என் மலர்
நீங்கள் தேடியது "Dinesh Kumar died tragically after stepping on an electric wire"
- மின்கம்பி அறுந்து விழுந்து மாணவன் பலி எதிரொலியால் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்.
- சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள கோரிக்கை.
வேலூர்:
வேலூர் சாய் நாதபுரம் பாலமதிரோடு முருகன் நகரைச் சேர்ந்தவர் மணி விவசாயி. இவருடைய மனைவி ரேவதி. தம்பதியின் மகன் தினேஷ் குமார் (வயது 14) சாய்நாதபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று அவரது தாயுடன் விவசாய நிலத்திற்கு சென்று வந்தபோது அறுந்து விழுந்த மின் கம்பியை மிதித்து தினேஷ்குமார் பரிதாபமாக இறந்தார்.
சாய் நாதபுரம் சாஸ்திரிநகர் முருகன் நகர் பகுதியில் பழமையான மின்கம்பிகளை மாற்ற வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக அதிமுக பிரமுகர் பி.எஸ்.பழனி கூறுகையில்:-
முருகன் நகர் சாஸ்திரி நகர் பகுதியில் அடிக்கடி மின் தடை ஏற்படுகிறது. மேலும் குறைந்த மின் அழுத்தம் காரணமாக வீடுகளில் விளக்குகள் கூட எரிவதில்லை. இதனால் தொடர்ந்து பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் மின்கம்பி அறுந்து விழுந்ததால் விவசாய குடும்பத்தைச் சேர்ந்த பெற்றோர் தங்களது ஒரே மகனை இழந்து உள்ளனர். எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை.
இதனால் முருகன் நகர் சாஸ்திரி நகர் பகுதியில் பழமையான மின் கம்பிகளை உடனடியாக மாற்ற வேண்டும். கன்னிகாபுரம் பகுதியில் துணை மின் நிலையம் அமைக்க வேண்டும். மேலும் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.






