என் மலர்
உள்ளூர் செய்திகள்

தமிழக-ஆந்திர எல்லையில் பரவலாக மழை பெய்து வருவதால் பாலாற்றில் தண்ணீர் வரத்து ஏற்பட்டுள்ளது. வேலூர் பாலாற்றில் பாய்ந்தோடி செல்லும் தண்ணீர்.
வேலூர் மாவட்டத்தில் இடி, மின்னலுடன் பலத்த மழை
- சேறும், சகதியுமான தெருக்களால் பொதுமக்கள் அவதி
- மோர்தானா அணை மீண்டும் நிரம்பியது.
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று இரவு மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது.
தமிழக- ஆந்திர எல்லையில் பெய்து வரும் கனமழை காரணமாக மோர்தானா அணை மீண்டும் நிரம்பியுள்ளது.அணையில் உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் கவுண்டன்யா ஆற்றில் நீர்வரத்து ஏற்பட்டுள்ளது.
மோர்தானா அணை மீண்டும் நிரம்பியதால் குடியாத்தம், பேரணாம்பட்டு மற்றும் கே.வி. குப்பம் தாலுகாவில் உள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வேலூர் மாநகர பகுதியில் நேற்று இரவு இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் சாலையோர பள்ளங்களில் தண்ணீர் தேங்கி உள்ளது.
பாதாள சாக்கடை மற்றும் கால்வாய் பணிகள் நடந்து வரும் தெருக்களில் சேரும் சகதியுமாக காட்சி அளிக்கிறது. மாநகராட்சியில் உள்ள சில தெருக்களில் பணிகள் முடிந்தும் இன்னும் முழுமையாக சாலை போடப்படவில்லை.
இதனால் அந்த தெருக்கள் சேறும் சகதியுமாக உள்ளது. பொதுமக்கள் இந்த தெருக்களில் செல்ல முடியாமல் கடும் அவதி அடைந்தனர். அதிகபட்சமாக காட்பாடியில் 44 மில்லி மீட்டர் மழை பதிவானது.
வேலூர் மாவட்டத்தில் பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-
வேலூர் 32.4,காட்பாடி 44 திருவலம் 43.4, குடியாத்தம் 8.25.






