என் மலர்tooltip icon

    விருதுநகர்

    பா.ஜனதாவை ஆதரிக்க ரஜினிகாந்த் முடிவு செய்ய வேண்டும் என்று நடிகை கவுதமி கூறினார்.
    ஸ்ரீவில்லிபுத்தூர்:

    பா.ஜனதா சார்பில் மாநிலம் முழுவதும் “நம்ம ஊரு பொங்கல்” நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

    விருதுநகர் மேற்கு மாவட்ட பா.ஜனதா சார்பில் ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோவில் முன்பு “நம்ம ஊரு பொங்கல்” நடைபெற்றது.

    பா.ஜனதா மாநில செயற்குழு உறுப்பினரும், ராஜபாளையம் தொகுதி தேர்தல் பொறுப்பாளருமான நடிகை கவுதமி கலந்துகொண்டு பொங்கல் வைத்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். தொடர்ந்து 200-க்கும் மேற்பட்ட பெண்கள் பொங்கல் வைத்தனர்.

    பின்னர் பெரிய மாரியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு திரும்பிய நடிகை கவுதமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் பா.ஜனதா கட்சி நல்ல வளர்ச்சி கண்டுள்ளது. கூட்டணி என்றால் அனைவரும் ஒற்றுமையாக இருந்து இலக்கை அடைய வேண்டும். ராஜபாளையம் தொகுதியில் போட்டியிடுவது குறித்து தற்போது கருத்துக்கள் இல்லை.

    யார் முதுகிலும் சவாரி செய்ய வேண்டிய அவசியம் பா.ஜனதாவுக்கு கிடையாது. தேர்தல் வரை எதையும் உறுதியாக சொல்லமுடியாது.

    பா.ஜனதாவை ஆதரிக்க ரஜினிகாந்த் முடிவு செய்ய வேண்டும். கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு சிறப்பாக அமையவும், பொதுமக்களை சந்திக்கவும் நான் வந்துள்ளேன்

    இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர் நடிகை கவுதமி மாரியம்மன் கோவில் தெருவில் நடைபெற்ற கோலப்போட்டிகளை பார்வையிட்டு வெற்றிபெற்ற பெண்களுக்கு பரிசுகள் வழங்கினார்.
    பிரதோஷத்தையொட்டி சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    வத்திராயிருப்பு:

    வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் நடைபெற்ற பிரதோஷ வழிபாட்டில் கலந்து கொள்வதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதலே தாணிப்பாறை வனத்துறை கேட்டின் முன்பு வந்தனர்.

    இதையடுத்து நேற்று காலை 7 மணிக்கு வனத்துறை கேட் திறக்கப்பட்டது. பின்னர் பக்தர்களின் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் கிருமிநாசினிகள் மூலம் பக்தர்கள் கைகள் சுத்தம் செய்யப்பட்ட பிறகே அவர்கள் கோவிலுக்கு தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

    சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்லும் வழியில் உள்ள பேச்சியம்மன் கோவில் அருகே உள்ள வழுக்குப்பாறையில் பக்தர்கள் மகிழ்ச்சியுடன் நீராடிய பின்னர் மலை ஏற ஆரம்பித்தனர்.

    தொடர்ந்து மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமி, சந்தன மகாலிங்கம் சுவாமிகளுக்கு பால், பழம், பன்னீர், விபூதி, சந்தனம், தயிர் உள்ளிட்ட 18 வகையான பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.

    தொடர்ந்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையடுத்து சிறப்பு அலங்காரத்தில் சுந்தரமகாலிங்கம் சுவாமி, சந்தன மகாலிங்கம் சுவாமி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.

    இந்த வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    பக்தர்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகத்தினர் செய்தனர்.
    திருக்சுழி அருகே நெற்பயிரில் குலை நோய் தாக்குதலால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
    காரியாபட்டி:

    திருச்சுழி அருகே விடத்தகுளம், வி.புதூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தங்களது வயல்களில் 250 ஏக்கரில் நெல் சாகுபடி செய்துள்ளனர்.

    இந்தநிலையில் விடத்தகுளம் பகுதியில் சுமார் 150 ஏக்கருக்கு மேல் பயிரிடப்பட்டுள்ள விளைந்த நெற்பயிர்களில் குலைநோய் தாக்குதலால் 70 சதவீதம் பயிர்கள் பாதிப்படைந்துள்ளன. இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

    இந்தநோய் தாக்கிய நெற்பயிர்கள் மஞ்சள் பூத்த நிலையில் காணப்படுகிறது. கடன் வாங்கி சாகுபடி செய்தும், தற்போது எந்த பலனும் கிடைக்காமல் விவசாயிகள் அவதிப்படும் சூழ்நிலை உள்ளது.

    குலை நோயால் பாதிப்பினால் மாடுகளுக்கு வைக்கோலுக்கு கூட பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை பார்வையிட்டு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    இருசக்கர வாகன திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட 5 பேரை கைது செய்த போலீசார் 3 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
    தளவாய்புரம்:

    சேத்தூர் பகுதியை சேர்ந்த முத்துச்சாமி (வயது55), சொக்கநாதன்புத்தூர் பகுதியை சேர்ந்த பழனிச்சாமி (27) ஆகியோர்களுக்கு சொந்தமான 3 இருசக்கர வாகனங்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு காணாமல் போனது. இதுபற்றி அவர்கள் சேத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.

    இதனையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் கருணாகரன் நடத்திய விசாரணையில் சேத்தூர் கந்தசாமி (21), முகவூர் அருண்குமார் (22), பாலமுருகன் (20) உள்பட 5 பேர் சேர்ந்து இந்த மூன்று இரு சக்கர வாகனங்களை திருடியது தெரியவந்தது. பின்னர் நேற்று காலை போலீசார் இவர்களிடம் 3 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து இவர்களை கைது செய்து வழக்குப்பதிவு செய்தனர்.
    விருதுநகர் மாவட்டத்தில் நேற்று மேலும் 7 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16,252 ஆக உயர்ந்துள்ளது.
    விருதுநகர்:

    கொரோனா பாதிக்கப்பட்ட 16,117 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 2,757 பேரின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் அறிவிக்கப்படவில்லை.

    99 பேர் அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வீடுகளில் யாரும் தனிமைப்படுத்தப்படவில்லை. மாவட்டத்தில் நேற்று மேலும் 7 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16,252 ஆக உயர்ந்துள்ளது.

    நேற்று 1,208 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதில் 2, 700-க்கும் மேற்பட்டவர்களின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கப்படாதநிலை இருந்தது.

    மருத்துவ பரிசோதனை முடிவுகளை தாமதப்படுத்துவதால் நோய் பரவல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படும் நிலையில் மாவட்ட சுகாதாரத்துறையினர் தொடர்ந்து பரிசோதனை முடிவுகளை தாமதிப்பது ஏன்? என்று தெரியவில்லை.

    மருத்துவ பரிசோதனை முடிவுகளை தாமதிக்காமல் அறிவிக்க மாவட்ட சுகாதாரத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் ஒரு பகுதியில் நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுவிட்ட நிலையில் அப்பகுதியை தாமதிக்காமல் கட்டுப்பாட்டுப்பகுதியாக அறிவித்து தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.
    வத்திராயிருப்பு பகுதியில் பொங்கல் பண்டிகையையொட்டி நடைபெறும் ஜல்லிக்கட்டுக்கு காளைகள் தயாராகி வருகின்றன.
    வத்திராயிருப்பு:

    தென் மாவட்டங்களில் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல்பண்டிகையையொட்டி ஜல்லிக்கட்டு நடைபெறுவது வழக்கம்.

    இந்த போட்டிகளில் வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான காளைகள் பங்கேற்பது வழக்கம். இந்தநிலையில் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்பதற்காக வத்திராயிருப்பு, சேது நாராயணபுரம், மகாராஜபுரம், கூமாபட்டி, நெடுங்குளம், கான்சாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் 200-க்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டு காளைகள் வளர்க்கப்பட்டு வருகிறது.

    இந்த காளைகளுக்கு அதன் உரிமையாளர்கள் நீச்சல் பயிற்சி, மண் குத்துதல் பயிற்சி, நடைப்பயிற்சி உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளை அளித்து வருகின்றனர்.

    மேலும் மாடுகளுக்கு சத்தான உணவு வகைகளான பாதாம், முந்திரி, பேரீச்சம் பழம், பருத்திக்கொட்டை, புரதச்சத்து நிறைந்த பருப்பு வகைகள் தினமும் வழங்கப்பட்டு வருகிறது.

    மேலும் வயல் வெளிகளில் தற்காலிக வாடிவாசல் அமைத்து மாடு பிடிக்கும் பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது.

    கொரோனா விதிகளின் கட்டுப்பாடுகளின் படி ஒரு மாட்டுடன் இருவர் தான் வரவேண்டும் என்பன உள்பட பல்வேறு விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. எனவே புதிய விதிமுறைகளை தளர்த்தி விட்டு, பழைய நடைமுறைகளின் படி ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டும் என மாட்டின் உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    விருதுநகர் அருகே ரெயில் மோதி ஒருவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    விருதுநகர்:

    விருதுநகர் அருகே உள்ள துலுக்கப்பட்டி மற்றும் சாத்தூர் ரெயில் நிலையங்களுக்கு இடையே 45 வயது மதிக்கத்தக்க நபர் அந்த வழியாக சென்ற ரெயிலில் அடிபட்டு இறந்து உள்ளார். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்று தெரியவில்லை. 

    இறந்த நபர் வெளிர் பச்சை நிறத்தில் கட்டம் போட்ட சட்டை அணிந்து உள்ளார். சட்டையில் பாபி சிவகாசி என்ற தையல் நிறுவன முகவரி உள்ளது. இதுபற்றி தூத்துக்குடி ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    தோட்டப்பயிர் சாகுபடி விவசாயிகள் தமிழகஅரசின் வட்டார, மாவட்ட மற்றும் மாநில அளவிலான தலா 10 சாதனையாளர் விருது பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் கண்ணன் தெரிவித்துள்ளார்.
    விருதுநகர்:

    தமிழக அரசு விவசாயிகளின் வருமானத்தை உயர்த்துவதிலும், நாட்டின் பொருளாதார வளர்ச்சியிலும் தோட்டப்பயிர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.காய்கறிகள், பழங்கள் போன்ற தோட்டப்பயிர் சாகுபடியில் அதிகம் லாபம் கிடைப்பதால் விவசாயிகள் ஈடுபாடு தற்சமயம ்அதிகரித்து வருகிறது.

    இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த தோட்டக்கலை பயிர்களை சிறந்த முறையில் தொழில் உத்திகளைக் கையாண்டு சாகுபடி செய்து வரும் விவசாயிகளுக்கு தமிழக அரசு வட்டாரம், மாவட்ட, மாநில அளவில் தலா 10 சாதனையாளர்களுக்கு விருது வழங்க திட்டமிட்டுள்ளது.

    காய்கறிகள், பழங்கள் சாகுபடி, பயிர்கள் சாகுபடி, மூலிகை வாசனை திரவிய பயிர்கள் சாகுபடி தொழில்நுட்ப மற்றும் பாதுகாக்கப்பட்ட சாகுபடி அங்கக மற்றும் இயற்கை விவசாய சாகுபடி புதிய தனித்துவமிக்க மாவட்டத்திற்கே சிறப்புக்குரிய தோட்டக்கலை பயிர்சாகுபடிக்கான சாதனையாளர் விருது வழங்கப்படுகிறது.

    வட்டார அளவில் விருது பெற்றவர்களில் இருந்து மாவட்ட விருதுக்கும், மாவட்ட அளவில் விருது பெற்ற விவசாயிகள், மாநில விருதுக்கும் தேர்வு செய்யப்படுவர்.

    வட்டார அளவில் விவசாயிகளை நியமிக்கப்பட்ட தேர்வுக்குழு தேர்வு செய்யும். இந்த திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட விவசாயிகள் இத்துறையின் இணைய தளத்தில் உள்ள விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்து அதனுடன் ரூ.100 விண்ணப்பக்கட்டணம் செலுத்தி ஆன்லைன் மூலம் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

    உரிய ஆவணங்கள் இல்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். விருதுநகர் மாவட்ட தோட்டக்கலை விவசாயிகள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தங்களின் தொழில்நுட்ப சாதனைகளை வெளிக்கொணர்ந்து பயனடையுமாறு வேண்டுகிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    சாத்தூர் அருகே சுகாதார வளாகத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    சாத்தூர்:

    சாத்தூர் அருகே உள்ள அமீர்பாளையம் கிராமத்தில் 1,500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    இந்த பகுதியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மகளிர் சுகாதார வளாகம் கட்டப்பட்டது. இந்த வளாகம் இன்னும் திறக்கப்படவில்லை. தற்போது இந்த வளாகம் சேதமடைந்து காணப்படுகிறது.

    இங்கு உள்ள பொதுமக்கள் பெரும்பாலானோர் தீப்பெட்டி, பட்டாசு போன்ற தொழிற்சாலையில் கூலி வேலை பார்த்து வருகின்றனர்.

    இவர்களில் எண்ணற்ற பேர் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் இங்கு சுகாதார வளாகம் இருந்தும் அதனை திறக்காததால் இப்பகுதியில் உள்ள பெண்கள் திறந்தவெளியை கழிவறையாக பயன்படுத்துகின்றனர்.

    ஆதலால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதோடு மட்டுமின்றி தொற்றுநோய் பரவும் அபாயநிலையும் நிலவுகிறது. எனவே பராமரிப்பற்ற இந்த சுகாதார வளாகத்தை உடனே சீரமைத்து மக்களின் பயன்பாட்டிற்கு திறந்து விட வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் ேகாரிக்கை விடுத்துள்ளனர்.

    மலேசியாவில் வேலைக்குச் சென்ற திருச்சுழியைச்சேர்ந்த வாலிபர் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் உயிர் இழந்தார் அவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர உதவி செய்ய கோரி அவரது மனைவி கலெக்டரிடம் மனு கொடுத்தார்.
    விருதுநகர்:

    திருச்சுழி அருகே உள்ள காரை குளத்தை சேர்ந்தவர் கருப்பசாமி (வயது 37). இவர் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு மேலூரைச் சேர்ந்த தரகர் மூலம் மலேசியாவில் உள்ள ஒரு உணவகத்திற்கு வேலைக்கு சென்றார். கடந்த 10 மாதங்களாக இவருக்கு வேலை இல்லாத நிலையில் உடல் நிலை பாதிக்கப்பட்டது. இதுபற்றி அவர் மனைவி கோகிலா தேவிக்கு தகவல் தெரிவித்தார்.

    இதனைத்தொடர்ந்து கோகிலா தேவி தனது கணவரை அவர் வேலை செய்யும் இடத்தில் இருந்து மீட்டு சொந்த ஊருக்கு கொண்டு வர ஏற்பாடு செய்யுமாறு கடந்த அக்டோபர் மாதம் மாவட்ட நிர்வாகத்திடம் மனு கொடுத்தார். ஆனாலும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    இந்நிலையில் உடல்நிலை பாதிக்கப்பட்ட கருப்பசாமிக்கு அங்கு உரிய மருத்துவ வசதி கிடைக்காததால் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து அவருடன் வேலை செய்தவர்கள் கருப்பசாமி மனைவிக்கு கடந்த 4 நாட்களுக்கு முன்பு தகவல் தெரிவித்தனர். இதனால் வேதனை அடைந்த கோகிலா தேவி செய்வதறியாது கதறி அழுதார்.

    இந்நிலையில் கோகிலா தேவி தனது இரு குழந்தைகளுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து தனது கணவர் கருப்பசாமி உடலை மீட்டு சொந்த ஊருக்கு கொண்டு வர உதவி செய்யும்படி கதறி அழுத படி கலெக்டரிடம் மனு கொடுத்தார்.

    கணவர் உடல்நிலை பாதிப்படைந்த உடனே அவரை வேலைக்கு அனுப்பிய தரகரை தொடர்பு கொண்டு தனது கணவரை சொந்த ஊருக்கு வர உதவி செய்யும்படி கேட்டுக் கொண்டதாகவும் ஆனால் அவதூறாக பேசி உதவி செய்ய மறுத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

    மனு கொடுத்த கோகிலா தேவி தனது இரு குழந்தைகளுடன் வாழ்வாதாரம் இல்லாமல் தவிக்கும் நிலையில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
    அருப்புக்கோட்டை அருகே மரத்தின் மீது கார் மோதிய விபத்தில் 9 பேர் படுகாயம் அடைந்தனர்.
    அருப்புக்கோட்டை:

    விருதுநகர் மாவட்டம் சிவகாசியை அடுத்த வடமலாபுரத்தை சேர்ந்தவர் கற்பகவேல். இவர் தனது குடும்பத்தினருடன் ராமேசுவரத்திற்கு சென்று திதி கொடுப்பதற்காக வாடகை காரில் சென்றார்.

    காரை சிவகாசியை சேர்ந்த கதிரேசன் என்பவர் ஓட்டினார். திதி கொடுத்துவிட்டு நேற்று மாலை ஊருக்கு ெசன்றுகொண்டு இருந்தார். அப்போது அருப்புக்கோட்டையை அடுத்த புளியம்பட்டி அருகே விருதுநகர் சாலையில் கார் சென்று கொண்டிருந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து நிலை தடுமாறி சாலை ஓரத்தில் இருந்த புளியமரத்தில் மோதியது.

    இதில் காரில் பயணம் செய்த டிரைவர் கதிரேசன், சஞ்சய்குமார், ரவி, கார்த்திகாயினி, கிஷோர், ராஜகணபதி, சுதா, சுந்தரவள்ளி உள்பட 9 பேர் படுகாயம் அடைந்தனர்.

    இவர்களை அருகில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அருப்புக்கோட்டை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 3 லட்சத்து 70 ஆயிரத்து 412 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் 16,437 பேருக்கு நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்தது. 16,108 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 3,413 பேரின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் அறிவிக்கப்படவில்லை. 100 பேர் அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வீடுகளில் யாரும் தனிமை படுத்தப்படவில்லை.

    மாவட்டத்தில் நேற்று மேலும் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16,445 ஆக உயர்ந்துள்ளது.

    1,652 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதில் 3,400-க்கும் மேற்பட்டோருக்கு மருத்துவ பரிசோதனை முடிவுகள் அறிவிக்கப்படாத நிலையில் இருந்தது. மாவட்டத்தில் மருத்துவ பரிசோதனை முடிவுகள் தொடர்ந்து தாமதமாகும் நிலையே இருந்து வருகிறது. இதனால் நோய் பரவல் தவிர்க்க முடியாத நிலை ஏற்பட்டுவிடும்.

    அரசு விதிமுறைப்படி நகர்ப்பகுதிகளில் ஒரு தெருவில் 3 பேருக்கு மேல் பாதிப்பு ஏற்பட்டால் அந்தப்பகுதியினை நோய் கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கவேண்டும்.

    அருப்புக்கோட்டையில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேருக்கு நோய் பாதிப்பு உறுதி செய்ப்பட்டது. தற்போது அந்த பகுதி காலதாமதமாக கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    முன்னெச்சரிக்கையாக நகர்ப்பகுதிகளிலும், கிராமப்புறங்களிலும் நோய் பாதிப்பு ஏற்படாமல் இருக்க தடுப்பு நடவடிக்கைகளை முறையாக மேற்கொள்வதுடன் நோய் தடுப்பு வழி முறைகளையும் பின்பற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
    ×