என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • நிகழ்ச்சிக்கு கூட்டமைப்பு தலைவர் ரோகு. அருள்தாஸ் தலைமை தாங்கி நோட்டு புத்தகங்களை வழங்கினார்
    • நிகழ்ச்சியில் பொதுச்செயலாளர் கலைமணி முன்னிலை வகித்தார்.

    புதுச்சேரி:

    புதுவை ஒருங்கிணைந்த ஆதிதிராவிடர் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் அம்பேத்கர் பிறந்த நாளை உலக கல்வி தின விழாவாகவும், காமராஜர் பிறந்த நாளை விழாவை முன்னிட்டு அபிஷேகப்பாக்கம் அரசு தொடக்கப் பள்ளியில் உள்ள மாணவர்களுக்கு எழுது பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கூட்டமைப்பு தலைவர் ரோகு. அருள்தாஸ் தலைமை தாங்கி நோட்டு புத்தகங்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பொதுச்செயலாளர் கலைமணி முன்னிலை வகித்தார்.

    சிறப்பு அழைப்பாளராக கம்பன் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் கலைமன்னன், விநாயகா மிஷன் மருத்துவக் கல்லூரி நூலக ஆசிரியர் கலைவாணன், பள்ளி தலைமை ஆசிரியர் உமா மகேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டு எழுது பொருட்களை வழங்கினர். கவுரவ தலைவர் திருமால், நகரத் தலைவர் ஆதிகேசவன், அமைப்பு செயலாளர் பொன்னிவேல், கொள்கை பரப்பு செயலர் பரமசிவம், மாநில செயலாளர்கள் பாவேந்தன், கண்ணன், செய்தி தொடர்பாளர் கன்னியப்பன் மாணவர் கூட்டமைப்பு தலைவர் மகேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் மாநில பொருளாளர் வேல்முருகன் நன்றி கூறினார்.

    • முகாமை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தொடங்கி வைத்தார்.
    • இன்று தவளக்குப்பத்தில் உள்ள சுப மங்கள மஹால் திருமண நிலையத்தில் நடைபெற்றது.

    புதுச்சேரி:

    மணவெளி தொகுதியை சேர்ந்த மாற்று திறனாளிகளுக்கு இலவச முடநீக்கு உபகரணங்கள் பெறுவதற்கான பதிவு முகாமை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தொடங்கி வைத்தார். புதுவை அரசின் சமூக நலத்துறை சார்பில் மணவெளி தொகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச முடநீக்கு உபகரணங்கள் பெறுவதற்கான பதிவு முகாம் இன்று தவளக்குப்பத்தில் உள்ள சுப மங்கள மஹால் திருமண நிலையத்தில் நடைபெற்றது.

    இந்த முகாமினை தொகுதி எம்.எல்.ஏ.வும், சபாநாயகருமான ஏம்பலம் செல்வம் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் சமூக நலத்துறை துணை இயக்குனர் கலாவதி, மணவெளி தொகுதி முக்கிய பிரமுகர்கள் பா.ஜனதா மாநில விவசாய அணி பொறுப்பாளர் ராமு, கிருஷ்ணமூர்த்தி, தவளைகுப்பம் கூட்டுறவு சங்க தலைவர் தட்சிணாமூர்த்தி, இயக்குனர் சக்திவேல், முன்னாள் கவுன்சிலர் ராஜா, மணி, ரமேஷ், சிவா, செல்வி, வாழுமுனி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    மேலும் இந்த முகாமில் 350-க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்டு அவர்களுக்கான உபகரணங்கள் வேண்டி பதிவு செய்து கொண்டனர். இந்த முகாமில் முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் கை கால்களை இழந்தவர்களுக்கும் சக்கர நாற்காலி, செயற்கை கை மற்றும் கால், ஊன்றுகோல் உள்ளிட்ட உபகரணங்களும் காதுகேளாதோருக்கு காது கேட்கும் கருவிகளும் கண் பார்வை குன்றியவர்களுக்கு உரிய உபகரணங்களும் இந்த முகாமில் பதிவு செய்யப்பட்டு அளவுகள் எடுக்கப்பட்டு அவர்களுக்குரிய உபகரணங்கள் ஒரு மாத காலத்தில் வழங்கப்படும்.

    • விபத்துகளை கட்டுப்படுத்த புதுவையில் இயங்கும் தனியார் பஸ்
    • பயண நேரத்தை அதிகப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்

    புதுச்சேரி:

    விபத்துகளை கட்டுப்படுத்த புதுவையில் இயங்கும் தனியார் பஸ்களின் வேகத்தை குறைத்து பயண நேரத்தை அதிகப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென போக்குவரத்து துறை அமைச்சர் சந்திர பிரியங்கா விடம் சம்பத் எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கொடுத்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

    புதுவை மாநிலத்தில் நாளுக்கு நாள் விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.இந்த விபத்தினால் ஏற்படும் உயிரிழப்புகளும் உடல் ஊனமடைதல் நடக்கிறது. வாகன விபத்துகளுக்கு பொதுவாக சாலை விரிவாக்கப்படவில்லை, வாகனங்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது, வாகன ஓட்டுனர்கள் போக்குவரத்து விதிகள் கடைபிடிக்கப்படுவதில்லை. குறிப்பாக தனியார் பஸ்களின் அஜாக்கிரதை மற்றும் அதிவேகம் காரணமாக பெரும்பாலான விபத்துக்கள் ஏற்படுகின்றது. குறிப்பாக புதுவை- கடலூர் சாலையும், புதுவை-விழுப்புரம் சாலையும் மரண சாலையாகவே மாறி வருகின்றது.

    ஆனால் தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலாலும் முன் செல்லும் மற்றும் பின்வரும் பஸ்களுக்கு இடையே அடிக்கடி நேரம் தொடர்பாக பிரச்சனைகள் வருகின்றது. இதனால் பல பகுதிகளில் சட்டம் ஒழுங்குக்கு சவால் விடும் வகையில் பிரச்சனை பெரிதாகி சிக்கலை ஏற்படுத்துகிறது.

    இதன் காரணமாகவே விபத்துக்கள் ஏற்படுகின்றன. எனவே இன்றைய கால சூழலுக்கு ஏற்ப போக்குவரத்து எண்ணிக்கை மற்றும் பயணிகளின் எண்ணிக்கையை பொறுத்து புதுவையில் இயங்கும் அனைத்து வழித்தடங்களில் செல்லும் பஸ்களின் வேகத்தை குறைத்து பயண நேரத்தை நீட்டித்து உடனடியாக மாற்றி அமைக்க வேண்டும். மேலும் இதனை தனியார் பஸ்கள் கடைபிடிக்கின்றனவா என்பதை கண்காணிக்க சிறப்பு போக்குவரத்துக் குழுவை அமைக்க வேண்டும்.

    இதனை மீறும் தனியார் பஸ்களின் வழித்தட உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். எனவே உயிர் பலிகளை குறைக்க போக்குவரத்து துறை அமைச்சர் இதற்காக தனி கவனம் செலுத்தி சிறப்பு குழுவை ஏற்படுத்தி தீர்வு காண வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அரியாங்குப்பம் தொகுதிக்குட்பட்ட ஆர்.கே.நகர் பகுதியில் பாரதியார் கைப்பந்து போட்டி நடக்கிறது.
    • விளையாட்டு வீரர்கள் அதிமுக மாநில பொருளாளர் ரவி பாண்டுரங்கனிடம் கோரிக்கை வைத்தனர்.

    புதுச்சேரி:

    அரியாங்குப்பம் தொகுதிக்குட்பட்ட ஆர்.கே.நகர் பகுதியில் பாரதியார் கைப்பந்து போட்டி நடக்கிறது.

    இரவில் போட்டிகள் நடப்பதால் மின்விளக்குகள் அமைத்து தரும்படி கைப்பந்து கழக செயலாளர் சாந்தகுமார், உறுப்பினர்கள், விளையாட்டு வீரர்கள் அதிமுக மாநில பொருளாளர் ரவி பாண்டுரங்கனிடம் கோரிக்கை வைத்தனர். இதையேற்று தன் சொந்த செலவில் ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள மின் விளக்குகளை அ.தி.மு.க. பொருளாளர் ரவி பாண்டுரங்கன் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் தொகுதி செயலாளர் ராஜா, துணை அவைத்தலைவர் ராஜாராம், மாநில எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் பாண்டுரங்கன், தொகுதி அவைத்தலைவர் ராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர் பாலன், வார்டு செயலாளர் ஜெயக்குமார், சிவரவி, ரங்கநாதன், வார்டு அவைத்தலைவர் கார்த்தி, ஆறுமுகம், மூர்த்தி, தொகுதி செயலாளர் ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • புதுவை அரசு மின் துறையை தனியாருக்கு தாரை வார்ப்பதை கண்டித்தும், ரேஷன் கடைகளில் அரிசி, கோதுமை, சர்க்கரை உட்பட அத்தியாவசிய பொருட்களை வழங்க வேண்டும்
    • தலைமை செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என மார்க்சிஸ்டு கட்சி அறிவித்துள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை அரசு மின் துறையை தனியாருக்கு தாரை வார்ப்பதை கண்டித்தும், ரேஷன் கடைகளில் அரிசி, கோதுமை, சர்க்கரை உட்பட அத்தியாவசிய பொருட்களை வழங்க வேண்டும் என வலியுறுத்தியும் ஆகஸ்ட் 2-ந் தேதி தலைமை செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என மார்க்சிஸ்டு கட்சி அறிவித்துள்ளது.

    போராட்டத்தை மக்கள் மத்தியில் விளக்க கடலூர் சாலையில் உள்ள தியாகிகள் சிலையிலிருந்து பைக் பிரச்சார பயணம் தொடங்கியது. மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் பெருமாள் தலைமை தாங்கினார். பிரச்சாரத்தை மூத்த தலைவர் முருகன் தொடங்கி வைத்தார்.

    பிரதேச செயலாளர் ராஜாங்கம், செயற்குழு உறுப்பினர்கள் சீனுவாசன், கொளஞ்சியப்பன், கலியமூர்த்தி, சத்யா நகர கமிட்டி செயலாளர் மதிவாணன், நகர செயலாளர் ராம்ஜி, பாகூர் கொம்யூன் செயலாளர் சரவணன், பிரதேச குழு உறுப்பினர்கள், ராமசாமி,சங்கர், சரவணன் ஆனந்த் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    பிரச்சார ஊர்வலம் தியாகிகள் சிலை அருகில் தொடங்கி நெல்லித்தோப்பு, சாரம் லெனின் வீதி, பெரியார் சிலை, நேரு வீதி, காந்திவீதி, அஜந்தா தியேட்டர், முத்தியால்பேட்டை, பாரதி நகர், கருவடிக்குப்பம், பெத்து செட்டி பேட்டை, செல்வ பெருமாள் பேட்டை, லாஸ்பேட்டை கதிர்காமம், மேட்டுப்பாளையம் வரை சென்றது.

    • புதுவை அருகே அரியாங்குப்பம் பகுதியில் கஞ்சா பழக்கம் அதிகமாக இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது‌ அதன் பேரில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை சோதனை செய்த போது அவரிடம் கஞ்சா பொட்டலங்கள் வைத்து இருப்பது தெரிய வந்தது.

    புதுச்சேரி:

    புதுவை அருகே அரியாங்குப்பம் பகுதியில் கஞ்சா பழக்கம் அதிகமாக இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது‌ அதன் பேரில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் இரவு வாகன சோதனையில் போலீசார் ஈடுபட்டனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை சோதனை செய்த போது அவரிடம் கஞ்சா பொட்டலங்கள் வைத்து இருப்பது தெரிய வந்தது.

    உடனடியாக அறியாங்குப்பம் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் ரெட்டியார் பாளையம் பகுதியை சேர்ந்த கணபதி வயது (24) என்பது தெரிய வந்தது.

    மேலும் விசாரணை நடத்தியதில் கணபதி அரியாங்குப்பம் அடுத்த பி.சி.பி. நகர் பகுதியில் உள்ள விசுவா (வயது 22) என்பவரிடம் காஞ்சா வாங்கியதாகவும், விஷ்வா வீட்டில் வைத்து விற்பனை செய்வதாக தெரிவித்திருந்தார்.

    அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர். முத்துக்குமார் தலைமையிலான போலீசார் விஸ்வா வீட்டில் சோதனை செய்தனர். அப்போது அவரிடம் இருந்து ரூ.3 லட்சம் மதிப்பிலான 2 கிலோ கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்தனர்.

    இவருக்கு துணையாக அங்கு இருந்த தினகரன் (வயது 22), 17 வயது கொண்ட சிறுவன் ஆகிய 4பேரையும் கைது செய்தனர்.

    • அனைத்து கொலைகளும் ரவுடிகளுக்குள்ளாகவே யார்? தாதா என்ற போட்டியில் நடந்து வருகிறது.
    • வாணரப்பேட்டையை சேர்ந்த பாம் ரவி இதே காரணத்தால் வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்டார்.

    புதுச்சேரி:

    புதுவையில் தொடர் வெடிகுண்டு வீச்சு சம்பவங்கள் நடந்ததையொட்டி ரவுடிகளின் வீடுகளில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

    புதுவையில் ரவுடிகள் தங்களது எதிரிகளை கொல்ல நாட்டு வெடிகுண்டுகளை முக்கிய ஆயுதமாக கையில் எடுத்து வருகிறார்கள். வெடிகுண்டுகளை முதலில் வீசி எதிராளிகளை நிலைகுலைய செய்து விட்டு பின்னர் அரிவாளால் வெட்டி கொலை செய்கிறார்கள்.

    புதுவையில் நடைபெறும் அனைத்து கொலைகளும் ரவுடிகளுக்குள்ளாகவே யார்? தாதா என்ற போட்டியில் நடந்து வருகிறது.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு வாணரப்பேட்டையை சேர்ந்த பாம் ரவி இதே காரணத்தால் வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்டார்.

    இந்த சம்பவத்தில் அப்பாவி வாலிபர் ஒருவரும் பலியானார். அதன் பிறகு நடந்த சம்பவங்களும் இதே பாணியிலேயே வெடிகுண்டு வீசி ரவுடிகள் கொலை செய்யப்பட்டனர். போலீசார் அவ்வப்போது ரவுடிகளின் வீடுகளில் சோதனை நடத்தினாலும் வெடிகுண்டுகளை எங்கேயாவது மறைவான இடத்தில் பதுக்கி வைத்து அதனை ரவுடிகள் பயன்படுத்தி வருகிறார்கள்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு லாஸ்பேட்டையில் வைத்தியநாதன் எம்.எல்.ஏ. வீடு அருகே வியாபாரி வீட்டின் மீது வெடிகுண்டு வீசப்பட்டது. அந்த சம்பவத்தில் இன்னும் துப்பு துலக்க படாத நிலையில் மறுநாள் உப்பளம் துறைமுகத்தில் வெடிகுண்டு வைத்திருந்த ரவுடி அய்யப்பன் மற்றும் அவரது கூட்டாளிகளை போலீசார் கைது செய்து வெடிகுண்டுகளை பறிமுதல் செய்தனர்.

    நேற்று முன்தினம் இரவு கொட்டும் மழையில் சண்முகாபுரம் பாரதிபுரத்தை சேர்ந்த ரவுடி பன்னீர்செல்வத்தை அவரது எதிராளிகள் வெடிகுண்டு வீசி கொலை செய்தனர்.

    தொடர்ந்து நடைபெற்று வரும் வெடிகுண்டு கலாச்சாரத்தால் பொதுமக்கள் மட்டுமின்றி ரவுடிகளும் கலக்கமடைந்துள்ளனர். தங்களை எதிராளிகள் எப்படியும் வெடிகுண்டு வீசி கொலை செய்து விடுவார்களோ என்ற பயத்தோடு இருந்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு தீபிகா தலைமையில் போலீஸ் சூப்பிரண்டுகள் ஜிந்தா கோதண்டராமன், பக்தவச்சலம், வம்சித ரெட்டி மற்றும் லாஸ்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சிறப்பு அதிரடிப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் வெடிகுண்டு நிபுணர்கள் உதவியுடன் கருவடிக்குப்பம் மற்றும் சாமிபிள்ளைத்தோட்டம் பகுதிகளில் உள்ள ரவுடிகளின் வீடுகளில் இன்று அதிகாலை முதல் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

    ஆனால் ரவுடிகளின் வீடுகளில் வெடிகுண்டு மற்றும் ஆயுதங்கள் எதுவும் சிக்கவில்லை. எனினும் ரவுடிகள் 15 பேரை போலீசார் பிடித்து சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • புதிதாக 189 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
    • புதுவையில் 27, காரைக்காலில் 1, ஏனாமில் 2 பேர் என 30 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுவையில் 2 ஆயிரத்து 310 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் புதுவையில் 149, காரைக்காலில் 38, ஏனாமில் 30, ஏனாமில் 9, மாகியில் ஒருவர் என புதிதாக 189 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. புதுவையில் 27, காரைக்காலில் 1, ஏனாமில் 2 பேர் என 30 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். புதுவையில் ஆயிரத்து 5, காரைக்காலில் 170, ஏனாமில் 25, மாகியில் 3 பேர் என ஆயிரத்து 203 பேர் தொற்றுடன் வீட்டு தனிமையில் உள்ளனர்.

    புதுவையில் 174, காரைக்காலில் 32, ஏனாமில் 9 பேர் என 215 பேர் சிகிச்சையில் குணமடைந்தனர். கொரோனாவுக்கு காரைக்காலை சேர்ந்த 59 வயது பெண் பலியானார். இதனால் மாநிலத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்து 964 ஆக உயர்ந்துள்ளது. புதுவையில் 2-வது தவணை, பூஸ்டர் டோஸ் உட்பட 17 லட்சத்து 76 ஆயிரத்து 267 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். இந்த தகவலை சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

    • மது பழக்கத்தை மனைவி கண்டித்ததால் மீனவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • புதுவை முத்தியால் பேட்டை சோலைநகர் செங்கேணி அம்மன் கோவில்தெருவை சேர்ந்தவர் முருகன்.

    புதுச்சேரி:

    மது பழக்கத்தை மனைவி கண்டித்ததால் மீனவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். புதுவை முத்தியால் பேட்டை சோலைநகர் செங்கேணி அம்மன் கோவில்தெருவை சேர்ந்தவர் முருகன். (வயது 41). இவருக்கு தமிழ் என்ற மனைவியும் 2 மகள்களும் உள்ளனர். தமிழ் லாஸ்பேட்டை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள மீன் மார்க்கெட்டில் மீன் வியாபாரம் செய்து வருகிறார்.

    முருகனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. இவர் தினமும் அளவுக்கு அதிகமாக மது குடித்து வந்தார். இதையடுத்து முருகனுக்கு குடிப்பழக்கத்தை மறக்க செய்ய அவரை கோட்டக்குப்பத்தில் உள்ள மறுவாழ்வு மையத்துக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்து மருந்து மாத்திரை கொடுத்து வந்தனர்.

    சில நாட்களாக முருகன் மது குடிக்காததால் தனக்கு தலைவலி ஏற்பட்டுள்ளதாக கூறி கடந்த 2 நாட்களாக மீண்டும் மது குடிக்க தொடங்கினார். இதனை அவரது மனைவி தமிழ் கண்டித்து வந்தார். இந்த நிலையில் காலை வழக்கம் போல் தமிழ் மீன் வியாபாரத்துக்கு சென்று விட்டார். பின்னர் வியாபாரம் முடிந்து மாலை தமிழ் வீடு திரும்பிய போது வீட்டின் உள்ளே கணவர் இல்லாததால் சந்தேகம் அடைந்து வீட்டின் மாடிக்கு சென்று பார்த்தார்.

    அப்போது மீன் பிடிக்க பயன்படுத்தும் நைலான் கையிற்றால் முருகன் தூக்கு போட்டு தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உறவினர்கள் உதவியுடன் கணவரை தூக்கிலிருந்து மீட்டு சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே முருகன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து அவரது மனைவி தமிழ் கொடுத்த புகாரின் பேரில் சோலை நகர் புறக்காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் அனைத்து மாநிலங்களிலும் பல்வேறு விழாக்கள் நடத்தப்பட்டு வருகிறது.
    • சுதந்திர தின நாளில் நாடு முழுவதும் அனைத்து வீடுகளிலும் கொடியேற்ற மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.

    புதுச்சேரி:

    நாட்டின் 75-வது ஆண்டு சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் அனைத்து மாநிலங்களிலும் பல்வேறு விழாக்கள் நடத்தப்பட்டு வருகிறது. மத்திய அரசு சார்பிலும் நாடு முழுவதும் பல்வேறு விழாக்கள் நடத்தப்பட்டு வருகிறது. சுதந்திர தின நாளில் நாடு முழுவதும் அனைத்து வீடுகளிலும் கொடியேற்ற மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.

    புதுவையில் ஆகஸ்ட் 13 முதல் 15-ந் தேதி வரை அரசு அலுவலகம், வீடுகளில் கொடியேற்றம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இதற்கான துண்டுபிரசுரங்களை முதல்-அமைச்சர் ரங்கசாமி இன்று வெளியிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் புதுவையில் ஆயிரத்து 80 இடங்களில் 62 வகையான நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது. மேலும் வீடுதோறும் தேசியக்கொடி ஏற்றும் நிகழ்ச்சி 13 முதல் 15-ந் தேதி வரை நடக்கிறது. இதற்காக தேசியக்கொடி அங்கன்வாடி, பாண்லே பாலகத்தில் விற்பனை செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர் லட்சுமிநாராயணன், அரசு செயலர்கள் உதயகுமார், நெடுஞ்செழியன் ஆகியோர் உடனிருந்தனர்.

    • புதிதாக தேர்வு செய்யப்பட்ட ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு என் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
    • அரசியல் சட்டப்படி செயல்படுவார் என்றும், ரப்பர் ஸ்டாம்ப் ஆக இருக்கமாட்டார் என்றும் நம்புகிறேன்.

    புதுச்சேரி:

    முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    புதிதாக தேர்வு செய்யப்பட்ட ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு என் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். அவர் அரசியல் சட்டப்படி செயல்படுவார் என்றும், ரப்பர் ஸ்டாம்ப் ஆக இருக்கமாட்டார் என்றும் நம்புகிறேன். நேஷன் ஹெரால்டு வழக்கில் எந்த ஆதாரமும் இல்லை என்று தொடர்ந்து காங்கிரஸ் சார்பில் வலியுறுத்தி வருகிறோம்.

    ஆனாலும் நேற்றைய தினம் சோனியாகாந்தியிடம் 3 மணி நேரம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி அனுப்பியுள்ளது. இதில் இருந்தே அமலாக்கத்துறைக்கு எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என தெரிகிறது.

    ஜி.எஸ்.டி. வரியை விதிப்பை அமல்படுத்தி மோடி அரசு மக்களை பாதித்து வருகிறது. மக்களின் அன்றாட தேவையான அரிசி, கோதுமை, மைதா ஆகியவற்றுக்கு 5 சதவீத ஜி.எஸ்.டி. வரி விதித்துள்ளனர்.

    இதற்கு பா.ஜ.க. ஆளும் மாநிலங்கள் உட்பட அனைத்து மாநிலத்திலும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆனால் மத்திய நிதி மந்திரி ஜி.எஸ்.டி. கவுன்சிலில் ஏற்கப்பட்டே வரி அமல் படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். ஜி.எஸ்.டி. கவுன்சிலில் பா.ஜ.க.வினர்களை மெஜாரிட்டி உறுப்பினர்களாக இருப்பதால்தான் வரி விதிப்புக்கு ஒப்புதல் கிடைத்துள்ளது.

    உணவுப்பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. வரி விதிப்பை ரத்து செய்ய வேண்டும். ஏனாமில் கோதாவரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ள பெருக்கால் மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். ஏனாம் தொகுதியில் போட்டியிட்ட முதல்-அமைச்சர் தேர்தலில் தோல்வியடைந்ததால் அந்த மக்களை பழிவாங்கும் எண்ணத்தோடு, நேரில்கூட செல்லாமல் தவிர்க்கிறார் என சந்தேகம் எழுகிறது. அதேநேரத்தில் சூப்பர் சி.எம். ஆக செயல்படும் கவர்னர் ஏனாம் சென்று நிவாரணங்களை அறிவித்துள்ளார்.

    வெள்ளத்தால் வாழ்வாதாரத்தை இழந்துள்ள தலித், மீனவர்கள் வீடுகளை சீரமைக்க ரூ.50 ஆயிரமும், நகர பகுதி மக்கள் வீடுகளை சீரமைக்க ரூ.25 ஆயிரமும் அரசு வழங்க வேண்டும். தற்போது அறிவித்துள்ள 25 கிலோ அரிசியோடு கூடுதலாக 25 கிலோ அரிசி வழங்க வேண்டும். புதுவையில் தற்போது 5 மதுபான ஆலைகள் இயங்கி வருகிறது. புதிய மதுபான ஆலைகள் அமைக்க அரசு அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இதற்கு பலர் மனு செய்திருந்தாலும், தமிழகத்தில் மதுபான ஆலைகளை நடத்துபவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

    இதற்காக ரூ.15 கோடி பேரம் பேசி கைமாறியுள்ளது. ஏற்கனவே புதுவையில் சாராய ஆறு பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த மதுபான ஆலைகள் தொடங்கினால் புதுவை சாராய கடலாக மாறிவிடும். புதுவையில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து கொலை, கொள்ளை, கற்பழிப்பு, திருட்டு, ஆட்கடத்தல், நிலம், வீடு அபகரிப்பு தடையின்றி நடந்து வருகிறது. இந்த நேரத்தில் மதுபான ஆலைகள், மதுக்கடைகளுக்கு கூடுதலாக அனுமதியளித்தால் குற்ற செயல்கள் மேலும் பெருகும். ரவுடிகள் அட்டகாசம் நாள்தோறும் பெருகி வருகிறது.

    காவல்துறை ஆட்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இல்லை. லஞ்சம், ஊழல், சட்டம் ஒழுங்கு சீர்குலைவால் புதுவை அரசு செயலிழந்து கிடக்கிறது. இதற்கு பொறுப்பேற்று ரங்கசாமி முதல்-அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பல்கலை கழகங்களில் 50 சதவீத இடங்களை அரசின் இட ஒதுக்கீடாக இறுதி செய்துள்ளது.
    • இந்த 50 சதவீத இடங்களில் அரசின் சார்பில் நடத்தப்படும் மருத்துவ கலலூரிகளில் வசூலிக்கப்படும்

    புதுச்சேரி:

    புதுவை கிழக்கு மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தேசிய மருத்துவ ஆணையம் பல்வேறு ஆலோசனைக்கு பிறகு மருத்துவ கல்வி கட்டணத்தையும், மருத்துவ கல்லூரி மற்றும் நிகர்நிலை பல்கலை கழகங்களில் 50 சதவீத இடங்களை அரசின் இட ஒதுக்கீடாக இறுதி செய்துள்ளது.

    அதன் அடிப்படையில் புதுவையில் உள்ள 4 நிகர்நிலை பல்கலைகழகம் உள்ளிட்ட 7 மருத்துவ கல்லூரிகளில் மொத்தமுள்ள 1250 இடங்களில் 625 இடங்கள் அரசின் இட ஒதுக்கீடாக பெற வேண்டும்.

    இந்த 50 சதவீத இடங்களில் அரசின் சார்பில் நடத்தப்படும் மருத்துவ கலலூரிகளில் வசூலிக்கப்படும் ஆண்டு கட்டணம் ரூ. 1.30 லட்சம் வசூலிக்க வேண்டும். ஆனால் இதை விட தனியார் மருத்துவ கல்லூரிகள் அதிகம் வசூலித்து வருகிறது. மத்திய அரசின் ஆணைகளை அமுல்படுத்த வேண்டியது கவர்னரின் கடமை.

    தலைமை செயலாளர் தலைமையில் ஒரு கமிட்டி அமைத்து தேசிய மருத்துவ ஆணையத்தின் உத்தரவு படி அனைத்து மருத்துவ கல்லூரிகளிலும், மருத்துவ கட்டணமும், அரசின் இட ஒதுக்கீடும் அமுல்படுத்தபடுகிறதா என கண்காணிக்க வேண்டும், அமுல்படுத்தாக கல்லூரிகள் மீது மத்திய அரசிடம் புகார் அளித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை புதுவையில் இந்த கல்வி ஆண்டில் கொண்டு வர இந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும். மருத்துவ கல்லூரி மாணவர்களின் நலன் சம்பந்தபட்ட பிரச்சினைகளில் காங்கிரஸ், தி.மு.க. ஏன் வாய் திறக்கவில்லை?

    மருத்துவ கல்லூரிகளில் அரசின் இட ஒதுக்கீட்டிற்கும், கட்டண நிர்ணயத்திற்கும் மருத்துவ கல்லூரிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய அவசியம் அரசிற்கு இல்லை, மத்திய அரசின் ஆணைய அமுல்படுத்தினால் போதும். இவ்வாறு அவர் கூறினார்.

    ×