என் மலர்tooltip icon

    வேலூர்

    • 2 தனிப்படை அமைத்து போலீசார் தேடுதல் வேட்டை
    • கண்காணிப்பு கேமராக்கள் ஆய்வு

    வேலூர்:

    காட்பாடி ஏரிமுனை பகுதியில் உள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் சுகுமார் (வயது 55), ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர். இவருடைய மனைவி சத்திய ஜீவகுமாரி. இவர் வேலூரில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை செய்து வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று காலை சுகுமார் வீட்டை பூட்டி விட்டு தன்னுடைய மனைவியை பைக்கில் வேலூருக்கு அழைத்து சென்றார். அங்கு அவரை விட்டுவிட்டு மீண்டும் வீடு திரும்பினார்.

    அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 26.5 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.2½ லட்சம் ரொக்கம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

    இது குறித்து சுகுமார் காட்பாடி போலீசில் புகார் அளித்தார். தகவல் அறிந்த வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார்.

    மேலும் காட்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு பழனி மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வன், சப்-இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி ஆகியோர் தலைமையில் 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

    மேலும் போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர்.

    நகை மற்றும் பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக வலைவீசி தேடி வருகின்றனர். இது குறித்து காட்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • டி.ஐ.ஜி, எஸ்.பி. மலர் வளையம் வைத்து அஞ்சலி
    • மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் 10 பேர் உயிரிழந்தனர்

    வேலூர்:

    சீன ராணுவத்தினர் கடந்த 1959-ம் ஆண்டு அக்டோபர் 21-ந்தேதி மறைந்திருந்து திடீர் தாக்குதல் நடத்தியதில் மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் 10 பேர் உயிரிழந்தனர்.

    எல்லையை காக்கும் போரில் வீரமரணம் அடைந்த வீரர்களின் தியாகத்தை நினைவு கூர்ந்து, ஆண்டுதோறும் அக்.21-ந்தேதி வீர வணக்க நாள் கடைபிடிக்கப்படுகிறது.

    அதன்படி வேலூர் நேதாஜி விளையாட்டு மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள நினைவு தூணுக்கு வீர வணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி இன்று நடந்தது.

    வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி, போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் பாஸ்கரன், கோடீஸ்வரன, துணை போலீஸ் சூப்பிரண்டுகள் திருநாவுக்கரசு, பழனி மற்றும் இன்ஸ்பெக்டர்கள், சப்- இன்ஸ்பெக்டர்கள் திரளான போலீசார் கலந்துகொண்டு நினைவு தூணுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

    அப்போது போலீசார் வானத்தை நோக்கி 16 துப்பாக்கி குண்டுகள் முழங்கி அஞ்சலி செலுத்தினர்.

    • அம்ருத் 2.0 திட்டத்தின் கீழ் புனரமைப்பு செய்யப்பட்ட குளத்தை பார்வையிட்டார்
    • பணிகளை தரமாக செய்து முடித்திட உத்தரவு

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம் பென்னாத்தூர் பேரூராட்சியில், பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் செ.கணேஷ் திடீரென ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது கணேசபுரத்தில் அம்ருத் 2.0 திட்டத்தின் கீழ் புனரமைப்பு செய்யப்பட்ட குளத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதனை தொடர்ந்து 15-வது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் குடிநீர் குழாய் பதிக்கும் பணிகளையும் பார்வையிட்டார்.

    பின்னர் அலுவலகப் பணிகள், திட்டப் பணிகளின் முன்னேற்றம் மற்றும் அதன் தற்போதய நிலை, வரி இனங்களின் வசூல் விவரம், குறித்து கேட்டறிந்தார். மேலும் வரி வசூல் பணியினை தீவிரப்படுத்தி நிலுவையின்றி வசூலிக்க வேண்டும்.

    திட்டப் பணிகள் அனைத்தும் உரிய கால அளவிற்குள் பணிகளை தரமாக செய்து முடித்திட உத்தரவிட்டார்.

    இந்த ஆய்வின் போது பென்னாத்தூர் பேரூராட்சி தலைவர் ச.பவானிசசிகுமார், செயல் அலுவலர் கி.அர்ச்சுணன், அலுவலக பணியாளர்கள் திருமால் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    • கொலையாளி மணப்பாறையில் கைது
    • 2 தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடினர்

    வேலூர்:

    குடியாத்தம் அடுத்த கள்ளூர் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம் கிடப்பதாக குடியாத்தம் டவுன் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன்பேரில்,துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

    அதில், கொலையான நபர் அதே பகுதியைச் சேர்ந்த சமோசா வியாபாரி ஹயாத் பாஷா (வயது 35) என்பது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் 2 தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடினர்.

    அதில், கள்ளூர் நேரு நகரைச் சேர்ந்த மற்றொரு ஹயாத் பாஷா (34) என்பவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. தலை மறைவாக இருந்த அவர் திருச்சி மாவட்டம் மணப்பாறை போலீசாரின் வாகன தணிக்கையில் சிக்கி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, மணப்பாறை சென்ற தனிப்படையினர் ஹயாத் பாஷாவை பிடித்து விசாரணை நடத்தினர்.

    அப்போது, சமோசா வியாபாரியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். மேலும் தனது மனைவி குறித்து அவர் தவறாக பேசியதால் கொலை செய்ததாக கூறினார். இதையடுத்து, போலீசார் அவரை கைது செய்தனர்.

    இவர் ஏற்கனவே ஒரு கொலை வழக்கில் கைது செய்யபட்டுள்ளார் என போலீசார் தெரிவித்தனர்.

    • பங்கேற்க கலெக்டர் அழைப்பு
    • முதலிடம் பெறும் இளைஞர்கள் மாநில அளவிலான போட்டிக்கு அனுமதி

    வேலூர்:

    வேலூர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

    கலைத்துறையில் சிறந்து விளங்கும் இளைஞர்களை கண்டறிந்து அவர்களை ஊக்கப்படுத்திட 17 வயது முதல் 35 வயதுக்குட்பட்ட இளைஞர்களிடையே, கலைப்போட்டிகள் தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறையின் சார்பில் நடத்திட அரசு ஆணையிட்டுள்ளது.

    குரலிசை, கருவியிசை, பரதநாட்டியம், கிராமிய நடனம் மற்றும் ஓவியம் ஆகிய 5 பிரிவுகளில் வேலூர் மாவட்ட அளவி லான கலைப் போட்டிகள் வரும் 29-ந்தேதி (ஞாயிற்றுக் கிழமை) காலை 10 மணியளவில் வெங்க டேஷ்வரா மேல்நிலைப்பள்ளி, ஆபிசர்லைன், வேலூர். என்ற முகவரியில் நடக்கிறது. இப்போட்டியில் தனிநபராக பங்கேற்க வேண்டும். குழுவாக பங்கு பெற அனுமதி இல்லை,

    குரலிசைப் போட்டி யிலும், நாதசுரம், வயலின், வீணை, புல்லாங்குழல், தவில், மிருதங்கம், போன்ற கருவி இசைப்பேட்டியிலும், பரதநாட்டிய போட்டியிலும் அதிகபட்சம் 5 நிமிடம் நிகழ்ச்சி நடத்திட அனுமதிக்கப்படுவார்கள்.

    கிராமிய நடனத்தில் கரகாட்டம், காவடியாட்டம், புரவியாட்டம், காளை ஆட்டம், மயிலாட்டம், கைச்சிலம்பாட்டம், மரக்கால் ஆட்டம், ஒயிலாட்டம், புலியாட்டம், தப்பாட்டம் (பறையாட்டம்) போன்ற பாரம்பரிய கிராமிய நடனங்கள் அனுமதிக்கப்படும்.

    ஓவியப்போட்டியில் பங்கேற்பவர்களுக்கான ஓவியத் தாள்கள் வழங்கப்படும். அக்ரலிக் வண்ணம் மற்றும் நீர்வண்ணம் மட்டுமே பயன்படுத்த வேண்டும். இதனை பங்கேற்பாளர்கள் கொண்டுவரவேண்டும்.

    நடுவர்களால் கொடுக்கப்படும் தலைப்பில் ஓவியங்கள் வரையப்பட வேண்டும். அதிக பட்சம் 3 மணி நேரம் அனுமதிக்கப்படுவார்கள்.

    மாவட்ட போட்டியில் முதலிடம் பெறும் இளைஞர்கள் மாநில அளவிலான போட்டிக்கு அனுமதிக்கப்படுவார்கள்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • பயிர் காப்பீடு திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம்
    • கரும்பு உள்ளிட்ட 3 பயிர்களுக்கு காப்பீடு வழங்க அரசு அனுமதி

    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் சம்பா பருவ நெற்பயிர் சாகுபடி செய்துள்ள விவசாயிகள், காப்பீடு திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம்.

    இதுகுறித்து, வேலூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் பா. கிருஷ்ணமூர்த்தி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது;

    வேலூர் மாவட்டத்தில், சம்பா பருவ நெல் சாகுபடி தீவிரமாக நடந்து வருகிறது.

    விரைவில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் நிலையில், ஏற்கனவே பெரும்பாலான நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. எனவே, கடந்த ஆண்டுகளைவிட இந்த ஆண்டு கூடுதல் பரப்பளவில் நெல் சாகுபடிக்கான வாய்ப்பு உள்ளது.

    அதே நேரத்தில், எதிர் பாராத புயல் சீற்றம், கன மழை போன்ற பாதிப்புகள் ஏற்பட்டால் அதன்மூலம் ஏற்படும் பயிர் பாதிப்புகளுக்கு உரிய இழப்பீடு பெறும் வகையில் பயிர் காப்பீடு திட்டத்தில் விவசாயிகள் தங்களை இணைத்துக்கொள்வது அவசியம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    திருத்திய பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தில் நடப்பு ரபி பயிர் பருவத்தில்

    வேலூர் மாவட்டத்திற்கு நெல் (சம்பா), நெல் (நவரை), மற்றும் கரும்பு உள்ளிட்ட 3 பயிர்களுக்கு காப்பீடு வழங்க அரசு அனுமதித்துள்ளது. மேலும் அரசு இப்கோ டோக்கியோ காப்பீடு நிறுவனத்தின் மூலம் காப்பீடு செய்யப்படுகிறது.

    விதைக்க நடவு செய்ய இயலாத நிலை, நடவு பொய்த்தல், இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் பாதிப்பு, அறுவடைக்கு பிந்தைய இழப்பு போன்றவற்றுக்கு காப்பீடு தொகையை பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது.

    மேலும், பயிர் காப்பீடு செய்வது மிகவும் எளிமையாக்கப்ப ட்டுள்ளது. தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், தேசியமையமாக்கப்பட்ட வங்கிகள், பொது சேவை மையங்களில் காப்பீடு தொகையை செலுத்தலாம்.

    எனவே, வேலூர் மாவட்டத்தில் சம்பா பருவ நெல் சாகுபடியில் ஈடுபடும் விவசாயிகள், பயிர் காப்பீடு திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • பெங்களூருக்கு -5, திருச்சிக்கு - 5 என இயக்கப்பட உள்ளது
    • சேவையை பயன்படுத்திக்கொள்ளுமாறு அதிகாரிகள் தகவல்

    வேலூர்:

    ஆயூதபூஜை விஜயதசமி முன்னிட்டு தொடர் அரசு விடுமுறை என்பதால் பொது மக்கள் வசதிக்காக சென்னை பூந்தமல்லி தற்காலிக பஸ் நிலையத்திலிருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படு கின்றன.

    வேலூருக்கு-50 பஸ்கள், ஆற்காடு 10 பஸ்கள், ஓசூர்- 10 பஸ்கள், தர்மபுரி- 5 பஸ்கள், குடியாத்தம்-10, திருப்பத்தூர்-20 பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

    அதேப்போல் வேலூரிலிருந்து பெங்களூருக்கு -5 பஸ்கள், திருச்சிக்கு - 5 பஸ்கள் என இயக்கப்பட உள்ளது.

    மேலும் வருகின்ற 24 மற்றும் 25-ந்தேதிகளில் பொதுமக்கள் சென்னை, தாம்பரம் மற்றும் பெங்களூர் ஆகிய ஊர்களுக்கு திரும்பி செல்வதற்கு ஏதுவாக வேலூரிலிருந்து, சென்னை, தாம்பரம் மற்றும் பெங்களூர் ஆகிய ஊர்களுக்கு வழக்கமாக செல்லும் பஸ்கள் தவிர்த்து கூடுதலாக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

    பொது மக்கள் இந்த சிறப்பு பேருந்து சேவையை பயன்படுத்திக்கொள்ளுமாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • டாக்டர்கள் பரிசோதனை செய்தனர்
    • காட்டுபன்றியை வனத்துறையினர் தீயிட்டு எரித்தனர்

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அடுத்த ஊணை வாணியம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் தமிழ்செல்வம். இவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் வேர்க்கடலை பயிரிடப்பட்டு பாதுகாத்து வருகின்றார்.

    இந்தநிலையில் நேற்று நிலத்திற்கு சென்றார். அப்போது துர்நாற்றம் வீசியது. அருகே சென்று பார்த்தபோது ஆண் காட்டுபன்றி இறந்து கிடந்தது தெரிந்தது.

    இதுகுறித்து ஒடுகத்தூர் வனத்துறைக்கு தகவல் கொடுத்தார்.

    வனத்துறையினர் இறந்து கிடந்த பன்றியின் உடலை மீட்டு அணைக்கட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனை க்காக அனுப்பினர். பின்னர் காட்டுபன்றியை வனத்துறையினர் தீயிட்டு எரித்தனர்.

    • அலறி அடித்து ஓட்டம்
    • பரவமலை காப்புக்காட்டில் கொண்டுபோய் விட்டனர்

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தம்மாள். இவர் அதே பகுதியில் கடைவைத்துள்ளார்.

    இந்த நிலையில் கோவிந்தம்மாள் நேற்று கடைக்கு சென்றார். அப்போது கடையில் பாம்பு ஒன்று ஊர்ந்து சென்றுள்ளது. இதைப்பார்த்த அதிர்ச்சி யடைந்த கோவிந்தம்மாள் கத்தி கூச்சல் போட்டுள்ளார். சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் அருகே இருந்த வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

    இதனை யடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனச்சரகர் இந்து தலைமை யிலான குழுவினர் கடையில் இருந்த 5 அடி நீளம் கொண்டு நல்ல பாம்பை மீட்டு அருகே இருந்த பரவமலை காப்புக்காட்டில் பத்திரமாக விட்டனர்.

    • 200 ஆண்டுகள் பழமையான வாய்ந்தது
    • புதியதாக புனரமைத்து புதுப்பிக்க வேண்டும்

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அருகே உள்ள வேப்பங்குப்பம் கிராமத்தில் இந்து அறநிலைத்துறைக்கு சொந்தமான சுமார் 200 ஆண்டுகள் பழமையான வாய்ந்த ஸ்ரீ வரசித்தி விநாயகர் கோவில் உள்ளது. இங்கு விஷேச தினங்கள் உட்பட முக்கிய நாட்களில் பூஜைகள் செய்து வழிப்பட்டு வருகின்றனர்.

    200 ஆண்டுகள் பழமையான கோவில் என்பதால் கட்டிடங்கள் சிதிலமடைந்த காணப்பட்டு வந்தது. இதனை புதியதாக புனரமைத்து புதுப்பிக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து இன்று காலை 8 மணி முதல் யாகசாலைகள் அமைத்து கலசங்கள் வைத்து பூமி பூஜைகள் செய்தனர். வேப்பங்குப்பம் ஊராட்சிமன்ற தலைவர் சுகன்யா உமாபதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அகத்திக்கீரை கொடுத்தபோது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    சத்துவாச்சாரி, ஸ்ரீராம் நகரை சேர்ந்தவர் சேகர் (வயது 65). கடந்த 14-ந் தேதி மஹாளய அமாவாசையை முன்னிட்டு சேகர் மாட்டுக்கு அகத்திக்கீரை கொடுத்தார்.

    அப்போது எதிர்பாராத விதமாக சேகரை மாடு முட்டி தூக்கி எறிந்தது. இதில் சேகர் படுகாயம் அடைந்தார்.

    உடனடியாக சேகரை அவரது உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி சேகர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சத்துவாச்சாரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அனுமதியின்றி விற்றால் நடவடிக்கை
    • கடையின் அருகே டீக்கடை, ஓட்டல் வைக்க அனுமதி இல்லை

    வேலூர்:

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு கடை வியாபாரிகளுக்கான முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் வேலூர் உதவி கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு உதவி கலெக்டர் கவிதா தலைமை தாங்கினார்.

    தாசில்தார்கள் செந்தில் குமார், ஜெகதீஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் வேலூர் மாவட்ட பட்டாசு வியாபாரிகள் சங்க கவுரவ தலைவர் ஜனார்த்தனன் மற்றும் வியாபாரிகள் கலந்து கொண்டு பேசியதாவது:-

    நாங்கள் பல ஆண்டுகளாக உரிமம் பெற்று பட்டாசு கடை நடத்தி வருகிறோம். திடீரென எங்கள் கடையின் அருகே டீக்கடை, ஓட்டல் வைத்து நடத்துகின்றனர். இதனால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது.

    இது தொடர்பாக அதிகாரிகள் ஆய்வு செய்து அந்த கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். பட்டாசு வியாபாரத்தினை நம்பி பல வியாபாரிகள் உள்ளனர். இந்த நிலையில் ஆன்லைன் வியாபாரம் நடைபெறுவதால் எங்களது வியாபாரம் பாதிக்கபடுகிறது.

    ஆன்லைன் வியாபாரத்தால் விபத்துகளும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே ஆன்லைன் வியாபாரத்தை தடை செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் பேசினர்.

    இதற்கு பதில் அளித்து வேலூர் உதவி கலெக்டர் கவிதா பேசியதாவது:-

    உரிமம் இன்றி பட்டாசுகள் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். யாராவது அவ்வாறு பட்டாசு விற்பனை செய்தால் அவர்கள் குறித்து உடனடியாக எனக்கோ அல்லது சம்பந்தப்பட்ட தாசில்தாரிடம் புகார் தெரிவிக்கலாம்.

    பட்டாசு கடைகளில் பணியாற்றும் பணியாளர்களுக்கு தகுந்த பயிற்சிகள் வழங்க வேண்டும். கடைகளில் இரு வழி பாதைகள் இருக்க வேண்டும். கடையில் தீ தடுப்பு உபகரணங்கள் கட்டாயம் வைத்திருக்க வேண்டும்.

    மின் வயர்கள் பாதுகாப்பான முறையில் குழாய்கள் மூலமே கடைக்குள் பதிக்கப்பட்டு இருக்க வேண்டும்.மின் இணைப்பு பெட்டி கடையின் வெளியே வைத்திருக்க வேண்டும்.

    மளிகை கடையில் பட்டாசுகள் விற்பனை செய்ய கூடாது. வீடுகளில் பதுக்கி வைத்து விற்பனை செய்யக்கூடாது. இது போன்ற புகார்கள் வந்தால் தெரிவிக்கலாம். வேலூர் மாவட்டத்தில் அரசின் விதிமுறைகளை கடைப்பிடித்து

    இந்த தீபாவளியை விபத்து உள்ளிட்ட அசம்பாவிதம் இல்லாத தீபாவளியாக கொண்டாட வியாபாரிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். வேலூர் கோட்டத்தில் 51 கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    இவர் அவர் கூறினார்.

    ×