என் மலர்tooltip icon

    கதம்பம்

    இயற்கை
    X
    இயற்கை

    பூமியுடன் தொடர்பில் இருங்கள்...

    காலை வெயில்கூட மேனியில் படக்கூடாது என்று பலரும் குடைப்பிடித்து செல்கின்றனர். அவர்களுக்கு நுட்ப உணவு எப்படி கிடைக்கும்?
    இந்த பூமியில் மனிதர்களை தவிர மற்ற எல்லா உயிரினங்களும்  நலமாகத்தான் வாழ்கின்றன. ஆனால் விதவிதமான உணவுகளையும் சத்துப்பொருட்களையும் சாப்பிடும் மனிதன் மட்டும் ஆரோக்கியத்தை தொலைத்து விட்டு அல்லல் படுகிறான்.

    இதற்கு என்ன காரணம் என்ன? இயற்கையோடு இயைந்து வாழ்ந்து ஆற்றலை அறுவடை செய்ய தவறியதே காரணம்.  ஒரு கார் இயங்கவேண்டும் என்றால் அதற்கு பெட்ரோல் மட்டும் போதாது. மின்சாரமும் வேண்டும். அதுபோல் மனிதன் வாழவேண்டுமென்றால் அதற்கு உணவு மட்டும் போதாது. அந்த உணவை ஆற்றலாக மாற்றும் மின்சக்தியான காந்த சக்தியும் வேண்டும். அது இந்த மண்ணில் இருந்து நமக்கு கிடைக்கிறது. இதுபற்றி இயற்கை மருத்துவர் கோ.சித்தர் கூறுவதை பார்ப்போம்...

    பொதுவாக நாம் சாப்பிடும் பொருட்களையே உணவு என நம்பிக்கொண்டு இருக்கிறோம். ஆனால் மூன்று வகை உணவுகள் நாம் வாழ அத்தியாவசிய தேவை. அவை பேருணவு, நுண்ணுணவு, நுட்ப உணவு என்பவையாகும்.

    பேருணவு என்பது இந்த உடம்பு நிறைய சாப்பிடும் உணவு.  நாம் எதை நிறைய சாப்பிடுகிறோம்? காற்றைதான். அடுத்து நீர். மூக்கால் மட்டுமல்ல  தோல் மூலமும் சுவாசிக்கிறோம். அதுபோல் வாயால் மட்டுமல்ல  தோல் மூலமும் நீரை உறிஞ்சுகிறோம். இந்த உணவை நம் உடல் எப்பொழுதும் இயற்கையில் இருந்து பெற்றுக்கொண்டே இருக்கிறது. இதனால் அது பேருணவு எனப்பட்டது.

    அடுத்து நாம் வாய் வழியாக சாப்பிடும் சோறு, இட்லி, தோசை, சப்பாத்தி போன்ற திட உணவுகளும்  பால் போன்ற திரவ உணவுகளும் நுண்ணுணவு எனப்படும்.

    மூன்றாவது நுட்ப உணவு. எல்லா விலங்குகளும் ஆரோக்கியமாக இருப்பதற்கு இந்த நுட்ப உணவுதான் காரணம். அது மண்ணில் இருந்து கிடைக்கும் காந்த சக்தியாகும்.

    இந்த உலகம் அளப்பெரிய காந்த சக்தியை கொண்டதாகும். அதன் சார்ஜ் எப்போதும் இறங்காது. நம்முடைய உடலிலும் காந்த சக்தி உள்ளது. ஆனால் அதன் சார்ஜ் இறங்கிவிடும். அதனை சரி செய்ய உடல் பூமியின் காந்த சக்தியை கிரகித்துக்கொள்ளும். இதற்கு நாம் மண்ணோடு தொடர்பு கொண்டிருக்க வேண்டும். ஒரு குழந்தைக்கு தாயின் அரவணைப்பு எப்படியோ அதுபோன்று மனிதர்களுக்கு பூமி தாய். அவளுடன் தொடர்பில் இருந்தால் நுட்ப உணவு எனப்படும் காந்த சக்தி நமக்கு கிடைக்கும்.

    அந்தக்காலத்தில் குழந்தைகளும் சிறுவர்களும் மண்ணில் உருண்டு புரண்டு விளையாடுவார்கள். பெண்களும் ஆண்களும் செருப்பு இல்லாமல்தான் நடந்து செல்வார்கள். அவர்கள் ஆரோக்கியமாகத்தான் இருந்தார்கள். காரணம் மண்ணில் இருந்து அவர்களுக்கு காந்த சக்தியான நுட்ப உணவு தடையின்றி கிடைத்தது. ஆனால் இன்று மண்ணில் விளையாடினால் நோய் வரும் என்று குழந்தைகளை பொத்தி பொத்தி வளர்கிறோம். வெயிலில் அலையவிடுவதில்லை, மழையில் நனையவிடுவதில்லை. ஆற்றல் கிடைக்கும் இடங்களில் எல்லாம் துண்டிப்பு ஏற்படுத்திவிட்டோம். இதனால்தான் அதிக பேர் நோயால் பாதிக்கப்படுகின்றனர்.

    இன்று நடைபயணம் செல்பவர்கள்கூட செருப்பின்றி நடப்பதில்லை. காலில் பூட்ஸ் மாட்டிக்கொள்கின்றனர். காலை வெயில்கூட மேனியில் படக்கூடாது என்று பலரும் குடைப்பிடித்து செல்கின்றனர். அவர்களுக்கு நுட்ப உணவு எப்படி கிடைக்கும்?

    நாம் எவ்வளவுதான் இயற்கையில் விளைந்த ஆரோக்கியமான உணவு பொருட்களை சத்துப்பொருட்களை உண்டாலும் அது செரிமானம் ஆனால்தான் சத்தாக மாறி உடலில் சேரும். நாம் உண்ட உணவு ஜீரணமாக பூமியில் இருந்து கிடைக்கும் காந்த சக்தி முக்கிய பங்கு வைக்கிறது. அதுபோதிய அளவில் கிடைத்தால்தான் நம் உடலில் உள்ள சுரப்பிகள் நன்கு சுரக்கும். இவைதான் உணவை செரிமானம் செய்து சத்தாகிய ஆற்றலை உறிஞ்ச வைக்கும். காந்த சக்தி கிடைக்காத போது ஜீரணம் மந்தமாகி உண்ட உணவே நஞ்சாக மாறிவிடும்.

    மணல் பரப்பில் நடக்கலாம்.

    எனவே கூடுமானவரை பூமியுடன் தொடர்பில் இருக்க பழகிக்கொள்ள வேண்டும். அதற்கு வெறுங்காலுடன் மண்ணில் நடக்க வேண்டும். மணல் பரப்பில் நடக்கலாம். பாறைகளிலும் நடக்கலாம். இதன் மூலம் காந்த சக்தி நமக்கு கிடைக்கும். புல்வெளிகளில் மாலை வேளையில் நடப்பது நல்லது. சூரியனில் இருந்து பெற்று வைத்து இருக்கும் ஆற்றலை புற்கள் மீது நடப்பதால் நாம் பெறலாம்.

    நாம் மூக்காலும் உடலாலும் சுவாசிக்கும் பேருணவு 50 சதவீதம் இருக்க வேண்டும். வாயால் சாப்பிடும் நுண்ணுணவு 30 சதவீதம் இருக்க வேண்டும். பூமியில் இருந்து கிடைக்கும் காந்த சக்தியான நுட்ப உணவு 20 சதவீதம் இருக்க வேண்டும். இவ்வாறு நாம் வாழ்க்கை முறையை அமைத்துக்கொண்டால் என்றும் ஆரோக்கியமாக வாழலாம்.

    ஆனால் இன்று நிலைமை தலைகீழாக மாறி விட்டது. வாயால் சாப்பிடும் உணவு 30 சதவீதத்தில் இருந்து 70 சதவீதமாக உயர்ந்து விட்டது. காந்த சக்தி கிடைக்காததே இதற்கு காரணம். அது சரியான விகிதத்தில் கிடைத்தால் நாம் உண்ணும் உணவின் அளவு தானாகவே குறைந்துவிடும்.

    தொகுப்பு: கோ.வசந்தராஜ்
    Next Story
    ×