என் மலர்tooltip icon

    கதம்பம்

    பருத்தித்துணியால் ஆன நாப்கின்
    X
    பருத்தித்துணியால் ஆன நாப்கின்

    மாதவிடாய் பிரச்சினைக்கு மரபு வாழ்க்கையில் தீர்வு...

    உஷ்ணம் காரணமாகவே பெண்களுக்கு கர்ப்பப்பையில் பெரும்பாலான பிரச்சினைகள் ஏற்படுகிறது. வெப்பத்தை குறைப்பதற்காகவே கர்ப்பபையில் நீர்க்கட்டிகள் தோன்றுகின்றன.
    நம் பாரம்பரிய மரபுபடி இயற்கை சார்ந்த வாழ்வியலை மேற்கொண்டால் பெண்களுக்கு மாதவிடாய் தொடர்பான எந்தவித பிரச்சினையும் ஏற்படாது என்கிறார் தூ(ய்)மை பானுசித்ரா.

    சென்னை குன்றத்தூரைச் சேர்ந்த அவர் தூய்மை என்ற அமைப்பை உண்டாக்கி பெண்களிடையே அது தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். அது மட்டுமல்ல பருத்தித்துணியில் ஆரோக்கியம் பேணும் பெண்களுக்கான அணையாடைகளையும் (நாப்கின்) தயாரித்து வருகிறார்.

    எல்லோரையும் போல் இன்றைய நடைமுறை வாழ்க்கை தடத்தில் பயணித்துக் கொண்டிருந்த தனக்கு திடீரென ஏற்பட்ட இந்த மாற்றம் குறித்து  பானுசித்ரா இப்படி விவாரிக்கிறார்...

    எம்.பி.ஏ. முடித்துள்ள நான் ஒரு நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்தேன். திருமணமாகி முதல் கர்ப்பம் தரித்ததும் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. மருத்துவரிடம் சென்ற போது 'பெட் ரெஸ்ட்' எடுக்க வேண்டும் என்று கூறினார். குழந்தை முக்கியம் என்பதால் வேலையை ராஜினாமா செய்து ஓய்வெடுத்தேன். எனினும் கருச்சிதைவு ஏற்பட்டது.

    பானுசித்ரா


    அதற்கான காரணத்தை டாக்டரிடம் கேட்ட போது ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். எதையும் குறிப்பிட்டு சொல்ல முடியாது என்று கூறிவிட்டார்.

    எனக்கு ஒரே மனக்குழப்பம். கருச்சிதைவுக்கான காரணம் குறித்து நானே தேடத் தொடங்கினேன்... நாம் பயன்படுத்தும் சானிட்டரி நாப்கின் தான் பிரச்சினையாக இருக்குமோ? என சந்தேகம் வலுத்தது. தீவிரத் தேடலில்... மாதவிடாய் பிரச்சினைகளுக்கும் கர்ப்பப்பை நீர்கட்டி, புற்று நோய்களுக்கும் மற்றும் குழந்தையின்மைக்கும் நாம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களினால் ஆன நாப்கின்கள் தான் முக்கிய காரணம் என்பதை தெரிந்து கொண்டேன்.

    இந்த நாப்கின்கள் சிந்தடிக் பைபரால் தயாரிக்கப்படுகின்றன. உறிஞ்சுவதற்கு ஜெல் பயன்படுத்தப்படுகிறது. இவை வேதிப்பொருட்கள் என்பதால் அதனை பயன்படுத்தும் போது நமக்கு பாதகம் ஏற்படுகிறது. தற்போது மென்சஸ் கப் என்ற பெயரில் புதிய சாதனம் வந்துள்ளது. அதனை பயன்படுத்துவது அதிக ஆபத்தை வரவழைக்கும்.

    இதற்கு தீர்வுகாண என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருந்த வேளையில்தான் வானகம் ஐயா நம்மாழ்வரின் இயற்கை வேளாண் பண்ணையில் நடந்த வாழ்வியல் முகாமில் கலந்து கொண்டேன். அங்கு கொடுத்த அறிவுரையின் பேரில் பெண்களின் உடல் நலத்துக்கு ஏற்ற பருத்தி துணியினால் ஆன அணையாடைகளை (நாப்கின்கள்) தயாரித்தேன்.

    இந்த அணையாடைகளை பருத்தி துணிகளை கொண்டு பெண்களே வீட்டில் தயாரித்துக் கொள்ளலாம். தங்களுக்கு ஏற்படும் ரத்தப் போக்கின் அளவைப் பொறுத்து துணி அடுக்குகளை வைத்துக் கொள்ள வேண்டும்.

    நாங்கள் இரண்டு வித அணையாடைகளை தயாரிக்கிறோம். ஒன்று முழுக்க முழுக்க பருத்தி துணியினால் ஆனவை. மற்றொன்று ரத்தத்தை கசிய விடாமல் இருப்பதற்காக பருத்தி துணி அடுக்குகளின் அடியில் பி.யூ.எல். என்ற கோட்டிங் துணி மட்டும் கூடுதலாக சேர்க்கப்பட்ட அணையாடை. வீட்டிலே தயாரிப்பவர்கள் இதற்கு பதிலாக தற்போது ஓட்டல், சுவீட் கடைகளில் வழங்கப்படும் துணிப்போன்ற கேரி பேக்குகளை வெட்டி பயன்படுத்தலாம்.

    இந்த அணையாடைகளை பயன்படுத்துவதால் எந்தவித பாதிப்பும் ஏற்படாது. இதனை மீண்டும் மீண்டும் சுத்தம் செய்து 3 ஆண்டுகள் வரை பயன்படுத்தலாம். இதன் மூலம் செலவினமும் குறையும். சுற்றுச்சூழல் கேடும் தடுக்கப்படும்.

    இதனை சுத்தம் செய்வதற்கு சோப்போ, சலவைத் தூளோ தேவையில்லை. விரும்பினால் சிறிதளவு சேர்த்துக் கொள்ளுங்கள். தண்ணீரில் ஊற வைத்துக் கசக்கித் துவைத்து வெய்யிலில் காயவைத்தாலே போதும்.

    சோப்புக்கு பதில் பூந்திக் கொட்டையை பயன்படுத்தினால் நல்லது. 5, 7 பூந்திக் கொட்டைகளை உடைத்து அதன் உள்ளிருக்கும் பருப்பை அகற்றி விட்டு தண்ணீரில் ஊற வைத்து அதில் துவைக்கலாம். சோப்பு போல் நுரைவரும், துணியும் சுத்தமாகும்.

    மாதவிடாய் காலங்களில் பெண்கள் கட்டாயம் ஓய்வு எடுக்க வேண்டும். அந்த சமயத்தில் ரத்தத்தை வெளியேற்ற உடல் உஷ்ணத்தை உருவாக்கும். அப்போது வேலை செய்தால் உடலில் வெப்ப சமநிலை மாறி தொந்தரவு ஏற்படும். அதனால் தான் பழங்காலத்தில் மாதவிடாயின் போது பெண்களை தனியாக உட்கார வைத்தார்கள். தீட்டு என்பதற்காக அல்ல.

    உடையை எடுத்துக் கொண்டாலும் நம் பாரம்பரிய புடவைதான் பெண்கள் உடல் நலத்துக்கு ஏற்றது. உஷ்ணம் காரணமாகவே பெண்களுக்கு கர்ப்பப்பையில் பெரும்பாலான பிரச்சினைகள் ஏற்படுகிறது. வெப்பத்தை குறைப்பதற்காகவே கர்ப்பபையில் நீர்க்கட்டிகள் தோன்றுகின்றன.

    ஜீன்ஸ், லெகின்ஸ் போன்ற இறுக்கமான உடைகளை அணிந்தால் கர்ப்பப்பை உஷ்ணமடைந்து பாதிக்கப்படும். சேலை கட்டும் போது நன்கு காற்றோட்டம் கிடைப்பதால் கர்ப்பப்பை குளிர்ச்சியாக இருக்கும். இதற்காகத்தான் சேலை கட்டும் போது பல மடிப்புகள் கொண்டு கொசுவத்தை வயிற்றுப் பகுதியில் சொருகும் அமைப்பில் வைத்தார்கள். இந்த கொசுவம் நல்ல காற்றோட்டத்தை ஏற்படுத்தி வெப்பத்தை தணிக்கும். பெண்கள் கால் மேல் கால் கோட்டு உட்காரக் கூடாது என்று சொல்வதற்கும் இதுதான் காரணம்.

    இதற்கும் மேலோக உணவுப்பழக்கம் முக்கியமானது. பருவமடையும் சமயத்தில் தான் பெண்களுக்கு இடுப்பெலும்புகள் விரிவடையும். அதற்கு கால்சியம் சத்து தேவை. உளுந்தில் கால்சியம் அதிகம் இருப்பதால் உளுந்தம் களி கொடுத்தார்கள். அதில் நல்லெண்ணெய் கலந்து கொடுப்பார்கள். ஏன் தெரியுமா? நல்லெண்ணெய் மிதமான வெப்பத்தை ஏற்படுத்தும். இது மாதவிடாயின் போது ரத்த போக்கை சிரமமின்றி வெளியேற்றும்.

    இப்படி ஆரோக்கியம் அளிக்கும் நம் பாரம்பரிய மரபுவழி வாழ்க்கையை கடைபிடித்தால் நோய் நொடியின்றி மகிழ்ச்சியாக வாழலாம் என்றார்.
    Next Story
    ×