என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    முதலியார்பேட்டை தொகுதியில் ஓட்டல்களில் தரமான உணவு வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் சம்பத் எம்.எல்.ஏ.,விடம் அதிகாரிகள் உறுதியளித்தனர்.
    புதுச்சேரி:

    முதலியார்பேட்டை தொகுதி மக்களுக்கு பாதுகாப்பான உணவு பொருட்கள் கிடைக்க ஏதுவாக உணவு பொருட்கள் கடத்தல் தடுப்பு, உணவு பாதுகாப்பு துறை மற்றும் எடை அளவு ஆகிய துறைகளின் ஒருங்கிணைந்த ஆலோசனைக் கூட்டம் முதலியார்பேட்டை எம்.எல்.ஏ., அலுவலகத்தில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு  சம்பத் எம்.எல்.ஏ., தலைமை வகித்தார்.
    கூட்டத்தில் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு காவல் கண்காணிப்பாளர் ரக்சனாசிங், உணவு பாதுகாப்பு துறை அதிகாரி பாலகிருஷ்ணன், எடை அளவுகள் துறை ஆய்வாளர் தேவதாஸ் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    முதலியார்பேட்டை தொகுதிக்குட்பட்ட பெட்ரோல் பங்குகளில் வாடிக்கையாளர்களுக்கு விநியோகிக்கப்படும் பெட்ரோல், டீசல் அளவீட்டிலும், தரத்திலும் தவறு நடக்காமல் தடுப்பது. 
    தொகுதிக்குட்பட்ட பகுதியிலுள்ள அசைவ மற்றும் துரித உணவகங்கள், ஓட்டல்களில் பொது மக்களுக்கு தரமான உணவு வழங்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள்.
    மீன் மற்றும் இறைச்சி விற்பனை நிலையங்களில் தரமான உணவுப் பொருட்கள் வழங்கப்படுகிறதா என்பதை கண்காணிப்பது, மளிகை கடையில் விற்பனை செய்யப்படும் பொருட்களின் தரம் மற்றும் எடையின் அளவு சரியாக உள்ளதா என்பதை உறுதி செய்வது என பல கோணங்களில் விவாதிக்கப்பட்டது.

    முதலியார் பேட்டை தொகுதிக்குட்பட்ட கடைகள் மற்றும் உணவகங்கள் மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்படும் உணவுப் பொருட்கள் தரம் மற்றும் எடையை சரியாக இருக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் சம்பத் எம்.எல்.ஏ.,விடம் உறுதி அளித்தனர். இதுதொடர்பாக விரைவில் திடீர் கள ஆய்வுகள் நடத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
    கஞ்சா விற்பனையை தடுக்க போலீசார் திடீர் வாகன சோதனை நடத்தினர்.
    புதுச்சேரி:

    திருக்கனூர் பகுதியில் கஞ்சா விற்பனையை தடுக்கும் வகையில் திருக்கனூர் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், சப் இன்ஸ்பெக்டர் பாஸ்கர் மற்றும் போலீசார் நேற்று இரவு திருக்கனூர் கடை வீதியில் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். 

    இருசக்கர வாகனத்தில் வந்த சந்தேகத்துக்கிடமான நபர்கள் ஏதேனும் கஞ்சாவை மறைத்து வைத்திருக்கிறார்களா? என அவர்களிடமும், வாகனத்திலும் சோதனை மேற்கொண்டனர்.  இதனால் கடைவீதியில் பரபரப்பு ஏற்பட்டது.
    திருக்கனூரில் தக்காளி விலை குறைந்து கிலோ ரூ.70-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
    புதுச்சேரி:

    புதுவையில் கடந்த சில நாட்களாக தக்காளின் விலை உயர்ந்து வருகிறது.

    திருக்கனூர் பகுதியில் சில மாதங்களுக்கு முன்பு ஒரு கிலோ தக்காளி
    ரூ.10-க்கு  வாகனங்கள் மூலமாக கூவிக்கூவி விற்க்கப்பட்டது. 

    பின்னர் படிப்படியாக தக்காளி விலை உயரத் தொடங்கியது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு அதிகபட்சமாக தக்காளி விலை உயர்ந்து ஒரு கிலோ ரூ.100-க்கு திருக்கனூர் கடைவீதியில் விற்கப்பட்டது.

    வரலாறு காணாத விலை உயர்வால் தக்காளி வாங்க வந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.விலை உயர்வால் ஒரு கிலோ வாங்கும் பொதுமக்கள் கூட ¼ கிலோ என்ற அளவிலேயே தக்காளிப் பழங்களை வாங்கிச் சென்றனர். 

    ஓட்டல்களில் தக்காளி சட்னி வாடிக்கையாளர்களுக்கு வழங்குவது நிறுத்தப்பட்டது. அதற்கு மாற்றாக புதினா சட்னி வழங்கப்பட்டது. 

    இந்த நிலையில் நேற்று தக்காளி விலை ஓரளவிற்கு குறைந்து திருக்கனூர் கடை வீதியில் வாகனங்கள் மூலமாக கிலோ ரூ.70-க்கு விற்க்கப்பட்டது.

    மேலும் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
     தக்காளி விலை குறையத் தொடங்கி உள்ளதால் பொதுமக்கள் சற்று நிம்மதி அடைந்தனர்.
    காதலியை 2-வது திருமணம் செய்து மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த கணவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
    புதுச்சேரி:

    புதுவை வேல்ராம்பட்டு கார்கில் நகர் 2-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் பாலமுருகன். இவரது மனைவி சுமிதா (வயது30). இவர்களுக்கு 2014-ம் ஆண்டு திருமணம் நடந்து.

    திருமணத்தின் போது சுமிதாவுக்கு 35 பவுன் நகை, ரூ.4 லட்சம் மதிப்புள்ள வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் பாலமுருகனுக்கு மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை வரதட்சணையாக சுமிதாவின் குடும்பத்தினர் கொடுத்தனர்.

    திருமணம் முடிந்து சில நாட்களிலேயே பாலமுருகன் விருந்து என்ற பெயரில் நண்பர்களுடன் சேர்ந்து மது குடித்து விட்டு சுமிதாவை அடித்து உதைத்து சித்ரவதை செய்து வந்தார்.

    மேலும் சம்பாதிக்கும் பணத்தை வீட்டு செலவுக்கு கொடுக்காமல் ஊதாரிதனமாக செலவு செய்து வந்துள்ளார்.

    இதுபற்றி சுமிதா தனது மாமனார் அய்யாவு, மாமியர் ஆண்டாள் மற்றும் நாத்தனார்கள் வள்ளி, சரளா ஆகியோரிடம் முறையிட்ட போது அவர்கள் பாலமுருகனுக்கு ஆதரவாக பேசி வந்தனர். 

    மேலும் தீபாவளி சீர்வரிசையாக கார் வாங்கி வரவேண்டும் என்று அவர்கள் சுமிதாவை சொந்தரவு செய்து வந்தனர். அப்படி கார் வாங்கி வரவில்லை என்றால் பாலமுருகன் அவரது முன்னாள் காதலியான கூட்டேரிப்பட்டை சேர்ந்த தமிழ்செல்வி என்ற சந்தியாவை 2-வது திருமணம் செய்து கொள்வார் என்று சுமிதாவை மிரட்டி வந்தனர்.

    மேலும் சுமிதாவுக்கு தெரியாமல் பாலமுருகனுக்கு தமிழ்செல்வியை 2-வது திருமணம் செய்து வைத்தனர். இதுபற்றி  அறிந்த சுமிதா தனது கணவர்-மாமனார், மாமியார் மற்றும் நாத்தனார்கள் மற்றும் பாலமுருகனின் 2-வது மனைவி  சந்தியாவிடம் போனில் தட்டிக்கேட்ட போது அவர்கள் சுமிதாவை கொலை செய்து விடுவதாக மிரட்டியதாக கூறப்படுகிறது. 

    அதோடு சுமிதாவுக்கு அவரது பெற்றோர் கொடுத்த சீர்வரிசை பொருட்கள் சிலவற்றையும் கொடுக்க மறுத்து விட்டனர்.

    இதுபற்றி புதுவை அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் மற்றும் உருளையன்பேட்டை போலீஸ் நிலையத்தில் சுமிதா புகார் கொடுத்த போது அவர்கள் புகாரை ஏற்க மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. 

    இதையடுத்து சுமிதா இதுபற்றி புதுவை கோர்ட்டில் முறையிட்டார். நீதிபதி சுமிதாவின் புகாரை ஏற்று அவரது கணவர், மாமனார், மாமியார், நாத்தனார்கள் மற்றும் பாலமுருகனின் 2-வது மனைவி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டார். அதன் பேரில் புதுவை அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    பெட்ரோல் டீசல் கியாஸ் விலை குறைத்தை மத்திய பா.ஜனதா அரசின் கபட நாடகம் என காங்கிரஸ் குற்றச்சாட்டிள்ளது.
    புதுச்சேரி:

    புதுவை மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்ரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    வாக்காளர்களை ஏமாற்றும் விதமாக 5 மாநில  தேர்தலையொட்டி 5 மாதங்களாக, பெட்ரோல், டீசல் விலையை ஏற்றாமல் தற்காலிகமாக மத்திய பா.ஜனதா அரசு நிறுத்தி வைத்தது.

    தேர்தல் முடிந்ததும் தன் சுய ரூபத்தை வெளிப்படுத்தி, 16 நாட்களில் 10 தடவைகளாக ரூ.10-க்கு  மேலாக பெட்ரோல், டீசல் விலையை  ஏற்றியது. சிலிண்டர் விலையை ரூ. 1035-க்கு கொண்டு வந்து  நிறுத்தியது. குறுகிய காலத்தில் பெட்ரோல் விலையை ரூ.26.77 ஏற்றிவிட்டு தற்போது  ரூ. 14.50 மட்டுமே குறைத்து விட்டு  மார்தட்டிக் கொள்வது  மத்திய பா.ஜனதா அரசின் கபட நாடகம்.

    ஆனால் இதே நேரத்தில் பல ஆயிரம் கோடி சொத்து மதிப்பு உடைய மின் துறையின் மின் வினியோகத்தை தனியாருக்கு தாரை வார்க்க மத்திய-மாநில அரசுகள் முடிவு செய்துவிட்டது. இது புதுவை மக்களுக்கும், மின்துறையில் பணிபுரியும் பொறியாளர்கள், அதிகாரிகள் ஊழியர்களுக்கும்  செய்யும்  துரோகம். 

    ஏழைகள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் மீது வரிகளை உயர்த்தி வறுமைக்கு தள்ளிவிடுவது, அரசு மற்றும் அரசு சார்பு ஊழியர்களை தனியார் ஊழியர்ளாக மாற்றி அவர்களை கார்ப்பரேட்டுகளிடம் கீழ் பணி செய்ய வைப்பதே மத்திய பா.ஜனதா அரசின் பணியாக உள்ளது.

    இத்தகைய பா.ஜனாதாவுக்கு ஆதரவு அளிக்கும் திராவிட கட்சிகளின் நிலை பரிதாபத்துக்குரியது.

    இவ்வாறு ஏ.வி.சுப்ரமணியன் அறிக்கையில் கூறியுள்ளார்.
    பிளாஸ்டிக் பாட்டிலுக்குள் தலை சிக்கி ஒரு வாரமாக நாய் போராடியது.
    புதுச்சேரி:

    புதுவை உழவர்கரை நகராட்சிக்கு உட்பட்ட ஆலங்குப்பம் சஞ்சீவி நகரில் தெரு நாய் ஒன்று பிளாஸ்டிக் பாட்டிலில் உள்ள உணவு  உண்ணும்போது தலை மாட்டிக்கொண்டது.

    ஒரு வாரமாக  அதை வெளியே எடுக்க முடியாமல் சத்தம் போட்டு நாய் போராடி  கொண்டிருந்தது. இதை பார்த்த அப்பகுதி பொதுமக்கள்  அதை வெளியே எடுக்க முயற்சி செய்துள்ளனர். அவர்களை பார்த்ததும் அந்த நாய் ஓடி விட்டது.
     
    இதுகுறித்து புதுவை பிராணிகள் நல மற்றும்  பாதுகாப்பு இயக்கத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இயக்கத்தின் தலைவர் கால்நடை டாக்டர் செல்வமுத்து  அப்பகுதிக்கு மீட்பு  குழுவினருடன் சென்று சிறிய வலையை வீசி  நாய்க்கு  மயக்க ஊசி செலுத்தி தலையில்  மாட்டிய பிளாஸ்டிக் பாட்டிலை அகற்றினர். 

    பின்னர் நாய்க்கு முதலுதவி சிகிச்சை அளித்து காப்பகத்தில் வைத்து பராமரித்து வருகின்றனர்.  மீட்பு பணிக்கு பிராணிகள் பாதுகாப்பு இயக்கத்தைச் சேர்ந்த ராகுல், தர்மா, சதீஷ்,  அப்பகுதி ஊர் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் உதவி  புரிந்தனர். 

    புதுவையில் கால்நடைகள் பாதிக்கப்பட்டால் உடனடியாக பிராணிகள் நல மற்றும் பாதுகாப்பு இயக்கத்துக்கு தகவல் தெரிவிக்கலாம் என கால்நடை மருத்துவர் செல்வமுத்து தெரிவித்தார்.
    வங்கி அதிகாரி பேசுவது போல் நடித்து ஆசிரம ஊழியரிடம் பணம் மோசடி செய்த சம்பவம் குறித்து சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    புதுச்சேரி:

     புதுவை சஞ்சீவ் நகர் சினிமா தியேட்டா தெருவை சேர்ந்தவர் கோபால் காத்ரி. அரவிந்தர் ஆசிரம ஊழியர்.இவருக்கு ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் கணக்கு உள்ளது. இந்த வங்கியிலிருந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு கடன் அட்டை வந்தது.இந்தநிலையில் சமீபத்தில் அவரது செல்போனுக்கு அழைப்பு ஒன்று வந்தது. அதில் பேசிய பெண் தான் வங்கியிலிருந்து அதிகாரி பேசுவதாக கூறினார். மேலும் உங்களுடைய கடன் அட்டையில் ஒரு தனியார் நிறுவனத்தின் மூலம் மருத்துவ காப்பீடு தானாகவே செயல்படுத்தப்பட்டுள்ளது என கூறினார்.

    சில நேரங்களில் தவறுதலாக மருத்துவ காப்பீடு தனாகவே செயல்படுத்தப்பட்டுவிடும் அதனை ரத்து செய்து விடுவதாக தெரிவித்தார். மேலும் உங்களுடைய செல்போனுக்கு அனுப்பியுள்ள ரகசசிய குறியீட்டு எண்ணை தெரிவிக்கும்படி கூறினார்.  இதனை உண்மையென நம்பிய கோபால் காத்ரி  ரகசிய குறியீட்டு எண்ணை அந்த பெண்ணிடம் தெரிவித்தார்.பின்னர் பேசிய அந்த பெண் மருத்துவ காப்பீட்டை ரத்து செய்து விட்டதாக தெரிவித்தார்.

    இந்தநிலையில் கடைசி மாதத்திற்கான கடன் அட்டையின்  அறிக்கை அவருக்கு வந்தது. அதை கோபால் காத்ரி ஆய்வு செய்த போது அதில் தனியார் நிறுவனத்தின் மருத்துவ காப்பீட்டுக்கு ரூ.29 ஆயிரம் எடுக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதனை கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார்.

    பின்னர் இதுகுறித்து கோபால் காத்ரி சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மனோஜ் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் சந்தோஷ் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வங்கி அதிகாரி  பேசுவதாக கூறி ஆசிரம ஊழியரிடம் பணம் பறித்த சம்பவம் புதுவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    காங்கிரஸ் ஆட்சியை குறைகூறுவதை நிறுத்திவிட்டு அரசை செயல்பட கவனம் செலுத்துங்கள் என்று வைத்திலிங்கம் எம்.பி. அறிவுரை கூறியுள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவைகாங்கிரஸ் எம்.பி. வைத்திலிங்கம் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஸ்மார்ட் சிட்டி திட்டம் குறித்து ஓராண்டுக்கு பிறகு புதுவை அரசு ஆலோசனை கூட்டத்தை நடத்தியுள்ளது. நான் கேட்டுக் கொண்ட பிறகே  இந்த கூட்டத்தை நடத்தியுள்ளனர். பாராளுமன்றத்திலேயே ஸ்மார்ட் சிட்டி தொடர்பாக எம்.பி.க்களையும் அழைத்தே கூட்டம் நடத்த  வேண்டும், தகவல் தெரிவிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. 

    ஆனால் புதுவையில் நடந்த கூட்டத்தில் 2 
    எம்.பி.க்களையும்  அழைக்கவில்லை. இதுகுறித்து பாராளுமன்றத்தில் நான் புகார் செய்ய உள்ளேன். கூட்டத்தில் பேசிய முதல்-அமைச்சர், கடந்த ஆட்சியில் செய்த  காலதாமதத்தால் திட்டங்கள் செயல்படுத்தவில்லை என கூறியுள்ளார். 

    முதலில் ஸ்மார்ட் திட்டத்தை எங்கே அமல்படுத்துவது? என்பதில்  குழப்பம் ஏற்படுத்தியதே தற்போதைய முதல்-அமைச்சர்தான். உழவர்கரை நகராட்சியிலா? சேதராப்பட்டிலா? என அவருக்கு குழப்பம் 
    இருந்தது. காங்கிரஸ் அரசு அமைந்த பிறகுதான் தெளிவான முடிவெடுத்து ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை பெற்றோம். 

    அதேபோல வீடுகட்டும்  அளவை அதிகப்படுத்த வேண்டும் என கூறியுள்ளார். வீடு கட்டும் அளவை முடிவு செய்தது யார்? குறைந்த சதுர அடியில் வீடு கட்டி  அதிகமானவர்களுக்கு கொடுக்க வேண்டும்? என முடிவு செய்தது யார்? அவருக்கு அருகாமையில் இருந்த 2 அமைச்சர்களிடம் கேட்டறிந்தால் தெரிந்தி ருக்கும். 

    ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஒரு ஆண்டுக்கு மத்திய அரசு ரூ.100 கோடி, மாநில அரசு ரூ.100 கோடி என 5 ஆண்டுகளில்  ரூ.ஆயிரம் கோடி செலவிட வேண்டும். எங்கள் ஆட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கு ரூ.60 கோடி நிதி ஒதுக்கியிருந்தோம். மத்திய அரசின்  ரூ.100 கோடியுடன் மொத்தம் ரூ.160 கோடி நிதி இருந்தது. 

    இந்த அரசு அமைந்து ஓராண்டாகியும் நிதி ஒதுக்க வில்லை. ரூ.160 கோடியிலும்  ரூ.41 கோடிக்கு மட்டுமே வரைவு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்கு அங்கு பணியாளர்கள் இல்லாததும் ஒரு குறையாகும். 

    பிரதமரின்  கிராமப்புற இணைப்பு சாலை திட்டத்துக்கு மத்திய அரசு நிதி தருகிறது. இதில் புதுவையில் 50 கிமீ.,க்கு சாலை பணிகள் நடைபெற  வேண்டும். இதில் கால்வாசி பணிகள் கூட நடக்கவில்லை. காரைக்காலில் இத்திட்டத்தையே தொடங்க வில்லை. 

    ஆனால் நிதியில்லை என  முதல்-அமைச்சர் தெரிவிக்கிறார். மத்திய அரசிடம் கிடைக்கக்கூடிய நிதியை பெறக்கூட இந்த அரசு தயாராக இல்லை. இனி கடந்த கால அரசை  குறைசொல்வதை நிறுத்திவிட்டு, உங்கள் அரசு என்ன செய்யப்போகிறது? என கவனம் செலுத்துங்கள். 

    செயல்படாமல் உள்ள அரசை ெசயல்படுத்துங்கள். எங்கள் ஆட்சியில் தற்போதுள்ள உள்துறை மந்திரிதான் பவர்புல்லாக இருந்தார். அவரிடம்தான் அனைத்து துறையும்  இருந்தது. எனவே கடந்த ஆட்சியில் திட்டங்களை செயல்படுத்தாதது யார்? என மக்களுக்கு தெரியும். 

    இவ்வாறு அவர் கூறினார்.
    ராஜீவ்காந்தி சிலை சதுக்கம் அருகே மின்சார டிரான்ஸ்பார்மரில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது.
    புதுச்சேரி:

    மேட்டுப்பாளையம் போலீஸ் நிலையம் அருகே செல்போன் டவர் உள்ளது.  நள்ளிரவு 1 மணியளவில் ஒரு வாலிபர் அந்த செல்போன் டவரில் ஏறி நின்றார். இதனை அவ்வழியாக சென்றவர்கள் பார்த்து மேட்டுப்பாளையம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் தீயணைப்பு படையினருக்கும், ஆம்புலன்சுக்கும் தகவல் தெரிவித்து வரவழைத்தனர்.

    பின்னர் அந்த வாலிபரை செல்போன் டவரில் இருந்து பாதுகாப்பாக இறக்கி சிகிச்சைக்காக கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். சிகிச்சை அளித்துக்கொண்டிருந்த போதே அந்த வாலிபர் ஆஸ்பத்திரியில் இருந்து தப்பியோடி விட்டார்.

    இந்த நிலையில் அதே வாலிபர் 11 மணியளவில் ராஜீவ்காந்தி சிலை அருகே உள்ள மின்சார டிரான்ஸ்பார்மர் வைக்கப்பட்டிருந்த சிமெண்ட் கட்டையில் ஏறி தற்கொலை செய்து கொள்ளப்போவதாக மிரட்டல் விடுத்தார். இதனை அவ்வழியாக வந்தவர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

    உடனே அங்கு போக்குவரத்து சீரமைப்பு பணியில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து போலீசார் இதுபற்றி கோரிமேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் மின்துறை அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்து மின் இணைப்பை துண்டிக்க செய்தனர்.

    பின்னர்  அந்த வாலிபரை போலீசார்  கீழே இறங்கும்படி அறிவுறுத்தினர். ஆனால் அந்த வாலிபர் கீேழ இறங்க மறுத்து  அங்கேயே நின்றுகொண்டிருந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    பின்னர் போலீசார் ஒரு மணி நேரம் போராடி அந்த வாலிபரை  பத்திரமாக மீட்டனர்.  விசாரணையில் அவர் புதுவை தமிழக பகுதியான பெரியமுதலியார் சாவடியை சேர்ந்த அய்யப்பன் (வயது26) என்பதும், திருமணமாகாத இவர் மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

    கடந்த 3 நாட்களுக்கு முன்பு புதுவை ரெயில் நிலையத்தில் மின் கம்பத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட   முதியவர்  ஒருவர் ஏறி அமர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
    புதுவையில் சுற்றுலாவை மேம்படுத்த மத்திய அரசு உதவ வேண்டும் என்று சபாநாயகர் ஏம்பலம் செல்வம் மத்திய சுற்றுலாத்துறை மந்திரியிடம் வலியுறுத்தினார்.
    புதுச்சேரி:

    புதுவை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் டெல்லி சென்றுள்ளார். அவர் இன்று மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை மந்திரி கிஷன்ரெட்டியை சந்தித்து பேசினார்.

    அப்போது புதுவை மாநில சுற்றுலாத்துறை வளர்ச்சிக்கு மத்திய அரசு செயல்படுத்தி வரும் திட்டங்கள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர்.

    இதனை தொடர்ந்து சுற்றுலாவை மேம்படுத்த மத்திய அரசு உதவ வேண்டும் என்று சபாநாயகர் ஏம்பலம் செல்வம் மத்திய மந்திரி கிஷன்ரெட்டியிடம் கோரிக்கை விடுத்தார்.

    மேலும் மணவெளி தொகுதிக்குட்பட்ட சின்னவீராம்பட்டினம் கடற்கரை பகுதி நீலக்கொடி சான்றிதழ் பெற்றுள்ளதால் இதுதொடர்பான நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும் என்று மத்திய மந்திரியிடம் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் வேண்டுகோள் விடுத்தார்.

    இந்த சந்திப்பின் போது கொல்லப்பள்ளி சீனிவாஸ் அசோக் எம்.எல்.ஏ., புதுவை மாநில பா.ஜனதா துணைத்தலைவர் அருள்முருகன், மாநில பொருளாதார பிரிவு  அமைப்பாளர் ரமேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.
    சாராயக்கடையில் ஏற்பட்ட தகராறில் டிரைவருக்கு பீர் பாட்டில் குத்து விழுந்தது.
    புதுச்சேரி, மே.24-

    காட்டேரிக்குப்பம் அருகே குமாரபாளையம் விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் வைத்தீஸ்வரன் (வயது46). கூலி தொழிலாளி. மது குடிக்கும் பழக்கமுள்ள இவர் தினமும் குமாரபாளையம் சாராயக்கடைக்கு சென்று சாராயம் குடிப்பது வழக்கம்.

    அதுபோல்சா ராயக்கடைக்கு வைத்தீஸ்வரன் சென்றார். அப்போது ஏற்கனவே அங்கு சாராயம் குடித்துக்கொண்டிருந்த பிள்ளையார்குப்பத்தை சேர்ந்த மஞ்சினி என்பவர் வைத்தீஸ்வரனை அழைத்து இருவரும் ஒன்றாக சாராயம் குடிக்கலாம் என்றார். ஆனால் வைத்தீஸ்வரன் இதனை ஏற்கவில்லை. எப்போதும் போல் நான் தனியாகவே குடித்து கொள்கிறேன் என்று கூறினார்.

    பின்னர் வைத்தீஸ்வரன் சாராயம் குடித்துக் கொண்டிருந்த போது அவரிடம் மஞ்சினி தொடர்ந்து வீண் தகராறு செய்தார்.  தகாத வார்த்தைகளால் திட்டிய மஞ்சினி என்னோடு சாராயம் குடிக்க மாட்டாயா என கூறியபடி வைத்தீஸ்வரனை கன்னத்தில் அறைந்து கீழே பிடித்து தள்ளினார்.

    இதையடுத்து வீண் தகராறு செய்வதை அறிந்த வைத்தீஸ்வரன் அங்கிருந்து வீட்டுக்கு செல்ல எண்ணி நடந்து வந்து கொண்டிருந்தார். ஆனால் பின்தொடர்ந்து வந்த மஞ்சினி திடீரென வைத்தீஸ்வரனை வழிமறித்து என்னிடமே பகைத்துக் கொள்கிறாயா என கூறியப்படி மறைத்து வைத்திருந்த பீர் பாட்டிலை எடுத்து வைத்தீஸ்வரனின் முகத்தில் குத்தினார். மீண்டும் குத்த முயன்ற போது அதனை வைத்தீஸ்வரன் கையால் தடுத்தார்.

    உடனே வைத்தீஸ்வரன் அலறல் சத்தம் போடவே அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்ததால் மஞ்சினி அங்கிருந்து தப்பியோடி விட்டார்.

    இந்த தாக்குதலில் ரத்தகாயமடைந்த வைத்தீஸ்வரன் சிகிச்சைக்காக ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று பின்னர் இதுகுறித்து வைத்தீஸ்வரன் காட்டேரிக்குப்பம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மஞ்சினியை தேடி வருகிறார்கள்.
    நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்து கொண்டு வரப்பட்ட 60 வகையான பழம், மூலிகை, காய்கறி என 50 ஆயிரம் செடிகள் நடப்பட்டுள்ளன.

    புதுச்சேரி:

    புதுவை காலாப்பட்டில் மத்திய சிறைச்சாலை உள்ளது.

    இங்கு விசாரணை, தண்டனை கைதிகள் 200-க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர். கைதிகளின் மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்த சிறைத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    கைதிகளுக்கு யோகா, தியான வகுப்புகள் நடைபெறுகிறது. ஓவியம், சிற்பம் உட்பட நுண்கலை பயிற்சியும் கற்பிக்கப்படுகிறது. உடல் நலனை பாதுகாக்க பயிற்சியாளர்கள் மூலம் விளையாட்டு பயிற்சியும், நடன பயிற்சியும் அளிக்கப்படுகிறது.

    சிறைச்சாலை வளாகம் அமைந்துள்ள 36 ஏக்கரில் 3 ஏக்கர் கைதிகளால் சமன்படுத்தப்பட்டு துல்லிய பண்ணை மற்றும் இயற்கை விவசாய பண்ணை அமைக்கப்பட்டுள்ளது.

    நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்து கொண்டு வரப்பட்ட 60 வகையான பழம், மூலிகை, காய்கறி என 50 ஆயிரம் செடிகள் நடப்பட்டுள்ளன.

    இதுமட்டுமன்றி உரம், பூச்சி கொல்லிகள் தயாரிக்க சிறை வளாகத்தில் மாடு, ஆடு மற்றும் முயல் வளர்க்கப்படுகிறது. இவற்றையும் கைதிகளே பராமரிக்கின்றனர். கைதிகள் பயிரிட்ட செடிகளில் பூக்கள் பூத்தும், காய்கறிகள் விளைந்தும் உள்ளது.

    கத்திரிக்காய், மாங்காய், எலுமிச்சை, பப்பாளி, கீரைகள், முள்ளங்கி,பலா, வெண்டை ஆகியவற்றோடு மஞ்சள் சாமந்தி பூக்களும் சமீபத்தில் அறுவடை செய்யப்பட்டது.

    கவர்னர் தமிழிசை இன்று காலாப்பட்டு மத்திய சிறைச்சாலைக்கு சென்று ஒருங்கிணைந்த பண்ணையை பார்வையிட்டார். சிறைத்துறை ஐ.ஜி. ரவிதீப் சிங் சாகர் வரவேற்றார். கைதிகளின் மன அழுத்தத்தை போக்கவும், அவர்களை நல்வழிப்படுத்தவும் சிறைத்துறை நிர்வாகம் மேற்கொண்டு வரும் பல்வேறு நடவடிக்கைகளை கவர்னர் பாராட்டினார்.

    சிறை கைதிகள், பாரம்பரிய முறையில் இயற்கை உரத்தை பயன்படுத்தி காய்கறிகள், பழங்கள், பயிர் வகைகள் சாகுபடி செய்திருப்பதையும் வெகுவாக பாராட்டினார். அவர்களின் முயற்சிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.

    தொடர்ந்து சிறை வளாகத்தில் மரக்கன்றுகளை கவர்னர் தமிழிசை நட்டார். அங்குள்ள கைதிகளிடம், சிறையில் உள்ள வசதிககள் குறித்து கேட்டறிந்தார்.

    இதைத்தொடர்ந்து கவர்னர் தமிழிசை நிருபர்களிடம் கூறியதாவது:-

    சிறை வளாகத்தில் கைதிகளால் விளைவிக்கப்பட்ட காய்கறிகள், பழங்கள் மற்றும் மூலிகை செடிகளை பார்க்கும் போது உற்சாகமாக உள்ளது. சிறை கைதிகள் விளைவித்த விவசாய பொருட்களை விற்பனை செய்ய உழவர் சந்தையில் இடம் ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    தண்டனை காலம் முடிந்த கைதிகளை விடுதலை செய்வது சம்பந்தமாக மனிதாபிமானம் மற்றும் சட்டரீதியாக அனுகப்படும். காரைக்கால் சிறை முழுவதுமாக கட்டி முடிக்க 2 ஆண்டாகும். அதுவரை அங்குள்ள கைதிகள் புதுவை சிறையில் பாதுகாப்பாக இருப்பார்கள்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ×