search icon
என் மலர்tooltip icon

    உண்மை எது

    • சிபிஐ விசாரணைக்கு அனைத்து ஊழியர்களும் அதிகாரிகளும் ஒத்துழைப்பு வழங்கி வருவதாக அதிகாரி கூறினார்.
    • பாலசோர் மாவட்டம் பஹனாகா பஜார் ரயில் நிலையம் அருகே கடந்த 2ம் தேதி இந்த விபத்து நிகழ்ந்தது.

    ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் ஏற்பட்ட ரெயில் விபத்து தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடைபெற்று வருகிறது. விபத்து தொடர்பாக, பஹனாகா ரெயில் நிலைய ஜூனியர் சிக்னல் என்ஜினீயர் அமிர் கானிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். நேற்று ஜூனியர் என்ஜீனியர் வசித்து வந்த வாடகை வீட்டிற்கு அதிகாரிகள் சென்றபோது, அவர் வீட்டில் இல்லை. இதையடுத்து அந்த வீட்டிற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

    எனவே, அந்த ஜூனியர் என்ஜினீயர் விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாகிவிட்டதாக தகவல் பரவியது. விசாரணைக்கு அழைக்கப்பட்ட ஊழியர் தலைமறைவாகிவிட்டதாக ஊடகங்களில் செய்திகளும் வெளியாகின.

    பஹனாகா ரெயில் நிலைய ஊழியர் தலைமறைவானதாக வெளியான செய்திகள் உண்மையல்ல என தென்கிழக்கு ரெயில்வே மக்கள் தொடர்பு அதிகாரி அதித்ய குமார் சவுத்ரி மறுப்பு தெரிவித்து விளக்கம் அளித்துள்ளார். சிபிஐ விசாரணைக்கு அனைத்து ஊழியர்களும், அதிகாரிகளும் ஒத்துழைப்பு வழங்கி வருவதாகவும் அவர் கூறினார்.

    பாலசோர் மாவட்டம் பஹனாகா பஜார் ரயில் நிலையம் அருகே கடந்த 2ம் தேதி இரவு 7 மணியளவில் இந்த கோர விபத்து நிகழ்ந்தது. மேற்கு வங்காளத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில், பஹனாகா பஜார் ரெயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தபோது, மாற்று தண்டவாளத்தில் ஏற்கெனவே நிறுத்தப்பட்டிருந்த சரக்கு ரெயில் மீது மோதி விபத்துக்குள்ளானது.

    மோதிய வேகத்தில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயிலின் பெட்டிகள் தடம்புரண்டு அருகில் இருந்த தண்டவாளத்தில் விழுந்துள்ளன. அப்போது அந்த தண்டவாளத்தில் வந்த பெங்களூரு-ஹவுரா சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில், தடம்புரண்டு கிடந்த ரெயில் பெட்டிகள் மீது அதிவேகத்தில் மோதியது. இவ்விபத்தில் 292 பேர் உயிரிழந்த நிலையில், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

    • பெற்றோருக்கு பயந்து பொய் கூறியதாக தெரியவந்துள்ளது
    • சிசிடிவி கேமராவால் தண்டனையில் இருந்து தப்பியுள்ளார் டெலிவரி பாய்

    பெங்களுருவில் உள்ள எலாக்ட்ரானிக்ஸ் சிட்டி பகுதியில் உள்ள அப்பார்ட்மென்டில் உணவு டெலிவரி பாய், ஆர்டர் செய்தவருக்கு உணவுப் பார்சலை வழங்க சென்றுள்ளார். அப்போது, அந்த டெலிவரி பாய் தன்னை மொட்டைமாடிக்கு அழைத்துக் சென்றார். தான் அவரது கையை கடித்துவிட்டு தப்பித்தேன் என பெற்றோரிடம் கூறியுள்ளார்.

    உடனே, அவரது பெற்றோர் அப்பார்ட்மென்ட் காவலாளியிடம் கேட்டை மூடச்சொல்லி, பக்கத்து வீட்டுக்காரர்களுடன் டெலிவரி பாயை நைய புடைத்துள்ளனர். காவலாளிகளும் தர்மஅடி கொடுத்துள்ளனர். பின்னர் போலீஸ்க்கு தகவல் தெரிவித்துள்ளனர். புகாரில் நாங்கள் மொட்டைமாடி சென்றோம். அப்போது எங்களது குழந்தை தனியாக நின்றிருந்தாள். அவளிடம் விசாரித்தபோது மேற்கண்டவாறு தெரிவித்தார் எனத் தெரிவித்துள்ளனர்.

    இந்த சம்பவம் கடந்த வாரம் நடைபெற்றுள்ளது. போலீசார் சிசிடிவி-யை பரிசோதனை செய்து பார்த்தபோது, அந்த சிறுமி தனியாகத்தான் மொட்டைமாடி சென்றுள்ளார். டெலிவரி பாய் அந்த சிறுமியை அழைத்துச்செல்லவில்லை. இதனால் அந்த சிறுமி வேண்டுமென்றே பொய் சொல்லியுள்ளார் என்பதை கண்டுபிடித்தனர்.

    ஏன் பொய் சொன்னாய்? என அந்த சிறுமியிடம் கேட்டபோது, படிக்கும் நேரத்தில் விளையாடியது தெரிந்தால் பெற்றோர்கள் அடிப்பார்கள் என்பதால், அவர்களுக்கு பயந்து பொய் சொன்னதாக தெரிவித்தாள்.

    ஒரு சிறுமியின் பொய்யால் டெலிவரி பாய் தர்ம அடி வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. தனது மகள் சொல்வது உண்மை என நம்பி தவறுதலாக புகார் அளித்துவிட்டோம் என சிறுமியின் பெற்றோர் மன்னிப்பு கேட்டனர்.

    இதுகுறித்து அந்த டெலிவரி பாய் கூறுகையில் ''சிறுமியின் பெற்றோர்கள், அருகில் உள்ளவர்கள் காவலாளிகளுடன் சேர்ந்து என்னை தாக்கினார்கள். சிசிடிவி கேமராவை ஆய்வு செய்த போலீசாருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். சிசிடிவி என்னை பாதுகாத்துள்ளது. சிசிடிவி கேமரா இல்லையென்றால் என்ன செய்வது? என்பதுதான் என்னுடைய மிகப்பெரிய கவலை'' என்றார்.

    • மே மாதம் 4-ம் தேதி அக்னி நட்சத்திரம் தொடங்கி மே 29-ந்தேதி முடிவடைந்தது.
    • இன்று காலை 11.30 நிலவரப்படி 101.12 டிகிரி வெயில் அளவு பதிவாகி உள்ளது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் மார்ச் மாதம் முதல் கோடை வெயில் தொடங்கி நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் கடுமையாக உயர்ந்து வருகின்றது. இந்நிலையில் கடந்த மே மாதம் 4-ம் தேதி அக்னி நட்சத்திரம் தொடங்கி மே 29-ந்தேதி முடிவடைந்தது. இதனை தொடர்ந்து வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் குறையும் என எதிர்பார்த்த நிலையில் கடந்த 15 நாட்களாக கடலூர் மாவட்டத்தில் 102 முதல் 104 டிகிரி வெயில் அளவு பதிவாகி வருவதோடு, அனல் காற்று வீசி வருவதால் பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் கடுமையாக பாதிப்படைந்து வருகின்றனர்.

    இதன் காரணமாக பொதுமக்களின் நடமாட்டம் குறைந்து காணப்பட்டு வருவதோடு, பழச்சாறுகள், நுங்கு, கரும்பு சாறு, குளிர்பானங்கள் போன்றவற்றை அருந்தி வெயிலின் தாக்கத்தை பொதுமக்கள் குறைத்து வருகின்றனர். இருந்த போதிலும் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்ததால் கடந்த சில தினங்களாக வெப்ப சலனம் காரணமாக கடலூர் மாவட்டத்தில் பரவலாக பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருவதும் குறிப்பிடத்தக்கதாகும். மேலும் காலை நேரங்களில் கடும் வெயில், மாலை நேரங்களில் குளிர்ந்த காற்றுடன் மழை பெய்து வந்ததால் சீதோஷ்ண மாற்றமும் ஏற்பட்டு உள்ளது. கடலூர் மாவட்டத்தில் நேற்று அதிகபட்ச வெயிலாக 104.36 டிகிரி அளவில் வெயில் அளவு பதிவாகி கடும் பாதிப்பை ஏற்படுத்தி இருந்தது. இன்று காலை 11.30 நிலவரப்படி 101.12 டிகிரி வெயில் அளவு பதிவாகி உள்ளது.

    இதுகுறித்து வானிலையாளர் பாலமுருகனிடம் கேட்டபோது, கடலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கடும் வெயில் காரணமாக மக்கள் அவதி அடைந்து வருவதை காண முடிகிறது. மேலும் சில நாட்களாக 100 டிகிரிக்கு மேல் வெயிலின் அளவு பதிவாகி வருவதால் அனல் காற்று வீசி வருவதோடு வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடலூர் மாவட்டத்தில் மேற்கு மற்றும் வடமேற்கு பகுதிகளில் இருந்து கடுமையான அனல் காற்று வீசி வருவதால் வறண்ட வானிலை ஏற்பட்டு கடும் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகின்றது. மேலும் தென்மேற்கு பருவமழை தமிழகத்தில் சரியான முறையில் நிலை கொண்டு மழை அதிகளவில் பெய்து வந்தால் மட்டுமே வெயிலின் தாக்கம் குறைய வாய்ப்புண்டு. இது மட்டுமின்றி கிழக்கு திசையில் இருந்து வரக்கூடிய ஈரப்பதகாற்று சரியான முறையில் வரவில்லை. ஆகையால் தமிழக அரசின் அறிவுறுத்திலின் பேரில் பொதுமக்கள் காரணமின்றி வெளியில் சுற்றுவதை குறைத்துக் கொண்டு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என கூறினார்.

    • இந்திய அரசு, மாணவர்கள் தொடர்ந்து படிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
    • மாணவர்களுக்கு தொடர்பு இல்லை என்றால் கனடாவில் தங்கியிருக்க அனுமதி

    இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் கனடாவில் படித்து வருகின்றனர். பட்டதாரியான பிறகு அங்கேயே குடியேற விண்ணப்பித்தும் வருகின்றனர். வெளிநாட்டில் இருந்து கனடாவிற்கு வரும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

    இதற்கிடையே மாணவர்களின் ஆவணங்கள் சரிபார்க்கப்படும்போது பெரும்பாலான மாணவர்களுடைய ஆவணங்கள் போலியானவை எனத் தெரியவந்தது. போலியான தகவல் அளிக்கப்பட்டு கனடா வந்துள்ள மாணவர்கள் வெளியேற்றப்படுவார்கள் என கனடா அரசு அறிவித்தது.

    இதனால் நூற்றுக்கணக்கான மாணவர்கள் நிலை குறித்து கவலை தெரிவிக்கப்பட்டது. இந்திய அரசு மாணவர்கள் தொடர்ந்து படிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

    இந்த நிலையில் வெளிநாட்டு மாணவர்கள் வெளியேற்றப்படுவார்கள் என்ற செய்தி உண்மையல்ல என கனடா நாட்டின் குடிவரவுத்துறை மந்திரி சீன் பிராசர் தெரிவித்துள்ளார்.

    மேலும், இதுகுறித்து அவர் குறிப்பிட்டிருப்பதாவது:-

    வெளிநாட்டு மாணவர்கள் தங்களுடைய படிப்பிற்கான அனுமதி விண்ணப்பங்களை சமர்பிக்க கேட்டிருந்த நிலையில், அது போலியாக இருக்கும் பட்சத்தில் அவர்கள் வெளியேற்றப்படுவார்கள் என்ற செய்தி வெளியாகிய வண்ணம் உள்ளது.

    ஆனால் நான் ஒன்றை உறுதிப்படுத்த விரும்புகிறேன். வெளிநாட்டு மாணவர்கள் போலி ஆவணம் தாக்கல் செய்ததில் தொடர்பு இல்லை என்றால் அவர்கள் வெளியேற்றப்பட மாட்டார்கள்.

    தனிப்பட்ட ஒரு மாணவரை எடுத்துக் கொண்டால், அவர் படிக்க வேண்டும் என்ற உன்னதமான நோக்கத்தோடு கனடா வந்து, அவருடைய விண்ணப்பம் போலியானது என்பதை அவர் அறிந்திருக்கவில்லை என்றால், தற்காலிகமாக அவர் தங்குவதற்கு அனுமதி வழங்குமாறு அதிகாரிகள் வலியுறுத்தப்பட்டுள்ளனர். இது சிறந்த நோக்கத்தோடு வந்துள்ள சர்வதேச மாணவர்கள், பட்டதாரிகள் கனடாவில் தங்கியிருக்க உறுதி செய்யும். அவர்கள் கனடாவிற்கு ஐந்து வருடம் வருவதற்கு தடை என்பதில் வரமாட்டார்கள்'' எனத்தெரிவித்துள்ளார்.

    • நர்சிங் கவுன்சில் அப்படி ஒரு சுற்றறிக்கையை வெளியிடவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
    • இதனை மேற்கொண்டு யாரும் பரப்ப வேண்டாம் என மத்திய சுகாதாரத்துறை கூறி உள்ளது.

    இந்தியாவில் நர்சிங் படிப்பானது மருத்துவப் படிப்புக்கு (எம்.பி.பி.எஸ்.) சமம் என்றும், நர்சிங் முடித்த செவிலியர்கள் அனைவரும் டாக்டர்களுக்கு நிகராக ஜூனியர் டாக்டர்கள் என அழைக்கப்படுவார்கள் என்றும் கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது. இது தொடர்பாக மத்திய அரசு அனுப்பியிருப்பதாக கூறி ஒரு சுற்றறிக்கை மற்றும் நியூஸ் கார்டு போன்ற இமேஜ் வைரலாகி வருகிறது.

    இந்த தகவல் தொடர்பான உண்மைத்தன்மையை கூகுள் மூலம் தேடும்போது, அதுபோன்ற எந்த செய்தியும் நம்பகமான ஊடகங்கள் வாயிலாக வெளியிடப்படவில்லை. இந்திய நர்சிங் கவுன்சில் இணையதளத்திலும் அப்படி ஒரு அறிக்கையோ சுற்றிக்கையோ வெளியிடப்படவில்லை.

    இதுதொடர்பாக மேலும் தேடுகையில், இந்திய மருத்துவ சங்கத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் துருவ் சவுகான் நேற்று முன்தினம் தனது டுவிட்டர் பதிவில், இந்த சுற்றறிக்கை போலியானது என குறிப்பிட்டிருந்தார்.

    மத்திய சுகாதாரத்துறையும் நேற்று இதுதொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ளது. அந்த பதிவில், "செவிலியர்கள் நர்சிங் அதிகாரிகள் என்று அழைக்கப்படுவார்கள் என்றும், பிஎஸ்சி நர்சிங் எம்.பி.பி.எஸ். படிப்புக்கு இணையானதாகக் கருதப்படும் என்றும் இந்திய நர்சிங் கவுன்சில் வெளியிட்டதாக கூறும் சுற்றறிக்கை போலியானது. இதனை மேற்கொண்டு யாரும் பரப்ப வேண்டாம்" என தெளிவாக கூறப்பட்டிருந்தது.

    பத்திரிகை தகவல் மையத்தின் (பிஐபி) உண்மை சரிபார்ப்பு பிரிவும் தனது டுவிட்டர் பக்கத்தில் இதே கருத்தை பதிவிட்டிருந்தது.

    எனவே, வைரலாக பரவும் சுற்றறிக்கை போலி என்பதும், நர்சிங் கவுன்சில் அப்படி ஒரு சுற்றறிக்கையை வெளியிடவில்லை என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. 

    • இந்த செய்தியைப் பார்த்த பலரும் முகம் சுளித்ததுடன், இதென்ன அபத்தமான போட்டி என விமர்சனம் செய்தனர்.
    • உடலுறவு போட்டி தொடர்பான கோரிக்கையானது ஏப்ரல் மாதம் நிராகரிக்கப்பட்டது என தெரியவந்துள்ளது.

    எப்போதுமே வினோதமான செய்திகள் வேகமாக பரவுவதுடன் கடும் விவாதப் பொருளாகவும் மாறிவிடுகிறது. அப்படித்தான், ஸ்வீடனில் உடலுறவு என்பது ஒரு விளையாட்டாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் செக்ஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடத்தப்படுவதாகவும் செய்தி வேகமாக பரவி வருகிறது. ஜூன் 8ம் தேதி தொடங்கும் இப்போட்டியில் பங்கேற்க 20 பேர் பதிவு செய்திருப்பதாகவும் தகவல் வெளியானது. இந்த செய்திகளில் பெரும்பாலான செய்திகள் ட்வீட்களை ஆதாரங்களாக காட்டியுள்ளன. இந்த தகவலைப் பார்த்த பலரும் முகம் சுளித்ததுடன், இதென்ன அபத்தமான போட்டி என விமர்சனம் செய்தவண்ணம் உள்ளனர்.

    ஆனால் ஸ்வீடனில் இருந்து அறிக்கையோ அல்லது சர்வதேச அளவிலான அறிக்கையோ வெளியாகாத நிலையில், இந்த செய்தி போலியானது என தெரியவந்துள்ளது.

    அதாவது, ஸ்வீடன் செய்தி நிறுவனமான கோட்டர்பார்க்ஸ்-பாஸ்டன் தகவலின்படி, செக்ஸ் சாம்பியன்ஷிப் தொடர்பான விண்ணப்பம் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நிராகரிக்கப்பட்டது என தெரியவந்துள்ளது.

    'ஸ்வீடன் நாட்டில் செக்ஸ் கூட்டமைப்பு உள்ளது. அதன் தலைவர் டிராகன் பிராக்டிக் ஒரு சாம்பியன்ஷிப் போட்டிக்காக அழைப்பு விடுத்தார். உடலுறவை விளையாட்டாக அங்கீகரிக்கக் கோரி தேசிய விளையாட்டு கூட்டமைப்பிடம் கடந்த ஜனவரி மாதம் விண்ணப்பித்தார். உடலுறவானது உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என அவர் தனது விண்ணப்பத்தில் கூறியிருந்தார். எனினும், அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது' என கோட்டர்பார்க்ஸ்-பாஸ்டன் வெளியிட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அந்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாக தேசிய விளையாட்டு கூட்டமைப்பின் தலைவர் பிஜோர்ன் எரிக்சன் உள்ளூர் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

    • பயனர்கள் இலவச லேப்டாப் பெற அதிகாரப்பூர்வ வலைதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.
    • பிரதமர் நரேந்திர மோடி இலவச லேப்டாப் திட்டம் 2023-24 எனும் தலைப்பு கொண்ட போஸ்டர் வைரல்.

    இந்திய அரசு இலவச லேப்டாப் வழங்குவதாக கூறும் தகவல் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. ஏமாற்றுவதை குறிக்கோளாக கொண்டிருப்பவர்கள், இந்திய அரசு மாணவர்கள் மற்றும் பொது மக்களுக்கு இலவச லேப்டாப் வழங்குவதாக கூறும் தகவல்கள் அடங்கிய வலைதளத்தை உருவாக்கியுள்ளனர்.

    மேலும் பயனர்கள் இலவச லேப்டாப் பெற அதிகாரப்பூர்வ வலைதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. பயனர்கள் இந்த வலைதளம் மற்றும் வைரல் தகவலை நம்ப வேண்டாம் என பத்திரிகை தகவல் மையம் தெரிவித்து இருக்கிறது.

    இதுகுறித்த பதிவுகளில்- பிரதமர் நரேந்திர மோடி இலவச லேப்டாப் திட்டம் 2023-24 எனும் தலைப்பு கொண்ட போஸ்டர் வைரலாகி வருகிறது. இந்த போஸ்டரை பத்திரிகை தகவல் மையம் கண்டறிந்து, அதனை ஆய்வுக்கு உட்படுத்தியது. ஆய்வில் மத்திய அரசு இதுபோன்ற திட்டத்தை அறிவிக்கவே இல்லை என்று தெரியவந்துள்ளது.

    இந்தியா முழுக்க எந்த மாநிலத்தை சேர்ந்த மாணவர்களும் இந்த திட்டத்தின் மூலம் பயன்பெறலாம் என்று வைரல் போஸ்டரில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. மத்திய அரசு இலவச லேப்டாப் வழங்குவதாக கூறும் தகவலை யாரும் நம்ப வேண்டாம் என்று பத்திரிகை தகவல் மையம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்து இருக்கிறது.

    • நெல் மூட்டைகள் மாயமானதாக கூறப்பட்ட தருமபுரி வாணிப கழக திறந்த வெளி குடோனில் இன்று மாவட்ட கலெக்டர் சாந்தி மற்றும் அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
    • 7 ஆயிரம் நெல் மூட்டைகள் மாயமாகி இருப்பது வதந்தியான செய்தியாகும்.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் பின்புறம் தமிழ்நாடு வாணிப கழக திறந்த வெளி குடோனில் 22 ஆயிரம் நெல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. அதில் 7 ஆயிரம் மூட்டைகள் மாயமானதாக புகார் எழுந்தது. இதனால் தருமபுரி மாவட்டத்தில் பரபரப்பு நிலவியது.

    இந்த நிலையில் நெல் மூட்டைகள் மாயமானதாக கூறப்பட்ட தருமபுரி வாணிப கழக திறந்த வெளி குடோனில் இன்று மாவட்ட கலெக்டர் சாந்தி மற்றும் அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

    அப்போது கலெக்டர் சாந்தி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    தமிழ்நாடு வாணிப கழக சார்பில் தருமபுரி மாவட்டத்திற்கு 22 ஆயிரம் நெல் மூட்டைகள் தஞ்சை, நாகப்பட்டிணம் ஆகிய டெல்டா மாவட்டங்களில் இருந்து ரெயில் மூலம் வரவழைக்கப்பட்டது. இந்த நெல் மூட்டைகளை கலெக்டர் அலுவலகம் பின்புறம் அமைந்துள்ள மாவட்ட வாணிப கழக திறந்த வெளி குடோனில் வைக்கப்பட்டு பாதுகாக்கப்படுகிறது.

    இந்த நிலையில் இந்த குடோனில் இருந்த 7 ஆயிரம் நெல் மூட்டைகள் மாயமானதாக தகவல்களை பரப்பினர். இதுகுறித்து எழுந்த புகார் காரணமாக விஜிலென்ஸ் அதிகாரிகளும் விசாரணை நடத்தினர். இதைத்தொடர்ந்து ஆய்வு செய்வதற்காக இன்று இங்கு வந்து பார்வையிட்டபோது, 7 ஆயிரம் நெல் மூட்டை மாயமாக வாய்ப்பில்லை. ஏனென்றால், ஒரு அட்டிக்கு 3 ஆயிரம் நெல் மூட்டைகள் வரை அடுக்கி வைக்கப்படுவது வழக்கம்.

    ஆனால், தற்போது அடுக்கி வைக்கப்பட்டுள்ள முறையில் ஒரு சில அட்டிகளில் 3 ஆயிரத்திற்கும் மேலாக இருக்கும், சில அட்டிகளில் 2500-க்கும் குறைவாக மூட்டைகள் அடுக்கி வைக்கப்படும். அவ்வாறு குறைவாக அடுக்கி வைக்கப்பட்ட நெல் மூட்டைகளை ஒரு சிலர் தவறுதலாக எண்ணி விட்டு நெல் மூட்டைகள் மாயமானது தெரியவந்ததாக திரித்து எங்கள் மீது உள்ள காழ்புணர்ச்சி காரணமாக புகார் தெரிவித்துள்ளனர்.

    இதுதொடர்பாகதான் அதிகாரிகள் வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், குடோனில் எந்த மூட்டைகளும் மாயமாகவில்லை. மேலும், சரிந்து கிடக்கும் மூட்டைகளை சரிசெய்யும் பணியும் நடைபெற்று வருகிறது.

    7 ஆயிரம் நெல் மூட்டைகள் மாயமாகி இருப்பது வதந்தியான செய்தியாகும்.

    தற்போது நெல்மூட்டைகள் அரவைக்கு அனுப்பி வைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும், நெல் மூட்டைகள் மாயமான சம்பவம் குறித்தும் விசாரணை நடத்தவும், மாவட்டத்தில் உள்ள 80 அரிசி ஆலைகளிலும் ஆய்வு செய்யவும் அதிகாரிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதுகுறித்து அங்கு பணிபுரியும் ஊழியர்களிடம் விசாரித்தபோது, தற்போது நெல் மூட்டைகள் அரவைக்கு அனுப்பி வைக்கும்பணி நடைபெற்று வருகிறது.

    • சோதனையின் போது ரூ. 36.3 கோடி மதிப்பிலான அசையா சொத்துக்கள் முடக்கப்பட்டன.
    • உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளை வங்கி கணக்கில் இருந்த ரூ. 34.7 லட்சம் தொகை முடக்கப்பட்டது.

    இந்தியாவில் திரைப்படத் தயாரிப்பு, ஓட்டல் மற்றும் பல்வேறு தொழில்களை மேற்கொண்டு வரும் லைகா நிறுவனம் மற்றும் கல்லல் குழும நிறுவனங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த சில நாட்களுக்கு முன் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

    சோதனையின் போது பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை முடக்கியிருப்பதாக அமலாக்கத்துறை தெரிவித்து இருந்தது. இதில் பெட்டிகோ கமர்ஷியோ இண்டர்நேஷனல் நிறுவனத்தின் இயக்குனர்கள் மற்றும் நிறுவனர்கள் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

    இது தொடர்பாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. அதில் ரூ. 36.3 கோடி மதிப்பிலான அசையா சொத்துக்கள் முடக்கப்பட்டன. இத்துடன் உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளையின் வங்கி கணக்கில் இருந்த ரூ. 34.7 லட்சம் தொகையும் முடக்கப்பட்டது என்று அமலாக்கத்துறை அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

    இதைத் தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளைக்கு சொந்தமான சொத்துக்கள் முடக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் தகவல் வேகமாக பரவி வந்தது. இதுகுறித்து உதயநிதி ஸ்டாலின் அறிக்கட்டளை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இது குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருப்பதாவது..,

    "உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளைக்கு சொந்தமான ரூ.36.3 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியதாக வெளியான செய்தியில் உண்மையில்லை. உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளைக்கென்று எவ்விதமான அசையா சொத்துக்களும் கிடையாது."

    "அமலாக்கத்துறை குறிப்பிட்டுள்ள ரூ. 36.3 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கத்திற்கும், அறக்கட்டளைக்கும் எவ்வித சம்பந்தமும் கிடையாது. அமலாக்கத்துறை முடக்கிய ரூ. 34.7 லட்சத்திற்கான தகுந்த ஆவணங்களை கொடுத்து, அதனை மீட்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வோம்." 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பஜ்ரங் புனியா தனது டுவிட்டர் தளத்தில் இரண்டு புகைப்படங்களை பகிர்ந்து இருக்கிறார்.
    • போராட்டத்தில் ஈடுபட்ட மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக்-ம் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

    டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட மல்யுத்த வீராங்கனைகளை காவல்துறை நேற்று கைது செய்தது. கைதான வீராங்கனைகளில் சங்கீதா போகட் மற்றும் வினீஷ் போகட் காவல்துறை வாகனத்தில் சிரித்துக் கொண்டே அமர்ந்து இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

    இந்த நிலையில் பஜ்ரங் புனியா தனது டுவிட்டர் தளத்தில் இரண்டு புகைப்படங்களை பகிர்ந்து இருக்கிறார். அதில் ஒன்று உண்மையானது, மற்றொன்று மார்ஃபிங் செய்யப்பட்டு மல்யுத்த வீராங்கனைகள் சிரிப்பது போன்று மாற்றப்பட்டு இருப்பதை காட்டுகிறது. புகைப்படத்தில் சிரித்துக் கொண்டு இருப்பதை அடுத்து, மல்யுத்த வீராங்கனைகள் போராட்டத்தில் தீவிரம் காட்டவில்லை என்பதை உணர்த்துகிறது.

    வைரல் புகைப்படங்கள் மார்ஃபிங் செய்யப்பட்ட ஒன்று என்பது தெளிவாகிவிட்டது. இந்த நிலையில், மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா, "இந்த புகைப்படங்களை ஐடி செல் தான் பரப்பி வருகிறது. இதனை பதிவிட்ட நபர் மீது புகார் அளிக்கப்படும்," என்று டுவிட் செய்து இருக்கிறார்.

    போராட்டத்தில் ஈடுபட்ட மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக்-ம் போலீசாரால் கைது செய்யப்பட்டார். போராட்டத்தில் ஈடுபட்ட மல்யுத்த வீராங்கனைகள், புதிய பாராளுமன்ற கட்டிடத்தை நோக்கி பேரணி நடத்த முயன்ற போது கைது செய்யப்பட்டனர்.

    மல்யுத்த வீராங்கனைகள் கைது செய்யப்பட்ட சம்பவத்திற்கு தமிழ் நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்பட நாடு முழுக்க பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

    • மக்கள் பாசிச எதிர்ப்பு முன்னணி இந்த விபத்து திட்டமிட்ட ஒன்று என தெரவித்து இருந்தது.
    • போலி தகவல் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

    ஜம்முவின் கிஷ்ட்வார் மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் ஏற்பட்ட சாலை விபத்தில் ஏழு பேர் உயிரிழந்தனர். இந்த சாலை விபத்தின் பின்னணியில் பயங்கரவாத அமைப்பு இருப்பதாக செய்தி வெளியாகி வந்தது. இந்த தகவலில் துளியும் உண்மையில்லை என்று ஜம்மு காஷ்மீர் காவல் நிலையம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.

    காவல் துறை மூத்த துணை ஆய்வாளர் கலில் போஸ்வால் ஏழு பேரை பலிகொண்ட சம்பவம் சாலை விபத்து தான். ஓட்டுனர் கட்டுப்பாட்டை இழந்ததே இந்த விபத்து ஏற்பட காரணம் என்று தெரிவித்தார். மிகவும் கடினமான வளைவில் செல்லும் போது ஓட்டுனர் கட்டுப்பாட்டை இழந்ததால், வாகனம் மலையில் இருந்து கீழே விழுந்தது.

    மக்கள் பாசிச எதிர்ப்பு முன்னணி சார்பில், இந்த விபத்து திட்டமிட்ட ஒன்று என தனது சமூக வலைதளத்தில் தெரவித்து இருந்தது.

    "தங்துருவில் ஏற்பட்ட சாலை விபத்தின் பின்னணியில் சட்டவிரோத பயங்கரவாத கும்பல் இருப்பதாக வெளியான செய்தி போலியானது ஆகும். அதில் எவ்வித உண்மையும் இருப்பதாக தெரியவில்லை. மக்கள் பாசிச எதிர்ப்பு முன்னணி வெளியிட்டு இருக்கும் அறிக்கையை மறுக்கிறோம். மக்கள் இதுபோன்று வெளியாகும் தகவல்களை நம்ப வேண்டாம்," என்று போஸ்வால் தெரிவித்தார்.

    இதுபோன்ற போலி தகவல் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

    • கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றது.
    • சித்தராமையா நடனம் ஆடுவது போன்ற காட்சிகள் அடங்கிய வீடியோ வைரல்.

    கர்நாடக மாநிலத்தின் முதல்வராக பதவியேற்றிருக்கும் சித்தராமையா நடனம் ஆடுவதில் விருப்பம் கொண்டவர். ஒவ்வொரு ஆண்டும் சித்தராமையா மைசூருவில் உள்ள தனது கிராமத்திற்கு சென்று, அங்கு நடைபெறும் திருவிழாவில் நடனம் ஆடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

    சமீபத்தில் நடந்து முடிந்த கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றதை அடுத்து, சித்தராமையா நடனம் ஆடுவது போன்ற காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. 38 நொடிகள் ஓடும் வீடியோவில் நடனம் ஆடும் நபர் பார்க்க சித்தராமையா போன்றே காட்சியளிக்கிறார்.

    பிரபல கன்னடா மொழி பாடலுக்கு நடனம் ஆடும் நபரை, அங்கு கூடியிருந்தவர்கள் கைத்தட்டி பாராட்டினர். இதுபற்றிய இணைய தேடல்களில், வீடியோவில் நடனம் ஆடிய நபர் கர்நாடக முதல்வர் சித்தராமையா இல்லை என்று தெரியவந்துள்ளது. இதே வீடியோ கடந்த 2018 ஆண்டிலும் வைரல் ஆனதும் தெரியவந்துள்ளது. 

    ×