என் மலர்tooltip icon

    வேலூர்

    • அதிகாரி ஆய்வு
    • காமராஜர் பாலத்தை பலப்படுத்தும் வகையில் அலைக்கற்கள் பதிப்பு

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் கவுண்டன்யா மகாநதி ஆற்றில் குடியாத்தம் நகராட்சி பகுதியில் ஆற்றின் இருபக்கமும் கரைகளிலும் சுமார் 1500-க்கும் அதிகமான வீடுகள் ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்தன அந்த வீடுகளை சில மாதங்களுக்கு முன்பு அகற்றினர்.

    ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதை தொடர்ந்து கவுண்டன்யா மகாநதி ஆற்றில் குடியாத்தம் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் ஆற்றின் இருபுற கரைகளிலும் வெள்ள தடுப்பு சுவர் சுமார் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கும் பணிகள் கடந்த சில தினங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது.

    குடியாத்தம் கவுண்டன்யா மகாநதி ஆற்றில் வெள்ள தடுப்பு சுவர் அமைக்கும் பணிகளை நீர்வளத்துறை வேலூர் கோட்ட செயற் பொறியாளர் ஆர்.ரமேஷ் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து திட்ட பணிகள் எவ்வாறு செயல்படுத்துவது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

    இந்த ஆய்வின்போது குடியாத்தம் நகரமன்ற தலைவர் எஸ்.சவுந்தரராசன், நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் பி. கோபி, உதவி பொறியாளர் ஆர்.ராஜேஷ் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    தொடர்ந்து நீர்வளத்துறை செயற்பொறியாளர் ரமேஷ் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கவுண்டன்யா மகாநதி ஆற்றில் குடியாத்தம் நகராட்சிக்குட்பட்ட 2 பக்க கரைகளில் தலா இரண்டரை கிலோ மீட்டர் நீளத்திற்கு வெள்ள தடுப்பு சுவர் அமைக்கப்படுகிறது.

    சுமார் 5 மீட்டர் உயரத்திற்கும் 7 மீட்டர் அகலத்திற்கும் இந்த வெள்ள தடுப்பு சுவர் அமைக்கப்படுகிறது இந்த வெள்ள தடுப்புச் சுவர் அடுத்த ஆண்டு தொடங்கும் பருவமழைக்கும் முன்னதாகவே திட்டப் பணிகள் முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    பாக்கம் ஏரியிலிருந்து வரும் கால்வாய் தண்ணீர் கவுண்டன்யா மகாநதி ஆற்றிற்குள் வருவதற்கும், நெல்லூர் பேட்டை ஏரியில் நிரம்பி வழியும் தண்ணீர் கவுண்டன்யா மகாநதி ஆற்றிற்கு வருவதற்காகவும் இந்த வெள்ள தடுப்புச் சுவரின் 2 இடங்களில் உள்வாங்கிகள் அமைக்கப்பட்டு அந்த உள்வாங்கிகளுக்கு கதவுகள் பொருத்தப்படும்,

    காமராஜர் பாலத்தை பலப்படுத்தும் வகையில் கவுண்டன்யா மகாநதி ஆற்றில் காமராஜர் பாலத்தின் இரண்டு பக்க கரை பகுதியில் வெள்ள தடுப்பு அலைக்கற்கள் பதிக்கப்படும் என தெரிவித்தார்.

    • நள்ளிரவு 12 மணிக்கு குழந்தை ஏசு சொரூபத்தை காட்டினர்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    வேலூர்:

    வேலூரில் உள்ள தேவாயங்களில் கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

    ஏசு கிறிஸ்து பிறந்த நாள் உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் விழாவாக கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு நேற்று நள்ளிரவு தேவாலயங்களில் கூட்டு திருப்பலி மற்றும் சிறப்பு ஆராதனை நடந்தது. பலர் புத்தாடைகள் அணிந்து ஆலயங்களுக்கு சென்றிருந்தனர்.

    விழாவை முன்னிட்டு பலர் தங்கள் வீடுகளில் குடில்கள் அமைத்து, வண்ண ஸ்டார்களை தொங்கவிட்டிருந்தனர். பேக்கரிகளில் கேக் விற்பனை களை கட்டியது. வேலூர் மாநகரில் உள்ள தேவாலயங்கள் வண்ண விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

    வேலூர் விண்ணேற்பு அன்னை பேராலயத்தில் சிறப்பு திருப்பலி நடந்தது. ஏசு பிறந்ததை குறிக்கும் விதமாக நள்ளிரவு 12 மணிக்கு குழந்தை ஏசு சொரூபத்தை காட்டினர். பின்னர் ஆலய வளாகத்தில் உள்ள குடிலில் சொரூபம் வைக்கப்பட்டது.

    இதில் கிறிஸ்தவர்கள் திரளாக கலந்து கொண்டு பிரார்த்தனை நடத்தினர்.

    வேலூர் சார்பனா மேட்டில் உள்ள ஆரோக்கிய அன்னை தேவாலயத்தில் சிறப்பு திருப்பலி நடந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். ஒருவருக்கொருவர் கிறிஸ்து பிறப்பு நாளையொட்டி கைகுலுக்கி கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.

    வேலூர் சி.எஸ்.ஐ. மத்திய தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. ஆலய வளாகத்தில் குழந்தைகள் பலர் மெழுகுவர்த்தி ஏற்றி பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

    காட்பாடி ரோடு புதிய பஸ் நிலையம் எதிரில் உள்ள பெந்தெகொஸ்தே சபையிலும் கிறிஸ்துமஸ் சிறப்பு ஆராதனை நடந்தது. இதேபோல குடியாத்தம், அணைக்கட்டு, பேரணாம்பட்டு, பள்ளிகொண்டா மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

    • ஒருதலையாக காதலித்த பள்ளி மாணவியை தன்னை காதலிக்குமாறு கட்டாயப்படுத்தி பொது இடத்தில் அடித்த வாலிபர் போலீசாரின் விசாரணைக்கு பயந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • போலீசாரின் விசாரணைக்கு பயந்து வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அடுத்த எல்லப்பன்பட்டியை சேர்ந்தவர் மணி (வயது 21) டிராக்டர் டிரைவர். ஒடுகத்தூர் அருகே உள்ள மலைகிராமத்தை சேர்ந்த 15 வயது 10-ம் வகுப்பு பள்ளி மாணவியை ஒருதலையாக காதலித்து வந்தார்.

    நேற்று மாதனூர் பகுதியில் இருக்கும் பள்ளிக்கு மாணவி பஸ்சில் சென்றார். அப்போது பஸ்சில் ஏறி சென்ற மணி தன்னை காதலிக்குமாறு மாணவியிடம் கட்டாயப்படுத்தியுள்ளார். மாணவி மறுப்பு தெரிவித்தார். இதனால் ஆத்திரமடைந்த அவர் மாணவியை கட்டாயப்படுத்தி பஸ்சில் இருந்து கீழே இறக்கி அடித்துள்ளார்.

    இதனால் பள்ளிக்கு மாணவி காலதாமதமாக சென்றார். ஆசிரியர் தாமதம் குறித்து கேட்டபோது நடந்ததை மாணவி கூறினார். இதுகுறித்து உடனடியாக பெற்றோருக்கு ஆசிரியர்கள் தகவல் தெரிவித்தனர்.

    இது தொடர்பாக மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் வேப்பங்குப்பம் போலீசார் மணியை விசாரிக்க வீட்டிற்கு சென்றனர். வீட்டில் மணி இல்லாததால் அவரின் அம்மாவிடம் கூறிவிட்டு வந்துள்ளனர்.

    போலீசார் வீட்டிற்கு வந்த தகவல் மணிக்கு செல்லவே விசாரணைக்கு பயந்து மணி பள்ளிகொண்டா அடுத்த பள்ளிகுப்பத்தில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு சென்றார். அங்கு தனது பாட்டியிடம் போலீசார் வந்தால் நான் இங்கு இருப்பதாக சொல்லாதே என கூறிவிட்டு நிலத்திற்கு செல்கின்றேன் என கூறி சென்றார். இந்த நிலையில் போலீசாரின் விசாரணைக்கு பயந்த மணி நிலத்தில் இருந்த வேப்பமரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    தகவலறிந்து வந்த பள்ளிகொண்டா போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போலீசாரின் விசாரணைக்கு பயந்து வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • போலி பணிஆணை தயாரித்து துணிகரம்
    • முன்னாள் ராணுவவீரர் உள்பட 2 பேர் கைது

    வேலூர்:

    ராணுவத்தில் வேலைவாங்கி தருவதாக 57 இளைஞர்களிடம் ரூ.1 கோடி மோசடி செய்த முன்னாள் ராணுவவீரர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

    வேலூர் அரியூரை சேர்ந்தவர் மூர்த்தி (வயது 51). முன்னாள் ராணுவவீரர். அணைக்கட்டு அருகே மருதவள்ளி பாளையம்பகுதியை சேர்ந்தவர் பாபு. மத்திய ரிசர்வ் போலீசில் பணியாற்றியவர் என்று கூறப்படுகிறது.

    இவர்கள் இருவரும் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்களிடம் ராணுவத்தில் வேலைவாங்கி தருவதாக தெரிவித்தனர்.

    அதன்பேரில் ஏராளமான இளைஞர்கள் பணம் கொடுக்க முன்வந்தனர். அவர்களை ஏமாற்றி இருவரும் ரூ.3 லட்சம் முதல் ரூ.4 லட்சம் வரை மோசடி செய்தனர்.

    இவர்களுக்கு ஆட்களை பிடித்து கொடுக்கும் தரகராக திருப்பத்தூர் மாவட்டம் குரிசிலாப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சம்பத்குமார் (61) என்பவர் பணியாற்றி வந்துள்ளார். இவர் தனது கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் சிலரிடம் பணத்தை பெற்று மூர்த்தி, பாபுவிடம் கொடுத்துள்ளனர்.

    ஒருகட்டத்தில் பணம் கொடுத்தவர்கள் வேலைகேட்டுள்ளனர். இதையடுத்து 3 பேரும் சேர்ந்து மராட்டிய மாநிலத்தில் இருந்து அனுப்பியதுபோன்று போலியான பணி நியமன ஆணைகளை வழங்கி உள்ளனர்.

    பணிஆணை வழங்கிய பின்னரும் அவர்களை அழைத்துச் சென்று வேலை வாங்கி கொடுக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த இளைஞர்கள் விசாரித்தபோது தான் தாங்கள் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது.

    அதைத்தொடர்ந்து அவர்கள் வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணனிடம் புகார் அளித்தனர். அவரது உத்தரவின்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் கவிதா, தலைமை காவலர் சுரேஷ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    அதில், 3 பேரும் சுமார் 57 பேரிடம் ராணுவத்தில் வேலைவாங்கி தருவதாக கூறி ரூ.1 கோடியே 22 லட்சத்தை மோசடி செய்துள்ளது தெரியவந்தது. பின்னர் மூர்த்தி, சம்பத்குமாரை நேற்று போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள பாபுவை தேடி வருகின்றனர்.

    • போலீஸ் சூப்பிரண்டு தகவல்
    • கைதிகளின் வங்கிக்கணக்குகள் முடக்கம்

    வேலூர்:

    வேலூர் தொரப்பாடி ஜீவாநகரை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 39). இவர் கஞ்சா விற்பனை செய்து வந்துள்ளார். எனவே இவர் மீது பாகாயம் போலீஸ் நிலையத்தில் 6 வழக்குகள் உள்ளது.

    இவர் தொடர்ந்து கஞ்சா விற்பனை செய்ததால் போலீசார் கைது செய்தனர். குண்டர்சட்டமும் இவர் மீது பாய்ந்துள்ளது. இந்த நிலையில் இவர் மனம் திருந்தி வாழ முடிவு செய்தார். அதன்படி இனி கஞ்சாவை விற்பனை செய்ய மாட்டேன் என்று பாகாயம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமாரிடம் பிரமாண பத்திரம் எழுதி கொடுத்துள்ளார்.

    தான் மனம் திருந்துவதாகவும், தன்னுடைய வாழ்வாதாரத்துக்கு அரசு உதவி செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இதையடுத்து வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் முன்னிலையில் நேற்று மனந்திருந்தி வாழ ஆசைப்படுவதாக தெரிவித்தார்.

    பின்னர் போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் கூறியதாவது:-

    வேலூர் மாவட்டத்தில் கஞ்சா விற்பனை செய்ததாக 21 குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது. 139 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 24 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 198 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 322 கிலோ வரை கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. குற்ற செயல்களில் ஈடுவோர்கள் மனம் திருந்த வேண்டும். ராஜேந்திரன் திருந்தி வாழ ஆசைப்படுகிறார்.

    அவர் டீக்கடை வைக்க உதவிகோரி உள்ளார். இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்துடன் முடிவு செய்து அவர் தொழில் தொடங்க ஏற்பாடு செய்யப்படும். சாராயம், கஞ்சா விற்பனை செய்தல் போன்ற எந்த வகையான குற்றத்தில் ஈடுபட்டாலும் மனம் திருந்தினால் அவர்களுக்கு உதவி செய்யப்படும்.

    வேலூர் மாவட்டத்தில் கஞ்சா விற்பனை செய்தவர்களின் வங்கிக்கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது என்றார்.

    • பிளாட்பாரத்தில் விட்டு சென்றார்
    • போலீசார் அறிவுரை

    வேலூர்:

    கர்நாடக மாநிலம் பெங்களூர் தேவசந்திரா கிருஷ்ணா நகரை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 44). காட்பாடி ரெயில் நிலையத்தில் நேற்று வந்த அவர் உயர் வகுப்பு பயணிகள் தங்கும் அறை அருகே ரெயிலுக்கு காத்திருந்தார். அப்போது அவரது லேப்டாப் பையை தவற விட்டு சென்று விட்டார்.

    காட்பாடி ரெயில்வே போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் போலீசார் கேட்பாரற்று கிடந்த லேப்டாப் பையை மீட்டனர். அதில் சோதனை செய்த போது ராஜ்குமாரின் முகவரி மற்றும் செல்போன் எண் இருந்தது.அதன் மூலம் அவரை தொடர்பு கொண்டு காட்பாடிக்கு வரவழைத்தனர்.

    காட்பாடி ெரயில்வே போலீஸ் நிலையத்தில் வைத்து ரெயில்வே போலீசார் லேப்டாப்பை ராஜ்குமாரிடம் ஒப்படைத்தனர். மீண்டும் லேப்டாப் கிடைத்த மகிழ்ச்சியில் ராஜ்குமார் போலீசாருக்கு நன்றி கூறினார். மீண்டும் இதுபோல அஜாக்கிரதையாக இருக்க வேண்டாம் என போலீசார் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

    • வட மாநிலத்தை சேர்ந்த 2 பேர் கைது
    • போலலீசார் விசாரணை

    வேலூர்:

    திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டம் வழியாக கர்நாடக மாநிலத்தில் இருந்து குட்கா பான்மசாலா உள்ளிட்ட போதை பொருட்கள் சென்னைக்கு கடத்தப்படு கின்றன.

    இதனை தடுக்க தேசிய நெடுஞ்சாலைகளில் பல்வேறு இடங்களில் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

    வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா சுங்கச்சா வடியில் நேற்று இரவு பள்ளிகொண்டா போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன் தலைமை யிலான போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது சொகுசு கார் ஒன்று வேகமாக வந்தது. போலீசார் அந்த காரை மடக்கினர். போலீசாரை கண்டதும் கார் நிற்காமல் வேகமாக சென்றது. போலீசார் விரட்டி சென்று காரை மடக்கினர். அதில் சோதனை செய்தபோது கார் முழுவதும் மூட்டைகளில் தடை செய்யப்பட்ட குட்கா பான் மசாலா இருந்தது. சுமார் 1 டன் குட்கா மற்றும் காரை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    காரில் குட்கா கடத்தி வந்த குஜராத் மாநிலத்தை சேர்ந்த முகேஷ் புரி, ராஜஸ்தானை சேர்ந்த கரண் என்கிற வர்சிராம் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விண்ணப்ப படிவம் பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும்
    • பொது விநியோகத் துறை தகவல்

    வேலுார்:

    வேலுார் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் 699 ரேசன் கடைகள் உள்ளன.

    ரேசன் பொருட்கள் பெற வேண்டுமென்றால் அதற்கு ஸ்மார்ட் கார்டு அவசியம். கார்டில் உள்ள குடும்ப உறுப் பினர்களில் ஒருவர் கட்டாயம் விரல் கை வைத்தால் மட்டுமே ரேசன் பொருட்களை வாங்க முடியும். முதியோர்கள் கடைகளுக்கு செல்லும் போது கைரேகை வைக்கும் கருவியில் பல நேரங்களில் கைரேகையை ஏற்று கொள்வது இல்லை.

    இதனால் முதியவர்கள் நீண்ட நேரம் காத்திருந்து பல முறை முயற்சி செய்து பொருட்களை வாங்கி செல்கின்றனர். ரேசன் கடையில் உள்ள கருவி கைரேகையை ஏற்றுக் கொள்ளாததால் சிலரால் பொருட்களை வாங்க முடியாத நிலையும் உள்ளது.

    முதியோர்கள் வசதிக்காக பொது விநியோகத் துறை ஒரு திட்டத்தை செயல்படுத்தி உள்ளது.

    அதன்படி மூத்த குடிமக்கள் மட்டும் இருக்கும் ரேசன் கார்டுகளுக்கு பொருட்களை வாங்க நண்பங்களையோ அல்லது உறவினர்களையோ நியமித்து கொள்ளலாம். இதற்காக ஒரு விண்ணப்ப படிவம் வட்டார வழங்கல் அலுவலகங்களில் வழங்கப்படுகிறது.

    அதில் ரேசன் கார்டு எண், உறுப் பினர்கள் விவரம், செல்போன் எண், என்ன காரணத்திற்காக பொருட்களை பெற முடியவில்லை. அத்தியா வசிய பொருட்களை பெற நியமிக்கப்படும் பெயர், ரேசன் கார்டு எண் ஆகியவற்றை குறிப்பிட்டு வட்டார வழங்கல் அதிகாரியின் சான்று பெற்று ரேசன் கடையில் வழங்க வேண்டும்.

    அவர்கள் நியமிக்கும் நபர் ஸ்மார்ட் கார்டுடன் ரேசன் பொருட்களை வாங்க வரும்போது பதிவு செய்ய பட்ட செ ல்போனுக்கு. ஓ.டி.பி வரும்.

    அதை அவர்கள் கூறினால் ரேஷன் பொருட்கள் மூத்த குடி மக்கள் நியமித்த நருக்கு வழங்கப்படும் என தெரிவித்தனர்.

    • கோவில்களில் சிறப்பு பூஜை
    • ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்

    வேலூர்:

    மார்கழி மாதம் மூல நட்சத்திரம் அனுமன் பிறந்த நாளாகும். அமாவாசை தினத்தில் வரும் அந்த தினம் அனுமன் ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது. அதன்படி இன்று அனுமன் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.

    இதனையொட்டி வேலூர் பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தன. வேலூர் பழைய மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள வீர ஆஞ்சநேயர் கோவிலில் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடந்தது.

    திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

    கொணவட்டத்தில் உள்ள வீர ஆஞ்சநேயர் கோவிலில் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இங்கும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

    அதேபோன்று வேலூர் கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள ஆஞ்சநேயர் கோவில், ரங்காபுரம் கோதண்ட ராமர் கோவில், ஆக்சிலியம் கல்லூரி ரவுண்டானா அருகே உள்ள ஆஞ்சநேயர் கோவில், ஏரியூர் ஆஞ்சநேயர் கோவிலிலும் ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜை நடந்தது.

    புதுவசூர் ஆஞ்சநேயர் கோவிலில் சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • தென் மாவட்ட பஸ்களில் இடம் இல்லாததால் பயணிகள் திண்டாட்டம்
    • சிறப்பு ரெயில்கள் இயக்க வலியுறுத்தல்

    வேலூர்:

    கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் அரையாண்டு தேர்வு விடுமுறையொட்டி சொந்த ஊர்களுக்கு செல்ல பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    இன்று வேலூரில் இருந்து திருச்சி மதுரை திருநெல்வேலி நாகர்கோ வில் தூத்துக்குடி பகுதி களுக்கு செல்லும் பஸ்களில் பகல் நேரத்திலேயே கூட்டம் அதிகமாக இருந்தது.

    இரவு நேரங்களில் செல்லக்கூடிய அரசு சொகுசுபஸ்களில் முன்பதிவு அனைத்தும் நிறைவடைந்து விட்டது. பயணிகள் கூட்டத்தை கருத்தில் கொண்டு கூடுதலாக சிறப்பு பஸ்கள் எதுவும் தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படவில்லை.

    இதனை பயன்படுத்திக் கொண்டு ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டண கொள்ளை அடித்து வருகின்றனர்.

    திருநெல்வேலி நாகர்கோவில் தூத்துக்குடி போன்ற பகுதிகளுக்கு ரூ.3000 வரை ஆம்னி பஸ்களில் டிக்கெட் வசூல் செய்யப்பட்டுள்ளது.

    மேலும் காட்பாடி வழியாக தென் மாவட்டங்களுக்கு செல்லும் வாராந்திர ரெயில்களிலும் இடமில்லை. குழந்தைகள் மற்றும் உடைமைகளுடன் பயணிகள் இடம் கிடைக்காமல் திண்டாடியதை காண முடிந்தது.

    இன்று அமாவாசை தினத்தை ஒட்டி வேலூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் வசதிக்காக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. இதில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. 30-க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டதால் மேல்மலையனூர் பக்தர்கள் நிம்மதி அடைந்தனர்.

    இது போன்ற சமயங்களில் தென் மாவட்டங்களுக்கு கூடுதலாக சிறப்பு பஸ்கள் இயக்க வேண்டும். ரெயில்வே நிர்வாகம் காட்பாடி வழியாக சிறப்பு ரெயில்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.

    • குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்
    • ராஜா தோப்பு அணையை சுற்றுலாதலமாக்க கோரிக்கை

    வேலூர்:

    வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்வு கூட்டம் இன்று காலை நடந்தது. கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி முன்னிலை வகித்தார்.

    கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:-

    பேரணாம்பட்டு பகுதியில் யானை தொல்லை அதிகமாக உள்ளது. ஊருக்குள் வரும் யானைகள் பயிர்களை நாசம் செய்கிறது. ஊருக்குள் வராமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்களது உயிர்களையும் விவசாய பயிர்களையும் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    எங்களது கோரிக்கைகளை அதிகாரிகளுக்கு தெரிவிக்க முடியவில்லை. உயர் அதிகாரிகள் வேறு மொழி பேசுபவர்களாக உள்ளதால் எங்களது கோரிக்கைகளை அவர்கள் புரிந்து கொள்ள கடினமாக உள்ளது.

    மேல் அரசம்பட்டுக்கு தனியார் பஸ்கள் ஏராளமாக இயக்கப்பட்டு வந்தன. தற்போது மாலை 7 மணிக்கு பின்னர் பஸ்கள் இயக்கப்படாததால் பொதுமக்கள் ஆட்டோவில் அதிக தொகை கொடுத்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. அரசு பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ராஜா தோப்பு அணை சுற்றுலாத்தலமாக மாற்ற வேண்டும். வேலூர் மாவட்டத்திற்கு ஜூஸ் தொழிற்சாலை தனியாக கட்ட வேண்டும்.

    திருமணி பகுதியில் பாலாற்றில் தரைப்பாலம் கட்டப்பட வேண்டும். லத்தேரி ஏரிக்கு தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும். கால்நடைகளுக்கு ஏராளமான நோய்கள் பரவுகிறது.அந்த நோய்களை குணமாக்க சித்த மருத்துவத்தை பயன்படுத்த அதற்கான வழிமுறைகளை ஏற்படுத்த வேண்டும்.

    பாலாற்றில் தொடர்ந்து தண்ணீர் செல்வதால் தற்போது தண்ணீர் தூய்மையாக உள்ளது பல்வேறு இடங்களில் கழிவு நீர் கலக்கும் நிலை உள்ளது அந்தப் பகுதியை கண்டறிந்து அங்கு தடுப்புச் சுவர் கட்ட வேண்டும். பாலாறு நீரின் சுத்தத்தை பாதுகாப்பது கடமையாகும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • மோட்டார் சைக்கிள் பறிமுதல்
    • போலீசார் விசாரணை

    குடியாத்தம்:

    குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி மேற்பார்வையில் குடியாத்தம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணவேணி, வேலூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பேபி ஆகியோர் கொண்ட போலீஸ் படையினர் நேற்று முன்தினம் இரவு குடியாத்தம் அடுத்த சைனகுண்டா கிராமம் அருகே திடீரென வாகன சோதனையில் ஈடுபட்டனர் அப்போது அந்த வழியாக வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் நிறுத்தி சோதனை செய்தனர்.

    அப்போது அந்த மோட்டார் சைக்கிளில் பொட்டலங்களில் அரை கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது மேலும் அந்த கஞ்சா ஆந்திர மாநிலத்தில் இருந்து குடியாத்தம் பகுதியில் விற்பனைக்காக கொண்டு வந்தது தெரிய வந்தது.

    மோட்டார் சைக்கிள் வந்த இரண்டு பேரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தியதில் குடியாத்தம் தரணம் பேட்டை ஆரணி நன்னூமியம் தெருவை சேர்ந்த முகமது யூசுப்சையத் (வயது 23), காசிம் சாயபு தெருவை சேர்ந்த முஜ்ஜமீல் (23) என்பது தெரியவந்தது போலீசார் இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து மோட்டார் சைக்கிளையும், அரை கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

    ×