என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • பாப்ஸ்கோ ஊழியர்களுக்கு நிலுவையில் உள்ள 65 மாத சம்பளத்தை உடனடியாக வழங்கிட வேண்டும்.
    • தலைமைச் செயலகம் எதிரில் கடலில் முழங்கால் அளவு இறங்கி ஊழியர்கள் போராட்டம் நடத்தினர்.

    புதுச்சேரி:

    பாப்ஸ்கோ ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏ.ஐ.டி.யூ.சி. தலைமையில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்க நிர்வாகிகள் தலைமையில் 8-வது நாளாக இன்று தலைமைச் செயலகம் எதிரில் கடலில் முழங்கால் அளவு இறங்கி ஊழியர்கள் போராட்டம் நடத்தினர். ஏ.ஐ.டி.யூ.சி. கொடிகளுடன் அவர்கள் கடலில் இறங்கினர்.

    போராட்டத்திற்கு ஏ.ஐ.டி.யூ.சி. மாநில பொதுச் செயலாளர் சேதுசெல்வம் தலைமை வகித்தார். பாப்ஸ்கோ ஊழியர் சங்க தலைவர் ரமேஷ், செயலாளர், ஜெய்சங்கர், பொருளாளர் பிரபு, ஏஐடியுசி மாநில தலைவர் தினேஷ் பொன்னையா, கவுரவ தலைவர் அபிஷேகம் முன்னிலை வகித்தனர். பாப்ஸ்கோ சங்க நிர்வாகிகள் நடராஜன், முனுசாமி, அமுதவல்லி, பத்மநாபன், ரவி, ஏழுமலை, முருகவேல், வேலு, பாலமுருகன், ஜீவரத்தினம், ராஜூ, விசுவநாதன், குமரகுரு, அமுதா, அம் சவல்லி, நக்கீரன், சத்தியசீலன், ஊழியர்கள் கோவர்தன், குணா, கெஜவரதன், நாராயணன், பாலச்சந்தர், பார்த்திபன், செந்தில், சௌந்தர்ராஜன், காரைக்கால் பகுதியை சேர்ந்த ஜார்ஜ், ஜோசப்அடைக்கலராஜ், பாலாசுப்பிரமணியன் மற்றும் தொழிலாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.

    பாப்ஸ்கோ ஊழியர்களுக்கு நிலுவையில் உள்ள 65 மாத சம்பளத்தை உடனடியாக வழங்கிட வேண்டும். பாப்ஸ்கோ நிறுவனத்தை திறந்து செயல்பாட்டுக்கு கொண்டு வந்து அனைத்து ஊழியர்களுக்கும் வேலை வழங்கி மாதம் தவறாமல் சம்பளம் வழங்கிட வேண்டும் என வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதனால் புதுவை கடற்கரையில் பரபரப்பு ஏற்பட்டது.

    • திருச்சிற்றம்பலம் ஊராட்சிக்குட்பட்ட பகத்சிங் நகரில் வசிக்கும் பழங்குடியின மக்கள் பல ஆண்டுகளாக குடிசை வீடுகளில் வசித்து வருகின்றனர்.
    • கல்வீடு கட்டி தர கோரி ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசனிடம் மனு அளித்தனர்.

    புதுச்சேரி:

    திருச்சிற்றம்பலம் ஊராட்சிக்குட்பட்ட பகத்சிங் நகரில் வசிக்கும் பழங்குடியின மக்கள் பல ஆண்டுகளாக குடிசை வீடுகளில் வசித்து வருகின்றனர். இதனால் மழை உள்ளிட்ட பேரிடர் காலங்களில் பழங்குடியினர் பல இன்னலுக்கு ஆளாகி வந்தனர். இந்நிலையில் கல்வீடு கட்டி தர கோரி ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசனிடம் மனு அளித்தனர்.

    எனவே வட்டார வளர்ச்சி அதிகாரிகள் முயற்சியில் பழங்குடியினர் நலத் துறையில் தலா ரூ.3 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு 22 வீடுகள் கட்டுவதற்கான ஆணை வழங்கப்பட்டது. இன்று பகத்சிங் நகரில் வீடு கட்டுவதற்கான பூமி பூஜை நடந்தது.

    இதில் வானூர் ஒன்றிய சேர்மன் உஷா பி.கே.டி முரளி, ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன், கவுன்சிலர் புவனேஸ்வரி ராமதாஸ், ஒன்றிய தி.மு.க. செயலாளர் பி.கே.டி முரளி வட்டார வளர்ச்சி அதிகாரிகள் மணிவாசகம், முருகன் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் குமார் ஆகியோர் பூமி பூஜை செய்து வைத்து கட்டுமான பணியை தொடங்கி வைத்தனர்.

    இதில் பழங்குடியின மக்கள் மற்றும் தன்னார்வலர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • காலாப்பட்டு தொகுதி எம்.எல்.ஏ. கல்யாண சுந்தரத்தின் கருவடிக்குப்பம் ஸ்பைடர் விளையாட்டுக் கழகமும் அரியாங்குப்பம் பாரதிதாசன் கைப்பந்து கழகமும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன.
    • இறுதி போட்டியில் கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., ஏ.பி.ஆர். அணி தலைவர் ரமணி பூபதி ஆகியோர் பங்கேற்றனர்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில அளவிலான சீனியர் ஆண்கள் கைப்பந்து போட்டி அரியாங்குப்பம் ஏ.பி.ஆர். விளையாட்டு கழகத்தின் சார்பில் நடைபெற்றது.

    3 நாட்கள் நடந்த இப்போட்டியில் புதுவை மாநில முன்னணி கைப்பந்து அணிகள் விளையாடின. இதில் காலாப்பட்டு தொகுதி எம்.எல்.ஏ. கல்யாண சுந்தரத்தின் கருவடிக்குப்பம் ஸ்பைடர் விளையாட்டுக் கழகமும் அரியாங்குப்பம் பாரதிதாசன் கைப்பந்து கழகமும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன.

    இறுதி போட்டியில் கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., ஏ.பி.ஆர். அணி தலைவர் ரமணி பூபதி ஆகியோர் பங்கேற்றனர். 3 போட்டிகளில் முதல் ஆட்டம் ஸ்பைடர் 25-23, 2-வது ஆட்டம் பாரதிதாசன் 25-21, 3-வது ஆட்டம் ஸ்பைடர் 25-19 என்ற புள்ளிகள் பெற்றது. பாரதிதாசன் அணி ஒரு புள்ளிகள் பெற்று 2-ம் இடத்தையும், ஸ்பைடர் அணி 2 புள்ளிகள் எடுத்து முதல் இடத்தையும் பிடித்தது. வெற்றி பெற்ற அணிகளுக்கு கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ. சுழற்கோப்பை, பரிசு பொருட்களை வழங்கினார். இந்திய கம்யூனிஸ்டு மாநில பொறுப்பாளர் கீதநாதன் நன்றி கூறினார்.

    • புதுவை கலிதீர்தாள் குப்பம் மணக்குள விநாயகர் இன்ஸ்ட்டியூட் ஆப் டெக்னாலஜி, புதுவை இன்டெக்ரா நிறுவனம் சார்பில் வளாக வேலை வாய்ப்பு முகாம் நடத்தியது.
    • மாணவ-மாணவிகள் 150-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பலர்வேலை வாய்ப்பை பெற்று பயன் அடைந்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை கலிதீர்தாள் குப்பம் மணக்குள விநாயகர் இன்ஸ்ட்டியூட் ஆப் டெக்னாலஜி, புதுவை இன்டெக்ரா நிறுவனம் சார்பில் வளாக வேலை வாய்ப்பு முகாம் நடத்தியது.

    இந்த வேலை வாய்ப்பு முகாமிற்கு வருகை தந்த அந்நிறுவன மேலாளர்கள் இந்துமதி, தீபன் சக்கரவர்த்தி மற்றும் அருண் ஆகியோர் பங்கேற்றனர். எழுத்து தேர்வு மற்றும் நேர்முகதேர்வு ஆகிய சுற்றுக்களாக இந்த வளாக வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு மணக்குள விநாயகர் கல்வி குழும தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் தனசேகரன், துணை தலைவர் சுகுமாறன், மற்றும் செயலாளர் டாக்டர். நாராயணசாமி கேசவன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

    முகாமை கல்லூரி முதல்வர் மலர்க்கண் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அனைத்து துறை சார்ந்த வேலை வாய்ப்பு ஒருங்கிணைப்பாளர்களும் கலந்து கொண்டனர். இந்த முகாமில் 2023-ம் ஆண்டு, இளங்கலை மற்றும் மேலாண்மை துறை பயிலும் மாணவ-மாணவிகள் 150-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பலர்வேலை வாய்ப்பை பெற்று பயன் அடைந்தனர்.

    நிகழ்ச்சி ஏற்பாடுகளை கல்லூரி வேலைவாய்ப்பு துறை அதிகாரிஜெயக்குமார் செய்து இருந்தார்.

    • வீரன்குளத்தை அம்ருத் திட்டத்தின் கீழ் ரூ. 93 லட்சம் மதிப்பீட்டில் சீரமைத்து அழகுபடுத்தும் பணி நடைபெற உள்ளது.
    • மின் விளக்குகளுடன் கூடிய நடைபாதை மற்றும் ஓய்வெடுக்க நாற்காலி வசதிகள் போன்ற பணி நடைபெற உள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை நகராட்சி கொம்பாக்கம் ஏரிக்கரை செல்லும் வழியில் உள்ள வீரன்குளத்தை அம்ருத் திட்டத்தின் கீழ் ரூ. 93 லட்சம் மதிப்பீட்டில் சீரமைத்து அழகுபடுத்தும் பணி நடைபெற உள்ளது.

    இதற்கான பூமிபூஜை விழா நடந்தது. எதிர்கட்சித் தலைவர் சிவா பணியை தொடங்கி வைத்தார் புதுவை நகராட்சி ஆணையர் ரொமில் சிங் டாங்க், செயற்பொறியாளர் சிவபாலன், உதவிப் பொறியாளர் வெங்க டாஜலபதி, இளநிலைப் பொறியாளர் ஞானசேகரன் தி.மு.க.தொகுதி செயலாளர் மணிகண்டன்,பொதுக்குழு உறுப்பினர்கள் ராமசாமி, செல்வநாதன், தர்மராஜ், தொகுதி துணை செயலாளர்கள் ஹரி கிருஷ்ணன், ஜெகன்மோகன் உள்பட பலர் பங்கேற்றனர்.

    குளத்தைச் சுற்றி கான்கிரீட் சுவர் எழுப்பி பொதுமக்கள் நடந்து செல்ல ஏதுவாக மின் விளக்குகளுடன் கூடிய நடைபாதை மற்றும் ஓய்வெடுக்க நாற்காலி வசதிகள் போன்ற பணி நடைபெற உள்ளது.

    • அ.தி.மு.க.வின் உண்மையான விசு வாசிகள் ஜெயலலிதாவை மட்டுமே கட்சி நிரந்தர பொதுச் செயலாளர் என்று இன்றளவும் கூறி வருகின்றனர்.
    • ஒரு சுயநல கூட்டத்திற்கு ஜெயலலிதா ஆன்மா கொடுத்த சம்பட்டி அடி இந்த தடையாகும்.

    புதுச்சேரி:

    முன்னாள் எம்.எல்.ஏ. ஒம்சக்தி சேகர் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

    குறுக்கு வழியில் அடைய நினைக்கும் எந்த ஒரு பொருளும் பதவியும் நிலைக்காது என்பதற்கு உதாரணமாக அ.தி.மு.க. பொதுசெயலாளர் பதவிக்கான தேர்தலுக்கு நீதிமன்றம் அளித்த தடை அமைந்துள்ளது. அ.தி.மு.க.வின் உண்மையான விசு வாசிகள் ஜெயலலிதாவை மட்டுமே கட்சி நிரந்தர பொதுச் செயலாளர் என்று இன்றளவும் கூறி வருகின்றனர்.

    இந்த நிலையில் அந்தப் பதவியை குறுக்கு வழியில் தனது சுயநலத்திற்காக கபலிகரம் செய்ய முயற்சித்த ஒரு சுயநல கூட்டத்திற்கு ஜெயலலிதா ஆன்மா கொடுத்த சம்பட்டி அடி இந்த தடையாகும்.

    ஜெயலலிதா தனது உண்மையான விசுவாசியாக சுட்டிக்காட்டிய கட்சி ஒருங்கிணைப்பாளர், கட்சி பொருளாளர் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பி.எஸ். கரத்தை என்றும் வலுப்படுத்த புதுவை மாநிலக் கழகமும் தொண்டர்களும் துணை நிற்போம் என உறுதி அளித்து இந்த நீதிமன்ற தடையை வரவேற்று மகிழ்கிறோம்.

    இவ்வாறு ஒம்சக்தி சேகர் அறிக்கையில் கூறியுள்ளார்.

    • காங்கிரஸ் கட்சியினர் ராகுல் காந்தி மேற்கொண்ட பாரத் ஜூடோ யாத்திரைக்கு ஆதரவாக கையோடு கைகோர்க்கும் ஒற்றுமை நடைப்பயணம் மேற்கொண்டனர்.
    • ஒற்றுமை நடை பயணத்திற்கு முன்னாள் அமைச்சர் ஷாஜகான் தலைமை தாங்கினார்.

    புதுச்சேரி:

    காங்கிரஸ் கட்சியினர் ராகுல் காந்தி மேற்கொண்ட பாரத் ஜூடோ யாத்திரைக்கு ஆதரவாக கையோடு கைகோர்க்கும் ஒற்றுமை நடைப்பயணம் மேற்கொண்டனர். இதில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன், வைத்தியநாதன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. அனந்தராமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    காலாப்பட்டு தொகுதி கனக ெசட்டிக்குளத்தில் தொடங்கிய ஒற்றுமை நடை பயணத்திற்கு முன்னாள் அமைச்சர் ஷாஜகான் தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் கந்தசாமி, முன்னாள் எம்.எல்.ஏ. கார்த்திகேயன் மற்றும் மாநில, வட்டார தொகுதி காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளும், மகளிர் காங்கிரஸ், இளைஞர் காங்கிரஸ், மாணவர் காங்கிரஸ் நிர்வாகிகளும் காலப்பட்டு தொகுதி காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளும், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

    இதேபோல் உருளையன்பேட்டையில் நடைபெற்ற நடைபயணத்திற்கு, வட்டாரத் தலைவர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். சீனியர் துணைத் தலைவர் தேவதாஸ், மாநில பொதுச் செயலாளர்கள் வேல்முருகன், தனுசு, ரகு மான், இளையராஜா, வக்கீல் அணி தலைவர் மருதுபாண்டியன், முன்னாள் இளைஞரணி செயல் தலைவர் வேல்முருகன், இளைஞரணி மாநில தலைவர் ஆனந்தபாபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    புதுவை காந்தி வீதியில் தொங்கிய நடை பயணம், புஸ்சி வீதி, பாரதி வீதி, அண்ணா சாலை, கோவிந்தசாலை வழி யாக பாலாஜி தியேட்டர் அருகே முடிவடைந்தது.நடைபயணத்தில், அதானிக்கு ஆதரவாக செயல் படும் மத்திய அரசை கண்டித்தும், பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கியாஸ் விலை உயர்வைக் கண்டித்து கோஷம் எழுப்பப்பட்டது.

    • தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் 5 ஆண்டு காலம் முதல்-அமைச்சராக இருந்த நாராயணசாமி ஒருமுறை கூட முழுமையான பட்ஜெட் போடாமல் அறிவித்த எந்த திட்டத்தையும் செயல்படுத்தாமல் தனது காலத்தை கடந்து சென்றார்.
    • முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி பொய்யான தகவலை எடுத்துக் கூறி குழப்பத்தை ஏற்படுத்துகிறார்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் நிருபர்களிடம் கூறியதாவது:- கடந்த தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் 5 ஆண்டு காலம் முதல்-அமைச்சராக இருந்த நாராயணசாமி ஒருமுறை கூட முழுமையான பட்ஜெட் போடாமல் அறிவித்த எந்த திட்டத்தையும் செயல்படுத்தாமல் தனது காலத்தை கடந்து சென்றார்.

    நாராயணசாமி தலைமையிலான அரசு புதுவை மாநிலத்தின் இருண்ட ஆட்சி காலமாகும். தேர்தலில் போட்டியிடாமல் பதுங்கிக் கொண்டவர் முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி அறிவித்த அனைத்து திட்டங்களையும் செயல்படுத்தும், பட்ஜெட்டில் வரலாற்று சிறப்புமிக்க பல்வேறு திட்டங்களை அறிவித்த எங்கள் கூட்டணியின் முதல்-அமைச்சரை பற்றி தரம் தாழ்ந்து விமர்சனம் செய்வதும் பொய்யான பல கருத்துக்களை எடுத்துக் கூறுவதும் தகுதியற்ற செயலாகும்.

    பட்ஜெட்டில் அறிவித்துள்ள திட்டங்களை செயல்படுத்த பணம் எங்கிருந்து வரும் என ஒரு சிறு பிள்ளைத்தனமான கேள்வியை நாராயணசாமி கேட்கின்றார். பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள புதிய நலத்திட்ட உதவிகள் என்பது சுமார் ரூ 300 கோடி அளவில் தான் வரும். ரூ 300 கோடி என்பது மொத்த பட்ஜெட்டில் 3 சதவீதம் தான்,

    மொத்த பட்ஜெட்டில் எப்பொழுதும் 100 சதவீதத்தை எந்த அரசாலும் செலவு செய்ய முடியாது. பல துறைகளில் 5 முதல் 10 சதவீதம் குறைவாக செலவு செய்யக்கூடிய பணத்தை திருத்தி அமைக்கப்பட்ட பட்ஜெட்டில் மூலம் இந்த திட்டங்களை நிறைவேற்ற முடியும்.அப்படியே இல்லை என்றாலும் கலால் துறையில் சாதாரண வரி விதிப்பின் மூலம் இந்த திட்டங்களை செயல்படுத்த முடியும்.

    அறிவிக்கப்பட்ட நல்ல திட்டங்களை பாராட்டு மனம் இல்லாமல் மக்களிடம் முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி பொய்யான தகவலை எடுத்துக் கூறி குழப்பத்தை ஏற்படுத்துகிறார்.

    5 ஆண்டு காலம் முதல்-அமைச்சராக இருந்த நாராயணசாமி சட்டமன்றத் தேர்தல் என ஒரு போர் வரும் போது முன்னின்று தளபதியாக சண்டை போட வேண்டியவர் தேர்தலில் போட்டியிடாமல் புறமுதுகிட்டு ஓடி காங்கிரஸ் கட்சியை புதுவையில் காணாமல் செய்துவிட்டார்.

    முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமிக்கு காங்கிரஸ் கட்சியின் மீது உண்மையில் அக்கறை இருக்குமேயானால் வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியின் சார்பில் நாராயணசாமி போட்டியிட தயாரா ? அப்படி அவர் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டால் அவரை எதிர்கொள்ள அ.தி.மு.க. தயாராக உள்ளது. இவ்வாறு அன்பழகன் கூறினார்.

    பேட்டியின் போது கிழக்கு மாநில கழக பொருளாளர் ரவி பாண்டுரங்கன், புதுவை நகர செயலாளர் அன்பழகன் உடையார்,மேற்கு மாநில அம்மா பேரவை செயலாளர் சுத்துக்கேணி பாஸ்கரன், மாநில அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் பாப்புசாமி ஆகியோர் உடனிருந்தனர்.

    • தற்போது நான் முதலமைச்சராக வந்து 2 வருடங்கள்தான் ஆகின்றது. உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறுவது என்ன நியாயம்?
    • ரேஷன் கடை ஊழியர்கள் தங்களுக்கு முடிவு தெரியும் வரை அங்கிருந்து கலைந்து செல்லமாட்டோம் என கூறினர்.

    புதுச்சேரி:

    புதுவை மாநிலத்தில் 326 ரேஷன் கடைகள் உள்ளது. இதில் 600-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை செய்து வருகின்றனர்.

    கடந்த காலங்களில் பொதுமக்களுக்கு இலவச அரிசி வழங்கியதில் கிடைத்த கமிஷன் அடிப்படையில் ரேஷன் ஊழியர்களுக்கு சம்பளம் போடப்பட்டு வந்தது. அப்போதைய கவர்னர் கிரண்பேடி, அரிசிக்கு பதில் பணம் வழங்க உத்தரவிட்டார்.

    இதனால் ரேஷன் கடை ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாமல் போனது. இதனிடையே, கொரோனா காலங்களில் மத்திய அரசு வழங்கிய அரிசியை கமிஷன் அடிப்படையில் விநியோகிக்கும் நடவடிக்கையில் ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டனர்.

    ஆனால் அந்த ஊதியமும் இதுவரை வழங்கப்படவில்லை. இதுவரை 55 மாதங்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை.

    இவர்கள் தங்களுக்கு சம்பளம் வழங்க கோரி பலகட்ட போராட்டங்கள் நடத்தியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. நடைபெற்று வரும் சட்டமன்ற கூட்டத் தொடரில் இந்த விவகாரம் எதிரொலித்தது.

    இதுபற்றி எம்.எல்.ஏ.க்கள் பேசுகையில், ரேஷன் கடைகளை மறுபடியும் திறந்து பொருட்களை விநியோகிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    ஆனால் முதலமைச்சர் ரங்கசாமி எந்த பதிலும் அளிக்கவில்லை. இந்நிலையில் இன்று காலை 8 மணிக்கு ரேஷன் கடை ஊழியர்கள் தங்களது குடும்பத்தினருடன் கோரி மேடு அப்பா பைத்தியசாமி கோவில் பின்புறம் உள்ள முதலமைச்சர் ரங்கசாமியின் இல்லத்தை 100-க்கனக்கானோர் முற்றுகையிட்டனர்.

    ரேஷன் கடைகளை திறந்து நிலுவை சம்பளத்தை வழங்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். அப்போது முதலமைச்சர் ரங்கசாமி டென்னீஸ் விளையாடிக் கொண்டிருந்தார். இதனால் ஊழியர்கள் தொடர்ந்து கோஷம் எழுப்பியபடி அமர்ந்து இருந்தனர்.

    இதனிடையே விளையாட்டை முடித்து வீடு திரும்பிய முதலமைச்சரிடம் ஊழியர்கள், 15 ஆண்டுகளாக வேலை செய்து வருகிறோம். தற்போது எங்களுக்கு நிரந்தர வேலையும் இல்லை சம்பளமும் வழங்கவில்லை. மருத்துவமனை ஊழியர்களை நிரந்தரம் செய்தது போல் தங்களையும் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தினர்.

    அப்பொழுது முதலமைச்சர் ரங்கசாமி 7 வருடங்களாக என்ன செய்தீர்கள்.? தற்போது நான் முதலமைச்சராக வந்து 2 வருடங்கள்தான் ஆகின்றது. உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறுவது என்ன நியாயம்? என ஊழியரிடம் பேசிவிட்டு வீட்டிற்குள் சென்றுவிட்டார்.

    இதனையடுத்து அவர்களை கலைந்து செல்லும்படி போலீசார் கூறினர். ஆனால் ரேஷன் கடை ஊழியர்கள் தங்களுக்கு முடிவு தெரியும் வரை அங்கிருந்து கலைந்து செல்லமாட்டோம் என கூறினர். அப்போது போலீசாருக்கும், ரேஷன் கடை ஊழியர்களுக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போலீசார் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

    இதன் பிறகு ரேஷன் கடை ஊழியர்கள் கோரிமேடு போலீஸ் நிலையம் எதிரில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அவர்களை போலீசார் அங்கிருந்தும் கலைந்து போகும்படி எச்சரிக்கை விடுத்தனர். ஆனால் ஊழியர்கள் சாலை மறியலை கைவிடாமல் தொடர்ந்தனர்.

    இதனையடுத்து சாலை மறியலில் ஈடுபட்ட ரேஷன் கடை ஊழியர்களையும் அவர்களது குடும்பத்தினரையும் போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்தனர்.

    ஏற்கனவே இந்திரா காந்தி அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரியில் பணிபுரியும் 700-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி மருத்துவமனை மேலே ஏறி நின்று தற்கொலை முயற்சி போராட்டம் நடத்தினர். அன்று மாலை அனைவருக்கும் பணி நிரந்தரம் செய்து அதற்கான உத்தரவை முதலமைச்சர் ரங்கசாமி வழங்கினார்.

    இதனால் பல்வேறு துறைகளில் பணி நிரந்தரம் செய்யப்படாமல் இருக்கும் ஊழியர்கள் இதுபோன்ற போராட்டங்கள் மூலம் பணி நிரந்தரம் பெற்று விடலாம் என்று எண்ணத்தால் புதுவை முழுவதுமே போராட்டக் களமாக மாறி வருவது குறிப்பிடத்தக்கது.

    ஆறுபடை வீடு தொழில் நுட்பக் கல்லூரி வளாகம் ஆகியவற்றில் அமைந்துள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் துறைகளுக்கு ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌ஐ.எஸ்.ஓ. கல்வி சார்ந்த சர்வதேச தர மேலாண்மை மறு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    விநாயகா மிஷன் பல்கலைக் கழகத்திற்கு உட்பட்ட சேலம் விம்ஸ் மருத்துவமனை வளாகம், புதுவை ஆறுபடை வீடு மருத்துவமனை வளாகம், மற்றும் சென்னை ஆறுபடை வீடு தொழில் நுட்பக் கல்லூரி வளாகம் ஆகியவற்றில் அமைந்துள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் துறைகளுக்கு ஐ.எஸ்.ஓ. கல்வி சார்ந்த சர்வதேச தர மேலாண்மை மறு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

    இந்தியாவின் தரக்கட்டுப் பாட்டு அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட தெற்கு ஆசியாவின் டி.யூ.வி.,எஸ்.யூ.டி. அமைப்பானது கடந்த 2019-ம் ஆண்டு அலைடு ஹெல்த் சயின்ஸ் துறைகளின் தரத்தை ஆராய்ந்து சர்வதேச தரநிலை மேலாண்மை சான்றிதழை வழங்கியது.

    அப்போது தரச் சான்றிதழை பெற்ற முதல் கல்வி நிறுவனம் இதுவே ஆகும். அதனைத் தொடர்ந்து மறு சான்றிதழுக்கான ஆராய்வும் நடத்தப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே இம்மறு சான்றிதழினை பெற்ற முதல் கல்வி நிறுவனம் விநாயகா மிஷன் அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையே. என நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து துறைகளின் டீன் மற்றும் பேராசிரியர் டாக்டர் செந்தில்குமார் கூறியதாவது:-

    இந்தியாவிலேயே இச்சான்றிதழை பெற்ற முதல் நிறுவனம் அலைடு ஹெல்த் சயின்ஸ் என்றார். இதன்மூலம் சிறந்த கல்வியை வழங்குவதிலும், மாணவர்கள் நலனை மேம்படுத்துவதிலும் இத்துறைகள் சிறந்து விளங்குகிறது என்பது உறுதி செய்துள்ளது என டீன் தெரிவித்து உள்ளார்.

    இத்தகைய தரச்சான்று பெறுவதற்கு சிறப்பாக செயலாற்றி வரும் துறையின் டீன் செந்தில்குமாருக்கு பல்கலைக்கழகத்தின் வேந்தர் டாக்டர். கணேசன் மற்றும் இயக்குனர் டாக்டர். அனுராதா கணேசன் ஆகியோர் தங்களின் வாழ்த்து தெரிவித்து பாராட்டினர்.

    • முதல்-அமைச்சர் ரங்கசாமி, சமூக நலத்துறை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் ஆகியோருக்கு சமூக அமைப்புகள் நன்றியும், பாராட்டும் தெரிவிக்கப்பட்டது.
    • மிகவும் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு பாதுகாப்புக் குழு பொறுப்பாளர் சுகானந்தம் ஆகியோர் சால்வை அணிவித்து நன்றியும் பாராட்டும் தெரிவித்தனர்.

    புதுச்சேரி:

    குரூப்-பி அரசிதழ் பதிவுப் பெறாத பணியிடங்களில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர், மீனவர், முஸ்லிம், பிற்படுத்தப்பட்ட பழங்குடியினருக்கு இடஒதுக்கீடு வழங்கி அரசாணை வெளியிடப்பட்டது.

    இதற்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி, சமூக நலத்துறை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் ஆகியோருக்கு சமூக அமைப்புகள் நன்றியும், பாராட்டும் தெரிவிக்கப்பட்டது.

    மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் சுகுமாரன், மக்கள் வாழ்வுரிமை இயக்கம் செயலாளர் ஜெகன்நாதன், தமிழர் களம் செயலாளர் அழகர், புரட்சியாளர் அம்பேத்கர் தொண்டர் படை தலைவர்பாவாடைராயன், பழங்குடி மக்கள் விடுதலை இயக்கம் செயலாளர் ஏகாம்பரம், அகில இந்திய மஜ்லிஸ் கட்சித் தலைவர் சம்சுதீன், புதுவை தமிழ் எழுத்தாளர் கழகம் செயலாளர் தமிழ்நெஞ்சன், தமிழ் பாதுகாப்புக் குழுத் தலைவர் சுகுமாரன், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு பாதுகாப்புக் குழு பொறுப்பாளர் சுகானந்தம் ஆகியோர் சால்வை அணிவித்து நன்றியும் பாராட்டும் தெரிவித்தனர்.

    • புதுவை பிசினஸ் நெட்வொர்க் இன்டர்நேஷனல் (பி.என்.ஐ) டாபோடில்ஸ் அமைப்பு உறுப்பினர்களின் வாராந்திர சந்திப்பு நிகழ்ச்சி மற்றும் கல்லூரி மேலாண்மை துறை மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • மாணவர்களின் தொழில்துறை ரீதியான கேள்விகளுக்கு விளக்கம் அளித்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை கலிதீர்த்தா–ள்குப்பம் மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (எம்.ஐ.டி. கல்லூரி)யில், புதுவை பிசினஸ் நெட்வொர்க் இன்டர்நேஷனல் (பி.என்.ஐ) டாபோடில்ஸ் அமைப்பு உறுப்பினர்களின் வாராந்திர சந்திப்பு நிகழ்ச்சி மற்றும் கல்லூரி மேலாண்மை துறை மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் பி.என்.ஐ டாபோடில்ஸ் அமைப்பின் தலைவர் ஆனந்த், உப தலைவர் ஜெயசுதர்ஷன், செயலாளர் மற்றும் பொருளாளர்கதிரவன் தலைமையில் அனைத்து உறுப்பினர்களுடன் இக்கூட்டம் நடைபெற்றது.

    முடிவில் பி.என்.ஐ டாபோடில்ஸ் அமைப்பின் நிர்வாக குழு உறுப்பினர்கள் அன்பரசு, சுரேஷ் சங்கரன், ரகுநந்தன், டாக்டர்.கணேசன், டாக்டர்.ஜே.சந்தான லக்ஷ்மி, மற்றும் சுரேஷ் ஜெய்ஸ்வால் ஆகியோர் அடங்கிய குழு, கல்லூரி மேலாண்மை துறை மாணவர்களுடன் கலந்துரையாடினர். மேலும் நடுவர் பகுத்தறிவு முன்னிலையில் மாணவர்களின் தொழில் துறை ரீதியான கேள்விகளுக்கு விளக்கம் அளித்தனர்.

    எம்.ஐ.டி கல்லூரி முதல்வர் மலர்க்கண், வேலைவாய்ப்புத் துறை அதிகாரி ஜெயக்குமார், மேலாண்மை துறை தலைவர் பேராசிரியர் பாஸ்கரன், தொழில் முனைவோர் மேம்பாட்டு துறை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் வைத்தீஸ்வரன், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஆகியோர் பார்வையாளர்களாக பங்கேற்றனர்.

    நிகழ்ச்சிக்கு கல்லூரி தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் தனசேகரன், கல்லூரி துணை தலைவர் எஸ்.வி.சுகுமாறன் மற்றும் செயலாளர் டாக்டர். நாராயணசாமி கேசவன் ஆகியோர் தலைமை தாங்கினர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கல்லூரி வேலை வாய்ப்பு துறை ஒருங்கிணைப்பாளர்கள் செய்திருந்தனர்.

    ×