என் மலர்
புதுச்சேரி

வெடிகுண்டு வீசப்பட்ட இடத்தை போலீஸ் சூப்பிரண்டு பக்தவச்சலம், இன்ஸ்பெக்டர்கள், பாலமுருகன், ஜெய்சங்கர் ஆகியோர் பார்வையிட்ட காட்சி.
புதுவையில் கொட்டும் மழையில் வெடிகுண்டு வீசி ரவுடி கொலை- நண்பர் உயிர் ஊசல்
- பயங்கர சத்தத்துடன் நாட்டு வெடிகுண்டுகள் வெடித்து சிதறியதால் அந்த பகுதியே அதிர்ந்தது.
- பன்னீர்செல்வம் கொலை செய்யப்பட்ட தகவல் அறிந்து ஜிப்மர் ஆஸ்பத்திரி முன் அவரது ஆதரவாளர்கள் திரண்டதால் பரபரப்பு.
புதுச்சேரி:
புதுவை மேட்டுப்பாளையம் சண்முகாபுரம் வடக்குபாரதிபுரத்தை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (வயது 24). பிரபல ரவுடியான இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்தநிலையில் நேற்று இரவு நண்பர் சக்தி (20) என்பவருடன் தனது வீட்டில் பன்னீர்செல்வம் மது குடித்துக்கொண்டிருந்ததாக தெரிகிறது. இரவு 10.15 மணி அளவில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்துகொண்டு இருந்தபோது மோட்டார் சைக்கிள்களில் திடீரென்று ஒரு கும்பல் வந்து இறங்கியது.
திமுதிமுவென்று அந்த கும்பலை சேர்ந்தவர்கள் பன்னீர்செல்வம் வீட்டுக்குள் புகுந்தனர்.
அவர்களை பார்த்ததும் பன்னீர்செல்வமும், சக்தியும் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர். ஆனால் அதற்கு வாய்ப்பு இல்லாத வகையில் கண்ணிமைக்கும் நேரத்தில் அடுத்தடுத்து 2 நாட்டு வெடிகுண்டுகளை அந்த கும்பல் வீசியது.
பயங்கர சத்தத்துடன் நாட்டு வெடிகுண்டுகள் வெடித்து சிதறியதால் அந்த பகுதியே அதிர்ந்தது.
வெடிகுண்டுகள் வெடித்த வீட்டிலும், அந்த பகுதியிலும் புகை மண்டலமானது. இதை பயன்படுத்தி தப்பி ஓட விடாமல் பன்னீர்செல்வம், அவரது கூட்டாளி சக்தி ஆகியோரை அந்த கும்பல் அரிவாள், கத்தி போன்ற ஆயுதங்களால் சரமாரியாக வெட்டித் தள்ளியது.
இதில் அவர்கள் குற்றுயிரும் குலையுயிருமாக ரத்த வெள்ளத்தில் கிடந்தனர். இதன்பின் அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது.
அதன்பின் பன்னீர்செல்வம், சக்தி ஆகியோரை உயிருக்கு ஆபத்தான நிலையில் அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு இருவருக்கும் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி பன்னீர்செல்வம் பரிதாபமாக இறந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் சக்திக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த பயங்கர சம்பவம் குறித்து தகவல் அறிந்து போலீஸ் சூப்பிரண்டு பக்தவச்சலம் தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பாலமுருகன், ஜெய்சங்கர் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பன்னீர்செல்வம் மீது பல்வேறு வழக்குகள் உள்ள நிலையில் அதனால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக பழிக்குப்பழி வாங்கும் வகையில் இந்த கொலை நடந்ததா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
இதற்கிடையே பன்னீர்செல்வம் கொலை செய்யப்பட்ட தகவல் அறிந்து ஜிப்மர் ஆஸ்பத்திரி முன் அவரது ஆதரவாளர்கள் திரண்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
கொட்டும் மழையை பயன்படுத்தி வெடிகுண்டு வீசி அரிவாளால் வெட்டி பன்னீர்செல்வத்கதை கொலை செய்த கும்பல் குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள்.
இந்த பயங்கர கொலை சம்பவம் சண்முகாபுரம் பகுதியில் பரபரப்பையும், பதட்டத்தையும் ஏற்படுத்தி உள்ளது.






