என் மலர்
கதம்பம்

மகாத்மா காந்தி
இனி இதுதான் என் உடை...
தலையில் தொப்பி முதல் கால் வரை இப்படி நாம மட்டும் குஜராத்தி பாரம்பரியபடி துணிகளால் சுற்றிக் கொண்டுள்ளோமே? என்ன செய்வது? என்ற கேள்விகளே காந்தியை மாறி மாறி துளைத்தெடுத்தது.
1921 இல் காந்தி சென்னையில் இருந்து மதுரைக்கு ரெயிலில் பயணித்தார். ரெயில் பயணிகளில் பலர் வெளிநாட்டு மில் துணியால் தயாரிக்கப்பட்ட ஆடைகளை அணிந்திருந்தனர். கைத்தறி ஆடை அணியுமாறு அவர்களிடம் வேண்டுகோள் விடுத்தார் காந்தி. அதற்கு தலையசைத்து மறுப்பு தெரிவித்த அவர்கள், கைத்தறி துணி வாங்கும் அளவுக்கு வசதியில்லை என்று சொன்னார்கள்.
தலையில் தொப்பி முதல் கால் வரை இப்படி நாம மட்டும் குஜராத்தி பாரம்பரியபடி துணிகளால் சுற்றிக் கொண்டுள்ளோமே? என்ன செய்வது? இந்த கேள்விகளே அவரை மாறி மாறி துளைத்தெடுத்தது.
மதுரை வந்துவிட்டது. ரெயிலிலிருந்து இறங்கினார். கண்ணுக்கெட்டியவரை வரவேற்க வந்த மக்கள் தலைகள்தான். வெற்று உடம்புடன் பெரும்பாலானோர் வேட்டியை சுற்றிக்கொண்டு நின்றனர். அதை ரெயில் நிலையத்தில் திரண்ட கூட்டத்திலும், விண்ணை முட்டும் முழக்கத்திலும் காந்தி கவனிக்கத் தவறவில்லை. காந்தி வரவேற்கப்பட்டு மதுரை மேல மாசி வீதியில் காங்கிரஸ் பிரமுகர் ஒருவர் வீட்டில் தங்க வைப்பட்டார். அங்கும் வீதிகளில் திரிந்தவர்களும் வெற்று மார்புடன்தான் இருந்தார்கள். அதையும் காந்தி கவனித்தார்.
“அட கடவுளே... இன்னுமா நான் இவ்வளவு ஆடைகளுடன் உட்கார்ந்து கொண்டு இதனை கவனித்துக் கொண்டு இருக்க வேண்டும்?” சட்டென எழுந்தார். அனைத்தையும் களைந்தார். தான் உடுத்தியிருந்த குஜராத் பாணி வேஷ்டியினை நான்காகக் கிழித்து வைத்துக் கொண்டு அதில் ஒன்றை எடுத்து இடுப்பில் சுற்றிக் கட்டிக் கொண்டார்.
காந்தி இப்போது வேறு மாதிரியாகக் காட்சியளித்தார். காந்தியின் இந்தக் கோலத்தைப் பார்க்கவும் கூட்டம் அலைமோதியது. “இனி இதுதான் என் உடை” என்றார்.
மதுரை மக்கள் அணிந்திருந்த அதே உடைதான், தற்போது காந்தி அணிந்துள்ளார்... ஆனால் காந்தி அணியும்போது அதன் மகத்துவமும் மகோன்னதமும் வேறு மாதிரி மக்களிடம் காட்டிக் கொடுத்தது. கூடுதல் மதிப்பை கொட்டிக் கொடுத்தது. மதுரை மேல மாசி வீதியில் தொடங்கிய அவரது இந்த முடிவு லண்டன் உச்சி மாநாடே ஆனாலும் உடும்புப் பிடியாக இருந்தது.
1931-ஆம் ஆண்டு லண்டன் உச்சி மாநாட்டில் கலந்துகொள்ள சென்றிருந்தார் காந்தி. காந்திக்கும் மற்ற இந்தியப் பிரதிநிதிகளுக்கும் பக்கிங்காம் அரண்மனையிலிருந்து அழைப்பு வந்தது. மன்னரைச் சந்திப்பதற்குச் சம்பிரதாயமான உடையில் தான் செல்லவேண்டுமென்று காந்தியிடம் எல்லோரும் எடுத்துக் கூறினார்கள். தாம் வழக்கமாக உடுக்கும் முழங்கால் வேஷ்டியுடன் தான் மன்னரைப் பார்க்க முடியும் என்றும், அதை அனுமதிக்கவில்லை என்றால், அவரைப் பார்க்கப்போவதில்லை என்றும் கண்டித்து சொல்லிவிட்டார் காந்தி.
காந்தி தன்னுடைய அரை ஆடை கோலத்துடன் தான் சந்தித்தார் ஐந்தாம் ஜார்ஜ் மன்னரை. சந்திப்பு முடிந்து வெளியே வந்த காந்தியை அங்கிருந்த பத்திரிகையாளர்கள் சூழ்ந்து கொண்டார்கள். காந்தியின் அரையாடையைக் குறிப்பிட்டு ‘நீங்கள் மன்னரை இப்படி சந்தித்தது முறைதானா?’ என்று கேள்வி எழுப்பினார்கள். காந்தி உடனே சட்டென்று பதில் சொன்னார்: “எங்கள் இருவருக்கும் சேர்த்துதான் மன்னர் உடையணிந்திருக்கிறாரே!” என்றார்.
வசதியுடன் பிறந்து, மேல்நாடுகளில் படித்து, உலகமெல்லாம் சுற்றி வந்த காந்தியை மனம் மாற வைத்த அந்த மதுரை மேலமாசி வீடு இப்போது எப்படி உள்ளது தெரியுமா? காதி விற்பனைக் கூடமாக... பழமை குன்றாமல் அதே மிடுக்குடன் இன்றும் கம்பீரமாக நிற்கிறது. இன்றைக்கும் கைத்தறி ஆடைகளின் மீது இந்திய மக்களுக்கு ஒரு தனி மரியாதை இருக்கிறதென்றால், அது மகாத்மாவுக்கு அளிக்கும் மரியாதைதான்!
-அம்ரா பாண்டியன்
Next Story






