என் மலர்
உள்ளூர் செய்திகள்

ேவலூர் கலெக்டர் அலுவலகம் அருகே இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட காட்சி.
அக்னி பாதை திட்டத்தில் ராணுவத்திற்கு ஆள்சேர்ப்பை எதிர்த்து இளைஞர்கள் போராட்டம்
- வேலூரில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் உள்ளனர்.
- கோரிக்கைகளை மனுவாக அளிக்கலாம் என கலெக்டர் தெரிவித்தார்.
வேலூர்:
வேலூர் ஒருங்கிணைந்த மாவட்டத்தில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் உள்ளனர்.இங்குள்ள இளைஞர்கள் ராணுவத்தில் சேர்வதற்காக அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்காக தனியாக பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் பள்ளி மாணவர்களை ராணுவம், விமானம் மற்றும் கடற்படையில் பணியில் சேர்ப்பதற்காக மத்திய அரசு அக்னி பாதை என்ற திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் மாணவர்கள் பணியில் சேரலாம்.
17.5 வயது முதல் 21 வயதுடையவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 4 ஆண்டுகள் அவர்களுக்கு பணி வழங்கப்படும். முதலாம் ஆண்டு சம்பளம் ரூ.30 ஆயிரம் 2-ம் ஆண்டு ரூ. 33 ஆயிரம், 3-ம் ஆண்டு ரூ. 36, 500 ,4-ம் ஆண்டு ரூ 40,000 ஊதியமாக வழங்கப்படும்.
இதில் 4 ஆண்டு பணி முடித்து விட்டு வெளியே செல்லும்போது ரூ.11.71 லட்சம் நிதிஉதவி வழங்கப்படும். தொடர்ந்து ரூ.48 லட்சத்திற்கு ஆயுள் காப்பீடும் வழங்கப்படும்.
பணியின் போது வீர மரணம் அடைந்தால் ரூ.1 கோடி இழப்பீடு தொகை வழங்கப்படும். காயமடைந்தால் இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும் பணிக்கு ஆண்,பெண் என இருபாலரும் தேர்வு செய்யப்படுவார்கள். 4 ஆண்டுகள் நிறைவடைந்த பிறகு 25 சதவீதம் பேருக்கு நிரந்தர பணி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்னிபாதை திட்டத்தின்கீழ் முப்படைகளில் வீரர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவதை எதிர்த்து வேலூரை சேர்ந்த இளைஞர்கள் போராட முடிவு செய்தனர். நேற்று மாலை முதல் சமூக வலைதளங்களில் போராட்டத்திற்கான அறிவிப்பு வெளியிட்டனர்.
அதில் அக்னி பாதை திட்டத்தில் முப்படை வீரர்கள் தேர்வு செய்யக்கூடாது. பழைய முறையிலேயே ராணுவத்திற்கு ஆட்கள் தேர்வு செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
வேலூர் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள கிரீன்சர்க்கிளில் போராட்டம் நடத்தப்போவதாகவும் இதில் இளைஞர்கள் அதிகளவில் கலந்து கொள்ள வேண்டும் என அழைப்பு விடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து இன்று காலை முதலே வேலூர் கிரீன் சர்க்கிளில் ஏராளமான இளைஞர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர். இதுபற்றி தகவல் அறிந்த வேலூர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
அவர்கள் கிரீன் சர்க்கிளில் போராட்டம் நடத்தினால் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படும். கலெக்டர் அலுவலகம் சென்று தங்களது கோரிக்கைகளை மனுவாக அளிக்கலாம் என தெரிவித்தனர்.
இதனைத்தொடர்ந்து இளைஞர்கள் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள ஆஞ்சநேயர் கோவில் முன்பு தேசிய கொடியுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் வேலூரில் பரபரப்பு ஏற்பட்டது.






