என் மலர்tooltip icon

    வேலூர்

    • புரட்டாசி முதல் சனிக்கிழமையொட்டி நடந்தது
    • பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்

    வேலூர்:

    புரட்டாசி மாதத்தின் முதல் சனிக்கிழமையான இன்று பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    வேலூர் அண்ணா சாலையில் உள்ள திருமலை, திருப்பதி தேவஸ்தான தகவல் மையத்தில் உள்ள பெருமாள் கோவில், வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவில், காட்பாடி சாலையில் உள்ள ஸ்ரீதேவி, பூதேவி சமேத கல்யாண வெங்கடேச பெருமாள், மெயின் பஜாரில் உள்ள வெங்கடேச பெருமாள், பள்ளிகொண்டா உத்திர ரங்கநாதர் கோவில், வேலப்பாடியில் உள்ள வரதராஜ பெருமாள் கோவில்களில் சாமிக்கு சிறப்பு அலங்காரம், பூஜைகள் செய்யப்பட்டிருந்தன.

    சோளிங்கரில் உள்ள லட்சுமி நரசிம்மர் கோவிலில் அதிகாலை மூலவர்களுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மலர் அலங்காரம் செய்யப்பட்டது. அதிகாலை முதல் பக்தர்கள் அதிக அளவில் குவிந்து சாமி தரிசனம் செய்தனர்.

    குடியாத்தத்தை அடுத்த மீனூர்மலை வெங்கடேச பெருமாள் கோவிலில் ராஜ அலங்காரத்தில் மூலவர் பக்தர்களுக்கு காட்சியளித்தார் அதேபோல் பத்மாவதி தாயார் சந்தன காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி யளித்தார் காலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

    குடியாத்தம் பிச்சனூர் தென்திருப்பதி ஸ்ரீ தேவி, பூதேவி சமேத ரங்கநாதர், பத்மாவதி சமேத வெங்கடேச பெருமாள் கோவிலிலும் புரட்டாசி சனிக்கிழமையையொட்டி மூலவர் வெங்கடேச பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    கீழ்அரசம்பட்டு அருகே உள்ள சிங்கிரிகோவில் லட்சுமி நரசிம்மர் கோவிலில் அதிகாலை மூலவர்களுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மலர் அலங்காரம் செய்யப்பட்டது. அதிகாலை முதல் பக்தர்கள் அதிக அளவில் குவிந்து சாமி தரிசனம் செய்தனர்.

    பிரம்மபுரம் சஞ்சீவிராயர் மலையில் உள்ள பிரசன்ன வெங்கடேச பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. பெரு மாளுக்கு மலர்களாலும், வெள்ளி கவசத்தாலும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

    கே.வி.குப்பத்தை அடுத்த மேல்காவனூர் பத்மாவதி தாயார் சமேத திருவேங்கடம் உடையான் கோவிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமையை யொட்டி மூலவருக்கு அபிஷேகம், சிறப்பு ராஜஅலங்காரம், ஆராதனை ஆகியவை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • தடுப்பு சுவர் மீது மோதி விபத்துக்குள்ளானது
    • போலீசார் விசாரணை

    அணைக்கட்டு:

    சென்னை பூந்தமல்லி பகுதியைச் சேர்ந்தவர் பிரமேத்குமார் (வயது 25). இவர் பெங்களூரில் இருந்து சென்னை நோக்கி நேற்று இரவு தனது பைக்கில் சென்றார்.

    அகரம்சேரி அருகே சென்றபோது பைக் நிலை தடுமாறி மேம்பால தடுப்பு சுவர் மீது மோதி விபத்துக்குள்ளானது.

    இதில் தூக்கி வீசப்பட்ட பிரமேத்குமார் பலத்த காயமடைந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து பள்ளிகொண்டா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஆர்வமுடன் வாக்களித்த மாணவர்கள்
    • நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம், ஊசூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை சுமார் 270 மா ணவர்கள் படிக்கின்றனர்.

    இதில் மாணவர்களின் தலைமைப் பண்பை வளர்க்கும் நோக்கத்திலும், இந்திய நாடாளுமன்ற அமைப்பு முறையை தெரிந்து கொள்ளும் வகையிலும் மாணவர்க ளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த மாதிரி தேர்தல் நடத்தப்பட்டது.

    அதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 2 நாட்களுக்கு முன்பு நடந்ந்தது. இதில் 12 மாணவர்கள் விருப்பப்பட்டு மனுதாக்கல் செய்தனர்.

    போட்டியாளர்களுக்கு சின்னமும் ஒதுக்கப்பட்டு, பிரச்சா ரங்களும் நடைப்பெ ற்றன. கண்கண்ணாடி, ஆட்டோ, கிரிக்கெட் மட்டை, தொப்பி, சீப்பு உள்ளிட்ட சின்னங்கள் இடம் பெற்றிருந்தது.

    மாணவர்கள் போட்டி போட்டுக் கொண்டு சக மாணவர்களிடம் தங்களுக்கான வாக்குகளை சேகரித்தனர்.

    இதனைத் தொடர்ந்து நேற்று பள்ளியில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் பள்ளி மாணவர்கள் ஒன்றன்பின் ஒன்றாக வரிசையில் நின்று ஓட்டு போட்டனர்.

    100 சதவீதம் வாக்குகள் பதிவான நிலையில் வாக்கு பெட்டிகளை பாதுகாப்பாக பள்ளியில் வைத்து பூட்டப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து நாளை மறுநாள் திங்கள்கிழமை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

    வாக்கு எண்ணிக்கை முடிந்தவுடன் அமைச்சரவை எப்படி அமைப்பது என்பது குறித்து பள்ளி மாணவர்களுக்கிடையே விழிப்புணர் ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

    மேலும் போட்டியில் வெற்றி பெறுவோர் சுற்றுப்புற தூய்மை, சுற்றுச்சூழல், இறைவணக்க கூட்டம், கழிவறை பராமரிப்பு பணிகளை கண்காணித்தல், காலை உணவு மற்றும் மதிய உணவுகளை அளித்தல் உள்ளிட்ட பணிகளுக்கு தலைவராக்க ஆசிரியர்கள் திட்டமிட்டுள்ளனர்.

    இதற்கான ஏற்பாடுகளை பள்ளி தலைமை ஆசிரியை சோபனா, பட்டதாரி ஆசிரியை ரமாதேவி, ஆசிரியர்கள் ரோஸ்லின், சிவகுமார் ஆகியோர் செய்திருந்தனர்.

    • புதிய பஸ் நிலையம் அருகே உள்ள லட்சுமி நரசிம்மர் கோவிலில் பெருமாள் வடிவில் இருந்த பப்பாளி பழத்தை சாமி அருகே வைத்தனர்.
    • அதிசய பப்பாளி பழத்தை ஏராளமான பக்தர்கள் கண்டு ரசித்து வருகின்றனர்.

    வேலூர்:

    வேலூர் முத்து மண்டபம் பகுதியை சேர்ந்தவர் ரங்கநாதன். பழ வியாபாரி.

    இவர் தினமும் வேலூர் அடுத்த அப்புக்கல்லில் உள்ள விவசாய நிலங்களுக்கு சென்று பப்பாளி பழங்களை வாங்கி வந்து வியாபாரம் செய்து வருகிறார்.

    நேற்று மாலை ரங்கநாதன் விற்பனைக்காக ஏராளமான பப்பாளி பழங்களை கொண்டு வந்தார்.

    இன்று காலை பப்பாளி பழங்களை தரம் பிரித்த போது அதில் இருந்த ஒரு பப்பாளி பழம் பெருமாள் உருவத்தில் இருந்தது. இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் பப்பாளி பழத்துக்கு நாமம் இட்டு பூக்களை வைத்து பூஜைகளை செய்தனர்.

    பின்னர் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள லட்சுமி நரசிம்மர் கோவிலில் பெருமாள் வடிவில் இருந்த பப்பாளி பழத்தை சாமி அருகே வைத்தனர்.

    இந்த அதிசய பப்பாளி பழத்தை ஏராளமான பக்தர்கள் கண்டு ரசித்து வருகின்றனர்.

    புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையான இன்று பெருமாள் வடிவில் பப்பாளி பழம் இருந்தது அப்பகுதி மக்களிடையே பரவசத்தை ஏற்பத்தியது.

    • கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தகவல்
    • வருகிற 3-ந் தேதிக்குள் சமர்ப்பிக்கலாம்

    வேலூர்:

    வேலூர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை, 30.03.2022-ல் தொழிற் பயிற்சி நிலையங்களில் பயிற்சி முடித்துச் செல்லும் திறன் பெற்ற பயிற்சியாளர்கள் மேற்படிப்பினை தொடர 10-ம் வகுப்பு மற்றும் 12- ம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் வழங்க ஆணையிடப்பட்டுள்ளது.

    இணையான சான்றிதழ்கள் பெற நிலையான வழிகாட்டுதல்கள் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

    தற்போது அகில இந்திய தொழிற் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில், தமிழக பள்ளி கல்வி துறையின் கீழ் நடத்தப்பட்ட மொழித்தேர்வில் தனித்தேர்வர்களாக கலந்து கொண்டு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் பெற தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து உரிய கல்வி சான்றிதழ்களை இணைத்து மாவட்டத்தில் உள்ள நோடெல் தொழிற் பயிற்சி நிலையத்தில் நேரிலோ அல்லது தபால் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

    விண்ணப்பத்தினை ஆய்வு செய்து தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு அரசு தேர்வுகள் இயக்ககத்தில் இருந்து தகுதிக்கேற்ப 10-ம் வகுப்பு 12-ம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் பெற்று இத்துறையால் வழங்கப்படும். விண்ணப்பம் மற்றும் உரிய கல்விச்சான்றிதழ்களுடன் வேலூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் வருகிற 3-ந் தேதிக்குள் சமர்ப்பிக்கலாம்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • பெண்களுக்கு 33 சதவீதம்
    • மகளிர் அதிகாரம் பெற்றால் நாடு உயரும்

    வேலூர்:

    த.மா.கா. மகளிரணி துணை தலைவி வீ.கீதா தேச பக்தன் கூறியிருப்பதாவது:-

    ஜவஹர்லால் நேரு, மொராஜ் தேசாய், வாஜ்பாய் மற்றும் இந்திரா காந்தி போன்ற பிரதமர்கள் 33 சதவீதம் பெண்களுக்கு இட ஒதுக்கீடு செய்து சட்டம் கொண்டு வர முடியாத காலத்தில் பாரத பிரதமர் ராஜீவ் காந்தி பஞ்சாயத்து ராஜ்ஜியம் திட்டத்தில் பெண்களுக்கு 33 சதவீதம் வழங்கியும் பாராளுமன்ற ராஜசபையிலும் நிறைவேற்ற வாய்ப்பில்லாமல் போய்விட்டது.

    ஆனால் எதிர்க்கட்சிகளுடைய ஒற்றுமையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் புதிய பாராளுமன்ற அரங்கத்தில் பெண்களுக்கு 33 சதவீதம் சட்டத்தில் கொண்டு வந்து பெருமை சேர்த்து்ளார்.

    மகளிர் அதிகாரம் பெற்றால் நாடு உயரும். உலக அரங்கில் பாரத நாடு பெருமை பெறும். மேலும் பாரத பிரதமர் நரேந்திர மோடிமீண்டும் பிரதமராக வரவேண்டும். இந்நாளில் தமிழ் மக்களின் சார்பாகவும் தமிழ் மாநில காங்கிரஸ் மகளிர் அணி சார்பாகவும் நன்றி.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • கடனுதவியோடு இணைந்த மானியம் வழங்கப்படும்
    • கலெக்டர் தகவல்

    வேலூர்:

    வேலூர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் பட்டியலின மற்றும் பழங்குடியின தொழில் முனைவோருக்கான சிறப்பு திட்டமான அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் இவ்வாண்டு முதல் செயல்ப டுத்தப்பட்டு வருகிறது.

    இத்திட்டத்தின் கீழ், ஆர்வமுள்ள தொழில்முனைவோர் உற்பத்தி, வாணிகம் மற்றும் சேவை சார்ந்த எந்தத் தொழில் திட்டத்துக்கும் கடனுதவியோடு இணைந்த மானியம் வழங்கப்படும்.

    உணவுப்பதப்படுத்தல், தானியங்கி உதிரி பாகங்கள் உற்பத்தி ஆயத்த ஆடைகள் தைத்தல், வாணிகப் பொருட்களின் மொத்த மற்றும் சில்லறை விற்பனை, அழகு நிலையம், உடற்பயிற்சிக் கூடம், டிராவல்ஸ், காங்கிரீட் மிக்சர், ஆம்புலன்ஸ் ரிக் போரிங், ரெப்ரிஜரேட் ட்ரக் உள்ளிட்ட திட்டமாகவும் இருக்கலாம்.

    மானியம் மொத்த திட்டத் தொகையில் 35 சதவீதம் உச்ச வரம்பு ரூ.150 கோடி வரை வழங்கப்படும். திட்டத் தொகையில் 65 சதவீதம் வங்கிக் கடனாக வழங்க வழிவகை செய்யப்பட்டு 35 சதவீதம் அரசின் பங்காக முன்முனை மானியம் வழங்கப்படும்.

    கடன் திரும்பச் செலுத்தும் காலம் முழுதும் 51சதவீதம் வட்டி மானியமும் வழங்கப்படும், வயது வரம்பு 18 முதல் 55 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விண்ணப்பதாரர்களுக்கு கல்வித் தகுதி தேவையில்லை.

    பட்டியலின மற்றும் பழங்குடியின பிரிவைச் சேர்ந்த எந்தத் தனி நபரும் மற்றும் பங்குதாரர் கூட்டாண்மை, பிரைவேட் லிமிடெட் நிறுவனங்களும் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறலாம்.

    இத்திட்டத்தின் கீழ் பயன்பெற திட்ட அறிக்கை மற்றும் ஆவணங்களுடன் www.msmeonlinetn.gov.in என்ற தளத்தில் இணைய வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.

    மேலும் விவரங்களுக்கு வேலூர், காந்திநகர், காங்கேயநல்லூர் சாலையில் உள்ள மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் அல்லது 0418-2242512, 2242413 என்ற தொலைபேசி எண் வாயிலாகவோ தொடர்பு கொள்ளலாம்.

    இத்திட்டம் தொடர்பான விழிப்புணர்வுக் கூட்டம் கலெக்டர் தலைமையில் வருகிற 26-ந் தேதி காலை 10.30 மணிக்கு காயிதே மில்லத் கூட்ட அரங்கம் கலெக்டர் வளாகத்தில் நடைபெற வுள்ளது.

    ஆர்வமுள்ள பட்டியலின மற்றும் பழங்குடியின பிரிவைச் சேர்ந்த தொழில்மு னைவோர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

    • வி.ஐ.டி.யில் அறிவுசார் தொழில்நுட்ப திருவிழா
    • அறிவியல் தொழில்நுட்ப தலைவர் அனுஜ் பல்லா பேச்சு

    வேலூர்:

    விஐடி பல்கலைக்க ழகத்தில் 14-வது ஆண்டாக அறிவுசார் தொழில்நுட்பத் திருவிழா இன்று தொடங்கியது.

    இதில் 150 க்கும் மேற்பட்டதொழில்நுட்ப பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்படுகிறது.

    அறிவுசார் திருவிழா

    இதில் 13000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொள்கின்றனர்.இந்த போட்டியில் சிறப்பான படைப்புகளுக்கு ரூ.20 லட்சம் மதிப்புள்ள பரிசு பொருள்கள் வழங்கப்பட உள்ளது.

    அறிவு சார் தொழில்நுட்ப திருவிழாவை வி.ஐ.டி. வேந்தர் விசுவநாதன் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது,

    வி.ஐ.டி.யில் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் 60 நாடுகளில் இருந்து படித்து வருகிறார்கள்.

    கடந்தாண்டு 400-க்கும் மேற்பட்ட தேசிய, சர்வதேச நிறுவனங்களில் இருந்து மாணவர்கள் வேலை வாய்ப்பு பெற்றனர். இந்தியாவில் அரசு பள்ளிகளில் 14 வயது வரை இலவச கல்வி அளிக்கப்படுகிறது.

    ஆனால் தனியார் பள்ளிகளில் இலவச கல்வி அளிக்கப்படுவதில்லை.உலகின் உள்ள 25 நாடுகளில் பல்கலைக்கழக அளவில் கல்வி இலவசமாக அளிக்கப்படுகிறது.

    குறிப்பாக ஜெர்மெனியில் வெளிநாட்டு மாணவர்களும் உயர்கல்வி இலவசமாக பெற இயலும்.தற்போது மாணவர்களாகிய நீங்கள் இங்கு அமர்ந்துள்ளீர்கள் என்றால்அதற்கு உங்கள் பெற்றோர்களே காரணம். அனைவருக்கும் உயர் கல்வி அறக்கட்டளை மூலமாக 8 ஆயிரம் மாணவர்கள் உயர் கல்வி படிக்கின்றனர்.

    உயர்கல்வி

    தமிழ்நாடு உயர்கல்வி பயிலும் மாணவர்கள் விகிதத்தில் 50 சதவீதத்தை தாண்டி உள்ளது.

    இந்தியாவிலேயே உயர் கல்வி பெறுவதில் பீகார் மிகவும் பின்தங்கி உள்ளது.இதில் மத்திய அரசு கவனம் செலுத்த வேண்டும்.இந்தியாவில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது.

    அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கு அதிக முக்கியத்துவம் அளித்து அதற்கு அதிகளவில் பணம் செலவு செய்ய வேண்டும்.

    உலகிலேயே கல்விக்கு அதிகமாக செலவு செய்யக்கூடிய நாடு இஸ்ரேல். தற்போது இந்தியா கண்டுபிடிப்புகளில் 46-வது இடத்தில் உள்ளது.உலக அளவில் பொருளா தாரத்தில் 5-வது இடத்தில் உள்ளது.நாம் தற்போது தொழில் துறையில் வளர்ந்துள்ளோம்.அனைவரும் உயர் கல்வி பெறவேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    பொருளாதார வளர்ச்சி

    சிறப்பு விருந்தினராக பங்கேற்ற இந்திய அரசின் அறிவியல் தொழில் நுட்ப தலைவர் அனுஜ் பல்லா பேசியதாவது:-

    உக்ரைன் போரால் ஐரோப்பாவில் தகவல் தொழில்நுட்பம் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் அமெரிக்காவிலும் வீட்டுக் கடன் அதிகமாக உள்ளது. இது தற்போது இந்தியாவிற்கு சாதகமாக உள்ளது.

    நமக்கு போட்டியாக இருக்கும் சீனாவில் 20 சதவீத வேலையின்மை உள்ளது.இந்தியாவில் ஸ்டார்ட் அப் கம்பெனிகள் வேலையின்மையை சரி செய்வதற்காக அதிகமாக உருவாக்கப்பட்டு வருகிறது.

    உலகில் அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக ஸ்டார்ட் அப் கம்பெனிகள் இந்தியாவில் அதிகமாக உள்ளது.இந்தியா 2030-ம் ஆண்டிற்குள் உலக பொருளாதாரத்தில் முதல் 3 இடத்திற்குள் இடம்பெறும்.

    தற்போது இந்தியாவில் நிறைய வேலை வாய்ப்புகள் உள்ளன.மாணவர்களாகிய நீங்கள் கல்வி பயில்வதற்கு விஐடி சிறந்த இடமாக உள்ளது.

    இந்தியாவின் ஜிடிபியில் தகவல் தொழில்நுட்பம் 7.2 சதவீத பங்கு வகிக்கிறது.தகவல் தொழில்நுட்பத்துறை அடுத்த 10 -20 ஆண்டுகளில் வேகமாகக வளர்ச்சி அடையும்.

    மாணவர்கள் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்க வேண்டும்.தற்போது உலகம் மாறி வருகிறது.முழு நேர வேலை, பகுதி நேர வேலை போன்றவை உருவாகிறது.இதனை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் கவுரவ விருந்தினராக யு.பி.எஸ். நிறுவன தலைமை மேலாளர் பராஷ் பரிக், வி.ஐ.டி துணை தலைவர்கள் சங்கர் விசுவநாதன், டாக்டர் ஜி.வி.செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    வி.ஐ.டி. அண்ணா அரங்கில் ரோபோ எந்திரம் மூலம் வி.ஐ.டி. வேந்தர் கிராவிடாஸ் அறிவுசார் திருவிழாவை தொடங்கி வைத்தார். பின்னர் மாணவர்கள் கண்காட்சிக்கு வைத்திருந்த படைப்புகளை பார்வையிட்டனர்.

    • கலெக்டர் தொடங்கி வைத்தார்
    • பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்

    வேலூர்:

    வேலூரை அடுத்த வெங்கடாபுரம் ஊராட்சியில் உள்ள தீர்த்தகிரி மலைபகுதியில் ஒரு லட்சம் விதைப்பந்துகள் தூவும் பணியினை இன்று கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தொடங்கி வைத்தார்.

    இதில் புங்கன், தூங்குவாகை, ஆலம், அரசம், சரக்கொன்றை, மகிழம் உள்ளிட்ட பல்வேறு வகையான நாட்டு மர விதைகளை மாணவ, மாணவிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மலைப்ப குதியில் ஆங்காங்கே தூவினர்.

    இதனை தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவிகள் கையில் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் ஊர்வலமாக சென்று பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    இதில் ஒரு ஒன்றிய குழு தலைவர், சமூக ஆர்வலர் தினேஷ் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • வங்கி லாக்கரில் வைத்திருந்த 50 பவுன் நகை மீட்பு
    • போலீசார் வழக்குப்பதிவு

    வேலூர்:

    வேலூர் தொரப்பாடியில் ஐ.டி. ஊழியர் வீட்டில் திருடிய உறவினர் கைது செய்யப்பட்டார். திருவண்ணாமலையில் வங்கி லாக்கரில் வைத்திருந்த 50 பவுன் நகைகளை போலீசார் மீட்டனர்.

    வேலூர் தொரப்பாடி ராம்சேட்நகரை சேர்ந்தவர் பாலாஜி (வயது 42), ஐ.டி. ஊழியர். இவருடைய மனைவி மோகனப்பிரியா (40), அரசுப்பள்ளி ஆசிரியை. இவர்களுக்கு மகதி என்ற மகள் உள்ளார். பாலாஜி தனது தாயார் உஷாராணி மற்றும் மனைவி, மகளுடன் அடுக்குமாடி வீட்டில் வசித்து வருகிறார்.

    பாலாஜி கடந்த 3-ந் தேதி திருப்பதிக்கும், தாயார் திருவண்ணாமலை மாவட்டம் கடலாடியில் உள்ள கோவிலுக்கும், மனைவி, மகள் மூஞ்சூர்பட்டில் நடந்த கோவில் திருவிழாவிற்கும் சென்றனர்.

    உஷாராணி சாமி தரிசனம் செய்துவிட்டு மாலை வீடு திரும்பினார். வீட்டின் பின்பக்க கதவு மற்றும் பீரோவை திறந்து அதில் வைத்திருந்த 50 பவுன் நகைகளை மர்ம கும்பல் திருடி மிளகாய்பொடியை தூவி விட்டு சென்றிருந்தனர்.

    இதுகுறித்து தகவலறிந்த பாகாயம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உஷாராணி மற்றும் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    மேலும் வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு திருநாவுக்கரசு தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

    தனிப்படை போலீசார் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அப்பகுதியில் வசிப்பவர்களிடம் தீவிரமாக விசாரணை நடத்தினர். அதில், பாலாஜியின் பக்கத்து வீட்டில் வசிக்கும் உறவினரான குடிநீர் சுத்திகரிக்கும் எந்திரம் விற்பனை, பழுது பார்க்கும் வெங்கடேஷ் (40) என்பவர் முன்னுக்கு பின் முரணான தகவல்கள் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில், பாலாஜி வீட்டின் பீரோவில் இருந்து 50 பவுன் நகையை திருடியதும், அவற்றை திருவண்ணாமலையில் உள்ள தனியார் வங்கி லாக்கரில் வைத்திருப்பதும், வேலை சரியாக இல்லாததால் உறவினர்கள் தன்னை மதிக்கவில்லை என்று திருட்டில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் வெங்கடேஷை கைது செய்தனர்.

    அதைத்தொடர்ந்து திருவண்ணாமலையில் உள்ள தனியார் வங்கி லாக்கரில் வைத்திருந்த 50 பவுன் நகையை மீட்டனர்.

    • விஷமுடைய உயிரினத்துடன் விளையாடினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்
    • வனத்துறையினர் எச்சரிக்கை

    அணைக்கட்டு:

    அணைக்கட்டு அடுத்த எல்லப்பன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் அசோக்குமார் இவரது வீட்டில் 4 அடி நீளம் கொண்ட நாகபாம்பு ஒன்று புகுந்துள்ளது.

    உடனே அருகில் இருந்த அப்பகுதி இளைஞர்கள் ஒருவர் உதவியுடன் வீட்டில் புகுந்த பாம்பை பிடித்தனர்.

    பின்னர் அருகே உள்ள காப்புக் காட்டில் விட்டனர். பாதுகப்பு கருவிகள் இல்லாமலும், உரிய பயிற்சி இல்லாமலும் பாம்புகளை பிடிக்கும் போது அவை கடித்தால் உயிர் இழக்க நேரிடும் எனவே விஷமுடைய பாம்புகளை பார்த்தால் உடனடியாக வனத்துறை அல்லது தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுக்கவும்.

    இது போல் தன்னிச்சையாக செயல்பட்டு விஷமுடைய உயிரினத்துடன் விளையாடினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துைறயினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    • கேமராக்களை சீரமைக்க வலியுறுத்தல்
    • திருட்டு நடைபெறாதவாறு கண்காணிக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தல்

    அணைக்கட்டு:

    திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த நடராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ் (வயது 26) இவர் தனது பைக்கில் நேற்று முன்தினம் வெட்டுவானம் எல்லை யம்மன் கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய சென்றார்.

    அப்போது இவரது வாகனத்தை கோவிலுக்கு முன்பு நிறுத்திவிட்டு உள்ளே சென்று சாமி தரிசனம் செய்து முடித்துவிட்டு மீண்டும் வெளியே வந்தார். அதற்குள் பைக்கை திருடி சென்று விட்டனர்.

    அதிர்ச்சியடைந்த சந்தோஷ் உடனடியாக அருகில் உள்ள பல்வேறு இடங்களில் தேடினார்.

    இது குறித்து பள்ளிகொண்டா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். சந்தோஷ் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் இது குறித்து பக்தர்கள் கூறுகையில்

    கோவிலை சுற்றிலும் 16-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன தொடர்ந்து கண்காணிப்பு கேமராக்கள் சரிவர வேலை செய்யவில்லை. இது திருட்டு நடைபெறுவதற்கு காரணமாக அமைவதாக பக்தர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

    கோவில் நிர்வாகம் கண்காணிப்பு கேமராக்களை சரி செய்வதுடன் கூடுதலாக கேமராக்கள் பொருத்தி திருட்டு நடைபெறாதவாறு கண்காணிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதேபோன்று கடந்த மாதம் கோவிலுக்கு வந்த பெண் பக்தரின் கழுத்தில் இருந்து சுமார் 10 பவுன் தங்க நகை மற்றும் மூதாட்டியின் கழுத்திலிருந்த 3 பவுன் தங்க சங்கிலி திருடப்பட்டதும் கண்காணிப்பு கேமராக்கள் சரிவர இல்லாததால் கண்டு பிடிக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    ×