என் மலர்
உள்ளூர் செய்திகள்

வேலூர் கோட்டை அகழியில் இருந்து நீர்மூழ்கி மோட்டார் மூலம் தண்ணீர் வெளியேற்றப்படும் காட்சி.
10 ராட்சத மோட்டார் மூலம் கோட்டை அகழி தண்ணீர் வெளியேற்றம்
- ஜலகண்டேஸ்வரர் கோவிலுக்குள் தண்ணீர் வருவதை தடுக்க நடவடிக்கை
- நிக்கல்சன் கால்வாய் வழியாக வெளியேற்றுமாறு மாற்றினர்
வேலூர்:
வேலூர் கோட்டையில் ஆங்கிலேயர்கள் ஆட்சிக்காலத்தில் அருகே உள்ள மலைப்பகுதிகளில் இருந்து கிடைக்கும் நீரை கோட்டை அகழியில் தேக்கி வைத்து உபரி நீரை நிக்கல்சன் கால்வாய் வழியாக வெளியேற்றுமாறு மாற்றினர்.
இதற்காக, கோட்டையின் வடக்கு பகுதியில் மீன் மார்க்கெட் அருகே உபரி நீர் வெளியேறும் வகையில் பெரிய கால்வாய் கட்டி யுள்ளனர். தற்போதிருக்கும் சாலையில் இருந்து 15 அடி பள்ளத்தில் இருக்கும் இந்த கால்வாய் காலப்போக்கில் தூர்ந்துபோனதால் கடந்த ஆண்டு பெய்த வரலாறு காணாத மழையால் கோட்டை அகழி நிரம்பியது.
உபரி நீர் வெளியேறும் கால்வாய் தூர்ந்து போனதால் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவிலுக்குள் தண்ணீர் புகுந்து 10 நாட்களுக்கு மேல் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டது.
இந்த நிலை இந்தாண்டு மழைநீர் தேங்காமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வேலூர் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, அகழியில் தேங்கும் நீரை விரைவாக வெளியேற்றும் வகையில் 10 ராட்சத நீர்மூழ்கி மோட்டாரை வாங்கியுள்ள னர். இந்த மோட்டார் மூலம் வெளியேற்றப்படும் தண்ணீரை கோட்டையின் தென்மேற்கு பகுதியில் கோட்டை சுற்றுச்சாலையில் உள்ள மாநகராட்சி நுண்ணுரம் தயாரிக்கும் கிடங்குக்கு அருகே இருக்கும் நிக்கல்சன் கால்வாயுடன் சேர்க்க குழாய் பதிக்கபட்டுள்ளது.
இன்று 10 ராட்சஷ மோட்டார் மூலம் அகழி தண்ணீரை வெளியேற்றும் பணி தொடங்கியது.
வேலூர் மாநகராட்சி ஆணையர் அசோக்குமார், கூறும்போது:-
ஜலகண்டேஸ்வரர் கோவிலுக்குள் தண்ணீர் செல்வதை தடுக்க அகழியில் இருந்து தண்ணீரை வெளியேற்ற ரூ.1.90 லட்சம் மதிப்பில் 10 குதிரைத்திறன் கொண்ட நீர்மூழ்கி மோட்டாரை வாங்கியுள்ளோம். இந்த மோட்டார் மூலம் ஒரு மணி நேரத்துக்கு 1.20 லட்சம் லிட்டர் தண்ணீரை வெளியேற்ற முடியும். 10 மணி நேரம் தொடர்ந்து மோட்டாரை இயக்கினால் 12 லட்சம் லிட்டர் தண்ணீரை வெளியேற்ற முடியும்.
இன்று சோதனை முறையில் தண்ணீர் வெளியேற்றும் பணி நடந்தது.
தற்போதைக்கு, கோவிலில் இருந்து தண்ணீர் வெளியேறும் பகுதிக்கு கீழே அகழியில் தண்ணீர் உள்ளது. தொடர்ந்து மழை பெய்தால் மோட்டார் மூலம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு கோவிலுக்குள் அகழியின் தண்ணீர் உள்ளே புகாமல் தடுக்கப்படும் என்றார்.






