என் மலர்tooltip icon

    கதம்பம்

    உலகில் பிறக்கும் ஒவ்வொரு மனிதனுமே திறமையானவன்தான். நிறைய விஷயங்களில் நமக்கு திறமை இருந்தும் நம்மால் அதை நோக்கிப் போகவும், வெற்றி பெறவும் முடியாமல் போகக் காரணம் திட்டமிடலின்மைதான்.
    வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்று ஆர்வத்துடன் இருக்கிறீர்களா..?

    “உங்களுக்கு எது தேவையோ அதில் கவனம் செலுத்துங்கள்” அவ்வளவுதான்.

    எல்லாமே நமக்கு தெரியும். அதான் தெரியுமே! என்ற மனநிலையில், எதைப் பற்றியும், நாம் ஆழமாக யோசிப்பதில்லை. அதற்கான திட்டங்களில் அக்கறை காட்டுவதுமில்லை. நிறையப் பேருக்கு ‘நமக்கு என்ன தேவை?’என்பதே தெரிவதில்லை,
    யோசித்துப் பாருங்களேன். இன்றைக்கு தோராயமாக உங்களுக்கு 30 வயது என்று வைத்துக் கொள்ளுங்கள். 60 வயதில் நீங்கள் எங்கே இருக்க விரும்புகிறீர்கள்?

    அப்போது என்ன தேவை? அந்த வயதில் என்னென்ன வசதிகள் வேண்டும்? சமூகத்தில் எந்த நிலையில் இருக்க விரும்புகிறீர்கள்? உங்கள் தொழிலில் எந்த உயரத்தில் இருக்க விரும்புகிறீர்கள்..? இவை பற்றியெல்லாம் யோசித்து, திட்டமிட்டது உண்டா..?

    திட்டமிடாத பணிகளை எப்போதுமே செயல்படுத்த முடியாது. எதற்குமே ஒரு செயல்திட்டம் இருக்க வேண்டும்.

    உலகில் பிறக்கும் ஒவ்வொரு மனிதனுமே திறமையானவன்தான். நிறைய விஷயங்களில் நமக்கு திறமை இருந்தும் நம்மால் அதை நோக்கிப் போகவும், வெற்றி பெறவும் முடியாமல் போகக் காரணம் திட்டமிடலின்மைதான்.

    ஒரு விஷயத்தைத் தெரிந்து கொள்ளுங்கள். ஓடுகிற வயதில் உட்கார்ந்து கொண்டிருந்தால், உட்கார வேண்டிய வயதில் ஒட வேண்டி இருக்கும்.

    இருக்கிற வேலையை உருப்படியாகச் செய்து நிம்மதியாக இருப்போம் என்ற எண்ணம், வளர்ச்சியைத் தராது.

    இந்த வாழ்க்கை நாம கேட்டா கிடைச்சது..? எல்லாம் தானே வரும் சார், நம்ம எதிர்காலமும் சூப்பரா இருக்கும் சார்’ என்று தோன்றுகிறதா..? வாழ்க்கை, வளத்தைத் தானே தராது. அது ஒரு வழிகாட்டி.

    நம்பிக்கையோடு செயல்படும்போது கூடுதல் வாய்ப்புகள் கிடைக்கும். அவற்றைப் பயன்படுத்துவதும், பயன்படுத்தாததும் நமது கையில் தான் இருக்கிறது.

    வாழ்க்கை மேல் பாரத்தைப் போடுவதன் மூலம் நீங்கள், உங்கள் வயதைக் கடத்துகிறீர்கள் என்பதே பொருள்.

    ஜெயிக்க வேண்டும் என்று முடிவு எடுத்து விட்டீர்களானால், வெற்றி பெறுவதற்காக நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்ற தெளிவு வேண்டும். தெளிவு இல்லையென்றால், பிறரது வளர்ச்சிக்காக கை தட்டிக்கொண்டே இருப்போம். அடுத்தவருக்கு பயன்பட்டுக் கொண்டே இருப்போம். நமக்குப் பலன் ஒன்றும் இருக்காது.

    நமக்கு கனவு இல்லையென்றால், நாம் அடுத்தவர் கனவை நனவாக்க உழைத்துக் கொண்டே இருக்க வேண்டியதுதான். உங்கள் கனவுக்கு உழைக்க ஆளைத் தேடுங்கள்.

    சினிமாவுக்குப் போகிறோம். டி.வி-யில் சீரியல் பார்க்கிறோம். இதைத் தவிர கிரிக்கெட், புட்பால் எல்லாமே பார்க்கிறோம். கை தட்டுகிறோம். நீங்கள் யாருக்காக கை தட்டுகிறீர்களோ, அவர் சம்பாதிக்கிறார். நீங்கள் கை தட்ட தட்ட அவரது பேங்க் பேலன்ஸ் உயர்ந்து கொண்டே போகிறது.

    உங்களது 50ஆவது வயதில், பையனின் உயர் படிப்புக்குப் பணம் தேவைப்படும், பெண்ணின் கல்யாணத்திற்கு பணம் தேவைப்படும், கடன் வாங்க வேண்டியிருக்கும்.

    அப்போது, ‘அடடா பணத்தை சம்பாதிக்காமல், சேர்த்து வைக்காமல், இப்படி வாழ்க்கையை வீணாக்கி விட்டோமே! என்றெல்லாம் சிந்திக்கத் தோன்றும், அப்போது புதிய யோசனைகளும் திட்டங்களும் கூட வரலாம். ஆனால், அவற்றை எல்லாம் செயல்படுத்த உடல் வலிமையும், வாய்ப்புகளும் இருக்காது.

    தெரிந்து கொள்ளுங்கள். வாழ்க்கையில் 50 வயதிற்கு மேல் நம்மால் ஓட முடியாது, உத்தரவாதம் இல்லாத உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

    தூய்மை இல்லாத தண்ணீர், காற்று, உணவு என்ற மாசுள்ள உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இதனால் மூட்டு வலி, சர்க்கரை வியாதி எனப் பல பிரச்சினைகள் 50 வயதிலேயே வந்து விடுகின்றன. அதற்குள்ளாக உங்கள் தேவை என்ன என்பதைத் தெரிந்து அதை நோக்கி, ஓட வேண்டும்.

    முன்னேற வேண்டும் என்று ஆர்வம் காட்டினால், ‘கை தட்டுகிற வேலை’ தானே குறைந்து விடும். ‘எனக்கு நிறைய வேலை இருக்குப்பா, இதற்கெல்லாம் நேரம் கிடையாது!’ என்று கூறி, வெட்டி அரட்டைகள், வீண் பாராட்டு விழாக்களில் இருந்து விலகி விடுவீர்கள்.

    ஆரம்பத்தில் சொன்னதுபோல, வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு முதலில் எங்கே போக வேண்டும் என்பதற்கான தெளிவு வேண்டும். பிறகு தெளிவாகத் திட்டமிட்டு அதை நோக்கி உழைக்க வேண்டும். திட்டமிட்டு உழைத்தால், வெற்றி நிச்சயம்.
     
    - இராம்குமார் சிங்காரம்.
    முடியின் உறுதித்தன்மையும் நீளமும் அதிகரிக்க இயற்கை முறையில் ஷாம்புவை பயன்படுத்தினால் போதுமானது.
    “நான் சொல்லுவது எல்லாம் உண்மை. உண்மையைத் தவிர வேறொன்றும் இல்லை”

    கடந்த வருடத்திற்கு முந்தைய வருடம்....ஷாம்புவை தவிர்க்க வேண்டும் என்று நினைத்தேன். உறுதி மொழியெல்லாம் எடுக்கவில்லை... நினைத்தேன் அவ்வளவுதான். ஆனால் இன்று வரை அதை கடைபிடித்து வருகிறேன். ஷாம்புவை மறந்து இரண்டு வருடங்கள் ஆகின்றன.

    முந்தைய நாள் இரவில் மறக்காமல் கொஞ்சம் வெந்தயம், பச்சை பருப்பு, கடலை, வால்நட்/பாதம் (கைவசம் இருந்தால்) ஊறவைத்து விடுவேன்.

    காலையில், செம்பருத்தி, மருதாணி (எப்போதாவது மட்டும்), கீழாநெல்லி+கருவேப்பிலை (எப்போதும்), நெல்லிக்காய், சிறிது தேங்காய், முட்டை வெண்கரு, வெங்காயம், கரிசாலை.... இப்படி எது கைவசம் இருக்கிறதோ, அவற்றையும் சேர்த்து அரைத்து விடுவேன். குறைந்தபட்சம் 5 பொருட்களாக இருக்க வேண்டும்.

    வடிகட்டியும், அப்படியேவும் தலையில் தேய்த்து, அலசி விடவும். அவ்வளவே. முடியின் உறுதித் தன்மையும் நீளமும் சற்றே கூடியது போல் இருக்கிறது.

    தலை குளிக்க வேண்டுமென்றால் இப்போது குழந்தைகளே  “ஒண்ணு பச்ச கலர்ல செய்து தேய்ப்பியே....அது செய்து குடும்மா” என்று கேட்கிறார்கள்.

    எந்த ஷாம்பு எடுத்துக் கொண்டாலும், அதிலிருக்கக் கூடிய சத்துக்கள் அனைத்தும் இதில் இருக்கிறது. ஆனால் தேவையற்ற வேதிப்பொருட்கள் இல்லை. இது  கூடுதல் ஆரோக்கியமும் கூட.

    -வண்டார்குழலி
    குடிநீரை காய்ச்சி நன்றாக ஆறவைத்து செம்பு பாத்திரத்தில் ஊற்றி அருந்தலாம். இந்த நீரில் சீரகம், ஓமம், துளசி போன்ற உடம்பிற்கு நன்மை பயக்கும் பொருட்களை கலந்து குடிப்பது சிறந்ததே.
    செம்பு பல்வேறு மருத்துவ ரீதியான  பலன்களைக் கொண்டது. வீட்டில் வாட்டர் ப்யூரிஃபையர் பயன்படுத்த முடியாதவர்கள் செம்பு பாத்திரத்தில் 16 மணி நேரத்துக்கும் மேல் தண்ணீரை வைத்திருந்தால் அது தானாகவே தண்ணீரில் உள்ள கிருமிகளை அகற்றி சுத்தப்படுத்தி கொடுத்துவிடும்.

    சாதாரணமாக செம்பு பாத்திரம் அல்லது குடத்தில் நீர் நிரப்பப்பட்டு 8 முதல் 10 மணி நேரம் கழித்து அருந்த வேண்டும். அப்போதுதான் அதன் முழுப்பயன் நமக்கு கிடைக்கும். இரவு பாத்திரத்தை நிரப்பி விட்டு 8 மணி நேரம் கழித்து காலையில் எழுந்து பருகுவதால் அதில் நிறைந்திருக்கும் மருத்துவ குணம் நமக்கு முழுவதும் கிடைக்கிறது. இது மிகச்சிறந்த கிருமி நாசினியாக செயல்படுகிறது.

    செம்பு பாத்திரங்களில் கார, அமிலத் தன்மை கொண்ட மற்றும் புளிப்புத்தன்மை கொண்ட பொருட்களை அதில் வைத்து பயன்படுத்தக்கூடாது. புளிக்கும் தன்மை கொண்ட தயிர் மற்றும் பழச்சாறுகளை அந்த பாத்திரங்களில் பயன்படுத்தக்கூடாது. அதேபோல் சூடான பதார்த்தங்களையும் செம்பு பாத்திரங்களில் பயன்படுத்தக்கூடாது.

    செம்பு பாத்திரங்களில் நீர் வைக்கும்போது பாத்திரம் முழுவதும் இருக்குமாறு வைக்க வேண்டும்.நெடுநேரமாக பாதி பாத்திரமாக நீர் குறைவாக இருந்தால் நீருக்கு மேல் இருக்கும் காலி இடத்தில் காற்று புகுந்து நீரில் இருக்கும் பாக்டீரியாக்களோடு கெமிக்கல் மாற்றங்களை ஏற்படுத்தும். இதனால் பாத்திரத்தின் உள் மற்றும் வெளியே பச்சை பச்சையாகப் படிய ஆரம்பிக்கும். அப்போது அதில் இருக்கும் நீரை அருந்தக் கூடாது. அதனால் செம்பு பாத்திரங்களை அடிக்கடி சுத்தம் செய்யவேண்டும்.

    செம்பு கலந்த நீரானது எலும்பை உறுதி செய்யும். மேலும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு வலிமை தரக்கூடியது. குறிப்பாக கர்ப்பிணி பெண்கள் இந்த நீரை அருந்துவதால் பிறக்க போகும் குழந்தைக்கும் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

    குடிநீரை காய்ச்சி நன்றாக ஆறவைத்து செம்பு பாத்திரத்தில் ஊற்றி அருந்தலாம். இந்த நீரில் சீரகம், ஓமம், துளசி போன்ற உடம்பிற்கு நன்மை பயக்கும் பொருட்களை கலந்து குடிப்பதும் சிறந்ததே.

    இப்பாத்திரத்தை பாத்திரம் துலக்கும் சோப்பு பயன்படுத்தி துலக்குவது நல்லதல்ல. இதனை சாம்பல் அல்லது புளி கொண்டு மட்டுமே சுத்தம் செய்ய வேண்டும். துலக்கிய பின் ஒன்று அல்லது இரண்டு முறை நல்ல நீரை கொண்டு பாத்திரத்தை அலம்பிவிட்டு நீரை நிரப்பி அருந்துவது நல்லது. மேலும் ஒரு நாள் விட்டு ஒரு நாள் சுத்தம் செய்வது கூட போதுமானது.    

    -அருண் நாகலிங்கம்
    சகுனத்தடைகள் உண்டாகும்போதுதான் உள்ளே வந்து அமர்ந்து நீர் அருந்தி செல்ல வேண்டும் என்பதில்லை.
    சகுனத்தடை என்பது மூட நம்பிக்கையா?

    வீட்டை விட்டு வெளியே செல்லும்போது  கால் இடறினால் உள்ளே வந்து அமர்ந்து நீர் அருந்திச் செல்லச் சொல்வது ஏன்?
    சகுனத்தடை என்பதால்தான்.

    சகுனம் என்பது நடைபெற உள்ள நிகழ்விற்கான குறிகாட்டி என்று எடுத்துக் கொள்ளலாம்.

    வீட்டைவிட்டு வெளியே செல்லும்போது கால் இடறினாலோ, வாயிற்படியில் தலையில் இடித்துக் கொண்டாலோ, நடையில் தடுமாற்றம் உண்டானாலோ அதனை சகுனத் தடையாகச் சொல்வார்கள்.

    இதுபோன்ற சகுனங்களை மூடநம்பிக்கை என்று ஒதுக்க முடியாது. உண்மை நிலையை யோசித்துப் பாருங்கள்.

    வெளியே ஒரு வேலையாக செல்லும்பொழுது கால் இடறுவது, தலையில் இடித்துக் கொள்வது, நடையில் தடுமாற்றம் முதலான நிகழ்வுகள் வெளியில் செல்பவரது கவனக்குறைவால்தான் நிகழ்கிறது. அதே கவனக்குறைவுடன் இருந்தால் அவரால் அந்த வேலையை சரிவர செய்ய இயலாது.

    கவனக்குறைவினை சரி செய்வதற்காகவும், மனதளவில் அவர் தெளிவாக இருக்க வேண்டும் என்பதற்காகவும் வீட்டிற்குள் திரும்ப அழைத்து அமரச் செய்து நீரை அருந்துங்கள் என்கிறார்கள்.

    குடிக்கின்ற நீர் மனதை சாந்தப்படுத்தும். தண்ணீர் என்பது கிரஹங்களில் சந்திரனின் ஆதிக்கத்தைப் பெற்றது. அந்தச் சந்திரனையே மனோகாரகன் என்று அழைப்பார்கள்.

    தண்ணீரைப் பருகிவிட்டுச் செல்லும்போது நம் உடம்பில் உள்ள குறைகள் காணாமல் போகின்றன. தண்ணீரை அருந்திவிட்டு வெளியில் கிளம்பும்பொழுது மனமும் சாந்தமாய் இருக்கிறது. வெளியில் சென்று செய்து முடிக்க வேண்டிய பணியும் வெற்றி பெற வாய்ப்புகள் அதிகம்.

    எண்ணத்தை சீராக்குதல் அமைதிப்படுத்துதல் என்றும் வைத்துக் கொள்ளலாம்.

    சகுனத்தடைகள் உண்டாகும்போதுதான் உள்ளே வந்து அமர்ந்து நீர் அருந்தி செல்ல வேண்டும் என்பதில்லை.

    வெளியில் வேலையாகக் கிளம்பும்போதே மனைவியின் கையாலோ, மகளின் கையாலோ, தாயாரின் கையாலோ அல்லது அந்த வீட்டில் உள்ள சுமங்கலிப் பெண்ணின் கையாலோ ஒரு சொம்பு தண்ணீரை வாங்கிக் குடித்துவிட்டு கிளம்பிப் பாருங்கள். இதுபோன்ற சகுனத் தடையும் உண்டாகாது, கையிலெடுத்த செயலையும் சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள்.

    சகுனத்தடை போன்றவற்றில் நம்பிக்கை இல்லாதவர்கள் கூட மனதை அமைதியாக்கும் நோக்கில் இவைகளை கடைபிடிக்கலாம்.

    -ஆர். எஸ். மனோகரன்
    உலகம் முழுவதும் இன்று கொண்டாடப்படும் காதலர் தினம் உருவானது எப்படி? என்பது குறித்து பார்ப்போம்...
    கி.பி.269-களில் ரோமை ஆண்ட கிளாடியஸ் என்ற மன்னன், ஆண்கள் (வாலிபர்கள்) திருமணமே செய்யக் கூடாது. திருமணம் செய்தால் வலிமை போய்விடும். அவர்கள்  போர்த்தொழில் செய்ய முடியாது. ஆகவே வயது வந்த ஆண்கள் திருமணம் செய்யக் கூடாது.

    அதுமட்டுமல்ல,  நிச்சயிக்கப்பட்ட திருமணங்களுக்கும் தடைச்சட்டம் கொண்டு வந்தான்.

    காதலித்துக் கொண்டிருந்த காதலர்களுக்கு இது அதிர்ச்சியாகி விட்டது. இந்நிலையில் அந்த நாட்டு மதகுருக்களில் ஒருவரான புனித வேலன்டைன் நாடு முழுதும் உள்ள  காதலர்களை அழைத்து வந்து, தேவாலயத்தில் வைத்து திருமணம் செய்துவைத்தார்.

    இதையறிந்த மன்னன் கிளாடியஸ் , மதகுரு வேலன்டைனை கொடுமை செய்து, சிறையில் அடைக்கிறான். அவர் இருந்த சிறை அதிகாரி மகள்  அஸ்டோரியஸ், வேலன்டைனை  நேசித்து வந்தாள். இதையறிந்த சிறை அதிகாரி மகளை வீட்டுச் சிறையில் வைக்கிறான் மன்னன்.

    காதலரை சேர்த்து வைத்த ராஜகுற்றத்திற்காக  கி.பி.270 பிப்ரவரி 14ல்  வேலன்டைன், கல்லால் அடித்து, தலை துண்டிக்கப்பட்டு, கொல்லப்படுகிறார்.

    அதற்கு  முன்,  தன் காதலி  அஸ்டோரியஸுக்கு ஒரு வாழ்த்து மடல் தயாரித்து,  “விடை பெறுகிறேன்...உன் வேலன்டைன்” என்று எழுதி வைத்துவிட்டு, தண்டனையை ஏற்கிறார்.

    காதலரை சேர்த்து வைத்த காரணத்தால் கொல்லப்பட்டதால் அவருடைய தினத்தை “வேலன்டைன்ஸ் டே”  என உலகக் காதலர்கள் கொண்டாடுகின்றனர். இது காதலர் தினமாக மாறிவிட்டது.

    -ஜெயதேவன்
    எதையும் எளிமையாக, இனிமையாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதைத்தான் நகைச்சுவை உணர்வு நமக்குக் கற்றுத்தரும் பாடம் என்ற தன் இயல்பான அனுபவத்தை வெளிப்படுத்தி அனைவரையும் சிரிக்க வைத்தவர் தென்கச்சி சுவாமிநாதன்.
    வாழ்க்கையில் நாம் ஒவ்வொருவரிடமும் பழகும் போது ஒவ்வொரு அனுபவத்தைப் பெறுகிறோம். தமிழஞர் தென்கச்சி சுவாமிநாதன் அவர்களோடு பழகிப் பயணம் செய்யும் பாக்கியம் எனக்கு இறையருளால் கிடைத்தது. முகம் காட்டாமல் தன் இனிய குரலால் முகவரி பெற்றவர்.

    ஒரு முறை நானும் அவரும் முதல் நாள் மாலை கூட்டத்தில் பேசிவிட்டு மறுநாள் காலை குற்றாலம் சென்றோம். அங்கு அவருடைய வகுப்புத் தோழர்களும் வந்திருந்தனர். அதில் ஒருவர் நட்பு உரிமையோடு “சுவாமிநாதா” -இதோ அருவி கொட்டுகிறதே. அதன் உயரத்தில் நீ போய் அமர்ந்து  “இன்று ஒரு தகவல்’ சொன்னால் எப்படி இருக்கும்?” என்று சொன்னார். சிரித்துக் கொண்டே தென்கச்சியார் சொன்னார்... “நல்லாத்தான் இருக்கும்’ நீ என் வீட்டுக்கு ‘தகவல்’ சொல்ல வேண்டியிருக்கும் என்றார்.

    “எதையும் எளிமையாக, இனிமையாக எடுத்துக்கொள்ள வேண்டும்” என்பதைத்தான் நகைச்சுவை உணர்வு நமக்குக் கற்றுத்தரும் பாடம் என்ற தன் இயல்பான அனுபவத்தை வெளிப்படுத்தி அனைவரையும் சிரிக்க வைத்தார்.

    சென்னை மடிப்பாக்கத்தில் அவருடைய வீடு இருக்கிறது. அவரை ஒரு முறை அதிகாலையில் சென்று சந்தித்தேன். பிறகு இருவரும் பஸ் ஸ்டாண்டுக்கு வந்தோம். புறப்பட இருந்த போது ஒரு பஸ்ஸில் இருந்த ஒருவர் “இறங்கி ஓடி வந்து தென்கச்சியாரைப் பார்த்து, ஐயா வணக்கம்! உங்க நிகழ்ச்சின்னா எனக்கு உசிரு”ன்னார்.

    “அப்படியாப்பா.. தினமும் ரேடியோவுல இன்று ஒரு தகவல் கேட்டியா”ன்னார் ஐயா. அதற்கு அந்த மனிதர் “அதெல்லாம் ஒண்ணுமில்லை... நீங்க ஆரம்பிக்கும் போது எனக்கு கம்பெனிக்கு நேரமாயிட்டுதுன்னு... வேலைக்கு புறப்பட்டுடுவேன்”னார்.

    அந்த மனிதர் போனதும் “பார்த்தீங்களா.. நான் ஒருத்தர வேலைக்கு அனுப்ப காரணமா இருக்கிறேன்”னு பெருமையாகச் சொன்னார். தாக்குதலாக இருந்தாலும் அதைத் தாங்குதலாக மாற்றும் அனுபவம் கிடைத்தற்கரிய ஒன்று என்பதை ஐயா மூலம் உணர்ந்து கொண்டேன்.

    ஒரு முறை ஐயாவும் நானும் வைகை எக்ஸ்பிரஸ்ஸில் பயணம் செய்தோம். விழுப்புரம் சந்திப்பில் ரெயில் நின்றது. புறப்பட கிரீன் சிக்னல் விழுந்தது. அப்போது கமகமவென்று மசால் வடை வந்தது. ஸ்டேஷன் முழுவதும் பரவிய அந்த வாசனை ஐயாவையும் விடவில்லை. “நல்லா இருக்கே வடை வாசனை” என்றார் தென்கச்சியார்.

    ‘இதோ வாங்கி வந்து விடுகிறேன்’ என்று ரெயிலை விட்டு இறங்கி வேகமாக சென்று கடையில் பொட்டலம் கட்டும் தம்பியிடம் “தம்பி மசால்வட 4 கட்டுங்க.. சீக்கிரமா கட்டுங்க.. ரெயிலை பிடிக்கணும்” என்றேன்.

    அந்தப் பையன் சிரித்தான். “நான் சிரிக்கிற மாதிரி எதுவுமே சொல்லலையே... ஏன் சிரிக்கிறாய்?” என்றேன்... “அதெல்லாம் ஒண்ணுமில்ல சார்... வடையவச்சி எலியதான் பிடிப்பாங்க... நீங்க டிரெயினையே பிடிக்கணும்னு சொன்னீங்களே! நீங்க பெரிய ஆள்சார்” என்றான்... மனதை மகிழவைக்கும் வாசனைகள் எங்கிருந்தும் வரலாம் என்று நினைத்துக் கொண்டேன்.

    -புலவர் மா. ராமலிங்கம்
    இன்னைக்கு பொதுவா கடவுள் பக்தி மக்கள் கிட்ட எப்படி இருக்குங்கறதுக்காக இப்படி ஒரு கதையை பெரியவர்கள் சொல்றது உண்டு.
    ஒரு ஊர்ல ஒரு ஆள் இருந்தான்.

    அவனுக்கு கடவுள் பக்தி ரொம்ப அதிகம்.  அடிக்கடி கோவிலுக்கு போவான். கடவுளை வேண்டிக்குவான். அதுக்கப்புறம் காட்டுக்கு போவான். விறகு வெட்டுவான். அதை விற்பனை செய்வான்.

    ஓரளவுக்கு வருமானம் வந்தது. அதை வச்சிக்கிட்டு நிம்மதியா வாழ்க்கை நடத்திகிட்டு இருந்தான்.

    ஒரு நாள் அவன் காட்டுக்கு போகும் போது அங்கே ஒரு நரியை பார்த்தான்.

    அந்த நரிக்கு முன்னங்கால் ரெண்டுமே இல்லை. ஏதோ விபத்துல இழந்துட்டது போல இருக்கு! அது பாட்டுக்கு ஒரு மரத்தடியில உட்கார்ந்திருக்கு.

    அதை இவன் பார்த்தான், அப்போ இவன் மனசுல ஒரு சந்தேகம்..

    “இந்த நரிக்கு ரெண்டு காலும் இல்லை... அப்படி இருக்கறப்போ இது எப்படி வேட்டையாடி தன்னுடைய பசியை போக்கி கொள்ள முடியும் ?” அப்படின்னு யோசிக்க ஆரம்பிச்சான்.

    இப்படி யோசிச்சுகிட்டு இருக்கும் போதே அந்த பக்கமா ஒரு புலி வந்தது.

    அதை பார்த்த உடனே ஓடி போய் ஒரு மரத்துக்கு பின்னாடி ஒளிஞ்சிகிட்டான், ஒளிஞ்சிகிட்டு என்ன நடக்குதுன்னு கவனிக்க ஆரம்பிச்சான்..

    அந்த புலி என்ன பண்ணிச்சுன்னா... ஒரு பெரிய மானை அடிச்சி இழுத்துகிட்டு வந்தது... அதை சாப்பிட்டது...

    சாப்பிட்டது போக மீதியை அப்படியே அங்கேயே போட்டுட்டு போய்ட்டது.

    புலி போனதுக்கு அப்புறம் காலில்லாத அந்த நரி மெதுவா நகர்ந்து கிட்ட வந்தது ...

    மிச்சமிருந்ததை சாப்பிட்டது...

    திருப்பதியா போய்ட்டது !

    இவ்வளவையும் மரத்துக்கு பின்னாடி நின்னு அந்த ஆள் கவனிச்சி பார்த்துக்கிட்டு இருக்கான்.

    இப்ப அவன் யோசிக்க ஆரம்பிச்சான்..

    “ரெண்டு காலும் இல்லாத ஒரு வயசான நரிக்கே ஆண்டவன் சாப்பாடு போடறான். அப்படி இருக்கறப்போ .. தினமும் கோவிலுக்கு போய் சாமி கும்பிடற நமக்கு சாப்பாடு போடாம விட்ருவானா ? நமக்கு கடவுள் பக்தி வேற அதிகம் , நாம எதுக்கு அநாவசியமா வெயில்லயும் மழைலயும் கஷ்டபடனும்..? எதுக்காக வேர்வை சிந்தி விறகு வெட்டனும்...?   இப்படி யோசிச்சான்.

    அதுக்கப்பறம் அவன் காட்டுக்கே போறதில்லை .

    கோடலியை தூக்கி எறிஞ்சான்..

    பேசாம ஒரு மூலையிலே உக்கர்ந்துட்டான் .

    அப்பபோ கோவிலுக்கு மட்டும் போயிட்டு வருவான்.

    “கடவுள் நம்மை காப்பாத்துவார்... அவர் நமக்கு வேண்டிய சாப்பாட்டை கொடுப்பார்”- அப்படினு நம்பினான், கண்ணை மூடிகிட்டு...

    கோயில் மண்டபத்துலேயே ஒரு தூண்ல சாஞ்சி உக்காந்துகிட்டான்.

    ஒவ்வொரு நாளும் போய்கிட்டே இருக்கு...

    சாப்பாடு வந்த பாடில்லே !

    இவன் பசியால வாடி போனான். உடம்பு இளைச்சு போச்சு . எலும்பும் தோலுமா ஆயிட்டான் .

    ஒரு நாள் ராத்திரி நேரம். கோயில்ல யாருமே இல்லை. இவன் மெதுவா கண்ணை திறந்து கடவுளை பார்த்தான்... “ஆண்டவா... என்னுடைய பக்தியிலே உனக்கு நம்பிக்கை இல்லையா.....? நான் இப்படியே பட்டினி கிடந்து சாக வேண்டியது தானா? காட்டுல அந்த நரிக்கு புலி மூலமா சாப்பாடு போட்டியே! அதை பார்த்துட்டு தானே இங்கே வந்தேன்... என்னை இப்படி தவிக்க விட்டுட்டியே... இது நியாயமா ”..-ன்னான்

    இப்போ கடவுள் மெதுவா கண்ணை திறந்து சொன்னாராம்,

    “முட்டாளே ! நீ பாடம் கற்றுக்கொள்ள வேண்டியது நரி கிட்ட இருந்து இல்லே ! புலி கிட்ட இருந்து ! அப்படின்னாராம் ....
     
    அதாவது, உடல் உழைப்பு செய்ய முடியாதவருக்கு உதவி செய்யணும் எங்கிற கொள்கையை நீ புலிகிட்டேயிருந்து கத்துக்கோன்னு அர்த்தம்....

    இன்னைக்கு பொதுவா கடவுள் பக்தி மக்கள் கிட்ட எப்படி இருக்குங்கறதுக்காக இப்படி ஒரு கதையை பெரியவர்கள் சொல்றது உண்டு.

    -தென்கச்சி கோ. சுவாமிநாதன்
    உஷ்ணம் காரணமாகவே பெண்களுக்கு கர்ப்பப்பையில் பெரும்பாலான பிரச்சினைகள் ஏற்படுகிறது. வெப்பத்தை குறைப்பதற்காகவே கர்ப்பபையில் நீர்க்கட்டிகள் தோன்றுகின்றன.
    நம் பாரம்பரிய மரபுபடி இயற்கை சார்ந்த வாழ்வியலை மேற்கொண்டால் பெண்களுக்கு மாதவிடாய் தொடர்பான எந்தவித பிரச்சினையும் ஏற்படாது என்கிறார் தூ(ய்)மை பானுசித்ரா.

    சென்னை குன்றத்தூரைச் சேர்ந்த அவர் தூய்மை என்ற அமைப்பை உண்டாக்கி பெண்களிடையே அது தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். அது மட்டுமல்ல பருத்தித்துணியில் ஆரோக்கியம் பேணும் பெண்களுக்கான அணையாடைகளையும் (நாப்கின்) தயாரித்து வருகிறார்.

    எல்லோரையும் போல் இன்றைய நடைமுறை வாழ்க்கை தடத்தில் பயணித்துக் கொண்டிருந்த தனக்கு திடீரென ஏற்பட்ட இந்த மாற்றம் குறித்து  பானுசித்ரா இப்படி விவாரிக்கிறார்...

    எம்.பி.ஏ. முடித்துள்ள நான் ஒரு நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்தேன். திருமணமாகி முதல் கர்ப்பம் தரித்ததும் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. மருத்துவரிடம் சென்ற போது 'பெட் ரெஸ்ட்' எடுக்க வேண்டும் என்று கூறினார். குழந்தை முக்கியம் என்பதால் வேலையை ராஜினாமா செய்து ஓய்வெடுத்தேன். எனினும் கருச்சிதைவு ஏற்பட்டது.

    பானுசித்ரா


    அதற்கான காரணத்தை டாக்டரிடம் கேட்ட போது ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். எதையும் குறிப்பிட்டு சொல்ல முடியாது என்று கூறிவிட்டார்.

    எனக்கு ஒரே மனக்குழப்பம். கருச்சிதைவுக்கான காரணம் குறித்து நானே தேடத் தொடங்கினேன்... நாம் பயன்படுத்தும் சானிட்டரி நாப்கின் தான் பிரச்சினையாக இருக்குமோ? என சந்தேகம் வலுத்தது. தீவிரத் தேடலில்... மாதவிடாய் பிரச்சினைகளுக்கும் கர்ப்பப்பை நீர்கட்டி, புற்று நோய்களுக்கும் மற்றும் குழந்தையின்மைக்கும் நாம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களினால் ஆன நாப்கின்கள் தான் முக்கிய காரணம் என்பதை தெரிந்து கொண்டேன்.

    இந்த நாப்கின்கள் சிந்தடிக் பைபரால் தயாரிக்கப்படுகின்றன. உறிஞ்சுவதற்கு ஜெல் பயன்படுத்தப்படுகிறது. இவை வேதிப்பொருட்கள் என்பதால் அதனை பயன்படுத்தும் போது நமக்கு பாதகம் ஏற்படுகிறது. தற்போது மென்சஸ் கப் என்ற பெயரில் புதிய சாதனம் வந்துள்ளது. அதனை பயன்படுத்துவது அதிக ஆபத்தை வரவழைக்கும்.

    இதற்கு தீர்வுகாண என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருந்த வேளையில்தான் வானகம் ஐயா நம்மாழ்வரின் இயற்கை வேளாண் பண்ணையில் நடந்த வாழ்வியல் முகாமில் கலந்து கொண்டேன். அங்கு கொடுத்த அறிவுரையின் பேரில் பெண்களின் உடல் நலத்துக்கு ஏற்ற பருத்தி துணியினால் ஆன அணையாடைகளை (நாப்கின்கள்) தயாரித்தேன்.

    இந்த அணையாடைகளை பருத்தி துணிகளை கொண்டு பெண்களே வீட்டில் தயாரித்துக் கொள்ளலாம். தங்களுக்கு ஏற்படும் ரத்தப் போக்கின் அளவைப் பொறுத்து துணி அடுக்குகளை வைத்துக் கொள்ள வேண்டும்.

    நாங்கள் இரண்டு வித அணையாடைகளை தயாரிக்கிறோம். ஒன்று முழுக்க முழுக்க பருத்தி துணியினால் ஆனவை. மற்றொன்று ரத்தத்தை கசிய விடாமல் இருப்பதற்காக பருத்தி துணி அடுக்குகளின் அடியில் பி.யூ.எல். என்ற கோட்டிங் துணி மட்டும் கூடுதலாக சேர்க்கப்பட்ட அணையாடை. வீட்டிலே தயாரிப்பவர்கள் இதற்கு பதிலாக தற்போது ஓட்டல், சுவீட் கடைகளில் வழங்கப்படும் துணிப்போன்ற கேரி பேக்குகளை வெட்டி பயன்படுத்தலாம்.

    இந்த அணையாடைகளை பயன்படுத்துவதால் எந்தவித பாதிப்பும் ஏற்படாது. இதனை மீண்டும் மீண்டும் சுத்தம் செய்து 3 ஆண்டுகள் வரை பயன்படுத்தலாம். இதன் மூலம் செலவினமும் குறையும். சுற்றுச்சூழல் கேடும் தடுக்கப்படும்.

    இதனை சுத்தம் செய்வதற்கு சோப்போ, சலவைத் தூளோ தேவையில்லை. விரும்பினால் சிறிதளவு சேர்த்துக் கொள்ளுங்கள். தண்ணீரில் ஊற வைத்துக் கசக்கித் துவைத்து வெய்யிலில் காயவைத்தாலே போதும்.

    சோப்புக்கு பதில் பூந்திக் கொட்டையை பயன்படுத்தினால் நல்லது. 5, 7 பூந்திக் கொட்டைகளை உடைத்து அதன் உள்ளிருக்கும் பருப்பை அகற்றி விட்டு தண்ணீரில் ஊற வைத்து அதில் துவைக்கலாம். சோப்பு போல் நுரைவரும், துணியும் சுத்தமாகும்.

    மாதவிடாய் காலங்களில் பெண்கள் கட்டாயம் ஓய்வு எடுக்க வேண்டும். அந்த சமயத்தில் ரத்தத்தை வெளியேற்ற உடல் உஷ்ணத்தை உருவாக்கும். அப்போது வேலை செய்தால் உடலில் வெப்ப சமநிலை மாறி தொந்தரவு ஏற்படும். அதனால் தான் பழங்காலத்தில் மாதவிடாயின் போது பெண்களை தனியாக உட்கார வைத்தார்கள். தீட்டு என்பதற்காக அல்ல.

    உடையை எடுத்துக் கொண்டாலும் நம் பாரம்பரிய புடவைதான் பெண்கள் உடல் நலத்துக்கு ஏற்றது. உஷ்ணம் காரணமாகவே பெண்களுக்கு கர்ப்பப்பையில் பெரும்பாலான பிரச்சினைகள் ஏற்படுகிறது. வெப்பத்தை குறைப்பதற்காகவே கர்ப்பபையில் நீர்க்கட்டிகள் தோன்றுகின்றன.

    ஜீன்ஸ், லெகின்ஸ் போன்ற இறுக்கமான உடைகளை அணிந்தால் கர்ப்பப்பை உஷ்ணமடைந்து பாதிக்கப்படும். சேலை கட்டும் போது நன்கு காற்றோட்டம் கிடைப்பதால் கர்ப்பப்பை குளிர்ச்சியாக இருக்கும். இதற்காகத்தான் சேலை கட்டும் போது பல மடிப்புகள் கொண்டு கொசுவத்தை வயிற்றுப் பகுதியில் சொருகும் அமைப்பில் வைத்தார்கள். இந்த கொசுவம் நல்ல காற்றோட்டத்தை ஏற்படுத்தி வெப்பத்தை தணிக்கும். பெண்கள் கால் மேல் கால் கோட்டு உட்காரக் கூடாது என்று சொல்வதற்கும் இதுதான் காரணம்.

    இதற்கும் மேலோக உணவுப்பழக்கம் முக்கியமானது. பருவமடையும் சமயத்தில் தான் பெண்களுக்கு இடுப்பெலும்புகள் விரிவடையும். அதற்கு கால்சியம் சத்து தேவை. உளுந்தில் கால்சியம் அதிகம் இருப்பதால் உளுந்தம் களி கொடுத்தார்கள். அதில் நல்லெண்ணெய் கலந்து கொடுப்பார்கள். ஏன் தெரியுமா? நல்லெண்ணெய் மிதமான வெப்பத்தை ஏற்படுத்தும். இது மாதவிடாயின் போது ரத்த போக்கை சிரமமின்றி வெளியேற்றும்.

    இப்படி ஆரோக்கியம் அளிக்கும் நம் பாரம்பரிய மரபுவழி வாழ்க்கையை கடைபிடித்தால் நோய் நொடியின்றி மகிழ்ச்சியாக வாழலாம் என்றார்.
    தெரிந்து கொள்ளுபவர் தெரிந்து கொள்ள வேண்டியதிலிருந்து தனித்து விலகி இருக்க வேண்டும். அப்போதுதான் தெரிந்து கொள்வது சாத்தியமாகிறது.
    இந்த உலகத்தில் மூன்று விஷயங்கள் உள்ளன.

    முதலாவது தெரிந்தவைகள்.
    இரண்டாவது தெரியாதவைகள்.
    மூன்றாவது தெரிந்து கொள்ள முடியாதவைகள்...

    தெரிந்தவை என்பது மனித மனம் அறிந்து கொண்டவை.

    தெரியாதவைகள் விரைவில் தெரிந்தவைகளாக ஆகி விடும்.

    ஆனால் இந்த இருப்புலகின் அடித்தளம் தெரிந்து கொள்ள முடியாத விஷயமாக உள்ளது.

    மனிதன் இந்த இருப்புலகின் ஒரு பகுதி.

    ஒரு பகுதி எப்படி அதன் முழுமையை அறிந்து கொள்ள முடியும்?

    இருப்புலகின் ஒரு சிறிய படைப்பாக மனிதன் இருக்கிறான்.

    இருப்புலகின் துடிப்பாக ஒரு அலையாக அவன் இருக்கிறான்.

    எப்படி இந்த துடிப்பு முழுமையை தெரிந்து கொள்ள முடியும்?

    நீங்கள் இந்த முழுமைக்கு, பிரபஞ்சத்திற்கு எல்லையை கணிக்க முடியாது.

    பிரபஞ்சம் இங்குதான் முடிகிறது என்று எவரும் சொல்ல முடியாது.

    உங்களால் அளவற்றதை எல்லை இல்லாததை தெரிந்து கொள்ள முடியாது.

    இந்த மர்மம் எப்போதும் இருந்து கொண்டுதான் இருக்கும்.

    தெரிந்து கொள்ளுபவர் தெரிந்து கொள்ள வேண்டியதிலிருந்து தனித்து விலகி இருக்க வேண்டும். அப்போதுதான் தெரிந்து கொள்வது சாத்தியமாகிறது.

    ஆனால் தெரிந்து கொள்பவர் தனி ஆளாக இல்லை.  இந்த இருத்தல் அவருள் பாய்ந்து நிரப்புகிறது.

    ஐன்ஸ்டின் கூறுகிறார்.. இந்த இருத்தலை முழுமையாக தெரிந்து கொள்வது இயலாத காரியம் என்பதை நான் உணர்கிறேன்.. ஆகவே இந்த இருத்தல் ஒரே மர்மமாக உள்ளது.

    -ஓஷோ
    காலை வெயில்கூட மேனியில் படக்கூடாது என்று பலரும் குடைப்பிடித்து செல்கின்றனர். அவர்களுக்கு நுட்ப உணவு எப்படி கிடைக்கும்?
    இந்த பூமியில் மனிதர்களை தவிர மற்ற எல்லா உயிரினங்களும்  நலமாகத்தான் வாழ்கின்றன. ஆனால் விதவிதமான உணவுகளையும் சத்துப்பொருட்களையும் சாப்பிடும் மனிதன் மட்டும் ஆரோக்கியத்தை தொலைத்து விட்டு அல்லல் படுகிறான்.

    இதற்கு என்ன காரணம் என்ன? இயற்கையோடு இயைந்து வாழ்ந்து ஆற்றலை அறுவடை செய்ய தவறியதே காரணம்.  ஒரு கார் இயங்கவேண்டும் என்றால் அதற்கு பெட்ரோல் மட்டும் போதாது. மின்சாரமும் வேண்டும். அதுபோல் மனிதன் வாழவேண்டுமென்றால் அதற்கு உணவு மட்டும் போதாது. அந்த உணவை ஆற்றலாக மாற்றும் மின்சக்தியான காந்த சக்தியும் வேண்டும். அது இந்த மண்ணில் இருந்து நமக்கு கிடைக்கிறது. இதுபற்றி இயற்கை மருத்துவர் கோ.சித்தர் கூறுவதை பார்ப்போம்...

    பொதுவாக நாம் சாப்பிடும் பொருட்களையே உணவு என நம்பிக்கொண்டு இருக்கிறோம். ஆனால் மூன்று வகை உணவுகள் நாம் வாழ அத்தியாவசிய தேவை. அவை பேருணவு, நுண்ணுணவு, நுட்ப உணவு என்பவையாகும்.

    பேருணவு என்பது இந்த உடம்பு நிறைய சாப்பிடும் உணவு.  நாம் எதை நிறைய சாப்பிடுகிறோம்? காற்றைதான். அடுத்து நீர். மூக்கால் மட்டுமல்ல  தோல் மூலமும் சுவாசிக்கிறோம். அதுபோல் வாயால் மட்டுமல்ல  தோல் மூலமும் நீரை உறிஞ்சுகிறோம். இந்த உணவை நம் உடல் எப்பொழுதும் இயற்கையில் இருந்து பெற்றுக்கொண்டே இருக்கிறது. இதனால் அது பேருணவு எனப்பட்டது.

    அடுத்து நாம் வாய் வழியாக சாப்பிடும் சோறு, இட்லி, தோசை, சப்பாத்தி போன்ற திட உணவுகளும்  பால் போன்ற திரவ உணவுகளும் நுண்ணுணவு எனப்படும்.

    மூன்றாவது நுட்ப உணவு. எல்லா விலங்குகளும் ஆரோக்கியமாக இருப்பதற்கு இந்த நுட்ப உணவுதான் காரணம். அது மண்ணில் இருந்து கிடைக்கும் காந்த சக்தியாகும்.

    இந்த உலகம் அளப்பெரிய காந்த சக்தியை கொண்டதாகும். அதன் சார்ஜ் எப்போதும் இறங்காது. நம்முடைய உடலிலும் காந்த சக்தி உள்ளது. ஆனால் அதன் சார்ஜ் இறங்கிவிடும். அதனை சரி செய்ய உடல் பூமியின் காந்த சக்தியை கிரகித்துக்கொள்ளும். இதற்கு நாம் மண்ணோடு தொடர்பு கொண்டிருக்க வேண்டும். ஒரு குழந்தைக்கு தாயின் அரவணைப்பு எப்படியோ அதுபோன்று மனிதர்களுக்கு பூமி தாய். அவளுடன் தொடர்பில் இருந்தால் நுட்ப உணவு எனப்படும் காந்த சக்தி நமக்கு கிடைக்கும்.

    அந்தக்காலத்தில் குழந்தைகளும் சிறுவர்களும் மண்ணில் உருண்டு புரண்டு விளையாடுவார்கள். பெண்களும் ஆண்களும் செருப்பு இல்லாமல்தான் நடந்து செல்வார்கள். அவர்கள் ஆரோக்கியமாகத்தான் இருந்தார்கள். காரணம் மண்ணில் இருந்து அவர்களுக்கு காந்த சக்தியான நுட்ப உணவு தடையின்றி கிடைத்தது. ஆனால் இன்று மண்ணில் விளையாடினால் நோய் வரும் என்று குழந்தைகளை பொத்தி பொத்தி வளர்கிறோம். வெயிலில் அலையவிடுவதில்லை, மழையில் நனையவிடுவதில்லை. ஆற்றல் கிடைக்கும் இடங்களில் எல்லாம் துண்டிப்பு ஏற்படுத்திவிட்டோம். இதனால்தான் அதிக பேர் நோயால் பாதிக்கப்படுகின்றனர்.

    இன்று நடைபயணம் செல்பவர்கள்கூட செருப்பின்றி நடப்பதில்லை. காலில் பூட்ஸ் மாட்டிக்கொள்கின்றனர். காலை வெயில்கூட மேனியில் படக்கூடாது என்று பலரும் குடைப்பிடித்து செல்கின்றனர். அவர்களுக்கு நுட்ப உணவு எப்படி கிடைக்கும்?

    நாம் எவ்வளவுதான் இயற்கையில் விளைந்த ஆரோக்கியமான உணவு பொருட்களை சத்துப்பொருட்களை உண்டாலும் அது செரிமானம் ஆனால்தான் சத்தாக மாறி உடலில் சேரும். நாம் உண்ட உணவு ஜீரணமாக பூமியில் இருந்து கிடைக்கும் காந்த சக்தி முக்கிய பங்கு வைக்கிறது. அதுபோதிய அளவில் கிடைத்தால்தான் நம் உடலில் உள்ள சுரப்பிகள் நன்கு சுரக்கும். இவைதான் உணவை செரிமானம் செய்து சத்தாகிய ஆற்றலை உறிஞ்ச வைக்கும். காந்த சக்தி கிடைக்காத போது ஜீரணம் மந்தமாகி உண்ட உணவே நஞ்சாக மாறிவிடும்.

    மணல் பரப்பில் நடக்கலாம்.

    எனவே கூடுமானவரை பூமியுடன் தொடர்பில் இருக்க பழகிக்கொள்ள வேண்டும். அதற்கு வெறுங்காலுடன் மண்ணில் நடக்க வேண்டும். மணல் பரப்பில் நடக்கலாம். பாறைகளிலும் நடக்கலாம். இதன் மூலம் காந்த சக்தி நமக்கு கிடைக்கும். புல்வெளிகளில் மாலை வேளையில் நடப்பது நல்லது. சூரியனில் இருந்து பெற்று வைத்து இருக்கும் ஆற்றலை புற்கள் மீது நடப்பதால் நாம் பெறலாம்.

    நாம் மூக்காலும் உடலாலும் சுவாசிக்கும் பேருணவு 50 சதவீதம் இருக்க வேண்டும். வாயால் சாப்பிடும் நுண்ணுணவு 30 சதவீதம் இருக்க வேண்டும். பூமியில் இருந்து கிடைக்கும் காந்த சக்தியான நுட்ப உணவு 20 சதவீதம் இருக்க வேண்டும். இவ்வாறு நாம் வாழ்க்கை முறையை அமைத்துக்கொண்டால் என்றும் ஆரோக்கியமாக வாழலாம்.

    ஆனால் இன்று நிலைமை தலைகீழாக மாறி விட்டது. வாயால் சாப்பிடும் உணவு 30 சதவீதத்தில் இருந்து 70 சதவீதமாக உயர்ந்து விட்டது. காந்த சக்தி கிடைக்காததே இதற்கு காரணம். அது சரியான விகிதத்தில் கிடைத்தால் நாம் உண்ணும் உணவின் அளவு தானாகவே குறைந்துவிடும்.

    தொகுப்பு: கோ.வசந்தராஜ்
    இறைவனை வெறுத்தாலும், இகழ்ந்தாலும், வணங்கா விட்டாலும் அவன் அருள் செய்வான், ஒரு தாயைப் போல என்கிறார் மணிவாசகர்.
    நமது உடலில் இரண்டு தாமரை மலர்கள் உண்டு. ஒன்று மலரும் போது  மற்றது கூம்பும்.

    நமது கைகள் ஒரு மலர். நம் இதயம் இன்னொரு மலர்.

    இரண்டு கைகளையும் சேர்த்து, குவித்து வைத்தால் தாமரை மொட்டு போல இருக்கும். அப்படி உள்ளன்போடு வணங்கும் போது, இதயமாகிய உள்ளத் தாமரை மலரும்.

    அதற்கு மாறாக, எனக்கு வேண்டும், எனக்கு வேண்டும் என்று இரண்டு கைகளையும் விரித்து பிச்சை ஏற்பவனின் உள்ளத் தாமரை கூம்பும்.

    தாய்மார்கள் குழந்தைகளுக்கு உணவு ஊட்டும் போது சோற்றை கை நுனிக்கு கொண்டு வந்து, மலர் மொட்டு போல கூம்பி, குழந்தையின் வாயில் தருவார்கள். அந்தத் தாயிடம் கேட்டுப் பாருங்கள், அந்த நொடியில் அவர்கள் மனம் எவ்வளவு சந்தோஷமாக இருக்கும் என்று.

    மணிவாசகர் சொல்கிறார்... “கர மலர் மொட்டித்து, இருதயம் மலர..” என்று. அதாவது கரமாகிய மலர் மொட்டுப் போல ஆகி, இருதய தாமரை மலர என்கிறார்.

    இறைவன் தனக்குத் தந்த நன்மைகளை எல்லாம் எண்ணிப் பார்க்கிறார். பதிலுக்கு தான் ஒன்றுமே செய்யவில்லையே என்று வருந்துகிறார். ஒரு பக்கம் நன்றியில் மனம் நெகிழ்கிறது. மறுபுறம், தான் ஒன்றுமே செய்யவில்லையே என்ற ஆதங்கத்தில் மனம் வருந்தி “தாயே ஆகி வளர்த்தனை போற்றி” என இறைவன் தாய் போல கருணை செய்வான் என்கிறார் மணிவாசகர்.

    அது ஏன் தாய் போல என்றார்.  தாயன்பு உயர்ந்தது என்று எல்லோருக்கும் தெரியும். இருந்தும், ஏன் அது உயர்ந்தது என்று சிந்திப்போமா?

    முதலாவது, நமக்கு யாராவது துன்பம் செய்தால், அவர்களுக்கு திருப்பி துன்பம் செய்ய வேண்டும் என்று நினைப்பது மனித இயல்பு. திரும்பிச் செய்ய முடியாவிட்டாலும், அவர்களுக்கு ஒரு கெடுதல் வர வேண்டும் என்று உள்ளத்திலாவது நினைப்பது இயல்பு.

    பத்து மாதம், படாதபாடு படுத்திய குழந்தை, சொல்லொண்ணா வலி கொடுத்து பிறந்த குழந்தையை கண்டு ஒரு தாய் மகிழ்வாள். அந்த குழந்தையின் மேல் கோபம் கொள்ளமாட்டாள். முடியுமா?

    இரண்டாவது, ஒரு பெண் எப்போதும் அழகாக இருக்க விரும்புவாள். அவளுடைய அழகை சிதைத்தால் அவளால் தாங்கிக் கொள்ள முடியாது. ஒரு பெண் அறியாமல், அவளுடைய கூந்தலை வெட்டி விட்டால் அவள் அடையும் துன்பத்திற்கும்  கோபத்திற்கும் அளவு இருக்காது.

    ஆனால், ஒரு பிள்ளை பெறுவது என்றால் ஒரு பெண்ணின் அழகு குன்றும். வயிற்றில் வரி வரியாக தோல் சுருங்கும். உடலின் கட்டு குலையும்.

    இருந்தும் அந்தப் பிள்ளையை தாய் பாராட்டி சீராட்டி வளர்ப்பாள்.

    மூன்றாவது, கருவில் இருக்கும் பிள்ளை எப்படி இருக்கும் என்று கூட தாய்க்கு தெரியாது. ஆணா பெண்ணா என்று கூட தெரியாது. கறுப்பா  சிவப்பா, ஒல்லியா குண்டா என்று ஒன்றும் தெரியாது. முகம் கூட தெரியாத அந்த சிசுவின் மேல் அவ்வளவு அன்பு பாராட்டி தன்னுள் வளர்ப்பாள்.

    குழந்தைக்கு வேண்டுமே என்று  காலாகாலத்தில் உணவு உண்பாள். குழந்தைக்கு வலிக்கும் என்று ஒரு விதமாக படுப்பாள். அவ்வளவு வலியையும் சகித்துக் கொள்வாள்.

    அது போல இறைவனை வெறுத்தாலும், இகழ்ந்தாலும், வணங்கா விட்டாலும் அவன் அருள் செய்வான், ஒரு தாயைப் போல என்கிறார் மணிவாசகர்.

    குழந்தைக்குத் தெரியாது தாய் தனக்கு எவ்வளவு உதவி செய்கிறாள் என்று. வயிற்றில் எட்டி உதைக்கும். அதையும் மகிழ்வோடு ஏற்றுக்கொள்வாள் ஒரு தாய். அந்த கருணையை நினைத்து உருகுகிறார் மணிவாசகர் பெருமான்.

    -சிவவாசகன் மோகன் ராஜ்
    எந்த வயதினராக இருந்தாலும், நிர்ணயிக்கப்பட்ட அளவில் சரிவிகித உணவை எடுத்துக் கொள்ளவேண்டும். இதனால், ஊட்டச்சத்துக் குறைபாடும் இல்லாமல், நல்ல நோய் எதிர்ப்புச் சக்தியும் கிடைக்கும்.
    உலகளவில் இறப்பிற்கு இரண்டாவது பெரிய காரணமாக புற்றுநோய் இருக்கிறது. புற்றுநோய் என்பது கட்டுப்பாடற்று செல்கள் பிரிந்து பெருகுவதால் ஏற்படும் நோய் ஆகும்.

    இந்த செல்கள் பிரிந்து பரவி ஏனைய செல்களையும், உறுப்புகளையும் தாக்குகின்றன. ஆரம்ப நிலையில் கண்டறியப்படும், புற்றுநோயை முழுவதும் குணப்படுத்தக் கூடிய நவீன மருத்துவ வசதிகள் தற்போது வந்துள்ளன.  

    முதிர்ச்சியடைந்த நிலையில் இந்த புற்றுசெல்கள் ரத்தத்தின் வழியாக பரவுகின்றன. புற்றுநோய் எந்த வயதினரையும் தாக்கும். எனினும் வயது கூடக்கூட புற்றுநோய் தாக்கும் வாய்ப்பும் அதிகரிக்கிறது.

    சரியான விழிப்புணர்வு மற்றும் தெளிவான திட்டமிடல் இருந்தால் புற்றுநோயிலிருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள முடியும்.

    புற்றுநோய்களில் 30 சதவீதத்துக்கும் மேற்பட்டவை சாதாரண நடவடிக்கைகள் மூலம் தடுக்கப்படக் கூடியவையாகவே உள்ளன.
     
    எந்த வயதினராக இருந்தாலும், நிர்ணயிக்கப்பட்ட அளவில் சரிவிகித உணவை எடுத்துக் கொள்ளவேண்டும். இதனால், ஊட்டச்சத்துக் குறைபாடும் இல்லாமல், நல்ல நோய் எதிர்ப்புச் சக்தியும் கிடைக்கும்.

    புகைபிடிப்பதை, மதுப்பழக்கம், போதைப் பொருட்கள், நிச்சயம் 60% வரை புற்று நோய்களைத் தவிர்க்கும். கொழுப்பு அதிகமுள்ள அசைவ உணவுகளை தவிர்த்து, மருந்துகளும், வளர்ச்சி ஊக்கிகள் பயன்படுத்தப்படாத மாமிச உணவுகள், அந்தந்த இடத்தில் கிடைக்கும் சிறு மீன்கள் போன்றவற்றை உண்ணலாம்.

    ஆரோக்கியமான உணவு, சரியான உணவு நேரம், முறையான நோய்க்கட்டுப்பாடு, தினமும் உடற்பயிற்சி போன்றவை, அனைத்து உடல் உறுப்புகளின் இயக்கங்களையும் சீராக வைத்து இருப்பதுடன், இரத்த ஓட்டமும் சரியாக இருந்து, உடல் நோய்களை எதிர்த்து போராடும் தன்மை பெறும்.

    முழு தானியங்கள், கீரைகள், நாட்டுக் காய்கள், பழங்கள் போன்ற உணவுகளில் நார்ச்சத்துகள், ஆன்டி ஆக்ஸிடன்கள், உயிர் சத்துக்கள் போன்ற, புற்றுநோயை எதிர்க்க கூடிய தன்மையுள்ள பொருட்கள் அடங்கியுள்ளன. அவற்றை தினசரி உணவில் சேர்க்க வேண்டும்.

    அதிக பக்குவப்படுத்துதலுக்கு உள்ளான, அலுமினியம் பாக்கெட்டில், பாட்டிலில், பிளாஸ்டிக் உறைகளில் அடைக்கப்பட்ட.... நிறமூட்டிகள், சுவையூட்டிகள், மணமூட்டிகள், பிற ரசாயனப் பொருட்கள் சேர்த்து பக்குவப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களை அறவே தவிர்க்கவேண்டும்.

    -வண்டார் குழலி ராஜசேகர்
    ×