என் மலர்tooltip icon

    வேலூர்

    • கலெக்டர் குமாரவேல் பாண்டியன் பேட்டி
    • அனைவரும் முகக்கவசம், கிருமிநாசினி பயன்படுத்த வேண்டும்

    குடியாத்தம் :

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது ஒவ்வொரு நோயாளிகளிடம் சென்று மருத்துவமனையில் அளிக்கப்படும் சிகிச்சை விவரங்கள் குறித்து கேட்டறிந்தார்.

    நோயாளிகளிடம் எதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற விவரங்களையும் கேட்டறிந்தார் அப்போது நோயாளிகள் சில குறைபாடுகளை கூறினார்கள் அதனை உடனடியாக நிவர்த்தி செய்யுமாறு மருத்துவர்களை கேட்டுக்கொண்டார். அப்போது பணம் கேட்பதாக ஊழியர்கள் மீது நோயாளிகள் புகார் அளித்தனர். கலெக்டர் அந்த ஊழியரை அழைத்து எச்சரித்தார் தொடர்ந்து மருத்துவமனை கழிவறைகள் உள்ளிட்ட வைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வின் போது குடியாத்தம் உதவி கலெக்டர் எஸ்.தனஞ்செயன், நகர்மன்ற தலைவர் எஸ்.சவுந்தரராசன், ஒன்றியக்குழு தலைவர் என்.இ.சத்யானந்தம், தாசில்தார் லலிதா, நகராட்சி ஆணையாளர் திருநாவுக்கரசு, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கார்த்திகேயன், சாந்தி மருத்துவமனை மருத்துவ அலுவலர் பொறுப்பு கார்த்திகேயன், டாக்டர் ஹேமலதா உள்ளிட்டோர் ஆய்வின்போது உடனிருந்தனர்.

    தொடர்ந்து மாவட்ட கலெக்டர் குமரவேல் பாண்டியன் நிருபர்களிடம் பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:-

    குடியாத்தம் அரசு மருத்துவமனையில் அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு ஒவ்வொரு நோயாளி களிடம் சென்று நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்கப்பட்டது.

    மேலும் அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகள் அளிக்குமாறு மருத்துவர்களிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மருத்துவமனையில் நோயாளிகளிடம் பணம் கேட்கும் ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு பணி நீக்கம் செய்யப்படும் என எச்சரித்தார் மேலும் மருத்துவமனையில் நோயாளிகள் பயன்படுத்தும் படுக்கைகள் உடனடியாக மாற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.

    வேலூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை பணிகள் எடுக்கப்பட்டு வருகிறது பொது இடங்களில் அனைவரும் முக கவசம் அணிந்து செல்ல வேண்டும் குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு வரும் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வலியுறுத்தப்பட வேண்டும் முககவசம் அணிந்த பின்னே அனுமதிக்க வேண்டும் மேலும் முக கவசம் அணிவதை குடியாத்தம் உதவி கலெக்டர் மற்றும் நகராட்சி ஆணையாளர் உள்ளிட்ட அலுவலர்கள் கண்காணிப்பார்கள்.

    குடியாத்தம் அரசு மருத்துவமனையில் 4 படுக்கைகள் கொண்ட தனி வார்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது வேலூர் மாவட்டத்தில் இதுவரை 11 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    அதில் 8 பேர் வீட்டில் இருந்து தனிமைப் படுத்திக் கொண்டுள்ளனர் 3பேர் சிகிச்சையில் உள்ளனர் இவர்களுக்கு குறைந்த அளவு பாதிப்பு உள்ளது மேலும் நோயாளிகளுக்கு தேவையான ஆக்ஸிஜன் இருப்பில் உள்ளது.

    வேலூர் மாவட்டத்தில் முதல் மற்றும் இரண்டாவது தவணை தடுப்பூசி 100 சதவீதம் போடப்பட்டுள்ளது.12 வயது முதல் 18 வயது உள்ளவர்களுக்கான தடுப்பூசிகள் போட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் தடுப்பூசி பெற்றோர்களின் அனுமதியோடு போட நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

    அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் கிருமிநாசினி பயன்படுத்த வேண்டும் என்றார்.

    • அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை கரகோஷம் எதிரொலித்துள்ளது.
    • அ.தி.மு.க.வில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. நாளை பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.

    குடியாத்தம்:

    அ.தி.மு.க. பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு பெற வேண்டி குடியாத்தம் கோவிலில் அ.தி.மு.க.வினர் சிறப்பு யாகம் நடத்தினர்.

    அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை கரகோஷம் எதிரொலித்துள்ளது. எடப்பாடி அணியினர் ஒற்றை தலைமை தான் வேண்டும் என்று வழியுறுத்தி வருகின்றனர்.

    ஓ. பன்னீர்செல்வம் தரப்பினர் இரட்டை தலைமை தொடரலாம் என்று கூறி வருகின்றனர்.

    இதனால் அ.தி.மு.க.வில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. நாளை பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.

    இந்த நிலையில் குடியாத்தம் படவேட்டு எல்லையம்மன் கோவிலில் அ.தி.மு.க. பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி ஒருமனதாக தேர்வாக வேண்டி அ.தி.மு.க.வினர் சிறப்பு யாகம் செய்தனர்.

    நேற்று இரவு நடந்த இந்த யாகத்திற்கு முன்னாள் நகரமன்றத் தலைவர் எம். பாஸ்கர் தலைமை தாங்கினார்.

    நிகழ்ச்சியில் நகரமன்ற துணைத்தலைவர் பூங்கொடிமூர்த்தி, முன்னாள் நகர மன்றத் தலைவர் எஸ்.அமுதா, நகர அ.தி.மு.க. பொருளாளர் வி.என்.தனஞ்ஜெயன், மாவட்ட பிரதிநிதி எஸ்.என். சுந்தரேசன், முன்னாள் நகரமன்ற உறுப்பினர்கள் வி.என்.சிவப்பிரகாசம், எஸ். இமயவரம்பன், ஜி.தேவராஜ், வி.ஜி.பழனி உள்பட அதிமுகவினர் பலர் கலந்து கொண்டனர்.

    • தஞ்சாவூரைச் சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 38).
    • பள்ளத்தில் கவிழ்ந்து கிடக்கும் லாரியை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    பேரணாம்பட்டு:

    தஞ்சாவூரைச் சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 38). இவர் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள லாரி டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தில் டிரைவராக வேலை செய்து வந்தார்.

    நேற்று கர்நாடகா மாநிலம், கே.ஜி.எப்.ல் இருந்து கனரக லாரியில் அரிசி மூட்டைகளை ஏற்றிக்கொண்டு காஞ்சிபுரம் நோக்கி வந்து கொண்டு இருந்தார்.

    நேற்று இரவு 11 மணி அளவில் தமிழக ஆந்திர எல்லையான பத்தலபள்ளி மலைப்பாதையில் லாரி வந்து கொண்டு இருந்தது. அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி கண்ணிமைக்கும் நேரத்தில் 200 அடி பள்ளத்தில் விழுந்தது.

    அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் இதுகுறித்து பேர்ணம்பட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் ராஜன் பாபு மற்றும் போலீசார் தீயணைப்பு துறையினர் அடர்ந்த வனப்பகுதியில் கும்மிருட்டில் லாரி கவிழ்ந்து கிடந்த இடத்திற்கு சென்று பார்த்தனர்.

    அப்போது லாரி டிரைவர் வேல்முருகன் ஈடுபாடுகளில் சிக்கி ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். போலீசார், தீயணைப்பு துறையினர் உதவியுடன் 200 அடி பள்ளத்தில் இருந்து லாரி டிரைவரின் பிணத்தை கயிறு கட்டி மேலே இழுத்து வந்தனர்.

    மேலும் பள்ளத்தில் கவிழ்ந்து கிடக்கும் லாரியை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பேர்ணாம்பட்டு பத்தலபள்ளி மலைப்பாதையில் லாரிகள் அடிக்கடி கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் நிகழ்ந்து வருகிறது. இதனை தடுக்க போலீசார் மற்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • இரவில் மழை கொட்டியது.
    • சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் பொதுமக்கள் அவதி

    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று இரவு மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது.

    தமிழக ஆந்திர எல்லையில் பெய்து வரும் கனமழை காரணமாக மோர்தானா அணை மீண்டும் நிரம்பியுள்ளது. இன்று அணையில் இருந்து 163 கனஅடி உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் கவுண்டன்யா ஆற்றில் நீர்வரத்து ஏற்பட்டுள்ளது.

    மோர்தானா அணை மீண்டும் நிரம்பியதால் குடியாத்தம், பேரணாம்பட்டு மற்றும் கே.வி. குப்பம் தாலுகாவில் உள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வேலூர் மாநகர பகுதியில் நேற்று இரவு இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் சாலையோர பள்ளங்களில் தண்ணீர் தேங்கி உள்ளது.

    பாதாள சாக்கடை மற்றும் கால்வாய் பணிகள் நடந்து வரும் தெருக்களில் சேரும் சகதியுமாக காட்சி அளிக்கிறது. மாநகராட்சியில் உள்ள சில தெருக்களில் பணிகள் முடிந்தும் இன்னும் முழுமையாக சாலை போடப்படவில்லை.

    இதனால் சேறும் சகதியுமாக காட்சி அளிக்கிறது.பொதுமக்கள் இந்த தெருக்களில் செல்ல முடியாமல் கடும் அவதி அடைந்தனர்.

    வேலூர் கன்சால்பேட்டை சம்பத் நகர் பகுதியில் குடியிருப்பு பகுதிகளை மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. கொணவட்டம் சர்வீஸ் சாலையில் மழை நீர் தேங்கியுள்ளது. இதேபோல் வேலூரில் பல பகுதிகளில் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது.

    அதிகபட்சமாக பொன்னையில் 72 மில்லி மீட்டர் மழை பதிவானது.

    வேலூரில் பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-

    வேலூர் 27.8,காட்பாடி 15,திருவலம் 24, குடியாத்தம் 37.

    • மின்கம்பி அறுந்து விழுந்து மாணவன் பலி எதிரொலியால் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்.
    • சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள கோரிக்கை.

    வேலூர்:

    வேலூர் சாய் நாதபுரம் பாலமதிரோடு முருகன் நகரைச் சேர்ந்தவர் மணி விவசாயி. இவருடைய மனைவி ரேவதி. தம்பதியின் மகன் தினேஷ் குமார் (வயது 14) சாய்நாதபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று அவரது தாயுடன் விவசாய நிலத்திற்கு சென்று வந்தபோது அறுந்து விழுந்த மின் கம்பியை மிதித்து தினேஷ்குமார் பரிதாபமாக இறந்தார்.

    சாய் நாதபுரம் சாஸ்திரிநகர் முருகன் நகர் பகுதியில் பழமையான மின்கம்பிகளை மாற்ற வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக அதிமுக பிரமுகர் பி.எஸ்.பழனி கூறுகையில்:-

    முருகன் நகர் சாஸ்திரி நகர் பகுதியில் அடிக்கடி மின் தடை ஏற்படுகிறது. மேலும் குறைந்த மின் அழுத்தம் காரணமாக வீடுகளில் விளக்குகள் கூட எரிவதில்லை. இதனால் தொடர்ந்து பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் மின்கம்பி அறுந்து விழுந்ததால் விவசாய குடும்பத்தைச் சேர்ந்த பெற்றோர் தங்களது ஒரே மகனை இழந்து உள்ளனர். எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை.

    இதனால் முருகன் நகர் சாஸ்திரி நகர் பகுதியில் பழமையான மின் கம்பிகளை உடனடியாக மாற்ற வேண்டும். கன்னிகாபுரம் பகுதியில் துணை மின் நிலையம் அமைக்க வேண்டும். மேலும் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

    • அதிமுகவுக்கு தலைமை ஏற்க வேண்டும் என நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை வழங்கினர்
    • பூங்கொத்து கொடுத்து சந்திப்பு.

    வேலூர்:

    அ.தி.மு.க.தகவல் தொழில்நுட்ப பிரிவு வேலூர் மண்டலம் மற்றும் மதுரை மண்டல பொறுப்பாளர்கள் மண்டல செயலாளர்கள் வி.வி.ஆர். ராஜ்சத்யன், ஜனனீ பி.சதீஷ்குமார் ஆகியோர் தலைமையில் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமியை நேரில் சந்தித்தனர்.

    அப்போது அவரிடம் கழகப் பொதுக்குழுவில் ஒற்றை தலைமையில் கழகம் இயங்கவேண்டும். அதற்கு எடப்பாடி கே.பழனிசாமி கழக பொதுச் செயலாளராக தலைமை ஏற்க வேண்டும் என்று நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை வழங்கினர்.

    மேலும் பூங்கொத்து கொடுத்து அவருக்கு ஆதரவு தெரிவித்தனர்.

    • நடிகர் விஜய் பிறந்தநாள்
    • 48-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு ரத்தம் தானம் வழங்கினர்.

    வேலூர்:

    நடிகர் விஜய் பிறந்தநாளையொட்டி அகில இந்திய பொதுச் செயலாளர் புஸ்ஸி என். ஆனந்த், முன்னாள் எம், எல்.ஏ ஆலோசனைப்படி வேலூர் மாவட்ட இளைஞரணி தலைவர் என்.நவீன், மாவட்ட தொண்டரணி தலைவர் எம். சீனிவாசன், மகளிர் அணி தலைவி ஐ.தாஹிரா பானு தலைமையில் காட்பாடி ஒன்றிய தொண்டரணி சார்பில் எச். இப்ராகிம், எம்.சதீஷ்குமார் ஆகியோர் முன்னிலையில் ரத்ததான முகாம் நடந்தது.முகாமில் 48 -க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு ரத்தம் தானம் வழங்கினர்.

    நிகழ்ச்சியில் கே.கருணாகரன், எஸ்.சுரேஷ், ஜே சாரங்கன், என்..வாசுதேவன், டி.இளங்கோ, ஆர்.வெங்கட், சரத்குமார், பி.லோகேஷ், கே.நவீன், ரியாஸ், மகளிரணி வி. சுதா, வினோத், சச்சின் மற்றும் மக்கள் இயக்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • வேலூர் மாவட்ட தலைவர் வேல்முருகன் அறிக்கை
    • குடியாத்தம் அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம்.

    வேலூர்:

    விஜய் மக்கள் இயக்கம் சார்பாக வேலூர் மாவட்ட தலைவரும், பொறுப்பாளருமான வேல்முருகன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தளபதி விஜயின் பிறந்த நாளில் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நாளை (புதன்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி காலை 6 மணி அளவில் செல்லியம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேகமும், 8 மணி அளவில் வேலூர் திருப்பதி பெருமாள் கோவிலில் சிறப்பு அபிஷேகம் மற்றும் அன்னதானமும் வழங்கப்படுகிறது.

    தொடர்ந்து காலை 9 மணி அளவில் வேலூர் மாநகர சார்பில் அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் மற்றும் நலத்திட்ட உதவி தையல் மெஷின்கள் ஆகியவை வழங்கப்படுகிறது. 10 மணி அளவில் வேலூர் ஒன்றியம் சார்பில் பாலமதி முருகன் கோவிலில் சிறப்பு அபிஷேகம் மற்றும் ரத்த தான முகாம் நடைபெறுகிறது. 11 மணி அளவில் காட்பாடி ஒன்றியம் சார்பில் 248 பேருக்கு மாபெரும் நலத்திட்ட உதவிகள் மற்றும் 548 பேருக்கு பிரியாணி வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது.

    பகல் 12 மணி அளவில் வேலூர் மாவட்ட தலைமை மற்றும் குடியாத்தம் நகர தலைமை சார்பில் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கப்படுகிறது. பின்னர் வேலூர் மாவட்ட அலுவலகத்தில் 48 கிலோ கேக் வெட்டி ஏழை எளியோருக்கு வழங்கப்படுகிறது. மதியம் 1 மணி அளவில் 1048 பேருக்கு பிரியாணி வழங்கப்படுகிறது. மாவட்ட நகர ஒன்றிய பகுதிகளிலும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெறுகிறது.

    இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    • சர்வதேச யோகா தினத்தையொட்டி பயிற்சி
    • 3346 பள்ளி கல்லூரி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்

    வேலூர்:

    சர்வதேச யோகா தினத்தையொட்டி என்சிசி 10-வது பட்டாலியனுக்கு உட்பட்ட காட்பாடி டான்பாஸ்கோ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி , ஊரீஸ் கல்லூரி, முத்துரங்கம் அரசினர் கலைக் கல்லூரி , குடியாத்தம் திருமகள் ஆலை கல்லூரி, ராணிப்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளி, வாணியம்பாடி இஸ்லாமியா கல்லூரி, ஆம்பூர் மஸ்ருல் உலூம் கல்லூரி, ஏலகிரி டான்பாஸ்கோ கல்லூரி உள்பட பல மையங்களில் சேர்த்து மொத்தம் 3346 என்சிசி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சிக்கு கமாண்டிங் அதிகாரி லெப்டினன்ட் கர்னல் சஞ்சய் ஷர்மா தலைமை தாங்கி தொடக்கி வைத்து பேசியதாவது:-

    அனைவரும் கட்டாயம் தினமும் யோகா பயிற்சி செய்ய வேண்டும் . யோகா பயிற்சிகள் மேற்கொண்டால் உடல் மற்றும் மனம் உறுதியுடன் இருப்பது மட்டுமல்லாமல், எதிர்மறை எண்ணங்கள் மனதில் தோன்றாமல் இருக்க உதவுகிறது. மேலும் யோகா பயிற்சிகள் அனைத்து நாட்டவரும் மேற்கொள்கின்றனர். மன அழுத்தம் நீங்கி நீண்ட ஆயுள் பெற யோகா பயிற்சிகளை எல்லோரும் செய்ய வேண்டும் என வலியுறுத்தி பேசினார். என்சிசி 10-வது பட்டாலியனின் நிர்வாக அதிகாரி லெப்டினன்ட் கர்னல் எஸ்.கே. சுந்தரம், காட்பாடி அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் என்சிசி முதன்மை அலுவலர் க.ராஜா மற்றும் சுபேதார் மேஜர் சத்பீர்சிங் ஆகியோர் முன்னிலை வகித்தனர். என்சிசி யோகா பயிற்சிகளை வேலூர் உலக சமுதாய சேரை சங்கத்தைச் சேர்ந்த யோகா பேராசிரியர்கள் ஆர்.அருள்ஜோதி மற்றும் டி.சுந்தர பாண்டியன் ஆகியோர் மேற்கொண்டனர்.

    சர்வதேச யோகா தினத்தில் கழுத்து, தோள்பட்டை, தண்டு, முழங்கால் நீட்சி பயிற்சிகள், தாடாசனம், வ்ருஷாசனம், அர்த்த சக்ராசனம், திரிகோணாசனம், தண்டாசனம், பத்ராசனம், வஜ்ராசனம், அர்த்த உஷ்ட்ராசனம், சஷங்காசனம், வக்ராசனம், மக்ராசனம், சலபாசனம், சேதுபந்தாசனம், பவனமுக்தாசனம், சவாசனம், கபாலபத்தி, பிராணாயாமம் மற்றும் தியானம் ஆகியவற்றை என்சிசி மாணவர்கள் செய்தனர். சர்வதேச யோகா தினத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளைச் சேர்ந்த தலைமை ஆசிரியர்கள், முதல்வர்கள், என்சிசி அலுவலர்கள், ஆசிரியர்கள் உள்பட மாணவர்கள் கலந்து கொண்டனர். 10 வது பட்டாலியனின் ராணுவ அவில்தார்கள் ராமாராவ், துரைமுருகன், ரமேஷ், வீரமணி உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.

    • புதுச்சேரி லாஸ்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் (51)ரியல் எஸ்டேட் அதிபர்.
    • சரவணன் இறப்பில் மர்மம் உள்ளது என்று அவரின் உறவினர்கள் மற்றும் புதுவை எம்.எல்.ஏ வைத்தியநாதன் குற்றம் சாட்டினர்.

    வேலுார்:

    புதுச்சேரி லாஸ்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் (51)ரியல் எஸ்டேட் அதிபர். இவர் காட்பாடி அருகே 13 ஏக்கர் நிலம் வாங்குவதற்கு நிலத்தின் உரிமையாளர்களிடம் அட் வான்ஸ் தொகை கொடுத்துள்ளார்.

    அந்த இடத்தை பத்திரப்பதிவு செய்து ஒப்படைக்காமல், நிலத்தின் உரிமையாளர்கள் காலம் தாழ்த்தியதாக கூறப்படுகிறது. இதனால் சரவணன் தான் கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்டுள்ளார்.

    இதுதொடர்பாக காட்பாடி காந்தி நகரில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் கடந்த 18-ந்தேதி சரவணன் மற்றும் சில முக்கிய புள்ளிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். அதன்பிறகு சிறிது நேரத்தில் மர்மமான முறையில் சரவணன் இறந்து கிடந்தார்.

    சரவணன் உடலை மீட்ட விருதம்பட்டு போலீசார் பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சரவணன் இறப்பில் மர்மம் உள்ளது என்று அவரின் உறவினர்கள் மற்றும் புதுவை எம்.எல்.ஏ வைத்தியநாதன் குற்றம் சாட்டினர்.

    இதையடுத்து இந்த வழக்கில் சரவணன் இறப்பு தொடர்பாக சில முக்கிய புள்ளிகளை பிடித்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

    ரியல் எஸ்டேட் அதிபர் சரவணன் பிரேத பரிசோதனை முடிவு வந்துள்ளது. அதில் அவர் உடலில் ஆல்கஹால் இல்லை. நெஞ்சு எலும்பு முறிந்து பல இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளது. இதன்மூலம், சரவணன் அடித்து கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று தெரிகிறது.

    மேலும் அன்று இரவு நடந்த ஆலோசனையில் யாரெல்லாம் இருந்தனர். அவர்களுக்கும் சரவணன் வாங்க நினைத்த இடத்துக்கும் என்ன தொடர்பு என்று விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இந்த வழக்கில் அரசியல் கட்சியை சேர்ந்த முக்கிய புள்ளி உட்பட 3 பேரை பிடித்து தீவிரமாக விசாரணை செய்யப்பட்டு வருகிறது. சரவணன் இறப்பில் உள்ள மர்மங்கள் அனைத்துக்கும் விரைவில் விடை கிடைத்துவிடும் என்றனர் .

    • சேறும், சகதியுமான தெருக்களால் பொதுமக்கள் அவதி
    • மோர்தானா அணை மீண்டும் நிரம்பியது.

    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று இரவு மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது.

    தமிழக- ஆந்திர எல்லையில் பெய்து வரும் கனமழை காரணமாக மோர்தானா அணை மீண்டும் நிரம்பியுள்ளது.அணையில் உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் கவுண்டன்யா ஆற்றில் நீர்வரத்து ஏற்பட்டுள்ளது.

    மோர்தானா அணை மீண்டும் நிரம்பியதால் குடியாத்தம், பேரணாம்பட்டு மற்றும் கே.வி. குப்பம் தாலுகாவில் உள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    வேலூர் மாநகர பகுதியில் நேற்று இரவு இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் சாலையோர பள்ளங்களில் தண்ணீர் தேங்கி உள்ளது.

    பாதாள சாக்கடை மற்றும் கால்வாய் பணிகள் நடந்து வரும் தெருக்களில் சேரும் சகதியுமாக காட்சி அளிக்கிறது. மாநகராட்சியில் உள்ள சில தெருக்களில் பணிகள் முடிந்தும் இன்னும் முழுமையாக சாலை போடப்படவில்லை.

    இதனால் அந்த தெருக்கள் சேறும் சகதியுமாக உள்ளது. பொதுமக்கள் இந்த தெருக்களில் செல்ல முடியாமல் கடும் அவதி அடைந்தனர். அதிகபட்சமாக காட்பாடியில் 44 மில்லி மீட்டர் மழை பதிவானது.

    வேலூர் மாவட்டத்தில் பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-

    வேலூர் 32.4,காட்பாடி 44 திருவலம் 43.4, குடியாத்தம் 8.25.

    • தாய் கண் முன்னே பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    வேலூர் சாய்நாதபுரம் அடுத்த பாலமதிரோடு முருகன் நகரைச் சேர்ந்தவர் மணி விவசாயி. இவருடைய மனைவி ரேவதி தம்பதியின் ஒரே மகன் தினேஷ் குமார் (வயது 14) சாய்நாதபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.

    இவர்களுக்குச் சொந்தமான விவசாய நிலத்தை ஒட்டியே வீடு உள்ளது. நிலத்தில் கீரை உள்ளிட்ட காய்கறிகள் பயிரிட்டுள்ளனர்.

    இதில் விளையும் கீரை காய்கறிகளை ரேவதி விற்பனை செய்துவந்தார். இன்று காலை நிலத்தில் அகத்திக்கீரை அறுத்து கட்டினர். அதனை ஒரு சைக்கிளில் வைத்துக்கொண்டு தினேஷ்குமார் சைக்கிளைத் தள்ளிக் கொண்டு வந்தார். அவரது தாய் ரேவதி பின்னால் கீரை கட்டை பிடித்தபடி நடந்து வந்து கொண்டிருந்தனர்.

    இந்த நிலையில் விவசாய நிலத்தில் நேற்றிரவு மின்கம்பி அறுந்து கிடந்துள்ளது. இதனை அவர்கள் கவனிக்கவில்லை.

    சைக்கிளைத் தள்ளிக்கொண்டு வந்த தினேஷ்குமார் மின் கம்பியை தெரியாமல் மிதித்து விட்டார். மின்சாரம் அவர் மீது பாய்ந்தது. மேலும் சைக்கிளை பிடித்துக் கொண்டு வந்த ரேவதியையும் மின்சாரம் தாக்கியது.

    இருவரும் தூக்கி வீசப்பட்டனர்.இதில் தினேஷ்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். தனது கண் முன்பே மகன் இறந்ததைக் கண்டு அலறி துடித்தார்.

    இதுகுறித்து தகவலறிந்த பாகாயம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேலாயுதம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

    பலியான மாணவன் உடலை மீட்டு அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நேற்று இரவு வேலூர் மாநகர பகுதியில் பரவலாக மழை பெய்தது. பலத்த காற்று வீசியது.இதில் மின்கம்பி அறுந்துள்ளது. மின்கம்பிகள் அறுந்து விழாமல் இருக்கும் வகையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். இது தொடர்பாக மின் அதிகாரிகள் அலட்சியமாக பதில் கூறுகின்றனர். ஒரே மகனை இழந்த தம்பதிக்கு அரசு உதவ வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர். மேலும் மின்கம்பிகள் அறுந்து கிடந்தால் அதன் அருகில் செல்ல வேண்டாம்.தொடக் கூடாது என மின் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    ×