என் மலர்
உள்ளூர் செய்திகள்

எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க ஊழியர்கள் 27-ந் தேதி ஆர்ப்பாட்டம்
- 186 எச்.ஐ.வி. பரிசோதனை மையங்கள் மூட எதிர்ப்பு
- மாநில தலைவர் தகவல்
வேலூர்:
தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தின் கீழ், தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் 377 எச்.ஐ.வி. பரிசோதனை செய்யும் நம்பிக்கை மையங்கள் செயல்பட்டு வருகிறது.
அரசு மருத்துவ கல்லூரி, அரசு மருத்துவமனைகள் ,நகர்புற சுகாதார மையங்கள் மற்றும் தொழிலாளர் ஈட்டுறுதி மருத்துவமனைகளில் செயல்பட்டு
வரும் இந்த எச்.ஐ.வி. நம்பிக்கை மையங்களில், 186 எச்.ஐ.வி. பரிசோதனை மையங்களை மூட மத்திய அரசு சுற்றரிக்கை வெளியிட்டுள்ளது.
அதன்படி வேலூர் மாவட்டத்தில் 5 அரசு மருத்துவமனைகளில் நம்பிக்கை மையங்கள் செயல்பட்டு வருகின்றன.
இதில் வேலூர் நகர்புற மருத்துவமனை மற்றும் மாவட்ட காசநோய் மையம் ஆகியவற்றில் செயல்படும் நம்பிக்கை மையங்களை மூட உள்ளதாக கூறப்படுகிறது.
இதனை மூடினால் வேலூர் நகரில் எச்.அய்.வி பரிசோதனைக்கு வரும் மக்கள் மிகவும் பாதிப்படைவார்கள்.
எனவே நம்பிக்கை மையங்களை மூடும் முடிவை மத்திய, மாநில அரசுகள் கைவிடவேண்டும் என தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அனைத்து ஊழியர்கள் நலச்சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்து குறித்து தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு ஊழியர்கள் நலச்சங்கத்தின் மாநில தலைவர் மு.ஜெயந்திகூறியதாவது:-
தமிழகத்தில் 186 மையங்களை மூட வேண்டும் என தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாடு நிறுவனம் சுற்றரிக்கை கடந்த 5-ந் தேதி அனுப்பி இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
இதனால் தமிழகத்தில் எய்ட்ஸ் கட்டுப்பாடு திட்டம் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எய்ட்ஸ் நோயாளிகளும் மிகுந்த பாதிப்பு அடைவார்கள்.
தமிழகத்தில் எச்.ஐ.வி. தொற்றும் அதிகமாக பரவும் அபாயம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
தமிழகத்தில் அனைத்து கர்ப்பிணிகளுக்கும் ஒருங்கிணைந்த ஆலோசனை மற்றும் பரிசோதனை மையங்களில் கட்டாயம் எய்ட்ஸ் பரிசோதனை செய்யப்படுகிறது.
எச்.ஐ.வி. பரிசோதனை மையங்களை குறைத்தால் மீண்டும் தமிழகத்தில் எச்.ஐ.வி. தொற்று அதிகரிக்கும்.
எனவே மத்திய, மாநில அரசுகள் இந்த திட்டத்தை கைவிடக்கோரி வருகிற 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் சென்னையில் அனைத்து கட்சி தலைவர்களையும் சந்தித்து மனு கொடுக்க உள்ளோம். மேலும்வருகிற 27-ந் தேதி அனைத்து கலெக்டர் அலுவலகங்கள்முன்பு மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.






