என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    புதுவை கோர்ட்டுக்கு சாட்சி கூற வந்தவர் மயங்கி விழுந்து இறந்து போனார்.
    புதுச்சேரி:

     புதுவை-கடலூர் சாலையில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் உள்ளது. இந்த நீதிமன்றத்தில் தினமும் ஏராளமான வழக்கு விசாரணைகள்  நடைபெறுவது வழக்கம். 

    இந்த வழக்கு விசாரணைக்காக தினமும் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் கோர்ட்டுக்கு வந்து செல்வர். அதுபோல்   புதுவை கோர்ட்டில் நடைபெற்ற சிவில் வழக்கு ஒன்றில் சாட்சி கூற கிருஷ்ணமூர்த்தி என்பவர் வந்தார். வழக்கு விசாரணைக்காக கோர்ட்டு வளாகத்தில் காத்திருந்த  கிருஷ்ணமூர்த்தி திடீரென மயங்கி விழுந்தார்.

    இதனால் கோர்ட்டு வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை உடனடியாக மீட்டு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சில நிமிடங்களிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். 

    இதுகுறித்து உருளையன்பேட்டை போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் உருளையன்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நகராட்சி-கொம்யூன் ஊழியர்கள் விடுப்பு எடுத்து தர்ணா போராட்டம் நடத்தினர்.
    புதுச்சேரி:

    புதுவை நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்களுக்கு அரசே நேரடியாக சம்பளம், ஓய்வூதியம் வழங்க வேண்டும் எனக்கேட்டு நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் நலச்சங்கங்கள், ஓய்வூதியதாரர்கள் நலச்சங்கத்தினர் வலியுறுத்தி வருகின்றனர். 

    பல கட்ட போராட்டங் களையும் நடத்தியுள்ளனர். இந்நிலையில் 21-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை தொடர் விடுப்பு எடுத்து உள்ளாட்சித்துறை அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தை தொடங்கியுள்ளனர். 

    புதுவை, காரைக்கால், மாகி, ஏனாம் என 4 பிராந்தியங்களிலும் இந்த போராட்டம் நடக்கிறது. புதுவையில் நடைபெறும் போராட்டத்துக்கு கூட்டு போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர்கள் விநாயகவேல், ஆனந்தகணபதி, வேளாங்கண்ணிதாசன், பாலசுப்பிரமணியன், மாணிக்கம், சேகர் ஆகியோர் தலைமை வகித்தனர். 

    அரசு ஊழியர் மத்திய கூட்டமைப்பு பொதுச் செயலாளர் லட்சுமணசாமி, அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளன கவுரவ தலைவர் பாலமோகனன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். 

    7-வது ஊதியக்குழு பரிந்துரையை 1.1.2016 முதல் முன்தேதியிட்டு வழங்க வேண்டும். 2004-ம் ஆண்டுக்கு முன் பணியில் சேர்ந்தவர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தையும், 2004-ம் ஆண்டுக்கு பின் சேர்ந்தவர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டத்தையும் அமல்படுத்தக்கோரி போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது-.

    ஊழியர்கள் விடுப்பு எடுத்து போராட்டம் நடத்திய தால் நகராட்சி, கொம்யூன் பணிகள் பாதிக்கப்பட்டது. பாரதி பூங்கா உட்பட நகராட்சி பூங்காக்கள் மூடப்பட்டு கிடந்தது.
    ஜனநாயக தொழிலாளர் சங்கத்தினர் ஆம்பூர் சாலையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    புதுச்சேரி:

    தனியார் நிறுவன ஜனநாயக தொழிலாளர் சங்கத்தினர் சட்டசபை பின்புறம் உள்ள ஆம்பூர் சாலையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    ஆர்ப்பாட்டத்துக்கு கம்யூனிஸ்டு (எம்.எல்.) மாநில செயலாளர் பாலசுப்பிர மணியன் தலைமை வகித்தார். ஒப்பந்த தொழிலாளர் முறையை தடை செய்ய வேண்டும். சமவேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும். சட்டக்கூலி வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது.
    கோடைக்காலத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீயணைப்பு நிலையங்களில் அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார் ஆய்வு செய்தார்.
    புதுச்சேரி:

    புதுவை, காலாப்பட்டு, சேதராப்பட்டு, துத்திப்பட்டு, மேட்டுப்பாளையம், குருமாம்பேட், தட்டாஞ்சாவடி, வில்லியனூர் திருபுவனை, மதகடிப்பட்டு நெட்டப்பாக்கம், தவள குப்பம்  ஆகிய இடங்களில் நடுத்தர மற்றும் பெரிய தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது. 

    கோடைகாலத்தில் தொழிற்சாலைகளில் ஏதாவது ஒரு காரணத்திற்காக தீ விபத்து ஏற்படும் நிலையில் அதனை எளிமையாக கையாண்டு தீயை கட்டுக்குள் கொண்டு வந்து சேதங்களை குறைக்க தீயணைப்பு படையினர் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் புதுவையில் கோடைகாலத்தில் அவ்வப்போது ஏற்படும் குடிசை தீ விபத்தின் பொது உயிர் சேதம் ஏதும் ஏற்படாமல் தடுப்பதற்கும் தீயணைப்பு துறையினர் உரிய உள்கட்டமைப்பு வசதியோடு இருக்கிறார்களா? என்பதனை ஆராயவும், தீயணைப்பு நிலையங்களில் நவீன சாதனங்கள், தீயணைப்பு நிலையங்களில் தீயணைப்பு வீரர்கள் முன்னெச்சரிக்கையோடு செயல்படுகிறார்களா? என்பதனை ஆய்வு செய்ய   தீயணைப்பு துறை அமைச்சர் சாய். ஜெ.சரவணன்குமார் அனைத்து தீயணைப்பு நிலையங்களில் அதிரடி ஆய்வு மேற்கொண்டார். 
    ஜெயலலிதா பெயரில் குடும்ப தலைவிகளுக்கு மாத உதவி ரூ.1500 வழங்கும் திட்டத்தை புதுவையில் தொடங்க வேண்டும் அன்பழகன் வலியுறுத்தியுள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவை கிழக்கு மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    புதுவையில் ஒட்டு மொத்தம் உள்ள 3 லட்சத்து 55 ஆயிரம் குடும்பங்களில் 1 லட்சத்து 94 ஆயிரத்து 430 குடும்பத்தினர் அரசின் மாத உதவி தொகையை திட்டங்கள் மூலம் பெறுகின்றனர். 

    இந்த குடும்பங்கள் போக மீதம் சுமார் 1 லட்சத்து 60 ஆயிரம் குடும்பத்தினருக்கு எவ்வித மாதாந்திர உதவித்தொகையும் வழங்கப்படுவதில்லை. 

    இதில் அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர் தவிர்த்து ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்திற்கும் கீழ் உள்ள சுமார் 1 லட்சம் குடும்பத்தினரை அடையாளம் கண்டு அவர்களின் குடும்பத்திற்கு மாதம் ரூ.1500 அரசு வழங்க வேண்டும்.

    ஜெயலலிதா பெயரில் இந்த திட்டத்தை தொடங்க வேண்டும். இந்த திட்டத்திற்கு மாதம் ரூ.15 கோடி அளவில் ஆண்டுக்கு ரூ.180 கோடி அரசுக்கு கூடுதல் செலவாகும். 

    குடும்பத் தலைவிகளுக்கு உதவி புரியும்  மகத்தான திட்டத்தை இந்தியாவிற்கே முன்மாதிரியாக நடைபெற இருக்கும் சட்டமன்ற கூட்டத்தொடரில் அறிவிப்பு வெளியிட்டு அமுலுக்கு கொண்டு வர வேண்டும். 

    இவ்வாறு அன்பழகன் கூறினார்.
    புதுவை மதுக்கடையில் ஏற்பட்ட மோதலில் தொழிலாளி பலத்த காயமடைந்தார்.
    புதுச்சேரி:

    புதுவை மறைமலை அடிகள் சாலையில் உள்ள ஒரு மதுக்கடையில் 33வயது  மதிக்கத்தக்க ஒரு வாலிபர் மற்றும் 50 வயது மதிக்கத்தக்க தொழிலாளி ஆகியோர் மது குடித்தனர். 

    அப்போது குடிபோதையில் இருவருக்கும் இடையே வாய்தகராறு ஏற்பட்டது. இதில் வாக்குவாதம் முற்றி இருவரும் மாறி மாறி தாக்கிகொண்டனர்.

    அப்போது ஆத்திரமடைந்த  வாலிபர் அருகில் கிடந்த கல்லை எடுத்து தொழிலாளியின் தலையில் சராமாரியாக தாக்கினார். இதில் ரத்தவெள்ளத்தில் தொழிலாளி மயங்கி சரிந்தார். 

    உடனே மதுக்கடை ஊழியர்கள் இது பற்றி உருளையன் பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தாக்குதலில் பலத்த காயமடைந்த தொழிலாளியை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    ஆனால் அவர் யார்&எந்த ஊர் என்பது தெரியவில்லை. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மேலும் தொழிலாளியை தாக்கிய வாலிபரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் கள்ளக்குறிச்சி அக்கராம்பாளையத்தை  சேர்ந்த அந்தோணி ராஜ் (33) என்பது தெரியவந்தது. அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்திவருகிறார்கள்.  
    புதுவையில் தனித்தனி இடங்களில் மது குடித்து விட்டு ரகளை செய்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
    புதுச்சேரி:

    லாஸ்பேட்டை போலீசார் கிழக்கு கடற்கரை சாலையில்  ரோந்து பணி சென்றனர். அப்போது ஒரு வாலிபர் மதுகுடித்து விட்டு அவ்வழியே செல்லும் பொது மக்களை மரியாதைக் குறைவாகதிட்டி ரகளை செய்து கொண்டிருந்தார். இதையடுத்து அவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர் முத்தியால் பேட்டை மஞ்சினி நகர் பஜனை மடத்து வீதியை சேர்ந்த தாமு (வயது 23) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். 

    இதுபோல் புதுவை வழுதாவூர் சாலையில் மதுக்கடை அருகே மது குடித்து விட்டு ரகளையில் ஈடுபட்ட முத்திரையர் பாளையம் பொறையாத்தம்மன் கோவில் தெருவை சேர்ந்த சுகன்ராஜ் (32) என்பவரை மேட்டுப்பாளையம் போலீசாரும் புதுவை அண்ணா சாலையில் பிரபல ஜவுளிக் கடை அருகே ரகளையில் ஈடுபட்ட கோவிந்த சாலையை சேர்ந்த ஜோசப் (39) மற்றும் திப்புராயப் பேட்டையை சேர்ந்த ஜான்சன் (24) ஆகிய 2 பேரை பெரிய கடை போலீசாரும் கைது செய்தனர்.

    வில்லியனூர் அருகே கீழ் அக்ரகாரம் அரசு பள்ளி அருகே பொது மக்களை தகாத வார்த்தைகளால் திட்டி மிரட்டிக் கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த அய்யப்பன் (27) என்பவரை வில்லியனூர் போலீசார் கைது செய்தனர்.
    லாஸ்பேட்டை தொகுதியை சேர்ந்த அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு அடையாள அட்டையை பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதன் வழங்கினார்.
    புதுச்சேரி:

    மத்திய அரசு மூலம், அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை பதிவு செய்யும் பணி நடந்து வருகிறது. லாஸ்பேட்டை சட்டசபை தொகுதியில் பா.ஜனதா சார்பில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அமைப்பு சாரா தொழிலாளர்களை கண்டறிந்து பதிவு செய்யும் பணி நடந்தது.

    உழவர்சந்தை மற்றும் குறிஞ்சி நகர் விநாயகர் கோவில் ஆகிய இடங்களில் அடையாள அட்டையை பா.ஜனதா மாநிலத்  தலைவர் சாமிநாதன் பயனாளிகளுக்கு வழங்கினார். தொகுதி தலைவர் சோமசுந்தரம் தலைமை தாங்கினார். 

    தொகுதி பொறுப்பாளர் தண்டபாணி, பொதுச்செயலாளர்கள், பாலாஜி, ரமேஷ், மாநில செயலாளர் லதா, மாநில மகளிர் அணி பொதுச் செயலாளர் கனகவல்லி உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். 

    ஏற்பாடுகளை தொகுதி அமைப்பு சாரா தொழிலாளர் அமைப்பாளர் விஜய பூபதி செய்திருந்தார்.
    திருவள்ளுவர் சர்வதேச அறக்கட்டளை சார்பில் மதநல்லிணக்க உறுதிமொழி ஏற்பு விழா நடைபெற்றது.
    புதுச்சேரி:

    மகான் திருவள்ளுவர் சர்வதேச அறக்கட்டளை சார்பில் 52-வது ஆண்டு விழாவையொட்டி மதநல்லிணக்க உறுதிமொழி ஏற்பு விழா மற்றும் அன்னதானம் வழங்கும் விழா கோட்டக்குப்பம் பேரூராட்சி வளாகம் மற்றும் முத்தியால்பேட்டை பகுதியில் நடைபெற்றது. 

    நிகழ்ச்சியில் கோட்டக் குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் மத போதகர் அடைக்கலராஜ், துரைராஜ் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி, த.மு.மு.க., பா.ம.க., த.வா.க. உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், தொழிற்சங்க நிர்வாகிகள், அப்பகுதி பிரமுகர்கள் முகமது அக்கீம், முருகன், சங்கர், தேவதாஸ், வள்ளலார், காளியம்மாள், கவுதமன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

    விழாவினை ஒருங் கிணைப்பாளர் வக்கீல் சட்ட திருநாவுக்கரசு ஒருங்கிணைத்து அனைவருக்கும் நன்றி கூறினார்.
    திருநள்ளாறில் 14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் 2 பேரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
    காரைக்கால்:

    காரைக்காலை அடுத்த திருநள்ளாறு நெய்வாச்சேரி தோட்டக்கார தெருவை சேர்ந்தவர் நந்தகுமார் (வயது 21). இவருக்கும், 14 வயது சிறுமிக்கும் இடையே சமூக வலைத்தளம் மூலம் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு அந்த சிறுமி கடைக்கு வேலைக்கு சென்று வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தார்.

    திருநள்ளாறு நகர் பகுதியில் வந்தபோது, அந்த சிறுமியை நந்தகுமார் ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. இதற்கு அவரது நண்பர் பெரியார்நகரை சேர்ந்த ராம்குமார் (20) உடந்தையாக இருந்துள்ளார். இதுகுறித்து யாரிடமும் கூறினால் கொலை செய்து விடுவதாக 2 பேரும் சேர்ந்து மிரட்டியுள்ளனர்.

    இதுகுறித்து அந்த சிறுமி தனது பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், திருநள்ளாறு போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் நந்தகுமார், அவருக்கு உடந்தையாக இருந்த ராம்குமார் ஆகியோர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர். பின்னர் 2 பேரும் காரைக்கால் மாவட்ட கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு புதுச்சேரி காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    போக்சோ வழக்கில் விரைவாக செயல்பட்ட திருநள்ளாறு போலீசாரை காரைக்கால் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு நாரா சைதன்யா, போலீஸ் சூப்பிரண்டு நிதின் கவுஹால் ரமேஷ் ஆகியோர் பாராட்டினர்.
    புதுவையில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
    புதுச்சேரி:

     புதுவை மாநிலத்தில் 249 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. 

    இதில் மாகியை சேர்ந்த ஒருவருக்கு மட்டும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுவை, காரைக்கால் ஏனாமில் யாருக்கும் தொற்று ஏற்படவில்லை. 

    தற்போது  புதுவையில் 7பேர், காரைக்காலில் 4 பேர், மாகியில் 2 பேர் என 13 பேர் மட்டுமே வீட்டு தனிமையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவ மனையில் யாரும் தொற்றால் அனுமதிக்கப்படவில்லை.  ஒருவர் தொற்றில் இருந்து விடுபட்டு வீடு திரும்பியுள்ளார். 

    புதுவை மாநிலத்தில் இதுவரை 1 லட்சத்து 65 ஆயிரத்து 772 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 

    இதில் 1 லட்சத்து 63 பேருக்கு 797 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். 1962 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
    முத்து ரத்தின அரங்கம் மேல்நிலைப்பள்ளியில் தண்ணீர் திருவிழா நடைபெற்றது.
    புதுச்சேரி:

    புதுவை கவுண்டர்பாளையம் முத்து ரத்தின அரங்கம் மேல்நிலைப்பள்ளியில் தண்ணீர் திருவிழா நடை பெற்றது.

    விழாவுக்கு நாட்டு நலப்பணித் திட்ட மற்றும் சமுதாய நலப்பணித்திட்ட  மாணவர்கள்  நீர் குடத்தை   வரவேற்றனர். அதன் பிறகு தண்ணீர் அவசியத்தையும் தண்ணீர் பாதுகாப்பையும் விழிப்புணர்வு ஏற்படுத்தி சைக்கிள் பேரணி நடந்தது. 

    இந்த பேரணி காந்திநகர், மருதம் நகர், ரோஜா நகர், கனகன் ஏரி சுற்றுலா பகுதிகளுக்கு சென்றது.

    இந்நிகழ்ச்சியை பள்ளி அளவிலான நாட்டு 
    நலப்பணித்திட்ட  ஒருங்கிணைப்பாளர் மதிவண்ணன், புதுவை மாநில கோஜு ரியூ  கராத்தே சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் கராத்தே சுந்தர்ராஜன், குளங்கள் காப்போம் குழுவின் தலைவர்  கார்த்தி கேயன், உறவுகள் காப்போம் குழுவை சேர்ந்த  தினேஷ், சூர்யா, மற்றும் ஊர் பெரியவர்   ஜெகதீஸ்வரன் மற்றும் பள்ளி முதல்வர் கவிதா சுந்தரராஜன், ஆகியோர் கொடியசைத்து சைக்கிள் பேரணியை   தொடங்கி வைத்தனர்.

     இதற்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித் திட்டத்தின் ஒருங்கிணைப் பாளர்ஆசிரியர்  நெடுஞ்செழியன், சமுதாய நலப்பணித் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் ஆசிரியை முகிலரசி  மட்டும் பள்ளி பொறுப்பாளர்  ஜஸ்டின்  ஆகியோர் செய்திருந்தனர்.
    ×