என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    நெட்டப்பாக்கம் அருகே பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    புதுச்சேரி:

    நெட்டப்பாக்கம் அருகே எம்.குச்சிப்பாளையம் யோகபிரியா நகரை சேர்ந்தவர் பொன்னுசாமி(வயது62). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த தனபாக்கியம்  என்பவருக்கும் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு அய்யப்பன் என்ற மகன் உள்ளார்.

    குழந்தை பிறந்த பிறகு தனபாக்கியம் பொன்னுசாமியை விட்டு பிரிந்து சென்று விட்டார். அதன்பிறகு பொன்னுசாமி அதே பகுதியை சேர்ந்த திருமணமான மல்லிகா என்ற பெண்ணை 2-வது திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்தார்

    பொன்னுசாமி கட்டிட வேலைக்கு சென்று வந்தார். மல்லிகா வீட்டில் உள்ள ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கு கொண்டு சென்று அவைகளை கவனித்து வந்தார். மல்லிகாவுக்கு அடிக்கடி தலைவலி இருந்து வந்ததாக கூறப்படுகிறது. அதற்காக அவர் ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்தநிலையில் வழக்கம் போல் பொன்னுசாமி கட்டிட வேலைக்கு சென்று விட்டார். அதன் பிறகு மல்லிகா ஆடு, மாடுகளை வயல்வெளிக்கு மேய்ச்சலுக்கு கொண்டு சென்றார். அங்கு அவருக்கு தீராத தலைவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால்  வயல்வெளியில் இருந்து ஆடு, மாடுகளை மதியமே வீட்டுக்கு கொண்டு வந்து கொட்டகையில் அடைத்தார்.

    இதன் பின்னர் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்த மல்லிகா மின்விசிறியில் ஆடு கட்டும் கயிற்றால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். மாலையில் வீடு திரும்பிய பொன்னுசாமி மல்லிகா தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    பின்னர் இதுகுறித்து மடுகரை புறக்காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    பாகூரில் வெளிமாநில லாட்டரி சீட்டு விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    புதுச்சேரி:

    பாகூர் கிருஷ்ணாநகர் பகுதியில் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகள் மற்றும் 3 நம்பர் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக பாகூர் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர்.

    அப்போது 2 பேர் லாட்டரி முடிவுகளை வாடிக்கையாளர்களுக்கு செல்போன் மூலம் தெரிவித்துக்கொண்டிருந்தனர். இதைத்தொடர்ந்து அவர்கள் 2  பேரையும் போலீசார் மடக்கி பிடித்தனர்.

    விசாரணையில் அவர்கள் பாகூர் பங்களா தெருவை சேர்ந்த சரவணன்(வயது42) மற்றும் அதே பகுதியை சேர்ந்த தண்டபாணி(42) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    அவர்களிடமிருந்து வெளிமாநில லாட்டரி சீட்டுகள், 3 நம்பர் லாட்டரி சீட்டுகள் மற்றும் லாட்டரி விற்பனை பணம் ரூ.32 ஆயிரத்து 250, செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
    ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 600 சதுர அடிக்கு வீடுகள் இருக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவுறுத்தினார்.
    புதுச்சேரி:

    ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் குறித்த கலந்தாய்வுக் கூட்டம் ஒட்டல் அண்ணாமலையின் நடந்தது.

    முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமை தாங்கினார். தலைமைச் செயலாளர் ராஜீவ் வர்மா முன்னிலை வகித்தார். அரசு செயலாளர் அருண் வரவேற்றார். 
    கூட்டத்தில் முதல்-அமைச்சர் ரங்கசாமி பேசியதாவது:-

    கடந்த காலங்களில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளுக்கு ரூ.60 கோடி மட்டுமே செலவு செய்யப்பட்டுள்ளது. புதிய அரசு அமைந்த பிறகு தற்போது ஒதுக்கப்பட்டுள்ள 99 கோடியே 70 லட்சத்துக்கு ஓராண்டிற்குள் பணிகள் செய்து முடிக்க வேண்டிய வேண்டிய நிலை உள்ளது.

    ஸ்மார்ட் சிட்டி திட்டம் கடந்த ஆட்சியில் கேலிக்கூத்தாக இருந்துள்ளது. பல மாநிலங்களில் சிறப்பாக செயல்பட்ட ஸ்மார்ட் சிட்டி திட்டம் புதுவையில் சொல்லும்படி இல்லை. ஸ்மார்ட் திட்டத்தின் மூலம் கட்டப்படும் வீடுகள் சிறிய அளவில் உள்ளது. நாம் கட்டித்தரும் வீடுகள் குறைந்தது 600 சதுர அடியாக இருக்க வேண்டும். 

    இப்போது 375 சதுரடி தான் உள்ளது. இனி அமைக்கும் வீடுகளாவது குறைந்தது 600 சதுர அடிக்கு குறையாமல் இருக்க வேண்டும்.

     புதுவையில் உட்புற சாலைகள் மோசமாக உள்ளது. புதிய சாலைகள் அமைத்து ஓராண்டாவது தாக்கு பிடிக்க வேண்டும்.

    ஆனால் புதிய சாலைகள் அமைந்த சில நாட்களிலேயே ஜல்லிகள் பெயர்ந்து சேதமடைகிறது. தமிழக சாலைகள்  வழியாக  புதுவை எல்லையை அடையும் போது திடீரென பள்ளத்தில் வாகனம் விழுகிறது. ஒரு காலத்தில் புதுவை சாலைகள் நன்றாக இருக்கின்றது என்றனர். இன்றைக்கு தமிழகத்தில் நன்றாக உள்ளதை பார்க்க முடிகிறது. 

    கிராமப்புற இணைப்பு சாலைகள் அமைக்க கடந்த ஆட்சியில் ரூ.50 கோடி ஒதுக்கப்பட்டது. ஆனால் இதுவரையில் சாலை அமைக்கும் பணி மேற்கொள்ளப்படவில்லை சாலை அமைக்கும் பணியின் போது தரம் கண்டிப்பாக இருக்க வேண்டும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் அதனை சரியாக கண்காணிக்க வேண்டும்.

    அரசு பணிகள் மேற்கொள்ளும் போது தரத்தில் அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் நிதிப் பற்றாக்குறை இருப்பது உண்மைதான். கோப்புகள் திரும்பி வருகிறது. பணிகளை காலத்தோடு செய்தால் எந்தவித பிரச்சனையும் இருக்காது காலங்கடந்து செய்தால் விலைவாசி உயர்வு காரணமாக பணியில் தொய்வு ஏற்படும்.

    இவ்வாறு முதல்-அமைச்சர் ரங்கசாமி பேசினார். 

    கூட்டத்தில் அமைச்சர் லட்சுமிநாராயணன்,எம்.எல்.ஏ.க்கள் ஏ.கே.டி. ஆறுமுகம், அனிபால் கென்னடி, வைத்தியநாதன், சம்பத், சிவசங்கர், கே.எஸ்.பி. ரமேஷ், பிரகாஷ் குமார் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
    புதுச்சேரி சாரதா கங்காதரன் கல்லூரியை தேசிய மதிப்பீடு மற்றும் தரச் சான்று குழு 2-ம் சுற்றாக ஆய்வு செய்தது.
    புதுச்சேரி:

    புதுச்சேரி சாரதா கங்காதரன் கல்லூரியை தேசிய மதிப்பீடு மற்றும் தரச் சான்று குழு 2-ம் சுற்றாக ஆய்வு செய்தது.

    உஸ்மானியா பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் சத்ய நாரா யணா, டெல்லி பல்கலைக் கழகத்தின் நிதி மேலாண்மை துறை பேராசிரியர் சந்திர குப்தா, பஞ்சாப் ஜலந்தர் எஸ்.டி. கல்லூரியின் முன்னாள் முதல்வர் கிரண் அரோரா ஆகியோர் ஆய்வு செய்தனர்.
    இதில் தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று குழுவின் வழி காட்டுதலுடன்  7 அளவு கோல்களை அடிப்படையாக ெகாண்டு நடத்தப்பட்டது.

    கற்பித்தல், கற்றலில் 3.33 புள்ளி, உள் கட்டமைப்பு, கற்றல் வளங்களில் 3.06 புள்ளி, மாணவர் ஆதரவு மற்றும் முன்னேற்றத்தில் 3.04 புள்ளிகள் என 7 அளவு கோள்களில சராசரியாக 2.92 புள்ளிகளை பெற்று பி பிளஸ் பிளஸ் தரச் சான்றுக்கு இக் கல்லூரி தகுதி பெற்றுள்ளது. 

    புதுவை மாநிலத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உயர்ந்த மதிப்பெண் பெற்று பி பிளஸ் பிளஸ் தரச் சான்றை பெற்ற கல்லூரி என்ற சிறப்பினை சாரதா கங்காதரன் கல்லூரி பெற்றுள்ளது.
    இதையொட்டி கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்களை கல்லூரி துணைத் தலைவர் சு .பழனிராஜா பாராட்டினார்.
    நெஞ்சுக்கு நீதி திரைப்படத்துக்கு கேளிக்கை வரி விலக்கு அளிக்க ரங்கசாமியிடம் தி.மு.க. கோரிக்கை விடுத்துள்ளது.
    புதுச்சேரி:

    உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள நெஞ்சுக்கு நீதி திரைப்படத்திற்கு கேளிக்கை வரி விலக்கு அளிக்கக்கோரி முதல்-அமைச்சர் ரங்கசாமியிடம் தி.மு.க அமைப்பாளர் சிவா தலைமையில் நிர்வாகிகள், எம்.எல்.ஏ.க்கள் இன்று மனு அளித்தனர்.
    அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆன பிறகும் பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களிலும், வேலை செய்யும் இடங்களிலும், மக்கள் கூடும் இடங்களிலும் சாதி வெறியின் காரணமாக ஏற்றத்தாழ்வுகள் இருந்து வருகிறது. இந்திய அரசியலமைப்பு சட்டம் 1950  பிரிவு 15-ன் படி சாதி, மதம், இனம், பாலினம் குடிவழி, பிறப்பிடம் வாழ்வியல் அடிப்படையில் எந்த பாகுபாடும் காட்டக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது.  இதை கதைக்களமாக கொண்டு உதயநிதி  ஸ்டாலின் எம்.எல்.ஏ. நடித்துள்ள நெஞ்சுக்கு நீதி திரைப்படம் வெளியாகியுள்ளது. 

    அனைவரும் சமம் என்பதை வளரும் தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கும் வகையில் இத்திரைப்படம் உள்ளது. மேலும் பிரிவினைகளில் புதைந்தவர்களை மீட்டு சமூக நீதியை வென்று சமுத்துவ சமுதாயத்தை உருவாக்க ஊக்கப்படுத்தவும் செய்யும் இப்படத்திற்கு கேளிக்கை வரியை ரத்து செய்து படக்குழுவினரை ஊக்கப்படுத்த வேண்டும். இவ்வாறு அந்த  மனுவில் குறிப்பிட்டுள்ளனர். 

    நிகழ்ச்சின் போது அவைத்தலைவர் எஸ்.பி.சிவக்குமார், எம்.எல்.ஏ.க்கள் அனிபால் கென்னடி, சம்பத், செந்தில்குமார், தொகுதி பொறுப்பாளர்கள் கோபால், வடிவேல், தொகுதி செயலாளர்கள் சக்திவேல், நடராஜன், சமூக அர்வலர்கள் காயத்ரி, வக்கீல் பரிமளம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
    கோவில் திருவிழாவுக்கு செல்ல மனைவி பணம் கொடுக்க மறுத்ததால் கார் டிரைவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    புதுச்சேரி:

    லாஸ்பேட்டையில் கோவில் திருவிழாவுக்கு செல்ல மனைவி பணம் டுக்க மறுத்ததால் கார் டிரைவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    புதுவை லாஸ்பேட்டையை அடுத்த பெத்து செட்டிப்பேட்டை குளக்கரை வீதியை சேர்ந்தவர் கோபால கிருஷ்ணன் (வயது 32). இவர்  கார் டிரைவராக வேலை செய்து வந்தார். 
    இவருக்கு திவ்யா என்ற மனைவியும் 5 வயதில் ஒரு மகனும் உள்ளனர். கோபால கிருஷ்ணனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. மது குடித்துவிட்டால் கோபால கிருஷ்ணன் தனது மனைவியிடம் அடிக்கடி தகராறு செய்வது வழக்கம். அதுபோல் சம்பவத்தன்று கோபால கிருஷ்ணன் மதுகுடித்து விட்டு தனது சொந்த ஊரான சிறுவாலையில் நடைபெறும் கோவில் திருவிழாவுக்கு செல்ல திவ்யாவிடம் பணம் கேட்டார். 


    ஆனால் திவ்யா பணம் கொடுக்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் விரக்தியடைந்த கோபால கிருஷ்ணன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். திவ்யா வீட்டின் வெளியே மகனுக்கு சாப்பாடு ஊட்டிக் கொண்டிருந்த போது கோபால கிருஷ்ணன் வீட்டில் கதவை உள்பக்கமாக பூட்டிக் கொண்டு சேலையால் தூக்கில் தொங்கினார்.  வெகுநேரமாக கதவு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த திவ்யா அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். 

    அப்போது கோபால கிருஷ்ணன் தூக்கில் தொங்கு வதை கண்டு அதிர்ச்சி அடைந்த திவ்யா உடனே தூக்கில் இருந்து கணவரை மீட்டு ஆட்டோ மூலம் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தார்.  அங்கு சிகிச்சை பெற்று வந்த கோபால கிருஷ்ணன் நேற்று மதியம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்து போனார். இதுகுறித்து திவ்யா கொடுத்த புகாரின் பேரில் லாஸ்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ராஜீவ்காந்தி நாளையொட்டி இளைஞர் காங்.சார்பில் நினைவு ஜோதி ஏந்திச் சென்றனர்.
    புதுச்சேரி:

    ராஜீவ் காந்தி நினைவு தினத்தையொட்டி ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அவரது நினைவிடத்துக்கு புதுவை இளைஞர் காங்கிரசார் நினைவு ஜோதி ஏந்திச் சென்றனர்.

    புதுவை மாநில இளைஞர் காங்கிரஸ் சார்பில் இளைஞர் காங்கிரஸ் தலைவர் வேல்முருகன் தலைமையில் ராஜீவ்காந்தி நினைவு தீப ஜோதியினை ஸ்ரீபெரும்புத்தூருக்கு ஏந்தி சென்றனர்.
    அவர்களுடன் புதுவை மாநில  ஒருங்கிணைப்பாளர் தேவதாஸ், காங்கிரஸ் வழக்கீல் பிரிவு தலைவர் மருதுபாண்டியன் இந்திரா நகர் தொகுதி பொறுப்பாளர் ராஜாகுமார் மற்றும் நிர்வாகி சோமசுந்தரம், மகிளா காங்கிரஸ் நிர்வாகி விஜயகுமாரி மற்றும் சேவாதளம் தலைவர்கள், நிர்வாகிகள் ஆகியோர் சென்றனர்.
    நவீன தொழில்நுட்பத்தில் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்ய சோதனை நடத்துவது குறித்து அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் ஆலோசனை நடத்தினார்.
    புதுச்சேரி:

    வில்லியனூர் பகுதியில் கழிவுநீர் தொடர்ந்து சங்கராபரணி ஆற்றங்கரையில் கலக்கிறது. இதனை சுத்திகரிப்பு செய்து நல்ல நீராக மாற்றி மீண்டும் ஆற்றில் விட புதிய தொழில்நுட்பத்துடன் செயல்படுத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது.

    அதன் படி  கோட்டைமேடு பகுதியில் உள்ள சுடுகாட்டு பகுதியில் வில்லியனூர் கழிவுநீர் வாய்க்கால் இணைப்பு இடத்தில் கழிவு நீரை சுத்திகரிப்பு செய்து மீண்டும் ஆற்றில் விட புதிய தொழில் நுட்பத்துடன் செயல்படுத்த சோதனை ஓட்டம் நடைபெற்றது. வேளாண்துறை அமைச்சர் தேனீ. ஜெயக்குமார் சோதனைகளை ஆய்வு செய்தார். முன்னாள் பொதுப்பணித்துறை தலைமை பொறியாளரும் ஆதித்யா கல்வி குழும தலைவருமான ஆனந்தன் உடனிருந்தார். 

    இத்திட்டத்தை சி.எஸ்.ஆர். ரீதியில் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 
    தொடர்ந்து ஜப்பான் தொழில்நுட்பத்துடன் இணைந்து அதற்கான செலவுகளை உத்தேசிக்கப்பட்டு சுமார் 6 இடங்களில் இதனை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது.
    ராஜீவ்காந்தி சிலைக்கு ரங்கசாமி-நாராயணசாமி மாலை அணிவித்தனர்.
    புதுச்சேரி:

    மறைந்த பாரத பிரதமர் ராஜீவ்காந்தியின் நினைவுதினம் இன்று புதுவை அரசு சார்பில் அனுஷ்டிக்கப்பட்டது. இதையாட்டி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ராஜீவ்காந்தி சிலைக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

    மேலும் அமைச்சர் லட்சுமிநாராயணன், துணை–சபாநாயகர் ராஜவேலு,  எம்.எல்.ஏ.க்கள் கே.எஸ்.பி.  ரமேஷ், லட்சுமிகாந்தன், தலைமை செயலாளர் ராஜீவ்வர்மா, ஏ.டி.ஜி.பி. ஆனந்தமோகன் மற்றும் பலரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 
    தொடர்ந்து சர்வமத பிரார்த்தனை நடந்தது. வன்முறை எதிர்ப்பு உறுதிமொழியை ரங்கசாமி வாசிக்க அனைவரும் உறுதிமொழி ஏற்றனர். 

    புதுவை மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் மாநில தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் தலைமையில் ராஜீவ்காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. 

    நிகழ்ச்சியில் முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, வைத்திலிங்கம் எம்.பி., சட்டமன்ற கட்சித்தலைவர் வைத்தியநாதன், முன்னாள் அமைச்சர் கந்தசாமி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் அனந்தராமன், கார்த்திகேயன், நீல.கங்காதரன், சீனியர் துணைத்தலைவர் தேவதாஸ், காங்கிரஸ் நிர்வாகிகள் கருணாநிதி, தனுசு, ஆர்.இ.சேகர், வக்கீல் மருதுபாண்டி, கணேசன், கோவிந்தராஜ், வீரமுத்து, ரகுமான் உள்பட பலர் பங்கேற்றனர். 
    முன்னதாக காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் ராஜீவ்காந்தி உருவப்படத்துக்கு காங்கிரசார் மலரஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து 3 பஸ்களில் ஸ்ரீபெரும்புதூர் நினைவிடத்திற்கு சென்று புதுவை காங்கிரசார் அஞ்சலி செலுத்தினர்.

    அரியாங்குப்பம் வட்டார  காங்கிரஸ் கமிட்டி சார்பில் முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தி நினைவு தின நிகழ்ச்சி  அரியாங்குப்பம்- வீராம்பட்டினம் ரோடு சந்திப்பில் நடந்தது.

    நிகழ்ச்சியில் முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி. சுப்பிரமணியன், முன்னாள் அமைச்சர் கந்தசாமி, வைத்தியநாதன் எம்.எல்.ஏ., முன்னாள் அரசு கொறடா அனந்தராமன், காங்கிரஸ் மாநில பொது செயலாளர் சங்கர், வட்டார தலைவர்கள் அய்யப்பன், சிவராமகிருஷ்ணன் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டு ராஜீவ் காந்தி உருவ படத்துக்கு மலர் அஞ்சலி செலுத்தினர்.

    மணவெளி தொகுதி காங்கிரஸ் சார்பில் ராஜீவ் காந்தி உருவ படத்துக்கு முன்னாள் அரசு கொறடா அனந்தராமன்மலர் அஞ்சலி செலுத்தினார். 
    நிகழ்ச்சியில் மாநில காங்கிரஸ் செயலாளர் சுரேஷ்குமார், வட்டார காங்கிரஸ் தலைவர்பரமகுரு, மாநில பொறுப்பாளர்கள் பாலு, ரவி, குமார், கோவிந்தசாமி மற்றும்  காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
    பெற்றோர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எந்த மருந்துக்காக பயன்படுத்தப்பட்ட குப்பியோ? இதனால் குழந்தைகளுக்கு பாதிப்பு வருமோ? என அஞ்சுகின்றனர்.

    புதுச்சேரி:

    சிறுவர்களை கவர்வதற்காக மிட்டாய்களை பல வண்ணங்கள் மற்றும் வடிவங்களில் விற்பனை செய்கின்றனர்.

    பல்லி மிட்டாய் என சிறுவர்களால் அழைக்கப்படும் மிட்டாய்கள் கண்ணாடி குப்பியில் அடைத்து விற்கப்படுகிறது.

    இந்த குப்பிகள் ஊசிமருந்துக்கு பயன்படுத்தப்படும் 10 மி.லி. குப்பிகள் என தெரிகிறது. இந்த குப்பியில் எந்த பெயரும் கிடையாது. ஏற்கனவே மருந்து பயன்படுத்தப்பட்டு வீசி எறியப்பட்ட குப்பிகள் என தெரிகிறது. இந்த மிட்டாய்களை எடுத்துவிட்டு நுகர்ந்துபார்த்தால் குப்பியில் மருந்து வாசனை அடிக்கிறது. கோடை விடுமுறை காலம் என்பதால் சிறுவர்கள் இந்த மிட்டாய் பாட்டில்களை வாங்கி தின்கின்றனர்.

    இது பெற்றோர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எந்த மருந்துக்காக பயன்படுத்தப்பட்ட குப்பியோ? இதனால் குழந்தைகளுக்கு பாதிப்பு வருமோ? என அஞ்சுகின்றனர்.

    இதுகுறித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

    புதுவை ரெயில் நிலையத்தில் மின் கம்பத்தில் ஏறி அமர்ந்திருந்த முதியவரால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
    புதுச்சேரி:

    புதுவை ரெயில் நிலையத்தில் இன்று காலை 6 மணியளவில் 70 வயது முதியவர் ஒருவர் மின்சார ரெயிலை இயக்க அமைக்கப்பட்ட மின் கம்பத்தில் திடீரென ஏறி அமர்ந்து கொண்டார்.

    இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ரெயில்வே போலீசார் அந்த முதியவரை மின் கம்பத்தில் இருந்து கீழே இறங்கும்படி வலியுறுத்தினர். ஆனால் அதனை பொருட்படுத்தாமல் அந்த முதியவர் தொடர்ந்து மின் கம்பத்திலேயே அமர்ந்திருந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இதையடுத்து ரெயில்வே போலீசார் இதுபற்றி தீயணைப்பு நிலையத்துக்கும், ஒதியஞ்சாலை போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு படையினரும், போலீசாரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் தீயணைப்பு படை வீரர்கள் அந்த முதியவரை பாதுகாப்பாக மீட்டனர்.

    இதையடுத்து அந்த முதியவரிடம் ஒதியஞ்சாலை போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அந்த முதியவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் பேசினார். தனது பெயர் பாண்டுரங்கன், ஊர் விழுப்புரம் என்றும், மனைவி இறந்து விட்டதாகவும், தனக்கு 2 மகன்கள் உள்ளனர். அவர்கள் போலீஸ் பணியில் உள்ளதாக தெரிவித்தார்.

    தொடர்ந்து அந்த முதியவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    தாவரவியல் பூங்காவில் இயக்கப்படும் சிறுவர் ரெயிலை பார்வையிட்ட புதுவை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், குழந்தைகளுடன் ரெயிலில் சென்று குதூகலமாக பேசினார்.
    புதுச்சேரி:

    புதுவை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள தாவரவியல் பூங்காவுக்கு சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    தாவரவியல் பூங்காவில் இயக்கப்படும் சிறுவர் ரெயிலை பார்வையிட்டார். அப்போது குழந்தைகளுடன் ரெயிலில் சென்று குதூகலமாக பேசினார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும்போது, புதுவை திரைப்படத்துறையின் மனதுக்கு நெருக்கமான இடமாக உள்ளது. இங்கு விரைவில் திரைப்பட நகரம் உருவாக்கப்படும்.

    புதுவை சீதோஷ்ண நிலைக்கு பிப்ரவரி மாதம் மலர் கண்காட்சி நடத்த வேண்டும் என கூறி உள்ளனர். கொரோனா தொற்றால் மலர் கண்காட்சி நடத்தப்படாமல் இருந்தது.

    இந்த ஆண்டு நிச்சயமாக மலர் கண்காட்சி நடைபெறும். அதற்கு முன்பாக செயற்கை மலர் கண்காட்சி விழா நடத்த முடிவு செய்துள்ளோம்.

    இதுமட்டுமின்றி மாடி தோட்டம், வீட்டு தோட்டத்தை ஊக்கப்படுத்துவதற்கு தோட்ட திருவிழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது என்றார்.

    பின்னர் கடலூர் சாலையில் உள்ள வனத்துறை அலுவலகத்துக்கு சென்றார். அங்கு பராமரிக்கப்பட்டு வரும் வனவிலங்குகள் மற்றும் பறவைகளை பார்வையிட்டார். அங்கிருந்த பாம்பு மற்றும் மயில் உள்ளிட்ட பறவைகளை கையில் எடுத்து பார்த்தார்.

    ஒரு பறவையை கையில் பிடித்துக்கொண்டு ‘நல்லா இருக்கீங்களா?’ என கேட்டார். இதனை அங்கிருந்த அதிகாரிகள் பார்த்து வியப்படைந்தனர்.

    ஆய்வின்போது துணை வன பாதுகாவலர் வஞ்சுலவள்ளி மற்றும் வன அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    ×