என் மலர்tooltip icon

    திருவண்ணாமலை

    • காஞ்சீபுரத்தை சேர்ந்தவர்கள்
    • போலீசார் விசாரணை

    வெம்பாக்கம்:

    காஞ்சீபுரம் தாலுகா புஞ்சையரசங் தாங்கல் கிராமம் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி.

    இவர்களது மகள்கள் சுப்புலட்சுமி (வயது 29), பாவணா (16). இருவரும் திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகா பாண் டியம்பாக்கம் கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு மொபட்டில் சென்றனர். பின்னர் அங்கிருந்து வீடு திரும்பிக்கொண்டிருந்தனர்.

    வந்தவாசி - காஞ்சீபுரம் சாலையில் தூசி கிராமம் அருகே வந்தபோது எதிரே வந்த கார் இவர்களது மொபட் மீது மோதியது. இதில் அக்காள் தங்கை இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர் .

    பின்னர் அந்த வழியாக சென்றவர்கள் இருவரையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    பின்னர் மேல்சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி சுப்புலட்சுமி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து தாயார் மலர்கொடி தூசி போலீசில் புகார் செய்தார்.

    அதன் பேரில் இன்ஸ்பெக்டர் பாலு, சப்- இன்ஸ் பெக்டர் சுரேஷ் பாபு ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசா ரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • ஆய்வு கூட்டம் நடந்தது
    • கழிவுகளை உடனுக்குடன் அகற்றும் விதமாக பணியாளர்களை பணியில் ஈடுபடுத்த வேண்டும்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாச்சலேசுவரா கோவிலில் நடைபெறவிருக்கும் குரு பவுர்ணமியை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் ஆய்வு கூட்டம் நடந்தது.

    கூட்டத்தில் கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கி பேசியதாவது:-

    கிரிவலப்பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி பக்தர்களுக்கு இடையூறு இல்லா வண்ணம் தூய்மையாக வைத்திருத்தல் வேண்டும்.

    கிரிவலம் வரும் பக்கதர்கள் மற்றும் பொது மக்களுக்கு அனைத்து அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்து தர வேண்டும். அதே போல் அரசு போக்குவரத்து துறையின் மூலம் தற்காலிக பேருந்து நிலையம் அமைத்தல் வேண்டும்.

    போக்குவரத்து காவல் துறை மூலமாக போக்குவரத்தினை பக்தர்களுக்கும் பொது மக்களுக்கும் இடையூறு ஏற்படாத வண்ணம் சீர் செய்ய வேண்டும்.

    எவ்வித அசம்பாவிதமும் நடைபெறா வண்ணம் நகரின் முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்துதல் வேண்டும். நகராட்சி மற்றும் ஊராட்சி நிர்வாகத்தின் மூலமாக தூய்மை பணியாளர்களை கொண்டு 100 சதவீதம் கழிவறை தூய்மை படுத்தும் பணியில் ஈடுபடுத்தி குப்பைகள் மற்றும் கழிவுகளை உடனுக்குடன் அகற்றும் விதமாக பணியாளர்களை பணியில் ஈடுபடுத்த வேண்டும். மின்சாரத்துறையின் மூலமாக கோவிலில் உள்ள முக்கிய இடங்கள். கிரிவலப்பாதையில் பக்கதர்கள் செல்லும் இடங்களில் போதுமான அளவிற்கு மின்விளக்குகள் அமைக்கப்பட வேண்டும்.

    வட்டார போக்குவரத்து துறையின் மூலமாக நிர்ணயிக்கப்பட்ட கட்டண அடிப்படையில் பக்தர்கள் மற்றும் பொது மக்களிடம் ஆட்டோ கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும்.

    மருத்துவத்துறை மூலம் கிரிவலப்பாதையை சுற்றி மருத்துவ முகாம்கள் அமைத்தல், 108 அவரச கால ஊர்தியினை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

    இந்து சமய அறநிலையத்துறையின் மூலமாக தன்னார்வலர்கள், கோவில் பணியாளர்கள் ஆகியோர்கள் இணைந்து கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய வருகைத்தரும் பக்தர்களை முறைப்படுத்த வேண்டும் அதுமட்டுமில்லாமல் ராஜகோபுரம், அம்மணியம்மன் கோபுரம் ஆகிய இரு வழிகளில் வருகைத் தரும் பக்தர்களை வரிசைகளில் நிறுத்தி தாமதமின்றி தரிசனம் செய்ய உதவிட வேண்டும்.

    மேலும் விதிகள் மீறி சாலைகளில் தற்காலிகமாக வைக்கப்படும் கடைகளை அகற்றுதல். விளம்பர பேனர்கள் அகற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த ஆய்வுக் கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன். இந்து சமய அறநிலையத்துறை மண்டல இணை ஆணையர். சுதர்சனம், உதவி கலெக்டர், ஆர்.மந்தாகினி மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • பெற்றோர் எதிர்ப்பு
    • கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்

    ராணிப்பேட்டை:

    ஆற்காடு அடுத்த லாடாவரம் கிராமத்தைச் சேர்ந்தவர் நித்யா (வயது 19) இவரும் வாலாஜா அடுத்த பூண்டி பகுதியை சேர்ந்த சந்தோஷ் (23) என்ற வாலிபரும் கடந்த 4 வருடங்களாக காதலித்து வந்தனர்.

    2 பேரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களின் காதலுக்கு நித்யாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதனால் நித்யாவிற்கு திருமணம் செய்வதற்காக வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து வந்துள்ளனர்.

    இதற்கிடையில் வீட்டை விட்டு வெளியேறிய நித்யா மற்றும் சந்தோஷ் ஆகியோர் கடந்த 22-ந் தேதி பூட்டுத்தாக்கு பகுதியில் உள்ள கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.

    காதலுக்கு நித்யாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்திருந்ததால் பாதுகாப்பு கேட்டு நேற்று ராணிப்பேட்டை மாவட்டம் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் காதல் ேஜாடிகள் தஞ்சம் அடைந்தனர்.

    இதை தொடர்ந்து அங்கிருந்த போலீசார் காதல் திருமண ஜோடியை ராணிப்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர்.

    அதன் பேரில் ராணிப்பேட்டை மகளிர் போலீசார் இரு தரப்பு பெற்றோர்களுக்கும் தகவல் தெரிவித்து போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்து சமரசம் செய்ய முயன்றனர்.

    இதில் சமரசம் ஏற்படாததால் நித்யா தனது காதல் கணவருடன் அனுப்பி வைத்தனர்.

    • போக்சோவில் நடவடிக்கை
    • போக்சோவில் நடவடிக்கை

    திருவண்ணாமலை:

    கடலாடி அடுத்த மசார் அரசு மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வரும் 17 வயதுடைய மாணவியை அதே பள்ளியில் படிக்கும் மாணவர் ஈவ்டீசிங் செய்ததாக கூறப்படுகிறது.

    இதனால் மாணவி மன உளைச்சலுக்கு ஆளானார். இதனால் மாணவி பெற்றோரிடம் நடந்தவற்றை கூறியுள்ளார்.

    அதன் பேரில் போளூர் மகளிர் போலீஸ் நிலையத்தில் பெற்றோர் புகார் செய்தனர். அதன்பேரில் மகளிர் போலீசார் நேரில் வந்து விசாரணை நடத்தினர்.

    மேலும் மாணவியை ஈவ் டீசிங் செய்த மாணவனை போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிந்து கைது செய்தனர்.

    • ஆந்திராவை சேர்ந்தவர்
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

    திருவண்ணாமலை:

    ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் கூடூர் மண்டல பகு தியை சேர்ந்தவர் வெங்கடரத்தினம் (வயது 68). இவர் கடந்த 15 வருடங்களுக்கு மேலாக திருவண்ணாமலை கிரிவலப்பா தையில் உள்ள தனியார் ஆசிரமத்தில் வேலை செய்து வந்து உள்ளார்.

    உடல் நல குறைப்பாட்டினால் அவதிப்பட்டு வந்த அவர் சிகிச்சை பெற்றும் நோய் குணமாகவில்லை என்று கூறப்படு கிறது. இதனால் மனவேதனை அடைந்த அவர் நேற்று முன் தினம் ஆசிரமத்தின் விடுதியில் உள்ள ஒரு அறையில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    அறைக்குள் சென்றவர் வெகு நேரமாகியும் வெளியே வரா ததால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்று பார்த்தனர் .அப் போது வெங்கடரத்தினம் தூக்கில் உயிரிழந்த நிலையில் தொங்கி கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இது குறித்து திருவண்ணாமலை டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வெங்கடரத்தினத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோ தனைக்கான திருவண்ண ணாமலை அரசு மருத்துவம் னைக்கு அனுப்பித்தனர்.

    இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 9-ந்தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது
    • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்

    போளூர்:

    போளூர் அருகே உள்ள சனிக்க வாடி கிராமத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோவிலில் அக்னி வசந்த விழா கடந்த 9-ந்தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது விழாவின் முக்கிய நிகழ்வான அர்ஜுனன் தபசு மரம் ஏறும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.

    இதில் அர்ஜுனன் தபசு மரம் ஏரி பாசுபதம் என்ற அஸ்திரம் வேண்டி ஒற்றை காலில் நின்றவாறு தவம் செய்தார் தொடர்ந்து அர்ஜுனன் வில்வ இலைகளையும் திருமண மாகாத பெண்களுக்கு மஞ்சள் குங்குமம் எலுமிச்சம் பழங்களும் குழந்தை வரம் கோரும் பக்தர்களிடையே வீசினார்.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர் விழாவை ஊர் பொதுமக்களும் இளைஞர்களும் ஏற்பாடு செய்திருந்தனர்.

    • பொதுமக்கள் அச்சம்
    • போலீசார் விசாரணை

    செய்யாறு:

    செய்யாறு டவுன் சேர்ந்தவர்கள் பாலா (வயது 19). 18 வயதுடைய சிறுவன். இவர்கள் 2 பேரும் நேற்று செய்யாறு பைபாஸ் சாலையில் நின்று கொண்டு போக்குவரத்திற்கும், பொது மக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தினர். இதனால் அந்த வழியாக சென்றவர்கள் அச்சமடைந்தனர்.

    இது குறித்து செய்யாறு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்திய 2 பேரை பிடித்தனர்.

    போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று அவர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர். மேலும் போலீசார் 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது
    • மாணவர்கள் உறுதிமொழி ஏற்றனர்

    செய்யாறு:

    செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

    பள்ளி தலைமை ஆசிரியர் க.ஜெயகாந்தன் தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் வழக்கறிஞர் அசோக், முதுகலை ஆசிரியர் குமரவேல், உடற்கல்வி இயக்குனர் சூரியநாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு அழைப்பாளராக டி எஸ் பி வெங்கடேசன் கலந்துகொண்டு , போதைப் பொருள் பயன்படுத்துவதால் உடல் மற்றும் மனதிற்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து விளக்கமாக கூறினார். தொடர்ந்து மாணவர்கள் போதைப்பொருள் ஒழிப்பு உறுதிமொழி ஏற்றனர்.

    பள்ளி வளாகத்தில் இருந்து விழிப்புணர்வு ஊர்வலத்தினை போலீஸ் துணை சூப்பிரண்டு வெங்கடேசன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

    விழிப்புணர்வு ஊர்வலம் பிரதான சாலையான காந்தி சாலை, ஆற்காடு சாலையில் உழவர் சந்தை வரை சென்றது. ஊர்வலத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலு, சப் இன்ஸ்பெக்டர் சங்கர், உடற்கல்வி ஆசிரியர்கள் பி.சரவணன், டி.ரகுராமன் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    • ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது லால் சலாம் திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
    • இப்படத்தில் ரஜினி சிறப்பு தோற்றத்தில் நடித்து வருகிறார்.

    நடிகர் ரஜினிகாந்தின் மகளும் இயக்குனருமான ஐஸ்வர்யா இயக்கத்தில் லால்சலாம் திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிகர் ரஜினி காந்த் நடிக்கிறார். மேலும் விஷ்ணு விஷால், விக்ராந்த் உள்ளிட்ட பல நடிகர்கள் இந்த படத்தில் நடிக்கின்றனர்.

    இந்நிலையில், லால்சலாம் திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கடந்த மாதம் திருவண்ணாமலையில் நடந்தது. அதில், நடிகர் விஷ்ணு விஷால் உள்ளிட்ட நடிகர்கள் பங்கேற்ற காட்சிகள் படமாக்கப்பட்டன. இத்திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் தோன்றும் முக்கிய காட்சிகள் திருவண்ணாமலையை சுற்றி உள்ள சில பகுதிகளிலும், செஞ்சி சுற்று வட்டார கிராமங்களிலும் படபிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளனர்.



    அதற்காக, நடிகர் ரஜினிகாந்த் நேற்று திருவண்ணாமலைக்கு சென்றுள்ளார். தனியார் விருந்தினர் மாளிகையில் நடிகர் ரஜினிகாந்த் தங்கி இருப்பதால் அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வெளியாட்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. திருவண்ணாமலை-வேலூர் சாலையில் உள்ள ஊத்தாம்பாடி கிராமத்தில் உள்ள விவசாய பண்ணையில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்படுகிறது.



    ரஜினியின் படபிடிப்பு நடப்பதால் அங்கு ரசிகர்கள் திரண்டு வருகின்றனர். திருவண்ணாமலை அண்ணாமலையார் மீது தீவிர பக்தியும் ஈடுபாடும் கொண்ட ரஜினிகாந்த், கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பே திருவண்ணாமலை கிரிவலப்பாதைக்கு மின்விளக்கு வசதிகளை ஏற்படுத்தி கொடுத்தார். எனவே, லால்சலாம் படபிடிப்பு முடியும் போது அண்ணாமலையார் கோவிலில் தரிசனம் செய்வார் எனவும், கிரிவலம் செல்ல வாய்ப்பு உள்ளது என்றும் தகவல்கள் பரவி வருகிறது.

    • கொள்ளையடித்து சென்ற குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.
    • 50 பவுன் தங்க நகை மற்றும் கார் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்தனர்.

    திருவண்ணாமலை:

    சென்னை கொளத்தூரை சேர்ந்தவர்கள் யுவராஜ் (வயது 32), பாலாஜி (24) இவர்கள், இன்று அதிகாலை கடலூர் மாவட்டம் பண்ருட்டி பகுதியில் ஒரு வீட்டில் கொள்ளையடித்தனர்.

    மேலும் அவர்கள் வீட்டின் முன்பக்கத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரையும் திருடிக்கொண்டு அதில் தப்பி சென்றனர். இதனை பார்த்த அந்த பகுதி மக்கள் உடனே கடலூர் மாவட்ட போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    கொள்ளையடித்து சென்ற குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.

    துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா தலைமையிலான போலீசார், திருடர்களை பின்தொடர்ந்து காரில் விரட்டி வந்தனர்.

    மேலும் முன்கூட்டியே திருவண்ணாமலை டவுன் துணை போலீஸ் சூப்பி ரண்டுகள் குணசேகரன் மற்றும் முருகன் ஆகியோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    அதன்படி போலீசார் திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள அக்னி லிங்கம் அருகில் சாலை நடுவே தடுப்புகள் அமைத்து தயார் நிலையில் இருந்தனர்.

    அந்த வழியாக கொள்ளையர்கள் வேகமாக வந்த காரை மடக்கி பிடித்தனர். சினிமா பாணியில் அவர்களை கைது செய்தனர்.

    மேலும் அவர்களிடமிருந்து 50 பவுன் தங்க நகை மற்றும் கார் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்தனர்.

    திருவண்ணாமலை போலீசார் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களோடு 2 பேரையும், கடலூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    சினிமா பாணியில் கொள்ளையர்களை மடக்கி பிடித்து போலீசார் கைது செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • திருட்டு சம்பவங்களில் ஈடுபடுவோர் கைவரிசையா?
    • போலீசார் விசாரணை

    வந்தவாசி:

    திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த பிருதூர் கிராமம் புறவழி சாலை ஓரத்தில் 30-க்கும் மேற்பட்ட நகை பெட்டிகள் கிடந்தது.

    அந்த வழியாக சென்ற பொது மக்கள் இது குறித்து வந்தவாசி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவல் அறிந்த குற்றப்பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு உடனே சென்று விசாரணை நடத்தினார். மேலும் நகை பெட்டிகளை பறிமுதல் செய்து ஆய்வு நடத்தினர். இதில் அவை அனைத்தும் காலி நகை பெட்டிகள் என்பது தெரிய வந்தது.

    திருட்டு சம்பவங்களில் ஈடுபடுவோர், கொள்ளையடித்த நகை களை எடுத்துக்கொண்டு, காலி நகை பெட்டிகளை சாலை ஓரத்தில் வீசி சென்றார்களா? அல்லது வேறு ஏதோ ஒரு காரணங்களுக்காக காலிப் பெட்டிகளை வீசி பரபரப்பை ஏற்படுத்தி னார்களா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் நடந்தது
    • எஸ்.பி. கொடியசைத்து தொடங்கி வைத்தார்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்ட காவல் துறையின் சார்பில் சர்வதேச போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு இன்று மினி மாரத்தான் போட்டி நடந்தது.

    காலை கிரிவலப் பாதை அண்ணா ஆர்ச் முதல் காஞ்சி சாலையில் உள்ள அபய மண்டபம் வரை மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது.

    இதனை திருவண்ணாமலை மாவட்ட எஸ்.பி. கார்த்திகேயன் கொடி யசைத்து தொடங்கி வைத்தார்.

    போட்டியில் முதல் 3 இடங்களை பிடித்து வெற்றி பெற்றவர்களுக்கு புத்தகங்களை நினைவு பரிசாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் வழங்கி கவுரவித்தார்.

    முன்னதாக போதைக்கு அடிமை ஆகாமல் இருப்பது குறித்தும், அதுக்கு அடிமையானவர்களை போதையில் இருந்து மீட்டெடுக்கும் வகையிலும் அனைவரும் உறுதிமொழி ஏற்றனர்.

    ×