என் மலர்tooltip icon

    வேலூர்

    • சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் குவிந்து வருகின்றனர்
    • அடிப்படை வசதிகள் செய்து தர பொதுமக்கள் வலியுறுத்தல்

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகே ஊசூர் அடுத்து அமைந்துள்ளது புலிமேடு கிராமம். இக்கிராமத்தை ஒட்டிய வனப்பகுதியில் உள்ள காட்டாற்றில் பருவமழை காலத்தில் வெள்ளம் ஏற்படும். அச்சமயத்தில் மலைப்பகுதியில் பாறைகளுக்கு இடையே இருந்து வரும் தண்ணீர் சிறு நீர் வீழ்ச்சி போல் ஆர்ப்பரித்து கொட்டியது.

    இந்நிலையில் மாண்டஸ் புயல் மற்றும் தொடர் மழை காரணமாக மலையில் இருந்து உருவாகும் காட்டாறில் வெள்ளம் ஏற்பட்டு தற்போது நீர் வர துவங்கியுள்ளது. வேலூரில் இருந்து சுமார் 16 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இயற்கை எழில் சூழ்ந்த வனப்பகுதிக்கு மத்தியில் ரம்மியமாய் கொட்டும் காட்டாற்று நீர் வீழ்ச்சியை கண்டு உற்சாக குளியல் போட வேலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மற்றும் அண்டைய மாவட்டத்தில் இருந்தும் பொதுமக்கள் குடும்பத்துடன் குவிந்து வருகின்றனர்.

    மேலும் முதியோர்கள் இளைஞர்கள் என பல்வேறு தரப்பினரும் குடும்பத்தோடு பொழுது போக்கிற்காக வந்து செல்கின்றனர். நாள் ஒன்றுக்கு சுமார் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வருகை தருகின்றனர். நேற்று ஞாயிற்றுகிழமை என்பதால் அதிகமான மக்கள் வந்த வண்ணம் இருந்தனர்.

    வெயிலுக்கு பெயர் பெற்ற, இயற்கை சுற்றுலா தலங்கள் குறைந்த வேலூர் மாவட்டத்தில் பொழுதுபோக்கிற்காக இயற்கைச் சுற்றுலா தளத்தை தேடி அலையும் மக்களுக்கு பெரும் வரமாக புலிமேடு காட்டாற்று நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. இங்கு அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    • திருமணமாகாத விரக்தியில் விபரீதம்
    • போலீசார் விசாரணை

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அருகே உள்ள கீழ்கொத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சேகர் (வயது 40). இவருக்கு திருமணம் ஆகவில்லை. கூலி வேலை செய்து வந்தார்‌

    கடந்த 4 நாட்களுக்கு முன்பு சேகர் வீட்டை விட்டு வெளியே சென்றார். பின்னர் வீடு திரும்பவில்லை.

    இந்த நிலையில் அந்த கிராமத்தில் ஒதுக்குப்புறமாக உள்ள விவசாயக் கிணற்றில் சேகர் பிணமாக மிதந்தார். வேப்பங்குப்பம் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று கிணற்றில் மிதந்த சேகர் உடலை மீட்டனர்.

    சேகர் கட்டியிருந்த லுங்கியில் சுமார் 25 கிலோ எடை கொண்ட கருங்கல் கட்டப்பட்டிருந்தது. இதனால் கருங்கல்லை கட்டி அவரை யாரும் கிணற்றில் தள்ளினார்களா என்று கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தினர்.

    திருமணமாகாத விரக்தியில் சேகர் லுங்கியில் கருங்கல் கட்டிக்கொண்டு தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • தொழிலாளர்கள் 2 பேர் கைது
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    வேலூர் அடுத்த தொரப்பாடி நேதாஜி தெருவை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி. இவர் ஊர் ஊராக வாகனங்களில் வைத்து காய்கறி வியாபாரம் செய்து வருகிறார்.

    இவரிடம் அதே தெருவை சேர்ந்த அஸ்வின் (36), பாபு (41) ஆகியோர் தொழிலாளர்களாக வேலை செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் சத்தியமூர்த்தி தனது குடும்பத்தினருடன் வீட்டை பூட்டிக்கொண்டு சாவியை தொழிலாளர்களிடம் ஒப்படைத்துவிட்டு சென்று இருந்தார்.

    நேற்று காலை வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டில் இருந்த 2 கியாஸ் சிலிண்டர்கள் மற்றும் ஒரு யு.பி.எஸ் பேட்டரி திருடு போனது தெரியவந்தது.

    இது குறித்து சத்தியமூர்த்தி பாகாயம் போலீசில் புகார் செய்தார்.போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரனையில் அஸ்வின், பிரபு ஆகியோர் பூட்டி இருந்த வீட்டை திறந்து கியாஸ் சிலிண்டர், பேட்டரி திருடியது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சத்துவாச்சாரியில் போக்குவரத்து நெரிசல் குறைந்தது
    • பொதுமக்கள் பாராட்டு

    வேலூர்:

    வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே சென்னை- பெங்களூரு சாலையில் மூடப்பட்டிருந்த தடுப்புகள் நேற்று அகற்றப்பட்டது. இதனை கலெக்டர் குமாரவேல்பாண்டியன் ஆய்வு செய்தார்.வேலூர் புதிய பஸ்நிலையத்தில் இருந்து கடந்த செப்டம்பர் மாதம் அனைத்து பகுதிகளுக்கும் பஸ்கள் இயக்கப்பட்டன.

    இதனால் கிரீன்சர்க்கிள் பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகமானது. அதனை தவிர்க்கும் வகையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டன. வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே கிரீன்சர்க்கிள் பகுதிக்கு வாகனங்கள் வருவதை தவிர்க்கும் வகையில் சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை மற்றும் சர்வீஸ் சாலை இணைப்பு பகுதி தடுப்புகள் வைத்து மூடப்பட்டது.

    வேலூர் புதிய பஸ்நிலையம், காட்பாடிக்கு செல்லும் வாகனங்கள் அனைத்தும் கிரீன் சர்க்கிளை அடுத்துள்ள சர்வீஸ் சாலை வழியாக சேண்பாக்கம் ரெயில்வே மேம்பாலத்தின் கீழ் சென்று புதிய பஸ்நிலையம், காட்பாடி, சென்னை நோக்கி செல்லும் வகையில் போக்குரத்து மாற்றப்பட்டது. அதனால் கிரீன்சர்க்கிள் பகுதியில் போக்குவரத்து நெரிசல் குறைந்தது. ஆனால் வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே சத்துவாச்சாரி பகுதியில் உள்ள சர்வீஸ் சாலையில் வாகனங்களின் வரத்து அதிகரித்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    சர்வீஸ் சாலை திறப்பு

    வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே மூடப்பட்ட சென்னை- பெங்களூரு சர்வீஸ் சாலை வழியாக இருசக்கர, ஆட்டோ, கார்கள் செல்லும் வகையில் பாதை ஏற்படுத்தி, அதனை திறக்க வேண்டும் என்று வணிகர்கள், வாகன ஓட்டிகள், பொதுமக்கள் தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்பேரில் மூடப்பட்ட சர்வீஸ்சாலை நேற்று திறக்கப்பட்டது. பைக்குகள், ஆட்டோ, கார் ஆகியவை மட்டும் செல்லும் வகையில் பாதை ஏற்படுத்தப்பட்டன. இதனை வேலூர் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது உதவிகலெக்டர் பூங்கொடி, துணை போலீஸ் சூப்பிரண்டு திருநாவுக்கரசு, நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள், போக்குவரத்து போலீசார் உடனிருந்தனர்.

    சர்வீஸ் சாலை வழியாக பைக்குகள், ஆட்டோ, கார் உள்ளிட்ட இலகுரக வாகனங்கள் செல்லும் வகையில் பாதை ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த வழியாக டெம்போ, பஸ் லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் செல்ல அனுமதி கிடையாது என்று நெடுஞ்சாலைத்துறையினர் தெரிவித்தனர்.

    தேசிய நெடுஞ்சாலையில் வரும் லாரி, பஸ் உள்ளிட்ட கனரக வாகனங்கள் சர்வீஸ் ஆலையில் திரும்புவதற்கு முயற்சிக்கின்றனர் அங்குள்ள போக்குவரத்து போலீசார் கனரக வாகனங்களை மீண்டும் தேசிய நெடுஞ்சாலையில் திருப்பி அனுப்பி வருகின்றனர்.

    சத்துவாச்சாரியில் போக்குவரத்து நெரிசல் குறைந்தது

    சர்வீஸ் சாலை இணைப்பு தடுப்பு அகற்றப்பட்டதால் சத்துவாச்சாரியில் தற்போது போக்குவரத்து நெரிசல் குறைந்தது. இதற்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

    • அனைத்து துறை பணியாளர் சங்க பொதுக்குழுவில் தீர்மானம்
    • ஏராளமாேனார் கலந்து கொண்டனர்

    வேலூர்:

    வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு அரசு அனைத்து துறை பணியாளர் சங்கம் சார்பில் மாநில பொதுக்குழு கூட்டம் இன்று நடந்தது.

    கூட்டத்திற்கு மாநில கவுரவ தலைவர் ராஜவேலு தலைமை தாங்கினார். மாநில பொதுச் செயலாளர் தொல்காப்பியன் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் பாலாஜி சிங் வரவேற்பு நிகழ்த்தினார். கூட்டத்தில் மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    தமிழ்நாடு அரசு பணியாளர்களுக்கு முன்பு போலவே வருங்கால வைப்பு நிதி பிரித்தம் செய்ய வேண்டும் பழைய ஓய்வு திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

    தமிழக அரசு தோட்டக்கலை பண்ணைகளில் பணி நிரந்தரம் செய்யப்பட்ட பணியாளர்களுக்கு ஓய்வூதியம் பணிக்கொடை பதவி உயர்வு குடும்ப நலநிதி வழங்க வேண்டும் தமிழக அரசியல் காலியாக உள்ள 3 லட்சம் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

    பேரூராட்சி தினக்கூலி பணியாளர்களின் அரசு தோட்டக்கலை பணியில் பணிபுரியும் கூலி பணியாளர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் மாநில பொருளாளர் ஜோதி ராமலிங்கம், தலைமை நிலைய செயலாளர் விஜயகுமார், துணைத் தலைவர் மாயன், மாநில இணை செயலாளர் ஸ்ரீதர், மாவட்ட தலைவர் ரமேஷ் உட்பட ஏராளமாேனார் கலந்து கொண்டனர்.

    • 800 கிராம் பறிமுதல்
    • வேலூர் ெஜயிலில் அடைப்பு

    வேலூர்:

    கஞ்சா மற்றும் போதை பொருள் விற்பனை தடுக்கும் விதமாக போலீசார் தீவிர வாகன தணிக்கை மற்றும் கடைகளில் சோதனை நடத்தி வருகின்றனர்.

    வேலூர் போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் உத்தரவின் பேரில் சத்துவாச்சாரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி, சப் இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் நேற்று மாலை சத்துவாச்சாரி வ.உ.சி நகர் மலையடிவாரத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது மலை அடிவாரத்தில் 2 வாலிபர்கள் கஞ்சா விற்பனை செய்து கொண்டு இருந்தனர். அவர்களை பிடித்து அவர்களிடம் இருந்து 800 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர்கள் 2 பேரும் வ. உ.சி நகரை சேர்ந்த அண்ணன் தம்பிகளான குமார் (வயது25), மணி (24) என தெரிய வந்தது. போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்து வேலூர் சிறையில் அடைத்தனர்.

    • 90 சதவீதம் வங்கிகளால் பிணையமில்லாத கடன் வழங்கப்படும்
    • கலெக்டர் குமாரவேல்பாண்டியன் அறிவிப்பு

    வேலூர்:

    வேலூர் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மத்திய அரசின் 60 சதவீத நிதி பங்களிப்புடன் பிரதமரின் உணவு பதப்படுத்தும் குறுந்தொழில் நிறுவனங்கள் ஒழுங்குபடுத்தும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.

    இந்த திட்டத்தின் கீழ் புதியதாக தொழில் தொடங்க ஆர்வமுள்ளோர், ஏற்கனவே உணவுப்பதப்படுத்தும் தொழிலில் ஈடுபட்டுள்ளோர் மற்றும் குறு நிறுவனங்கள், சுய உதவி குழுவினர், உழவர் உற்பத்தியாளர் அமைப்பினர், உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் ஆகியோர் பயன்பெறலாம்.

    ரூ.1 கோடி வரையிலான திட்டத் தொகை கொண்ட உணவு பதப்படுத்தும் தொழில் திட்டங்கள் இத்திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற தகுதி பெற்றவை. இந்த திட்ட தொகையில் 10 சதவீத முதலீட்டாளர் அவர்களின் பங்காக செலுத்த வேண்டும். 90 சதவீதம் வங்கிகளால் பிணையமில்லாத கடன் வழங்கப்படும்.

    அரசு 35 சதவீதம் மானியம், அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரைக வழங்கும். சுயஉதவிக்குழுவினர் உணவு பதப்படுத்தும் தொழிலில் ஈடுபட்டால் அவர்கள் ஒவ்வொருவருக்கும் ரூ.40 ஆயிரம் வீதம் தொடக்க நிலை மூலதனமாக வழங்கப்படும்.

    உணவுப்பதப்படுத்தும் தொழிலில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்கு தேவையான பொது கட்டமைப்பு வசதிகள் மற்றும் பொது வசதியாக்க மையங்களை ஏற்படுத்தவும் திட்டத்தொகையில் 35 சதவீத மானியத்துடன் கடனுதவி வழங்கப்படும்.

    இத்திட்டத்தின் கீழ் பயன்பெற pmfme.mofpi.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தினை பதிவு செய்ய வேண்டும். ஆர்வமுள்ள தொழில் முனைவோர், தொழில் நிறுவனங்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளலாம்.

    கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட தொழில்மையத்தை அணுகலாம் என கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தெரிவித்துள்ளார்.

    • கணவர் இறந்த துக்கம் தாங்காமல் விபரீதம்
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    வேலூர் அடுத்த அலமேலு மங்காபுரத்தை சேர்ந்தவர் கார்த்திக். இவரது மனைவி ஷர்மிளா (வயது 30). இவர் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஊழியராக வேலை செய்து வந்தார்.

    இவர்கள் கடந்த 2½ ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.தம்பதிக்கு 1½ வயதில் பெண் குழந்தை உள்ளது.

    இந்த நிலையில் கடந்த மாதம் கார்த்திக் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் ஷர்மிளா கணவர் இறந்த தூக்கம் தாளாமல் வேதனையில் இருந்து வந்தார்.

    கணவர் இறந்து விட்டதால் ஷர்மிளா அலமேலு மங்காபுரம் பாப்பாத்தி அம்மன் கோவில் தெருவில் உள்ள தனது தாய் வீட்டில் குழந்தையுடன் வசித்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத போது ஷர்மிளா மின்விசிறியில் தூக்கில் தூங்கினார். வெளியே சென்றிருந்த ஷர்மிளாவின் பெற்றோர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது ஷர்மிளா தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக ஷர்மிளாவை மீட்டு சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஷர்மிளா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து ஷர்மிளாவின் தந்தை சவுந்தரராஜன் சத்துவாச்சாரி போலீசில் புகார் செய்தார்.

    சத்துவாச்சாரி போலீசார் ஷர்மிளாவின் பிணைத்து மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சாலையில் ஒரு புறம் தடுப்புச் சுவர்கள் வைக்கப்பட்டுள்ளது.
    • நெரிசலை தடுக்க சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்

    வேலூர்:

    வேலூர் காகிதப்பட்டறை சாலையில் பாதாள சாக்கடைக்காக அங்கங்கே பள்ளங்கள் தோண்டப்பட்டு பணிகள் நடக்கிறது. சாலையில் ஒரு புறம் தடுப்புச் சுவர்கள் வைக்கப்பட்டுள்ளது.

    இதனால் வேலூரில் இருந்து சத்துவாச்சாரி செல்லவும் சத்துவாச்சாரியிலிருந்து வேலூர் செல்லவும் வாகன ஓட்டிகள் இந்த வழியில் செல்ல முடியாமல் அவதியடைந்துள்ளனர். பாதாள சாக்கடை பணிகள் நடைபெறுவதால் இந்த வழியாக வரும் வாகனங்கள் எதிர் வருவதால் திசையில் செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர். 5 நிமிடத்தில் செல்ல வேண்டிய இடத்திற்கு சுமார் 15 நிமிடத்திற்கு மேலாக ஆகிறது.

    ஆற்காடு சாலையை ஒரு வழியாக பாதையாக மாற்றினால் நெரிசலை தவிர்க்க முடியும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    • ெஜயிலில் அடைத்தனர்
    • அளவு கற்கைகளை அகற்றியதால் ஆத்திரம்

    அணைக்கட்டு:

    ஒடுகத்தூர் அடுத்த அகரம் கிராமத்தை சேர்ந்தவர் வினாயகம். இவரது மனைவி ஜமுனா (வயது 52)இவர்களுக்கும் மகிமைதாஸ் என்பவருக்கும் சமீப காலமாக நிலத்தகராறு இருந்து வந்துள்ளது.

    இதனையடுத்து கடந்த 15-ந் தேதி வருவாய் அலுவலர்கள் மற்றும் போலீசார் முன்னிலையில் சம்பந்தப்பட்ட நிலத்தினை சொந்தமானவர்களுக்கு அளவீடு செய்து அளவுகல் நட்டு சென்றனர்.

    இதனையடுத்து அதே பகுதியை சேர்ந்த வினோத் குமார், மகிமைதாஸ், ஜெயந்தி, முரளி ஆகிய 4 பேரும் சேர்ந்து அளவு கற்கைகளை அகற்றியதாக கூறப்படுகிறது. பின்னர் ஜமுனாவை ஆபாசமாக திட்டியுள்ளனர்.

    இதனையடுத்து ஜமுனா வேப்பங்குப்பம் போலீஸ்சில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து வினோத்குமார், மகிமைதாஸ், ஜெயந்தி ஆகிய 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தொடர்ந்து புகார்கள் வந்ததால் நடவடிக்கை
    • பொதுமக்களுக்கு தரமான பொருட்களை வழங்க அறிவுரை

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் நேதாஜி சவுக் செக்குமேடு பகுதியில் ரேசன் கடை உள்ளது.

    இந்த ரேசன் கடையில் அரிசி உள்ளிட்ட பொருட்கள் தரமற்ற முறையில் இருப்பதாகவும் மேலும் இந்த ரேசன்கடை அடிக்கடி மூடப்படுவதாகவும் தொடர்ந்து புகார்கள் கூறப்பட்டு வந்தது.

    இதனைத் தொடர்ந்து கலெக்டர் குமாரவேல் பாண்டியன், மாவட்ட வழங்கல் அலுவலர் சுமதி ஆகியோர் உத்தரவின் பேரில் வேலூர் மாவட்ட பறக்கும் படை தாசில்தார் ஏ.கோடீஸ்வரன் தலைமையில் அதிகாரிகள் நேற்று அந்த ரேசன் கடையில் திடீர் ஆய்வு செய்தனர்.

    அப்போது ரேசன் கடைக்கு பொருட்கள் வாங்க வந்த பொதுமக்கள் தரமற்ற முறையில் பல மாதங்களாக ரேசன் அரிசி வழங்கப்படுவதாகவும் இதனால் பலர் ரேசன் அரிசி வாங்காமல் திரும்பிச் செல்வதாகவும் குற்றம் சாட்டினர்.

    அதிகாரிகள் ரேசன் கடை ஊழியர்களிடம் பொது மக்களுக்கு வழங்கப்படும் அரிசி உள்ளிட்ட பொருட்கள் தரமற்றவையாக கிடங்கள் இருந்து வந்தால் உடனடியாக அதனைக் கிடங்கிற்கு திருப்பி அனுப்பி தரமான பொருட்களை பெற்று பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் என அறிவுறுத்தினர்.

    இந்த ஆய்வின்போது வருவாய் ஆய்வாளர் ஜோதி ராமலிங்கம், நகர மன்ற உறுப்பினர் லாவண்யாகுமரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • ஆலோசனை கூட்டம் நடந்தது
    • மாத இறுதிக்குள் வசூலிக்க நடவடிக்கை

    வேலூர்:

    வேலூர் மாநகராட்சியில் நடைபெறும் வரி வசூல் செய்யும் பணியை தீவிரப்படுத்த கமிஷனர் அசோக்குமார் உத்தரவிட்டுள்ளார்.

    வேலூர் மாநகராட்சிக்கு சொந்தமான ஏராளமான கடைகள், வாகன நிறுத்துமிடங்கள் உள்ளது. அவற்றை ஏலம் விடப்பட்டு வாடகை வசூலிக்கப்பட்டு வருகிறது. ஏலம் எடுத்தவர்களில் பலர் வாடகை செலுத்தாமல் உள்ளனர். சுமார் ரூ.15 கோடி வரை வாடகை பாக்கி நிலுவையில் உள்ளது.

    இதேபோல சொத்து வரி, வீட்டு வரி, பாதாள சாக்கடை வரி உள்ளிட்ட வரிகளும் பலர் கட்டாமல் உள்ளனர். ரூ.35 கோடி வரை பாக்கி உள்ளது. இந்த தொகை வசூலிக்கப்பட்டு வருகிறது. இதுவரை சுமார் 30 சதவீதம் மட்டுமே வசூலிக்கப்பட்டுள்ளது.

    இந்த தொகை வசூலிக்க மாநகராட்சி கமிஷனர் அசோக்குமார் தலைமையில் நேற்று மாநகராட்சி அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. அதில் வருவாய் ஆய்வாளர்கள், உதவி வருவாய் அலுவலர்கள் உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் கமிஷனர் பேசுகையில்:-

    மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரிகள் மற்றும் வாடகையினை பலர் கட்டாமல் உள்ளனர். அவர்கள் குறித்த பட்டியலை வைத்துக் கொண்டு வரிகளை வசூல் செய்யும் பணியினை தீவிரப்படுத்த வேண்டும்.

    தற்போது 95 சதவீதம் பாக்கி உள்ள தொகை வசூல் செய்திருக்க வேண்டும். இந்த பணியில் மந்தம் உள்ளது.

    பணிகளை முழு அர்ப்பணிப்புடன் மேற்கொள்ள வேண்டும். இந்த மாத இறுதிக்குள் 75 சதவீதம் நிலுவையில் உள்ள வரிகளையும், வாடகையினையும் வசூல் செய்திருக்க வேண்டும் என்றார்.

    ×