என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    நெட்டப்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
    புதுச்சேரி:

    நெட்டப்பாக்கம் கம்பன் அரசு மேல்நிலைப்பள்ளியில் நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில்  பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

    பள்ளியின் துணை முதல்வர் புவனேஸ்வரி தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக ஓய்வுபெற்ற விரிவுரையாளர் அன்பழகன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு கல்வி முக்கியத்துவம் குறித்தும் பொதுத்தேர்வை எவ்வாறு கையாள வேண்டும் என்றும் எதிர்காலத்தில் எப்படிப்பட்ட கல்லூரிப் படிப்பை தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் ஆலோசனை வழங்கினார்.

    விழாவில் 10, 11, 12-ம் வகுப்புகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

    முடிவில் தலைமையாசிரியர் (பொறுப்பு) நூர்முகமது நன்றி கூறினார். விழாவிற்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் கார்த்திகேயன், முத்துக்குமார் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் சித்தானந்தம், சதீஷ், ஆகியோர் செய்திருந்தனர்.
    புதுவை மதகடிப்பட்டு எல்லையில் போலீசார் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது உரிய ஆவணங்கள் இன்றி ஓட்டிவந்த வாகன ஓட்டிகளுக்கு உடனடி அபராதம் விதித்தனர்.
    புதுச்சேரி:


    திருபுவனை போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன், சப்-இன்ஸ்பெக்டர் குமாரவேல் மற்றும் போலீசார்  புதுவை மதகடிப்பட்டு எல்லையில் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது தமிழகப்பகுதியில் இருந்து வந்த 2 சக்கர வாகனங்கள்  மற்றும் கார், வேன் உள்ளிட்ட அனைத்து வாகனங்களையும் நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். 

    இதில் லைசென்சு, ஆர்.சி.புத்தகம் மற்றும் இன்சூரன்ஸ் உள்ளிட்ட உரிய ஆவணங்கள் இன்றி ஓட்டி வந்த வாகன ஓட்டிகளுக்கு உடனடி அபராதம் விதித்தனர். மேலும் போக்கு வரத்து விதிகளை மீறி 2 சக்கர வாகனத்தில் வந்தவர்களிடமும் அபராதம் வசூலிக்கப்பட்டது. இந்த திடீர் வாகன  சோதனை இரவு 10 மணிவரை நீடித்தது. 

    எல்லைப்பிள்ளை சாவடியில் தங்கும் விடுதியில் வாடகைக்கு அறை எடுத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
    புதுச்சேரி:

    புதுவை எல்லைப் பிள்ளைச் சாவடி அய்யனார் கோவில் தெருவில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் பெரிய அளவில் ஒரு கும்பல் காசு வைத்து சூதாடுவதாக  ரெட்டியார் பாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் ஜான் அந்தோணிசாமி மற்றும் போலீசார் அந்த விடுதியில் அதிரடி சோதனை நடத்தினர். 

    அப்போது விடுதியின் ஒரு அறையில் 6 பேர் கொண்ட கும்பல் சூதாட்டத்தில் (ரம்மி) ஈடுபட்டுக் கொண்டிருந்ததை போலீசார் கண்டனர். 

    உடனே அவர்கள் 6 பேரையும் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.  விசாரணையில் அவர்கள் லாஸ்பேட்டை சலவையாளர் நகரை சேர்ந்த செந்தில் (42) சாரம் தென்றல் நகரை சேர்ந்த சீனு (46) லாஸ்பேட்டை ஓம்சக்தி நகரை சேர்ந்த சரவணன் (42) முதலியார் பேட்டை ஜெயமூர்த்தி ராஜா நகரைச் சேர்ந்த அருண்குமார் (33) வில்லியனூர் மூர்த்தி நகரை சேர்ந்த மணிகண்டன் (36) மற்றும் குமரகுரு பள்ளம் ஆயில் மில் தெருவை சேர்ந்த மனோகர் (46) என்பது தெரியவந்தது.

    இதையடுத்து அவர்கள் 6 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து சீட்டு கட்டு, சூதாட்டப்பணம் ரூ.22 ஆயிரம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும்  தங்கும் விடுதியை வாடகை எடுத்து சூதாட்டத்துக்கு அனுமதித்த வேல்ராம்பட்டு மறைமலைநகரை சேர்ந்த நடராஜன் என்ற கதிர்வேல் (48) என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.  
    அதிக வட்டிக்கு பணம் வாங்கியதால் கடன் தொல்லையால் எலக்ட்ரீசியன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    புதுச்சேரி:

    பாகூரை அடுத்த சேலிய மேடு, ரெட்டியார் தெருவை சேர்ந்தவர் தங்கராஜா (வயது 36). இவருக்கு இளவரசி என்ற மனைவியும், 2 மகன்கள் உள்ளனர். தங்க ராஜா எலக்ட்ரீசியன் வேலை செய்து வந்தார். இவரது மனைவி  தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

    கணவன்-மனைவி இருவரும் கடந்த ஆண்டு தீபாவளி சீட்டு நடத்தினர். இதில் பலர் பணம் கொடுக்காமல் ஏமாற்றி வந்ததாக கூறப்படுகிறது.  

    இதையடுத்து தீபாவளி சீட்டு கட்டியவர்களுக்கு பணத்தை உடனடியாக கொடுக்க வேண்டும் என்ப தற்காக அதிக வட்டிக்கு தங்க ராஜா பணம் வாங்கினார். ஆனால் அந்த பணத்தை திருப்ப செலுத்த முடியாமல் தங்கராஜா திண்டாடி வந்தார். 

    இதனால் மன வேதனையில் இருந்து தங்கராஜா தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். அவரது மனைவி இளவரசி வேலைக்கு செல்ல தயாரான போது திடீரென தங்கராஜா  படுக்கை அறைக்குள் சென்று திடீரென உள்பக்கமாக பூட்டிக் கொண்டார்.

    இதனால் அதிர்ச்சியடைந்த இளவரசி அக்கம் பக்கத்தினர்  உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது கணவர் துப்பட்டாவால் தூக்கு போட்டு தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    பின்னர் அவரை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே தங்கராஜா இறந்து விட்டதாக தெரிவித்தனர். 

    இதுகுறித்த புகாரின் பேரில் பாகூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார், ஏட்டு ராதா கிருஷ்ணன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பெண்களுக்கு குறுந்தொழில் முனைவோர் பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
    புதுச்சேரி:

    தேசிய நபார்டு வங்கி மற்றும் தீபம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு மேம்பாட்டு பயிற்சி அறக்கட்டளையின் சார்பில், புதுவையை சேர்ந்த வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள பெண்களுக்கு குறுந் தொழில் முனைவோர் பயிற்சி திட்டத்தின் கீழ் எம்பிராய்டரி மற்றும் ஆர்யா ஒர்க் பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டது.

    அதன்படி இப்பயிற்சி முகாமின்  தொடக்க விழா பாகூரில் உள்ள திறன் மேம்பாட்டு பயிற்சி மையத்தில் நடைபெற்றது. நபார்டு வங்கியின் மாவட்ட வளர்ச்சி மேலாளர் சித்தார்த்தன் வரவேற்றார். 

    இந்தியன் வங்கியின் முன்னோடி மாவட்ட மேலாளர் உதயகுமார் தொழில் முனைவோர் திட்டங்கள் குறித்தும், புதுவை பாரதியார் கிராம வங்கி தலைவர் ரஞ்சித்குமார், மகளிர் சுய உதவி பெண்களுக்கான திட்டங்கள் குறித்தும் பேசினர்.

    புதுவை பாரதியார் கிராம வங்கி பாகூர் கிளை மேலாளர் லோகேஷ் கலந்து கொண்டார். இப்பயிற்சி முகாம் வருகிற 2-ந் தேதி வரை நடைபெற உள்ளது. 
    பள்ளிகளுக்கு இடையேயான வினாடி-வினா போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சிவா எம்.எல்.ஏ. பரிசு வழங்கினார்.
    புதுச்சேரி:

    அமலோற்பவம் மேல்நிலைப்பள்ளி ஆண்டு தோறும் பள்ளிகளுக்கு இடையேயான வினாடி-வினா போட்டியை நடத்தி வருகிறது. 

    அதுபோல் இந்த ஆண்டு வினாடி--வினா போட்டி நடந்தது.  இதில் 12 பள்ளிகளை சேர்ந்த 140-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். இளநிலை, முதுநிலை என 2 பிரிவுகளாக நடத்தப்பட்ட இப்போட்டியில் ஒவ்வொரு பிரிவிலும் 3 பரிசுகள் வழங்கப்பட்டன. 

    பரிசளிப்பு விழாவில் பள்ளி நிறுவனரும், தாளாளர் மற்றும் முதுநிலை முதல்வருமான லூர்துசாமி அனைவரையும் வரவேற்று பேசினார். 

    சிறப்பு விருந்தினராக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் சிவா கலந்து கொண்டு சிறப்புரையாற்றி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ரொக்க பரிசு வழங்கி பாராட்டினார்.

    இந்த ஆண்டுக்கான வினாடி-வினா சுழற்கோப்பையை பெத்தி செமினார் மேல்நிலைப்பள்ளி பெற்றது.
    புதுவையில் சப்-இன்ஸ்பெக்டர் பணியிடம் விரைவில் நிரப்பப்படும் என்று போலீஸ் ஐ.ஜி.சந்திரன் தெரிவித்தார்.
    புதுச்சேரி:
    தவளக்குப்பம் அடுத்த அபிஷேகப் பாக்கம் சேத்தினால் அரசு உயர்நிலைப்பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கான நல்லொழுக்கம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி  நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் பாக்கியலட்சுமி தலைமை தாங்கினார். ஆசிரியை ராஜகுமாரி வரவேற்றார்.  

    ஆசிரியர் முருகன் பள்ளி பற்றிய சாதனையை விளக்கினார். சிறப்பு விருந்தினராக புதுச்சேரி போலீஸ் ஐ.ஜி.சந்திரன் கலந்து கண்டு நல்லொழுக்கம் பற்றிய சிறப்பு கருத்துக்களை மாணவர்களுக்கு எடுத்து கூறினார். அவர் பேசியதாவது:&

    புதுவையில்  போலீசுக்கான நேர்முகத் தேர்வு நடைபெற்று வருகிறது.இந்த தேர்வில் எந்த முறைகேடும் நடக்காத அளவிற்கு பலத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

    ஒவ்வொருவரின் வினா-விடைத்தாள்கள் அவர்களே பார்த்துக்கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. போலி இடைத்தரங்களை நம்பி ஏமாற வேண்டாம். தொடர்ந்து படிப்பது, கடின முயற்சி இவைகளே ஒவ்வொரு வரையும் வெற்றிக்கு கொண்டு செல்லும்.

     புதுச்சேரியில் மேலும் சப்-இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட பல பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளது.

    நல்ல கல்வியை கற்று தேர்ச்சி அடைய வேண்டும். குறுக்கு வழியை தேடி நேரத்தை வீணாக்கி கொள்ளாதீர்கள். மாணவர்கள் பல உயர் படிப்புகளை பற்றிய சிந்தனையும், அறிவையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். 

    தற்பொழுது இது போன்ற உயர் கல்வி படித்து முடித்து வேலைக்கு செல்பவர்கள் லட்சக்கணக்கில் சம்பளமாக பெறுகிறார்கள். இதனை மனதில் கொண்டு மாணவர்கள் விழிப்புடன் கல்வி, உழைப்பு மட்டுமே உறுதுணையாக கொண்டு செயல்பட வேண்டும். 

    இவ்வாறு அவர் பேசினார்.

    அரசு பள்ளியின் சிறப்புகளை பற்றியும் கடந்த காலங்களில் அரசு பள்ளியில் படித்த அனுபவங்களை மாணவர்களுடன் ஐ.ஜி.சந்திரன் பகிர்ந்து கொண்டார். இதில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்ட ஒருங்கிணைப் பாளர் 
    வெண்மணி, முன்னாள் மாணவர் சங்க உறுப்பினர் கிருஷ்ணபரதன், செல்வ மூர்த்தி, தேசிய மாணவர் படை ஒருங்கிணைப்பாளர் பத்மநாதன். மாணவர்கள் மற்றும் அபிஷேகபாக்கம் கிராம மக்கள் பலர் கலந்து கொண்டனர்.
    மடுகரையில் காசு வைத்து சூதாடிய 10 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.
    புதுச்சேரி:

    நெட்டப்பாக்கம் அருகே மடுகரை எஸ்.ஆர்.எம். நகர். புது ஏரிக்கரை பகுதியில் ஒரு கும்பல் காசு வைத்து சூதாடுவதாக மடுகரை புறக்காவல் நிலைய போலீசாருக்கு தகவல் வந்தது. 

    இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு காசு வைத்து சூதாடிக் கொண்டிருந்த 10 பேர் கொண்ட கும்பலை மடக்கி பிடித்தனர். 

    விசாரணையில் அவர்கள் மடுகரை இந்திரா நகரை  சேர்ந்த முருகன் (40) சரவணன் (42)  அய்யப்பன் (37), மடுகரை ஈ.எஸ். நகரை சேர்ந்த பிரகாஷ் (55) வடிவேல் (43), சத்திய மூர்த்தி(34), குமார் (59), குணசேகரன் (50), மொளப்பாக்கத்தை சேர்ந்த ஜெயபால் (48), மடுகரை எம்.ஆர்.எஸ். நகரை சேர்ந்த ரமேஷ் (48) என்பது தெரியவந்தது. 

    இதனை தொடர்ந்து அவர்கள் 10 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து சூதாட்டப் பணம் 2 ஆயிரத்து 200 மற்றும் சீட்டுகட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.    
    கவர்னர் உரையை தொடர்ந்தோ அல்லது மறுநாளிலோ நிதி பொறுப்பு வகிக்கும் முதல்-அமைச்சர் ரங்கசாமி 3 அல்லது 4 மாதத்துக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்வார் என தெரிகிறது.
    புதுச்சேரி:

    புதுவை சட்டசபையில் ஆண்டுதோறும் மார்ச் மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். கடந்த 2011 முதல் இதுவரை முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படவில்லை.

    இந்த ஆண்டு முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முழு பட்ஜெட்டுக்கான பணிகள் நடக்கவில்லை.

    இதனால் இந்த ஆண்டும் இடைக்கால பட்ஜெட்டே தாக்கல் செய்யப்பட உள்ளது. மார்ச் 31-ந்தேதிக்குள் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்ய வேண்டும். இதற்காக வருகிற 30-ந்தேதி (புதன்கிழமை) புதுவை சட்டசபை காலை 9.30 மணிக்கு கூடுகிறது.

    ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் கவர்னர் தமிழிசை உரையாற்றுகிறார். கவர்னர் உரையை தொடர்ந்தோ அல்லது மறுநாளிலோ நிதி பொறுப்பு வகிக்கும் முதல்-அமைச்சர் ரங்கசாமி 3 அல்லது 4 மாதத்துக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்வார் என தெரிகிறது.

    இதன்பின் ஜூன் அல்லது ஜூலை மாதம் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஓரிருநாளில் வெளியாகிறது.

    புதுவையில் கொசுக்களால் பரவும் நோய்கள் அதிகரித்துள்ளது என வையாபுரிமணிகண்டன் கூறியுள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவை கிழக்கு மாநில அ.தி.மு.க. தேர்தல் பிரிவு செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான வையாபுரி மணிகண்டன் வெளியிட்டுள்ள அறிக்கையில்   கூறியிருப்பதாவது:-

    புதுவை மாநில மக்கள் கொசுத்தொல்லையால் படும் அவதியை தடுக்காமல் ஆழ்ந்த  உறக்கத்தில் சுகாதாரத்துறை, உள்ளாட்சித்துறை இருப்பது வேதனையளிக்கிறது. புதுவை மாநிலத்தில் சமீபத்தில் பெய்த திடீர் மழையால்  பல இடங்களில் மழைநீர் தேங்கி குட்டைகளாக மாறியுள்ளன. 

    காலி மனைகளில் உள்ள பள்ளங்களில் மழைநீருடன், கழிவுநீர் சேர்ந்து  தேங்கியுள்ளது. இவையனைத்தும் தற்போது கொசு உற்பத்தி கூடங்களாக மாறிவிட்டன. இவற்றுடன் வீணாக தூக்கி வீசப்பட்ட பொருட்கள்,  பிளாஸ்டிக் குவளைகள், இளநீர் கூடுகளும் கொசு உற்பத்திக்கு பக்கபலமாக மாறிவிட்டன.

    மாநிலம் முழுவதும் கொசுவினால் ஏற்படும் டெங்கு, மலேரியா போன்ற நோய்கள் பரவ தொடங்கியுள்ளது. நாள்தோறும் கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டு நூற்றுக்கணக்கில் பொதுமக்கள் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வருகின்றனர். குழந்தைகள், முதியோர்,  மாணவர்கள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர்.

    டெங்கு, சிக்கன்குனியா, மலேரியா, டைபாய்டு போன்ற கொசுவினால் பரவும் நோய்களை ஒழிக்க உடனடியாக மாநிலம் முழுவதும் காலை, மாலை  நேரத்தில் கொசு மருந்து தெளிக்க வேண்டும். இந்த நோய்களால் பாதிக்கப்படும் மக்களுக்கு தேவையான மருந்துகளை போதியளவு கை யிருப்பில் வைக்க வேண்டும். 

    நோய் தாக்குதலில் இருந்து மக்களை காப்பாற்ற தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை, பாதுகாப்பு,  விழிப்புணர்வு நடவடிக் கைகளை சுகாதாரத் துறை, உள்ளாட்சித்துறை இணைந்து மேற்கொள்ள வேண்டும். 

    இவ்வாறு அவர்  தெரிவித்துள்ளார்.
    புதுவையில் நாணயவியல் கண்காட்சி 3 நாட்கள் நடக்கிறது.
    புதுச்சேரி:

    தொண்டை மண்டல நாணயவியல் கழகத்தின் 17-ம் ஆண்டு விழாவையொட்டி 3 நாள் கண்காட்சி காந்திவீதி சிங்கப்பூர் திருமண மண்டபத்தில் தொடங்கியது.

    நிறுவனர் கோபிராமன் தலைமை வகித்தார். செயலாளர் சிவாஜி வரவேற்றார். கலை பண்பாட்டுத்துறை இயக்குனர் கந்தன் கண்காட்சியை  தொடங்கி வைத்தார்.  ஓய்வு பெற்ற வணிகவரித்துறை அதிகாரியும், தொண்டை மண்டல நாணயவி யல் கழகத்தின் துணைத் தலைவருமான கணேசன் வாழ்த்தி பேசினார்.

    நிகழ்ச்சியில்  டாக்டர்கள் முருகேசன், ராச செல்வம், ராமதாஸ், ஆசிரியர்கள் ராமநாதன், ராமலிங்கம் உட்பட பலர்  கலந்து கொண்டனர். 

    20-ந் தேதியுடன் நிறைவு பெறும் கண்காட்சியில் 2 ஆயிரத்து 500 ஆண்டுக்கு முற்பட்ட சங்ககால, பிற்கால சேர,  சோழ, பாண்டியர், சாத வாகனர், பல்லவர் கால நாணயங்கள், விஜயநகர பேரரசு, மதுரை நாயக்க மன்னர்களின் காசுகள், ஆற்காடு நவாபு,  ஹைதர் அலி, திப்புசுல்தான், மைசூர் உடையாளர், திருவாங்கூர், புதுக்கோட்டை, மராட்டியர் கால நாணயங்கள், அரிய தபால்தலைகள்  காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. 

    உலகின் பெரிய பணத் தாள், தமிழ் எழுத்துக்கள் கொண்ட நாணயங்கள், கைவினை பொருட்கள்,  ஓலைச் சுவடிகள், செப்பேடுகள், சோழர்கால உண்டிகள், போர்வாள்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. கண்காட்சியை காலை 10 முதல்  இரவு 7 மணி வரை பார்வையிடலாம்.
    புதுவையில் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
    புதுச்சேரி:

    புதுவையில் 329 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.

    புதிதாக 5  பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. புதுவையில் 4, மாகியில் ஒருவர் என 5 பேர் தொற்றுடன் சிகிச்சை பெற்று   வருகின்றனர். புதுவையில் 1, காரைக்காலில் 2 பேர் என 3 பேர் சிகிச்சையில் குணமடைந்தனர். 

    புதுவை மாநிலத்தில்  ஒட்டு மொத்தமாக   இதுவரை ஒரு லட்சத்து 65 ஆயிரத்து 771 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்து 63 ஆயிரத்து 796 பேர் சிகிச்சையில் குணமடைந்துள்ளனர். 

    புதுவையில் 8, காரைக்காலில் 4, மாகியில் ஒருவர் என 13 பேர் வீட்டு தனிமையில் உள்ளனர். மாநிலத்தில்   கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்து 962 ஆக உள்ளது. 
    புதுவையில் 2-வது  தவணை உட்பட 16 லட்சத்து 10 ஆயிரத்து 820  பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். 

    இந்த தகவலை சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
    ×