என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "crore collection"

    • புதிதாக தேர்வு செய்யப்பட்ட ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு என் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
    • அரசியல் சட்டப்படி செயல்படுவார் என்றும், ரப்பர் ஸ்டாம்ப் ஆக இருக்கமாட்டார் என்றும் நம்புகிறேன்.

    புதுச்சேரி:

    முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    புதிதாக தேர்வு செய்யப்பட்ட ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு என் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். அவர் அரசியல் சட்டப்படி செயல்படுவார் என்றும், ரப்பர் ஸ்டாம்ப் ஆக இருக்கமாட்டார் என்றும் நம்புகிறேன். நேஷன் ஹெரால்டு வழக்கில் எந்த ஆதாரமும் இல்லை என்று தொடர்ந்து காங்கிரஸ் சார்பில் வலியுறுத்தி வருகிறோம்.

    ஆனாலும் நேற்றைய தினம் சோனியாகாந்தியிடம் 3 மணி நேரம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி அனுப்பியுள்ளது. இதில் இருந்தே அமலாக்கத்துறைக்கு எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என தெரிகிறது.

    ஜி.எஸ்.டி. வரியை விதிப்பை அமல்படுத்தி மோடி அரசு மக்களை பாதித்து வருகிறது. மக்களின் அன்றாட தேவையான அரிசி, கோதுமை, மைதா ஆகியவற்றுக்கு 5 சதவீத ஜி.எஸ்.டி. வரி விதித்துள்ளனர்.

    இதற்கு பா.ஜ.க. ஆளும் மாநிலங்கள் உட்பட அனைத்து மாநிலத்திலும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆனால் மத்திய நிதி மந்திரி ஜி.எஸ்.டி. கவுன்சிலில் ஏற்கப்பட்டே வரி அமல் படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். ஜி.எஸ்.டி. கவுன்சிலில் பா.ஜ.க.வினர்களை மெஜாரிட்டி உறுப்பினர்களாக இருப்பதால்தான் வரி விதிப்புக்கு ஒப்புதல் கிடைத்துள்ளது.

    உணவுப்பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. வரி விதிப்பை ரத்து செய்ய வேண்டும். ஏனாமில் கோதாவரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ள பெருக்கால் மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். ஏனாம் தொகுதியில் போட்டியிட்ட முதல்-அமைச்சர் தேர்தலில் தோல்வியடைந்ததால் அந்த மக்களை பழிவாங்கும் எண்ணத்தோடு, நேரில்கூட செல்லாமல் தவிர்க்கிறார் என சந்தேகம் எழுகிறது. அதேநேரத்தில் சூப்பர் சி.எம். ஆக செயல்படும் கவர்னர் ஏனாம் சென்று நிவாரணங்களை அறிவித்துள்ளார்.

    வெள்ளத்தால் வாழ்வாதாரத்தை இழந்துள்ள தலித், மீனவர்கள் வீடுகளை சீரமைக்க ரூ.50 ஆயிரமும், நகர பகுதி மக்கள் வீடுகளை சீரமைக்க ரூ.25 ஆயிரமும் அரசு வழங்க வேண்டும். தற்போது அறிவித்துள்ள 25 கிலோ அரிசியோடு கூடுதலாக 25 கிலோ அரிசி வழங்க வேண்டும். புதுவையில் தற்போது 5 மதுபான ஆலைகள் இயங்கி வருகிறது. புதிய மதுபான ஆலைகள் அமைக்க அரசு அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இதற்கு பலர் மனு செய்திருந்தாலும், தமிழகத்தில் மதுபான ஆலைகளை நடத்துபவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

    இதற்காக ரூ.15 கோடி பேரம் பேசி கைமாறியுள்ளது. ஏற்கனவே புதுவையில் சாராய ஆறு பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த மதுபான ஆலைகள் தொடங்கினால் புதுவை சாராய கடலாக மாறிவிடும். புதுவையில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து கொலை, கொள்ளை, கற்பழிப்பு, திருட்டு, ஆட்கடத்தல், நிலம், வீடு அபகரிப்பு தடையின்றி நடந்து வருகிறது. இந்த நேரத்தில் மதுபான ஆலைகள், மதுக்கடைகளுக்கு கூடுதலாக அனுமதியளித்தால் குற்ற செயல்கள் மேலும் பெருகும். ரவுடிகள் அட்டகாசம் நாள்தோறும் பெருகி வருகிறது.

    காவல்துறை ஆட்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இல்லை. லஞ்சம், ஊழல், சட்டம் ஒழுங்கு சீர்குலைவால் புதுவை அரசு செயலிழந்து கிடக்கிறது. இதற்கு பொறுப்பேற்று ரங்கசாமி முதல்-அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×