என் மலர்
புதுச்சேரி
- புதுவை சிந்தனையாளர் பேரவை மற்றும் மலேசியா தமிழ் எழுத்தாளர் சங்கம் சார்பில் உலக தாய் மொழி தினத்தையொட்டி காணொளி மூலம் உலகளாவிய கருத்தரங்கம் நடத்தியது.
- மலேசிய நாட்டின் தமிழ் எழுத்தாளர் சங்கத்தை சேர்ந்த பழனியம்மாள் பெரியசாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
புதுச்சேரி:
புதுவை சிந்தனையாளர் பேரவை மற்றும் மலேசியா தமிழ் எழுத்தாளர் சங்கம் சார்பில் உலக தாய் மொழி தினத்தையொட்டி காணொளி மூலம் உலகளாவிய கருத்தரங்கம் நடத்தியது. நிகழ்ச்சிக்கு பேராசிரியர் தமிழியலன் தலைமை தாங்கினார். சிந்தனையாளர் பேரவை தலைவர் கவிஞர் கோ.செல்வம் நோக்கவுரையாற்றினார். புதுவை பல்கலைக்கழக பேராசிரியர் பாஞ்.ராமலிங்கம், மன்னர்மன்னன் படைப்பாளர் அறக்கட்டளை பொதுச்செயலாளர் ராமதாஸ்காந்தி, மலேசிய நாட்டின் தமிழ் எழுத்தாளர் சங்கத்தை சேர்ந்த பழனியம்மாள் பெரியசாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
தொடர்ந்து மலேசிய நாட்டை சேர்ந்த மோகன்குமார், செல்லையா, குணசீலன் சுப்பிரமணியன், பழனிகிருஷ்ண சாமி ஆகியோர் கருத்துரையாற்றினர்.
இதில் உலகில் உள்ள ஏராளமான தமிழர்கள் காணொளி மூலம் பங்கேற்றனர்.
- திருபுவனை அருகே ஆண்டியார்பாளையத்தில் உள்ள ஒரு மதுக்கடை எதிரே 3 நம்பர் லாட்டரி சீட்டு விற்பனை செய்யப்படு வதாக திருபுவனை போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
- இவர்கள் தடை செய்யப்பட்ட 3 நம்பர் லாட்டரி சீட்டுகளை வாடிக்கையாளர்களுக்கு செல்போன் மூலம் விற்று வந்தது தெரியவந்தது.
புதுச்சேரி:
திருபுவனை அருகே ஆண்டியார்பாளையத்தில் உள்ள ஒரு மதுக்கடை எதிரே 3 நம்பர் லாட்டரி சீட்டு விற்பனை செய்யப்படுவதாக திருபுவனை போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர் மற்றும் குற்றப்பிரிவு போலீசார் அப்பகுதிக்கு சென்று சாதாரண உடையில் நின்று கண்காணித்தனர்.
அப்போது மோட்டார் சைக்கிளில் சந்தேகப்படும் படியாக நின்றுக்கொண்டிருந்த 3 பேரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் விழுப்புரம் மகாவிஷ்ணு நகரை சேர்ந்த ஆனந்த ராஜ்(வயது34), புதுப்பாளையத்தை சேர்ந்த பாஸ்கரன்(54) வளவனூர் அருகே சிறுவந்தாடை சேர்ந்த ராஜி(58) மற்றும் கண்டமங்கலத்தை சேர்ந்த தாமோதரன்(50) என்பதும், இவர்கள் தடை செய்யப்பட்ட 3 நம்பர் லாட்டரி சீட்டுகளை வாடிக்கையாளர்களுக்கு செல்போன் மூலம் விற்று வந்தது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து மோட்டார் சைக்கிள், செல்போன்கள் மற்றும் லாட்டரி விற்பனை பணம் ரூ. 15 ஆயிரத்து 460 ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
- புதுச்சேரி அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. நடராஜன் வில்லியனூர் கிழக்கு மாடவீதியில் வசித்து வந்தார்.
- சமீப காலமாக நடராஜன் அரசியலில் ஆர்வம் காட்டாமல் சொந்த வேலைகளை கவனித்து வந்தார்.
புதுச்சேரி:
புதுச்சேரி அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. நடராஜன் (வயது 72). இவர் வில்லியனூர் கிழக்கு மாடவீதியில் வசித்து வந்தார். கடந்த சில நாட்களாக அவர் குடும்ப பிரச்சினை காரணமாக மனமுடைந்த நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று மதியம் அவர் வீட்டில் தனி அறையில் மின் விசிறி கொக்கியில் வேட்டியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். தகவல் அறிந்த அ.தி.மு.க. நிர்வாகிகளும், அப்பகுதி பொதுமக்களும் அதிர்ச்சியடைந்தனர். உடலைப்பார்த்து அவர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.
வில்லியனூர் போலீசார் நடராஜனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், கடந்த சில நாட்களாக நடராஜன் குடும்ப பிரச்சினையால் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்ததாகவும், சரிவர யாருடனும் பேசாமல் இருந்து வந்துள்ளதாகவும், அதன் காரணமாக தற்கொலை முடிவை மேற்கொண்டிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.
நடராஜன் 1991, 1996-ம் ஆண்டு நடந்த தேர்தல்களில் அ.தி.மு.க. சார்பில் உழவர்கரை தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்று எம்.எல்.ஏ.வாக இருந்தார். மேலும் 2006-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டுவரை வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து தலைராகவும் பதவி வகித்தார். புதுவை மாநில அ.தி.மு.க. மாநில செயலாளராகவும் பதவி வகித்து உள்ளார்.
சமீப காலமாக அவர் தீவிர அரசியலில் ஆர்வம் காட்டாமல் சொந்த வேலைகளை கவனித்து வந்தார். அவருக்கு ராஜலட்சுமி என்ற மனைவியும், சரவணன், முருகமணி ஆகிய 2 மகன்களும், மகேஸ்வரி, கலைவாணி, ஜானகி ஆகிய 3 மகள்களும் உள்ளனர்.
- இந்திய பொருளாதா ரத்தை சீர்குலைத்த அதானி பங்கு மோசடி குறித்து பாராளுமன்ற நிலைக்குழு விசாரணை நடத்த வேண்டும்.
- மின்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் பிரீபெய்டு மீட்டரை மக்கள் விரும்புவதாக சொல்கிறார்.
புதுச்சேரி:
புதுவை காங்கிரஸ் எம்.பி. வைத்திலிங்கம் நிருபர்க ளிடம் கூறியதாவது:-
இந்திய பொருளாதா ரத்தை சீர்குலைத்த அதானி பங்கு மோசடி குறித்து பாராளுமன்ற நிலைக்குழு விசாரணை நடத்த வேண்டும். பாராளு மன்றத்தில் ராகுல்காந்தி எழுப்பிய கேள்விகளுக்கு பிரதமர் மோடி எந்தவித பதிலும் அளிக்கவில்லை. பிரதமர் மோடியும், பா.ஜனதாவினரும் ராகுலின் கேள்விக்கு பயந்து தப்பியோடி ஒளிந்து கொண்டனர்.
புதுவையிலும் அதானி குழுமம் கால் பதித்துள்ளது. காரைக்கால் துறைமுகத்தை அதானி குழுமம் வாங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. மின்துறை தனியார்மயத்தில் அதானி, டாடா, வெளிநாட்டு நிறுவனங்கள் டெண்டர் கோரியுள்ளன. இதுபற்றி அரசு வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும்.
மின்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் பிரீபெய்டு மீட்டரை மக்கள் விரும்புவதாக சொல்கிறார். செல்போன் நிறுவனங்கள் போஸ்ட்பெய்டு, பிரீபெய்டு என 2 வழிமுறைகளை தருகிறது. விருப்பமான வழிமுறையை நாம் தேர்வு செய்ய முடியும். அதேபோல மின்துறையில் இத்திட்டத்துக்கு அரசால் விண்ணப்பம் கோர முடியுமா?
தனியாரிடம் மின்துறையை தாரை வார்க்கும்நேரத்தில் எதற்கு பிரீபெய்டு மின் மீட்டர் திட்டத்தை கொண்டுவர வேண்டும்? 1991 முதல் கூட்டுறவு நிறுவனங்களை முதல்-அமைச்சர் ரங்கசாமி தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளார். இதனால் கூட்டுறவு நிறுவனம் அனைத்தும் நலிவடைந்து, சீர்குலைந்து போயுள்ளது. பாண்லே கூட்டுறவு பால் நிறுவனத்தில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கு பால் கிடைப்பதை விட மது அதிகமாக தடையின்றி கிடைக்கிறது. தமிழகத்தில் பால் கொள்முதல் விலை அதிகமாக உள்ளது. புதுவையில் கொள்முதல் விலை குறைவாக உள்ளதால் உற்பத்தியாளர்கள் பாலை தர முன்வருவதில்லை.
அதேநேரத்தில் பால் விற்பனை விலை தமிழகத்தைவிட புதுவையில் அதிகமாக உள்ளது. கூட்டுறவு நிறுவனங்களுக்கு, சங்கங்களுக்கு பல ஆண்டாக தேர்தல் நடத்தப்படவில்லை. கூட்டுறவு நிறுவனங்களை சீரமைக்கக்கோரி மத்திய மந்திரி அமித்ஷாவுக்கு கடிதம் அனுப்ப உள்ளேன்.
வருமானத்தை பெருக்கவே ரெஸ்டோ பார் வழங்குவதாக முதல்-அமைச்சர் தெரிவிக்கிறார். ரெஸ்டோ பார்களில் விற்கப்படும் மதுக்களுக்கு கலால்வரி செலுத்தப்படுகிறதா? என்ற சந்தேகம் உள்ளது. ரெஸ்டோ பார்களுக்கு விற்பனை வரி விதிக்க வேண்டும்.
வருமானத்தை பெருக்க வேண்டும் என கூறும் முதல்-அமைச்சர் மது கடைகளையும் சாராயம், கள்ளுக்கடைகள் போல ஏலம் விட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மார்ச் மாதத்தில் நடக்கும் முழு பட்ஜெட் கூட்டத்தொடரில் ஆதி திராவிட மக்களுக்கு புதிய திட்டங்களை கொண்டு வர வேண்டும்.
- அரசு மாணவ- மாணவியர் விடுதிகளில் இறைச்சிகள் கறி, மீன், முட்டை நிறுத்தப்பட்டு பல மாதங்களாகியும் நடவடிக்கை எடுக்காதது ஏன்?
புதுச்சேரி:
புதுவை ஒருங்கிணைந்த ஆதிதிராவிடர் கூட்டமைப்பு தலைவர் ரோக. அருள்தாஸ் தலைமையில் பொதுச் செயலாளர் கலைமணி, கவுரவத் தலைவர் திருமால், நகரத்தலைவர் ஆதிகேசவன், நகரச் செயலாளர் முனியன், அமைப்புச்செயலாளர் பொன்னிவேல், துணை பொதுசெயலாளர் தனவேலு, கொள்கை பரப்பு செயலர் பரமசிவம், செய்தி தொடர்பாளர் கன்னி யப்பன் ஆகியோர் கொண்ட குழுவினர் அமைச்சர் சந்திரபிரியங்காவை சந்தித்து மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
மார்ச் மாதத்தில் நடக்கும் முழு பட்ஜெட் கூட்டத்தொடரில் ஆதி திராவிட மக்களுக்கு புதிய திட்டங்களை கொண்டு வர வேண்டும். தற்போது உள்ள திட்ட நிதியை உயர்த்தி வழங்க வேண்டும். கல்வீடு கட்டும் திட்டம், ஈமச்சடங்கு, பாலூட்டும் தாய்மார்கள், தொடர் நோய் உள்ளவர்களுக்கான நிதியை உயர்த்தி வழங்க வேண்டும். இலவச மனை பட்டா வழங்க வேண்டும்.
சிறப்பு கூறு நிதியிலிருந்து 22 துறைகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியை ஆதிதிராவிட மக்களுக்கு செய்யப்பட்டுள்ளதா? என்பதை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும்.
ஆதிதிராவிடர் நலத்துறை எதிரில் அம்பேத்கர் சிலையை அமைக்க வேண்டும். பாட்கோ மூலம் கடன் வழங்கும் திட்டம் நிறுத்தப்பட்டது ஏன்? என்பதை விளக்க வேண்டும்.
அரசு மாணவ- மாணவியர் விடுதிகளில் இறைச்சிகள் கறி, மீன், முட்டை நிறுத்தப்பட்டு பல மாதங்களாகியும் நடவடிக்கை எடுக்காதது ஏன்? அரசு நிறுவனமான பிஸ்கோ மீன்வள கூட்டுறவு சங்கத்தின் மூலம் முறைகேடு நடக்காமல் தனியாரிடம் டெண்டர் விடுவதை தவிர்க்க வேண்டும்.
வில்லியனூர், லாஸ்பேட்டை ணயில் உள்ள விடுதிகளை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பழுதடைந்த விடுதிகளை பராமரித்து புதுப்பிக்க வேண்டும். மேலும் திருக்கனூர், கதிர்காமம், ஏம்பலம், முதலியார்பேட்டை, அரியாங்குப்பம், போன்ற புதிய பகுதிகளில் விடுதிகள் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
இவ்வாறு அதில் குறிப்பிட்டிருந்தனர்.
- பூரணாங்குப்பத்தில் திடீர் தீ விபத்தில் குடிசை வீடு எரிந்து சேதமானது.
- புதுவை தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
புதுச்சேரி:
பூரணாங்குப்பத்தில் திடீர் தீ விபத்தில் குடிசை வீடு எரிந்து சேதமானது. தவளக்குப்பம் அருகில் பூரணாங்குப்பம் தெற்கு வீதியை சேர்ந்தவர் ஆனந்த். இவரது உறவினர் மூதாட்டி தனம் (வயது 70). இவர் வீட்டு மொட்டை மாடியில் ஒரு குடிசை கட்டி தனியாக வசித்து வருகிறார்.
இந்த நிலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு வீடு முற்றிலும் எரிந்து பொருட்கள் அனைத்தும் சேதமானது. அதிர்ஷ்டவசமாக மூதாட்டி தனம் உயிர்தப்பினார்.
இது சம்பந்தமாக தகவல் அறிந்தவுடன் புதுவை தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். விபத்து குறித்து தவளக்குப்பம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- புதுவையில் இந்திய கம்யூனிஸ்ட்டு கட்சியின் தேசிய கவுன்சில் கூட்டம் வருகிற 25-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை நடக்கிறது.
- 26-ந் தேதி நாடு முழுவதும் கவர்னர் பதவிகளை ரத்துசெய்யக்கோரியும், புதுவைக்கு மாநில அந்தஸ்து கோரியும் தேசியளவிலான கருத்தரங்கு நடத்தப்படும்.
புதுச்சேரி:
இந்திய கம்யூனிஸ்ட்டு கட்சியின் மாநில செயலாளர் சலீம் நிருபர்களிடம் கூறியதாவது:-
புதுவையில் இந்திய கம்யூனிஸ்ட்டு கட்சியின் தேசிய கவுன்சில் கூட்டம் வருகிற 25-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை நடக்கிறது. காஷ்மீர் முதல் தமிழகம் வரை உள்ள அனைத்து மாநிலங்களையும் சேர்ந்த 150 உறுப்பினர்கள் பங்கேற்கின்றனர். ஓட்டல் ஜெயராமில் கூட்டம் நடக்கிறது.
முக்கிய கருத்துக்கள் விவாதிக்கப்பட்டு மத்திய பா.ஜனதா அரசை வீழ்த்த இடதுசாரி கட்சிகள் ஒருங்கிணைந்து போராட வியூகம் வகுக்கப்படும்.
கேரள அமைச்சர்கள், பீகார் எம்.எல்.ஏ.க்கள், தேசிய செயலர்கள் உட்பட பலர் கலந்துகொள்கின்றனர். 28-ந் தேதி மாநில கட்சி கட்டுப்பாட்டுக்குழு கூட்டமும் நடக்கிறது. புதுவையில் முதல் முறையாக இந்த கூட்டம் நடக்கிறது. 26-ந் தேதி நாடு முழுவதும் கவர்னர் பதவிகளை ரத்துசெய்யக்கோரியும், புதுவைக்கு மாநில அந்தஸ்து கோரியும் தேசியளவிலான கருத்தரங்கு நடத்தப்படும்.
இதில் இந்திய கம்யூனிஸ்ட்டு கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் ராஜா, தமிழக மாநில செயலாளர் முத்தரசன், தேசிய செயலாளர் கானம் ராஜேந்திரன், தெலுங்கானா செயலாளர் நாராயணசாமி, மார்க்சிஸ்டு கட்சி ஜி.ராமகிருஷ்ணன், விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.பி. ரவிக்குமார், புதுவை எதிர்கட்சித்தலைவர் சிவா உட்பட பலர் கலந்துகொள்கின்றனர்.
புதுவையில் தேர்வு நேரத்தில் ஏழை மக்களின் மின் இணைப்பை துண்டித்து வருகின்றனர். ரூ.50 ஆயிரத்துக்கு மேல் மின் கட்டண பாக்கி வைத்துள்ளவர்களின் பட்டியலை வெள்ளை அறிக்கையாக அரசு வெளியிட வேண்டும். ரெஸ்டோ பாரை கண்டித்து போராட்டம் நடத்தியவர்களுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து ஜாமீன் வழங்கியுள்ளனர். இதை கண்டித்து மாபெரும் போராட்டங்கள் நடத்தப்படும்.
என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா இடையில் மாநில அந்தஸ்து விவகாரத்தில் முரண்பாடு நிலவுகிறது. பா.ஜனதா கூட்டணியிலிருந்து வெளியேறி மாநில அந்தஸ்துக்காக முதல்-அமைச்சர் ரங்கசாமி போராடினால் அவரோடு இணைந்து செயல்பட தயாராக உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன், முன்னாள் எம்.எல்.ஏ. நாராகலைநாதன், பொதுச்செயலாளர் சேதுசெல்வம், ஏ.ஐ.டி.யூ.சி. தினேஷ்பொன்னையா ஆகியோர் உடனிருந்தனர்.
- சொந்த காரணங்களுக்காக சில போலீசார் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள்.
- அனைத்து போலீஸ் நிலையங்களிலும் மனநல டாக்டர்களை கொண்டு காவலர்களுக்கான நலவழி கூட்டத்தை நடத்த வேண்டும்.
புதுச்சேரி:
புதுவை மடுகரை இந்திரா நகரை சேர்ந்தவர் மலையராஜ் (48). கோரிமேட்டில் உள்ள போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் காவலராக பணியாற்றி வந்தார்.
நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட இவரது காலை அகற்ற வேண்டும் என டாக்டர்கள் கூறியதாக தெரிகிறது. இதில் மனமுடைந்த மலையராஜ் நேற்று முன்தினம் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதற்கு முன்னதாக 17-ந் தேதி (வெள்ளிக்கிழமை) மதியம் பணி முடித்து வீடு சென்ற கோரிமேடு போலீஸ் நிலையத்தில் பணி புரிந்த போலீஸ்காரர் நாகராஜ் மனைவியுடன் ஏற்பட்ட தகராரில் மனமுடைந்து வீட்டு பின்புறம் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
3 நாட்களில் 2 போலீசார் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் புதுவை காவல் துறை வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தியது. இதன் எதிரொலியாக அனைத்து போலீஸ் நிலையங்களிலும் காவலர் நல கூட்டத்தை நடத்த சீனியர் போலீஸ் சூப்பிரண்டு தீபிகா உத்தரவிட்டுள்ளார்.
அவரது உத்தரவில், சொந்த காரணங்களுக்காக சில போலீசார் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். அனைத்து போலீஸ் நிலையங்களிலும் மனநல டாக்டர்களை கொண்டு காவலர்களுக்கான நலவழி கூட்டத்தை நடத்த வேண்டும்.
இதற்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனை அதிகாரிகளுக்கு காவல் துறை சார்பில் கேட்டு கொள்ளப்படும். டாக்டரும், போலீசாரும் பேசுவதற்கென போலீஸ் நிலையத்தில் தனி அறை ஒதுக்க வேண்டும். அனைத்து போலீஸ் நிலையங்களிலும் 23-ந் தேதிக்குள் காவலர் நலவழி கூட்டம் நடத்தப்பட வேண்டும்.
26-ந் தேதிக்குள் மனநல மருத்துவருடன் கலந்துரையாடலை முடிக்க வேண்டும். 27-ந் தேதி அனைத்து போலீஸ் சூப்பிரண்டுகளுக்கு விரிவான அறிக்கையை தவறாமல் சமர்பிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். இந்த உத்தரவு அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
- வாணரப்பேட்டையில் வட்டிக்கு பணம் கொடுத்து வசூல் செய்து கொடுப்பதில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- ரூ.5 லட்சம் லட்சுமியிடம் கொடுத்தார். மீதி 50 ஆயிரத்தை கொடுக்கவில்லை என தெரிகிறது.
புதுச்சேரி:
வாணரப்பேட்டையில் வட்டிக்கு பணம் கொடுத்து வசூல் செய்து கொடுப்பதில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புதுவை வாணரப்பேட்டை எல்லையம்மன் கோவில் தோப்பு பகுதியை சேர்ந்தவர் சம்பத். இவரது மனைவி ரமா(வயது40). இவர் வாணரப்பேட்டை கல்லறை வீதியை சேர்ந்த வெங்கடேசன் என்பவரின் மனைவி லட்சுமியிடம் மொத்தமாக பணம் வாங்கி அப்பகுதியை சேர்ந்தவர்களுக்கு வட்டிக்கு கொடுத்து பின்னர் அதனை வசூலித்து லட்சுமியிடம் கொடுத்து வந்தார்.
அதுபோல் கொரோனா காலத்தில் லட்சுமியிடம் ரமா ரூ.5அரை லட்சம் பெற்று அப்பகுதியை சேர்ந்தவர்களுக்கு வட்டிக்கு கொடுத்தார். ஆனால் பணம் பெற்றவர்கள் கொரோனா காரணமாக திருப்பி கொடுக்கவில்லை. இதனால் ரமா தனது நகையை அடகு வைத்து ரூ.5 லட்சம் லட்சுமியிடம் கொடுத்தார். மீதி 50 ஆயிரத்தை கொடுக்கவில்லை என தெரிகிறது.
இது தொடர்பாக லட்சுமிக்கும், ரமாவுக்கும் அடிக்கடி பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. அதுபோல் லட்சுமி நேற்று பணம் கேட்க ரமா வீட்டுக்கு 2 ஆண் நபர்களுடன் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது இரு தரப்பினருக்கும் வாய் தகராறு ஏற்பட்டு மோதலாக மாறியது. ரமாவை லட்சுமியும், அவருடன் வந்த 2 பேரும் தாக்கியதாக தெரிகிறது.
அதுபோல் லட்சுமியை ரமா மற்றும் அவரது கணவர் சம்பத் எதிர்வீட்டை சேர்ந்த ஆரோக்கியம்மாள் ஆகிய 3 பேரும் தாக்கியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து இருதரப்பினரும் தனித்தனியே ஒதியஞ்சாலை போலீசில் புகார் செய்தனர். போலீசார் இருதரப்பினர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- நெட்டப்பாக்கம் சாராயக்கடையில் ஒரு வாலிபர் அதிக குடிபோதையில் அங்கு சாராயம் குடித்து கொண்டிருந்தவர்களிடம் தகராறில் ஈடுபட்டு ரகளை செய்வதாக நெட்டப்பாக்கம் போலீசாருக்கு தகவல் வந்தது.
- உடனே போலீசார் அந்த வாலிபரை பிடித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
புதுச்சேரி:
நெட்டப்பாக்கம் சாராயக்கடையில் ஒரு வாலிபர் அதிக குடிபோதையில் அங்கு சாராயம் குடித்து கொண்டிருந்தவர்களிடம் தகராறில் ஈடுபட்டு ரகளை செய்வதாக நெட்டப்பாக்கம் போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ரகளை செய்த வாலிபரை மடக்கி பிடிக்க முயன்றனர்.
அப்போது அந்த வாலிபர் போலீசாரை தள்ளிவிட்டு தப்பி செல்ல முயன்ற போது அங்குள்ள சால்னா கடையில் தடுப்புக்காக வைத்திருந்த இரும்பு தகரத்தில் மீது விழுந்தார்.
உடனே போலீசார் அந்த வாலிபரை பிடித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் நெட்டப்பாக்கம் அருகே ஏரிப்பாக்கம் புதுகாலனியை சேர்ந்த சத்தியன்(வயது34) என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து சத்தியனை போலீசார் கைது செய்தனர்.
புதுவை புதிய பஸ் நிலையம் எதிரே ஒருவர் குடிபோதையில் நின்றுக்கொண்டு அவ்வழியே செல்லும் பொதுமக்களை தகாத வார்த்தைகளால் திட்டி ரகளை செய்து கொண்டிருந்தார். இதுபற்றி தகவல் அறிந்ததும் உருளையன்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் அரக்கோணம் பகுதியை சேர்ந்த வடிவேல்(47) என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து வடிவேலை போலீசார் கைது செய்தனர்.
- மோட்டார் சைக்கிளை காணாமல் லோகநாதன் அதிர்ச்சியடைந்தார். யாரோ மர்ம நபர் மோட்டார் சைக்கிளை திருடி சென்றிருப்பது தெரியவந்தது.
- வாரசந்தை அருகே சாராயக்கடை எதிரே மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு சந்தையில் காய்கறிகள் வாங்கினார்.
புதுச்சேரி:
புதுவை சண்முகாபுரம் அண்ணாவீதியை சேர்ந்தவர் லோகநாதன். இவர் டிராவல்ஸ் வைத்து நடத்தி வருகிறார்.
இவர் புதுவை கடற்கரை சாலையில் நடைபயிற்சி செல்வது வழக்கம். அதுபோல் சம்பவத்தன்று லோகநாதன் கடற்கரை சாலையில் உள்ள துமாஸ் வீதியில் உள்ள ஒரு ஓட்டல் அருகே மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு கடற்கரை சாலையில் நடைபயிற்சிக்கு சென்றார்.
பின்னர் வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிளை காணாமல் லோகநாதன் அதிர்ச்சியடைந்தார். யாரோ மர்ம நபர் மோட்டார் சைக்கிளை திருடி சென்றி ருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து லோகநாதன் ஒதியஞ்சாலை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரைண நடத்தி வருகிறார்கள்.
திருபுவனை சின்னபேட் பகுதியை சேர்ந்த ராஜ துரை(27). இவர் அங்குள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று இவர் உறவினரின் மோட்டார் சைக்கிளை வாங்கி கொண்டு மதகடிப்பட்டு வாரச்சந்தைக்கு குடும்பத்துக்கு தேவையான பொருட்களை வாங்க சென்றார். வாரசந்தை அருகே சாராயக்கடை எதிரே மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு சந்தையில் காய்கறிகள் வாங்கினார்.
பின்னர் வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிளை காணாமல் ராஜதுரை திடுக்கிட்டார். யாரோ மோட்டார் சைக்கிளை திருடி சென்றிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து ராஜதுரை திருபுவனை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- ஆரோவில் சர்வதேச நகரின் 55-ம் ஆண்டுவிழாவை கொண்டாட ஆரோவில்வாசிகள் தயாராகி வருகின்றனர்.
- 8 நாள் விழாவில் மகாலட்சுமி, மகாசரஸ்வதி, மகாகாளி, மகேஸ்வரி ஆகிய பிரபஞ்ச அன்னையின் செயல்வடிவங்களை பிரதிபலிக்கும் வகையில் கொண்டாடப்படுகிறது.
புதுச்சேரி:
புதுவையிலிருந்து 12 கி.மீ. தொலைவில் ஆரோவில் சர்வதேச நகரம் அமைந்துள்ளது.
அன்னையின் முயற்சியால் 1968-ம் ஆண்டு பிப்ரவரி 28-ந் தேதி ஆரோவில் கட்டுமான பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
தாமரை மொட்டு வடிவில் சலவை கல்லால் ஆன ஒரு தாழியில் உலகத்தின் 121 நாடுகள், இந்தியாவின் 25 மாநிலங்களின் மண் இடப்பட்டது. சர்வதேச நகரில் 50 ஆயிம் பேர் வசிக்க திட்டமிட்டு பணிகள் நடந்தது. நகரின் மையத்தில் ஆரோவில் ஆன்மாவாகிய மாத்ரி மந்திர் அமைந்துள்ளது. அதை சுற்றிலும் பூந்தோட்டங்கள் உள்ளன.
இந்த மைய பகுதியை பேரமைதி என அழைக்கின்றனர். இப்போது பல்வேறு நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இங்கு வசித்து வருகின்றனர்.
ஆரோவில் சர்வதேச நகரின் 55-ம் ஆண்டுவிழாவை கொண்டாட ஆரோவில்வாசிகள் தயாராகி வருகின்றனர். நாளை (செவ்வாய்க்கிழமை) அன்னையின் பிறந்தநாள் முதல் ஆரோவில் தினமான 28-ந் தேதி வரை தொடர்ந்து கொண்டாட்டங்கள் நடக்கிறது.
8 நாள் விழாவில் மகாலட்சுமி, மகாசரஸ்வதி, மகாகாளி, மகேஸ்வரி ஆகிய பிரபஞ்ச அன்னையின் செயல்வடிவங்களை பிரதிபலிக்கும் வகையில் கொண்டாடப்படுகிறது.
இதனால் ஆரோவில் சர்வதேச நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது. ஆரோவில் உதயதினமான 28-ந் தேதி போன்பயர் எனப்படும் தீ மூட்டி கூட்டு தியானத்தில் ஆசிரம பக்தர்கள் ஈடுபட உள்ளனர். நாள்தோறும் பல்வேறு விவாதம், சிறப்பு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.






