மக்கள் விடுபட்டு சகஜ நிலைக்கு வந்துள்ளனர். இதன் காரணமாக புதுவையில் சுற்றுலா பயணிகளின் வருகையும் அதிகரித்துள்ளது.

    கொரோனா பரவலுக்கு முன்பு இருந்ததைப்போல் சுற்றுலா பயணிகள் நடமாட்டம் தற்போது புதுவையில் சகஜமாகியுள்ளது. வார இறுதி நாட்களில் சுற்றுலா தலங்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

    காலை வேளைகளில் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் கடற்கரை சாலையில் நடைபயிற்சி மேற்கொள்கின்றனர். அவர்களுடன் உள்ளூர் மக்கள் நடமாட்டமும் அதிகரித்துள்ளது. சூரிய உதயத்தை கூட்டம் கூட்டமாக நின்று ரசிக்கின்றனர்.

    அதுமட்டுமின்றி கடற்கரை சாலையில் உள்ள உடற்பயிற்சி கருவிகளை கொண்டு உடற்பயிற்சியும் செய்து வருகின்றனர். தற்போது கடும் வெயில் கொளுத்தி வருவதால் மாலை நேரங்களிலும் கடற்கரைக்கு காற்று வாங்க வரும் மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளது.
    எலி மருந்து தின்று பெண் தற்கொலை செய்து கொண்டார்.
    புதுச்சேரி:
     
    வில்லியனூர் உத்திரவாகினிபேட் பகுதியை சேர்ந்தவர் சுந்தர். கூலித்தொழிலாளி. இவரது மனைவி பானுப்பிரியா. (வயது 30) இவர்களுக்கு திருமணம் ஆகி 15 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். பானுப்பிரியாவிற்கு அடிக்கடி வலிப்பு நோய் ஏற்படும்.

    அதுபோல் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு சமையல் செய்யும் போது பானுப்பிரியாவிற்கு வலிப்பு நோய் ஏற்பட்டது. இதனால் அடுப்பில் விழுந்ததில் அவருக்கு உடலில் பெரிய அளவில் தீக்காயம் ஏற்பட்டது. சிகிச்சைக்கு பின்னர் அவர் முற்றிலும் குணமடைந்தார். 

    இதற்கிடையே கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 4 ஆண்டுகளாக பானுப்பிரியா திருபுவனை பாளையத்தில் வாடகை வீட்டில் தங்கி அப்பகுதியில் உள்ள மளிகை கடையில் வேலை செய்து வந்தார். அவ்வப்போது மனைவியை சுந்தர் பார்த்து விட்டு செலவுக்கு பணம் கொடுத்து வருவார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று பானுப்பிரியாவிற்கு மீண்டும் வலிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த பானுப்பிரியா தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து வீட்டில் இருந்த எலி மருந்தை தின்றார்.

    பின்னர் பானுப்பிரியா குச்சிப்பாளையத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றார். அங்கு பானுப்பிரியாவிற்கு உடல்நிலை பாதிக்கப்படவே பெற்றோர் விசாரித்தனர். அப்போது பானுப்பிரியா எலிமருந்து தின்று தற்கொலைக்கு முயன்றதை தெரிவித்தார். உடனே அவரை சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பானுப்பிரியா பரிதாபமாக இறந்து போனார். இதுகுறித்து அவரது கணவர் சுந்தர் கொடுத்த புகாரின் பேரில் திருபுவனை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ஜிப்மரில் மாணவர்கள் ஹோலி பண்டிகை கொண்டாடினார்கள்.
    புதுச்சேரி:

    வடமாநில மக்களின் வசந்த விழாவாக கருதப்படும் ஹோலி பண்டிகை நாடு முழுவதும் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் படிக்கும் புதுவை ஜிப்மர் மருத்துவக் கல்லுவரியில் ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டது. 

    மாணவ- மாணவிகள் ஒருவர் மீது ஒருவர் வண்ணப் பொடிகளை துவவியும், தண்ணீரை பீய்ச்சி அடித்தும், நடனமாடியும் உற்சாகமாக கொண்டாடினர். பள்ளத்தில் தண்ணீரை நிரப்பி, சேற்றில் விளையாடி மகிழ்ந்தனர். பிரபலமான பாடல்களை ஒலிபரப்பி மாணவர்கள் ஆட்டம்போட்டனர்.
    சமுதாய கல்லூரியை பாகூரில் நிறுவ வேண்டும் என்று முன்னாள் எம்.பி. ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவை முன்னாள் எம்பி பேராசிரியர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    அட்டவணை இன மக்களின் வளர்ச்சிக்காக சிறப்புக்கூறு நிதி ஒதுக்கப்படுகிறது. மாநில அரசு பட்ஜெட்டில் 16 சதவீத நிதியை ஒதுக்கி  அவர்களின் வளர்ச்சித் திட்டங்களுக்கு செலவிட வேண்டும். அட்டவணை இன மக்களின் வாழ்க்கைத்தரம் முன்னேற சிறப்பு திட்டங்களை உருவாக்கி, செயல் படுத்தாதது இத்திட்டத்தின் குறைபாடாக உள்ளது. இத்திட்டத்தை நல்ல முறையில் செயல்படுத்த சிறப்புக்கூறு திட்ட செயல்பாடு துறை என்ற துறையை அரசு உருவாக்க வேண்டும். 

    மக்களின் தேவைகளை அறிந்து திட்டங்களை வகுக்க வேண்டும். திட்டம் சார்ந்த மூலதன நிதியை புதிய துறையும், திட்டம் சாராத வருவாய் நிதியை ஆதிதிராவிடர் நலத்துறையும் செலவு செய்ய வேண்டும். வேறு எந்த துறைக்கும் நிதியை மாற்றம் செய்யக்கூடாது. மக்கள்தொகைக்கு ஏற்ப காரைக்காலுக்கு 17.7, புதுவைக்கு 16, ஏனாமிற்கு 15.2, மாகிக்கு 0.3 சதவீத நிதி ஒதுக்க வேண்டும். 

    மாநில, மாவட்ட அளவில் கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும். இந்த குழு பணிகளை கண்காணித்து ஆண்டறிக்கை தயாரித்து பட்ஜெட்டின் போது சமர்பிக்க வேண்டும். நிலமற்ற கூலி தொழிலாளர்களுக்கு குறைந்தபட்சம் அரை ஏக்கர் நிலமாவது வழங்க வேண்டும்.  சமுதாய கல்லூரியை பாகூர் அல்லது திருபுவனையில் நிறுவ வேண்டும். மருத்துவம், சத்துணவு, குடிநீர்  உட்பட அடிப்படை வசதிகளை செய்துதர வேண்டும். 

    சிறப்பு கவனத்தோடு இத்திட்டத்தையும், நிதியையும் பயன்படுத்தினால் அட்டவணை இன மக்களின் வாழ்க்கையில் வியத்தகு மாற்றத்தை அரசு காணலாம். ஆந்திராவில் உள்ளதுபோல பிரத்யேக சிறப்புக்கூறு நிதி சட்டத்தையும்  புதுவை அரசு உருவாக்கலாம். 

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
    நைனார் மண்டபத்தில் தொழிலாளி தூக்கு போட்டு இறந்து போனார்.
    புதுச்சேர்:
     
    புதுவை நைனார் மண்டபம் மூகாம்பிகை நகர் 9-வது குறுக்குத்தெருவை சேர்ந்தவர் ரவி (வயது 52) கார் டிங்கரிங் வேலை செய்து வந்தார். இவருக்கு ஜெயந்தி என்ற மனைவியும் பிரேம்குமார் என்ற மகன் மற்றும் திவ்யா என்ற மகள் உள்ளனர். திவ்யாவுக்கு திருமணமாகி கணவருடன் தனது பெற்றோர் வீட்டிலேயே வசித்து வருகிறார். பிரேம் குமார் பெங்களூரில் வேலை செய்து வருகிறார். 

    இதற்கிடையே ரவிக்கு அடிக்கடி உடல்நிலை பாதிக்கப்பட்டு வந்தது. இதற்காக அவர் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுவார். அதன் பின்னர் நோய் குணமடைந்ததும் மீண்டும் அதே நிலைமை ஏற்பட்டு வந்தது. 

    இந்த நிலையில் நேற்று காலை ரவி வழக்கம் போல் வேலைக்கு செல்வதாக மனைவியிடம் கூறிசென்றார். பின்னர் மதியம் 12 மணியளவில் ரவி திடீரென வீடு திரும்பினார். அவரிடம் அவரது மனைவி ஜெயந்தி விசாரித்த போது உடல் நிலை சரியில்லாததால் வீட்டுக்கு வந்துவிட்டதாக ரவி தெரிவித்தார்.  

    இதையடுத்து ஜெயந்தி பால் வாங்க கடைக்கு சென்றார். பின்னர் பால் வாங்கிக் கொண்டு வீடு திரும்பிய போது வீட்டில் கணவரை காணாமல் ஜெயந்தி அதிர்ச்சி அடைந்தார். 

    கணவரின் செருப்பு மட்டும் வீட்டின் வெளியே இருந்ததால் சந்தேகம் அடைந்து ஜெயந்தி வீட்டின் மாடிக்கு சென்று பார்த்தார். அப்போது அங்கு கணவர் தூக்கில் தொங்குவதை கண்டு திடுக்கிட்ட ஜெயந்தி அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் உதவியுடன் ரவியை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே ரவி இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து அவரது மனைவி ஜெயந்தி கொடுத்த புகாரின் பேரில் முதலியார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
    பிரதமரின் சாதனைகளை மக்களிடம் எடுத்து கூற வேண்டும் என்று பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதன் பேசினார்.
    புதுச்சேரி:

    புதுவை முழுவதும் பட்டியலின மக்கள் வசிக்கும் இடங்களில் பாரதீய ஜனதா கொடியேற்று நிகழ்ச்சி நடத்த வேண்டுமென மாநிலத் தலைவர் சாமிநாதன் பேசினார். 
    பாரதீய ஜனதா கட்சியின் மாநில தலைவர் சாமிநாதன் தலைமையில் புதியதாக நியமனம் செய்யப்பட்டுள்ள பட்டியல் அணி தலைவர் தமிழ்மாறனை அறிமுகம் செய்யும் கூட்டம் நடந்தது. 

    நிகழ்ச்சியில் அசோக்பாபு எம்.எல்.ஏ., பொதுச்செயலாளர் மோகன்குமார், மாநில துணைத்தலைவர் செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதன் பா.ஜனதா பட்டியல் அணி மாநில தலைவராக நியமிக்கப்பட்ட தமிழ்மாறனை அறிமுகம் செய்து பேசியதாவது:-

    புதுவை மாநில பட்டியலில் தலைவராக தமிழ்மாறனை நியமித்தது பா.ஜ.க.வின் வளர்ச்சிக்கு துணையாக இருக்கும். புதுவையை பொறுத்தவரையில் வருகிற தேர்தலில் 4 பட்டியலின சட்டமன்ற உறுப்பினர்களை பா.ஜனதா சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற செய்ய வேண்டும். 

    பிரதமரின் சாதனைகளை பட்டியலின மக்களுக்கு கொண்டு சேர்க்கும் விதமாக அவர்கள் வசிக்கும் இடத்தில் கட்சியை வலுப்படுத்தி அங்கு பாரதீய ஜனதா கட்சியின் கொடி ஏற்றி நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும். பட்டியலின தலைவர்களை ஒருங்கிணைத்து பா.ஜ.க.வில் இணைக்க வேண்டும். பா.ஜ.க. மாநில பட்டியலின தலைவர் தமிழ்மாறனுக்கு அனைவரும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். 

    புதுவை மாநில பா.ஜ.க. பட்டியல் அணி தலைவர் தமிழ்மாறன் அனைவருக்கும் நன்றி கூறினார். இந்த நிகழ்ச்சியில் பா.ஜ.க. புதுவை மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
    ×