என் மலர்
வேலூர்
- பெண் குழந்தை பிறந்தது
- தாயும் குழந்தையும் நலமாக உள்ளனர்
வேலூர்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் தாலுகா லக்ஷ்மணபுரம் கிராமத்தை சேர்ந்தவர் திருநாவுக்கரசு விவசாயி. இவரது மனைவி காயத்ரி ஒன்பது மாத கர்ப்பிணியான இவர் பிரசவத்திற்காக மேல் பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அவரை பரிசோதனை செய்த மருத்துவர் அவரை மேல்சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்து வமனைக்கு அழைத்து செல்ல இன்று காலை 108 ஆம்புலன்ஸ் க்கு பரிந்துரை செய்தனர். இதை அடுத்து மருத்துவ உதவியாளர் சதீஷ் மற்றும் டிரைவர் குமரவேல் ஆகியோர் 108 ஆம்புலன்சில் மேல்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு விரைந்தனர்.
அங்கு பிரசவ வலியில் இருந்த காயத்ரியை ஆம்புலென்சில் ஏற்றிக் கொண்டு வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நோக்கி விரைந்தனர். பொய்கை அருகே செல்லும் வழியில் காயத்திரிக்கு பிரசவ வலி அதிகரித்தது. இதனால் வேறுவழியின்றி மருத்துவ உதவியாளர் சதீஷ் பிரசவம் பார்த்தார்.
அப்போது அழகான பெண் குழந்தை பிறந்தது. பின்பு தாயும் சேயும் வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தற்போது தாயும் குழந்தையும் நலமாக உள்ளனர்.
- விலைவாசி உயர்வை கண்டித்து நடந்தது
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
குடியாத்தம்:
குடியாத்தம் நகர அதிமுக சார்பில் நகராட்சி அலுவலகம் அருகே அரசு உயர்த்தி உள்ள சொத்து வரி உயர்வு மின் கட்டணம், பால் விலை, விலைவாசி உயர்வு, உள்ளிட்டவைகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு குடியாத்தம் நகர செயலாளர் ஜே.கே.என். பழனி தலைமை தாங்கினார்.
மாவட்ட துணை செயலாளர்கள் ஆர்.மூர்த்தி, எஸ். அமுதா, முன்னாள் நகர மன்ற தலைவர் எம்.பாஸ்கர், நகர அவை தலைவர் ஆர்.கே.அன்பு, நகர மன்ற துணைத் தலைவர் பூங்கொடி மூர்த்தி, நகர துணை செயலாளர் ஏ.ரவிச்சந்திரன், நகர பொருளாளர் வி.என். தனஞ்செயன், முன்னாள் நகர் மன்ற துணைத் தலைவர் எஸ்.டி. மோகன்ராஜ், மாவட்ட பிரதிநிதி எஸ்.என்.சுந்தரேசன், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் எஸ்.ஐ.அன்வர்பாஷா, நகர துணை செயலாளர் கே.அமுதா, மாவட்ட பிரதிநிதிகள் எம்.கே.சலீம், அட்சயாவினோத்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக வேலூர் புறநகர் மாவட்ட செயலாளர் த.வேலழகன் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜி. லோகநாதன், ஒன்றிய செயலாளர் வி.ராமு, டி. சிவா, பொகளூர்பிரபாகரன், சீனிவாசன், ஆனந்தன், மாவட்ட பொருளாளர் காடை மூர்த்தி, மாவட்ட மாணவர் அணி செயலாளர் ரமேஷ் குமார், வழக்கறிஞர் கே.எம்.பூபதி உள்பட இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள், பிற அணி பொறுப்பாளர்கள், முன்னாள் நகர மன்ற உறுப்பினர்கள், நகர மன்ற உறுப்பினர்கள், ஒன்றிய குழு உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், கூட்டுறவு வங்கி நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- நிலத்தகராறில் பயங்கரம்
- போலீசார் விசாரணை
அணைக்கட்டு:
ஒடுகத்தூர் அடுத்த மேலரசம்பட்டு அருகே உள்ள பங்களாமேடு பகுதியை சேர்ந்தவர் வீராசாமி. இவரது மகன்கள் ஜெயசங்கர்(வயது 45), பாபு(40). இவர்களுக்கு திருமணமாகி அதே பகுதியில் தனித்தனியே குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இவர்களுக்குள் ஏற்கனவே பூர்வீக நிலம் சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இதனால், இவர்கள் இருவருக்கும் அடிக்கடி கை கலப்பு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. நிலம் எப்டியாவது யாராவது ஒருவருக்கு சொந்தமாக வேண்டும் என்று அவரவர் சதி திட்டம் தீட்டி பகையை வளர்த்துள்ளனர். மேலும், சம்பந்தப்பட்ட நிலத்தை சுற்றி பாபு முள் வேலி போட்டுள்ளார். இதனை ஜெயசங்கர் தட்டி கேட்டார். இதில் அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது.
தனது தம்பியை எப்படியாவது தீர்த்து கட்ட வேண்டும் என்று திட்டம் தீட்டினார். இந்நிலையில், நேற்று மாலை பாபு தனது பைக்கில் ஒடுகத்தூர் பகுதிக்கு சென்று விட்டு வீடு திரும்பி கொண்டிருந்தார்.
அப்போது பைக்கை தடுத்து நிறுத்திய ஜெயசங்கர் நிலத்தை சுற்றி நீ எப்படி முள் வேலி போடலாம், நீ இதோடு ஒழிந்து போ என்று தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் பாபுவின் தலையில் வெட்டினார். அப்போது அவரது மனைவி லட்சுமி மற்றும் மகன் குமார் ஆகியோரும் சேர்ந்து பாபுவை தாக்கியுள்ளனர்.
பாபுவின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து ரத்த வெள்ளத்தில் சரிந்த பாபுவை மீட்டு வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் அங்கு அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில், ஜெயசங்கர், மற்றும் குமார் ஆகியோர் தலைமறைவாகி விட்டனர்.
இதுகுறித்து, பாபு கொடுத்த புகாரின் பேரில் வேப்பங்குப்பம் சப்-இன்ஸ்பெக்டர் இன்பரசன் வழக்குப்பதிந்து லட்சுமியை கைது செய்தனர். மேலும் தப்பியோடிய தந்தை மகன் ஆகிய 2 பேரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- பொதுமக்கள், மாணவர்களுக்கு தென்னங்கன்று வழங்கினர்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
அணைக்கட்டு:
அணைக்கட்டு ஒன்றியத்திற்க்குட்பட்ட பீஞ்சமந்தை அடுத்த ஜார்தான்கொல்லை, மலை ஊராட்சியில் குண்டுராணி அரசு தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது.
இதில் குறைவான பள்ளி மாணவர்களே இருப்பதாலும் மேலும் சில மாணவர்கள் இடை நின்றதாலும் பள்ளிமானவர்களை திரும்ப சேர்க்க பள்ளிவளாகத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பிஞ்சமந்தை, ஜாத்தான் கொள்ளை, பலாம்பட்டு ஆகிய ஊராட்சிகளில் செயல்பட்டு வரும் அரசு பள்ளியில் கூடுதலாக பள்ளி மாணவர்களை சேர்க்க குண்டுராணி அரசு தொடக்கப்பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
விழாவில் குண்டு ராணிஅரசு தொடக்கப் பகுதிபள்ளியில் தலைமை ஆசிரியர் ஜோசப் அன்னையா தலைமை தாங்கினார். இதில் ஜார்தான்கொள்ள ஊராட்சிமன்ற தலைவர் லதாராஜசேகர், மற்றும் வட்டார கல்வி அலுவலர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேலும் கடந்த ஆண்டில் அரசு பள்ளியில் குறைவான மாணவர்கள் மட்டுமே சேர்க்கை இருந்த நிலையில் நடப்பாண்டில் தலைமை ஆசிரியர் ஜோசப் அன்னையா அவர்கள் முயற்சியால் வீடு வீடாக சென்று பெற்றோர்களிடம் மாணவர்களை பள்ளிக்கு அனுப்புங்கள் என தொடர்ச்சியாக வலியுறுத்தியதை தொடர்ந்து, மலைகிராமங்களில் இதுவரை பள்ளிக்கு செல்லாமல் மற்றும் இடைநின்ற பள்ளி மாணவர்களை 57 பேர் புதிதாக பள்ளியில் சேர்த்துள்ளார்.
மேலும் இதுபோல மலை கிராமங்களில் உள்ள பள்ளிக்கு செல்லாமல் மற்றும் இடை நின்ற மாணவர்களை மீண்டும் பள்ளிக்கு வரவழைக்கும் விதமாக பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இதில் சுமார் 100க்கும் மேற்ப்பட்ட தென்னங்கன்றுகள், விளையாட்டு உபகரணங்கள், மாணவர்களுக்கு எழுதுகோல், மற்றும் அத்தியாவசிய பொருட்கள் போன்றவை வழங்கப்பட்டது.
இதில் ஊரிஸ் கல்லூரி பாதுகாப்புகள் துறை தலைவர் திருமாறன் கலந்துக்கொண்டு மலை கிராமங்களில் இடை நின்ற மாணவர்களை கண்டறிந்து தொடர்ச்சியாக சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டு வரும் பள்ளி தலைமை ஆசிரியர் வாழ்த்தி பேசினார்.
மேலும் இதனைத் தொடர்ந்து பள்ளி மாணவர்கள், பணியாற்றும் ஊழியர்கள், பெற்றோர்கள் என 100 பேருக்கு இலவசமாக தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டது.
இதில் பள்ளி மாணவர்கள் பெற்றோர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
- சி.சி.டி.வி. கேமரா காட்சிகள் ஆய்வு
குடியாத்தம்:
குடியாத்தம் கொண்டசமுத்திரம் ஊராட்சி பாண்டியன் நகர் அடுத்த ஜெய் நகர் கட்டபொம்மன் தெருவை சேர்ந்தவர் பி.எச்.இமகிரிபாபு அதிமுக மாவட்ட வர்த்தக அணி செயலாளர் ஆகவும், குடியாத்தம் நில வங்கி தலைவராகவும், அப்பகுதி ஒன்றிய குழு உறுப்பினராகவும் உள்ளார்.
இவரது மனைவி மமதா (வயது 40) இவர் ராஜா குப்பம் ஊராட்சி மன்ற தலைவராகவும் குடியாத்தம் ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பின் தலைவராகவும் உள்ளார்.
நேற்று இரவு சுமார் 7.30 மணி அளவில் ஊராட்சி மன்ற தலைவர் மமதா தனது வீட்டின் வெளியே அக்கம் பக்கத்தினர் உடன் பேசிக்கொண்டிருந்தார் அப்போது மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்தபடி வந்த இரண்டு மர்ம நபர்கள் மமதா அருகே வந்து கண்ணிமைக்கும் நேரத்தில் கழுத்தில் இருந்த 8 சவரன் தாலி செயினை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்றார். இதனால் அதிர்ச்சி யடைந்த மமதா பீவி கூச்சலிட்டு ள்ளார். அக்கம் பக்கத்தினர் விரைந்து வருவதற்குள் ஹெல்மெட் கொள்ளை யர்கள் கண்ணி யமைக்கும் நேரத்தில் தப்பிவிட்டனர்.
இது குறித்து உடனடியாக குடியாத்தம் நகர போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி, டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி உள்ளிட்டோர் செயின் தாலி செயின் பறிப்பு குறித்து தீவிர விசாரணை நடத்தினர். மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர்.
மேலும் இந்த ஹெல்மெட் கொள்ளையர்கள் செயின் பறித்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் உத்தரவின் பேரில் குடியாத்தம் நகரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் வாகன சோதனை தீவிர படுத்தப்பட்டு போலீசார் தீவிர வாகன சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
- குறைதீர்வு கூட்டத்தில் வலியுறுத்தல்
- நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் உறுதி
வேலூர்:
வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி களுக்கான சிறப்பு குறைத்தீர்வு முகாம் இன்று காலை நடந்தது. முகாமிற்கு கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமை தாங்கினார். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் சரவணன் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் தெரிவித்த கோரிக்கைகள் விவரம் வருமாறு:-
வேலூர் புதிய பஸ் நிலையத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு கடைகள் ஒதுக்க வேண்டும். மேலும் மாற்றுத்திற னாளிகளுக்கு வீடுகள் மற்றும் வீட்டு மனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாற்றுத்திறனாளிகள் பலர் கடன் பெற்று தொழில் செய்து வருகின்றனர். அவர்களுக்கான கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். மேலும் ஊனத்திற்கு ஏற்ப பெற்று வரும் உதவித்தொகை உயர்த்தி வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4 மணி நேரம் வேலை உள்ளிட்ட சலுகைகள் கொண்டு வர அதற்கான ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.
அரசு அலுவலங்களில் மாற்றுத்திறனாளிகள் நடப்பது சிரமமாக உள்ளது. எனவே அவர்கள் எளிதாக செல்லும் வகையில் சாய்வு தளம் அமைக்கப்பட வேண்டும். வேலை வாய்ப்புக்காக பலர் விண்ணப்பித்துள்ளனர். அவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும். தொழில் பயிற்சி பள்ளி அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதற்கு கலெக்டர் குமாரவேல்பாண்டியன் பதிலளித்து பேசுகையில், வேலூர் புதிய பஸ் நிலையத்தில் கடைகள் ஒதுக்கி தருவது தொடர்பாக மாநகராட்சிக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. அனுமதி கிடைக்கப்பெற்ற பின் கடைகள் ஒதுக்கப்படும். வீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை தொடர்பாக மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் பட்டா கேட்பவர்களுக்கும் பட்டா வழங்கப்படும்.
மாற்றுத்திறனாளிக்கான கடன் தள்ளுபடி குறித்து அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் மேலும் உங்களது கோரிக்கைகள் குறித்து அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டு அதன் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.
- வேலூரில் 2 பேர் கைது
- 4 செல்போன்கள் பறிமுதல்
வேலூர்:
வேலூர் ஆற்காடு சாலையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சிகிச்சை பெற்று செல்கின்றனர். இந்த ஆஸ்பத்திரியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு டாக்டர்கள் ஓய்வு அறை மற்றும் வாகன நிறுத்தும் இடங்களில் நிறுத்தப்பட்ட கார்களில் இருந்த செல்போன்கள் திருடு போனது.
இதுகுறித்து வேலூர் வடக்கு குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர். போலீசார் தனியார் ஆஸ்பத்திரியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.
அதில் 2 பேர் குல்லா மற்றும் மாஸ்க் அணிந்து வந்து டாக்டர்கள் அறை மற்றும் கார்களில் செல்போன் திருடியது. மற்றும் ஆஸ்பத்திரியில் உள்ள குழந்தைகள் வார்டு பகுதியில் நடமாடியது பதிவாகி இருந்தது.
இதன் மூலம் குற்றவாளிகளை போலீசார் அடையாளம் தெரிந்து கொண்டனர். இது குறித்து தனியார் ஆஸ்பத்திரியில் உள்ள காவலர்களுக்கும் படங்களை அனுப்பி கண்காணிக்க உத்தரவிட்டனர்.
இந்த நிலையில் நேற்று மீண்டும் செல்போன் திருடர்கள் இருவரும் தனியார் ஆஸ்பத்திரி வளாகத்திற்குள் புகுந்தனர்.
அவர்களை அடையாளம் கண்ட ஆஸ்பத்திரி காவலர்கள் இருவரையும் மடக்கி பிடித்தனர். பின்னர் அவர்களை வேலூர் வடக்கு குற்றப்பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீஸ் விசாரணையில் அவர்கள் வேலூர் சலவன்பேட்டையை சேர்ந்த கார்த்தி (வயது 22) ராணிப்பேட்டையை சேர்ந்த ரவி (45) என்பது தெரிய வந்தது.
மது போதைக்கு அடிமையான இவர்கள் ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் செல்போனை திருடி ரூ.1000 முதல் 2000 வரை விற்பனை செய்துள்ளனர். அந்த பணத்தில் மது குடித்து உல்லாசமாக இருந்துள்ளனர். பணம் தீர்ந்து விட்டதால் மீண்டும் அவர்கள் இருவரும் ஆஸ்பத்திரிக்கு செல்போன் திருட வந்த போது பிடிபட்டுள்ளனர்.
அவர்களிடமிருந்து 4 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர். ரவி கார்த்தி இருவரும் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.
- காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம்
- எராளமானோர் கலந்து கொண்டனர்
குடியாத்தம்:
குடியாத்தத்தில் வேலூர் மத்திய மாவட்ட காங்கிரஸ் நெசவாளர் அணி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட நெசவாளர் அணி தலைவர் எஸ்.எம்.தேவராஜ் தலைமை தாங்கினார்.
நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் ரங்கநாதன், காங்கிரஸ் கட்சியின் பல்வேறு அணி நிர்வாகிகள் சரத் சந்தர், கோதண்டம், கந்தன், ரகுமான், சுல்தான் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
நகர காங்கிரஸ் நெசவாளர் அணி தலைவர் ஜெயவேலு வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக நெசவாளர் அணி மாநில செயற்குழு உறுப்பினர் நய்யீம்பர்வேஸ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இக்கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
வேலூர் மாவட்டத்தில் சில நாட்களாக பெய்த கனமழையால் நெசவாளர்களின் தொழில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது மேலும் நெசவாளர்களுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது.தமிழக அரசு உடனடியாக கைத்தறி நெசவுத் தொழிலாளர்களுக்கு மழை நிவாரணமாக 3 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும்.
கைத்தறி நெசவாளர்களுக்கு விலைவாசி உயர்வுக்கு ஏற்ப தற்போது வழங்கி வரும் கூலியுடன் அகவிலைப்படி 10 சதவீதமும், அடிப்படை கூலி 20 சதவீதம் உயர்த்தி வழங்க வேண்டும்.
குடியாத்தம் பிச்சனூர் கங்காதரசுவாமி நகராட்சி நடுநிலைப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக நடப்பு கல்வி ஆண்டிலேயே தமிழக அரசு பள்ளியை தரம் உயர்த்த கேட்டுக் கொள்வது.
கைத்தறி நெசவாளர்களுக்கு வழக்கப்படும் மின் கட்டணம் அதிகமாக உள்ளதாலும் நெசவாளர்களின் அடிப்படை கூலியில் கணக்கிட்டால் மின்சாரத்திற்கே நிறைய செலவிட வேண்டிய சூழ்நிலை உள்ளது எனவே பழைய முறைப்படி மாதாந்திர மின் கட்டண கணக்கீடு முறையை நடைமுறை நடைமுறைப்படுத்த வேண்டும்.
குடியாத்தம் அரசு பொது மருத்துவமனையை மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டும், இன்று வரை எந்தவிதமான முன்னேற்றம் இல்லாமல் அப்படியே உள்ளது எனவே பொது ளின் நலனை கருத்தில் கொண்டு அரசு பொது மருத்துவமனையை உடனடியாக மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்திட வேண்டும்.
குடியாத்தம் பிச்சனூர் பலமநேர் சாலை அரசமரம் பகுதியில் விபத்து நடக்காமல் இருக்க போக்குவரத்துக் காவலரை நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
- பல லட்சம் மதிப்புள்ள நகை தப்பியது
- போலீசார் விசாரணை
வேலூர்:
வேலூர் தொரப்பாடி ரெயில்வே மேம்பாலம் அருகே உள்ள கணேஷ் நகரை சேர்ந்தவர் ஜேக்கப் (வயது 60). வெளிநாட்டில் வேலை பார்த்த இவர் தற்போது அவரது மனைவியுடன் வசித்து வருகிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டிவிட்டு அவரது மனைவியுடன் தூத்துக்குடியில் உள்ள அவரது மகள் வீட்டிற்கு சென்று விட்டார்.
இதனை பயன்படுத்திக் கொண்ட மர்ம நபர்கள் நேற்று இரவு வீட்டின் முன்பக்க கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர்.
அங்கு பீரோ மற்றும் வீட்டிலிருந்த பல்வேறு இடங்களில் நகை பணம் ஏதாவது உள்ளதா என்று தேடி பார்த்துள்ளனர். வீட்டில் லாக்கர் ஒன்று உள்ளது. அதனை உடைக்க முயற்சி செய்தும் திறக்க முடியவில்லை. இதையடுத்து அங்கிருந்து ஏமாற்றத்துடன் சென்றதாக கூறப்படுகிறது.
இன்று காலையில் வீட்டு கதவு உடைக்கப்பட்டு கிடந்ததை கண்ட அக்கம் பக்கத்தினர் இது குறித்து காட்பாடியில் உள்ள ஜேக்கப் பின் உறவினர்களுக்கு தெரிவித்தனர். அவர்களது உறவினர்கள் வந்து பார்த்தபோது வீட்டில் உள்ள பொருட்கள் சிதறி கிடந்தது.மேலும் லாக்கரில் இருந்த நகை பணம் மற்றும் வீட்டின் மற்றொரு பகுதியில் வைக்கப்பட்டிருந்த நகை கொள்ளையர்கள் கண்ணுக்கு படாததால் தப்பியுள்ளது.
இதுகுறித்து அரியூர் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். கொள்ளை கும்பலை பிடிக்க அந்தப் பகுதியில் உள்ள கண்கா ணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
ஜேக்கப் வீட்டில் லாக்கர் உடைக்க முடியாததால் பல லட்சம் மதிப்புள்ள நகை தப்பியுள்ளது. வீட்டை பூட்டி விட்டு வெளியூர் செல்பவர்கள் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டுமென போலீசார் தெரிவித்தனர்.
- போலியாக பீடி உற்பத்தி செய்யும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
வேலூர்:
அகில இந்திய பீடி தொழிலாளர் சம்மேளன மாநாடு கேரள மாநிலம் கன்னூரில் வருகிற 28, 29-ந் தேதி நடக்கிறது.
இநனையொட்டி வேலூர் திருப்பத்தூர் மாவட்ட பீடி தொழிலாளர் சங்கம் சார்பில் சத்துவாச்சாரியில் பிரசார பேரணி நடந்தது.
தமிழ்நாடு பீடி தொழிலாளர் சம்மேளன தலைவர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். வேலூர் மாவட்ட பொது செயலாளர் நாகேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பீடி தொழிலை நலிவடைய செய்யும் கொள்கைகளை கைவிட வேண்டும். பீடி மீது விதிக்கப்பட்டுள்ள 28 சதவீதம் ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும்.
ஓய்வு பெறும் பீடி தொழிலாளர்களுக்கு குறைந்தபட்சமாக ரூ.3 ஆயிரம் பென்ஷன் வழங்க வேண்டும். போலியாக பீடி உற்பத்தி செய்யும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பிரசாரம் செய்தனர்.
- நலிவுற்ற பள்ளி குழந்தைகளுக்கு வழங்கினர்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
வேலூர்:
விஜய் மக்கள் இயக்கம் சார்பில் வேலூர் காட்பாடி வஞ்சூர் ஊராட்சியில் நலிவுற்ற பள்ளிக் குழந்தைகளுக்கு வாரந்தோறும் விலையில்லா ரொட்டி, பால், முட்டை மற்றும் சிறுதானியம் வழங்கும் திட்டம் ஒன்றிய செயலாளர் செந்தில்குமார் தலைமையில்இன்று தொடங்கி வைக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் வஞ்சூர் கிளை மன்ற நிர்வாகிகள் வினோத், குமார், பூபாலன்,
சுரேஷ், சஞ்சய், முனிசாமி, வெங்கட், சிலம்பரசன், கோகுல், காட்பாடி ஒன்றிய துணை தலைவர் கோவிந்தன், காட்பாடி ஒன்றிய துணை அமைப்பாளர் ரமேஷ், சேனூர் நிர்வாகிகள் நவீன் குமார், பிரசாந்த், தினகரன், முகேஷ், டேனியல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- வெற்றி பெரும் அணிக்கு ரூ.30 ஆயிரம் பரிசு, கோப்பை வழங்கப்படுகிறது
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
அணைக்கட்டு:
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா ஊசூர், தெள்ளூர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த இளைஞர்க ளுக்கான ஒரு மாதகாலம் நடக்க இருக்கும் மாபெரும் கிரிக்கெட் விளையாட்டு போட்டி தொடக்க விழா நேற்று ஊசூர் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி அருகில் உள்ள மைதா னத்தில் தொடங்கியது.
முதல் நாள் தொடக்க விழாவில் மாவட்ட கவுன்சிலர் த.பாபு, ஊசூர் ஊராட்சி மன்ற தலைவர் விஜயகுமாரிகண்ணன், தெள்ளூர் ஊராட்சி மன்ற தலைவர் தேவிசுரேஷ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்று கிரிக்கெட் போட்டிகளை தொடங்கி வைத்தனர். முதல் நாளான நேற்று 5-க்கும் மேற்ப்பட்ட அணிகள் பங்கேற்று ஆர்வமுடன் விளையாடின.
இதனையடுத்து போட்டியில் வெற்றி பெறும் அணிகள் அடுத்தடுத்த நடக்க இருக்கும் போட்டிகளில் விளையாட உள்ளனர். இதற்கான போட்டிகள் வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் நடத்தபடுகிறது.
ஒரு மாதம் நடக்கும் இந்த போட்டிகளில் இறுதியாக வெற்றி பெறும் அணிக்கு முதல் பரிசாக ரூ.30ஆயிரம் ரொக்க பணம் மற்றும் 7 அடி உயர கோப்பையும், இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.20 ஆயிரம் பணம் மற்றும் 5 அடி உயர கோப்பையும் இதனைத்தொடர்ந்து 10 பரிசுகள் மற்றுன் கோப்பைகள் வழங்கப்பட உள்ளனர்.
மேலும் சிறப்பாக விளையாடும் வீரருக்கு பல்வேறு பரிசுகளும் கோப்பைகளும் வழங்கப்பட உள்ளது.
இதில் நேற்று நடந்த கிரிக்கெட் போட்டியில் ஒரே போட்டியில் அதிக ரன்கள் எடுத்து சிறப்பாக விளையாடிய வாலிபர் ஒருவருக்கு தெள்ளூர் ஊராட்சி மன்ற தலைவர் தேவிசுரேஷ் ரூ.500 அன்பளிப்பாக வழங்கினார். இதில் தெள்ளூர் ஊராட்சி மன்ற துணை தலைவர் மதியழகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






