என் மலர்tooltip icon

    கதம்பம்

    புலவர் மா. ராமலிங்கம்
    X
    புலவர் மா. ராமலிங்கம்

    அனுபவம் புதுமை...

    எதையும் எளிமையாக, இனிமையாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதைத்தான் நகைச்சுவை உணர்வு நமக்குக் கற்றுத்தரும் பாடம் என்ற தன் இயல்பான அனுபவத்தை வெளிப்படுத்தி அனைவரையும் சிரிக்க வைத்தவர் தென்கச்சி சுவாமிநாதன்.
    வாழ்க்கையில் நாம் ஒவ்வொருவரிடமும் பழகும் போது ஒவ்வொரு அனுபவத்தைப் பெறுகிறோம். தமிழஞர் தென்கச்சி சுவாமிநாதன் அவர்களோடு பழகிப் பயணம் செய்யும் பாக்கியம் எனக்கு இறையருளால் கிடைத்தது. முகம் காட்டாமல் தன் இனிய குரலால் முகவரி பெற்றவர்.

    ஒரு முறை நானும் அவரும் முதல் நாள் மாலை கூட்டத்தில் பேசிவிட்டு மறுநாள் காலை குற்றாலம் சென்றோம். அங்கு அவருடைய வகுப்புத் தோழர்களும் வந்திருந்தனர். அதில் ஒருவர் நட்பு உரிமையோடு “சுவாமிநாதா” -இதோ அருவி கொட்டுகிறதே. அதன் உயரத்தில் நீ போய் அமர்ந்து  “இன்று ஒரு தகவல்’ சொன்னால் எப்படி இருக்கும்?” என்று சொன்னார். சிரித்துக் கொண்டே தென்கச்சியார் சொன்னார்... “நல்லாத்தான் இருக்கும்’ நீ என் வீட்டுக்கு ‘தகவல்’ சொல்ல வேண்டியிருக்கும் என்றார்.

    “எதையும் எளிமையாக, இனிமையாக எடுத்துக்கொள்ள வேண்டும்” என்பதைத்தான் நகைச்சுவை உணர்வு நமக்குக் கற்றுத்தரும் பாடம் என்ற தன் இயல்பான அனுபவத்தை வெளிப்படுத்தி அனைவரையும் சிரிக்க வைத்தார்.

    சென்னை மடிப்பாக்கத்தில் அவருடைய வீடு இருக்கிறது. அவரை ஒரு முறை அதிகாலையில் சென்று சந்தித்தேன். பிறகு இருவரும் பஸ் ஸ்டாண்டுக்கு வந்தோம். புறப்பட இருந்த போது ஒரு பஸ்ஸில் இருந்த ஒருவர் “இறங்கி ஓடி வந்து தென்கச்சியாரைப் பார்த்து, ஐயா வணக்கம்! உங்க நிகழ்ச்சின்னா எனக்கு உசிரு”ன்னார்.

    “அப்படியாப்பா.. தினமும் ரேடியோவுல இன்று ஒரு தகவல் கேட்டியா”ன்னார் ஐயா. அதற்கு அந்த மனிதர் “அதெல்லாம் ஒண்ணுமில்லை... நீங்க ஆரம்பிக்கும் போது எனக்கு கம்பெனிக்கு நேரமாயிட்டுதுன்னு... வேலைக்கு புறப்பட்டுடுவேன்”னார்.

    அந்த மனிதர் போனதும் “பார்த்தீங்களா.. நான் ஒருத்தர வேலைக்கு அனுப்ப காரணமா இருக்கிறேன்”னு பெருமையாகச் சொன்னார். தாக்குதலாக இருந்தாலும் அதைத் தாங்குதலாக மாற்றும் அனுபவம் கிடைத்தற்கரிய ஒன்று என்பதை ஐயா மூலம் உணர்ந்து கொண்டேன்.

    ஒரு முறை ஐயாவும் நானும் வைகை எக்ஸ்பிரஸ்ஸில் பயணம் செய்தோம். விழுப்புரம் சந்திப்பில் ரெயில் நின்றது. புறப்பட கிரீன் சிக்னல் விழுந்தது. அப்போது கமகமவென்று மசால் வடை வந்தது. ஸ்டேஷன் முழுவதும் பரவிய அந்த வாசனை ஐயாவையும் விடவில்லை. “நல்லா இருக்கே வடை வாசனை” என்றார் தென்கச்சியார்.

    ‘இதோ வாங்கி வந்து விடுகிறேன்’ என்று ரெயிலை விட்டு இறங்கி வேகமாக சென்று கடையில் பொட்டலம் கட்டும் தம்பியிடம் “தம்பி மசால்வட 4 கட்டுங்க.. சீக்கிரமா கட்டுங்க.. ரெயிலை பிடிக்கணும்” என்றேன்.

    அந்தப் பையன் சிரித்தான். “நான் சிரிக்கிற மாதிரி எதுவுமே சொல்லலையே... ஏன் சிரிக்கிறாய்?” என்றேன்... “அதெல்லாம் ஒண்ணுமில்ல சார்... வடையவச்சி எலியதான் பிடிப்பாங்க... நீங்க டிரெயினையே பிடிக்கணும்னு சொன்னீங்களே! நீங்க பெரிய ஆள்சார்” என்றான்... மனதை மகிழவைக்கும் வாசனைகள் எங்கிருந்தும் வரலாம் என்று நினைத்துக் கொண்டேன்.

    -புலவர் மா. ராமலிங்கம்
    Next Story
    ×