என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "The mother cried when she saw her son dead."

    • தாய் கண் முன்னே பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    வேலூர் சாய்நாதபுரம் அடுத்த பாலமதிரோடு முருகன் நகரைச் சேர்ந்தவர் மணி விவசாயி. இவருடைய மனைவி ரேவதி தம்பதியின் ஒரே மகன் தினேஷ் குமார் (வயது 14) சாய்நாதபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.

    இவர்களுக்குச் சொந்தமான விவசாய நிலத்தை ஒட்டியே வீடு உள்ளது. நிலத்தில் கீரை உள்ளிட்ட காய்கறிகள் பயிரிட்டுள்ளனர்.

    இதில் விளையும் கீரை காய்கறிகளை ரேவதி விற்பனை செய்துவந்தார். இன்று காலை நிலத்தில் அகத்திக்கீரை அறுத்து கட்டினர். அதனை ஒரு சைக்கிளில் வைத்துக்கொண்டு தினேஷ்குமார் சைக்கிளைத் தள்ளிக் கொண்டு வந்தார். அவரது தாய் ரேவதி பின்னால் கீரை கட்டை பிடித்தபடி நடந்து வந்து கொண்டிருந்தனர்.

    இந்த நிலையில் விவசாய நிலத்தில் நேற்றிரவு மின்கம்பி அறுந்து கிடந்துள்ளது. இதனை அவர்கள் கவனிக்கவில்லை.

    சைக்கிளைத் தள்ளிக்கொண்டு வந்த தினேஷ்குமார் மின் கம்பியை தெரியாமல் மிதித்து விட்டார். மின்சாரம் அவர் மீது பாய்ந்தது. மேலும் சைக்கிளை பிடித்துக் கொண்டு வந்த ரேவதியையும் மின்சாரம் தாக்கியது.

    இருவரும் தூக்கி வீசப்பட்டனர்.இதில் தினேஷ்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். தனது கண் முன்பே மகன் இறந்ததைக் கண்டு அலறி துடித்தார்.

    இதுகுறித்து தகவலறிந்த பாகாயம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேலாயுதம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

    பலியான மாணவன் உடலை மீட்டு அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நேற்று இரவு வேலூர் மாநகர பகுதியில் பரவலாக மழை பெய்தது. பலத்த காற்று வீசியது.இதில் மின்கம்பி அறுந்துள்ளது. மின்கம்பிகள் அறுந்து விழாமல் இருக்கும் வகையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். இது தொடர்பாக மின் அதிகாரிகள் அலட்சியமாக பதில் கூறுகின்றனர். ஒரே மகனை இழந்த தம்பதிக்கு அரசு உதவ வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர். மேலும் மின்கம்பிகள் அறுந்து கிடந்தால் அதன் அருகில் செல்ல வேண்டாம்.தொடக் கூடாது என மின் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    ×