என் மலர்tooltip icon

    விருதுநகர்

    விருதுநகரில் திருமணமாகாமல் கர்ப்பமான இளம்பெண் உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    விருதுநகர்:

    விருதுநகர் லிங்க் ரோட்டைச் சேர்ந்தவர் அந்தோணியம்மாள். இவரது மகள் மாரீஸ்வரி (வயது 26). இவர் அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

    இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக மாரீஸ்வரி வேலைக்கு செல்லவில்லை. அப்போது அவருக்கு அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து மாரீஸ்வரியை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்று பரிசோதித்தபோது, அவர் கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது.

    மேலும் மாரீஸ்வரிக்கு மஞ்சள் காமாலை இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அவர் தொடர்ந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.

    திருமணமாகாமல் மகள் கர்ப்பமானதில் அதிர்ச்சியடைந்த தாய் அந்தோணியம்மாள் கேட்டபோது சூலக்கரை அருகே உள்ள தாதம்பட்டி, எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்த சூர்யா பால்ராஜ் என்பவரை காதலித்து வந்ததாகவும், அவருடன் நெருங்கி பழகியதால் கர்ப்பமானதாக மாரீஸ்வரி கூறியதாக தெரிகிறது.

    இதற்கிடையே உடல்நிலை மோசமான நிலையில் மாரீஸ்வரி மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். கருவிலேயே சிசுவும் இறந்தது.

    இந்த சம்பவம் தொடர்பாக விருதுநகர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள விவசாயிகள் கோடை அறுவடையை முடித்து விட்டு முதல்போக நெல் சாகுபடி செய்வதற்கு நாற்றாங்கால் பாவி உள்ளனர்.
    வத்திராயிருப்பு:

    வத்திராயிருப்பு, கான்சாபுரம், அத்திகோவில், கூமாப்பட்டி, ரஹ்மத்நகர், கிழவன்கோவில், பட்டுப்பூச்சி, தாணிப்பாறை, மகாராஜபுரம், தம்பிபட்டி, இலந்தைகுளம், கோட்டையூர், சுந்தரபாண்டியம் ஆகிய பகுதிகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயிகள் நெல் சாகுபடி செய்து வருகின்றனர்.

    வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் தொடர்ச்சியாக மழை பெய்ததால் நீர்நிலைகள், கண்மாய்கள், கிணறுகளில் போதுமான தண்ணீர் உள்ளது.

    வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள விவசாயிகள் கோடை அறுவடையை முடித்து விட்டு முதல்போக நெல் சாகுபடி செய்வதற்கு நாற்றாங்கால் பாவி உள்ளனர்.

    இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

    வத்திராயிருப்பு பகுதியில் உள்ள மக்கள் விவசாயத்தை நம்பியே பிழைத்து வருகின்றனர். இந்த பகுதியில் தொடர்ச்சியாக பெய்த மழையினால் சாகுபடிக்கு தேவையான தண்ணீர் உள்ளதால் மகிழ்ச்சியில் சாகுபடி பணியை மேற்கொண்டு வருகிறோம். தற்போது முதல் போக நெல் சாகுபடிக்கு தங்களது நிலத்தை தயார் செய்து வருகிறோம்.

    முதல் போக நெல் நாற்று நடவிற்கு தற்போது தாங்கள் நாற்றாங்கால் பாவி உள்ளோம். நெல் நாற்றாங்கால் பாவி 10 நாட்களுக்கு மேல் ஆகி உள்ளது. நெல் நாற்றுகள் நன்கு வளர்ந்துள்ளன.

    இன்னும் 20 முதல் 25 நாட்களில் நெல் நாற்று நடவு பணியை தொடங்க உள்ள நிலையில் இந்த நெல் நாற்றுகள் நடுவைக்கு தயாராகி வருகிறது. தற்போது உழவு பணியை தொடங்க இருக்கிறோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.
    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பெண்களை கேலி செய்ததை தட்டிக்கேட்ட தொழிலாளியை வாலிபர் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள பட்டக்குளம் அரிய நாயகிபுரத்தை சேர்ந்தவர் முருகன்(வயது 29), கூலி தொழிலாளி. அதே ஊரில் வசித்து வருபவர் லாரன்ஸ் (21). இவருக்கு குடிபழக்கம் உள்ளது.

    அடிக்கடி குடித்துவிட்டு பெண்களை கேலி-கிண்டல் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனை முருகன் பலமுறை கண்டித்தார். இதனால் லாரன்ஸ் ஆத்திரமடைந்தார்.

    நேற்று இரவு முருகன் வீட்டு முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த லாரன்ஸ் கையில் வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக வெட்டினார். பலத்த வெட்டுக்காயம் அடைந்த முருகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பின்னர் லாரன்ஸ் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

    இந்த சம்பவம் தொடர்பாக கிருஷ்ணன்கோவில் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து முருகன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    தலைமறைவான லாரன்சை போலீசார் தேடி வருகின்றனர். இச்சம்பவம் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    விருதுநகர் மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் பிளஸ்-2 மற்றும் கல்லூரி படிக்கும் மாணவிகள் 20-க்கும் மேற்பட்டோர் மாயமாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

    விருதுநகர்:

    கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பள்ளிகள் திறக்கப்படவில்லை. இதனால் மாணவ- மாணவிகள் வீட்டில் இருந்தே செல்போன் மூலம் ஆன்லைனில் படித்து வருகின்றனர்.

    இதற்காக பெற்றோரும் தங்களது குழந்தைகளுக்கு புதிய செல்போன்களை வாங்கிக் கொடுக்கின்றனர். ஆன்லைன் பாடங்களுக்கு மட்டும் செல்போனை பயன்படுத்தும் மாணவிகள் மற்ற நேரங்களில் பேஸ்புக், வாட்ஸ்-அப் உள்ளிட்ட வலைதளங்களில் அதிக நேரத்தை செலவிடுகின்றனர்.

    இதனை பயன்படுத்தி சில ஆசாமிகள் மாணவிகளுக்கு குறுஞ்செய்திகளை அனுப்பி பழக்கம் ஏற்படுத்திக் கொள்கின்றனர். இந்த பழக்கம் நாளடைவில் வீட்டை விட்டு வெளியேறும் சூழ்நிலைக்கு மாணவிகளை ஆளாக்குகிறது.

    விருதுநகர் மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் பிளஸ்-2 மற்றும் கல்லூரி படிக்கும் மாணவிகள் 20-க்கும் மேற்பட்டோர் மாயமாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

    இது தொடர்பாக கடந்த வாரம் விருதுநகரில் காணாமல் போனவர்களுக்கான முகாமை மாவட்ட போலீசார் நடத்தினர். இதில் திரட்டப்பட்ட தகவல்களின் அடிப்படையில் அன்றைய தினம் 3 மாணவிகள் மீட்கப்பட்டனர்.

    படிக்கின்ற வயதில் மாணவிகள் படிப்பில் மட்டும் கவனம் செலுத்தாமல் சமூக வலைதளங்களில் நேரத்தை செலவிடுவதால் இது போன்று அவர்கள் தடம் மாறி செல்லும் சூழல் ஏற்படுகிறது.

    பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை கவனிக்காமல் வீடு, வேலை என்று செல்வதால் தான் அவர்களை கண்காணிக்க முடிவதில்லை.

    எனவே பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளின் செயல்பாடுகள் குறித்து கண்காணிக்க வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    அருப்புக்கோட்டை அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அருப்புக்கோட்டை:

    அருப்புக்கோட்டை புளியம்பட்டி-விருதுநகர் செல்லும் சாலையில் உள்ள ஒரு கட்டிடத்தில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் அழுகிய நிலையில் கிடப்பதாக டவுன் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் அழுகிய நிலையில் கிடந்த உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டார். விசாரணையில் அருப்புக்கோட்டை தெற்குத்தெருவை சேர்ந்த தொழிலாளியான ரமேஷ் (வயது46) என்பது தெரியவந்தது. இவருடைய மனைவி மாலா. இவர் கலெக்டர் அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிந்து வருவதாகவும், இந்நிலையில் கணவன், மனைவி இருவருக்குமிடையே ஏற்பட்ட பிரச்சினையால் ரமேஷ் விஷம் குடித்து தற்கொலை செய்ததும் விசாரணையில் தெரியவந்தது. தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    ஆலங்குளம் அருகே உள்ள புலிப்பாரைபட்டியில் கொரோனா தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றது.
    ஆலங்குளம்:

    ஆலங்குளம் அருகே உள்ள புலிப்பாரைபட்டியில் கொரோனா தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றது. முகாமிற்கு வட்டார மருத்துவ அதிகாரி டாக்டர்செந்தட்டி காளை தலைமை தாங்கினார். இதில் சுகாதார ஆய்வாளர் மதியரசு, செவிலியர்கள் அடங்கிய சுகாதார குழுவினர் 200 பேருக்கு கொரோனா தடுப்பூசி போட்டனர்.
    ராஜபாளையம் அருகே கஞ்சா விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ராஜபாளையம்:

    ராஜபாளையம் அருகே அய்யனாபுரம் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கீழராஜகுலராமன் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பஸ் ஸ்டாப் அருகில் ஒருவர் கஞ்சா பொட்டலங்களை விற்பனை செய்து கொண்டிருந்தார். அவரை பிடித்து விசாரணை நடத்தியதில் அதேபகுதியைச் சேர்ந்த அறிவு குமார் (வயது 40) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் வைத்திருந்த 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், அறிவு குமாரை கைது செய்தனர்.
    ராஜபாளையத்தில் நூற்பாலையில் தீ விபத்து ரூ.10 லட்சம் பொருட்கள் சேதம்
    ராஜபாளையம்:

    விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் பஞ்சு மார்க்கெட் பகுதியில் சிறிய நூற்பாலையை வேல்முருகன் என்பவர் குத்தகைக்கு எடுத்து நடத்தி வருகிறார்.

    இதில் 1000 கதிர்களைக்கொண்ட நூற்பாலை நிறுவி 60-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை வைத்து நடத்தி வந்தார்.

    நேற்று இரவு பலத்த மழை காரணமாக மாலை முதல் மின்தடை ஏற்பட்டது. நள்ளிரவில் மின்சாரம் வந்தபோது திடீரென்று தீப்பொறி ஏற்பட்டு பஞ்சு பொதியில் தீப்பற்றியது. இதில் தீ மளமளவென்று பரவி கொழுந்து விட்டு எரிந்தது.

    இதுகுறித்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை கட்டுப்படுத்த போராடினார்கள்.

    அதற்குள் தீ மளமளவென்று பரவி நூற்பாலை எந்திரங்கள், பஞ்சு கண்டுகள், நூல்களில் பற்றி எரிந்தன. இன்று காலை 7 மணி அளவில் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் 4 மணி நேரம் போராடி தீயை கட்டுப்படுத்தினர்.

    விருதுநகர் மாவட்ட தீயணைப்பு நிலைய அலுவலர் மணிகண்டன், ராஜபாளையம் தீயணைப்பு நிலைய அதிகாரி ஜெயராமன் தலைமையில் 20-க்கும் மேற்பட்ட வீரர்கள் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    இந்த தீ விபத்தில் நூற்பாலை எந்திரங்கள், பஞ்சு பொதி, நூல் கண்டுகள் உள்பட ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் கருகி சேதமடைந்தன.

    இந்த தீ விபத்து குறித்து ராஜபாளையம் வடக்கு காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தினர்.


    குமரன் புதுத்தெரு, காந்தி மைதானம், டெலிபோன் ரோடு, சொக்கலிங்கபுரம் உள்ளிட்ட நகரின் பெரும்பாலான இடங்களில் மழை நீரோடு கலந்து சாக்கடை நீர் பெருக்கெடுத்து ஓடியதால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.
    பாலையம்பட்டி:

    வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் வரும் 23-ந் தேதி வரை மழை பெய்யும் பகுதிகளை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

    இந்த நிலையில் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் இன்று அதிகாலை முதலே மழை பெய்தது. அருப்புக்கோட்டை பாலையம்பட்டி, ஆத்திபட்டி, சொக்கலிங்கபுரம், புளியம்பட்டி, ராமசாமிபுரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மிதமான மழை பெய்தது.

    அதனை தொடர்ந்து காலை வேளையில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக இடி, மின்னலுடன் கூடிய கனமழை கொட்டி தீர்த்தது. காலையில் பெய்த மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

    குமரன் புதுத்தெரு, காந்தி மைதானம், டெலிபோன் ரோடு, சொக்கலிங்கபுரம் உள்ளிட்ட நகரின் பெரும்பாலான இடங்களில் மழை நீரோடு கலந்து சாக்கடை நீர் பெருக்கெடுத்து ஓடியதால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.

    முறையான திட்டமிடல் இன்றி சாலை அமைப்பதே இதுபோன்று சிரமத்திற்கு காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

    நீண்ட நாட்களுக்கு பின் பெய்த கனமழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் ஆடி பட்டத்தில் நிலத்தை உழுது மழைக்காக காத்திருந்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    இதேபோல் சாத்தூர், விருதுநகர், மதுரை மாவட்டம் திருமங்கலம் உள்ளிட்ட பகுதிகளிலும் இன்று காலை மழை பெய்தது.
    குடும்ப தகராறில் பெண் போலீஸ் ஏட்டு கழுத்தை நெரித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் விருதுநகரில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டம், ஒண்டிப்புலி நாயக்கனூரை சேர்ந்தவர் பானுப்பிரியா (வயது 31). இவர் விருதுநகர் மேற்கு போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வந்தார்.

    இவருக்கும் மதுரை பழங்காநத்தத்தை சேர்ந்த அரசு பஸ் கண்டக்டர் விக்னேஷ் (31) என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 4 வயதில் ஒரு மகனும், 2 வயதில் மற்றொரு மகனும் உள்ளனர். இவர்கள் விருதுநகர் போலீஸ் குடியிருப்பில் வசித்து வந்தனர்.

    விக்னேசுக்கு மதுரை அரசு பணிமனையில் வேலை என்பதால் அவர் தினமும் அங்கு சென்றுவிட்டு வருவது வழக்கம். இதன் காரணமாக விக்னேஷ் மதுரைக்கு குடியேறி செல்வோம் என மனைவி பானுப்பிரியாவிடம் கூறி வந்துள்ளார்.

    ஆனால் அதற்கு அவர் மறுத்து வந்துள்ளார். இதனால் கணவன்- மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது.

    இதற்கிடையில் கணவன்- மனைவி வேலைக்கு செல்வதால் 2-வயது மகனை கவனித்துக் கொள்வதற்காக பானுப்பிரியாவின் உறவினர் கலைச்செல்வி (29) என்பவர் சில மாதங்களாக வீட்டில் தங்கியிருந்தார்.

    கடந்த 2 வாரங்களுக்கு முன்பு பானுப்பிரியா போலீஸ் குடியிருப்பை காலி செய்து விருதுநகர்-சாத்தூர் ரோட்டில் நூற்பாலைக்கு எதிரே தனது சகோதரி கற்பகம் வசிக்கும் வீட்டின் அருகே உள்ள வீட்டை வாடகைக்கு எடுத்து குடியேறினார். கற்பகத்தின் கணவர் பாண்டி சூலக்கரை போலீசில் ஏட்டாக உள்ளார்.

    புதுவீடு குடியேறியதில் விக்னேசுக்கு உடன்பாடு இல்லை என கூறப்படுகிறது. இதனால் கணவன்-மனைவியிடையே தகராறு ஏற்பட்டு வந்தது.

    நேற்று இரவு மீண்டும் வீடு பிரச்சனை தொடர்பாக விக்னேசுக்கும், பானுப்பிரியாவுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது. அப்போது கலைச்செல்வி வீட்டில் குழந்தையை கவனித்துக் கொண்டிருந்தார்.

    கணவன்-மனைவியிடையே வாக்குவாதம் முற்றவே 2 பேரும் தங்கள் பெட்ரூமுக்கு சென்றனர். சிறிது நேரத்துக்கு பின்னர் வெளியே வந்த விக்னேஷ் எதுவும் பேசாமல் வீட்டை விட்டு வெளியேறினார்.

    பானுப்பிரியா நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் அதிர்ச்சி அடைந்த கலைச்செல்வி உடனே அறைக்குச் சென்று பார்த்தார். அப்போது பானுப்பிரியா அங்கு பிணமாக கிடந்தார்.

    இதுகுறித்து தகவலறிந்த சூலக்கரை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பானுப்பிரியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    கணவன்-மனைவிக்கிடையே ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த விக்னேஷ், பானுப்பிரியாவை கழுத்தை நெரித்து கொலை செய்திருப்பதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதுகுறித்து கலைச்செல்வி கொடுத்த புகாரின்பேரில் விக்னேசை போலீசார் கைது செய்தனர்.

    பெண் போலீஸ் ஏட்டு கொலையான சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக போலீசார் சதீஷ்குமார், லாரி உரிமையாளர் முத்தையா ஆகிய 2 பேரை தேடி வருகின்றனர்.
    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டம், சிவகாசி மீனம்பட்டி ரோட்டில் ஒதுக்குப்புறமான இடத்தில் குடோன் உள்ளது. இந்த குடோன் முன்பு சந்தேகத்திற்கு இடமாக லாரி நின்று கொண்டிருந்தது.

    அந்த லாரியில் “அத்தியாவசிய பொருட்கள் அவசரம்“ என ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருந்தது. அடிக்கடி இந்த லாரி குடோன் முன்பு சென்றதால் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

    இதையடுத்து சப்-கலெக்டர் பிருத்விராஜ், தாசில்தார் ராஜ்குமார், வட்ட வழங்கல் அதிகாரி ஜெயபாண்டி மற்றும் அதிகாரிகள் அங்கு விரைந்து சென்று சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது லாரியில் 34 டன் ரேசன் அரிசி மற்றும் 2 மூட்டைகளில் 200 கிலோ கோதுமை இருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து குடோனுக்கு சீல் வைக்கப்பட்டது. மேலும் ரேசன் அரிசி மூட்டைகளுடன் லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது.

    இது தொடர்பாக வட்ட வழங்கல் அதிகாரி ஜெயபாண்டி விருதுநகர் உணவுப் பொருட்கள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பிரியா வழக்குப்பதிவு செய்து குடோன் உரிமையாளர் அய்யனார் என்பவரை பிடித்து விசாரணை நடத்தினார்.

    அப்போது அவர், சென்னையைச் சேர்ந்த ஒருவரிடம் குடோனை விலைக்கு வாங்கியதாகவும், பின்னர் தொழில் சரியாக நடத்த முடியாததால் குடோனை பூட்டியதாகவும் தெரிவித்தார்.

    மேலும் தென்காசி மாவட்டம், கடையநல்லூரைச் சேர்ந்த சதீஷ்குமார் என்பவருக்கு மாதம் ரூ.15 ஆயிரத்துக்கு குடோனை வாடகைக்கு விட்டதாக தெரிவித்தார்.

    இதையடுத்து போலீசார் சதீஷ்குமார் மற்றும் சிவகாசியைச் சேர்ந்த லாரி உரிமையாளர் முத்தையா ஆகிய 2 பேரையும் தேடி வருகின்றனர்.

    லாரியை பறிமுதல் செய்தபோது, அதில் 199 காலி அரிசி சாக்குகள் இருந்தது. இதனால் ரேசன் கடை ஊழியர்களுக்கும் இந்த சம்பவத்தில் தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.




    நேபாளத்தில் செப்டம்பர் 14-ந் தேதி நடைபெற உள்ள சர்வதேச சிலம்பப்போட்டியில் 12 மாணவ-மாணவிகள் கலந்து கொள்ள உள்ளனர்.
    விருதுநகர்:

    விருதுநகரை சேர்ந்த பரணி ராஜ், ஹரிபாலன், நிதார்த்தினி, லீதியாள், ருதிக்டானியல், சுஷ்மிதா, ஈழவளவன், பிரவீன்குமார், சூரியவர்தனன், திலக்கார்த்திக், விமலேஷ், தர்ஷனா ஆகிய 12 மாணவ-மாணவிகள் பஞ்சாப் அமிர்தசரசில் நடைபெற்ற தேசிய அளவிலான சிலம்ப போட்டியில் கலந்து கொண்டு முதலிடத்தை பெற்று வெற்றிக்கோப்பை பெற்றனர்.

    இந்தநிலையில் செப்டம்பர் 14-ந் தேதி நேபாளத்தில் சர்வதேச சிலம்பப்போட்டி நடைபெற உள்ளது. இதில் இந்த 12 மாணவ-மாணவிகளும் கலந்து கொள்ள உள்ளனர். இவர்கள் 12 பேரும் கலெக்டர் மேகநாதரெட்டியை நேரில் சந்தித்து தாங்கள் சர்வதேச போட்டியில் கலந்து கொள்ள தேவையான உதவிகளை செய்யுமாறு கேட்டுக் கொண்டனர். அவரும் உரிய உதவிகள் செய்ய ஏற்பாடு செய்வதாக தெரிவித்துள்ளார்.

    இவர்களுக்கு பயிற்சி அளித்த பயிற்சியாளர்கள் முத்துக்குமார் மற்றும் ஹரீஷ் கூறுகையில், இந்த 12 மாணவ - மாணவிகளும் சர்வதேச போட்டியில் கலந்து கொண்டால் நம் நாட்டிற்கு பெருமை சேர்க்கும் வகையில் தமிழக பாரம்பரிய விளையாட்டான சிலம்பத்தில் சர்வதேச அளவில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது என்றனர்.
    ×