என் மலர்tooltip icon

    வேலூர்

    • கோவிலுக்கு நேர்த்திக் கடனுக்காக வளர்த்து வந்தார்
    • போலீசார் விசாரணை

    குடியாத்தம் :

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கொட்டாரமடுகு கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் (வயது 40) விவசாயி. இவர் குடியாத்தம் உழவர் சந்தையில் வாழை இலை வியாபாரம் செய்து வருகிறார்.

    இவர் கடந்த ஓராண்டாக ஆடு ஒன்றை வளர்த்து வந்தார். இந்த ஆட்டை கோவிலுக்கு நேர்த்திக் கடனுக்காக வளர்த்து வருகிறார்.

    இந்நிலையில் நேற்று அதிகாலை முருகன் பார்த்த போது வீட்டில் இருந்த ஆடு காணவில்லை இதனையடுத்து அந்த கிராமப்பகுதியில் தேடியபோது அதே கிராமத்தைச் சேர்ந்த 3 பேர் ஆட்டை வெட்டி கூறு போட்டுக் கொண்டிருப்பதை கண்டு திடுக்கிட்டுள்ளார்.

    இதனையடுத்து முருகன் கூறுபோட்ட ஆட்டு இறைச்சி, ஆட்டுத்தலை உள்ளிட்டவைகளுடன் குடியாத்தம் தாலுகா போலீஸ் நிலையத்தில் தனது ஆட்டை கொன்று கூறுபோட்டதாக 3 பேர் மீது புகார் அளித்தார். இதைத்தொடர்ந்து குடியாத்தம் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்.

    குடியாத்தம் அருகே கிராமத்தில் ஆட்டை கூறுபோட்ட சம்பவத்தில் ஆட்டு இறைச்சி மற்றும் ஆட்டுதலை உடன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • வேலூர் மாவட்டத்தில் கொடிகட்டி பறப்பதாக புகார்
    • போலீசார் தீவிரமாக கண்காணிப்பு

    வேலூர் :

    வேலூர் அருகே உள்ள விரிஞ்சிபுரம் பஜார் வீதியில் உள்ள மரத்தடியில் காட்டன் சூதாட்டம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    விரிஞ்சிபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காட்டன் சூதாட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த குடியாத்தம் நெல்லூர்பேட்டையை சேர்ந்த கணபதி (வயது26) பிரகாஷ் (29) பிச்சனூரை சேர்ந்த வெங்கடேசன் (51) ஆகியோரை மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.

    அறிவழகன் என்பவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

    வேலூர் மாவட்டத்தில் காட்டன் சூதாட்டம் அதிக அளவில் நடப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

    இது குறித்து உடனடி நடவடிக்கை எடுத்தால் மட்டுமே கூலித் தொழிலாளர் குடும்பங்களை சூழ்ச்சியில் இருந்து காப்பாற்ற முடியும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    இது தொடர்பாக சமூக ஆர்வலர்கள் கூறுகையில்:-

    நம்பர் விளையாட்டான' காட்டன் சூதாட்டம்' வேலூர் பகுதிகளில் அமோகமாக நடக்கிறது.

    ஆட்டோ டிரைவர்கள், காய்கறி, பூ, பழம் விற்கும் சிறு வியாபாரிகள், கட்டிட வேலை உட்பட தினக் கூலிக்குச் செல்லும் ஏழைத் தொழிலாளர்கள் என இவர்களைக் குறிவைத்தே காட்டன் சூது நடத்தப்படுகிறது. 'ஒரு ரூபாய் செலுத்தினால் 1,000 ரூபாய் கிடைக்கும்.

    அதிர்ஷ்டம் வீட்டுக் கதவைத் தட்டுது' என்று ஆசை வார்த்தை கூறி, வியர்வை சிந்தி உழைக்கும் மக்களை இதில் ஈடுபட வைக்கின்றனர்.

    மாலை நேரங்களில் முடிவுகள் அறிவிக்கப்ப டுகின்றன. இதுவரை ஒரு தொழிலாளிக்கும் 'ஜாக்பாட்' அடிக்கவில்லை. மீட்டர் வட்டிக்குக் கடன் வாங்கி காட்டன் விளையாடிய பல பேர் வீடு, பொருள்களை இழந்து நடுத்தெருவில் நிற்கிறார்கள்.

    எனவே வேலூர் மாவட்டத்தில் காட்டன் சூதாட்ட த்தை முழுமையாக ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    • தொடர் மழையால் சாலைகள் சேறும் சகதியுமானது
    • சீரமைக்க சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்

    வேலூர் :

    காட்பாடி ரயில்வே மேம்பாலம் பலமிழந்து காணப்பட்டதால் அதனை உறுதிபடுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    இதனால் சித்தூர் மற்றும் குடியாத்தம் வழியாக செல்லும் வாகனங்கள் ஓடை பிள்ளையார் கோவில் அருகே இடது புறத்திலிருந்து மதி நகர், ஹவுசிங் போர்டு சாலை வழியாக மாற்றுப்பதையில் இயக்கப்படுகின்றன.

    தற்போது வேலூர் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக ஹவுசிங் போர்டு சாலை சேறும் சகதியுமாக மாறி வாகன போக்குவரத்திற்கு லாயக்கற்று காணப்படுகிறது.

    இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சேற்றில் சிக்கி கீழே விழுந்து எழுந்து செல்கின்றனர். அந்த பகுதியில் வாகனங்கள் ஊர்ந்து செல்வதால் போக்குவரத்து நெரிசலில் சிக்கி வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர்.

    எனவே சாலையை சீரமைக்க வேண்டும். என வாகன ஓட்டிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • இணையதள மூலம் விண்ணப்பிக்கலாம்
    • ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் விண்ணப்பிக்கக் கூடாது

    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தகுதியுள்ள ஆசிரியர்களை http :nationalawardstoteachers.education.gov.in முகவரியில் நேரிடையாக பதிவு செய்ய தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தேசிய நல்லாசிரியர் விருதுக்கு அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் நேரிடையாக இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.

    ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் விண்ணப்பிக்கக் கூடாது. 2021 - ம் ஆண்டில் குறைந்தது 4 மாதங்களாவது முறையான பணியில் பணியாற்றி இருக்க வேண்டும். (2021 ஏப்ரல் 30 வரை) என்ற இணையதள அலுவலகங்களில் நிர்வாகப்பணி மேற்கொள்ளும் ஆசிரி யர்கள் விண்ணப்பிக்க கூடாது.

    மனிதவள மேம்பாட்டுத்துறையில் இணையதளத்தில் குறிப்பிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, ஆசிரியர்கள் 30.06.2022 - க்குள் மேற்குறிப்பிட்ட இணைய தளத்தில் மட்டுமே நேரிடையாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    • மாணவிகளுக்கு பரிசு
    • ஸ்ரீநாராயணி செவிலியர் கல்லூரி சார்பில் நடந்தது

    வேலூர்:

    வேலூர் ஸ்ரீபுரம் ஸ்ரீநாராயணி செவிலியர் கல்லூரியில் சர்வதேச யோகா தினத்தையொட்டி யோகா பயிற்சி நடந்தது.

    இதில் மத்திய அரசின் மக்கள் தொடர்பு கள அலுவலக அலுவலர் ஜெயகணேஷ் தலைமையில் நிகழ்ச்சியில் செவிலியர் கல்லூரியின் இயக்குனர் டாக்டர் பாலாஜி தொடங்கி வைத்தார்.

    அப்போது இயக்குனர் பாலாஜி பேசியதாவது:-

    யோகா கலை மனதிற்கும், உடல் ஆரோக்கியத்திற்கும் முக்கியத்துவம் பெறுகிறது. மருத்துவ செவிலியர்கள் அனைவரும் யோகா கலையை கற்றுக் கொள்வது நல்லது. வரும் நோயாளிகளுக்கு யோகா கலை மூலம் சில நோய்களுக்குதீர்வு காண சொல்லிக் கொடுப்பதன் மூலம் உடல் ஆரோக்கியம் பெற வழிவகுக்கும்.

    ஒவ்வொரு நாளும் யோகா பயிற்சியை அனைவரும் செய்ய வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

    பின்னர்யோகா பயிற்சியில் ஈடுபட்ட செவிலிர்களுக்கு 75வது சுதந்திர தின விழா சிறப்பு மலர் மற்றும் மத்திய அரசின் திட்டங்கள் குறித்த நூல்களையும் யோகா பயிற்சி அவசியம் குறித்த கையேடு களையும் மத்திய அரசின் மக்கள் தொடர்பு அலுவலகம் சார்பில் வழங்கப்பட்டது.

    முன்னதாக யோகா கலையை அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் செவிலியர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு ஊர்வலமும் நடைபெற்றது.

    அதன் பின்னர் அணைக்கட்டு அருகே புலிமேடு என்ற கிராமத்தில், யோகா கலை மற்றும் 75 ஆவது சுதந்திரதின அமுத பெருவிழா குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது, விழிப்புணர்வு வினாடி வினா நிகழ்ச்சியில் வெற்றிபெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதனையொட்டி நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் மருத்துவ துறை துணை இயக்குனர், பானுமதி துணை இயக்குநர் காசநோய் பிரிவு ஜெயஸ்ரீ, மாவட்ட விளையாட்டு அலுவலர் பெரியகருப்பன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.

    வட்டார மருத்துவ அலுவலர் சசிகுமார் மற்றும் பொதுமக்கள், செவிலியர்கள் பலர் பங்கேற்றனர்.

    • மணல் கொட்டி பொதுமக்கள் அணைத்தனர்
    • பெரும் விபத்து தவிர்ப்பு

    வேலூர்:

    வேலூர் தொரப்பாடி எழில்நகர் ராஜாஜி தெருவை சேர்ந்தவர் சுகுமார். இவரது வீட்டில் உள்ள மின் மீட்டர் எலக்ட்ரிக் பாக்ஸ் திடீரென இன்று காலை தீ பற்றி எரிந்தது.

    இதனால் வீடு முழுவதும் புகை மண்டலம் எழுந்தது. அதிச்சியடைந்த அவர்கள் வேலூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்றனர். ஆனால் அதற்குள் சுகுமார் குடும்பத்தினர் மணல் எடுத்து வந்து மீட்டர் பாக்ஸ் மீது தூற்றினர்.

    மணல் பட்டதில் மீட்டர் பாக்ஸில் தீ அணைந்தது. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

    சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் துணிகரமாக தீ அணைத்த குடும்பத்தினருக்கு பாராட்டு தெரிவித்தனர். மின் ஒயர் மீட்டர் பாக்ஸ் போன்றவற்றில் தீ விபத்து ஏற்பட்டால் மணல், மரக்கட்டைகளை கொண்டு தீயை அணைக்க வேண்டும். தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயற்சிக்கக் கூடாது என தெரிவித்தனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • 15 குழந்தைகளுக்கு தங்க மோதிரம்
    • நலத்திட்ட உதவிகள் வழங்கினர்

    வேலூர்:

    நடிகர் விஜய் பிறந்த நாளையொட்டி வேலூர் மாவட்ட விஜய் மக்கள் இயக்க இளைஞரணி சார்பில் மாவட்ட தலைவர் நவீன் தலைமையில் வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவிலில் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது.

    இதையடுத்து சேண்பாக்கத்தில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் காலை உணவு வழங்கப்பட்டது.சத்துவாச்சாரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்று பிறந்த 15 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கப்பட்டது.

    சத்துவாச்சாரி கலெக்டர் அலுவலகம் அருகே 1048 பேருக்கு சிக்கன் பிரியாணி மற்றும் இலவச வேஷ்டி, சேலை, தையல் எந்திரம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. அணைக்கட்டு கிழக்கு, மத்திய ஒன்றிய இளைஞரணி சார்பாக பலவன்சாத்து குப்பத்தில் உள்ள முதியோர் இல்லத்தில் மதிய உணவு வழங்கப்பட்டது.

    மேலும் விஜய் மக்கள் இயக்க கொடி ஏற்றி, பெயர் பலகையை திறந்து வைத்தார். மாலை சேண்பாக்கத்தில் இளைஞரணி சார்பாக நலத்திட்ட உதவிகளை மாவட்ட இளைஞரணி தலைவர் எ.நவீன், தொண்டர் அணி தலைவர் சீனிவாசன், இளைஞரணி செயலாளர் கருணாகரன் ஆகியோர் வழங்கினர்.

    சத்துவாச்சாரியில் நடந்த பொது மருத்துவம் முகாமில் திரளானோர் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனர்.

    நிகழ்ச்சியில் இளைஞர் அணி பொருளாளர் ஆர்.வெங்கட், இளைஞரணி மாவட்ட ஆலோசகர் டாக்டர் என் வெற்றிவேல், தொண்டரணி பொருளாளர் எஸ்.சுரேஷ், தொண்டரணி இணை செயலாளர் லோகேஷ் மற்றும் மாவட்ட இளைஞர் அணி தொண்டர் அணி நிர்வாகிகள் திரளானோர் கலந்து கொண்டனர்.

    • வேலூரில் கும்பல் அட்டூழியம்
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    சென்னையை சேர்ந்தவர் மாதினி (வயது 56) வேலூர் அடுத்த மேல்மொணவூர் அரசு ஐ.டி.ஐ. யில்ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.இதற்காக மெல்மொணவூர் அம்மன் நகரில் வாடகை வீட்டில் தங்கியுள்ளார். தினமும் அங்கிருந்து வேலைக்கு சென்று வந்தார்.

    நேற்று மாலை 5.30 மணிக்கு பணி முடிந்து தேசிய நெடுஞ்சாலையில் வேலூர் நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர்கள் 2 பேர் நோட்டமிட்டனர்.

    அந்த நேரத்தில் சாலையில் ஆள் நடமாட்டம் குறைவாக இருந்தது. இதனை பயன்படுத்திக் கொண்ட மர்ம நபர்கள் பைக்கில் மாதினியை பின் தொடர்ந்து வந்தனர்.

    திடீரென பைக்கில் பின்னால் இருந்த மர்ம நபர் மாதினி அணிந்திருந்த 3 பவுன் நகையை பறித்தார். இதனால் திடுக்கிட்ட மாதினி அலறி கூச்சலிட்டார்.அதற்குள் மர்ம நபர்கள் பைக்கில் பள்ளிகொண்டா நோக்கி தப்பி சென்று விட்டனர்.

    பட்டப்பகலில் ஆசிரியையிடம் நகை பறித்த சம்பவம் தேசிய நெடுஞ்சாலையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதுகுறித்து மாதினி விரிஞ்சிபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். நகை பறித்த வாலிபர் ஹெல்மெட் எதுவும் அணியவில்லை.

    இதனால் அவர்களை அடையாளம் காண்பதற்காக தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர்.

    விரிஞ்சிபுரம்யொட்டி உள்ள பொய்கை தேசிய நெடுஞ்சாலையில் கடந்த வாரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குடும்பத்தினர் சென்ற பைக் மீது மோதி மர்மநபர்கள் செயின்பறித்தனர்.

    இதனைத் தொடர்ந்து தற்போது ஐ.டி.ஐ ஆசிரியையிடம் நகை பறிப்பு நடந்துள்ளது.

    மேல்மொணவூர் முதல் கழனிப்பாக்கம் தேசிய நெடுஞ்சாலையில் இரவு நேரங்களில் மின் விளக்குகள் எதுவும் இல்லை.அந்த பகுதி முழுவதும் இருட்டாக உள்ளது. மேலும் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி அதிகளவில் கிராமங்கள் உள்ளன.

    இதனை பயன்படுத்திக் கொண்டு மர்மநபர்கள் துணிந்து நகை பறிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.தேசிய நெடுஞ்சாலையில் மின் விளக்குகள் அமைக்க வேண்டும்.கூடுதலாக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி யுள்ளனர்.

    • போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார்
    • சைபர் கிரைம் போலீசார் விசாரணை

    வேலூர் :

    வேலூர் மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தியின் செல்போன் எண்ணிற்கு இன்று காலை வாட்ஸ் அப்பில் ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் கலெக்டர் படத்துடன் வந்த அந்த வாட்ஸ்அப் எண்ணில் கிப்ட் வவுச்சர் குறைந்த கட்டணத்தில்ரூ.10 ஆயிரத்துக்கு விற்பனை செய்ய படுகிறது. உடனடியாக 10 கிப்ட் வவுச்சர் வாங்கவும் என அதில் கூறியிருந்தது.

    இதனால் சந்தேகம் அடைந்த மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி உடனடியாக இது குறித்து கலெக்டர் அலுவலக பொது மேலாளர் பாலாஜிக்கு தகவல் தெரிவித்தார். அவர் இது குறித்து ஆய்வு செய்தபோது கலெக்டர் பெயரில் மர்ம நபர்கள் மோசடியில் ஈடுபட முயன்றது தெரியவந்தது.

    இது தொடர்பாக வேலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்தனர். அதில் கலெக்டர் படத்துடன் மோசடி செய்ய முயன்ற கும்பல் ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் இருந்து தகவல் அனுப்பியது தெரியவந்துள்ளது.

    இதுதொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    • மாணவர்களுக்கு விதவிதமான கட்டிங்
    • கடைகளுக்கு சீல் வைக்கப்படும்.

    வேலூர்:

    வேலூர் மாவட்டத்திலுள்ள பள்ளிகளில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறுகையில்:

    பள்ளி மாணவர்கள் சீருடை, சிகை அலங்காரம் ஆகியவற்றை ஒரே மாதிரியாக அணிந்து வர வேண்டும். அதற்காக சலூன் கடைகாரர்கள், தையல்காரர்களை அழைத்து அறிவுறுத்தியுள்ளோம்.

    மாணவர்களுக்கு தலை முடியை சீராக வெட்டாத சலூன் கடை காரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். கடைகளுக்கு சீல் வைக்கப்படும்.

    ஏற்கனவே விதவிதமாக முடிவெட்டிக் கொண்ட வர்களுக்கு இலவசமாக முடியை திருத்தி வெட்டவேண்டும். அரசு வழங்கும் சீருடைகளை மாற்றி முழங்கால் தெரியும் வரை தைத்துக் கொடுக்கும் தையல் கடைக்காரர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    அதன்படி, மாணவர்களுக்கு தலை முடியை சீராக வெட்டாத சலூன் கடை காரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் எச்சரிக்கை விடுத்திருப்பது முடிதிருத்தம் செய்யும் தொழிலாளர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

    இதுகுறித்து தமிழ்நாடு முடிதிருத்தும் தொழிலாளர்கள் சங்கத்தின் வேலூர் மாவட்ட செயலாளர் விஜயகுமார் கூறியதாவது;

    வேலூர் மாவட்டத்தில் சிகை அலங்கார தொழிலில் சுமார் 5 ஆயிரம் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் பெரும்பாலும் சிறிய முதலீட்டில் தொழில் செய்பவர்கள்தான். மேலும், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அவர்களின் விருப்பத்தின்பேரிலேயே நாங்கள் முடிதிருத்தம் செய்ய வேண்டியுள்ளது.

    இதில், பள்ளி மாணவர்களின் விருப்பத்தை பூர்த்தி செய்ய மறுத்தால் அவர்கள் வேறு கடையை நாடிச் செல்லக்கூடும். இதனால், சிகை அலங்கார தொழிலாளர்களுக்குத் தான் வருவாய் இழப்பு ஏற்படும்.

    மாணவர்களுக்கு முடிதிருத்தம் செய்து கொள்வதில் நாங்கள் உத்தரவிட முடியாது. இதனை அந்தந்த மாணவர்களின் பெற்றோரும், பள்ளி தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள்தான் விடுக்க முடியும். தவிர, சிகை அலங்காரத் தொழிலில் ஈடுபட்டுள்ள பெரிய நிறுவனங்கள்தான் நவீனம் என்ற பெயரில் இத்தகைய சமூக சீர்கேடான நடவடிக்கைகளை அதிகளவில் மேற்கொள்கின்றன.

    இதுதொடர்பாக கலந்தாலோசிக்காமல் சாதாரண நிலையில் தொழில் புரியும் எங்களுக்கு எச்சரிக்கை விடுத்திருப்பது மாவட்டத்திலுள்ள அனைத்து முடிதிருத்தும் தொழிலாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

    எனவே, மாணவர்களுக்கு சிகை அலங்காரம் செய்வதில் சிகை அலங்கார தொழிலாளர்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கைகளை திரும்பப் பெற்று, மாணவர்களின் பெற்றோர், பள்ளி தலைமையாசிரியர்கள், ஆசிரியர்களுக்கு உத்தரவுகள் பிறப்பிக்க வேண்டும்.

    இதுதொடர்பாக தமிழ்நாடு முடிதிருத்தும் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் மனு அளிக்க உள்ளோம் என்றார்.

    • லாரிகள் அடிக்கடி கவிழ்ந்து விபத்துக்குள்ளாகின்றன
    • நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

    பேரணாம்பட்டு:

    தஞ்சாவூரைச் சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 38). இவர் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள லாரி டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தில் டிரைவராக வேலை செய்து வந்தார்.

    நேற்று கர்நாடகா மாநிலம், கே.ஜி.எப். ல் இருந்து கனரக லாரியில் அரிசி மூட்டைகளை ஏற்றிக்கொண்டு காஞ்சிபுரம் நோக்கி வந்து கொண்டு இருந்தார்.

    நேற்று இரவு 11 மணி அளவில் தமிழக ஆந்திர எல்லையான பத்தலபள்ளி மலைப்பாதையில் லாரி வந்து கொண்டு இருந்தது. அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி கண்ணிமைக்கும் நேரத்தில் கிடுகிடுவென 200 அடி பள்ளத்தில் விழுந்தது.

    அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் இதுகுறித்து பேர்ணம்பட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் ராஜன் பாபு மற்றும் போலீசார் தீயணைப்பு துறையினர் அடர்ந்த வனப்பகுதியில் கும்மிருட்டில் லாரி கவிழ்ந்து கிடந்த இடத்திற்கு சென்று பார்த்தனர்.

    அப்போது லாரி டிரைவர் வேல்முருகன் ஈடுபாடுகளில் சிக்கி ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். போலீசார், தீயணைப்பு துறையினர் உதவியுடன் 200 அடி பள்ளத்தில் இருந்து லாரி டிரைவரின் பிணத்தை கயிறு கட்டி மேலே இழுத்து வந்தனர்.

    மேலும் பள்ளத்தில் கவிழ்ந்து கிடக்கும் லாரியை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பேர்ணாம்பட்டு பத்தலபள்ளி மலைப்பாதையில் லாரிகள் அடிக்கடி கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் நிகழ்ந்து வருகிறது. இதனை தடுக்க போலீசார் மற்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • 4 பேரிடம் விசாரணை
    • உடலில் காயங்கள் உள்ளதால் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது

    வேலூர்:

    புதுச்சேரி லாஸ் பேட்டையைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் சரவணன் (வயது 51). காட்பாடியில் உள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்த அவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

    இது தொடர்பாக விருதம்பட்டு போலீசார் சந்தேக மரணத்தின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.

    இந்த வழக்கில் அரசியல் கட்சி பிரமுகருக்கு நேரடியாக தொடர்பு இருக்கிறது என்றும், அதுகுறித்து முறையாக விசாரிக்க வேண்டும் என்றும் புதுச்சேரியைச் சேர்ந்த எம்.எல்.ஏ. வைத்தியநாதன் புகார் தெரிவித்தார்.

    இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக முக்கிய அரசியல் கட்சி பிரமுகர் உள்ளிட்ட 4 பேரிடம் விசாரணை நடத்தினர். மேலும் சரவணனுக்கு கார் ஓட்டிய டிரைவர் ஒருவரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

    இந்த விசாரணையை தொடர்ந்து நேற்று 4 பேரிடமும் எழுதி வாங்கிக்கொண்டு போலீசார் அனுப்பி வைத்தனர்.

    இந்த வழக்கில் எப்போது விசாரணைக்கு அழைத்தாலும் அவர்கள் வரவேண்டும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

    இறந்த சரவணனுக்கு உடலில் காயங்கள் உள்ளன. எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. அவரது உடல் பிரேத பரிசோதனை அறிக்கை இன்னும் வரவில்லை. அது வந்தபிறகுதான் இதில் மேலும் தகவல்கள் வெளிவரும் என போலீசார் தெரிவித்தனர்.

    இந்த வழக்கு சம்பந்தமாக காட்பாடி காந்திநகரில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

    சரவணன் தங்கி இருந்த பகுதிக்கு வந்து சென்றவர்கள் யார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×