என் மலர்
வேலூர்
- மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
- காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை துண்டிப்பு
வேலூர்:
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா கோட்டத்தி ற்குட்பட்ட துணை மின் நிலையங்களில் நாளை மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
இதனால் நாளை (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை வேப்பூர், மேல்ஆலத்தூர், கூட நகரம், கோப்பம்பட்டி, பள்ளிகொண்டா பிராமண மங்கலம், ஒடுகத்தூர், மேல் அரசம்பட்டு , ஆசனாம்பட்டு, கீழ்கொத்தூர், சேர் பாடி, குரு ராஜபாளையம், சின்னபள்ளிகுப்பம், ராஜபாளையம், சோமலாபுரம், ஏ.கஸ் பா , பி கஸ்பா, சின்ன கொம்மேஸ்வரம், வடபுதுப்பட்டி, பச்சகுப்பம், ஆலங்குப்பம் ரெட்டி தோப்பு விண்ணமங்கலம் நாச்சார் குப்பம் மலையாம் பட்டு தென்னம்பட்டி மின்னூர் மாராபட்டு சங்கிலி குப்பம் அழிஞ்சிகுப்பம் கில்முருங்கை எம்பி குப்பம் ஜலால்பேட் ,வாத்திமணை மற்றும் தீப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும்.
இத்தகவலை மின்வாரிய செயற் பொறியாளர் விஜயகுமார் தெரிவித்துள்ளார்.
- நளினி விடுதலை தொடர்பான மனுவை இன்று சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது. இது தொடர்பாக இருவரும் ஆலோசித்ததாக கூறப்படுகிறது.
- நளினி விடுதலை மனுவை தள்ளுபடி செய்த நிலையில் முருகனை சந்தித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர்:
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை கைதிகள் முருகன் வேலூர் ஆண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது மனைவி நளினி தற்போது பரோலில் வெளியே வந்து காட்பாடி பிரம்மபுரத்தில் தங்கியுள்ளார்.
15 நாட்களுக்கு ஒரு முறை இருவரும் சந்தித்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று காலை வேலூர் ஜெயிலில் முருகனை நளினி சந்தித்துப் பேசினார். இதற்காக காலை 10 மணிக்கு பிரம்மபுரத்திலிருந்து போலீசார் பலத்த பாதுகாப்புடன் நளினியை வேலூர் ஜெயிலுக்கு அழைத்து சென்றனர். அங்கு 10.50 மணி முதல் 11.20 மணி வரை நளினி முருகன் இருவரும் சந்தித்து பேசினர். நளினி விடுதலை தொடர்பான மனுவை இன்று சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது. இது தொடர்பாக இருவரும் ஆலோசித்ததாக கூறப்படுகிறது.
சந்திப்பு முடிந்ததும் மீண்டும் நளினி பிரம்மபுரத்திற்கு அழைத்து செல்லப்பட்டார்.
நளினி விடுதலை மனுவை தள்ளுபடி செய்த நிலையில் முருகனை சந்தித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- அரசு நலத்திட்டங்களும் சலுகைகளும் அரசு உதவி பெறும் மாணவர்களுக்கும் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தல்.
- பணப்பலன்கள் பெற ஆணை வழங்கிட வேண்டும்.
வேலூர்:
தமிழ்நாடு முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் வேலூர் கிருஷ்ணசாமி மேல் நிலைப்பள்ளியில் நடைபெற்று வரும் மேல்நிலை விடைத்தாள் திருத்தும் முகாம் முன்பு வாயிற்கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு எஸ்.ராஜேஸ்கண்ணா தலைமை தாங்கினார். முன்னதாக மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.அஜீஸ்குமார் வரவேற்று பேசினார். மாநில தலைமையிட செயலாளர் இ.இராவணன், மாநில செயதி தொடர்பாளர் எம்.மகேந்திரன் ஆகியோர் பேசினர்.
மாவட்ட பொருளாளர் ஆர்.ஜெயகுமார் மாவட்ட இணை செயலாளர் டி.ஜெயபிரகாஷ், மாவட்ட தலைமையிட செயலாளர் வி.திருகுமரன், மகளிர்அணி செயலாளர் கே.ஜி.தேவி நிதிஉதவி பள்ளி செயலாளர் பி.செந்தில் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர்.
புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டதினை கைவிட்டு பழைய ஓய்வூதி திட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
ஆசிரியர்களுக்கு பணிப்பாதுக்காப்புச் சட்டம் இயற்றப்பட வேண்டும். 2009-க்கு பிறகு பணியில் சேர்ந்த முதுகலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும், அகவிலைப்படி உயர்வு, ஈட்டிய விடுப்பு சரண் போன்ற பணப்பலன்கள் பெற ஆணை வழங்கிட வேண்டும்.
புதிய கல்வி கொள்கையை ரத்து செய்திட வேண்டும், அரசு பள்ளியில் படிக்கும் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு வழங்குவது போல் அனைத்து அரசு நலத்திட்டங்களும் சலுகைகளும் அரசு உதவி பெறும் மாணவர்களுக்கும் வழங்க வேண்டும், ஆசிரியர் மாணவர் நலன் கருதி கற்பித்தல் கற்றல் பணியை மட்டுமே ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும், 2004-2006 தொகுப்பூதிய பணிக்காலத்தினை பணிவரன் முறைப்படுத்தி சமவேலைக்கு சம ஊதியம் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை வலியுறுத்தி பேசினர்.
முடிவில் மாவட்ட அமைப்புச்செயலாளர் டி.மலர்விழி நன்றி கூறினார்.
- ரூ 20,000 கடனுக்கு ரூ.2.36 லட்சம் கேட்பதாக புகார்
- போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு
வேலூர்:
வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அருகே உள்ள சேர்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ் (வயது 41)இவர் இன்று காலை வேலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு ஒன்று அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-
நான் லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறேன். எனது குடும்பத்தில் 5 பேர் உள்ளனர். எனது வருமானத்தை வைத்துதான் குடும்பம் நடத்த வேண்டி உள்ளது.
இந்த நிலையில் ஒடுகத்தூரை சேர்ந்த சகோதரர்கள் 3 பேரிடம் நான் ரூ. 20,000 குடும்பச் செலவுக்காக கடன் வாங்கியிருந்தேன். இதற்காக இதுவரை என்னிடம் ரூ.96 ஆயிரம் வட்டி வசூலித்தனர். இன்னும் 1,40,000 தரவேண்டும் என கூறுகின்றனர். நேற்று முன்தினம் இது சம்பந்தமாக என்னை அடித்து உதைத்தனர்.
இதனால் நான் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றேன். ரூ.20,000 கடனுக்கு கூடுதல் வட்டி கேட்டு மிரட்டுவதில் இருந்து பாதுகாப்பு வேண்டும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வீடியோ கான்பரன்ஸ் மூலம் திறந்து வைக்கப்பட்டது.
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
வேலூர்:
தமிழகத்தில் இன்று 20 மகளிர் போலீஸ் நிலையங்களை முதல்அமைச்சர் மு. க. ஸ்டாலின் வீடியோ கான்பரசிங் மூலம் திறந்து வைத்தார். இதில் காட்பாடி போலீஸ் நிலைய வளாகத்தில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள மகளிர் போலீஸ் நிலையத்தை முதல்அமைச்சர் மு.க. ஸ்டாலின் வீடியோ கான்பரன்சிங் மூலமாக இன்று திறந்து வைத்தார்.
இதனையடுத்து காட்பாடி மகளிர் போலீஸ் நிலையத்தில் கதிர் ஆனந்த் எம்பி குத்துவிளக்கேற்றினார். நிகழ்ச்சியில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன், டி.ஐ.ஜி ஆனி விஜயா,போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- ரெயில்வே மேம்பால சீரமைப்பு பணிகள் மந்தமாக நடப்பதாக பல்வேறு தரப்பினர் புகார்
- கலெக்டர், எம்.பி. ஆய்வு
வேலூர்:
காட்பாடி ரெயில்வே மேம்பால சீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது. இதனால் சித்தூர் செல்லும் வாகனங்கள் மாற்று பாதையில் இயக்கப்படுகின்றன. ரெயில்வே மேம்பாலம் சீரமைப்பு பணிகள் மந்தமாக நடந்து வருவதாக பல்வேறு தரப்பினர் புகார் தெரிவித்தனர்.
இந்த நிலையில் ரெயில்வே மேம்பால சீரமைப்பு பணிகளை கலெக்டர் குமாரவேல் பாண்டியன்,டி.ஐ.ஜி.ஆனி விஜயா, போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அப்போது கலெக்டர் குமாரவேல் பாண்டியன் கூறியதாவது:-
காட்பாடி ரெயில்வே மேம்பாலம் மிக முக்கியமானதாகும். இந்த மேம்பாலத்தில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பே சீரமைப்பு பணிகள் தொடங்கப்பட இருந்தது. பல்வேறு காரணங்களால் இந்த பணிகள் ஒத்திவைக்கப்பட்டது.
நீர்வளத் துறை அமைச்சர் உத்தரவின் பேரில் தற்போது சீரமைப்பு பணிகள் நடந்தது. கடந்த 5 நாட்களுக்கு முன்பு பாலத்தில் இணைப்புகள் அனைத்தும் சீரமைக்கப்பட்டு விட்டன.இதில் சிமெண்ட் கலவை பூச்சு பூசப்பட்டுள்ளது. இவை 15 முதல் 20 நாட்களுக்கு பிறகுதான் தரமானதாக மாறும்.
எனவே திட்டமிட்டபடி வருகிற ஜூலை 1-ந் தேதிக்குள் காட்பாடி ரெயில்வே மேம்பாலம் திறக்கப்பட்டு போக்குவரத்து தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
- மோர்தானா அணை நிரம்பியது.
- சேறும் சகதியுமான தெருக்களால் பொதுமக்கள் அவதி.
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று இரவு மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது.
தமிழக ஆந்திர எல்லையில் பெய்து வரும் கனமழை காரணமாக மோர்தானா அணை மீண்டும் நிரம்பியுள்ளது.இதனால் அணையில் இருந்து 88 கனஅடி உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் கவுண்டன்யா ஆற்றில் நீர்வரத்து ஏற்பட்டுள்ளது.
மோர்தானா அணை மீண்டும் நிரம்பியதால் குடியாத்தம், பேரணாம்பட்டு மற்றும் கே.வி. குப்பம் தாலுகாவில் உள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வேலூர் மாநகர பகுதியில் நேற்று இரவு இடி மின்னலுடன் மழை பெய்தது.
இதனால் சாலையோர பள்ளங்களில் தண்ணீர் தேங்கி உள்ளது. பாதாள சாக்கடை மற்றும் கால்வாய் பணிகள் நடந்து வரும் தெருக்களில் சேறும் சகதியுமாக காட்சி அளிக்கிறது. மாநகராட்சியில் உள்ள சில தெருக்களில் பணிகள் முடிந்தும் இன்னும் முழுமையாக சாலை போடப்படவில்லை.
இதனால் சேறும் சகதியுமாக காட்சி அளிக்கிறது. பொதுமக்கள் இந்த தெருக்களில் செல்ல முடியாமல் கடும் அவதி அடைந்தனர்.
- வேலூரில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் உள்ளனர்.
- கோரிக்கைகளை மனுவாக அளிக்கலாம் என கலெக்டர் தெரிவித்தார்.
வேலூர்:
வேலூர் ஒருங்கிணைந்த மாவட்டத்தில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் உள்ளனர்.இங்குள்ள இளைஞர்கள் ராணுவத்தில் சேர்வதற்காக அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்காக தனியாக பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் பள்ளி மாணவர்களை ராணுவம், விமானம் மற்றும் கடற்படையில் பணியில் சேர்ப்பதற்காக மத்திய அரசு அக்னி பாதை என்ற திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் மாணவர்கள் பணியில் சேரலாம்.
17.5 வயது முதல் 21 வயதுடையவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 4 ஆண்டுகள் அவர்களுக்கு பணி வழங்கப்படும். முதலாம் ஆண்டு சம்பளம் ரூ.30 ஆயிரம் 2-ம் ஆண்டு ரூ. 33 ஆயிரம், 3-ம் ஆண்டு ரூ. 36, 500 ,4-ம் ஆண்டு ரூ 40,000 ஊதியமாக வழங்கப்படும்.
இதில் 4 ஆண்டு பணி முடித்து விட்டு வெளியே செல்லும்போது ரூ.11.71 லட்சம் நிதிஉதவி வழங்கப்படும். தொடர்ந்து ரூ.48 லட்சத்திற்கு ஆயுள் காப்பீடும் வழங்கப்படும்.
பணியின் போது வீர மரணம் அடைந்தால் ரூ.1 கோடி இழப்பீடு தொகை வழங்கப்படும். காயமடைந்தால் இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும் பணிக்கு ஆண்,பெண் என இருபாலரும் தேர்வு செய்யப்படுவார்கள். 4 ஆண்டுகள் நிறைவடைந்த பிறகு 25 சதவீதம் பேருக்கு நிரந்தர பணி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்னிபாதை திட்டத்தின்கீழ் முப்படைகளில் வீரர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவதை எதிர்த்து வேலூரை சேர்ந்த இளைஞர்கள் போராட முடிவு செய்தனர். நேற்று மாலை முதல் சமூக வலைதளங்களில் போராட்டத்திற்கான அறிவிப்பு வெளியிட்டனர்.
அதில் அக்னி பாதை திட்டத்தில் முப்படை வீரர்கள் தேர்வு செய்யக்கூடாது. பழைய முறையிலேயே ராணுவத்திற்கு ஆட்கள் தேர்வு செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
வேலூர் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள கிரீன்சர்க்கிளில் போராட்டம் நடத்தப்போவதாகவும் இதில் இளைஞர்கள் அதிகளவில் கலந்து கொள்ள வேண்டும் என அழைப்பு விடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து இன்று காலை முதலே வேலூர் கிரீன் சர்க்கிளில் ஏராளமான இளைஞர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர். இதுபற்றி தகவல் அறிந்த வேலூர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
அவர்கள் கிரீன் சர்க்கிளில் போராட்டம் நடத்தினால் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படும். கலெக்டர் அலுவலகம் சென்று தங்களது கோரிக்கைகளை மனுவாக அளிக்கலாம் என தெரிவித்தனர்.
இதனைத்தொடர்ந்து இளைஞர்கள் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள ஆஞ்சநேயர் கோவில் முன்பு தேசிய கொடியுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் வேலூரில் பரபரப்பு ஏற்பட்டது.
- ராணுவத்தை ஒரு சேவையாக பார்க்கும் தங்களின் லட்சியக் கனவுகளை களைக்கும் விதமாக அக்னிபத் திட்டம் உள்ளது.
- ராணுவத்தில் சேர வேண்டும் என்ற முனைப்புடன் தீவிரமாக தங்களை தயார்படுத்தி வருகின்றனர்.
இந்திய ராணுவத்தில் அக்னிபத் என்கிற 4 ஆண்டு பணிப்புரியும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. இந்த திட்டத்தில் 17 வயது முதல் 21 வயதுடைய இளைஞர்கள் ஒப்பந்தம் அடிப்படையில் நிரந்தர ஊதியத்தில் பணியில் சேரலாம். 4 ஆண்டுகளுக்கு பிறகு தகுதியின் அடிப்படையில் ஆட்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு நிரந்தரப்பணி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இந்த அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு பகுதிகளில் இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
குறிப்பாக, வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே இன்று நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டமான வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் இருந்து அதிகளவில் ராணுவத்திற்கு இளைஞர்கள் செல்கின்றனர்.ராணுவத்தில் சேர வேண்டும் என்ற முனைப்புடன் தீவிரமாக தங்களை தயார்படுத்தி வருகின்றனர். ராணுவத்தை ஒரு சேவையாக பார்க்கும் தங்களின் லட்சியக் கனவுகளை களைக்கும் விதமாக இந்த திட்டம் இருப்பதாக இளைஞர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
இதனால், அக்னிபத் திட்டத்தை ரத்து செய்யும்படியும், இரண்டு ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ராணுவ தேர்வை நடத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
- போலீசாருடன் வாக்குவாதம் செய்தனர்.
- கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறல்.
வேலூர்:
வேலூர் பழைய பஸ் நிலையம் திருவள்ளுவர் சிலை அருகே ஆட்டோ டிரைவர்கள் கொடி கம்பம் நட்டு பேனர் வைத்திருந்தனர்.
இன்று தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்காக பொக்லைன் எந்திரம் கொண்டு வந்தனர். அப்போது ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து ஆட்டோ டிரைவர்கள் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பாதுகாப்பு பணியில் 3 போலீஸ்காரர்கள் மட்டுமே இருந்ததால் அவர்களை போலீசாரால் கட்டுப்படுத்த முடியவில்லை. தொடர்ந்து நீண்ட நேரம் வாக்குவாதம் செய்து கொண்டே இருந்தனர். அந்த வழியாக வாகனங்களில் சென்றவர்கள் வேடிக்கை பார்க்க நின்றதால் போக்குவரத்து ஸ்தம்பித்தது. ஆக்கிரமிப்புகளை அகற்ற முயன்றால் சாலையின் குறுக்காக ஆட்டோக்களை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபடப்போவதாக ஆட்டோ டிரைவர்கள் தெரிவித்தனர். மேலும் பொக்லைன் எந்திரம் முன்பாக நின்று கொண்டு கலைந்து செல்லாமல் இருந்தனர்.
இதனால் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் தொய்வு ஏற்பட்டது. ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து ஆட்டோ டிரைவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
- 15 நாட்களுக்கு முன்பு காப்பு கட்டுதலுடன் விழா தொடங்கியது.
- ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு.
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் கஸ்பா கவுதமபேட்டை கெங்கையம்மன் கோவில் திருவிழா 15 நாட்களுக்கு முன்பு காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. இத்திருவிழாவை முன்னிட்டு நேற்று தேரோட்டம் நடைபெற்றது.
இன்று காலை கெங்கையம்மன் சிரசு ஊர்வலம் நடைபெற்றது.
முன்னதாக ராபின்சன் குளக்கரை பகுதியில் உள்ள கோவிலில் சிறப்பு பூஜைகளும் தீபாராதனையும் செய்யப்பட்டு அம்மன் சிரசு ஊர்வலம் காலையில் புறப்பட்டு நகரின் முக்கிய வீதிகள் வழியாக கஸ்பா கவுதமபேட்டையில் உள்ள கெங்கையம்மன் கோவிலை அடைந்தது. தொடர்ந்து கண் திறப்பு நிகழ்ச்சிக்கு பின் பக்தர்கள் கெங்கையம்மனை தரிசனம் செய்தனர். வழிநெடுகிலும் பக்தர்கள் தேங்காய்கள் உடைத்தும், ஆடு மற்றும் கோழிகளை பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்.
இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர், ஊர் நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள், இளைஞர்கள் செய்திருந்தனர்.
- தோழியின் வீட்டிற்கு சென்றவர் வீடு திரும்பவில்லை.
- சாலையோரம் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார்.
வேலூர்:
வேலூர் அருகே உள்ள அன்பூண்டி சர்வீஸ் சாலையை ஒட்டி உள்ள முட்புதரில் நேற்று இளம்பெண் ஒருவர் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த விரிஞ்சிபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தினர்.
அதில் பிணமாக கிடந்த இளம் பெண் கொணவட்டம் கீழாண்டை தெருவை சேர்ந்த சுகுமாரன் என்பவரது மகள் சுமித்திரா (வயது 28) என்பது தெரியவந்தது. வீட்டு வேலைக்கு சென்று பிழைப்பு நடத்தி வந்தார்.
மேலும் திருமணம் செய்யாமல் இருந்தார். சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் போல் நடந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.
சுமித்ராவுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது.இதனால் அடிக்கடி மது குடித்துவிட்டு தோழிகள் வீடுகளுக்குச் சென்று விடுவார்.இந்த நிலையில் கடந்த 12-ந் தேதி வீட்டில் இருந்து டிபன் பாக்சில் உணவை எடுத்துக்கொண்டு தோழியின் வீட்டிற்கு செல்வதாக கூறிவிட்டு வெளியே சென்றார். அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை.அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடினர்.
இந்த நிலையில் சுமித்திரா பிணமாக மீட்கப்பட்டார். அவரது உடலில் காயங்கள் எதுவும் இல்லை.மேலும் அவர் பிணமாக கிடந்த இடத்தின் அருகே அவரது செல்போன் டிபன் பாக்ஸ் அப்படியே கிடந்தது. இதனால் அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பிறகு தான் இந்த சம்பவத்தில் உண்மையான தகவல் வெளிவரும் என போலீசார் தெரிவித்தனர்.






