என் மலர்
உள்ளூர் செய்திகள்

வேலூரில் ஆம்னி பஸ்களில் ரூ.3000 கட்டண கொள்ளை
- தென் மாவட்ட பஸ்களில் இடம் இல்லாததால் பயணிகள் திண்டாட்டம்
- சிறப்பு ரெயில்கள் இயக்க வலியுறுத்தல்
வேலூர்:
கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் அரையாண்டு தேர்வு விடுமுறையொட்டி சொந்த ஊர்களுக்கு செல்ல பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இன்று வேலூரில் இருந்து திருச்சி மதுரை திருநெல்வேலி நாகர்கோ வில் தூத்துக்குடி பகுதி களுக்கு செல்லும் பஸ்களில் பகல் நேரத்திலேயே கூட்டம் அதிகமாக இருந்தது.
இரவு நேரங்களில் செல்லக்கூடிய அரசு சொகுசுபஸ்களில் முன்பதிவு அனைத்தும் நிறைவடைந்து விட்டது. பயணிகள் கூட்டத்தை கருத்தில் கொண்டு கூடுதலாக சிறப்பு பஸ்கள் எதுவும் தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படவில்லை.
இதனை பயன்படுத்திக் கொண்டு ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டண கொள்ளை அடித்து வருகின்றனர்.
திருநெல்வேலி நாகர்கோவில் தூத்துக்குடி போன்ற பகுதிகளுக்கு ரூ.3000 வரை ஆம்னி பஸ்களில் டிக்கெட் வசூல் செய்யப்பட்டுள்ளது.
மேலும் காட்பாடி வழியாக தென் மாவட்டங்களுக்கு செல்லும் வாராந்திர ரெயில்களிலும் இடமில்லை. குழந்தைகள் மற்றும் உடைமைகளுடன் பயணிகள் இடம் கிடைக்காமல் திண்டாடியதை காண முடிந்தது.
இன்று அமாவாசை தினத்தை ஒட்டி வேலூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் வசதிக்காக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. இதில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. 30-க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டதால் மேல்மலையனூர் பக்தர்கள் நிம்மதி அடைந்தனர்.
இது போன்ற சமயங்களில் தென் மாவட்டங்களுக்கு கூடுதலாக சிறப்பு பஸ்கள் இயக்க வேண்டும். ரெயில்வே நிர்வாகம் காட்பாடி வழியாக சிறப்பு ரெயில்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.






