என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • மத்திய மந்திரி எல்.முருகன் 2 நாள் சுற்றுப்பயணமாக புதுவைக்கு வந்துள்ளார்.அவரை புதுவை வேளாண்துறை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்.
    • மேலும் மத்திய அரசின் பல்வேறு திட்டங்களை புதுவையில் அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    புதுச்சேரி:

    மத்திய மந்திரி எல்.முருகன் 2 நாள் சுற்றுப்பயணமாக புதுவைக்கு வந்துள்ளார்.

    அவரை புதுவை வேளாண்துறை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    புதுவை கால்நடைத்து றைக்கு 3 நடமாடும் மருத்துவமனை வழங்க நிதி ஒதுக்கிய மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். மத்திய அரசு ரூ.2 கோடியில் 200 மாட்டு பண்ணை அமைக்கும் திட்டத்தை கொண்டு வந்துள்ளது. சிறிய நிலப்பரப்பு கொண்ட புதுவையில் இதுபோன்ற பெரிய பண்ணைகள் அமைக்க வாய்ப்புகள் குறைவு.

    எனவே இந்த திட்டத்தில் புதுவையில் 50 மாடுகள் கொண்ட பண்ணை திட்டமாக மாற்ற வேண்டும். மத்திய அரசின் 500 ஆட்டு பெட்டை, 25. ஆட்டு கிடா வழங்கும் திட்டத்தையும் மாற்றம் செய்து 20 ஆட்டு பெட்டை, ஒரு கிடா வழங்கும் திட்டமாக மாற்றித்தர வேண்டும். இதனால் புதுவை பயனாளிகள் மிகுந்த பயனடைவர்.

    மேலும் மத்திய அரசின் பல்வேறு திட்டங்களை புதுவையில் அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார். இந்த சந்திப்பின்போது சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார், அமைச்சரின் தனி செயலர் மனோகர் ஆகியோர் உடனிருந்தனர்.

    • புதிய சிமெண்டு சாலை மற்றும் இருபுற வாய்க்கால் கட்டைகள் மேம்படுத்தும் பணி எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.12 லட்சத்து 27 ஆயிரம் செலவில் நகராட்சி மூலம் நடைபெற உள்ளது.
    • இதற்கான பணியை கந்தப்பா முதலியார் வீதி காந்திவீதி சந்திப்பில் வைத்திலிங்கம் எம்.பி. நேரு எம்.எல்.ஏ. முன்னிலையில் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.

    புதுச்சேரி:

    உருளையன்பேட்டை சின்னக்கடை வார்டு கந்தப்பா முதலியார் வீதியில் மகாத்மா காந்தி வீதி முதல் பாரதி வீதி வரை பழுதடைந்த பழைய சிமெண்டு சாலையினை மாற்றி புதிய சிமெண்டு சாலை மற்றும் இருபுற வாய்க்கால் கட்டைகள் மேம்படுத்தும் பணி எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.12 லட்சத்து 27 ஆயிரம் செலவில் நகராட்சி மூலம் நடைபெற உள்ளது.

    இதற்கான பணியை கந்தப்பா முதலியார் வீதி காந்திவீதி சந்திப்பில் வைத்திலிங்கம் எம்.பி. நேரு எம்.எல்.ஏ. முன்னிலையில் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார். விழாவில் புதுவை நகராட்சி ஆணையர் சிவகுமார், செயற்பொறியாளர் சிவபாலன், உதவி பொறியாளர் நமச்சிவாயம், மற்றும் நகராட்சி அதிகாரிகள் ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • புதுவையில் முந்துரிமைப் பிரிவினருக்கு அளிக்கப்பட வேண்டிய சிவப்பு அட்டை முந்துரிமைப் பிரிவைச் சேராத அட்டைக்கு தகுதியாக உள்ள குடும்பத்தினருக்கு அதிக எண்ணிக்கையில் அளிக்கப்பட்டுள்ளது.
    • மேலும் சட்டத்திற்கு புறம்பாக சிவப்பு வண்ண குடும்ப அட்டைகளை தகுதியற்ற நபர்களுக்கு வழங்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவை நுகர்வோர் கூட்டமைப்பு மற்றும் மனித உரிமைகள் அமைப்பு பொதுச்செயலாளர் முருகானந்தம் புதுவை கவர்னர் தமிழிசைக்கு அனுப்பி உள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    புதுவையில் முந்துரிமைப் பிரிவினருக்கு அளிக்கப்பட வேண்டிய சிவப்பு அட்டை முந்துரிமைப் பிரிவைச் சேராத அட்டைக்கு தகுதியாக உள்ள குடும்பத்தினருக்கு அதிக எண்ணிக்கையில் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் இலக்குபிரிவு மக்களுக்கு சேர வேண்டிய உணவுப் பொருள்கள் மடைமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    மேலும், சட்டத்திற்கு புறம்பாக அரசு ஊழியர்கள், பெரும் செல்வந்தர்கள், வருமான வரி செலுத்துவோர், நிலசுவாந்தார்கள். மற்றும் முதலாளிகளும் சிவப்பு நிற குடும்ப அட்டை பெற்றுள்ளார்கள்.

    இதனால் சட்டத்தின்படி பயனடைய பயனாளிகளுடன் தகுதியற்ற நபர்கள் நிறைய பேர் தொடர்ந்து பயன்பெற்று வருகிறார்கள். எனவே வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கான தகுதியை நிர்ணயிப்பதற்கு மத்தியஅரசின் வழிகாட்டுதலையும் சட்டத்தின் அடிப்படையிலும் வரைமுறைகளை உருவாக்கி நடைமுறைப்படுத்திட வேண்டும்.

    மேலும் சட்டத்திற்கு புறம்பாக சிவப்பு வண்ண குடும்ப அட்டைகளை தகுதியற்ற நபர்களுக்கு வழங்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    • ஜல் ஜீவன் திட்டதின் கீழ் புதுவையில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வசதி செய்து தரப்பட்டுள்ளது.
    • புதுவையில் மேம்பாலம் கட்ட ரூ.500 கோடியில் பணிகள் நடைபெற்று வருகிறது.

    புதுச்சேரி:

    மத்திய இணை மந்திரி எல்.முருகன் 2 நாள் சுற்றுப்பயணமாக புதுவை வந்தார்.

    இன்று அவர் கட்சி அலுவலகத்தில் பா.ஜனதா அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மத்திய அரசின் சிறப்பு நிதியாக ரூ.1400 கோடி ரூபாய் புதுவைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. புதுவையில் மேம்பாலம் கட்ட ரூ.500 கோடியில் பணிகள் நடைபெற்று வருகிறது. புதுவை பெஸ்டு புதுவையாக மாற்ற முதல்-அமைச்சருடன் இணைந்து செயல்பட்டு வருகிறோம். புதுவை-விழுப்புரம் சாலை ரூ.92 கோடியில் அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

    சங்கராபரணி ஆற்றின் குறுக்கே பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

    பிரதமர் நரேந்திர மோடி 10 லட்சம் பேருக்கு வேலை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார். புதுவையில் முதல்கட்டமாக 1400 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    ஜல் ஜீவன் திட்டதின் கீழ் புதுவையில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வசதி செய்து தரப்பட்டுள்ளது. தமிழக மீனவர்கள் எல்லையை தாண்டுவதும் அவர்கள் இலங்கை கடற்படையினர் கைது செய்வதும் தொடர்கதையாக இருந்து வருகிறது. இது குறித்து இலங்கை அரசிடம் பேசி மீனவர்களை மீட்டு வருகிறோம்.

    சேதராப்பட்டில் சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்க மத்திய அரசு சிறப்பு அனுமதி வழங்கியுள்ளது. இதனால் புதுவை இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாகும்.

    விமான நிலைய விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • புதுவை காலாப்பட்டு தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ. கல்யாணசுந்தரம், கவர்னர் தமிழிசையிடம் ஒரு மனு அளித்துள்ளார்.
    • பல பெண் குழந்தைகள் என்னிடம் தங்களின் மனவேதனையை வெளிப் படுத்தியுள்ளனர்.

    புதுச்சேரி:

    புதுவை காலாப்பட்டு தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ. கல்யாணசுந்தரம், கவர்னர் தமிழிசையிடம் ஒரு மனு அளித்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    என் தொகுதியில் காலாப்பட்டில் மத்திய சிறைச்சாலை உள்ளது. இங்குள்ள விழாக்களில் பங்கேற்க செல்லும்போது தண்டனை முடிந்த கைதிகள் பலர் இன்னும் சிறையில் வாடி வருவதை அறிந்து மிகவும் வேதனையடைந்தேன். கைதிகளின் குழந்தைகள் பண்டிகை நாட்களில் பெற்றோரை பார்க்கும் போது மிகுந்த வேதனையடுகின்றனர்.

    பல பெண் குழந்தைகள் என்னிடம் தங்களின் மனவேதனையை வெளிப் படுத்தியுள்ளனர். அரசு கொறடாவும், நானும் சமீபத்தில் சிறையில் இதுபோன்ற நிகழ்வை சந்தித்தோம்.

    இதுகுறித்து இருவரும் சட்டசபை யிலும் குரல் எழுப்பினோம். கவர்னர் உண்மைநிலையை அறிந்து தண்டனை காலம் முடிந்தும் சிறையில் வாடி வரும் கைதிகளை உடனடியாக விடுவிக்க உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • வில்லியனூரில் தனியார் கம்பெனி ஊழியரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 4 பேர் கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள்.
    • மேலும் தகாத வார்த்தைகளால் திட்டி கொலை செய்து விடுவதாக மிரட்டி விட்டு சென்று விட்டனர்.

    புதுச்சேரி:

    வில்லியனூரில் தனியார் கம்பெனி ஊழியரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 4 பேர் கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள்.

    நெட்டப்பாக்கம் அருகே பனையடி குப்பம் அங்காளம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பூமிநாதன் (வயது34). இவர் வில்லியனூர் அருகே ஒதியம்பட்டில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.  வழக்கம் போல் மோட்டார் சைக்கிளில் பூமிநாதன் வேலைக்கு வந்து கொண்டிருந்தார்.

    வில்லியனூர் உத்திர வாணி பேட்டில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே வந்த போது திடீரென 4 பேர் கொண்ட கும்பல் பூமிநாதனை வழிமறித்தது. அவர்கள் கையில் வைத்திருந்த கட்டை உள்ளிட்ட ஆயுதங்களால் பூமிநாதனை சரமாரியாக தாக்கினார்கள்.

    மேலும் தகாத வார்த்தைகளால் திட்டி கொலை செய்து விடுவதாக மிரட்டி விட்டு சென்று விட்டனர்.

    இதுகுறித்து பூமிநாதன் வில்லியனூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து பூமிநாதனை தாக்கிய 4 பேர் கும்பலை தேடி வருகிறார்கள்.

    • அளவுக்கு அதிமாக மது குடித்த பொதுப்பணித்துறை ஊழியர் பலியானார்.
    • இதற்கிடையே தனிமையில் வசித்து வந்த ரவிச்சந்திரன் மது பழக்கத்துக்கு ஆளானார்.

    புதுச்சேரி:

    அளவுக்கு அதிமாக மது குடித்த பொதுப்பணித்துறை ஊழியர் பலியானார். புதுவை முருங்கப்பாக்கம் அங்காளம்மன் நகரை சேர்ந்தவர் சிவக்குமார். இவர் பொதுப்பணித்துறையில் எழுத்தராக பணிபுரிந்து வருகிறார். இவரது சகோதரர் ரவிக்குமார் (வயது47). பொதுப்பணித்துறை தற்காலிக ஊழியரான இவர் முருங்கப்பாக்கத்தில் உள்ள குடிநீர் தேக்க தொட்டியில் ஆப்ரேட்டராக பணிபுரிந்து வந்தார்.

    இவருக்கு திருமணமாகி அவரது மனைவி 2 மகள்களுடன் நாகப்பட்டி னத்தில் தாய் வீட்டில் தங்கி ரேசன் கடையில் பணிபுரிந்து வருகிறார். இதனால் ரவிச்சந்திரன் குடிநீர் தேக்க தொட்டி அலுவலகத்திலேயே தங்கி பணிபுரிந்து வந்தார்.

    அவ்வப்போது ரவிச்சந்திரன் நாகப்பட்டி ணத்துக்கு சென்று மனைவி-மகள்களை பார்த்து விட்டு வருவார்.

    இதற்கிடையே தனிமையில் வசித்து வந்த ரவிச்சந்திரன் மது பழக்கத்துக்கு ஆளானார். சம்பாதிக்கும் பணத்தை அவர் அளவுக்கு அதிகமாக மது குடித்து செலவழித்து வந்தார். இதனால் அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதற்காக அவர் அங்குள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்தார்.

    அவருக்கு அவரது சகோதரர் சிவக்குமார் அறிவுரை கூறி இனிமேல் மது குடிக்க வேண்டாம் என்று கூறியும் அதனை செவிசாய்க்காமல் மீண்டும் ரவிச்சந்திரன் மது குடித்து வந்தார்.

    இந்தநிலையில்  ரவிச்சந்திரன் குடிநீர் தேக்க தொட்டி அலுவலகத்தில் இருந்த போது அவருக்கு உடல்நிலை மோசமானது. இதையடுத்து அங்குள்ள ஊழியர் ராஜி இதுபற்றி ரவிச்சந்திரனின் சகோதரர் சிவக்குமாருக்கு தகவல் தெரிவித்தார்.

    இதைத்தொடர்ந்து சிவக்குமார் விரைந்து வந்து ரவிச்சந்திரனை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே ரவிச்சந்திரன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து சிவக்குமார் கொடுத்த புகாரின் பேரில் முதலியார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • வெளிநாடுகளுக்கு மருத்துவ உபகரணங்களை ஏற்றுமதி செய்யக்கூடிய தலைசிறந்த நாடாக இந்தியா விளங்குகிறது.
    • ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு மருத்துவக்கல்லூரி தொடங்க வேண்டும் என மத்திய அரசு முடிவெடுத்து செயல்படுகிறோம்.

    புதுச்சேரி:

    பிரதமர் மோடியின் 20 ஆண்டுகால மக்கள் நல பணிகள் பற்றி பல்வேறு துறை சார்ந்த வல்லுனர்கள் எழுதிய புத்தக கருத்தரங்கம் வெங்கடேஸ்வரா மருத்துவக்கல்லூரியில் நடந்தது.

    பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதன் தலைமை தாங்கினார். அமைச்சர்கள் நமச்சிவாயம், சாய்.ஜெ.சரவணன்குமார், வெங்கடேஸ்வரா மருத்துவக்கல்லூரி தலைவர் ராமசந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கருத்தரங்கில் மத்திய மந்திரி எல்.முருகன் கலந்து கொண்டு பேசியதாவது:-

    கடந்த 8 ஆண்டுகளில் பிரதமர் நரேந்திர மோடி கொண்டு வந்த பல்வேறு திட்டங்களால் நாட்டு மக்கள் ஒருங்கிணைந்த வளர்ச்சியை பெற்றுள்ளார்கள். புத்தகத்தில் பல்வேறு துறை சார்ந்தோர் முக்கியக் கருத்துகளை தெரிவித்துள்ளனர்.

    வெளிநாடுகளுக்கு மருத்துவ உபகரணங்களை ஏற்றுமதி செய்யக்கூடிய தலைசிறந்த நாடாக இந்தியா விளங்குகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு மருத்துவக்கல்லூரி தொடங்க வேண்டும் என மத்திய அரசு முடிவெடுத்து செயல்படுகிறது.

    2014 வரை 7 எய்ம்ஸ் மட்டுமே இருந்தது. 8 ஆண்டுகளில் 14 எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியைக் கொடுத்துள்ளோம். தமிழகத்தில் 11 மருத்துவக்கல்லூரிகளைக் கொடுத்துள்ளோம்.

    புதுவை ஜிப்மர் மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையை விரிவாக்கம் செய்ய மத்திய அரசு ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. மருத்துவ மாணவர்கள், பொறியியல் மாணவர்கள், சட்டக்கல்லூரி மாணவர்கள் தங்கள் தாய்மொழியில் படிக்க புதிய கல்விக் கொள்கை வழிவகுத்துள்ளது.

    இவ்வாறு எல்.முருகன் பேசினார்.

    • புதுவை கவர்னர் மாளிகையில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி இன்று நடந்தது. கடந்த மாதம் 8-ந் தேதி நடந்த சந்திப்பின் போது போக்குவரத்துக்கு உதவியாக 3 சக்கர கைவண்டி வழங்கும்படி கவர்னரிடம் மாற்றத்திறனாளி ஒருவர் கோரிக்கை வைத்தார்.
    • புதுவை கவர்னர் மாளிகையில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி இன்று நடந்தது. கடந்த மாதம் 8-ந் தேதி நடந்த சந்திப்பின் போது போக்குவரத்துக்கு உதவியாக 3 சக்கர கைவண்டி வழங்கும்படி கவர்னரிடம் மாற்றத்திறனாளி ஒருவர் கோரிக்கை வைத்தார்.

    புதுச்சேரி:

    புதுவை கவர்னர் மாளிகையில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி இன்று நடந்தது.

    கடந்த மாதம் 8-ந் தேதி நடந்த சந்திப்பின் போது போக்குவரத்துக்கு உதவியாக 3 சக்கர கைவண்டி வழங்கும்படி கவர்னரிடம் மாற்றத்திறனாளி ஒருவர் கோரிக்கை வைத்தார். இதையடுத்து இன்று நடந்த நிகழ்ச்சியில், மண்ணாடி ப்பட்டு குமாரபாளையத்தை சேர்ந்த முருகன் என்ற மாற்றுத்திறனாளியிடம் 3 சக்கர வண்டியை கவர்னர் தமிழிசை வழங்கினார். இதன்பின் கவர்னர் தமிழிசை நிருபர்களிடம் கூறியதாவது:-

    மக்கள் சந்திப்பின் போது ஒரு மாற்றுத்தினாளி பெண் தனக்கு வேலை வேண்டும் என்றார். 3 சக்கர வாகனம் கேட்டார். அதன்படி வாகனம் வழங்கப்பட்டுள்ளது. அடுத்த மக்கள் சந்திப்பில் மோட்டார் பொருத்தப்பட்ட 3 சக்கர வாகனம் ஏற்பாடு செய்து தரப்படும்.

    இதுதான் மக்கள் சந்திப்பின் பலன். ஏன் மக்களை சந்திக்கிறீர்கள்? உங்களுக்கு என்ன தார்மீக உரிமை இருக்கிறது? தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தான் மக்களை சந்திக்க வேண்டும் என கூறுபவர்களுக்கு இந்த செயல்தான் எனது பதில். இது போல மக்களை சந்திக்கும் போது அவர்களது சிறிய-சிறிய தேவைகளை நமது நோக்கத்தினால், முயற்சியினால் ஓரளவு சரிசெய்ய செய்ய முடியும்.

    எங்களால் உடனே சரி செய்துவிடக் கூடிய இன்னும் பல கோரிக்கைகளை சரி செய்துள்ளோம். ஜிப்மரில் கேட்ட உதவியை செய்துள்ளோம். மக்கள் சந்திப்பை அரசியல் ஆக்காமல் அவசியத்திற்காக, நல்ல மனது படைத்தவர்களால் செய்யப்படுகிறது என்பதை முதலில் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

    நல்லது யார் செய்தாலும் ஏற்றுக்கொள்ள வேண்டும். இது தொடரும். மக்கள் சந்திப்பு அரசியல் கிடையாது, அவசியம் என்பதை நான் பதிவு செய்கிறேன். தமிழக கவர்னரை மாற்றம் செய்ய அரசியல் கட்சிகள் கையெழுத்து வாங்குவது ஜனநாயகத்துக்கு எதிரானது.

    மழை வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்ப டக்கூடாது என்று அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. முதல்-அமைச்சர் தலைமையில் நடந்த கூட்டத்தில் பல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. எனவே புதுவை அனைத்து விதத்திலும் பாதுகாப்பாக இருக்கும். பொது மக்கள் மழை காலங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

    வாந்தி பேதி அறிகுறிகள் வந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு வரவேண்டும். விஷப் பூச்சிகள் அதிகம் வரும். எச்சரிக்கையாக இருக்க் வேண்டும். குழந்தைகளை கையாளும் போது இன்னும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நாம் எச்சரிக்கையாக இருந்தால் இந்த மழை நாள் வரும் பாதிப்புகளை நம்மால் தடுக்க முடியும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • புதுவை ஓட்டலில் விபசார தொழில் நடத்திய எம்.எல்.ஏ.வின் தம்பி மகனை போலீசார் கைது செய்தனர்.
    • அழகு நிலையம், ஸ்பா என்ற பெயரில் அழகிகளை வரவழைத்து நடத்தபடும் இந்த விபசார தொழிலில் வசதி படைத்தவர்களை ஆசைகாட்டி பலர் பணத்தை சுரண்டுகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுவை ஓட்டலில் விபசார தொழில் நடத்திய எம்.எல்.ஏ.வின் தம்பி மகனை போலீசார் கைது செய்தனர். மேலும் எம்.எல்.ஏ.வின் தம்பியை போலீசார் தேடி வருகிறார்கள்.

    புதுவையில் சுற்றுலா பயணிகளை குறி வைத்து பல இடங்களில் விபசார தொழில் நடந்து வருகிறது. அழகு நிலையம், ஸ்பா என்ற பெயரில் அழகிகளை வரவழைத்து நடத்தபடும் இந்த விபசார தொழிலில் வசதி படைத்தவர்களை ஆசைகாட்டி பலர் பணத்தை சுரண்டுகின்றனர்.

    ஓட்டல்கள், விடுதிகள் மட்டுமின்றி வீடுகளை வாடகைக்கு எடுத்து ஆன்லைன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு பெண்களை சப்ளை செய்யும் கும்பலில் பல குடும்ப பெண்களும் சிக்கி கொள்கின்றனர்.

    வேலைக்கு செல்வதாக வீட்டில் கூறி விட்டு விபசாரத்தில் ஈடுபடும் குடும்ப பெண்கள் போலீசா ரிடம் சிக்கி கொள்ளும் போது அவர்கள் வெளியே சொல்ல முடியாமல் தற்கொலை செய்து கொள்கி றார்கள்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுவை நகர பகுதியில் ஒரு வீட்டில் விபசாரம் நடப்பதாக வந்த தகவலின் அடிப்படையில் போலீசார் அந்த வீட்டில் சோதனை நடத்திய போது 17 வயது சிறுமியை விபசாரத்தில் ஈடுபடுத்தியது தெரியவந்தது.

    இதையடுத்து அந்த சிறுமி கொடுத்த தகவலின் அடிப்படையில் அந்த சிறுமியை வலுகட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்த 20-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

    இந்த நிலையில் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு தீபிகா மேற்பார்வையில் பெரியக்கடை மற்றும் ஒதியஞ்சாலை போலீசார் தங்களது எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள ஓட்டல்கள், தங்கும் விடுதி களில்  இரவு அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். விடிய விடிய இந்த சோதனை நடந்தது.

    சோதனையின் போது ஓட்டல்கள் மற்றும் தங்கும் விடுதிகளில் தங்கியிருந்தவர்களின் விவரங்களை சேகரித்தனர்.

    மேலும் சட்ட விரோத செயல்கள் நடைபெறு கிறதா? என்று ஒவ்வொரு அறையாக சென்று ஆய்வு செய்தனர். அப்போது காமராஜர் சாலையில் சுயேட்சை எம்.எல்.ஏ.வின் சகோதரருக்கு சொந்தமான ஓட்டலில் போலீசார் சோதனை நடத்திய போது அங்கு அழகியை வைத்து விபசாரம் நடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து கடலூரை சேர்ந்த அந்த அழகியை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

    மேலும் ஓட்டல் உரிமை யாளரான எம்.எல்.ஏ.வி.ன் தம்பி மகன் ராஜா(வயது28) மற்றும் புரோக்கரான கண்டமங்கலம் அருகே நவமால் மருதூரை சேர்ந்த லெனின்(41) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு ஜெயிலில் அடைத்தனர். தொடர்ந்து ஓட்டலின் மேலாளராக செயல்பட்ட எம்.எல்.ஏ.வின் தம்பியான செழியனை போலீசார் தேடி வருகிறார்கள்.

    • மாலை 6 மணிக்கு காமராஜர் சாலை ஓட்டல் ஜெயராமில் பயனாளிகளோடு கலந்துரையாடுகிறார்.
    • மாலை 7.30 மணிக்கு கட்சி அலுவலகத்தில் பாராளுமன்ற தேர்தல் குழுவினருடன் ஆலோசனை நடத்துகிறார்.

    புதுச்சேரி:

    மத்திய மந்திரி எல்.முருகன் 2 நாள் சுற்றுப்பயணமாக புதுவைக்கு வந்தார். இன்று மதியம் 12 மணிக்கு அரியூர் வெங்கடேஸ்வரா மருத்துவக்கல்லூரியில் பிரதமரின் கனவு திட்டம் குறித்து கலந்துரையாடினார். இன்று மதியம் 3 மணிக்கு முத்தியால்பேட்டை சோலை நகர் இளைஞர் விடுதியில் மீனவ சமுதாய மக்களுடன் கலந்துரையாடுகிறார்.

    மாலை 4.30 முதல் 5.30 மணி வரை தலைமை செயலகத்தில் அரசு அதிகாரிகளுடன் புதுவை மாநில வளர்ச்சிப்பணிகள் குறித்து ஆலோசனை நடத்துகிறார். மாலை 6 மணிக்கு காமராஜர் சாலை ஓட்டல் ஜெயராமில் பயனாளிகளோடு கலந்துரையாடுகிறார். மாலை 7.30 மணிக்கு கட்சி அலுவலகத்தில் பாராளுமன்ற தேர்தல் குழுவினருடன் ஆலோசனை நடத்துகிறார்.

    இரவு புதுவையில் தங்கும் மத்திய மந்திரி எல்.முருகன் நாளை காலை 10 முதல் 11 மணி வரை பா.ஜனதா அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள்., எம்.பி.யோடு பா.ஜனதா தலைமை அலுவலகத்தில் ஆலோசனை நடத்துகிறார்.

    தொடர்ந்து 11.45 மணிக்கு 45 அடி சாலை மகாராஜா மகாலில் நடைபெறும் மண்டல குழு நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்கிறார்.

    தொடர்ந்து முதலியார்பேட்டை அசோக்பாபு எம்.எல்.ஏ. வீட்டில் உணவருந்தும் மத்திய மந்திரி, மாலை 4 மணிக்கு பாகூரில் பா.ஜனதா நிர்வாகிகளோடு கலந்துரையாடுகிறார். பின்னர் 6.30 மணிக்கு புதுவை ஓட்டல் சற்குருவில் வியாபாரிகளுடன் கலந்துரையாடுகிறார்.

    மத்திய மந்திரி வருகையையொட்டி புதுவையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    • காட்டுநாயக்கன், மலைக்குறவன் மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
    • மனுவை பெற்றுக் கொண்ட மத்திய உள்துறை அதிகாரிகள், இது ெதாடர்பாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.

    புதுச்சேரி:

    காட்டுநாயக்கன், மலைக்குறவன் மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

    புதுவை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் டெல்லியில் மத்திய உள்துறை செயலாளர் அஜய்குமார் பல்லா, இணை செயலாளர் (யூனியன் பிரதேசம்) அசுடோஷ் அக்னிஹோத்ரி ஆகியோர்களை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்.

    அதில், புதுவை மாநிலத்தில் வசிக்கும் காட்டுநாயக்கன், மலைக்குறவன், குருமன்ஸ், எருகுலா ஆகிய இனமக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என குறிப்பிட்டு இருந்தது.

    மனுவை பெற்றுக் கொண்ட மத்திய உள்துறை அதிகாரிகள், இது ெதாடர்பாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.

    இந்த சந்திப்பின் போது எம்.எல்.ஏ.க்கள் வி.பி.ராமலிங்கம், சிவசங்கரன், கொள்ளப்பள்ளி ஸ்ரீநிவாஸ் அசோக் ஆகியோர் உடனிருந்தனர்.

    ×