என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Farmers meeting in grievance redressal meeting"

    • குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்
    • ராஜா தோப்பு அணையை சுற்றுலாதலமாக்க கோரிக்கை

    வேலூர்:

    வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்வு கூட்டம் இன்று காலை நடந்தது. கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி முன்னிலை வகித்தார்.

    கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:-

    பேரணாம்பட்டு பகுதியில் யானை தொல்லை அதிகமாக உள்ளது. ஊருக்குள் வரும் யானைகள் பயிர்களை நாசம் செய்கிறது. ஊருக்குள் வராமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்களது உயிர்களையும் விவசாய பயிர்களையும் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    எங்களது கோரிக்கைகளை அதிகாரிகளுக்கு தெரிவிக்க முடியவில்லை. உயர் அதிகாரிகள் வேறு மொழி பேசுபவர்களாக உள்ளதால் எங்களது கோரிக்கைகளை அவர்கள் புரிந்து கொள்ள கடினமாக உள்ளது.

    மேல் அரசம்பட்டுக்கு தனியார் பஸ்கள் ஏராளமாக இயக்கப்பட்டு வந்தன. தற்போது மாலை 7 மணிக்கு பின்னர் பஸ்கள் இயக்கப்படாததால் பொதுமக்கள் ஆட்டோவில் அதிக தொகை கொடுத்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. அரசு பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ராஜா தோப்பு அணை சுற்றுலாத்தலமாக மாற்ற வேண்டும். வேலூர் மாவட்டத்திற்கு ஜூஸ் தொழிற்சாலை தனியாக கட்ட வேண்டும்.

    திருமணி பகுதியில் பாலாற்றில் தரைப்பாலம் கட்டப்பட வேண்டும். லத்தேரி ஏரிக்கு தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும். கால்நடைகளுக்கு ஏராளமான நோய்கள் பரவுகிறது.அந்த நோய்களை குணமாக்க சித்த மருத்துவத்தை பயன்படுத்த அதற்கான வழிமுறைகளை ஏற்படுத்த வேண்டும்.

    பாலாற்றில் தொடர்ந்து தண்ணீர் செல்வதால் தற்போது தண்ணீர் தூய்மையாக உள்ளது பல்வேறு இடங்களில் கழிவு நீர் கலக்கும் நிலை உள்ளது அந்தப் பகுதியை கண்டறிந்து அங்கு தடுப்புச் சுவர் கட்ட வேண்டும். பாலாறு நீரின் சுத்தத்தை பாதுகாப்பது கடமையாகும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×