என் மலர்
வேலூர்
- பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை வளையத்தில் இருக்கும் நிதி நிறுவன இயக்குனர்கள் தலைமறைவாக உள்ளதாக கூறப்படுகிறது.
- அச்சமடைந்த முதலீட்டாளர்கள் பணம் வழங்காதது குறித்து ஏஜெண்டு வினோத்குமாரிடம் தொடர்ந்து பணம் கேட்டுள்ளனர்.
வேலூர்:
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த சேவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வீரராகவன்-இந்திரா தம்பதியரின் மகன் வினோத்குமார் (வயது 28). இவர் வேலூரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தற்போது மோசடி புகாரில் சிக்கியுள்ள தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.15 ஆயிரம் சம்பளத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். மேலும் ஏஜெண்டாக இருந்து வந்துள்ளார்.
இவர் தனது நண்பர்கள், உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் என சுமார் 30-க்கும் அதிகமான நபர்களிடமிருந்து சுமார் ரூ.50 லட்சத்திற்கும் அதிகமாக பணத்தை பெற்று மாத வட்டி தரும் அந்நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார்.
கடந்த இரண்டு மாதங்களாக முதலீட்டாளர்களுக்கு வட்டி பணம் கிடைக்கவில்லை. நிதி நிறுவன உரிமையாளர்கள் வீடு மற்றும் ஏஜெண்டுகள் வீடுகளில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தியதில் நிதி நிறுவன அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளது. காட்பாடியில் உள்ள தலைமை அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
தற்போது பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை வளையத்தில் இருக்கும் நிதி நிறுவன இயக்குனர்கள் தலைமறைவாக உள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் அச்சமடைந்த முதலீட்டாளர்கள் பணம் வழங்காதது குறித்து ஏஜெண்டு வினோத்குமாரிடம் தொடர்ந்து பணம் கேட்டுள்ளனர்.
இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான வினோத்குமார் நேற்று முன்தினம் இரவு வீட்டில் கயிறால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்த தகவல் அறிந்த திருவலம் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், முதலீட்டாளர்களுக்கு பதில் சொல்ல முடியாத விரக்தியில் வினோத்குமார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
போலீசார் வினோத்குமார் எழுதி வைத்த கடிதத்தையும் பறிமுதல் செய்தனர். அந்த கடிதத்தில், நிதி நிறுவனத்தின் உரிமையாளர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பான்கார்டு எண்ணை குறிப்பிட்டு, இவர்களின் பெயரில் இயங்கும் நிதி நிறுவனத்தில் என்னிடம் கேட்ட நபர்களுக்கு முதலீடு செய்து கொடுத்துள்ளேன். இப்போது அவர்கள் இல்லை என்பதால் எனது மற்றும் என்னை சார்ந்தவர்களின் பணத்தை திருப்பி வாங்கி தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.
நான் கொடுத்த பணத்தின் ஆவணங்கள் அனைத்தும் எனது ஆன்லைன் புக்கில் உள்ளது.
என்னை நம்பியவர்களுக்கு எனது முடிவிலாவது பணம் கிடைக்கட்டும். அனைத்து ஆவணங்களும் எனது பேங்கில் உள்ளது.
போலீஸ் இவர்களை பிடித்து அனைவரின் பணத்தையும் வாங்கி தர வேண்டும்.
முதலீடு செய்த அனைவரும் அந்நிறுவனத்திடம் பணத்தை வாங்கிக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார். கடிதத்துடன் செல்பி எடுத்த பின் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
வினோத்குமாரின் வீட்டில் இருந்த பாண்டு பத்திரங்கள், லேப்டாப் உள்ளிட்ட ஆவணங்களை காட்பாடி இன்ஸ்பெக்டர் தமிழ்செல்வன் தலைமையிலான போலீசார் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.
முதலீட்டாளர்கள் தற்கொலை போன்ற விபரீத செயல்களில் ஈடுபட வேண்டாம் என போலீசார் வலியுறுத்தி உள்ளனர்.
- குழந்தைகள் நல டாக்டர் எச்சரிக்கை
- கர்ப்பிணி தாய்மார்கள் சரிவிகித உணவு உண்ண வேண்டும்
வேலூர்:
காட்பாடி வட்டார ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் தாய்ப்பால் வார விழா ஜூனியர் ரெட் கிராஸ் அலுவலகத்தில் நடைபெற்றது.
மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் கோமதி தலைமை தாங்கினார்.
வட்டார திட்ட அலுவலர் சாந்தி பிரியதர்ஷினி வரவேற்று பேசினார்
வேலூர் ஏஞ்சல்ஸ் ரோட்டரி சங்க தலைவர் அருள் அரசி ஜூனியர் ரெட் கிராஸ் மாவட்ட அமைப்பாளர் ஜனார்த்தனன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
வேலூர் இந்திய மருத்துவ சங்கத்தின் மற்றும் குழந்தைகள் மருத்துவ நிபுணர் டாக்டர் நர்மதா அசோக் பேசுகையில்:-
கர்ப்பிணி தாய்மார்கள் அதிகம் காய்கறிகள் கீரை வகைகள் சாப்பிட வேண்டும். கர்ப்பிணி தாய்மார்கள் சரிவிகித உணவு உண்ண வேண்டும்.
தாய்ப்பால் உங்கள் குழந்தையின் முதல் தடுப்பு மருந்து. புட்டி பால் மிகவும் ஆபத்தானது எனவே தாய்மார்கள் புட்டி பாலை தரவே கூடாது. முதல் ஆயிரம் நாட்களுக்கு தாய்ப்பால் மட்டுமே புகட்ட வேண்டும் என்றார்.
- நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் ஆய்வு
- முதற்கட்டமாக மின்சார இணைப்பு துண்டிக்கப்படுகிறது
வேலூர்:
வேலூர் காகிதப்பட்டறை ஆற்காடு சாலையை ஆக்கிரமித்து கடைகள் கட்டப்பட்டுள்ளன.அங்குள்ள மலைப்பகுதிகளில் வீடுகள் கட்டியுள்ளனர்.
மழைக்காலத்தின் போது மலையிலிருந்து பாறைகள் உண்டு விபத்துகள் ஏற்படுகிறது.
இதனை தடுக்கவும் ஆற்காடு சாலையை ஆக்கிரமித்து உள்ள கட்டிடங்களை அகற்றவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து வருவாய்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
இதில் காகிதப்பட்டறை சீனிவாசா தியேட்டர் எதிர்புறம் 22 கடைகள் மற்றும் 8 வீடுகளுடன் கூடிய கடைகள் 2 தனி வீடுகள் நெடுஞ்சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளது தெரியவந்தது.
அவர்களை அந்த இடத்தை உடனடியாக காலி செய்ய வேண்டும் என நெடுஞ்சாலை துறையினர் கூறினர்.
இந்த நிலையில் இன்று காலை வேலூர் தாசில்தார் செந்தில் காகிதப்பட்டறை பகுதியில் ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் குறித்து ஆய்வு செய்தார். அதன் உரிமையாளர்களிடம் உடனே காலி செய்யுமாறு உத்தரவிட்டார்.
இதுகுறித்து அவர் கூறுகையில்:-
ஆற்காடு சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள 22 கடைகள் வீடுகளுடன் கூடிய 8 கடைகள் மற்றும் 2 தனி வீடு கட்டிடங்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக அதன் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட உள்ளது.இதனை தொடர்ந்து நெடுஞ்சாலை துறையினர் மூலம் இந்த கட்டிடங்கள் அகற்றப்படும் என்றார்.
- நிர்மலா சீதாராமன் மீது அமைச்சர் துரைமுருகன் பாய்ச்சல்
- புதிய ரேசன் கடை திறப்பு விழா நடந்தது
வேலூர்:
காட்பாடி, பள்ளிக்குப்பம், பெரியபுதூர், ஆகிய இடங்களில் புதிய பஸ் நிறுத்த கட்டிடம், ரேசன் கடை ஆகியவற்றை அமைச்சர் துரைமுருகன் இன்று திறந்து வைத்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
பாராளுமன்றத்தில் நாங்கள் சொல்வதை தி.மு.க. எம்.பிக்கள் கேட்க மறுக்கிறார்கள் என மத்திய மந்திரி நிர்மலா சீத்தாராமன் கூறியுள்ளார்., அவர்கள் சொல்வதை கேட்க நாங்கள் அங்கு போகவில்லை, நாங்கள் (எம்.பிக்கள்) சொல்வதை கேட்க தான் அவர்கள் மந்திரிகளாக உள்ளனர்.
மேலும் காவேரி - குண்டாறு இணைப்பு குறித்து தேசிய நதிகள் இணைப்பு திட்டத்தில் இடம்பெறவில்லை. இருந்த போதும் மாயனூர் முதல் புதுக்கோட்டை வரை கால்வாய் வெட்டி வருகிறோம்.
முல்லை பெரியாரில் 137 அடிக்கு நீர் இருந்த போதிலும் அளவுக்கு அதிகமாக வரத்து உள்ளதால் அதை கேரளாவுக்கு திறந்துவிட்டுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன், எம். எல். ஏ.க்கள் ஏ.பி. நந்தகுமார், கார்த்திகேயன், மேயர் சுஜாதா மற்றும் மாநகராட்சி கவுன்சிலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் நடந்த சம்பவத்தால் பரபரப்பு
- போலீசார் விசாரணை
வேலூர்:
வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தைகள் பிரிவுக்கு அருகே உள்ள காத்திருப்பு அறையில் நேற்று முன்தினம் 70 வயது மதிக்க தக்க மூதாட்டி ஒருவர், உடல்நலம் பாதித்த நிலையில் தங்கி இருந்தார்.
அதைப்பார்த்த மருத்துவ ஊழி யர்கள் மூதாட்டிக்கு சிகிச்சை அளிக்க வார்டுக்கு அழைத்துச் செல்லுமாறு அங்குள்ள ஒப்பந்த பணியாளரிடம் தெரிவித்த னர். இதையடுத்து, தூய்மை பணியை மேற்கொள்ளும் ஒப்பந்த பணியாளர் மூஞ்சூர்பட்டை சேர்ந்த மோகன்ராஜ் (வயது 25) மூதாட்டியை ஸ்டிரெச்சரில் படுக்க வைத்து வார்டுக்கு கொண்டு செல்லாமல், ஆரணி ரோட்டுக்கு ஸ்டிரெச்சரை தள்ளிச்சென்றார்.
அங்கு மூதாட்டி காதில் இருந்த கம்மலை கழற்றினார். இதைப் பார்த்த மருத்துமனை ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் அவருடன் வாக்குவாதம் செய்தனர்.
இதனால் அங்கு கூட்டம் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, மருத்துவமனை ஊழியர்கள் மூதாட்டியை மீட்டு சிகிச்சைக்காக வார்டில் சேர்த்தனர்.
ஆனால், அங்கு அவர் சிறிது நேரத்தில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இறந்து போனவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்று தெரியவில்லை.
இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் லட்சுமி வேலூர் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் மோகன்ராஜ் மீது கம்மலை திருட முயன்றதாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மருத்துவ முகாம் நடந்தது
- கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தகவல்
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் நெல்லூர்பேட்டை அரசினர் மேல்நிலைப் பள்ளியில் வேலூர் மாவட்ட கைத்தறி துறை சார்பில் தேசிய கைத்தறி தினம் விழா கொண்டாடப்பட்டது.இந்த விழாவை முன்னிட்டு கைத்தறி துணிகள் கண்காட்சி, மருத்துவ முகாம் மற்றும் கடன் உதவி வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு குடியாத்தம் உதவி கலெக்டர் எஸ்.தனஞ்செயன், தாசில்தார் எஸ்.விஜயகுமார், கூட்டுறவு கைத்தறி சங்கங்களின் இணையத்தின் தலைவர் திருவேங்கடம், நகர மன்ற உறுப்பினர்கள் த.புவியரசி, ஜி.எஸ்.அரசு, நவீன் சங்கர், கைத்தறி அலுவலர்கள் சிவானந்தம், விஜயஸ்ரீ, கைத்தறி ஆய்வாளர்கள் கார்த்திகேயன், ராஜவெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கைத்தறி துறை உதவி இயக்குனர் எஸ்.முத்துபாண்டியன் வரவேற்புரை ஆற்றினார்.
குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் வி.அமுலுவிஜயன், நகர் மன்ற தலைவர் எஸ்.சவுந்தரராசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
இந்நிகழ்ச்சிக்கு வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமை தாங்கி தேசிய கைத்தறி தின விழாவை ஒட்டி அங்கு அமைக்கப்பட்டிருந்த கைத்தறி ஆடைகள் கண்காட்சியை பார்வையிட்டார்.
தொடர்ந்து இலவச மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார், 13 நெசவாளர்களுக்கு வங்கி கடனான முத்ரா கடன் திட்டத்தின் கீழ் 7 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கடன் வழங்கினார்.
தொடர்ந்து கலெக்டர் குமாரவேல் பாண்டியன் பேசுகையில்:-
குடியாத்தத்தில் கைத்தறி ஜவுளி பூங்கா அமைக்க வேண்டும் என குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமலுவிஜயன் உள்ளிட்டோர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
குடியாத்தம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கைத்தறி தொழிலில் ஈடுபட்டவர்கள் மிகவும் சிரமமான நிலையில் உள்ளனர். அதனை கருத்தில் கொண்டு கைத்தறி தொழிலை மேம்படுத்தும் வகையில் அதனை சார்ந்துள்ள நெசவாளர்கள் வாழ்வில் மேம்பாடு அடையும் வகையில் குடியாத்தம் பகுதியில் தமிழக அரசு (மினி டெக்ஸ்டைல்ஸ் பூங்கா) கைத்தறி ஜவுளி பூங்கா அமைக்க நடவடிக்கை எடுத்து வருகிறது.
அதற்காக குடியாத்தம் பகுதியில் 15 முதல் 20 ஏக்கர் நிலம் கையகப்படுத்த வருவாய்த் துறையினர் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
15 முதல் 20 நாட்களுக்குள் நிலம் கையகப்படுத்தும் பணி முடிவடைந்த பின் இங்கு கைத்தறி ஜவுளி பூங்கா கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும், அந்த ஜவுளி பூங்காவில் தற்போது கைத்தறி தொழிலில் ஈடுபட்டு உள்ளவர்களும் கைத்தறி தொழிலை விட்டு சென்றவர்களும் அங்கு தொழில் செய்ய இட வசதி செய்து தரப்படும், அவர்களுக்கு வங்கி கடன் உதவி கிடைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் மேலும் இப்பகுதியில் கைத்தறிக்கு தேவையான நூல் சாயம் போடுதல், கஞ்சி போடுதல் உள்ள தொழிலுக்கு பாதிப்புகள் குறித்து சமீபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து குடியாத்தம் மற்றும் சுற்றுப் பகுதியில் 10 இடங்களில் சிறு சாயநீர் சுழற்சி மையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் இதற்காக தொழில்நுட்ப வல்லுனர்கள் மற்றும் மாசு கட்டுப்பாட்டு அமைப்பின் விதிமுறைகளை உட்பட்டு சாய கம்பெனிகளில் சிறு சிறு சாயநீர் சுழற்சி மையங்கள் அமைக்கப்படும் கைத்தறி நெசவாளர்கள் வாழ்வு மேம்பட பொதுமக்கள் கைத்தறி மற்றும் கதர் ஆடைகளை வாங்கி உபயோகப்படுத்த வேண்டும் என்றார்.
இந்நிகழ்ச்சியில் கோஆப்டெக்ஸ் இயக்குனர் ருத்திரன், பள்ளி தலைமை ஆசிரியர் திருநாவுக்கரசு, நகராட்சி பொறியாளர் சிசில்தாமஸ் உள்பட கைத்தறி கூட்டுறவு சங்க தலைவர்கள், இயக்குனர்கள், கூட்டுறவு கைத்தறி சங்க பணியாளர்கள், நெசவாளர்கள், அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
- நாவல் பழத்துக்கு ஆசைப்பட்டு விபரீதம்
- போலீசார் விசாரணை
வேலூர்:
வேலூர் சத்துவாச்சாரி வள்ளலார் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் ரகுநாதன் (வயது 35) சத்துவாச்சாரி கோர்ட்டில் இரவு நேர காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி மீனா (26) ஒரு வயதில் மகன் உள்ளார்.
சத்துவாச்சாரி டபுள் ரோட்டின் நடுவில் நாவல் பழ மரங்கள் உள்ளன.இந்த மரத்திலிருந்து காற்றில் ஏராளமான பழங்ககள் கீழே விழுந்து கிடக்கின்றன. இந்த நிலையில் நேற்று மதியம் ரகுநாதன் ஒரு நாவல் மரத்தில் பழங்களை பறிக்க ஏறினார்.
அப்போது பறித்து வைத்திருந்த பழங்களை பையில் போட்டு வந்தார். பழங்களை பறித்துக் கொண்டிருந்தபோது மழை பெய்ததன் காரணமாக கால் வழுக்கி மரத்திலிருந்து தவறி கீழே விழுந்தார்.
இதில் அவர் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிஎம்சி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ரகுநாதன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
சத்துவாச்சாரி போலீசார் உடலை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாவல் பழம் பறிக்கக சென்று உயிரை மாய்த்த ரகுநாதன் மனைவி மற்றும் குழந்தை தற்போது அவரை இழந்து தவித்து வருகின்றனர்.
- இரவு நேரங்களில் பரவலாக பலத்த மழை பெய்து வந்தது
- பாலாற்றில் அதிகபட்சம் 320 கனஅடி அளவுக்கு தண்ணீர் வெளியேறியது
வேலூர்:
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக பெய்து வந்த தொடர் மழை குறைந்த நிலையில், பாலாற்றில் நீர்வரத்து சரிந்துள்ளது.
வேலூரில் வெள்ளிக்கிழமை விநாடிக்கு 1,400 கனஅடி வரை இருந்த நீர்வரத்து சனிக்கிழமை 1,100 கனஅடிக்கும் கீழ் குறைந்து காணப்பட்டது.
வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக பகல், இரவு நேரங்களில் பரவலாக பலத்த மழை பெய்து வந் தது. இதனால், முக்கிய ஆறு கள், ஓடைகளில் நீர்வரத்து ஏற் பட்டுள்ளது.
இதேபோல், தமிழகத்தையொட்டி உள்ள ஆந்திர மாநில எல்லை வனப்பகுதியிலும் பலத்த மழை பெய்து வருவதால் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
தமிழக -ஆந்திர எல்லையில் உள்ள புல்லூர் தடுப்பணையில் இருந்து பாலாற்றில் அதிகபட்சம் 320 கனஅடி அளவுக்கு தண்ணீர் வெளியேறியது.
திருப்பத்தூர்,வேலூர் மாவட்டத்தில் உள்ள பாலாற்றின் துணை ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. குறிப்பாக, வாணியம்பாடி அரு கேயுள்ள மண்ணாறு, கல்லாற்றில் இருந்து தலா 100 கன அடி தண்ணீர் பாலாற்றுக்கு வந்து கொண்டிருந்தது. மேலும், மலட்டாற்று, வேலூர் மாவட்டத்தில் உள்ள பாலாற்றின் துணை ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதன்மூலம், பள்ளிகொண்டா பகுதியில் பாலாற்றில் வெள்ளிக் கிழமை நிலவரப்படி விநாடிக்கு 1,400 கனஅடியாகவும், வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகில் 1,500 கன அடியாகவும் நீர்வரத்து ஏற்பட்டிருந்தது.
இந்த நிலையில், வெள்ளி, சனிக்கிழமை மழை பொழிவு குறைந்த நிலையில், பாலாற்றில் நீர்வரத் தும் சரிந்து காணப்பட்டது.
இதுகுறித்து நீர்வளத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
கடந்த ஒரு வாரமாக ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்திலும், ஆந்திர வனப் பகுதியிலும் பலத்த மழை பெய்ததால் பாலாற்றிலும், அதன் துணை ஆறுகளிலும் நீர்வரத்து ஏற்பட்டிருந்தது.
தற்போது மழை நின்றுவிட்டதால் படிப்படியாக நீர்வரத்து சரிந்துள்ளது.
தவிர, தற்போது பெய்திருப் பது பருவமழை இல்லை. வடகி ழக்குப் பருவமழை அக்டோபர் மாதத்திலேயே தொடங்கக்கூடும். எனினும், திடீர் மழை காரணமாக பாலாற்றிலும், துணை ஆறுகளிலும் வரும் வெள்ளத்தின் அளவுகளை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் என்றனர்.
- 982 இடங்களில் நடந்தது
- கொணவட்டம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கலெக்டர் தொடங்கி வைத்தார்
வேலூர்:
தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிக அளவில் பரவி வருகிறது. தொற்று பரவலை கட்டுப்படுத்தவும், உயிர் இழப்பை தடுக்கவும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
கொரோணா தடுப்பூசி முகாம்
இந்த நிலையில் வேலூர் மாவட்டத்தில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொது மக்களுக்கு கொரோனா தடுப்பூசி மற்றும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
அதன்படி வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரி, ஆரம்ப சுகாதார நிலையங்கள், பஸ் நிலையம், ரெயில் நிலையம், பொது மக்கள் அதிக அளவில் கூடும் வழிபாட்டுத் தலங்கள் மற்றும் மார்க்கெட் பகுதி என இன்று 982 இடங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடந்தது.
இந்த சிறப்பு முகாம்களில் பொதுமக்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.
வேலூர் கொண வட்டத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா தடுப்பூசி முகாமை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் இன்று தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
நிகழ்ச்சியில் மேயர் சுஜாதா, மாநகராட்சி கமிஷனர் அசோக் குமார், உதவி கமிஷனர் பிரபு ஜோசப், தாசில்தார் செந்தில், சுகாதார அலுவலர் முருகன் முப்படை பலர் கலந்து கொண்டனர்.
- ரூ.50,000 வரை அபராதம் விதிக்கப்படும்
- வேலூர் கலெக்டர் எச்சரிக்கை
வேலூர்:
வேலூர் மாவட்டத்தி லுள்ள குழந்தைகள், பெண்கள் தங்கும் விடுதி களை ஆகஸ்ட் 20-ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டியது கட்டாயம்.
தவறினால் விடுதி, இல்லங்களின் உரிமையா ளர்களுக்கு ரூ.50,000 வரை அபராத மும், 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்படும் என்று கலெக்டர் குமாரவேல் பாண்டியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளி யிட்ட செய்திக் குறிப்பில் கூயிருப்பதாவது :-
வேலூர் மாவட்டத்தில் சமூக நலன், மகளிர் உரிமைத் துறை, மாற்றுத் திறனாளிகள் நலத் துறை, சமூக பாதுகாப்புத்துறை, ஆதிதிராவிடர் பழங்குடியினர் நலத்துறை, பள்ளிக் கல்வித் துறை, உயர்கல்வித்துறை, பிற் படுத்தப்பட்டோர் நலத் துறை, தொழிலக பாதுகாப்பு சுகாதாரம், தொழிலாளர் நலத்துறை ஆகியவற்றின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அனைத்து குழந் தைகள், பெண்களுக்கான விடு திகளை தமிழ்நாடு சிறார், மகளிருக்கான இல்லங்கள், விடுதிகள் முறைப்படுத்தும் சட்டம் 2014 இன்படி பதிவு செய்தல் வேண்டும்.
இந்த விடுதிகளை http//tnswp.com single window portal என்ற இணையதளம் மூலம் அனைத்து சான்றிதழ்க ளுடன் ஆகஸ்ட் 20-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும், 18 வயதுக்கு மேற் பட்ட பெண்கள் தங்கும் உரி மம் பெற சமூக நலன், மகளிர் உரிமைத் துறையின் கீழ் செயல் படும் மாவட்ட சமூக நல அலு வலகத்தையும், 18 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இல்லங்கள், அனைத்து அரசு, தனியார் பள் ளிகளின் விடுதிகளை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலு வலகத்தையும், மனநலம் பாதிக் கப்பட்ட, மாற்றுத் திறனாளிகளுக்கான விடுதிகளை மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலு வலகத்தையும் அணுகி அதற் கான கருத்துருக்களை சமர்ப் பிக்க வேண்டும்.
ஆங்காங்கே கல்வி நிறுவனங்களைச் சுற்றி குடியிருப்புப் பகுதி களில் பகுதி நேரமாகவும், முழு நேரமாகவும் எவ்வித அனுமதியுமின்றி மாணவ, மாணவிகள் விடுதிகள் தனியாரால் நடத்தப்பட்டு வருவது தெரியவருகிறது.
அவ்வாறு அனுமதியின்றி தங் கும் விடுதிகள் நடத்தி வருவோரும் ஆகஸ்ட் 20-ஆம் தேதிக்குள் இணையதளம் மூலம் பதிவு செய்ய வேண்டும்.
தவறும் பட்சத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் விடுதி மற்றும் இல்லங்கள் மீது உரிய நடவ டிக்கை எடுக்கப்பட்டு ரூ.50,000 வரை அபராதமும், 2 ஆண்டு கள் வரை சிறை தண்டனை யும் விதிக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- குடியாத்தம், விரிஞ்சிபுரம் பாலங்கள் பழுதடைந்ததால் நடவடிக்கை
- போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது
வேலூர்:
வேலூர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பள்ளிகொண்டா பேரூராட்சி பகுதியில் அமைந்துள்ள குடியாத்தம் செல்லும் மாநில நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் மிக அதிகமாக உள்ளது. இதனால் ஆந்திர மாநிலத்திலிருந்து குடியாத்தம் பள்ளி கொண்டா செல்லும் கனரக சரக்கு வாகனங்கள் குடியாத்தத்திலிருந்து ஆம்பூர் வழியாக செல்ல அறிவுறுத்தப்பட்டிருந்தது.
ஆனால், வேலூர் மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை வழக்கத்தைவிட அதிக அளவு பெய்துள்ளதால் நெடுஞ்சாலை துறையால் பராமரிக்கப்படும் குடியாத்தம் நகர் பகுதி மற்றும் விரிஞ்சிபுரம் ஆகிய இடங்களில் பாலங்கள் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளது.
கனரக மற்றும் மிககனரக சரக்கு வாகனங்கள் பயன்படுத்தப்படுவதால் மேலும் பழுதடைவதுடன் உள்ளூர் பொதுமக்கள் மற்றும் பள்ளிச்செல்லும் குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர். மேலும் சிறுசிறு விபத்துக்கள் நிகழ்கின்றன.
இவற்றை தடுக்கும் பொருட்டு ஆந்திர மாநிலம் சித்தூரிலிருந்து சென்னை மார்கமாகவும் மற்றும் கிருஷ்ணகிரி மார்கமாக செல்லும் அனைத்து கனரக மற்றும் மிககனரக வாகனங்கள் காட்பாடி மற்றும் திருவலம் வழியாக சென்று ஆறு வழிச்சா லைகளை பயன்படுத்திட அறிவுறுத்தப்படுகிறது.
இந்த மாற்று ஏற்பாட்டினை காவல்துறை, போக்குவரத்து துறை மற்றும் உள்ளாட்சி நிர்வாகத்தினர் மூலம் உறுதிசெய்யப்படும்.
அவ்வாறு மீறிச்செல்லும் வாகனங்கள் வந்த வழியாக திருப்பி அனுப்பி வைக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
- உற்சவர் தேரில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
குடியாத்தம்:
குடியாத்தம் பிச்சனூர் காளியம்மன் பட்டி காளியம்மன் கோவில் தேரோட்டம் இன்று காலையில் நடைபெற்றது.
தேரோட்டத்தை முன்னிட்டு மூலவர் காளியம்மனுக்கு சிறப்பு பூஜைகளும் அபிஷேகங்களும் நடைபெற்றது தொடர்ந்து உற்சவர் தேரில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார் காலை முதலே நேர்த்திக்கடன் செலுத்த நூற்றுக்கணக்கான ஆடுகளையும் கோழிகளையும் பக்தர்கள் பலியிட்டு காணிக்கை செலுத்தினர். தொடர்ந்து தேரின் மீது உப்பு மிளகு உள்ளிட்டவைகளை வீசி எறிந்து வணங்கினர்.
இந்த தேரோட்டத்தில் குடியாத்தம் அமலுவிஜயன் எம்.எல்.ஏ, குடியாத்தம் ஒன்றிய குழு தலைவர் என்.இ. சத்யானந்தம், குடியாத்தம் நகர் மன்ற தலைவர் எஸ்.சவுந்தரராஜன், கிழக்கு ஒன்றிய திமுக பொறுப்பாளர் நத்தம்பிரதீஷ் உள்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி திருநாவுக்கரசு, முன்னாள் அறங்காவலர் குழு நிர்வாகிகள் மற்றும் தேர்திருவிழா குழுவினர், ஆலய விழா கமிட்டினர், அப்பகுதி இளைஞர்கள், பொதுமக்கள் செய்திருந்தனர்.
குடியாத்தம் டவுன் புதுப்பேட்டை படவேட்டு எல்லையம்மன் கோவில் தேர் திருவிழா இன்று காலையில் நடைபெற்றது இந்த தேரோட்டத்தை குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமலுவிஜயன், நகர் மன்ற தலைவர் எஸ். சவுந்தரராஜன் உள்ளிட்டோர் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர்.
நிகழ்ச்சியில் முன்னாள் நகர மன்ற தலைவர் அமுதாசிவப்பிரகாசம், முன்னாள் அறங்காவலர் குழு நிர்வாகிகள் ஏ.நடராஜன், சண்முகம், வி.என்.தனஞ்செயன். கே.எம்.ஜி.விட்டல், எஸ்.எஸ்.பி.பாபு, நகர மன்ற உறுப்பினர்கள் சுமதி மகாலிங்கம், எம்.எஸ்.குகன், வழக்கறிஞர் எம்.வி. ஜெகதீசன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி திருநாவுக்கரசு, முன்னாள் அறங்காவலர் குழு நிர்வாகிகள், தேர் கமிட்டியினர் விழா குழுவினர் இளைஞர் அணி ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.






