என் மலர்tooltip icon

    வேலூர்

    • புகைப்படம் எடுப்பதற்காக ஒரு நபருக்கு ரூ.20 வீதம் வசூலிப்பதாக தகவல்
    • தொழிலாளர்கள் கூலித்தொகையில் பாதி பணமும் கேட்பதாக குற்றச்சாட்டு

    அணைக்கட்டு:

    அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட 51 ஊராட்சிகள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் 100 நாள் வேலை திட்டம் நடக்கிறது.

    இதில் தோளப்பள்ளி ஊராட்சியில் 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் 100 நாள் வேலை செய்கின்றனர்.

    இவர்களிடம் பணித்தள பொருப்பாளர்கள் மிரட்டி பணி செய்யும் போது புகைப்படம் எடுப்பதற்காக ஒரு நபருக்கு ரூ.20 வீதம் வசூலிப்பதாக கூறப்படுகிறது.

    மேலும் பணிக்கு வராத ஆட்களை வந்தது போல் வருகை பதிவேட்டில் பதிவு செய்ய, தொழிலாளர்கள் கூலித்தொகயைில் பாதி பணமும் கேட்பதாக, 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

    இந்நிலையில் தோளப்பள்ளி ஊராட்சிக்குபட்ட கடலை குளம் கிராமத்தில் நேற்று 100 நாள் வேலை திட்டம் நடைபெற இருந்தது.

    அப்போது வேலை செய்வது போல் புகபை்படம் எடுக்க, தொழிலாளர்களை ரூ.20 தரும்படி பணித்தளப் பொருப்பாளர்கள் கேட்டுள்ளனர்.

    இதனால் ஆத்திரமடைந்த தொழிலாளர்கள் நேற்று 100 நாள் வேலைக்கு செல்லாமல் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனையறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஊராட்சி மன்ற தலைவர் கல்பனா சுரேஷ் மற்றும் வேப்பங்குப்பம் போலீசார் தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    மேலும் இதுபோன்று தவறுகள் இனிமேல் நடக்காது என அதிகாரிகள் உறுதி அளித்ததை தொடர்ந்து அணைவரும் மீண்டும் ேவலைக்கு திரும்பி சென்றனர்.

    இந்த சம்பவம் நேற்று தோலப்பள்ளியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • ஆடி வெள்ளி விழா 21-ந் தேதி தொடங்கி ஆகஸ்டு 25-ந் தேதி வரை நடைபெறுகிறது.
    • 6 வெள்ளிக்கிழமைகளிலும் அகிலாண்டேஸ்வரிக்கு சிறப்பு அலங்காரம் நடக்கிறது.

    வேலூர் கோட்டை அகிலாண்டேஸ்வரி சமேத ஜலகண்டேஸ்வரர் கோவிலில் ஆடி வெள்ளி விழா வருகிற 21-ந் தேதி தொடங்கி ஆகஸ்டு மாதம் 25-ந் தேதி வரை நடைபெறுகிறது. அதன்படி 6 வெள்ளிக்கிழமைகளிலும் அகிலாண்டேஸ்வரிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடக்கிறது.

    அதன்படி 21-ந் தேதி முதல் வெள்ளிக்கிழமையன்று மஞ்சள் காப்பு அலங்காரம், 28-ந் தேதி குங்கும அலங்காரம், ஆகஸ்டு மாதம் 4-ந் தேதி புஷ்ப பாவாடை அலங்காரம், 11-ந் தேதி சந்தன காப்பு அலங்காரம், 18-ந் தேதி மீனாட்சி அலங்காரம், 25-ந் தேதி சந்தன காப்பு அலங்காரம் செய்யப்படுகிறது.

    மேலும் மழைவளம் பெருகி, தண்ணீர் பஞ்சம் நீங்க, கங்கா பாலார் ஈஸ்வரர் 23-வது ஆண்டு விழாவை முன்னிட்டு ஆகஸ்டு மாதம் 3-ந் தேதி காலையில் பஞ்சபூத மகா யாகம் நடக்கிறது.

    ஏற்பாடுகளை ஜலகண்டேஸ்வரர் தரும ஸ்தாபனம் செய்து வருகிறது.

    • மணப்பெண்ணை தாய் வீட்டார் சீர்வரிசை வைத்து மணமகன் இல்லத்தில் இருந்து தங்கள் வீட்டிற்கு அழைத்துச் செல்வது வழக்கம்.
    • ஆடி மாதம் முடியும் வரை தாய் வீட்டில் வைத்திருந்து, பிறகு ஒரு நல்லநாள் பார்த்து புகுந்த வீட்டிற்கு அனுப்பி வைப்பார்கள்.

    வேலூர்:

    வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம், காமாட்சி அம்மன் பேட்டை, பினாங்குகாரர் என்பவர் வீட்டில் சமீபத்தில் திருமணம் நடைபெற்றது. புதிதாக திருமணமான, ஓராண்டுக்கு உள்ளான, மணப்பெண்ணை தாய் வீட்டார் சீர்வரிசை வைத்து மணமகன் இல்லத்தில் இருந்து தங்கள் வீட்டிற்கு அழைத்துச் செல்வது வழக்கம். ஆடி மாதம் முடியும் வரை தாய் வீட்டில் வைத்திருந்து, பிறகு ஒரு நல்லநாள் பார்த்து புகுந்த வீட்டிற்கு அனுப்பி வைப்பார்கள்.

    அதன்படி, பள்ளிகொண்டாவை சேர்ந்த பெண் வீட்டார் வரும் 17-ந் தேதி ஆடி மாதம் பிறப்பதை முன்னிட்டு, பிறந்தவீட்டு சீர் வரிசையாக ஆப்பிள், அன்னாசிப் பழம், மாம்பழம், வாழைப்பழம் போன்றவற்றின் வரிசையில், தற்போது விலை உயர்வால் மவுசுக்குள்ளாகி போன தக்காளிப் பழத்தையும் வைத்து பெண்ணை அழைத்துச் சென்றனர்.

    இதர பழங்களுடன் தக்காளிப்பழமும் சீர்வரிசை தட்டில் இடம்பெற்றிருந்தது வியப்பாக இருந்தது.

    • கணவர் புகார்
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    வேலூர் அடுத்த சின்ன பாலம் பாக்கம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தசரதன் (வயது 30). லாரி டிரைவர். இவரது மனைவி ரேவதி (29). கடந்த 10-ந் தேதி தசரதன் வேலைக்கு சென்று இருந்தார்.

    பின்னர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது மனைவியும் மகளையும் காணவில்லை. அவர்களை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால் இது குறித்து தாலுகா போலீசில் புகார் செய்தார்.

    போலீசார் வழக்கு பதிவு செய்து ரேவதி மற்றும் அவரது மகளை தேடி வருகின்றனர்.

    • காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடக்கிறது
    • மின்வாரிய செயற்பொறியாளர் தகவல்

    வேலூர்:

    வேலூர் மின்பகிர்மான வட்டத்தை சேர்ந்த வேலூர், இறைவன்காடு ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர அத்தியாவசிய மின்சாதன பராமரிப்பு பணிகள் நாளை (சனிக்கிழமை) நடக்கிறது.

    இதனால் நாளை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை புதிய பஸ் நிலையம், பைபாஸ் ரோடு, தோட்டப்பாளையம், பழைய பஸ் நிலையம், வேலூர் டவுன் பஜார், சலவன்பேட்டை, அண்ணாசாலை, அப்துல்லாபுரம், கிருஷ்ணாநகர், பிஷப்டேவிட்நகர், கஸ்பா, ஊசூர், கொணவட்டம், சேண்பாக்கம் மற்றும் விருதம்பட்டு, செங்காநத்தம் ரோடு, கொசப்பேட்டை அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும். வல்லண்டராமம், விரிஞ்சிபுரம், இறைவன்காடு, செதுவாலை, கந்தனேரி, மருதவல்லிபாளையம், அன்பூண்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

    இந்த தகவலை செயற்பொறியாளர் ஆரோக்கியராஜ் தெரிவித்துள்ளார்.

    • கிராம நிர்வாக அலுவலகத்தில் விழிப்புணர்வு
    • பிளாஸ்டிக்கை பயன்படுத்த மாட்டோம் என்று உறுதி மொழி

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம், ஊசூர் அடுத்த அத்தியூர் கிராம நிர்வாக அலுவலகத்தில் தேசிய காகித பைகள் தினம் அனுசரிக்கப்பட்டது.

    அதன்படி கிராம நிர்வாக அலுவலர் சங்கர்தயாளன், பிளாஸ்டிக் பயன்படுத்தினால் ஏற்படும் தீமைகள், காகிதப்பையின் நன்மைகள் மற்றும் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

    மேலும் வருவாய்த் துறையில் வழங்கப்படும் முதல் பட்டதாரி சான்று, சிறுகுறு விவசாயி சான்று, அடங்கல் உள்ளிட்டவைகளையும் கிராம நிர்வாக அலுவலர், காகிதப்பையில் போட்டு வழங்கினார்.

    அப்போது அத்தியூர் கிராமத்தில் கடை நடத்தி வரும் வியாபாரிகளும், இனி நாங்கள் பிளாஸ்டிக்கை பயன்படுத்த மாட்டோம், காகிதப் பையை மட்டுமே பயன்படுத்தவும் என்று உறுதி மொழி எடுத்துக்கொண்டனர்.

    • 186 எச்.ஐ.வி. பரிசோதனை மையங்கள் மூட எதிர்ப்பு
    • மாநில தலைவர் தகவல்

    வேலூர்:

    தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தின் கீழ், தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் 377 எச்.ஐ.வி. பரிசோதனை செய்யும் நம்பிக்கை மையங்கள் செயல்பட்டு வருகிறது.

    அரசு மருத்துவ கல்லூரி, அரசு மருத்துவமனைகள் ,நகர்புற சுகாதார மையங்கள் மற்றும் தொழிலாளர் ஈட்டுறுதி மருத்துவமனைகளில் செயல்பட்டு

    வரும் இந்த எச்.ஐ.வி. நம்பிக்கை மையங்களில், 186 எச்.ஐ.வி. பரிசோதனை மையங்களை மூட மத்திய அரசு சுற்றரிக்கை வெளியிட்டுள்ளது.

    அதன்படி வேலூர் மாவட்டத்தில் 5 அரசு மருத்துவமனைகளில் நம்பிக்கை மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

    இதில் வேலூர் நகர்புற மருத்துவமனை மற்றும் மாவட்ட காசநோய் மையம் ஆகியவற்றில் செயல்படும் நம்பிக்கை மையங்களை மூட உள்ளதாக கூறப்படுகிறது.

    இதனை மூடினால் வேலூர் நகரில் எச்.அய்.வி பரிசோதனைக்கு வரும் மக்கள் மிகவும் பாதிப்படைவார்கள்.

    எனவே நம்பிக்கை மையங்களை மூடும் முடிவை மத்திய, மாநில அரசுகள் கைவிடவேண்டும் என தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அனைத்து ஊழியர்கள் நலச்சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்து குறித்து தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு ஊழியர்கள் நலச்சங்கத்தின் மாநில தலைவர் மு.ஜெயந்திகூறியதாவது:-

    தமிழகத்தில் 186 மையங்களை மூட வேண்டும் என தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாடு நிறுவனம் சுற்றரிக்கை கடந்த 5-ந் தேதி அனுப்பி இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

    இதனால் தமிழகத்தில் எய்ட்ஸ் கட்டுப்பாடு திட்டம் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எய்ட்ஸ் நோயாளிகளும் மிகுந்த பாதிப்பு அடைவார்கள்.

    தமிழகத்தில் எச்.ஐ.வி. தொற்றும் அதிகமாக பரவும் அபாயம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

    தமிழகத்தில் அனைத்து கர்ப்பிணிகளுக்கும் ஒருங்கிணைந்த ஆலோசனை மற்றும் பரிசோதனை மையங்களில் கட்டாயம் எய்ட்ஸ் பரிசோதனை செய்யப்படுகிறது.

    எச்.ஐ.வி. பரிசோதனை மையங்களை குறைத்தால் மீண்டும் தமிழகத்தில் எச்.ஐ.வி. தொற்று அதிகரிக்கும்.

    எனவே மத்திய, மாநில அரசுகள் இந்த திட்டத்தை கைவிடக்கோரி வருகிற 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் சென்னையில் அனைத்து கட்சி தலைவர்களையும் சந்தித்து மனு கொடுக்க உள்ளோம். மேலும்வருகிற 27-ந் தேதி அனைத்து கலெக்டர் அலுவலகங்கள்முன்பு மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

    • தீயணைப்பு துறையினர் மீட்டனர்
    • வீட்டினுள் பாம்பு வந்ததால் அச்சமடைந்தனர்

    அணைக்கட்டு:-

    ஒடுகத்தூர் அடுத்த ஓட்டேரிபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் கலா. இவரது வீட்டில் நாகபாம்பு ஒன்று நுழைந்துள்ளது.

    இதனை கவனிக்காத கலா வழக்கம்போல் வீட்டு வேலைகளை செய்து கொண்டிருந்தனர். அப்போது, கலா வீட்டினுள் பாம்பு ஊர்ந்து சென்றதை திடீரென பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

    இதுகுறித்து ஒடுகத்தூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

    விரைந்து வந்த தீயணைப்பு துறை நிலைய அலுவலர் சரவணன் தலைமையிலான வீரர்கள் வீட்டில் புகுந்த நாகபாம்பை பிடித்து அருகே உள்ள காப்பு காட்டில் விட்டனர்.

    • 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்
    • வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது

    அணைக்கட்டு:

    அணைக்கட்டு ஒன்றியம் , பீஞ்சமந்தை ஊராட்சிக்கு

    உட்பட்ட குண்ராணி மலைகிராமத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் கல்வி விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு மினி மாரத்தான் ஓட்டப் பந்தயம் நேற்று நடந்தது.

    நிகழ்ச்சிக்கு வட்டார கல்வி அலுவலர் குமரன், குண்ராணி தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் ஜோசப் அன்னையா ஆகியோர் தலைமை தாங்கினார். ஜார்த்தான் கொல்லை ஊராட்சி மன்ற தலைவர் லதா ராஜசேகர், பீஞ்சமந்தை ஊராட்சி மன்ற தலைவர் ரேகா ஆனந்தன், மலையாளி பேரவை சங்க செயலாளர் சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பீஞ்சமந்தை உயர் நிலைப்பள்ளி தலைமையாசிரியர் கோபி வரவேற்றார்.

    வட்டார கல்வி மேற்பார்வையாளர்கள் மகேஸ்வரி, கங்கா கவுரி, சாந்தி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மணிமொழி, ரோட்டரி ஆளுநர் பரணிதரன் ஆகியோர் கலந்து கொண்டு கல்வி விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டத்தை கொடியசைத்து தொடங்கி வைத்து பேசினர். இதில் பிஞ்சமந்தை, ஜார்த்தான் கொள்ளை, பாலாம்பட்டு ஆகிய மலை ஊராட்சிகளில் உள்ள அரசு பள்ளி மாணவர்கள் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஓடினர். குண்ராணி தொடக்கப்பள்ளியில் தொடங்கிய இந்த மாரத்தான் ஓட்டம் சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பீஞ்சமந்தை அரசு உயர்நிலைப்பள்ளியில் முடிவடைந்தது. மாரத்தானில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

    • பிரம்மோற்சவ விழா 22-ந் தேதி வரை நடைபெற உள்ளது
    • 22-ந்தேதி ஆடிப்பூர தீர்த்தவாரி நடக்கிறது.

    வேலூர் கோட்டை வளாகத்தில் அகிலாண்டேஸ்வரி சமேத ஜலகண்டேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலின் 4-வது மகா கும்பாபிஷேகம் கடந்த மாதம் 25-ந் தேதியும், அதைத்தொடர்ந்து மண்டல பூஜையும் நடைபெற்றது. இந்த நிலையில் 25-ம் ஆண்டு ஆடிப்பூர பிரம்மோற்சவ விழா நேற்று காலை 8 மணியளவில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்கள்.

    பிரம்மோற்சவ விழா வருகிற 22-ந் தேதி வரை நடைபெற உள்ளது. தினமும் காலையில் பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகமும், மாலையில் சிறப்பு அலங்காரம், தீபாராதனையும் நடைபெறும். விழாவின் நிறைவு நாளான 22-ந் தேதி காலை 6.30 மணிக்கு ஆடிப்பூர தீர்த்தவாரி, 10.30 மணிக்கு அம்பாள் அபிஷேகம், வளையல் சாற்றுதல், அர்ச்சனை, தீபாராதனை ஆகியவை நடைபெற உள்ளது.

    இதற்கான ஏற்பாடுகளை ஜலகண்டேஸ்வரர் தரும ஸ்தாபனத்தினர் செய்துள்ளனர்.

    • ரெயில் என்ஜின் டிரைவருக்கு பயணிகள் தகவல் தெரிவித்தனர்.
    • 15 நிமிடம் கால தாமதமாக டபுள் டக்கர் ரெயில் பெங்களூரை நோக்கி புறப்பட்டு சென்றது.

    ஜோலார்பேட்டை:

    சென்னையில் இருந்து பெங்களூர் செல்லும் டபுள் டக்கர் ரெயில் இன்று காலை புறப்பட்டு வந்தது. வேலூர் மாவட்டம் விரிஞ்சிபுரம்-குடியாத்தம் இடையே வேகமாக சென்று கொண்டிருந்தது.

    அப்போது ரெயிலில் சி 6 ஏ.சி. பெட்டியின் சக்கரத்தில் இருந்து திடீரென புகை வந்தது. இது சி7 பெட்டிக்கு பரவியது. இதனால் பயணிகள் அச்சமடைந்தனர்.

    ரெயில் என்ஜின் டிரைவருக்கு பயணிகள் தகவல் தெரிவித்தனர். உடனடியாக என்ஜின் டிரைவர் ரெயிலை நிறுத்தினார்.

    இதுகுறித்து குடியாத்தம் ரெயில்வே ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் வந்து பார்த்தபோது பிரேக் பழுதானதால் சக்கரத்தில் இருந்து புகை வந்தது தெரிந்தது.

    பின்னர் ஊழியர்கள் அதனை சரி செய்தனர். இதனால் 15 நிமிடம் கால தாமதமாக டபுள் டக்கர் ரெயில் பெங்களூரை நோக்கி புறப்பட்டு சென்றது. இந்த சம்பவத்தால் பயணிகள் இடையே பரபரப்பு ஏற்பட்டது. 

    • குட்கா தொடர்பாக 226 வழக்குகள் பதிவு
    • போலீசார் 49 பேரை பாராட்டி சான்றிதழ்களை டி.ஐ.ஜி. வழங்கினார்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில், தமிழ்நாடு காவல்துறையின் 'இமைகள் திட்டம்' (பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை காப்பாற்றுதல்) குறித்த கருத்தரங்கம் நேற்று நடைபெற்றது.

    கருத்தரங்கத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி தலைமை தாங்கினார். கருத்தரங்கில் வேலூர் சரக டி.ஐ.ஜி முத்துசாமி கலந்து கொண்டு பேசினார். இதனை தொடர்ந்து டி.ஐ.ஜி. முத்துசாமி கூறியதாவது:-

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த 6மாதத்தில் நடத்தப்பட்ட கள்ளசாரயம், கஞ்சா மற்றும் போதை பொருட்கள் ஒழிப்பு மற்றும் விற்பனை தடுப்பு என மொத்தமாக 154 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 176 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இதில் 64 கிலோ கஞ்சா மற்றும் 7 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. குட்கா தொடர்பாக 226 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 216 நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

    இதில் 1,421 கிலோ குட்கா மற்றும் 5வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    கள்ளசாராயம் தொடர்பாக 1,768 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 1,065லிட்டர் கள்ளசாராயம் மற்றும் 3,552 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது.

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த 6 மாதத்தில் ரவுடிகள்-4பேர், வழிப்பறி மற்றும் திருட்டு குற்றங்களில்-8பேர், கஞ்சா மற்றும் குட்கா வழக்குகளில்-11பேர், பாலியல் குற்றவாளிகள்-2, கள்ளச்சாரயம் விற்பனை வழக்கில் ஒருவர் என மொத்தம் 26 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    இவ்வாறு டி.ஐ.ஜி முத்துசாமி தெரிவித்தார்.

    இதனை தொடர்ந்து பல்வேறு குற்ற வழக்குகளில் சிறப்பாக பணிபுரிந்த இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் என -14 பேருக்கும், 35 போலீசார் என 49 பேரை பாராட்டி சான்றிதழ்களை டி.ஐ.ஜி முத்துசாமி வழங்கினார்.

    இதில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு விஸ்வேஸ்வரய்யா, ஏ.எஸ்.பி யாதவ் கிரிஷ் அசோக், டி.எஸ்.பிக்கள் பிரபு, ரவிசந்திரன், சுரேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.

    ×