என் மலர்tooltip icon

    வேலூர்

    • வியாபாரிகள் வேதனை
    • மொத்தம் ரூ.4.60 லட்சத்திற்கு மட்டுமே விற்பனை

    அணைக்கட்டு:

    ஒடுகத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கிராமங்களில் வாரம் தோறும் வெள்ளிக்கிழமை நடைபெறும் சந்தைக்கு தங்களின் ஆடுகளை விற்கவோ, வாங்கவோ இங்கு கூடுகின்றனர்.

    அதுமட்டுமின்றி, வெளியூர், வெளி மாவட்டங்களில் இருந்தும் ஆடுகளை வாங்கவும், விற்கவும் வருவார்கள்.

    இதனாலேயே ஒடுகத்தூர் ஆட்டு சந்தையில் விற்பனை களைகட்டும். இங்கு வாரம் தோறும் சுமார் ரூ.10 முதல் 15 லட்சம் வரை ஆடுகள் விற்பனை செய்யப்படும்.

    இந்நிலையில், வழக்கம்போல் இன்று ஆட்டு சந்தை கூடியது. ஆனால், காலை முதலே லேசான சாரல் மழை பெய்ததால் குறைவான ஆடுகளே விற்பனைக்காக கொண்டு வரப்பட்டது.

    இதனால், குறைந்த அளவிற்கே ஆடுகள் விற்பனையானது. இதனால், வியாபாரிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    ஆடுகள் மொத்தமாக ரூ.4.60 லட்சத்திற்கு மட்டுமே விற்பனையானது என்று வியாபாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.

    • ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் எதிர்ர்த்த மழை இல்லை
    • கால்வாய்கள் தூர்வாரும் பணி தீவிரம்

    வேலூர்:

    வடகிழக்குப் பருவமழை தமிழகத்தில் கடந்த 1-ஆம் தேதி முதல் தொடங்கி பெய்து வருகிறது. எனினும், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் கடந்த 3 நாள்களாக எதிர்பார்த்த அளவு மழை பெய்யவில்லை.

    இதனிடையே, ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் நீர்வளத் துறைக் கட்டுப் பாட்டிலுள்ள 519 ஏரிகளில் வேலூர் மாவட்டத்தில் மட்டும் 101 ஏரிகள் உள்ளன. இவற்றில், 12 ஏரிகள் மட்டுமே முழு மையாக நிரம்பியுள்ளன. 5 ஏரிகளில் 50 முதல் 75 சதவீத அளவுக்கும், 60 ஏரிகளில் 25 முதல் 50 சதவீதம் வரையும் தண்ணீர் இருப்பு உள்ளன. 24 ஏரிகளுக்கு நீர்வரத்து சிறிதுகூட இல்லை.

    இதேபோல, திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 49 ஏரிகளில் 29 ஏரிகள் நிரம்பிவிட்டன. அங்கு 4 ஏரிகளுக்கு மட்டும் நீர்வரத்து இல்லை.

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 369 ஏரிகளில் 125 ஏரிகள் மட்டுமே நிரம்பி உபரி நீர் வெளியேறி வருகிறது. 145 ஏரிகளில் 50 சதவீதம் வரை தண்ணீர் இருப்பதுடன், தொடர்ந்து இந்த ஏரிகளுக்கு நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. 30 ஏரிகளுக்கு நீர்வரத்து இல்லை என நீர்வளத் துறை புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

    அதன்படி, முழுமையாக நிரம்பாமல் உள்ள ஏரிகளுக்கு பாலாறு, மோர்தானா, ராஜாதோப்பு அணை கால்வாய்கள் மூலம் தண்ணீரை திருப்பிவிட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதுகுறித்து, நீர்வளத் துறை அதிகாரிகள் கூறியது:-

    தென் மேற்குப் பருவமழை எதிர்பார்த்ததைவிட அதிகமாக பெய்ததால், ஒருங் கிணைந்த வேலூர் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான ஏரிகள் 80 சதவீத அளவுக்கு நிரம்பின. ஆனால், வடகிழக்குப் பருவ மழை வழக்கத்தைவிட குறைவாகவே பெய் துள்ளதுடன், ஆந்திர மாநில வனப் பகுதியில் மழை பொழிவே இல்லை. இதனால், பாலாற்றில் தற்போது வினாடிக்கு 400 கன அடி அளவுக்கே தண்ணீர் செல்கிறது.

    அதிக அளவில் மழை பெய்யும் என எதிர் பார்க்க முடியாததால், பாலாறு, மோர்தானா, ராஜாதோப்பு அணைக் கால்வாய்கள் மூலம் நீர்ஆதாரம் உள்ள அனைத்து ஏரிகளையும் 100% நிரப்ப அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    அதேநேரம், ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்திலுள்ள பெரும்பாலான ஏரிகள் ஆற்று நீரை ஆதாரமாகக் கொண்டு இல்லாமல் மழை நீரையும், ஓடை நீரையும் மட்டுமே நம்பியுள்ளன. இவற்றில் பல ஏரிகளில் தென்மேற்குப் பருவமழை காரணமாக 50 சதவீதம் நீர் இருப்பு உள்ளன.

    தொடர்ந்து, மழை பெய்யும்பட்சத்தில் அந்த ஏரிகளுக்கும் நீர்வரத்து ஏற்பட அதன் நீர்வழிப் பாதைகள் தூர்வாரப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன என்றனர்.

    • வாலிபால் விளையாடுவதாக கூறிவிட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அருகே உள்ள வயலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தமிழரசன் (வயது 20).ஆற்காட்டில் உள்ள ஒரு வங்கியில் வேலை பார்த்து வந்தார்.

    வேலூர் கொசப்பேட்டையில் வாடகை வீட்டில் தங்கி இருந்து தினமும் வேலைக்கு சென்று வந்தார். வாலிபால் விளையாட்டில் ஆர்வம் கொண்ட இவர் கடந்த 30-ந் தேதி கே.வி. குப்பம் அருகே உள்ள காவனூரில் வாலிபால் விளையாடுவதாக கூறிவிட்டு சென்றார்.

    இந்த நிலையில் அன்று இரவு வேலூர் அடுத்த மோட்டூர் தேசிய நெடுஞ்சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் தமிழரசன் மீது மோதியது. இதில் அவர் படுகாயடைந்தார்.

    இதனைக் கண்ட பொதுமக்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர்‌. அவர்கள் விரைந்து வந்து தமிழரசனை மீட்டு அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பெற்று வந்த தமிழரசன் இன்று காலை பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து விரிஞ்சிபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • குறுக்கும் நெடுக்குமாக செல்லும் ஆட்டோக்கள்
    • சுரங்க பாதை பணிகளை தொடங்க பொதுமக்கள் வலியுறுத்தல்

    வேலூர்:

    வேலூர் ஆற்காடு சாலையில் தற்போது போக்குவரத்து நெரிசல் தீர்க்க முடியாத பிரச்சினையாக உள்ளது.

    அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரி முன்பு பொதுமக்கள் ஏராளமானோர் சாலையை கடப்பதால் அதிக நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

    சாலையில் சில ஆட்டோக்கள் குறுக்கும் நெடுக்கமாக திரும்புவதால் நெரிசலில் சிக்கி தவிக்கின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆற்காடு சாலையில் இரும்பு தடுப்புகளை போலீசார் அமைத்திருந்தனர்.அப்போது ஓரளவு வாகனங்கள் சீராக சென்றன.

    ஆனால் என்ன காரணத்திற்காகவோ சாலை நடுவில் இருந்து தடுப்புகள் அனைத்தும் அகற்றப்பட்டு விட்டன. இதனால் சாலையில் அனைத்து பகுதிகளிலும் பொது மக்கள் குறுக்கே கடந்து செல்கின்றனர். பல வாகனங்கள் சாலை நடுவில் திரும்புகின்றன.

    தனியார் ஆஸ்பத்திரியில் இருந்து தற்போது அதிக பஸ்கள் இயக்கப்படுகிறது‌ இதன் காரணமாகவும் ஆற்காடு சாலையில் தற்போது போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது.

    ஆற்காடு சாலையில் நெரிசலை தவிர்க்க சுரங்க நடைபாதை அமைக்கப்படும் என கடந்த சில மாதங்களுக்கு முன்பு கலெக்டர் தலைமையில் ஆய்வு நடத்தி தெரிவித்தனர். ஆனால் அதற்கான வேலை எதுவும் இன்னும் தொடங்கப்படவில்லை.

    மழை பெய்யும் நேரங்களில் ஆற்காடு சாலையை கடப்பது என்பது கடினமாகிவிட்டது.

    இந்த சாலையில் ஏற்கனவே வைக்கப்பட்டிருந்த இரும்பு தடுப்புகளை மீண்டும் நடுவில் அமைக்க வேண்டும். ஆஸ்பத்திரிக்கு செல்லும் பொதுமக்கள் எளிதாக சென்று வர சுரங்க பாதை பணிகளை உடனடியாக தொடங்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    • கலெக்டர் உத்தரவு
    • மழை பாதிப்பு குறித்த 1077 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம்

    வேலூர்:

    காட்பாடியில் பாதாள சாக்கடை மற்றும் கழிவுநீர் கால்வாய் கட்டும் பணிகளால் தெருக்களி சேறும் சகதியுமாக காட்சியளிக்கின்றன. இன்று காலை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் காட்பாடி கழிஞ்சூர் பவானி நகர் காந்தி நகர் பகுதிகளில் தண்ணீர் தேங்கிய பகுதிகள் மற்றும் கடந்த ஆண்டு பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு செய்தார்.

    பாதாள சாக்கடை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.குண்டு குழியுமான சாலைகளை தற்காலிகமாக சீரமைக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    வேலூர் மாவட்டத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயார் நிலையில் உள்ளது. பொதுமக்கள் 24 மணி நேரமும் புகார் தெரிவிக்கும் வகையில் கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டுள்ளன.

    மழை பாதிப்பு குறித்த விவரங்களை 1077 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம். வேலூர் மாநகராட்சி பகுதியில் சில இடங்களில் பாதாள சாக்கடை பணிகளால் தெருக்கள் மோசமாக உள்ளது.

    சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளன என பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

    அதன் அடிப்படையில் இன்று காட்பாடியில் ஆய்வு செய்யப்பட்டது. மாநகராட்சி பகுதியில் அகழி தண்ணீர் கோட்டை கோவிலுக்குள் வருவதை தடுக்க தற்போது ராட்சத மின்மோட்டார் மூலம் தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுத்துள்ளனர்.

    பாதாள சாக்கடை பணிகள் நடந்து வரும் தெருக்களில் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

    கலெக்டர் ஆய்வின்போது மேயர் சுஜாதா, மாநகராட்சி கமிஷனர் அசோக்குமார், தாசில்தார் ஜெகதீஸ்வரன் மற்றும் மாநகராட்சி கவுன்சிலர்கள் உடன் இருந்தனர்.

    • முழுமையாக தண்ணீர் திறந்து விட வலியுறுத்தல்
    • சீரமைக்கப்படாத தெருக்களால் பொதுமக்கள் கடும் அவதி

    வேலூர்:

    வேலூர் திருப்பத்தூர் ராணிப்பேட்டை திருவண்ணாமலை மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

    மேகமூட்டத்துடன் தொடர்ந்து மழை பெய்து வருவதால் சாலைகளில் மழை வெள்ளம் செல்கிறது. வேலூர் மாநகராட்சி பகுதியில் பாதாள சாக்கடை மற்றும் கால்வாய் பணிகளின் காரணமாக சீரமைக்கப்படாத தெருக்களில் சேறும் சகதியுமாக காட்சிய ளிக்கின்றன. அதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர்.

    மழை காரணமாக ஏரிகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.ஏற்கனவே மாவட்டத்தில் உள்ள சில ஏரிகள் நிரம்பிய நிலையில் உபரி நீர் வெளியேறி வருகிறது.

    வேலூர் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 101 ஏரிகள் உள்ளன. 12 ஏரிகள் மட்டுமே முழுமையாக நிரம்பி உள்ளது. 24 ஏரிகளுக்கு நீர்வரத்து கொஞ்சம் கூட இல்லை. மற்ற ஏரிகளில் 20 முதல் 50 சதவீதம் வரை தண்ணீர் இருப்பு உள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 49 ஏரிகளில் 29 ஏரிகள் நிரம்பிவிட்டன. அங்கு 4 ஏரிகளுக்கு மட்டும் தான் நீர்வரத்து இல்லை.

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 369 ஏரிகளில் 125 ஏரிகள் நிரம்பி வழிகிறது. 145 ஏரிகளில் 50 சதவீதம் வரை தண்ணீர் உள்ளது. இந்த ஏரிகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. 30 ஏரிகளுக்கு நீர்வரத்து இல்லை.

    வேலூர் சதுப்பேரி ஏரியில் அதிக தண்ணீர் உள்ளது. ஆனால் ஓட்டேரி ஏரியில் தண்ணீர் மிகவும் குறைந்த அளவே உள்ளது. கனமழை பெய்தால் மட்டுமே தண்ணீர் வந்து நிரம்பும் நிலையில் உள்ளது.

    வேலூர் மாவட்டத்தில் உள்ள ஏரிகளுக்கு முழுமையாக தண்ணீர் திறந்து விடாததால் ஏரிகள் இன்னும் நிரம்பவில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். பாலாற்றில் ஓராண்டுக்கு மேலாக தொடர்ந்து நீர்வரத்து ஏற்பட்டுள்ளது.

    பாலாறு கவுண்டன்யா ஆறு உள்ளிட்ட பகுதியிலிருந்து ஏரிகளுக்கு தண்ணீர் திருப்பி தர வேண்டுமென விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

    • பரிசுகள் வழங்கப்பட்டது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    குடியாத்தம்:

    குடியாத்தம் அருகே பெண் தவறவிட்ட வைரக் கம்மலை தூய்மை பணியாளர்கள் மூலம் மீட்கப்பட்டது.

    இதனை மீட்டு கொடுத்த தூய்மை பணியாளர்கள் விஜய், கோபால் ஆகியோருக்கு பாராட்டு விழா குடியாத்தம் நகர் மன்ற கூட்டத்தில் நடைபெற்றது.

    நகர மன்ற தலைவர் எஸ்.சவுந்தர்ராசன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தூய்மை பணியாளர்கள் விஜய் மற்றும் கோபால் ஆகியோருக்கு புத்தாடைகள் வழங்கியும் பரிசுகளும் வழங்கியும் பாராட்டி பேசினார்.

    இந்நிகழ்ச்சியில் நகர மன்ற துணைத் தலைவர் பூங்கொடி மூர்த்தி, நகராட்சி ஆணையாளர் ஏ.திருநாவுக்கரசு, பொறியாளர் பி.சிசில்தாமஸ், சுகாதார அலுவலர் மொய்தீன், களப்பணி மேற்பார்வையாளர் பிரபுதாஸ் உள்ளிட்ட கலந்து கொண்டனர்.

    மேலும் இந்நிகழ்ச்சியில் தூய்மை பணியாளர்களை பாராட்டி நகர்மன்ற உறுப்பினர்கள் வாழ்த்தி பேசினார். நிகழ்ச்சியில் நகர் மன்ற உறுப்பினர்கள், தூய்மை பணியாளர்கள், நகராட்சி அலுவலர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • நிலத்தில் வீசி சென்ற அவலம்
    • போலீசார் விசாரணை

    குடியாத்தம்:

    குடியாத்தத்தை அடுத்த மேல்முட்டுக்கூர் ஊராட்சி தட்டாங்குட்டைகிராமத்தில் எட்டியம்மன் கோவில் உள் ளது. இந்த கோவிலில் கடந்த மே மாதம் திருவிழா நடை பெற்றது.

    அப்போது உண்டி யல் திறக்கப்பட்டு, காணிக்கை பணம் எண்ணப்பட்டது. அதன் பின்னர் 5 மாதமாக உண்டியல் காணிக்கை எண்ணப்படவில்லை.

    நேற்று முன்தினம் இரவு பூசாரி வழக்கம்போல பூஜை செய்துவிட்டு கோவிலை பூட் டிக்கொண்டு சென்றுள்ளார்.

    நேற்று காலை வந்து பார்த்த போது கோவில் உண்டியலை காணவில்லை. கோவிலின் பின்பக்கம் சுமார் அரை கிலோமீட்டர் தூரத்தில் ஏரி கால்வாய் அருகே தனியாக நிலத்தில் உண்டியல் கிடந்தது.

    கோவிலின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம கும்பல் உண்டியலை தூக்கிச் சென்று அதிலிருந்து நகைகள் மற்றும் பணத்தை திருடி சென்றுள்ளனர்.

    சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த கிராம மக்கள் தங்கள் குழந்தைகளுக்கு எடைக்கு எடை போட்ட நாணயங்களும், சிறு சிறு நகைகளும் அந்த உண்டியலில் இருந்ததாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து ஊர் தர்ம கர்த்தா எஸ்.வி.ராமு, குடியாத்தம் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக் டர் சிலம்பரசன் உள்ளிட்ட போலீசார் திருட்டு நடை பெற்ற எட்டியம்மன் கோவிலி லும், உண்டியலில் கிடந்த இடத்திலும் பார்வையிட்டனர். மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை
    • போலீஸ் சூப்பிரண்டு தகவல்

    வேலூர், நவ.2-

    வேலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை மீட்பு பணிகளுக்கு 62 பேர் கொண்ட ஆயுதப்படை போலீசார் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

    அவர்களுக்கு தேவையான கருவிகளை நேற்று போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் வழங்கினார்.

    இந்தக் குழுவில் உள்ள ஆயுதப்படை போலீசாருக்கு வெள்ளத்தில் தத்தளிப்பவர்களை மீட்பது, கட்டிட இடிபாடுகள், முறிந்து விழுந்த மரங்களை அகற்றுவது உட்பட பல பயிற்சிகள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது.

    இவர்கள் வடகிழக்கு பருவமழை முடியும் வரை மாவட்ட தலைமையகத்தில் தங்கி இருப்பார்கள். தேவைப்படும் நேரத்தில் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் தெரிவித்தார்.

    • ஜலகண்டேஸ்வரர் கோவிலுக்குள் தண்ணீர் வருவதை தடுக்க நடவடிக்கை
    • நிக்கல்சன் கால்வாய் வழியாக வெளியேற்றுமாறு மாற்றினர்

    வேலூர்:

    வேலூர் கோட்டையில் ஆங்கிலேயர்கள் ஆட்சிக்காலத்தில் அருகே உள்ள மலைப்பகுதிகளில் இருந்து கிடைக்கும் நீரை கோட்டை அகழியில் தேக்கி வைத்து உபரி நீரை நிக்கல்சன் கால்வாய் வழியாக வெளியேற்றுமாறு மாற்றினர்.

    இதற்காக, கோட்டையின் வடக்கு பகுதியில் மீன் மார்க்கெட் அருகே உபரி நீர் வெளியேறும் வகையில் பெரிய கால்வாய் கட்டி யுள்ளனர். தற்போதிருக்கும் சாலையில் இருந்து 15 அடி பள்ளத்தில் இருக்கும் இந்த கால்வாய் காலப்போக்கில் தூர்ந்துபோனதால் கடந்த ஆண்டு பெய்த வரலாறு காணாத மழையால் கோட்டை அகழி நிரம்பியது.

    உபரி நீர் வெளியேறும் கால்வாய் தூர்ந்து போனதால் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவிலுக்குள் தண்ணீர் புகுந்து 10 நாட்களுக்கு மேல் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டது.

    இந்த நிலை இந்தாண்டு மழைநீர் தேங்காமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வேலூர் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

    இதன் ஒரு பகுதியாக, அகழியில் தேங்கும் நீரை விரைவாக வெளியேற்றும் வகையில் 10 ராட்சத நீர்மூழ்கி மோட்டாரை வாங்கியுள்ள னர். இந்த மோட்டார் மூலம் வெளியேற்றப்படும் தண்ணீரை கோட்டையின் தென்மேற்கு பகுதியில் கோட்டை சுற்றுச்சாலையில் உள்ள மாநகராட்சி நுண்ணுரம் தயாரிக்கும் கிடங்குக்கு அருகே இருக்கும் நிக்கல்சன் கால்வாயுடன் சேர்க்க குழாய் பதிக்கபட்டுள்ளது.

    இன்று 10 ராட்சஷ மோட்டார் மூலம் அகழி தண்ணீரை வெளியேற்றும் பணி தொடங்கியது.

    வேலூர் மாநகராட்சி ஆணையர் அசோக்குமார், கூறும்போது:-

    ஜலகண்டேஸ்வரர் கோவிலுக்குள் தண்ணீர் செல்வதை தடுக்க அகழியில் இருந்து தண்ணீரை வெளியேற்ற ரூ.1.90 லட்சம் மதிப்பில் 10 குதிரைத்திறன் கொண்ட நீர்மூழ்கி மோட்டாரை வாங்கியுள்ளோம். இந்த மோட்டார் மூலம் ஒரு மணி நேரத்துக்கு 1.20 லட்சம் லிட்டர் தண்ணீரை வெளியேற்ற முடியும். 10 மணி நேரம் தொடர்ந்து மோட்டாரை இயக்கினால் 12 லட்சம் லிட்டர் தண்ணீரை வெளியேற்ற முடியும்.

    இன்று சோதனை முறையில் தண்ணீர் வெளியேற்றும் பணி நடந்தது.

    தற்போதைக்கு, கோவிலில் இருந்து தண்ணீர் வெளியேறும் பகுதிக்கு கீழே அகழியில் தண்ணீர் உள்ளது. தொடர்ந்து மழை பெய்தால் மோட்டார் மூலம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு கோவிலுக்குள் அகழியின் தண்ணீர் உள்ளே புகாமல் தடுக்கப்படும் என்றார்.

    • தண்ணீரில் மலர் தூவி எம்.எல்.ஏ. வரவேற்பு
    • மோர்தானா அணையிலிருந்து வெளியேறும் தண்ணீர்

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த மோர்தானா அணை கடந்த 6 மாதங்களுக்கு மேலாக நிரம்பி உள்ளது.

    அணைக்கு வரும் தண்ணீர் அதிகரித்து உள்ளதால் மோர்தானா அணையிலிருந்து வெளியேறும் தண்ணீர் ஜிட்டப்பல்லி செக்டேமிலிருந்து வலது மற்றும் இடதுபுற கால்வாய்கள் வழியாக குடியாத்தம் மற்றும் கே.வி. குப்பம் பகுதிகளில் உள்ள ஏரிகளுக்கு தண்ணீர் சென்று கொண்டுள்ளது.

    ஏரிகளுக்கு கால்வாய்கள் மூலம் செல்லும் தண்ணீர் தொடர்ந்து சென்றதால் குடியாத்தம் ஒன்றியத்தில் உள்ள 3 ஏரிகள் நிரம்பியது.

    முழுவதும் வறண்டு இருந்த அக்ராவரம் ஏரி மோர்தானா கால்வாய் கிடு கிடுவென நிரம்பி நேற்று காலையில் வழிந்து ஓடியது சுமார் 63 ஏக்கர் பரப்பளவு உள்ள இந்த அக்ராவரம் ஏரியில் தண்ணீர் நிரம்பி வழிந்து வருவதை தொடர்ந்து குடியாத்தம் அமலுவிஜயன் எம்.எல்.ஏ. பூஜை செய்து பூக்கள் தூவி தண்ணீரை வரவேற்றார்.

    நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் எம்.கார்த்திகேயன், ஒன்றிய குழு உறுப்பினர் மனோகரன், ஊராட்சி மன்ற தலைவர் முனிசாமி, துணைத்தலைவர் தமிழரசிஇளையராஜா உள்பட ஏராளமானோர் உடன் இருந்தனர்.

    இதேபோல் சுமார் 30 ஏக்கர் பரப்பளவு உள்ள பெரும்பாடி ஏரியும் நேற்று நிரம்பி வழிந்தது. இதேபோல் 55 ஏக்கர் பரப்பளவு கொண்ட எர்த்தாங்கல் ஏரி நிரம்பி வழிவதற்கு சிறிது உயரமே இருந்தது.

    இந்நிலையில் தொடர்ந்து மோர் தானா கால்வாய் வழியாக வரும் தண்ணீரும் மழை தண்ணீரும் ஏரிக்கு வந்ததால் கடந்த இரண்டு நாட்களாக எர்த்தாங்கல் ஏரியும் சிறிதளவு வழிந்து வருகிறது.

    வேலூர் மாவட்டத்தில் குடியாத்தம் ஒன்றியத்தில் 3 ஏரிகள் நிரம்பி வழிந்து வருவதால் விவசாயிகளும் கிராம மக்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.

    மேலும் ஏரியிலிருந்து வழிந்து ஓடும் தண்ணீர் முறையாக வெளியேற ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் எனவும் ஏரிக்கு வரும் கால்வாய்களும் ஏரியிலிருந்து வெளியேறும் கால்வாய்களும் ஆக்கிரமிப்பு இல்லாமல் சீர் செய்ய வேண்டும் எனவும் விவசாயிகளும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • எஸ்.பி. ராஜேஷ் கண்ணன் அறிவுறுத்தல்
    • பரதராமி போலீஸ் நிலையத்தில் திடீர் ஆய்வு செய்தார்

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம், குடியாத்தம் துணை கோட்டம் பரதராமி போலீஸ் நிலையத்தில் நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் ஆய்வு மேற்கொண்டார்.

    இந்த ஆய்வின்போது போலீஸ் நிலையத்தில் உள்ள பதிவேடுகள், நாட்குறிப்புகள், வழக்கு சம்பந்தமான ஆவணங்கள் உள்ளிட்டவைகளை ஆய்வு செய்தார்.

    ஆய்வுக்குப் பின்னர் போலீசாரிடம் பேசிய போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் எல்லைப்புற பகுதியில் பரதராமி காவல் நிலையம் இருப்பதால் சோதனை சாவடியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும், ரோந்து பணிகளை தீவிர படுத்த வேண்டும், சமூக விரோத செயல்களை முழுவதும் கட்டுப்படுத்த வேண்டும்.

    போதைப் பொருட்கள் விற்பனையை முழுவதும் தடுக்க வேண்டும், போதைப்பொருள் விற்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும், புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், புகார் அளிக்க வரும் பொதுமக்களிடம் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும், வழக்குகளை விரைவு படுத்த வேண்டும் திருட்டு மற்றும் குற்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்ட நபர்கள் மீது தீவிர கண்காணிப்பு செலுத்த வேண்டும் என அறிவுறுத்தினார்.

    இந்த ஆய்வின்போது குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி, கே.வி.குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமாரி, பரதராமி சப்-இன்ஸ்பெக்டர் அருண்காந்தி உள்பட போலீசார் பலர் கலந்து கொண்டனர்.

    மேலும் வேலூர் மாவட்டத்தில் பயிற்சிக்கு வந்துள்ள 10 சப்-இன்ஸ்பெக்டர்கள் இந்த ஆய்வின் போது கலந்து கொண்டனர்.

    ×