என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முடிதிருத்தும் தொழிலாளர்கள் அதிருப்தி"

    • மாணவர்களுக்கு விதவிதமான கட்டிங்
    • கடைகளுக்கு சீல் வைக்கப்படும்.

    வேலூர்:

    வேலூர் மாவட்டத்திலுள்ள பள்ளிகளில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறுகையில்:

    பள்ளி மாணவர்கள் சீருடை, சிகை அலங்காரம் ஆகியவற்றை ஒரே மாதிரியாக அணிந்து வர வேண்டும். அதற்காக சலூன் கடைகாரர்கள், தையல்காரர்களை அழைத்து அறிவுறுத்தியுள்ளோம்.

    மாணவர்களுக்கு தலை முடியை சீராக வெட்டாத சலூன் கடை காரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். கடைகளுக்கு சீல் வைக்கப்படும்.

    ஏற்கனவே விதவிதமாக முடிவெட்டிக் கொண்ட வர்களுக்கு இலவசமாக முடியை திருத்தி வெட்டவேண்டும். அரசு வழங்கும் சீருடைகளை மாற்றி முழங்கால் தெரியும் வரை தைத்துக் கொடுக்கும் தையல் கடைக்காரர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    அதன்படி, மாணவர்களுக்கு தலை முடியை சீராக வெட்டாத சலூன் கடை காரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் எச்சரிக்கை விடுத்திருப்பது முடிதிருத்தம் செய்யும் தொழிலாளர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

    இதுகுறித்து தமிழ்நாடு முடிதிருத்தும் தொழிலாளர்கள் சங்கத்தின் வேலூர் மாவட்ட செயலாளர் விஜயகுமார் கூறியதாவது;

    வேலூர் மாவட்டத்தில் சிகை அலங்கார தொழிலில் சுமார் 5 ஆயிரம் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் பெரும்பாலும் சிறிய முதலீட்டில் தொழில் செய்பவர்கள்தான். மேலும், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அவர்களின் விருப்பத்தின்பேரிலேயே நாங்கள் முடிதிருத்தம் செய்ய வேண்டியுள்ளது.

    இதில், பள்ளி மாணவர்களின் விருப்பத்தை பூர்த்தி செய்ய மறுத்தால் அவர்கள் வேறு கடையை நாடிச் செல்லக்கூடும். இதனால், சிகை அலங்கார தொழிலாளர்களுக்குத் தான் வருவாய் இழப்பு ஏற்படும்.

    மாணவர்களுக்கு முடிதிருத்தம் செய்து கொள்வதில் நாங்கள் உத்தரவிட முடியாது. இதனை அந்தந்த மாணவர்களின் பெற்றோரும், பள்ளி தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள்தான் விடுக்க முடியும். தவிர, சிகை அலங்காரத் தொழிலில் ஈடுபட்டுள்ள பெரிய நிறுவனங்கள்தான் நவீனம் என்ற பெயரில் இத்தகைய சமூக சீர்கேடான நடவடிக்கைகளை அதிகளவில் மேற்கொள்கின்றன.

    இதுதொடர்பாக கலந்தாலோசிக்காமல் சாதாரண நிலையில் தொழில் புரியும் எங்களுக்கு எச்சரிக்கை விடுத்திருப்பது மாவட்டத்திலுள்ள அனைத்து முடிதிருத்தும் தொழிலாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

    எனவே, மாணவர்களுக்கு சிகை அலங்காரம் செய்வதில் சிகை அலங்கார தொழிலாளர்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கைகளை திரும்பப் பெற்று, மாணவர்களின் பெற்றோர், பள்ளி தலைமையாசிரியர்கள், ஆசிரியர்களுக்கு உத்தரவுகள் பிறப்பிக்க வேண்டும்.

    இதுதொடர்பாக தமிழ்நாடு முடிதிருத்தும் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் மனு அளிக்க உள்ளோம் என்றார்.

    ×