என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    தற்போது அரசு மின்துறையை தனியார் மயமாக்கும் நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக தகவல் வெளியானது. இதையடுத்து தனியார்மய எதிர்ப்பு போராட்டக் குழுவினர் ஆலோசனை நடத்தினர்.
    புதுச்சேரி:

    யூனியன் பிரதேசங்களின் மின்துறையை தனியார் மயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

    புதுவை மின்துறை பொறியாளர்கள், அதிகாரிகள், ஊழியர்கள் தனியார்மய எதிர்ப்பு போராட்டக்குழு அமைப்பை ஏற்படுத்தி கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கடந்த பிப்ரவரி 1-ந்தேதி காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினர்.

    அவர்களோடு, முதல்-அமைச்சர் ரங்கசாமி, மின்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில், மின்துறை ஊழியர்கள், அரசியல்கட்சியினர், பொதுமக்கள் கருத்துக்களை கேட்டறிந்து அனைவரும் பாதிக்காத வகையில் அரசு நல்ல முடிவெடுக்கும் என உறுதியளித்தனர்.

    இதையேற்று போராட்ட குழுவினர் வேலைநிறுத்த போராட்டத்தை நிறுத்தினர்.

    தற்போது அரசு மின்துறையை தனியார் மயமாக்கும் நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக தகவல் வெளியானது. இதையடுத்து தனியார்மய எதிர்ப்பு போராட்டக் குழுவினர் ஆலோசனை நடத்தினர்.

    கூட்டத்தில், மீண்டும் போராட்டம் நடத்துவது என முடிவு செய்தனர். இன்று (திங்கட்கிழமை) முதல் மீண்டும் அவர்கள் போராட்டத்தை தொடங்கி உள்ளனர். வம்பாகீரப் பாளையத்தில் உள்ள மின்துறை தலைமை அலுவலகத்தில் மின் அலுவலகங்களை சேர்ந்த ஊழியர்கள் ஒன்று கூடினர். அங்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    ஆர்ப்பாட்டத்துக்கு போராட்டக்குழு தலைவர் அருள்மொழி தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் வேல்முருகன், ஆலோசகர்கள் ராமசாமி, ராஜேந்திரன், பொறியாளர்கள் சங்க தணிகாசலம், தணிகைவேலன், அச்சுதானந்தம் மற்றும் அனைத்து தொழிற்சங்க பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

    இன்று முதல் மின்துறையில் எழுத்துப்பணிகளை முழுமையாக புறக்கணிப்போவதாக அறிவித்துள்ளனர். இதுகுறித்து போராட்டக்குழு தலைவர் அருள்மொழி, பொதுச்செயலாளர் வேல்முருகன் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    அரசு அளித்த வாக்குறுதியை மீறி மின்துறையை தனியார் மயமாக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக அமைச்சரவை முடிவெடுத்து, மத்திய அரசுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதனால் நாங்கள் மீண்டும் போராட்டத்தை தொடங்குகிறோம். அதேநேரத்தில் பொதுமக்களுக்கு தடையில்லாத மின்சாரத்தை வழங்குவோம்.

    பொதுமக்களுக்கு எவ்விதத்திலும் பாதிக்காத வகையில் எங்கள் போராட்டம் இருக்கும். பொறியாளர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியை மட்டும் தொடர்வார்கள். கூடுதல் பணிகளை பார்க்கமாட்டார்கள். எழுத்துப்பணிகளை முற்றிலுமாக தவிர்க்கிறோம். மீட்டர் ரீடிங் எடுக்க மாட்டோம்.

    புதிய மின் இணைப்பு தரமாட்டோம். அரசு எங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தாவிட்டால் எங்களின் போராட்டம் தீவிரமடையும். போராட்டத்தால் ஏற்படும் பாதிப்புகளுக்கு அரசே பொறுப்பேற்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். மின்துறை ஊழியர்கள் மீண்டும் போராட்டத்தை தொடங்கி உள்ளதால் பரபரப்பு நிலவுகிறது.
    மனைப்பட்டா கேட்டு மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு ஊர்வலம் நடத்தினர்.
    புதுச்சேரி:

    புறம்போக்கு இடங்களில் வசிப்போருக்கும், வாடகை வீட்டில் வசிப்போருக்கும் குடிமனை பட்டா வழங்க வலியுறுத்தி மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியினர் 3 இடங்களில் ஊர்வலம், ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    புதுவை சாரம் அவ்வை திடலில் இருந்து கட்சியினர் ஊர்வலமாக புறப்பட்டனர். ஊர்வலத்துக்கு நகர செயலாளர்கள் ராம்ஜி, மதிவாணன் ஆகியோர் தலைமை தாங்கினர். மூத்த தலைவர் முருகன் ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். 

    ஊர்வலத்தில் பிரதேசக்குழு செயலாளர் ராஜாங்கம், செயற்குழு உறுப்பினர்கள் சுதா, கொளஞ்சியப்பன், கலியமூர்த்தி, பிரபுராஜ், சத்யா பிரதேசக்குழு உறுப்பினர்கள் சரவணன், ஆனந்து, ரமேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

    ஊர்வலம் வழுதாவூர் ரோட்டில் உள்ள கலெக்டர் அலுவலகத்தை அடைந்தது. 

    பின்னர்அங்கு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.  கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். 

    பாகூர் தாசில்தார் அலுவலகம் முன்பு மார்சிஸ்டு கம்யூனிஸ்டு சார்பில் இலவச வீட்டு மனைபட்டா வழங்க கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

    போராட்டத்திற்கு பாகூர் செயலாளர் சரவணன் தலைமை தாங்கினார். பிரதேச குழு உறுப்பினர் இளவரசி, செயற்குழு உறுப்பினர் பெருமாள், வடிவேலு கவுசிகன், முருகையன், வெங்கடாசலம், ஹரிதாஸ், சதாசிவம் மற்றும் பெண்கள் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.

    பாகூர் கொம்யூனில் பல ஆண்டுகளாக கோவில் இடம், அரசு இடத்தில் வாழ்ந்து வரும் மக்களுக்கு அதே இடத்தை வகை மாற்றம் செய்து குடிமனைப்பட்டா வழங்க வேண்டும்.

    நீர்நிலை அருகில், வாடகை வீடு ஆகிய பகுதிகளில் வேறு வழியின்றி வறுமையில் வாழ்ந்து வரும் ஏழை எளிய மக்கள் வீடுகட்டி வாழ புதிய இடம் தேர்வு செய்து குடி மனைப்பட்டா வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதேபோல வில்லியனூரிலும் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியினர் குடிமனை பட்டா கேட்டு ஊர்வலம், ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    பெட்ரோல், டீசல் விலையை குறைக்காத தமிழக நிதி அமைச்சருக்கு புதுவை அ.தி.மு.க. கண்டனம் தெரிவித்துள்ளது.
    புதுச்சேரி:

    புதுவை கிழக்கு மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மக்களின் நலன் கருதி பெட்ரோல், டீசல் விலையை குறைத்த மத்திய அரசின் அறிவிப்பை புதுவை அ.தி.மு.க. வரவேற்கிறது. மத்திய அரசின் அறிவிப்பை தொடர்ந்து எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் மகாராஷ்டிரம், கேரளா, ராஜஸ்தான் உள்ளிட்ட பல மாநிலங்கள் பெட்ரோல், டீசல்  வரியை குறைத்துள்ளன.  ஆனால், தமிழக  நிதி அமைச்சர் பெட்ரோல், டீசல் வரி குறைக்க மாட்டேன் என பேசுவது கண்டிக்கத்தக்கது. 

    தமிழகத்தில் மக்களின் நலன் கருதி பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் என தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சி அ.தி.மு.க.வின் கோரிக்கையை தமிழக தி.மு.க. அரசு ஏற்க மறுப்பது ஜனநாயக விரோதமான செயலாகும். தமிழகத்தின் தி.மு.க. அரசு தூக்கி எறியப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை. 

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    வில்லியனூர் திருக்காமீஸ்வரர் கோவில் தேர் திருவிழா வருகிற 3-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    புதுச்சேரி:

    வில்லியனூரில் பிரசித்தி பெற்ற கோகிலாம்பிகை உடனுறை திருக்காமீஸ்வரர் கோவில் உள்ளது.

    இங்கு ஆண்டுதோறும்  வைகாசி மாதம் பிரம்மோற்சவவிழா சிறப்பாக கொண்டா டப்படும். கொரோனா தொற்று காரணமாக 2 ஆண்டாக தேர் திருவிழா நடக்கவில்லை. இந்த ஆண்டு விழா நடத்த அரசு அனுமதியளித்துள்ளது.

    இதையடுத்து பிரம்மோற்சவ தேர் திருவிழா வருகிற 3-ந் தேதி  கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. நாள்தோறும் சிறப்பு அபிஷேகம், ஆராதனை, சாமி வீதியுலா நடக்கிறது. வருகிற 10-ந் தேதி மாலை 6.30  மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.

    விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் 11-ந் தேதி நடக்கிறது. அன்று காலை 7.15 மணிக்கு  கோவில் முன்பு தேரோட்டம் தொடங்கி மாட வீதிகளின் வழியாக சென்று மீண்டும் கோவிலை வந்தடைகிறது. விழாவில் கவர்னர் தமிழயிசை, முதல்-அமைச்சர் ரங்கசாமி மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்கிறார்கள். 12-ந் தேதி  நண்பகல் தீர்த்தவாரியும், மாலை தெப்ப உற்சவமும், 13-ந் தேதி முத்து பல்லக்கும் நடக்கிறது. 

    விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அலுவலரும் சிறப்பு  அதிகாரியுமான திருவரசன் மற்றும் சிவாச்சாரியார்கள் செய்து வருகின்றனர். தேரோட்டத்தை முன்னிட்டு தேரை சீரமைக்கும் பணியில் ஊழியர்கள்  ஈடுபட்டு வருகின்றனர்.
    ஆட்டுப்பட்டியில் 600 சதுர அடியில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டித் தரவேண்டும் என்று ரங்கசாமியிடம் கென்னடி எம்.எல்.ஏ. வலியுறுத்தியுள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவை ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் குறித்து கலந்தாய்வு கூட்டம் ஓட்டல் அண்ணாமலையில் நடைபெற்றது. முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமை தாங்கினார். அவரது முன்னிலையில்  உப்பளம் தொகுதி எம்.எல்.ஏ. அனிபால் கென்னடி பேசியதாவது:-

    உப்பளம் தொகுதிக்குட்பட்ட ராசு உடையார் தோட்டத்தில் அனைத்து வீடுகளில் குடியிருக்கும் பொதுமக்கள் நடைபாதை சாலையாக சிமெண்ட்  அடுக்குகளை பயன்படுத்துகின்றனர், பல வருட காலமாக அந்த சிமெண்ட் அடுக்குகள் உடைந்த நிலையில் மேலும் அடிக்கடி விபத்துக்கள் நேரிடும் வகையிலும் பள்ளமாக உள்ளது. 

    இதனை கருத்தில் கொண்டு முதல்-அமைச்சர் ரங்கசாமி ஸ்மார்ட்சிட்டி திட்டத்தில் இதை இணைத்து மக்களை பாதுகாத்திட உறுதுணையாக இருக்க வேண்டும்.

    மேலும் திப்புராயப்பேட்டையில் அடுக்குமாடி குடியிருப்பை 600 சதுர அடியாக மாற்றி கட்டித் தரவேண்டும். ஆடுப்பட்டியில் தடையின்மை சான்றிதழ் அளிக்காமல் உள்ளது. 

    அடுக்குமாடி குடியிருப்பு கட்ட நிதி ஒதுக்கி உள்ளீர்கள் ஆனால் பணிகள் நடக்காமல் நின்றுவிடும் நிலை உள்ளது. எனவே தாங்கள் இதில் தலையிட்டு தடையின்மை சான்றிதழ் பெற்று ஆட்டுப்பட்டியில் வாழும் ஏழை-எளிய மக்கள் பயன்பெறும் வகையில் 600 சதுர அடியில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டித்தர வேண்டும். 

    இவ்வாறு அவர் பேசினார்.
    பாகூர் அருகே டிராவல்ஸ் அதிபர் கார் தீவைத்து எரிப்பு சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    புதுச்சேரி:

    பாகூர் அடுத்த சின்ன ஆராய்ச்சிக் குப்பம், சிவன் கோவில் தெருவை சேர்ந்தவர் வாசுதேவன். இவர் சொந்தமாக டிராவல்ஸ் ஏஜென்சி வைத்துக்கொண்டு டிரைவராகவும் இருந்து வருகிறார். இவர் சுற்றுலாவுக்கு பயணிகளை அழைத்துச் செல்வது வழக்கம். இவருக்கு வளர்மதி என்ற மனைவியும் கோகுலகிருஷ்ணன் (வயது 21) என்ற மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். கோகுல
    கிருஷ்ணன் விழுப்புரம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.

    கடந்த 21-ந் தேதி வாசுதேவனும் அவரது மகன் கோகுலகிருஷ்ணனும் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிக்கொண்டு ஏற்காடு சென்றுவிட்டனர்.

    இந்த நிலையில் நேற்று  நள்ளிரவில் மர்ம மனிதர்கள் 2 பேர் வாசுதேவன் வீட்டு வாசலில் வந்து சத்தம் போட்டனர். வீட்டிலிருந்த கோகுலகிருஷ்ணனின் தாய் வளர்மதி கதவைத் திறந்து பார்த்தபோது 2 பேர் நின்று கொண்டு கோகுலகிருஷ்ணன் எங்கு இருக்கிறான் என்று மிரட்டலாக கேட்டனர்.

    இதில் பயந்து போன வளர்மதி அவன் ஊருக்கு சென்று விட்டான் என்று தெரிவித்து விட்டு வீட்டின் உள்ளே சென்றுவிட்டார்.

    இந்த நிலையில் அந்த மர்ம நபர்கள் தாங்கள் கையில் எடுத்து வந்த பெட்ரோல் கேன் மற்றும் தீபெட்டியை கொண்டு வீட்டு வாசலில் நின்றிருந்த காருக்கு தீ வைத்துவிட்டனர். சத்தம் கேட்டு வளர்மதி மற்றும் அவரது மாமியர் வெளியில் வந்து பார்த்தபோது கார் எரிவதை கண்டு அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டனர். பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தீயை அணைத்தனர். ஆனால் கார் முற்றிலுமாக எரிந்து சேதமானது.

    இதுகுறித்து வளர்மதி, பாகூர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நந்தகுமார், ஏட்டு ராதாகிருஷ்ணன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து காரை தீ வைத்து கொளுத்திய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
    மத்திய அரசின் சாதனைகளை விளக்கி மாவட்டம் மற்றும் தொகுதி அளவில் சாதனை விளக்க நிகழ்ச்சி நடத்த பா.ஜனதா ஓ.பி.சி., அணி முடிவு செய்துள்ளது.
    புதுச்சேரி:

    பா.ஜனதா மாநில ஓ.பி.சி., அணி ஆலோசனை கூட்டம் நடந்தது. மாநிலத் தலைவர் சிவகுமார் தலைமை தாங்கினர். 

    இக்கூட்டத்தில் பிரதமர்  நரேந்திர மோடி தலைமையில் கடந்த 8 ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட நலத்திட்டங்களை மக்களிடம் ெகாண்டு செல்வது சம்பந்தமாக விவாதிக்கப் பட்டது. மாவட்டம் மற்றும் தொகுதி அளவில் சாதனை விளக்க நிகழ்ச்சிகளை நடக்க முடிவு செய்யப்பட்டது. அதற்கான பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டனர்.

    ஓ.பி.சி., அணி பொதுச் செயலாளர்கள் சரவணகுமார். கிருஷ்ணராஜ், துணைத் தலைவர்கள் சதாசிவம், செல்வராஜ், செயலாளர்கள் வேல்முருகன், பாலபாஸ்கர், ராமஜெயம் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    மேலும், மாவட்டத் தலைவர்கள் வெங்கடேசன், பிரபாகர், லட்சுமி சண்முகம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
    கடனுக்கு மது பாட்டில் கொடுக்க மறுத்த பார் கேஷியரை கத்தியால் குத்தியவரை போலீசார் தேடி வருகின்றனர்.
    புதுச்சேரி:

    புதுவை ரெட்டியார்  பாளையம் மரியாள்நகர் 1-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் ராஜா(வயது62). இவர் புதுவை திருவள்ளுவர் சாலையில் தனியார் மதுக்கடையில் கேஷியராக பணிபுரிந்து வருகிறார்.

    நேற்று மதியம் இவர் மதுக்கடையில் இருந்த போது அவரிடம் பிள்ளைத்தோட்டம் பள்ளத்தெருவை சேர்ந்த சந்திரசேகர் என்பவர் கடனுக்கு மதுபாட்டில் கேட்டார். ஆனால் ராஜா கொடுக்க மறுத்து விட்டார். 

    இதனால் ஆத்திரமடைந்த சந்திரசேகர் தகாத வார்த்தைகளால் திட்டி கையில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ராஜாவின் முகத்தில் குத்தினார்.

    இதில் வலது கண் புருவத்தில் படுகாயமடைந்து ரத்தம் கொட்டியதால் ராஜா அலறல் சத்தம் போட்டார். உடனே அங்கிருந்தவர்கள் திரண்டு வரவே சந்திரசேகர் அங்கிருந்து தப்பியோடி விட்டார்.

    பின்னர் காயமடைந்த ராஜா புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று இதுகுறித்து உருளையன்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து சந்திரசேகரை தேடி வருகிறார்கள்.
    அரசியல் ஆதாயத்திற்காக புதுவை மக்களை பிரிக்க தி.மு.க. சூழ்ச்சி என்று அ.தி.மு.க. குற்றச்சாட்டுகிறது.
    புதுச்சேரி:

    புதுவை கிழக்கு மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில், அவரே நடித்துள்ள நெஞ்சிக்கு நீதி என்ற திரைப்படத்திற்காக வரிவிலக்கு வழங்க  முதல்அமைச்சரிடம் தி.மு.க. அளித்த மனுவில்  புதுவை மாநிலத்தில் இன்னமும் சாதி வெறியின் காரணமாக ஏற்றத் தாழ்வுகள் இருந்து வருகிறது என  குறிப்பிட்டிருப்பதை அ.தி.மு.க. சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன்.இது புதுவை மாநிலத்தை சாதி ரீதியில் திட்டமிட்டு கலங்கப்படுத்தும் செயலாகும். 

    வரி விலக்குக்காக இதுபோன்ற கருத்துக்களை தி.மு..க முன்னெடுத்து வைப்பது  தவறான ஒன்றாகும். இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி சாதி, மதம், இனம், பாலினம், பிறப்பிடம், வாழ்வியல் அடிப்படையில் புதுவை மாநிலத்தில் எங்கேயாவது பாகுபாடு நிலவுகிறதா? அப்படி இல்லாத ஒரு சூழ்நிலையில் மக்களிடையே சாதி ரீதியில் ஒரு குழப்பத்தை ஏற்படுத்த தி.மு.க. முற்பட வேண்டிய அவசியம் என்ன ? தங்களுடைய அரசியல் ஆதாயத்திற்காக சாதி ரீதியில் மக்களை பிரித்தாளும் தி.மு.க.வின் சூழ்ச்சியை அரசு முறியடிக்க வேண்டும். 

    6 எம்.எல்.ஏ.க்கள் உள்ள தி.மு.க. என்றைக்காவது தாழ்த்தப்பட்ட மக்களின் நலனுக்காக குரல் கொடுத்தது உண்டா? அவர்களுடைய வாழ்க்கைத் தரம் உயர எந்த திட்டத்தையாவது அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றது உண்டா? 

    அருந்ததிய மக்களுக்கு தனி உள் ஒதுக்கீடு, கிராமப்பகுதியில் வறுமையில் வாடும் தாழ்த்தப்பட்ட மக்களுடைய நலனுக்காக மின் கட்டணத்தில் 50 சதவீதம் சலுகை, குப்பை வரி,வீட்டு வரி,குடிநீர் வரியில் குறைப்பு கேட்காத தி.மு.க. தனது கட்சி தலைவரின் மகன் நடித்த ஒரு படத்துக்காக வரிந்து கொண்டு அதுவும் அட்டவணை இன மக்களை அரணாக குறிப்பிட்டு வரிவிலக்கு கேட்பது எந்த விதத்தில் நியாயம்.?

    தி.மு..க எம்.எல்.ஏ.க்களின் வரிவிலக்கு கோரிக்கையை முதல்அமைச்சர் ஏற்றுக் கொள்ளக் கூடாது. அப்படி ஏற்று க்கொண்டால் இது மற்ற அனைத்து நிகழ்வுக ளுக்கும் ஒரு முன்னுதாரணமாக மாறிவிடும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    லாஸ்பேட்டையில் மின்கம்பத்தில் திடீர் தீவிபத்து ஏற்பட்டது
    புதுச்சேரி:

    லாஸ்பேட்டை முத்துலிங்கபேட்டை பகுதியில் முத்துமாரியம்மன்  கோவிலில் திருப்பணி வேலைகள் தற்போது நடைபெற்று வருகிறது.

    இந்த கோவில் அருகில் உள்ள மின்கம்பத்தில் இருந்து ஒரு ஒயர் தனியாக தொங்கி உள்ளது. இதில் திடீரென  தீப்பொறி ஏற்பட்டு  வெடித்து சிதறியது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். 

    தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து 15 நிமிடங்களில் தீயை அணைத்தனர். மின் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மின் இணைப்பு தற்காலிகமாக துண்டிக்கப்பட்டது.
    புதுவையில் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
    புதுச்சேரி:

    புதுவை மாநிலத்தில் 786 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. 

    இதில் புதுவையை சேர்ந்த 2 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. காரைக்கால், ஏனாம், மாகியில் தொற்றால் பாதித்தவர் யாரும் இல்லை. தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் யாரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை. 21 பேர் வீட்டு தனிமையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று 2 பேர் குணமடைந்துள்ளனர். இவர்கள் புதுவை மற்றும் ஏனாமை சேர்ந்தவர்கள்.

    புதுவை மாநிலத்தில் இதுவரை 1 லட்சத்து 65 ஆயிரத்து 834 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 1 லட்சத்து 63 ஆயிரத்து 851 பேர் குணமடைந்துள்ளனர். 1962 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதுவரை 17 லட்சத்து ஆயிரத்து 924 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
    வாணரப்பேட்டையில் ஏலச்சீட்டு தகராறில் எலக்ட்ரீசியனை தாக்கிய தந்தை-மகன்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
    புதுச்சேரி:

    புதுவை வாணரப்பேட்டை பிரான்சுவா தோப்பு முதல் குறுக்கு தெருவை சேர்ந்தவர் செந்தில்(வயது36). எலக்ட்ரீசியன் வேலை செய்து வருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த ஜெயக்குமார் என்பவரது மனைவி சுரேகாவிடம் ஏல சீட்டு கட்டி வந்தார்.

    ஏலசீட்டு முடிந்த நிலையில் பணம்-கொடுக்கல் வாங்கல் சம்பந்தமாக செந்திலுக்கும் சுரேகாவுக்கும் பிரச்சினை இருந்து வந்தது.

    இந்த நிலையில் செந்தில் அப்பகுதியில் உள்ள ஒர்க்‌ஷாப்பில் தனது மோட்டார் சைக்கிளை  கொடுத்து பழுது பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சுரேகாவின் மகன் கார்த்திக் தகாத வார்த்தைகளால் செந்திலை திட்டினார். இதனை செந்தில் தட்டிக்கேட்ட போது இங்கேயே இரு இதோ வருகிறேன் என்று கூறி விட்டு சிறிது நேரத்தில் கார்த்திக் தனது தந்தை ஜெயக்குமார், தனது சகோதரர் தினேஷ்குமார் ஆகியோருடன் அங்கு வந்தார்.

    பின்னர் அவர்கள் 3 பேரும் சேர்ந்து செந்திலை சரமாரியாக தாக்கினர். வலி தாங்காமல் செந்தில் அலறவே அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்தர். உடனே இதனை பார்த்ததும் ஜெயக்குமார் மற்றும் அவரது மகன்கள் அங்கிருந்து சென்று விட்டனர்.

    இந்த தாக்குதலில் காயமடைந்த செந்தில் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். பின்னர் இதுகுறித்து ஒதியஞ்சாலை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கிருமாம்பாக்கம் அருகே பிள்ளையார்குப்பம் பிப்டிக் ரோடு பகுதியை சேர்ந்தவர் பாஸ்கரன். கட்டிட தொழிலாளி. இவர் கடந்த சில நாட்களாக நெல்லித்தோப்பு அண்ணாநகர் 4-வது குறுக்கு தெருவில் செல்வகணபதி என்பவரது வீட்டில் கட்டிட வேலை செய்து வந்தார். வாரம் முழுவதும் விடுமுறை இல்லாமல் கட்டிட வேலை செய்து வந்த பாஸ்கரனை மாலை 6 மணிக்கு பிறகும் கட்டிட வேலை செய்யுமாறு செல்வகணபதி வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

    ஆனால் பாஸ்கரன் வேலை செய்ய மறுத்து விட்டதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த செல்வகணபதி கட்டிட மேஸ்திரி கோவிந்தனை அழைத்து பாஸ்கரனை அடித்து விரட்டுமாறு கூறினார். மேலும் செல்வகணபதியும் கோவிந்தனும் சேர்ந்து பாஸ்கரனை தாக்கியதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து பாஸ்கரன் உருளையன்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ×