என் மலர்tooltip icon

    கதம்பம்

    காவிரி ஆற்றைக் ‘காவேரி’ என்று வழங்குவதும் உண்டு. இகரம் எகரம் ஆகும் இசைத்தன்மையால் ‘வி’ என்பது ‘வே’ ஆகி ‘காவேரி’ என்று ஆகிவிட்டது.
    பண்டைத் தமிழகம் இன்றைய ஆந்திரத்தின் கிருட்டிணை ஆறு வரைக்கும் பரவியிருந்தது.

    அக்காலத்தில் தமிழறிந்த பகுதிக்குள் பாய்ந்த ஆறுகள் அனைத்திற்கும் தமிழ்ப் பெயர்களே இருந்தன.

    பிற்காலத்தில் வடமொழிப் பெயர்கள் நிலைத்துவிட்டன.

    ஆந்திரத்தின் கிருட்டிணை (கிருஷ்ணா) ஆற்று நீர் கரிசல் நிலத்தில் பாய்ந்து வருவதால் கரிய நிறத்தோடு இருக்கும். நீரின் அந்தக் கருப்பு நிறத்தை உணர்த்தும் விதமாகவே கண்ணனின் நிறத்தோடு தொடர்புபடுத்தி ‘கிருட்டிணை’ என்ற வடமொழிப்பெயர் நிலைத்தது.

    கிருட்டிணை ஆற்றின் முந்தைய தமிழ்ப்பெயர் ‘கரும்பெண்ணை’ என்பதாகும்.

    பெண்ணை என்றால் நல்ல நீர்ப்பெருக்குடைய ஆறு என்று பொருள்.

    காவிரி ஆற்றைக் ‘காவேரி’ என்று வழங்குவதும் உண்டு. இகரம் எகரம் ஆகும் இசைத்தன்மையால் ‘வி’ என்பது ‘வே’ ஆகி ‘காவேரி’ என்று ஆகிவிட்டது.

    வடமொழியிலும் காவிரி என்று வழங்காமல் காவேரி என்றே வழங்குவர்.

    கா என்றா சோலை. செல்லுமிடமெல்லாம் ‘சோலைகளை விரித்துச் செல்பவள்’ என்ற பொருளில் அமைந்த பெயர்தான் காவிரி.

    காவிரிக்கு வழங்கப்படும் இன்னொரு பெயர் ‘பொன்னி.’

    தாமிரபரணி என்னும் ஆற்றுப்பெயரும் வடமொழிதான். அதற்குத் தமிழில் வழங்கப்பட்ட பெயர் ‘தண்பொருநை.’ பாரதியார் பாடிய பொருநை ஆறு, தண்பொருநை ஆற்றைக் குறிப்பதுதான்.

     தண்மை என்றால் குளிர்ச்சி என்று பொருள். குளிர்ந்த நீர் பாயும் ஆறு என்ற பொருளில் வழங்கப்படுகிறது.

    வைகை ஆற்றின் தூய பெயர் ‘வையை’ என்பதாம்.

    ‘வையை சூழ்ந்த வளங்கெழு வைப்பின்’ என்கிறது புறநானூறு (71).

    வையை என்பதே நாளடையில் வைகை என்று மருவியது.

    கொசஸ்தலை ஆற்றின் பெயரும் வடமொழிதான்.  அதன் தமிழ்ப்பெயர் ‘கொற்றலை.’

    சிறு சிறு அலைகள் மோதி விளையாடும் ஆறு என்ற பொருளில் அமைந்தது.

    பவானி என்பதும் வடமொழி.

    பவானி ஆற்றின் தமிழ்ப்பெயர் ‘வானி ஆறு’ என்பதாம். வானி எப்படியோ பவானி என்று திரிந்துவிட்டது.

    ‘சாந்து வரு வானி நீரினும்’ என்கிறது பதிற்றுப் பத்து (86).

    இன்றைக்கும் பவானி ஆற்றங்கரையில் கீழ்வானி, மேல்வானி, பூவானி ஆகிய பெயர்களில் ஊர்கள் இருக்கின்றன.

    இது பெரிய வானி ஆறு.

    இன்னொன்று சிறிய வானி ஆறு. அந்தச் சிறிய வானி ஆறுதான் ‘சிறுவானி ஆறு’ கோவைக்கு நீர் கொடுப்பது. சிறுவானி ஆற்றினைச் ‘சிறுவாணி’ என்று எழுதுவது பிழையாகும்.

    அமராவதி ஆற்றின் தமிழ்ப்பெயர் ‘ஆன்பொருநை.’

    ஆவினங்கள் மேய்ந்து திகழுமாறு பாயும் ஆறு என்ற பொருளில் அமைந்தது ஆன்பொருநை.

    ‘பேரியாறு’ என்ற ஆறு மேற்குத் தொடர்ச்சி மலைகளில் பாய்கிறது. அதைத்தான் ‘பெரியாறு’ என்கிறார்கள். பேரி என்றால் முரசு. ஜெயபேரிகை என்போம். வெற்றி முரசுபோல் ஆர்ப்பரித்தபடி பாயும் ஆறு என்ற பொருளில் ‘பேரியாறு’ எனப்பட்டது.

    அடையாறில், வெள்ளப் பெருக்கின்போது தேனடைகள் மிதந்து சென்றிருக்கின்றன. அதனால் அப்பெயர் வந்தது.  அடையாறு என்பதனை ‘அடையார்’ என்று தவறாக எழுதுகிறோம்.

    கூவம் என்றால் கிணறு.

    வழியோரங்களில் கிணற்று நீர் வளத்தினைப் பெருக்கியபடி பாய்ந்ததால், கூவம் ஆற்றுக்கு அப்பெயர் வந்தது.

    - கவிஞர் மகுடேஸ்வரன்
    நீங்கள் அன்புக்காகப் பிறரைச் சார்ந்திருந்தால் அது துன்பத்தையே கொடுக்கும். சார்ந்திருப்பது ஒருவகை அடிமைத்தனம்தான். இதனால், நீங்கள் உங்கள் மன ஆழத்தில் அவரை வஞ்சம் தீர்க்க முயலுவீர்கள். அதற்கு என்ன வழி என்று தேடுவீர்கள்.
    கேள்வி: ஓஷோ, இந்த உலகத்தில் சண்டை போடாத கணவன் - மனைவி உண்டா? இதற்கு என்ன காரணம் ?

    பதில்: அன்பு அல்லது காதல் என்பது இரு வகைப்படும்.. 1, தேவையான அன்பு 2, அன்பளிப்பான அன்பு.

    இந்தத் தேவைக்கான அன்பு அல்லது குறையுள்ள அன்பு எப்பொழுதும் பிறரைச் சார்ந்தே இருக்கும். இது முதிர்ச்சி அடையாத அன்பு. இது உண்மையான அன்பு கிடையாது.

    இது தேவையை அடிப்படையாகக் கொண்டது. இதற்கு நீங்கள் பிறரை ஒரு கருவியாக உபயோகிக்கிறீர்கள். அவரை அதிகாரம் செய்கிறீர்கள்.  உங்கள் இஷ்டப்படி அவரை நடக்கச் செய்கிறீர்கள்.

    இதனால், அவருடைய சுதந்திரம் பாதிக்கிறது. இதைப்போலத்தான் மற்றவரும் செயல்படுகிறார்கள்.  நீங்கள் அவரை உடைமையாக்கப் பார்க்கிறீர்கள். அவரும் உங்களை அப்படியே ஆக்க நினைக்கிறார்.

    இப்படி அடுத்தவர்களை உபயோகப்படுத்த நினைப்பது அன்பற்ற செயல் . ஆனால், அது அன்பு போலவே தோற்றம் அளிக்கும். அது ஒரு போலியான அன்பு. ஆனால் 100- க்கு 99 சதவிகிதம் மக்கள் இதைத்தான் உண்மையான அன்பு என்று கருதி வருகின்றனர்.

    ஏனென்றால், இந்தப் போலியான அன்பை  நீங்கள் உங்கள் குழந்தைப்பருவம் தொட்டே கற்று வருகிறீர்கள். ஒரு குழந்தை தன் தாயிடம் அன்பைத்தான் எதிர்பார்கிறது. அது தாயைச் சார்ந்தே வளருகிறது. அந்தக் குழந்தை தன் தாயின்மீது வைக்கும் அன்பு இந்தக் குறையுள்ள அன்புதான். அது தன் வளர்ச்சிக்காகத் தாயை நேசிக்கிறது. இதை யார் செய்தாலும், அவரைத் தாய் என்றே அது நேசிக்கும்.

    இவர்கள் வளர்ந்த பிறகும், அன்புக்காகப் பிறரை நாடுகிறார்கள். இவர்கள் மனதளவில் வளரவே இல்லை. முதலில் தாய், பிறகு காதலி அல்லது மனைவி.

    எப்பொழுது ஒருவன், பிறரிடம் அன்பை எதிர்பாக்காமல் தானே பிறரிடம் அன்பு செலுத்துகிறானோ அப்போது அன்பில் வளர்ச்சி அடைந்தவனாக ஆகிறான். அவனிடம் ஏற்பட்ட அன்பு நிறைந்து வழிகிறது. அவன் அதைப் பிறரோடு பங்கிட்டு மகிழ நினைக்கிறான். இவன் பிறரிடம் எதையும் எதிர்பார்க்க மாட்டான்.

    முதலில் பிறரிடமிருந்து வாங்குவதில் மகிழ்ச்சி அடையும் இவன், பின்னர் பிறருக்குக் கொடுப்பதில் மகிழ்ச்சியடைகிறான். இதுதான் அன்பின் வளர்ச்சி.  இதற்குப் பெயர்தான் உயிர்த்தன்மையானஅன்பு. இதுதான் நிறைவான அன்பு.

    இப்பொழுது கணவன்  மனைவிக்கான அன்புக்கு வருவோம்..

    நீங்கள் அன்புக்காகப் பிறரைச் சார்ந்திருந்தால் அது துன்பத்தையே கொடுக்கும். சார்ந்திருப்பது ஒருவகை அடிமைத்தனம்தான். இதனால், நீங்கள் உங்கள் மன ஆழத்தில் அவரை வஞ்சம் தீர்க்க முயலுவீர்கள். அதற்கு என்ன வழி என்று தேடுவீர்கள்.

    அடுத்து நீங்கள் சார்ந்திருப்பவர், உங்களை அவர் அதிகாரம் செய்யவே முனைவார். அதைப்போல நீங்களும் அதிகாரம் செய்யத் தகுந்த சந்தர்பத்தை எதிர்பார்த்திருப்பீர்கள்.

    இதன் விளைவு என்ன? சண்டைதான்!  இதுதான் கணவன்-மனைவி அல்லது காதலியுடன் நடந்துகொண்டிருப்பது. இவர்கள் நெருங்கிய பகைவர்கள். தம்பதியர்கள் இதைத்தவிர வேறு என்ன செய்துகொண்டு இருக்கிறார்கள்?

    -ஓஷோ
    தலையில் தொப்பி முதல் கால் வரை இப்படி நாம மட்டும் குஜராத்தி பாரம்பரியபடி துணிகளால் சுற்றிக் கொண்டுள்ளோமே? என்ன செய்வது? என்ற கேள்விகளே காந்தியை மாறி மாறி துளைத்தெடுத்தது.
    1921 இல் காந்தி சென்னையில் இருந்து மதுரைக்கு ரெயிலில் பயணித்தார். ரெயில் பயணிகளில் பலர் வெளிநாட்டு மில் துணியால் தயாரிக்கப்பட்ட ஆடைகளை அணிந்திருந்தனர். கைத்தறி ஆடை அணியுமாறு அவர்களிடம் வேண்டுகோள் விடுத்தார் காந்தி. அதற்கு தலையசைத்து மறுப்பு தெரிவித்த அவர்கள், கைத்தறி துணி வாங்கும் அளவுக்கு வசதியில்லை என்று சொன்னார்கள்.

    மதுரை வந்த அந்த ரெயிலில் தூக்கமே இல்லாமல் புரண்டு புரண்டு படுத்தார்  காந்தி. பல குழப்பங்கள், சிந்தனைகள் அந்தப் பொழுது புலரும் நேரத்திலும் அவரைப் புரட்டிப் போட்டது. இந்த பயணிகள் ஏன் இப்படி சொல்லுகிறார்கள்? இவர்களுக்கு கைத்தறி ஆடை வாங்கக் கூட காசில்லையா?

    தலையில் தொப்பி முதல் கால் வரை இப்படி நாம மட்டும் குஜராத்தி பாரம்பரியபடி துணிகளால் சுற்றிக் கொண்டுள்ளோமே? என்ன செய்வது? இந்த கேள்விகளே அவரை மாறி மாறி துளைத்தெடுத்தது.

    மதுரை வந்துவிட்டது. ரெயிலிலிருந்து இறங்கினார். கண்ணுக்கெட்டியவரை வரவேற்க வந்த மக்கள் தலைகள்தான். வெற்று உடம்புடன் பெரும்பாலானோர் வேட்டியை சுற்றிக்கொண்டு நின்றனர். அதை ரெயில் நிலையத்தில் திரண்ட கூட்டத்திலும், விண்ணை முட்டும் முழக்கத்திலும் காந்தி கவனிக்கத் தவறவில்லை. காந்தி வரவேற்கப்பட்டு மதுரை மேல மாசி வீதியில் காங்கிரஸ் பிரமுகர் ஒருவர் வீட்டில் தங்க வைப்பட்டார். அங்கும் வீதிகளில் திரிந்தவர்களும் வெற்று மார்புடன்தான் இருந்தார்கள். அதையும் காந்தி கவனித்தார்.

    “அட கடவுளே... இன்னுமா நான் இவ்வளவு ஆடைகளுடன் உட்கார்ந்து கொண்டு இதனை கவனித்துக் கொண்டு இருக்க வேண்டும்?” சட்டென எழுந்தார். அனைத்தையும் களைந்தார். தான் உடுத்தியிருந்த குஜராத் பாணி வேஷ்டியினை நான்காகக் கிழித்து வைத்துக் கொண்டு அதில் ஒன்றை எடுத்து இடுப்பில் சுற்றிக் கட்டிக் கொண்டார்.

    காந்தி இப்போது வேறு மாதிரியாகக் காட்சியளித்தார். காந்தியின் இந்தக் கோலத்தைப் பார்க்கவும் கூட்டம் அலைமோதியது. “இனி இதுதான் என் உடை” என்றார்.

    மதுரை மக்கள் அணிந்திருந்த அதே உடைதான், தற்போது காந்தி அணிந்துள்ளார்... ஆனால் காந்தி அணியும்போது அதன் மகத்துவமும் மகோன்னதமும் வேறு மாதிரி மக்களிடம் காட்டிக் கொடுத்தது. கூடுதல் மதிப்பை கொட்டிக் கொடுத்தது. மதுரை மேல மாசி வீதியில் தொடங்கிய அவரது இந்த முடிவு லண்டன் உச்சி மாநாடே ஆனாலும் உடும்புப் பிடியாக இருந்தது.

    1931-ஆம் ஆண்டு லண்டன் உச்சி மாநாட்டில் கலந்துகொள்ள சென்றிருந்தார் காந்தி. காந்திக்கும் மற்ற இந்தியப் பிரதிநிதிகளுக்கும் பக்கிங்காம் அரண்மனையிலிருந்து அழைப்பு வந்தது. மன்னரைச் சந்திப்பதற்குச் சம்பிரதாயமான உடையில் தான் செல்லவேண்டுமென்று காந்தியிடம் எல்லோரும் எடுத்துக் கூறினார்கள். தாம் வழக்கமாக உடுக்கும் முழங்கால் வேஷ்டியுடன் தான் மன்னரைப் பார்க்க முடியும் என்றும், அதை அனுமதிக்கவில்லை என்றால், அவரைப் பார்க்கப்போவதில்லை என்றும் கண்டித்து சொல்லிவிட்டார் காந்தி.

    காந்தி தன்னுடைய அரை ஆடை கோலத்துடன் தான் சந்தித்தார்  ஐந்தாம் ஜார்ஜ் மன்னரை. சந்திப்பு முடிந்து வெளியே வந்த காந்தியை அங்கிருந்த பத்திரிகையாளர்கள் சூழ்ந்து கொண்டார்கள். காந்தியின் அரையாடையைக் குறிப்பிட்டு ‘நீங்கள் மன்னரை இப்படி சந்தித்தது முறைதானா?’ என்று கேள்வி எழுப்பினார்கள். காந்தி உடனே சட்டென்று பதில் சொன்னார்: “எங்கள் இருவருக்கும் சேர்த்துதான் மன்னர் உடையணிந்திருக்கிறாரே!” என்றார்.

    வசதியுடன் பிறந்து, மேல்நாடுகளில்  படித்து, உலகமெல்லாம் சுற்றி வந்த காந்தியை மனம் மாற வைத்த அந்த மதுரை மேலமாசி வீடு இப்போது எப்படி உள்ளது தெரியுமா? காதி விற்பனைக் கூடமாக... பழமை குன்றாமல் அதே மிடுக்குடன் இன்றும் கம்பீரமாக நிற்கிறது. இன்றைக்கும் கைத்தறி ஆடைகளின் மீது இந்திய மக்களுக்கு ஒரு தனி மரியாதை இருக்கிறதென்றால், அது மகாத்மாவுக்கு அளிக்கும் மரியாதைதான்!

    -அம்ரா பாண்டியன்
    மன அழுத்தம் மற்றும் கடுங்குளிர் போன்ற உபாதைகளைத் தாங்குவதில் பெண்கள் ஆண்களைவிட வல்லவர்கள்.
    இந்த படத்துல பெருசா இருக்குப் பாருங்க.. இது தான் பெண்மைக்கான மரபணு. இதனை எக்ஸ் குரோமோசோம் என அழைப்பார்கள்.  

    பாவம் போலக் குட்டியா இருக்கு பாருங்க, இது தான் ஆண்மைக்கான மரபணு. இதை ஒய் குரோமோசோம் என அழைக்கப்படுகிறது.

    இந்த இரண்டும் தான் பாலுணர்வு என்ற ஆண் பெண் ஈர்ப்பின்  அடிப்படை.  இதனால் தான் இவ்வுலகம் இயக்கத்தில் உள்ளது.  பல கோணத்தில் இந்த அமைப்பைச் சிந்தித்தால் பெண்கள் ஆண்களை விட வலுவானவர்களாகவே உள்ளனர்.

    1. எக்ஸ் குரோமோசோம்  பெரியது, ஆனால் ஒய் குரோமோசோம் மிகவும் சிறியது எனப் பார்த்தோம். மேலும் உடலில் உள்ள 24 வகையான  குரோமோசோம்களில் மிகச்சிறியது ஒய் குரோமோசோம் தான் ! ஐயோ பாவம் !

     2.  படிப்படியாக ஒய் குரோமோசோம் சுருங்கி வருகிறது.  ஒரு காலத்தில் இது இல்லாமல் போய்விடும். எக்ஸ் குரோமோசோம் அப்படி அல்ல, நிலையானது.  அச்சச்சோ..... அவ்வளவு பலவிதமான நிலையிலா ஆண்கள் உள்ளனர் என எண்ணத் தோன்றுகிறதா?

    3. பெண்கள் உடலில் உள்ள அணுக்களில் இரண்டு எக்ஸ் குரோமோசோம்கள் இருக்கிறது.  ஒரு எக்ஸ்  மற்றும் ஒரு ஒய் குரோமோசோம்கள் இருந்தால் அது ஆண்.  அதாவது கவனிக்க வேண்டிய சங்கதி என்னவென்றால் ஒரு  எக்ஸ் குரோமோசோமாவது நம் அணுக்களிலிருந்தாக வேண்டும். இல்லை என்றால் அந்த  மனிதன் மட்டும் அல்ல அவன் உடலில் ஒரு அணுக்களும் உயிர் வாழ முடியாது. எக்ஸ் குரோமோசோமில் அவ்வளவு சக்தி உள்ளது. அதாவது எக்ஸ் குரோமோசோம் உயிரியின் அடிப்படை.

    4. நவீனத் தொழில்நுட்ப உதவியுடன் பெண்களால் ஆண் துணை இல்லாமல்  குழந்தை பெற்றுக் கொள்ள முடியும். அதாவது விந்து அணுகூட தேவையில்லை. அவர்களால் குழந்தை பெற்றுக் கொள்ள முடியும். ஆண்களால் முடியுமா? அவ்வளவு சக்தி !

    5. கருமுட்டை சுமார் 100 மைக்ரான் விட்டம் கொண்டது. அளவில் பெரியது. விந்தணு சுமார் 5 மைக்ரான் விட்டமுள்ள தலையையும் 50 மைக்ரான் நீளமுள்ள மெல்லிய வாலையும் கொண்டுள்ளது. இது அளவில் சிறியது.

    6. வேணும்னா விந்து தான் கருமுட்டையை நாடிச் செல்ல வேண்டும். ஒரு காலமும் கருமுட்டை விந்தைத் தேடிவராது. அதன் சக்தி அப்படி !

    7. அது மட்டுமல்ல ஒரு கருமுட்டையுடன் இணைய சுமார் 600 கோடி விந்தணுக்கள் போட்டி போடுகிறது. நினைத்துப் பாருங்கள் எவ்வளவு கடுமையான போட்டி. நீங்களும் இந்த போட்டியில் கிடைத்த வெற்றிக்கனி தான்.  

    8. பல மரபணு சேதங்கள் ஆண்களில் மலட்டுத்தன்மையை உண்டு பண்ண வல்லது. ஆனால் அதே மரபணு சேதங்கள் உள்ள பெண்களுக்குக் குழந்தை பாக்கியம் உண்டு ! யார்க்கிட்ட.... நெருங்க முடியுமா?

    9. சராசரியாக ஆண்களைவிடப் பெண்கள் அதிக நாட்கள் உயிர் வாழ்கின்றனர்.

    10. சொட்டைத்தலை (வழுக்கை) ஆண்களுக்கு மிகச் சாதாரணம். பெண்களுக்கு இது அபூர்வம். யார்கிட்ட..

    11. மன அழுத்தம் மற்றும் கடுங்குளிர் போன்ற உபாதைகளைத் தாங்குவதில் பெண்கள் ஆண்களைவிட வல்லவர்கள்.

    12.  ஆண்களின் உடலில் உள்ள எலும்பின் அடர்த்தி மற்றும் தடிமன் அதிகம்.  இதனால் ஆண்களின் உடல் வலிமை அதிகம்.  அதாவது ஆண்கள் குடும்பத்தை  உடல் வலிமை கொண்டு காக்க வேண்டும்.  அதாவது அடியாள் அல்லது பாதுகாவல் வேலை தான் வேரென்ன?

    -பேராசிரியர் சி சுதாகர்
    சுக்ரமேட்டில் குறுக்கும் நெடுக்குமாக உள்ள பல கோடுகள் மனிதனின் ஆசைகளையும், உணர்ச்சிகளையும் காட்டக்கூடியதாய் அமைகின்றது. சுக்ர மேடும், சந்திரமேடும் நன்கு அமையப்பெற்றவர்களுக்குக் காதல் கைகூடும்.
    கைகளின் நிறம், ரேகைகளின் நிறம், விரல்களின் வடிவமைப்பு, நகங்கள் போன்றவை மனிதனின் வாழ்வில் ஏற்படும் உயர்வு தாழ்வுகளைக் கண்முன் காட்டும் கண்ணாடியாகின்றது.

    வாழ்வில் முக்கிய அங்கமான ‘திருமணம்’ என்பதை நம் கையில் உள்ள சுக்ர மேடும், திருமண ரேகையும், செல்வாக்கு ரேகையும் நிர்ணயிக்கின்றன.

    கட்டை விரலுக்குக் கீழே அமைந்துள்ள சதைப்பிடிப்பான மேட்டிற்கு ‘சுக்ரமேடு’ என்று பெயர். சுக்ர மேடானது நன்கு வளர்ச்சி பெற்று, புடைப்பாக இருந்தால் திருமண வாழ்வில் சுக போகத்திற்குக் குறைகள் இருக்காது. உடல் பலம், மன வலிமை, அன்பு, வசீகரம் ஏற்படும்.

    சுக்ரமேடு நன்கு அமைந்தவர்களுக்கு, இசை, நடனம் மற்றும் பல கலைகளில் ஆர்வம் பிறக்கும். மற்றவர்களுக்கு உதவி செய்யும் குணம் உண்டாகும். கணவன், மனைவி இடையே அன்பு அதிகமாகும். ஒருவரையொருவர் புரிந்து கொண்டு இல்லறத்தை நல்லறமாக நடத்தி மகிழ்வர். ஆனால் இந்த சுக்ரமேடு அளவுக்கு அதிகமாகப் புடைத்து நின்றால் அவரைப் பெண் பித்தனாக அலையச் செய்யும்.

    இச்சுக்ரமேடு தட்டையாக, வற்றி இருந்தால் கவலை, துக்கம், சோர்வு, கோள் சொல்லுதல், திருமணத் தாமதம் ஆகியன ஏற்படும்.

    சுக்ரமேட்டில் குறுக்கும் நெடுக்குமாக உள்ள பல கோடுகள் மனிதனின் ஆசைகளையும், உணர்ச்சிகளையும் காட்டக்கூடியதாய் அமைகின்றது. சுக்ர மேடும், சந்திரமேடும் நன்கு அமையப்பெற்றவர்களுக்குக் காதல் கைகூடும்.

    சுக்ரமேட்டில் பெருக்கல் குறிதோன்றி, அதே போல் குருமேட்டில் பெருக்கல் குறிதோன்றினால்,  காதலில் வெற்றி பெறுவர். இல்லறமும் நன்கு அமையும். ஆனால் சுக்ரமேட்டின் அடியில் நட்சத்திரக்குறி ஏற்பட்டவர்களுக்கு காதலில் தோல்வி ஏற்பட்டு, இன்னல்கள் பல உண்டாகும்.

    குருமேட்டில் சதுரம் தென்பட்டால் அமையக்கூடிய வரன் நன்கு அமையும். ஆசிரியர், விரிவுரையாளர், அரசு மற்றும் தனியார் துறையில் பெரிய பொறுப்பு வகிப்பவர்கள் இல்வாழ்க்கைத் துணைவராக வருவர்.

    சுக்ரமேடு எவ்வித பழுதும் இன்றி அமைந்து புதன், சனி, சந்திர மேடுகளும் நன்கு அமைந்தால் மருத்துவம், என்ஜினீயரிங், கம்ப்யூட்டர், கலைத்துறைகளைச் சேர்ந்தவர்கள் இல்வாழ்க்கைத் துணையாக அமைவர்.

    திருமணம், கணவன்-மனைவி உறவுகளைப் பற்றி அறிய அடுத்து நமக்குத் துணை செய்வது ‘திருமண ரேகை’ ஆகும்.
    நம் கையில் சுண்டு விரலுக்குக் கீழே, உள்ளங்கையின் விளிம்பிலே இருதய ரேகைக்கு மேலாக அமைந்துள்ள, உருவத்தில் மிகச்சிறியதாக உள்ளதே திருமண ரேகையாகும்.

    இது பொதுவாக மனிதர்களுக்கு ஒன்று முதல் நான்கு கோடுகள் இருக்க வாய்ப்புண்டு. எத்தனை கோடுகள் இருக்கிறதோ அத்தனை மனைவியர் உண்டு என்ற வழக்கமும் உண்டு. இது ஒரு தவறான கண்ணோட்டமாகும். மனதில் உள்ள அன்பை வெளிப்படுத்தும் ரேகைகளாகவும் இவை அமைவதால் இதை ‘அன்பு ரேகைகள்’ அல்லது பாசரேகைகள் என்றும் அழைப்பர்.

    திருமண ரேகை அமைந்துள்ள பகுதியை இருதய ரேகையிலிருந்து சுண்டு விரலின் கீழ் வரை அளந்து நான்காக பிரித்து அந்த அந்த கால அளவில் திருமண ரேகை எங்கு அமைந்துள்ளதோ அந்த வயதில் திருமணம் நடக்கும் என அறியலாம்.

    இருதய ரேகைக்கு அருகில் திருமண ரேகை அமைந்தால் 19 வயது முதல் 23 வயதிற்குள் திருமணம் நடக்கும். அடுத்த மேல் பாகத்தில் அமைந்தால் 23 முதல் 30 வயதிற்குள்ளும், அதற்கடுத்து மேல் பாகத்தில் அமைந்தால் 30 வயது முதல் 35க்குள்ளும், சுண்டு விரலுக்குக் கீழே அமைந்தால் 35 வயதிற்கு மேலும் திருமணம் நடக்கும் என்று அறியலாம்.

    உள்ளங்கை அடியினின்று தோன்றும் ஆயுள் ரேகையில் மேல் நோக்கித் தோன்றும் செல்வாக்கு ரேகைகள், எந்த வயதளவில் தோன்றுகிறதோ அந்த வயதில் திருமணம் முடியும்.

    திருமண ரேகை வளைவில்லாமல் நேராக, சுத்தமாக நன்கு அமைந்தால் நல்ல மனதுக்கு உகந்த மணவாழ்வு அமையும். தம்பதிகள் ஒற்றுமையுடன் வாழ்வர். திருமண ரேகை கீழ்நோக்கி வளைந்திருந்தால் இல்லறத்தில் சுகம் குறையும். மேல் பக்கமாக வளைந்திருந்தால் திருமணம் தள்ளிப்போகும்.

    திருமண ரேகை இரு கிளையாய்ப் பிரிந்தால் தொழில் நிமித்தமாக கணவன் அல்லது மனைவி பிரிந்து வெளியூர் அல்லது வெளிநாடு செல்வர். திருமண ரேகையில் தீவுக்குறி ஏற்படுவது தீமையாகும். திருமண ரேகையில் பெருக்கல் குறி வந்தாலும் துன்பம் ஏற்படும்.

    திருமண ரேகையிலிருந்து தோன்றிய ரேகை புத்தி ரேகையைத் தொட்டால் காதல் திருமணம் ஏற்படும். ஆனால் திருமணத்திற்குப் பின் சுகம் குறையும்.

    திருமண ரேகையில் தீவுக் குறி கண்டால் தம்பதிகளுக்குள் யாராவது ஒருவர் நோய்வாய்ப்படுவர். சூரிய மேடும், புதன் மேடும் பலம் பெற்று திருமண ரேகை சூரிய ரேகையைத் தொட்டால் அந்தஸ்து உயர்வான இடத்தில் திருமணம் கூடி, செல்வாக்கைத் தரும். வேறு தேசத்தவரும் துணைவராக வர வாய்ப்புண்டு.

    திருமண ரேகையில் கருப்புப் புள்ளிகள் இருக்கக்கூடாது. பிசிறு போன்ற அமைப்பினால் பிணி ஏற்படும். திருமண ரேகை சனி மேடு வரை சென்றால் மனைவி மூலம் பொருள் சேரும்.

    சுக்கிரமேட்டின் நடுவில் முக்கோணம் தெரிந்தால் உறவில் துணைவர் அமைவார். சந்திரமேடு நன்கமைந்து அதினின்று நீண்ட ரேகை விதிரேகையைத் தொட்டால் வாழ்க்கைத் துணைவர் மூலம் நல்ல உயர்ந்த நிலை கிடைக்கும்.

    ஆண்களுக்கு வலக்கை ரேகையையும், பெண்களுக்கு இடக்கை ரேகையையும் பார்த்து பலன் அறிய வேண்டும்.

    - ஜோதிடர் சி. கண்ணன்
    தூங்குவதில் வேறென்ன விஷயங்கள் இருக்கின்றன? நாம் தூங்கி விழிக்கும் போதுதான் அத்தூக்கம் முழுமையானதாக இருந்ததா, இல்லையா என்பதை நாம் உணர முடியும்.
    நாம் உண்ணும் உணவுகளில், நாம் அருந்தும் தண்ணீரில்... இன்னும் நாம் அன்றாடம் பயன்படுத்தும் ஏராளமான பொருட்களில், உடலிற்கு ஒவ்வாத ரசாயனங்கள் நிறைய உள்ளன. இவற்றை அகற்றும் மிக முக்கியமான வேலையை நம் கல்லீரல் செய்கிறது.

    நச்சுகளை அகற்றும் இந்த வேலையை, பகலின் அன்றாட வேலைகளுக்கிடையில் செய்யாமல் இரவில் செய்கிறது கல்லீரல். இரவு 11 மணிக்குத் துவங்கி, அதிகாலை 3 மணி வரையில் நச்சுத்தன்மை அகற்றும் பணி நீடிக்கிறது.

    இந்த வேலையை பகலில் செய்ய முடியாது. ஏனென்றால், பகலில் நாம் உண்ணும் உணவுகளை ஜீரணிப்பது முதல் பலவகையான வேலைகள் இருந்து கொண்டேயிருக்கின்றன. இரவின் குளிர்ச்சியும் சூழலும் கல்லீரலின் இந்த இயக்கத்திற்கு அவசியம். இரவுச் சூழலில், நச்சுகளை அகற்றி செல்களுக்குப் புத்துயிர் அளிக்கிறது நம் கல்லீரல்.

    மரங்கள், செடிகள் வளர்வதையும், நம் குழந்தைகள் வளர்வதையும் நீங்கள் கவனித்திருக்கிறீர்களா? உயிருள்ள ஒவ்வொரு அணுவும் பகலைவிட இரவுகளில்தான் வளர்ச்சி அடைகிறது. தன்னைத்தானே பராமரித்துக் கொள்கிறது.

    பகலில் நடக்கும் மாற்றங்களைவிட, இரவுச் சூழலில் மிக அதிகமான மாற்றங்களை ஒவ்வொரு உயிரணும் சந்திக்கிறது. இச்சிறப்புத் தன்மை வாய்ந்த இரவுகளில் தூங்குகிறவர்களுக்குத்தான் மேற்கண்ட வளர்ச்சிக்கான மாற்றங்களும், நச்சுத்தன்மை அகற்றமும் முழுமையாக நடைபெறுகின்றன. எனவே இரவில் தூங்குவது என்பது அத்தியாவசியமான உடல் நடவடிக்கை. அதற்கு மாற்று கிடையாது.

    தூங்குவதில் வேறென்ன விஷயங்கள் இருக்கின்றன? நாம் தூங்கி விழிக்கும் போதுதான் அத்தூக்கம் முழுமையானதாக இருந்ததா, இல்லையா என்பதை நாம் உணர முடியும்.

    எழும்போது உடல் கனமாகவும் சோர்வுற்றும் இருந்தால், உடலின் இரவுப் பணிகள் இன்னும் முழுமையாக நடைபெறவில்லை என்பதைக் குறிக்கிறது. எழும்போது சுறுசுறுப்பாகவும், அன்றைய புதிய விடியலில் நாம் செய்யப்போகிற வேலைகள் பற்றிய சிந்தனைகளோடும் இருப்பது நல்ல தூக்கத்தின் அடையாளம்.

    தூக்கத்திற்கும் பசிக்கும் நெருங்கிய தொடர்புண்டு. சரியான தூக்கம் இல்லாதபோது பசியின் தன்மை மாறுபடும். சரியான உணவு முறையில்லாத போது முழுமையான தூக்கம் இருக்காது.

    பசியையும் தூக்கத்தையும் சரியாகப் பின்பற்றுவது ஆரோக்கியத்தின் அடிப்படையாகும். இரவில் நாம் தூங்கச் செல்லும் போது வயிற்றில் செரிக்கும் வேலை இருக்கக்கூடாது. அப்போதுதான் கல்லீரலின் பணி முழுமையாக இருக்கும். உடலின் ஒட்டுமொத்த சக்தியும் பராமரிப்பு வேலையைச் செய்யும்.

    அதனால், இரவு உணவை எட்டு மணியளவில் எளிதாக ஜீரணிக்கக்கூடிய வகையில் வைத்துக் கொள்வது தூக்கத்திற்கும், அதன் பணிகளுக்கும் துணையாக இருக்கும்.

    உடலின் அடிப்படைத் தேவைகளான பசி, தாகம், ஓய்வு, தூக்கம், போன்றவற்றைக் கவனித்து, அவற்றை நிறைவு செய்வோமானால் முழு ஆரோக்கியத்தை நாம் நிலைப்படுத்திக் கொள்ள முடியும்.

    -அ.உமர் பாரூக்
    தென் மாவட்டங்களில் திருமணத்தின் போது மணமக்களின் மணைக்கு முன்னால் ஒரு மரத்தை நட்டு அதைச் சுற்றிலும் அரசிலைகள் வைத்துக் கட்டுவர்.
    இங்கே இரு சொலவடைகளின் விளக்கங்களைப் பார்க்கப் போகிறோம். அதற்குமுன், சில செய்திகளைக் காணலாம்...

    ஆலமரம் என்பது ஓர் அகலமான மரம். அகல் என்ற சொல்லே ஆல் என்றானது. அடுத்தடுத்து அதன் கிளைமூட்டுக்களிலிருந்து விழுதுகள் உருவாகி அவை நிலத்தில் விழுந்து அகல மரம் பெரிதாகிக்கொண்டே போகும்.

    அருகம்புல்லின் வேர் கட்டாந்தரையான நிலத்திலும் வேரூன்றிவிடும். ஆலைப் போலவே அறுகும் சிறு அளவில் நீண்டு பரந்து விரிந்து வேரூன்றிக் கொள்ளும். கொஞ்சம் கொஞ்சம் வளர்ந்தாலும் அடுத்து இன்னொரு முடிப்பிட்டு வேர்விடும். அருகம்புல் நிலத்தில் மிக எளிதில் ஊன்றிக்கொள்ளும்.

    மூங்கிலானது, ஓராண்டிற்கு ஒருமுறை தனக்கு  அருகில் இன்னொரு முளை போடும். அண்டியிருப்பதால் இம்முளைக்கு அண்டென்று பெயர். கிட்டத்தட்ட 360 நாளைக்கு ஒருமுறை ஓர் அண்டு முளைப்பதால் 360 நாள் காலத்திற்கு ஆண்டென்றே நம் முன்னோர் பெயர் வைத்தனர். இப்படித் தாய்மூங்கிலைச் சுற்றி பல அண்டுகள் அமைவதால் மூங்கில் என்றும் ஒரு தொகுதியாகவே காணப்படும். மூங்கில்தொகுதி என்பது சுற்றத்திற்கு இயற்கை காட்டும் உவமை.

    முசிதல் என்றால் குறைதல், குன்றுதல் என்று  பொருள். முசியாமல் என்றால் குறையாமல்  இருப்பதாகும். அத்திமரம் எவ்வளவுதான் வெட்டினாலும், முறித்தாலும் நிலத்தில் ஈரமிருந்தால் சட்டெனத் துளிர்விடும்.

    அரச மரம் எப்போதும் உயர்ந்து ஓங்கி வளரும் மரம். தலைமைக்கு, அரசனைக் குறிப்பதற்கு, நம்மூரில் அரச மரமே அடையாளம். தென் மாவட்டங்களில் திருமணத்தின் போது மணமக்களின் மணைக்கு முன்னால் ஒரு மரத்தை நட்டு அதைச் சுற்றிலும் அரசிலைகள் வைத்துக் கட்டுவர். அது அரசனின் இருப்பிற்கு, ஆணைக்கு அடையாளம். இப்பழக்கம் இன்றுமுண்டு. இனிச் சொலவடைகளை விளக்கலாம்..

    ஆல்போல் (அகலமாய்த்) தழைத்து அறுகுபோல் (உங்கள் குடும்ப வேரை) ஊன்றி, மூங்கில்போல் சுற்றத்தார் அண்டியிருக்க எதுவுங்குறையாமல் வாழ்ந்திருங்கள்.

    அத்திபோல் (உம் குடும்பம்) துளிர்த்து, ஆல்போல் (உம் குடும்பம்) படர்ந்து, அரசுபோல் (தலைமைப்பண்போடு) ஓங்கி, அறுகுபோல் வேரூன்றி, மூங்கில்போல் சுற்றத்தார் அண்டியிருக்க எதுவுங் குறையாமல் வாழ்ந்திருங்கள்.

    -இராம.கி
    நண்பர்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம். ஒன்று, பனைமரம் போன்ற நண்பர்கள்; இரண்டு, தென்னைமரம் போன்றவர்கள்; மூன்று வாழைமரம் போன்றவர்கள்.
    நல்ல மனைவியைத் தேர்ந்தெடுப்பது போலவே, நல்ல நண்பனைத் தேர்ந்தெடுப்பதிலும் எச்சரிக்கையாகவே இருக்க வேண்டும்.

    உன் எதிரியை நீ சுலபமாக அடையாளம் கண்டு கொண்டுவிட முடியும். ஆனால், நண்பர்களிலே, நல்ல நண்பர் யார் என்பது அனுபவத்தின் மூலமேதான் தெரியுமே தவிர, சாதாரண அறிவினால் கண்டுகொள்ள முடியாது.

    முகத்துக்கு நேரே சிரிப்பவன்,

    முகஸ்துதி செய்பவன்,

    கூழைக்கும்பிடு போடுபவன்,

    இவனெல்லாம் நல்ல நண்பன் மாதிரியே தோற்றமளிப்பான்.

    எந்த நேரத்தில் அவன் உன்னைக் கவிழ்ப்பான் என்பது அவனுக்கும் கடவுளுக்கும் மட்டுமே தெரியும்!

    ஆகவே ஒருவனை நண்பனாக்கிக் கொள்ளுமுன், அவனைப்பற்றி நன்றாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

    சரியாகத் தெரிந்த பின்புதான், அவனிடம் ரகசியங்களைப் பரிமாறிக்கொள்ள வேண்டும்.

    நன்றாக ஆராய்ந்து, ‘இவன் நல்லவன்தான்’ என்று கண்டபின், ஒருவனை நண்பனாக்கிக் கொண்டு விட்டால், பிறகு அவன்மேல் சந்தேகப்படக்கூடாது.

    அவசரத்தில் ஒருவனை நம்பிவிடுவதும், நம்பிக்கைக்கு உரியவன் என்று தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவனைச் சந்தேகிப்பதும், தீராத துயரத்தைத் தரும் என்றான் வள்ளுவன்.

    யாரோடு நீ பழக ஆரம்பிக்கின்றாயோ, அவனோடு நீ இனிமையாகப் பழக வேண்டும். கொஞ்ச காலத்திற்கு அதை, நீ நட்பாகக்கருதக் கூடாது. வெறும் பழக்கமாகத்தான் கருத வேண்டும்.

    உனக்கு கஷ்டம் வந்தபோது அவன் கை கொடுத்தால், உன்னைப்பற்றி நல்லவிதமாக, நீ இல்லாத இடத்தில் அவன் பேசுவதைக் கேள்விப்பட்டால், பிறர் உன்னை பற்றித் தவறாகப் பேசும்போது, அவன் தடுத்துப் பேசியதாக அறிந்தால், அவனை நீ நம்பத் தொடங்கலாம்.

    நட்பு என்பது வெறும் முகஸ்துதி அல்ல.

    ஆபத்தில் உதவுவது ஒன்றே நட்பு.

    நண்பர்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம்.

    ஒன்று, பனைமரம் போன்ற நண்பர்கள்; இரண்டு, தென்னைமரம் போன்றவர்கள்; மூன்று வாழைமரம் போன்றவர்கள்.

    பனைமரம் யாராலும் நட்டுவைக்கப்பட்டதல்ல. பனம்பழத்தைத் தேடி எடுத்து யாரும் புதைப்பதில்லை. அதுதானாகவே முளைக்கிறது. தனக்குக் கிடைத்த தண்ணீரைக் குடித்துத் தானாகவே வளர்கிறது. தனது உடம்பு ஓலையையும் நுங்கையும் அது உலகத்திற்குத் தருகிறது.

    நம்மிடம் எந்த உதவியையும் எதிர்பாராமல், நமக்கு உதவுகிறவன், பனைமரம் போன்று நண்பன்.

    தென்னைமரம் நம்மால் நடப்படுகிறது. அதற்கு அடிக்கடி தண்ணீர் ஊற்றி வளர்த்தால் தான் அது நமக்குப் பலன் தருகிறது. அதுபோல், நம்மிடம் அவ்வப்போது உதவி பெற்றுக்கொண்டு நண்பனாக இருக்கிறவன், தென்னை மரத்துக்கு இணையான நண்பன்.

    வாழை மரமோ, நாம் தினமும் தண்ணீர் ஊற்றிக் கவனித்தால் தான் நமக்குப்பலன் தருகிறது. அதுபோல் தினமும் நம்மிடம் உதவி பெற்றுக்கொள்கிறவன் வாழைமரம் போன்ற நண்பன்.

    இந்த மூவரில், பனைமரம் போன்ற நண்பனே நீ தேர்ந்தெடுத்து கொள்ள வேண்டிய நண்பன்.

    - கவியரசு கண்ணதாசன்
    அமைதியின் ஸ்வரூபத்தில் மகாலட்சுமி குடியிருப்பாள் என்பது சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. மகாலட்சுமிக்கு மிகவும் பிடித்தது அமைதி என்பதையும் மறந்து விட வேண்டாம்.
    நம்முடைய வீட்டில் குபேரரின் அருளும், மகாலட்சுமியின் அருளும் நிரந்தரமாக இருக்க வேண்டுமென்றால் பலவகைப்பட்ட ஊறுகாய்களை குறைவில்லாமல் வைத்துக்கொள்ள வேண்டும் என்று சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.

    இந்தக் காலகட்டத்தில் பத்து பேர் இருக்கும் வீட்டில் பல வகையான ஊறுகாய்களை வைத்துக்கொள்ளலாம். இரண்டு பேர், மூன்று பேர் உள்ளவர்களது வீட்டில் இதற்கு சாத்தியமில்லை. உங்களால் முடிந்தவரை கட்டாயம் நெல்லிக்காய் ஊறுகாய் உங்கள் வீட்டில் இருக்கும் படி பார்த்துக்கொள்ளுங்கள். அந்த மகாலட்சுமியின் ஆசி இருந்தால் தான் உங்கள் வீட்டில் இந்த நெல்லிகாய் ஊறுகாய் இருக்கும் என்று சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.

    அடுத்ததாக உங்களது வீட்டின் அருகில் கோவில்களில் வில்வமரம் இருந்தால் அதை திங்கட்கிழமைகளிலும், வெள்ளிக்கிழமைகளிலும் வாரம் தோறும் தவறாமல் ஐந்து முறை சுற்றி வர வேண்டும். உங்களால் முடிந்தால் 21 முறை சுற்றுவது மிகவும் நல்லது. குறைந்தபட்சம் ஐந்து முறையாவது அந்த வில்வமரத்தை வலம் வருவது என்பது மிகவும் உத்தமமான ஒன்று. இந்த பாக்கியமும் அனைவருக்கும் கிடைத்து விடாது. யாருக்கு இறைவனின் ஆசீர்வாதம் உண்டோ அவர்களால்தான் இப்படிப்பட்ட பலனை எல்லாம் பெற முடியும். ஏனென்றால் எல்லோரது வீட்டின் அருகில் இருக்கும் கோவிலிலும் வில்வமரம் இருக்குமா? என்பது சந்தேகம்தான். முடிந்தவரை இதை பின்பற்றுவது மிகவும் சிறப்பான ஒன்று.
     
    அடுத்ததாக வெள்ளிக்கிழமையன்று மகாலட்சுமிக்கு மிகவும் பிடித்தமான மஞ்சள் நிற பட்டு துணியை அணிந்து கொள்வது சிறப்பு. முடியாதவர்கள் மஞ்சள் நிறத்தில் இருக்கும் சாதாரண உடையை அணிந்தால் அது மகாலட்சுமியின் ஆசீர்வாதத்தால் தான் நடைபெற்றுள்ளது என்பதையும் மறந்து விடாதீர்கள்.

    மகாலட்சுமியின் அம்சம் உடையவர்கள் நடக்கின்ற நடையை வைத்தே கண்டுபிடித்து விடலாம். பாதங்களை நாம் எடுத்து வைக்கும் முறை என்று ஒன்று உள்ளது. சிலர் பூமாதேவியை அதிரும் அளவிற்கு ‘தொம் தொம்’ என்று நடப்பார்கள். பிறகு கால்களை தரையோடு தேய்த்துக்கொண்டே நடப்பார்கள். இது இரண்டுமே தரித்திரத்தை உண்டாக்கும் என்று மறந்து விடாதீர்கள். பொறுமையாக நடப்பதே மகாலட்சுமியின் அம்சம்.

    இறுதியாக மகாலட்சுமியின் அம்சம் உடையவர்கள் சத்தம்போட்டு பேசவே மாட்டார்கள். அமைதியின் ஸ்வரூபத்தில் மகாலட்சுமி குடியிருப்பாள் என்பது சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. மகாலட்சுமிக்கு மிகவும் பிடித்தது அமைதி என்பதையும் மறந்து விட வேண்டாம்.

    நெல்லிக்காய் ஊறுகாய், மஞ்சள் வண்ண பட்டு, வில்வமரம், அமைதியான நடை, சாந்தம் இவை ஐந்தையும் எவரொருவர் பின்பற்றுகிறாரோ, அவர்களிடம் நிச்சயம் மகாலட்சுமி வாசம் செய்கின்றாள் என்பதுதான் அர்த்தம்.

    அஸ்ட்ரோ வெ.பழனியப்பன்
    கூழ், களி, சோறு வகையறாக்களை மாற்றி பூரி, பரோட்டா, நாண் என முதல் கட்ட அழிவைத் தொடங்கி வைத்தது கடந்த நூற்றாண்டு...
    எதைப் பார்த்தாலும்
    தின்று விடவேண்டுமென
    நப்பாசைக் கொள்கிறது
    நாக்கு

    வாய் வழியாய்ப் போன உணவு
    வயிற்றுக்குள் என்னானது?
    வயிற்றுக்கு என்னாவது?
    என்னும் ஆராய்ச்சி குறித்து
    அணுவளவேனும் கவலையில்லை
    மக்களுக்கு!

    சட்டைப் பையைக் காலி செய்வதும்
    வயிற்றுப் பையை நிரப்புவதும்தான்
    வாழ்நாள் வேலையென
    வகுத்துக்கொண்டாயிற்று

    எது கிடைத்தாலும்
    பிதுங்கப் பிதுங்கத் தின்றுவிட்டு
    பின்விளைவுகள் குறித்துப்
    பின்னால் பார்த்துக் கொள்வதென்பது
    ‘‘மெனு நீதி’’யாக மாறிப்போனது

    கோப்புப்படம்


    எப்படிப்பட்டத்
    தவறுகளைச் செய்தாலும்
    சமாதானம் சொல்லிக்கொள்வதில்
    சற்றும் சளைக்காதது மனம்

    வயிற்றுக்காகத்தானே
    இவ்வளவு பாடும் படுகிறோம்!
    உண்மைதான்
    ஆனால்... வயிற்றை
    என்ன பாடு படுத்துகிறோம்?

    உலகமய உணவுக் கழிவின்
    நடமாடும் குப்பைத் தொட்டிகளாய்
    நாகரிக மனிதர்கள் மாறி
    நாலு தலைமுறை கழிந்துவிட்டது

    பெயர் வைக்கக் கூட
    முடியாத அளவிற்குப்
    பெருகிவிட்டன நோய்கள்!

    கூழ், களி, சோறு
    வகையறாக்களை மாற்றி
    பூரி, பரோட்டா, நாண் என
    முதல் கட்ட அழிவைத்
    தொடங்கி வைத்தது கடந்த நூற்றாண்டு!

    பிசா, பர்கர், நூடுல்ஸ்
    இன்னும் ஏராளமான
    துரிதவகை உணவுகள் என
    அடுத்த கட்ட அழிவை ஆராதிக்கிறது
    இந்த நூற்றாண்டு!

    உலக வணிகர்களின்
    கொள்ளை லாப
    அறுவடைக் களமாய் ஆகிவிட்டது
    மக்களின் வயிறும் வாழ்வும்


    -பாவலர் வையவன்
    பிரதிபலிக்கும் தன்மையை கொண்ட கண்ணாடியை வீட்டு முக்கிய வாயிலின் மேல் மாட்டிக் கொள்ளலாம். இது யார் நீங்கள் கெட வேண்டும் என்று நினைக்கிறார்களோ அவர்களுக்கே அதை பிரதிபலிக்கும் ஆற்றல் கொண்டது இந்த கண்ணாடி.
    உங்கள் வீட்டுக்கும், வீட்டிலுள்ள  குடும்ப உறுப்பினர்களின் மீதுள்ள கண் திருஷ்டியை நீக்குவதற்கான இலகுவான வழிகள்:

    1. இரண்டு கைப்பிடி கல்உப்பை தண்ணீரில் கரைத்துக்கொண்டு மஞ்சள், எலுமிச்சை பழச்சாறு ஆகியவற்றையும் சேர்த்து பூஜை அறையில் வைத்து இறைவனை பிரார்த்தனை செய்து வாரம் ஒரு முறை வீட்டின் தரையை தூய்மை படுத்துங்கள். இது வீட்டில் உள்ள கண் திருஷ்டியை விரட்டும்.

    2.  உங்கள் வீட்டில் உள்ள குடும்ப உறுப்பினர்களின் இடது காலடி மண்ணை எடுத்து ஊருக்கு வெளியில் உள்ள வேப்பமரத்தடியில் போட்டு விட்டு திரும்பி பார்க்காமல் வந்து விடுங்கள். இது வீட்டில் உள்ள நபர்களின் மீதுள்ள கண் திருஷ்டியை போக்கும்.

    3. வெள்ளைப் பூசணிக்காய் வாங்கி அதை இரண்டாக அரிந்து இரண்டிலும் மஞ்சள் மற்றும் குங்குமத்தை தடவி வீட்டு வாயிலில் வையுங்கள். இது கெட்ட ஆற்றல்களை உறிந்து கொண்டு சுருங்கிவிடும். பின்பு அந்த பூசணிக்காயை வார இறுதியில் எடுத்து நீர்நிலைகளில் போட்டு விடுங்கள்.

    4. பிரதிபலிக்கும் தன்மையை கொண்ட கண்ணாடியை வீட்டு முக்கிய வாயிலின் மேல் மாட்டிக் கொள்ளலாம். இது யார் நீங்கள் கெட வேண்டும் என்று நினைக்கிறார்களோ அவர்களுக்கே அதை பிரதிபலிக்கும் ஆற்றல் கொண்டது இந்த கண்ணாடி.

    5.  உங்கள் வீட்டில் , உங்களையும் சேர்த்து எத்தனை நபர்கள் இருக்கிறார்களோ அத்தனை எலுமிச்சை பழத்தை வாங்கி கொண்டு வியாழக்கிழமை அன்று குரு ஓரையில் எலுமிச்சம் பழத்தை கொண்டு உங்கள் வீட்டில் உள்ள நபர்களின் தலையை வலமிருந்து இடமாக  சுற்றிய பின்பு, அதை உங்கள் ஊரில் உள்ள முச்சந்தியில் தூக்கி போட்டு விடுங்கள்.

    மேலே சொன்ன வழிமுறையை பின்பற்றி கண் திருஷ்டியை போக்கி சகல நன்மையையும் பெறுங்கள்.

    - சித்தர்களின் குரல்
    நடிகவேள் எம்.ஆர்.ராதா 125 படங்களில் நடித்திருக்கிறார். தான் நடித்த எந்தப் படத்தின் வெற்றிவிழாக்களிலும் அவர் கலந்துகொள்ளவில்லை.
    நடிகவேள் எம்.ஆர்.ராதா இந்திய வரலாற்றிலேயே ஒப்பிட முடியாத தனித்துவம் மிக்க தைரியக் கலைஞன். அவர் வெறுமனே நடிப்பால் பெயர் பெற்றவரல்லர். கலகங்களை நிகழ்த்திய துணிச்சலாலும் தான் நம்பிய கொள்கைகளுக்காகத் தன்னை அர்ப்பணித்துக்கொண்ட நேர்மைக்காகவும் பெயர் பெற்றவர்.
     
    அவர் 125 படங்களில் நடித்திருக்கிறார். தான் நடித்த எந்தப் படத்தின் வெற்றிவிழாக்களிலும் அவர் கலந்துகொள்ளவில்லை. காரணம் கேட்டால் ‘வியாபார ரீதியாக வசூலைக் குவித்த படங்களுக்கே விழா கொண்டாடப்படுகிறதே தவிர, நன்றாக நடித்திருக்கிறோம் என்று விழா கொண்டாடப்படுவதில்லையே’ என்றார்.

    1966 -இல் தமிழக அரசின் சார்பில் சிறந்த நடிகருக்கான விருதுக்கு ராதா தேர்ந்தெடுக்கப்பட்டு கவர்னர் பரிசளிப்பதாய் இருந்தது. ஆனால், ‘மொழி தெரியாத கவர்னர் என் படத்தைப் பார்த்திருக்க வாய்ப்பில்லை. எனவே, விருது வாங்கமாட்டேன்’ என்று மறுத்துவிட்டார் ராதா.

    நாடகத்தில் போலீஸ் வருவதுபோல காட்சி இருக்கும். அப்போது ராதா உடன் நடிப்பவர் பயப்படுவது போல நடிப்பார். உடனே ராதா வசனம் பேசுவார். ‘ஏன்டா பயப்படுறே? போலீஸ்னா என்ன பெரிய கொம்பா? (ரசிகர்களைப் பார்த்து கைநீட்டி) எல்லாம் ஓசி டிக்கெட்ல முன்னாடி உட்கார்ந்திருக்கான் பாரு. காசு கொடுத்தவன்லாம் பின்னாடி உட்கார்ந்திருக்கான்.’ ராதாவின் இந்த நக்கல் தாங்காமல், ஓசி டிக்கெட்டில் வந்தவர்கள் எழுந்து செல்வதும் உண்டு.

    குமாரபாளையத்தில் அப்போது நாடகம் நடந்துகொண்டிருந்தது. மேக்கப் ரூமில் இருந்த ராதாவிடம் மேலாளர் வேக வேகமாக ஓடி வந்தார். அவருக்கு மூச்சு வாங்கியது.

    “பெரியார் வந்திருக்கார்... கூடவே அண்ணாவும் ஈவிகே சம்பத்தும் வந்திருக்காங்க”

    “எதுக்கு?”

    “நாடகம் பார்க்கத்தான்”

    “பார்த்துட்டுப் போகட்டும்”

    “உட்கார வைக்க இடம் இல்லையே”

    “அதுக்கு என்னை என்ன பண்ணச் சொல்ற? இஷ்டம் இருந்தா தரையில் உட்கார்ந்து பார்க்கட்டும். இல்லைன்னா போகட்டும்”

    “இல்ல அவங்க ரொம்பப் பெரியவங்க..” “என்னை விடப் பெரியவங்களா  வேற யாரையும் நான் நினைத்துக்கூட பார்க்கறதில்லை”

    மேனேஜரால் அதற்கு மேல் பேச முடியவில்லை.

    காசு கொடுத்து டிக்கெட் வாங்கிக் கொண்டு வந்த பெரியார், அண்ணா, சம்பத் மூவரும் தரையில் அமர்ந்தே ‘இழந்த காதல்’ என்ற அந்த நாடகத்தை ரசித்தனர்.

    இடைவேளை நேரம்‌. மேடையேறினார் அண்ணா... “அழையா வீட்டில் நுழையா சம்பந்திகள் போல நாங்கள் வந்துள்ளோம். திராவிடர் கழக மாநாடுகள் நூறு நடத்துவதும் சரி. எம். ஆர். ராதா நாடகம் ஒன்னு நடத்துறதும் சரி” என்று பாராட்டிப் பேசிவிட்டு அமர்ந்தார். ராதாவுக்கு மகிழ்ச்சி. நாடகத்தை முழுதாகப் பார்த்து விட்டே அவர்கள் கிளம்பினார்கள்.

    -அம்ரா பாண்டியன்
    ×