என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • பாகூரில் நேற்று இரவு திடீரென்று சூறாவளி காற்றுடன் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.
    • இதில் பாகூர் பகுதியில் பல இடங்களில் தாழ்வானப் பகுதியில் தண்ணீர் தேங்கியது

    புதுச்சேரி:

    பாகூரில் நேற்று இரவு திடீரென்று சூறாவளி காற்றுடன் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதில் பாகூர் பகுதியில் பல இடங்களில் தாழ்வானப் பகுதியில் தண்ணீர் தேங்கியது. பாகூரை அடுத்துள்ள ஆதிங்கபட்டு சத்யா நகரை சேர்ந்த முத்தரசு (54) என்பவர் வீட்டில் எதிரே இருந்த தென்னை மரம் மின் கம்பியை அறுத்துக்கொண்டு அவரது வீட்டின் மீது விழுந்தது.

    இதனால் அவரது குடும்பத்தினர் அலறி அடித்துக்கொண்டு வெளியே ஓடி வந்தனர். அப்போது மின்கம்பி அருந்து வீட்டின் மீது விழுந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் முத்தரசு மற்றும் அவரது குடும்பத்தினர் உயிர் தப்பினர்.தொடர்ந்து அப்பகுதியில் மின்சாரம் வழங்கப்படாததால் அப்பகுதி மக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

    • பயங்கர சத்தத்துடன் நாட்டு வெடிகுண்டுகள் வெடித்து சிதறியதால் அந்த பகுதியே அதிர்ந்தது.
    • பன்னீர்செல்வம் கொலை செய்யப்பட்ட தகவல் அறிந்து ஜிப்மர் ஆஸ்பத்திரி முன் அவரது ஆதரவாளர்கள் திரண்டதால் பரபரப்பு.

    புதுச்சேரி:

    புதுவை மேட்டுப்பாளையம் சண்முகாபுரம் வடக்குபாரதிபுரத்தை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (வயது 24). பிரபல ரவுடியான இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

    இந்தநிலையில் நேற்று இரவு நண்பர் சக்தி (20) என்பவருடன் தனது வீட்டில் பன்னீர்செல்வம் மது குடித்துக்கொண்டிருந்ததாக தெரிகிறது. இரவு 10.15 மணி அளவில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்துகொண்டு இருந்தபோது மோட்டார் சைக்கிள்களில் திடீரென்று ஒரு கும்பல் வந்து இறங்கியது.

    திமுதிமுவென்று அந்த கும்பலை சேர்ந்தவர்கள் பன்னீர்செல்வம் வீட்டுக்குள் புகுந்தனர்.

    அவர்களை பார்த்ததும் பன்னீர்செல்வமும், சக்தியும் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர். ஆனால் அதற்கு வாய்ப்பு இல்லாத வகையில் கண்ணிமைக்கும் நேரத்தில் அடுத்தடுத்து 2 நாட்டு வெடிகுண்டுகளை அந்த கும்பல் வீசியது.

    பயங்கர சத்தத்துடன் நாட்டு வெடிகுண்டுகள் வெடித்து சிதறியதால் அந்த பகுதியே அதிர்ந்தது.

    வெடிகுண்டுகள் வெடித்த வீட்டிலும், அந்த பகுதியிலும் புகை மண்டலமானது. இதை பயன்படுத்தி தப்பி ஓட விடாமல் பன்னீர்செல்வம், அவரது கூட்டாளி சக்தி ஆகியோரை அந்த கும்பல் அரிவாள், கத்தி போன்ற ஆயுதங்களால் சரமாரியாக வெட்டித் தள்ளியது.

    இதில் அவர்கள் குற்றுயிரும் குலையுயிருமாக ரத்த வெள்ளத்தில் கிடந்தனர். இதன்பின் அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது.

    அதன்பின் பன்னீர்செல்வம், சக்தி ஆகியோரை உயிருக்கு ஆபத்தான நிலையில் அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு இருவருக்கும் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி பன்னீர்செல்வம் பரிதாபமாக இறந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் சக்திக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த பயங்கர சம்பவம் குறித்து தகவல் அறிந்து போலீஸ் சூப்பிரண்டு பக்தவச்சலம் தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பாலமுருகன், ஜெய்சங்கர் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பன்னீர்செல்வம் மீது பல்வேறு வழக்குகள் உள்ள நிலையில் அதனால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக பழிக்குப்பழி வாங்கும் வகையில் இந்த கொலை நடந்ததா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    இதற்கிடையே பன்னீர்செல்வம் கொலை செய்யப்பட்ட தகவல் அறிந்து ஜிப்மர் ஆஸ்பத்திரி முன் அவரது ஆதரவாளர்கள் திரண்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    கொட்டும் மழையை பயன்படுத்தி வெடிகுண்டு வீசி அரிவாளால் வெட்டி பன்னீர்செல்வத்கதை கொலை செய்த கும்பல் குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள்.

    இந்த பயங்கர கொலை சம்பவம் சண்முகாபுரம் பகுதியில் பரபரப்பையும், பதட்டத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

    • வெங்கட்டா நகரில் உள்ள தனியார் மகாலில் நடந்த முகாமை மாநிலத் தலைவர் சாமிநாதன் தொடங்கி வைத்தார்.
    • பா.ஜனதா மகளிர் அணி மாநில தலைவி ஜெயலட்சுமி தலைமை தாங்கினார்.

    புதுச்சேரி:

    பா.ஜனதா மகளிர் அணியினருக்கான பயிற்சி முகாம் 3 நாள் நடந்தது. வெங்கட்டா நகரில் உள்ள தனியார் மகாலில் நடந்த முகாமை மாநிலத் தலைவர் சாமிநாதன் தொடங்கி வைத்தார்.

    பா.ஜனதா மகளிர் அணி மாநில தலைவி ஜெயலட்சுமி தலைமை தாங்கினார். சமூக வலைதளங்களை பயன்படுத்தும் முறை, பெண்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை சட்ட ரீதியாக எதிர்கொள்வது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும், முகாமில் யோகா பயிற்சி அளிக்கப்பட்டது. புதுவை பா.ஜனதா பொதுச்செயலாளர் மோகன் குமார், மகளிர் அணி பொறுப்பாளர் ராமலிங்கம் எம்.எல்.ஏ., பயிற்சியாளர்கள் பிரிவு இணை அமைப்பாளர் சக்திவேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    தேசிய மகளிர் அணி செயலாளர்கள் பத்மஜா மேனன், ஜஸ்வர்யா விஷ்வாஷ், தேசிய மகளிர் அணி சமூக வலைதள பொறுப்பாளர் சுஜாதா பட்டேல், சட்ட ஆலோசகர்மேரி அன்னா தயாவதி, தமிழ்நாடு பா.ஜனதா செயலாளர் சூரியா உள்ளிட்டோர் பயிற்சி அளித்தனர். முகாம் பொறுப்பாளராக மாநில துணைத் தலைவி மாநில துணைத் தலைவி கீதா, இணை பொறுப்பாளராக அமுதா ராணி ஆகியோர் செயல்பட்டனர்.

    தேசிய ஜனநாயக கூட்டணி ஜனாதிபதி வேட்பாளர் திரவுபதி முர்மு வெற்றி பெற்றதை முன்னிட்டு இந்திரா காந்தி சிலை அருகே வெற்றி கொண்டாட்டம் நடைபெற்றது. இதையொட்டி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. இதில் மாநில தலைவர் சாமிநாதன், மாநில பொது செயலாளர் மோகன் குமார், அசோக் பாபு எம்.எல்.ஏ. துணைத் தலைவர் தங்க விக்ரமன், மாநில செயலாளர்கள் அகிலன், லதா, ஜெயந்தி, உழவர்கரை மாவட்ட தலைவர், நாகேஷ்வரன், மாநில பட்டியல் அணி தலைவர், தமிழ்மாறன், விவசாய அணி தலைவர் புகழேந்தி, இளைஞர் அணி தலைவர் கோவேந்தன் கோபதி, மாநில கூட்டுறவு பிரிவு அமைப்பாளர் வெற்றி செல்வம் என பலர் கலந்து கொண்டனர்.

    • ராமநாதன் அருகில் உள்ள தென்னந்தோப்புக்கு சென்றார்
    • அப்போது அங்கு கூடுகட்டியிருந்த விஷகுளவிகள் பறந்து வந்து ராமநாதனின் தலை, முகத்தில் கொட்டியது

    புதுச்சேரி:

    சேதராப்பட்டில் விஷ குளவி கொட்டியதில் முதியவர் பலியானார். புதுவை சேதராப்பட்டு புதுத்தெருவை சேர்ந்தவர் ராமநாதன் (வயது67). இவருக்கு தனலட்சுமி என்ற மனைவியும் 2 மகள்களும் உள்ளனர். 2 மகள்களுக்கும் திருமணமாகிவிட்டது. இந்த நிலையில் ராமநாதன் அருகில் உள்ள தென்னந்தோப்புக்கு சென்றார். அப்போது அங்கு கூடுகட்டியிருந்த விஷகுளவிகள் பறந்து வந்து ராமநாதனின் தலை, முகத்தில் கொட்டியது. இதனால் வலிதாங்க முடியாமல் அலறியடித்துக் கொண்டு ராமநாதன் வீட்டுக்கு விரைந்து வந்தார்.

    அங்கு தனது உறவினர்களிடம் நடந்த சம்பவத்தை கூறினார். இதையடுத்து அவரை உறவினர்கள் அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்று முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கதிர்காமம் மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் ராமநாதன் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ராமநாதன் பரிதாபமாக இறந்து போனார். இது குறித்து அவரது சகோதரர் பஞ்சநாதன் கொடுத்த புகாரின் பேரில் சேதராப்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மளிகை கடை பூட்டை உடைத்து ரூ.1½ லட்சம் ரொக்க பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுவிட்டனர்.
    • மார்க்கெட்டில் பொருட்கள் கடன் வாங்கியதற்கு கொடுப்பதற்காக ரூ.1½ லட்சத்தை மளிகை கடையில் வைத்து பூட்டி விட்டு சக்தி வேல் வீட்டுக்கு சென்றார்.

    புதுச்சேரி:

    திலாசு பேட்டையில் மளிகை கடை பூட்டை உடைத்து ரூ.1½ லட்சம் ரொக்க பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுவிட்டனர். புதுவை கதிர்காமம் ஆனந்தா நகர் கல்யாண சுந்தரம் வீதியை சேர்ந்தவர் சக்தி வேல். இவர் புதுவை திலாசுபேட்டை வழுதாவூர் சாலையில் மளிகை கடை நடத்திவந்தார்.

    இரவு வியாபாரம் முடிந்து காலையில் மார்க்கெட்டில் பொருட்கள் கடன் வாங்கியதற்கு கொடுப்பதற்காக ரூ.1½ லட்சத்தை மளிகை கடையில் வைத்து பூட்டி விட்டு சக்தி வேல் வீட்டுக்கு சென்றார்.  வழக்கம் போல் சக்தி வேல் மளிகை கடையை திறக்க வந்தார். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    பின்னர் உள்ளே சென்று பார்த்த போது கல்லா பெட்டியில் வைத்திருந்த ரூ. 1½ லட்சம் ரொக்க பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. மர்ம நபர்கள் நள்ளிரவில் கடையின் பூட்டை உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்றி ருப்பது தெரியவந்தது.

    கொள்ளையர்கள் மளிகை கடையில் பொருத்தப்பட்டு இருந்த சி.சி.டி.வி. கேமராவை வேறு திசையில் திருப்பி வைத்து விட்டு கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் கொள்ளையடித்து கொண்டு திரும்பிச் செல்லும் போது சி.சி.டி.வி. கேமராவின் ஹார்ட் டிஸ்க் மற்றும் டி.வி.ஆர்.யையும் திருடிச் சென்றுள்ளனர். இது குறித்து சக்தி வேல் கோரிமேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

    மேலும் தடயவியல் நிபுணர்களை வரவழைத்து தடயங்களை பதிவு செய்தனர். தொடர்ந்து அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்து மளிகை கடையின் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். கொள்ளை நடந்த மளிகைகடை பகுதி எப்போதும் மக்கள் நடமாட்டம் உள்ளதாகும். அப்படி இருக்கும் போது மர்ம நபர்கள் துணிகரமாக கடையின் பூட்டை உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • புதுவையில் 2 ஆயிரத்து 952 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.
    • இதில் புதுவையில் 180, காரைக்காலில் 38, ஏனாமில் 13, மாகியில் ஒருவர் என புதிதாக 232 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுவையில் 2 ஆயிரத்து 952 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் புதுவையில் 180, காரைக்காலில் 38, ஏனாமில் 13, மாகியில் ஒருவர் என புதிதாக 232 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. புதுவையில் 25, காரைக்காலில் 3, ஏனாமில் 2 பேர் என 30 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். புதுவையில் ஆயிரத்து 34, காரைக்காலில் 171, ஏனாமில் 25, மாகியில் 2 பேர் என ஆயிரத்து 232 பேர் தொற்றுடன் வீட்டு தனிமையில் உள்ளனர்.

    புதுவையில் 207, காரைக்காலில் 89, ஏனாம், மாகியில் தலா ஒருவர் என 248 பேர் சிகிச்சையில் குணமடைந்தனர். மாநிலத்தில் கொரோனா வுக்கு பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்து 963 ஆக உள்ளது. புதுவையில் 2-வது தவணை, பூஸ்டர் டோஸ் உட்பட 17 லட்சத்து 71 ஆயிரத்து 236 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். இந்த தகவலை சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • புதுவை மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் இந்திரா காந்தி சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலை, 100 அடி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    புதுச்சேரி:

    நேஷனல் ஹெரால்டு வழக்கில் கடந்த மாதம் ராகுல்காந்தி எம்.பி.யிடம் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தினர்.

    அகில இந்திய காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியிடம் இன்று அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. இதை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    புதுவை மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் இந்திரா காந்தி சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் தலைமை வகித்தார். முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, எம்.எல்.ஏ.க்கள் வைத்தியநாதன், ரமேஷ்பரம்பத், முன்னாள் அமைச்சர்கள் ஷாஜகான், கந்தசாமி, சீனியர் துணைத்தலைவர் தேவதாஸ், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் அனந்தராமன், நீலகங்காதரன், கார்த்திகேயன், பாலன், நிர்வாகிகள் சங்கர், தனுசு, ஆர்.இ.சேகர், ரகுமான், மு.ப.சரவணன் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றனர்.

    போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பொய் வழக்கு போடாதே, பொய் வழக்கு போடாதே, சோனியாகாந்தி, ராகுல்காந்தி மீது பொய் வழக்கு போடாதே, வாபஸ் வாங்கு, வாபஸ் வாங்கு பொய் வழக்கை வாபஸ் வாங்கு, ரத்து செய், ரத்து செய் பொய் வழக்கை ரத்து செய் என கோஷம் எழுப்பினர்.

    ஒரு கட்டத்தில் இந்திராகாந்தி சிலையை சுற்றிலும் தரையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

    இதனால் விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலை, 100 அடி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர். நூற்றுக்கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டனர்.

    • புதுவை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் அரசு பள்ளியை ஊக்குவிக்கும் விதமாக பார்வையிட்டு வருகிறார்.
    • அங்கும் மாணவர்கள் சார்பாக பல்வேறு வரவேற்புகள் மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகளும் நடத்திக் காட்டினார்.

    புதுச்சேரி:

    75-வது சுதந்திர தின விழா கொண்டாட்டத்தை யொட்டி புதுவை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் அரசு பள்ளியை ஊக்குவிக்கும் விதமாக பார்வையிட்டு வருகிறார்.

    அதன்படி ஏம்பலம் தொகுதி கிருமாம்பாக்கம் அரசு தொடக்கப் பள்ளியை பார்வையிட சென்றார். கவர்னருக்கு தொகுதி எம்.எல்.ஏ. லட்சுமி காந்தன் சால்வை அணிவித்து வரவேற்றார். தொடர்ந்து அப்பள்ளி மாணவ மாணவிகள் பல்வேறு அலங்காரத்தில் நடன நிகழ்ச்சி நடத்தி பாரம்பரிய கலையை ஊக்குவிக்கும் விதமாக கவர்னரை வரவேற்றனர்.

    மேலும் மாணவர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்தினர். தொடர்ந்து கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பள்ளி சிறுவர்களுடன் கலந்துரை யாடலில் ஈடுபட்டார். பள்ளியில் நடந்த உறியடி நிகழ்ச்சியில் பங்கேற்றார்‌. மாணவர்க ளின் வரவேற்பிலும், கலை நிகழ்ச்சிகளும் கவர்னர் உற்சாகமடைந்தார்.

    தொடர்ந்து அம்பேத்கர் அரசு மேல்நிலைப்பள்ளி, நரம்பை, பிள்ளை யார்குப்பம் அரசு தொடக்கப்பள்ளி மற்றும் மணப்பட்டு அரசு நடுநிலைப் பள்ளியையும் பார்வையிட்டார். அங்கும் மாணவர்கள் சார்பாக பல்வேறு வரவேற்புகள் மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகளும் நடத்திக் காட்டினார். தொடர்ந்து அப்பள்ளி யிலும் மாணவர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    விடுபட்ட மாணவர்களுக்கு பாடப் புத்தகங்களை விரைந்து கொடுக்கவும், சீருடை வழங்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளேன். மாணவர் சிறப்பு பேருந்தை விரைவில் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர் அங்கு இருந்த ரொட்டி பால் வழங்கும் ஊழியர்கள் தங்களுக்கு சம்பளம் உயர்த்தி தருவதாக அரசு தெரிவித்தது. ஆனால் இதுவரை வழங்கப்பட வில்லை உடனடியாக வழங்க ஆணையிடுமாறு கவர்னரிடம் கேட்டுக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் செந்தில்குமார் எம்.எல்.ஏ., பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர் சிவகாமி மற்றும் தலைமை ஆசிரியர்கள், பள்ளி துணை முதல்வர்கள் கலந்து கொண்டனர்.

    • ரூ. 28 லட்சம் செலவில் தார் சாலை, இருளஞ்சந்தை பேட் சுடுகாட்டு சாலை ரூ. 7 லட்சம் செலவில் தார்சாலை அமைக்கப்பட உள்ளது.
    • செந்தில்குமார்எம்.எல்.ஏ. பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார்.

    புதுச்சேரி:

    புதுவை ஆதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் பாட்கோ மூலமாக பாகூர் வார்க்கால் ஓடை கிராமத்தில் ரூ. 28 லட்சம் செலவில் தார் சாலை, இருளஞ்சந்தை பேட் சுடுகாட்டு சாலை ரூ. 7 லட்சம் செலவில் தார்சாலை அமைக்கப்பட உள்ளது.

    செந்தில்குமார்எம்.எல்.ஏ. பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், மேம்பாட்டு கழக மேலாண் இயக்குனர் தயாளன், உதவி பொறியாளர் பக்தவச்சலம், இளநிலை பொறியாளர் முகுந்தன் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.

    • பயிற்சி டாக்டர் அறைக்குள் புகுந்து ரூ.1லட்சம் மதிப்புள்ள பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர்.
    • அங்குள்ள விடுதியில் தங்கி தினமும் கல்லூரிக்கு சென்று வந்தார்.

    புதுச்சேரி:

    ஜிப்மர் குடியிருப்பில் பயிற்சி டாக்டர் அறைக்குள் புகுந்து ரூ.1லட்சம் மதிப்புள்ள பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர். ஜிப்மர் மருத்துவ கல்லூரி யில் எம்.பி.பி.எஸ். 3-ம் ஆண்டு படித்து கொண்டே ஜிப்மர் ஆஸ்பத்திரியில் பயிற்சி பெற்று வருபவர் ஹரிகிருஷ்ணன் (வயது21). இவர் அங்குள்ள விடுதியில் தங்கி தினமும் கல்லூரிக்கு சென்று வந்தார்.

    இந்த நிலையில் ஹரிகிருஷ்ணன் விடுதி அறையை பூட்டாமல் வெளியே சென்றார். பின்னர் வந்து பார்த்த போது அறையில் வைத்திருந்த ஒரு செல்போன், 2 லேப்டாப் உள்பட ரூ.1லட்சம் மதிப்புள்ள பொருட்களை காணாமல் ஹரிகிருஷ்ணன் அதிர்ச்சியடைந்தார். யாரோ மர்ம நபர்கள் விடுதி அறை கதவை பூட்டாமல் செல்வதை நோட்டமிட்டு பொருட்களை திருடி சென்றிருப்பது தெரியவந்தது.

    இருகுறித்து ஹரிகிருஷ்ணன் கோரிமேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அங்குள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்து பொருட்களை திருடி சென்ற மர்ம நபர்களை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    • மனைவி பிரிந்து சென்று விட்ட நிலையில் தாய் இறந்து போனதால் கார் டிரைவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • திருமணமாகி அவரது மனைவி கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து சென்று விட்டார்

    புதுச்சேரி:

    மனைவி பிரிந்து சென்று விட்ட நிலையில் தாய் இறந்து போனதால் கார் டிரைவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். புதுவை லாஸ்பேட்டை கிருஷ்ணாநகர் 9-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் சக்திமுருகன் (வயது54). கார் டிரைவர். இவருக்கு திருமணமாகி அவரது மனைவி கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து சென்று விட்டார். இதனால் சக்திமுருகன் தனது தாயாரின் பராமரிப்பில் இருந்து வந்தார்.

    இந்த நிலையில் சக்தி முருகனின் தாயார் கடந்த ஆண்டு இறந்து விட்டார். ஏற்கனவே மனைவி பிரிந்து சென்று விட்ட வேதனையில் இருந்த சக்திமுருகன் தாய் இறந்து போனது பெரும் இழப்பை ஏற்படுத்தியதாக எண்ணி மன வருத்தத்தில் இருந்து வந்தார்.

    இதனை மறக்க தினமும் சக்திமுருகன் மது குடித்து வந்தார். ஆனாலும் தாயின் மரணத்தால் சக்திமுருகன் விரக்தியில் இருந்து வந்தார். இந்த நிலையில் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்த சக்திமுருகன் வீட்டில் தாயின் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து அவரது சகோதரர் வெங்கடேசன் கொடுத்த புகாரின் பேரில் லாஸ்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • ஆறுபடை வீடு மருத்துவ கல்லூரி மற்றும் திருவனந்தபுரம் பேலியம் இந்தியா இணைந்து முதிர் நோயாளிகளுக்கான ஆதரவு மருத்துவம் குறித்து 10 நாட்கள் பயிற்சி முகாம் நடத்தியது.
    • முகாமில் புதுவையை சேர்ந்த ஏராளமான டாக்டர்கள், நர்சுகள் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    ஆறுபடை வீடு மருத்துவ கல்லூரி மற்றும் திருவனந்தபுரம் பேலியம் இந்தியா இணைந்து முதிர் நோயாளிகளுக்கான ஆதரவு மருத்துவம் குறித்து 10 நாட்கள் பயிற்சி முகாம் நடத்தியது.

    முகாமில் புதுவையை சேர்ந்த ஏராளமான டாக்டர்கள், நர்சுகள் கலந்து கொண்டனர். ஆறுபடை வீடு மருத்துவ கல்லூரி வளாகத்தில் புதுவை மருந்து கட்டுப்பாட்டு இயக்குனர் டாக்டர் அனந்தகிருஷ்ணன், மார்பின் வேதியல் வகையறா மருந்துகள் மருத்துவமனைகளில் எளிமையாக வாங்குவதற்கான வழிமுறை களை விளக்கினார்.

    இதில் ஏனைய மருத்துவ கல்லூரி பிரதிநிதிகள், மருந்து விற்பனையாளர்கள் கலந்து கொண்டனர். ஆறுபடை வீடு மருத்துவமனையில் முதிர் நோயாளிகளுக்கான ஆதரவு மருத்துவ மையத்தை பேலியம் இந்தியாவின் இயக்குனர் பத்மஸ்ரீ டாக்டர் ராஜகோபால் திறந்து வைத்தார். விநாயகா மிஷன் நிர்வாகத்தின் உறுப்பினர் சுரேஷ் சாமுவேல் மற்றும் விநாயகா மிஷன் பல்கலைக்கழக இணை வேந்தர் டாக்டர் சுதீர், கல்லூரி முதல்வர் கோட்டூர், மருத்துவ கண்காணிப்பாளர் ஜெயசிங், டாக்டர்கள் எழில் ராஜன், ஜெயகுமார், தீபா மற்றும் நர்சுகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    இறுதியில் டாக்டர் சுரேஷ் ராஜ்குமார் நன்றி கூறினார். பயிற்சி முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு சான்றி தழ்கள் வழங்கப்பட்டது.

    ×